Showing posts with label பாசம். Show all posts
Showing posts with label பாசம். Show all posts

Tuesday, October 25, 2022

சிவகாமியின் பந்தம் 4 ம் இறுதிப்பகுதி.

 இந்தக் கதையின்  3 ம் பகுதியின் சுட்டி. அதற்கு முந்தைய பகுதிகளான பகுதிகளான 2ஆம், 1ஆம் பகுதிகளின் சுட்டி. 

அக்கா.. நான் இப்போ நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். நீ உடன் பிறந்த எங்களுக்காக உன் வாழ்க்கையே விட்டுத் தந்திருக்கிறாய்..! அப்பாவின் முடிவையும், அதனால் நீ பட்ட கஷ்டங்களையும் எனக்கு ஒரளவு விபரம் தெரிந்த பிறகு அம்மா இருக்கும் போது என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாள்.....! முதலில் நீ, நான் என் விருப்பத்தை சொன்னவுடன்  இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் இருந்ததற்கு என்ன காரணம் என எனக்குத் தெரியாது. ஆனால், அதன் பின் நான் ஊரிலில்லாத போது இவள் வீட்டுக்கு சென்று பேசி, நீ கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டதற்கு காரணம் மட்டும் இவளாலேயே  தெரிய வந்தது. அதனால் நீ விரும்பிய நடராஜன் மாமாவின்  சொந்த  மகளல்ல இவள்....! ஒரு விபத்தில் உயிரிழந்த தன் அக்காவின் மகளான இவளை  உன்னைப் போலவே  அவரும் தன் சொந்த  மகளாக  நினைத்துக் கொண்டு திருமணமே செய்து கொள்ளாமல் வளர்த்து வருகிறார் என்ற உண்மை தெரிந்ததும், நீ உன் முடிவை மாற்றிக் கொண்டாய். .! அப்படித்தானே..... அக்கா.. !  கணேசன் பேச பேச சிவகாமி  அதிர்ந்தாள். .

சற்று சுதாரித்தபடி, "சரி..!! சரி..!! எப்படியோ எல்லாவற்றையும் தெரிந்து  வைத்திருக்கிறாயே. ஆமாம்.. எல்லாமே உண்மைதான். . .!!! நான் முதலில் மறுத்ததற்கு அதுதான் காரணம்...! உன் மனைவி தன் தந்தையெனக் கூறி நடராஜனின் போட்டோவை உன்னுடன் வந்த அன்று காண்பித்ததும், என் மனதே சரியில்லை.. . ...! என் பழைய கால வாழ்வின் நினைவுகளோடு சம்பந்தப்பட்டவரின் மகள் என்பதால், மீண்டும் அவரை எப்படி சந்திப்பது, எப்படி பேசுவது என்றுதான் முதலில்  உன் திருமணத்திற்கு தடை சொன்னேன். ஆனால்,.. ..!! என்றவளை அவசரமாக இடைமறித்தான் கணேஷ். 

 "அதுதான் இப்போ உண்மைகள் எல்லாம்  தெரிய வந்துடுச்சே அக்கா....!!  நடராஜ மாமா இவளின் சொந்த அப்பா இல்லை. .! அவரின் அக்கா பெண்தான் இவள் என்ற உண்மை உனக்கு மட்டுமில்லாமல், எங்களுக்கும் தெரிய வந்துடுச்சே.. .!! நீ இத்தனை காலம் எங்களுக்காக உன் திருமணத்தை ஒதுக்கிய மாதிரி, அவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்தை காப்பதே கடமையென வாழ்ந்து வந்துள்ளார் என்பதை அறிந்த பின், நீங்கள் இருவரும் இனியாவது  திருமணம் செய்து கொண்டு  எங்களுக்காக சேர்ந்து வாழலாம் இல்லையா? அதைத்தான் நான் தரும் பரிசென்று உனக்கு கூறி, உன்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கலாம் என நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தை உன்னிடம் இன்று கூறி சம்மதம் பெறவும்  நினைத்தோம். ..!" என்றபடி தன் மனைவியை பார்த்தான் கணேசன்.

கணநேரம் மௌளனமாக இருந்த சிவகாமி," தம்பி உனக்கு இன்று திருமணம் உன் விருப்பப்படி நடந்தற்கே நம் அம்மாதான் காரணம் தெரியுமா?  நான் இல்லை.. " என்றவள் அன்று அம்மாவின் கடிதத்தை படித்த விபரங்களையும், நடராஜனின் கடிதத்தை சேர்த்து வைத்து படித்து புரிந்து கொண்டதையும், அதன் பின்னும்  ஆயிரம் தயக்கங்களுடன், நடராஜனை சந்தித்துப் பேசி," நம் தயக்கங்களுக்காக நம் குழந்தைகளின் வாழ்க்கையை பலியிட வேண்டாமென கலந்தாலோசித்து தீர்மானித்து அவர்களின் திருமணத்திற்கு நாள் குறித்ததையும்" விளக்கமாக கூறக்கூற கணேசன் ஆச்சரியமாக கேட்டபடியிருந்தான்.

"அக்கா.  .. எவ்வளவு நடந்திருக்கு.!!!!.நீ ஒன்றுமே கூறவில்லையே. .?  சரி.. . அப்பவும்  நீ சொன்ன பிரகாரம் அவர் சிவகாமி இல்லாத நடராஜனாகத்தானே உன்னை  மறுபடி சந்தித்திருக்கிறார். அப்போதும் உன் மனம் சஞ்சலத்திலிருந்து விடுபடவில்லையா? எங்களுக்காகவாவது நீயும், அவரும் உங்கள் வயதின் காரணத்தை ஒரு பொருட்டாக கூறாது அவரை திருமணம் செய்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருக்கலாம் இல்லையா? "கணேசன் குரலில் ஆர்வம் மேலிட கேட்டான். 

தம்பி.. இது என்றுமே சாத்தியமில்லையடா... மேலும்,," என்று பேச ஆரம்பித்த அக்காவை பேச விடாமல்  தடைசெய்தபடி "அக்கா.. நீ கொஞ்சம் உன்னை, உன் மனதை அமைதிப்படுத்திக்கொண்டு எனக்காக யோசனை செய். உன் வாழ்வில் உன் விருப்பத்தை நம் அப்பா வேண்டாமென மறுத்த அந்த நிகழ்வுக்குப் பின் உனக்காக எதுவும் விருப்பப்படாமல், எங்களுக்காகவே வாழ்ந்து வந்திருக்கிறாய்..!! உன் வாழ்க்கையே இதுவரை ஒரு தவமாக கழிந்திருக்கிறது . இப்போது அந்த தவத்தின் பலன் கைமேல் கிடைக்கும் போது ஏன் வேண்டாமென மறுக்கிறே...!" என்றபடி  அவள் கைகளைப்பற்றி கெஞ்சாத குறையாக கூறினான் கணேசன். 

" தம்பி.  .. நீ இன்னமும் என்னைப் புரிந்து கொள்ளவில்லையோ என எனக்கு இப்போது தோன்றுகிறது. தவமாக வாழ்வை கழித்து விட்டேன் என்று கூறுகிறாய்...! அப்படி பார்த்தால் அந்த தவத்திற்கு பலனை எதிர்பார்த்தா அந்த தவத்தை மேற்கொண்டேன்.. . இல்லையே...! ஒருவர் தான் செய்யும் தவத்திற்கு பிரதிபலனாக எந்தவொரு பலனையும் எதிர்பாராது தவத்தை மேற்கொள்வதுதான் அந்த தவத்திற்கே ஒரு சிறப்பு தெரியுமா? 

அன்று அவரை அவர் கடிதத்தில் எழுதியிருந்தபடி சந்திக்கும் போது உண்மையிலேயே எனக்கும் ரொம்ப பெருமையாகத்தான்  இருந்தது. அவருக்கும் அது மனதுக்குள் சந்தோஷத்தை அளித்திருக்கும் என்பது அவரின் முக பாவத்திலும், பேச்சிலும் உணர்ந்து கொண்டேன். ஆனால், நாங்கள் மணம் செய்து கொள்ளாமல் ஒருவரின் நினைவுகளுடனே வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டோம். இறைவன் எங்களுக்காக  அளித்த செல்வங்களாக உங்கள் இருவரையும் ஏற்று வளர்த்து ஆளாக்கி விட்டோம் என்ற சந்தோஷத்தை தவிர்த்து, அவரிடமோ, என்னிடமோ வேறு எந்த உணர்ச்சிகளும் அன்று இடம் பெறவில்லை. அதனால் இத்தனை நாள் நாங்கள் மனதால் வாழ்ந்த வாழ்க்கைக்கு திருமணம் என்ற முடிச்சிட்டு கொச்சைப்படுத்த நாங்கள் இருவருமே விரும்பவில்லை..! இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு....!!!! இனி எங்கள் சந்தோஷம் உங்களிருவரின் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மட்டுந்தான்..!! 

நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்து அனுபவிக்கும் வாழ்வை கண்குளிர கண்டு நாங்களும் சந்தோஷம் அடைவது மட்டுந்தான் மிகுதி இருக்கும் எங்கள் வாழ்வின் சந்தோஷமும். எங்கள் பந்தமும் உங்கள் இருவருடன் மட்டுந்தான்...! !! இதை அன்றே நாங்கள் தெளிவாக பேசி முடித்து விட்டோம். இனி இதைப்பற்றி வேறு எதுவும் பேசி என்னை துன்புறுத்தாதே. .!!! "  சற்று உணர்ச்சிவசப்பட்டவளாக சிவகாமி கூறி நிறுத்தினாள். 

அவளின் அழுத்தமான பேச்சின் முடிவு அவர்கள் இருவரையும் சற்றே திகைக்க வைத்தது. வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும், கவனமான அக்கறையுடனும், அழுத்தமான பொறுப்புணர்வுடனும் முடிவு எடுக்கும் தன் அக்கா ஒரு தெய்வப் பிறவியாக கணேசனின் கலங்கிய கண்களுக்கு தெரிந்தாள். அவர்களிடையே நிலவிய சிறிய மெளனம் அவளின் மன உறுதியை அங்கு ஆழமாக உழுத பெருமையில் சந்தோஷிப்பது போல் தோன்றியது. 

" அக்கா. ..! உன் மனதை புரிந்து கொள்ளாது என்னென்னவோ பேசி விட்டேன். என்னை மன்னித்து விடு..! நீங்கள் இருவரும் மனமொத்து எடுத்த முடிவு என்னை ஆச்சரியபடுத்துகிறது  இனி வரும் உன் வாழ்வில் உனக்கு  துணையாக நாங்கள் இருவரும் எப்போதுமே  உன்னுடன் இணைந்திருப்போம். இது சத்தியம் அக்கா... " என்று விழி கலங்கியபடி கூறிய கணேசனை  தானும் கலங்கிய விழிகளுடன் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள் சிவகாமி. 

அவர்களின் அன்பான பந்தம் புரிந்த மன நிறைவில், சிவகாமியின் தோளோடு தானும் அணைத்தாற் போல நின்றபடி கண்ணீர் உகுத்தாள் கணேசனின் மனைவி. 

அங்கே அவர்களின் இடையே உள்ள வாழ்வின் பந்தங்கள் புரிந்த நிம்மதியில் புகைப்படத்திலிருக்கும் தங்கள் அம்மா தான் பெற்ற செல்வங்களின் நல்ல மனதினை கண்டு நீடூழி வாழ ஆசிர்வதிப்பதை உணர்ந்தாள் சிவகாமி.

கதை நிறைவுற்றது.

இக்கதையை என்னுடன் தொடர்ந்து வந்து 4 பகுதிகள்தோறும் வாசித்து என் எழுத்துகளுக்கு பக்கபலமாக நல்ல கருத்துக்களை தந்த என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 

Saturday, October 22, 2022

சிவகாமியின் பந்தம் 3 ம் பகுதி.

இது இந்தக்கதையின் கடந்த முதல், இரண்டாம் பகுதியின் சுட்டிகள். 

1. ஆம் பகுதி சுட்டி

2. ஆம் பகுதி சுட்டி

ஆயிற்று... கணேசன் ஊரிலிருந்து அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய  மூன்றாம் நாள் மாலை அவன் இரவு சாப்பாட்டை முடித்தவுடன், "தம்பி உன்கிட்டே ஒன்னு சொல்லனுன்னு  நீ  ஆபீஸ் முடிஞ்சு வந்தவுடனே சொன்னேனே...  மறந்துட்டியா?" என்றபடி சிவகாமி ஹாலில் சோபாவில் அவனருகே வந்தமரவும். "ஆமாக்கா.... நினைவிருக்கு.  என்ன விஷயம்னு சொல்லு..! " என்றபடி  சோபாவில் சாய்வாக  அமர்ந்திருந்த கணேசன் சற்று நிமிர்ந்து எழுந்து அமர்ந்தான் ஆர்வமாக. 

"தம்பி.. உனக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்துட்டேன்.. என்று மகிழ்ச்சியான சிரிப்புடன் சொன்ன  சிவகாமி அவன் முகம் நொடியில் மாறுவதை கவனித்தவளாய், " என்ன பெண் யார் என இப்பவே சொல்லவா? இல்லை நாளைக் காலையிலேயே நிதானமா தெரிஞ்சுகிறயா?" என்று மறுபடியும் முகம் மலர சிரித்தபடி கேட்டாள். 

ஒரு நொடியில் தன் முக பாவத்தை சட்டென மாற்றிக் கொண்டவனாய், "இல்லையில்லை இப்பவே சொல்லேன்க்கா..." என்றான். ஆனால்  குரலில் அவ்வளவு சுரத்தில்லாதவனாக..! 

" சரி.. இப்போதே சொல்லவா? என்று புன்னகையுடன் சற்று இடைவெளி விட்ட பின் "வேறு யார்? எல்லாம் நீ பார்த்து வைத்திருக்கும் பெண்தான்....!! இப்ப உனக்கு சந்தோஷந்தானே.. .! " சிவகாமி இப்படி அவனையே ஒரு கேள்வி கேட்டதும், அவனுக்கு கால்களுக்கு அடியில் தரை நழுவுவது போல் ஒரு கணம் அதிர்ச்சி உண்டாக்கியது. 

"அக்கா. . என்னக்கா சொல்கிறாய்? என்னால் இதை நம்பவே முடியவில்லையே...!! எப்படி இந்த அதிசயம் இந்த ஒரு வாரத்தில், நடந்தது. .? அவன் வார்த்தைகள் தடுமாறியபடி சில விநாடிகள் கழிந்த பின்பாக திகைப்புடன் கேட்டவாறு விரைவாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் . அவன் முகம் அளவு கடந்த சந்தோஷத்தில் விகசிப்பதை கண்டதும் சிவகாமியின் உள்ளமும் பூரித்தது. 

தம்பி.. உன் விருப்பத்தை நான் என்றாவது மீறி சொல்லியிருக்கிறேனா ? நீயுந்தான் என் பேச்சை எப்போதாவது மீறி நடந்திருக்கிறாயா? என்னவோ எனக்கு அன்று அப்படி தோன்றியது. பின் நீ இப்போது ஊருக்கு சென்றிருந்த போது யோசித்து பார்க்கையில், உன் மனநிலையை உணராது, வேறு பெண்ணை உனக்கு மணமுடித்தால், நீ வாழ்நாள் முழுக்க எவ்வளவு மன வேதனையடையோ எனத் தோன்றியது. அதனால்தான் உடனே அவளை நீ விருப்பப்பட்ட பெண்ணை உன் அலுவலகம் சென்று சந்தித்து, என் சம்மதத்தை கூறி. உடனேயே அவள் தந்தையையும், குடும்பத்தாரையும் வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசி அவர்களின் முடிவையும் சந்தோஷத்துடன் வாங்கி வந்து விட்டேன். நீ ஊரிலிருந்து உன் வேலைகள் முடிந்து திரும்பியதும் கூறலாமென உனக்கு கைப்பேசியில் கூடச் சொல்லவில்லை. என் வருங்கால மருமகளிடமும் "நானே இதைப்பற்றி அவனிடம் முதலில் கூறுகிறேன்.நீ அப்புறமாகச் சொல்லு.. " என கேட்டு சம்மதம் வாங்கி வந்திருந்தேன்.  போதுமா? விளக்கம்.....!!"என்று ஒரே மூச்சுடன் முடித்த அக்காவின் கைகளை அப்படியே இறுக பற்றியவாறு சந்தோஷம் தாங்க முடியாமல் அவள் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான் கணேசன். 

"அக்கா..! உனக்குத்தான் என் மீது எவ்வளவு பாசம். இனி எத்தனைப் பிறவி எடுத்தாலும் உன் மகனாகவோ, மகளாவோ மட்டுமே பிறக்க வேண்டும்..!" என அவன் மனம் மானசீகமாக இறைவனை வேண்டும் போது அவன் கண்களில் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து ஓடியது. 

தம்பியின் தலையை தடவியவாறு அவன் மனதுடன்  பூத்திருந்த சந்தோஷத்தை புரிந்து கொண்ட சிவகாமியின் மனதும் ஏதும் பேச முடியாத உணர்ச்சி வெள்ளத்தில் நிறைந்திருந்தது. 

திருமணமண்டபம்  கலகலப்பாக இருந்தது. தன் தம்பியை திருமணக் கோலத்தில் பார்த்து சந்தோஷமடைந்திருந்த சிவகாமி சின்னப் பெண்ணாக மாறி அங்குமிங்கும் சென்று திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களை வரவேற்றபடியும்  வந்தவர்களை நலம் விசாரித்தபடியும் ஓடிக் கொண்டிருந்தாள். 

"அக்கா. . நான் எப்படியிருக்கேன். .? இந்த உடையில் நன்றாக இருக்கிறேனா? " என்று முகம் மலர்ந்த புன்சிரிப்புடன் கண்ணால் கேட்டுக் கொண்டிருந்த தம்பி உற்றார் உறவினர் ஆசிர்வாதங்களுடன் திருமணம் முடிந்தவுடன் மணமக்களாக  தங்கள் வீட்டுக்குத் திரும்பியதும், அம்மாவின் படத்திற்கு முன்பாக வணங்கி அவளிடம் ஆசிர்வாதம் பெற்ற பின், தன் மனைவியுடன் தன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற போது சிவகாமிக்கு உடலெல்லாம்  புல்லரித்தது. தன் உழைப்பால், தன் வாஞ்சைக்கு கட்டுப்பட்டு வளர்த்த தன் வளர்ப்பு மகனை தூக்கி நிறுத்தி கைகளால் அவன் முகம் வருடி திருஷ்டி கழித்து அணைத்துக் கொண்டாள். எதுவும் பேசாத நிலையில், பேச முடியாத தவிப்பில் அங்கு வார்த்தைகளுக்கு மௌனம் ஒரு திரை போட்டது. ஒரு நிமிடம் விழி நீரை கட்டுப்படுத்தி, அவன் மனைவியையும் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். 

"தம்பி. . .நீ நூறு வயது  உன் மனைவியுடன் நன்றாக சந்தோஷமாக இருக்க வேண்டுமடா... . !" என மனதாற வாழ்த்தியவள்,  "அம்மா இருந்திருந்தால் இப்போ எவ்வளவு சந்தோஷபட்டிருப்பாள்...! அவளுக்கு பார்க்க கொடுப்பினை இல்லாமல் போய் விட்டதே...! ஆனால்,அவள் கனவுகளை நான் எப்படியோ நிறைவேற்றி விட்டேன்..! என்றவள் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினாள். 

"அக்கா.... அதுதான் அம்மாவுக்கு அம்மாவாக  அன்பாக இருந்து என்னை இந்தளவுக்கு நல்ல நிலைக்கு வளர்த்திருக்கிறாயே..! !மேலும் என் விருப்பமாக நான் மனதாற விரும்பியவளையும் எனக்கு வாழ்க்கைத் துணையாக்கி ரசித்துக் கொண்டிருக்கிறாய்...! இதற்கெல்லாம் இதை விட உன் அன்புக்கு பிரதியுபகாரமாக  நான் உனக்கு  என்னச் செய்யப் போகிறேன் எனத் தெரியவிலலை . ஆனாலும் இப்படி என்னை பார்த்துப்பார்த்து  வளர்த்திருக்கும் உனக்கு நான் இப்போது ஒரு சின்ன பரிசு தரப்போகிறேன். ஆனால், நீ அதை  மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்காக ஏற்றுக் கொள்வாயா? " அன்புடன பேசிய கணேசன் முகத்தில் ஒரு கெஞ்சுதல் பாவம் ஒலிப்பதை கண்டவள் "அப்படி என்னடா உன் அன்பு பரிசு.? என்றாள் வியப்பாக சிவகாமி.

தொடர்ந்து வரும். 

Friday, October 21, 2022

சிவகாமியின் பந்தம். 2 ம் பகுதி.

இது சென்ற முதல்  பகுதியின் சுட்டி

அக்கா.. எப்படி இருக்கிறாய்? இன்று கிளம்ப வேண்டியவன் கொஞ்சம் வேலைகளினால் தாமதமாகிறது. என் அலுவலக வேலைகள் முடிந்ததும், உடனே கிளம்பி வந்து விடுகிறேன். .இன்னமும் ஒரு நாளைககு மேலேயே ஆகும் போலிருக்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கோக்கா. " தம்பியின் குரல் வருத்தத்தில் மன்னிப்பு கேட்கும் விதத்தில் மறுநாள் பகலில் கைபேசியில் வந்தது. 

" அப்படியா? சரிடா.. இருந்து பார்த்து முடித்து விட்டு வா.! ! வேளைக்கு சாப்பிடு. வேலை இருக்குனு வயித்தை காயப்போடாதே...! எனக்கு ஒன்றும் சங்கடமில்லை. நீ நிம்மதியா வேலைகளை முடிச்சிட்டு வா...! என்றவள் அவன் தன்னிடம் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி கண் கலங்கினாள்..

"சின்ன வயதிலிருந்தே அவன் விருப்பபட்டதை வாங்கித் தந்து அவனை கண் கலங்கி முகம் சுளிக்காமல், பார்த்துக் கொண்ட நான் இப்போது ஒரேடியாக அவன் விருப்பத்தை மறுக்கிறோனோ. .... " மனசு தேவையில்லாமல் அலைபாய்ந்தது. 

மதியம் ஒரு மன மாற்றத்திற்காக அம்மாவின் பீரோவை சரி செய்யும் வேலையில் இறங்கினாள். அதை அவ்வப்போது சுத்தம் செய்து அவர்கள் உபயோகப்படுத்திய கொண்டாலும், தாயின் மறைவுக்குப் பின் அம்மா உபயோகப்படுத்திய துணிகள் அடங்கிய சில பெட்டிகளை நினைவாக இருக்கட்டுமென அதை எடுக்கவேயில்லை. இன்று அதை உதறி மடித்து வைத்தால் அம்மாவின் நினைவில் நேரத்தை கடத்தி விடலாம் என ஆரம்பித்தவள் ஒரு புடவையை எடுத்து உதறிய போது உள்ளிருந்து பழைய டைரி ஒன்று விழுந்ததை கண்டு அதை எடுத்துப் பிரித்தாள். 

"அம்மாவுக்கு எழுதும் பழக்கம் இருந்து பார்த்ததில்லையே" என்ற வினாவுடன் எடுத்துப் பிரித்தவளுக்கு ஒரு பக்கத்தில் ஒரு கடிதம் பல விதத்தில் கிழிந்து காணப்பட்ட நிலையில் ஒரு கவருக்குள் சுருண்டு மடங்கியிருந்ததை கண்டாள். டைரியில் அந்தப் பக்கத்தில், அம்மாவின் சற்றே கோணாலான எழுத்துக்கள். 

அன்புள்ள சிவகாமி... 

இதை நீ எப்போ பார்ப்பேனு எனக்குத் தெரியாது. நீ பார்த்த பையன் உன் அப்பாவை பார்த்து தன் விருப்பத்தை சொல்லி சம்மதம் கேட்க வந்த போது உன் அப்பா அவரை அசிங்கமாக பேசி அவமானபடுத்தி அனுப்பி விட்டார். அதைக்கூட உன்னிடம் சொன்னேன். உடனே அப்பாவின் தீடிரென்ற பிரிவின் மனக்கஷ்டத்திலே இன்னொன்றை நான் கூறவில்லை. அதுக்காக இந்த அம்மாவை மன்னிச்சுடு. 

அன்னைக்கு வந்துட்டு போன ஒரு வாரத்திலேயே அவர் மீண்டும் ஒருநாள் வந்து அப்பாகிட்டே ரொம்ப நேரம் பேசினாரு. அப்பாவும் பழைய கோபத்தோடுதான் அவர்கிட்டே பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர் போகும் போது உன் கிட்டே ஒரு கடிதாசியை மட்டும் கொடுக்கச் சொல்லி கொடுத்திட்டு போனார். அவர் தலை மறைஞ்சவுடனே அப்பா அந்த லெட்டரை கிழித்து குப்பைக் கூடையில் போட்டு விட்டு கோபமா வெளியே போயிட்டார். நான் அதை எடுத்து பத்திரப்படுத்தி உன்கிட்டே சமயம் பார்த்து கொடுக்க வச்சிருந்தேன். அதுக்குள்ளே உங்க அப்பா மரணமும், அடுக்கடுக்கா என்னென்வோ நடந்து போச்சு.. இப்ப இந்த புடவையை பிரிச்சதும் இந்த லெட்டரும் அந்த சம்பவமும் நினைவுக்கு வந்தது. உன்கிட்டே நேரடியா இதை தர இப்பவும் எனக்கு தைரியமில்லை. . இதை நீயா ஒரு நாள் பிரிச்சு பாத்துக்கோன்னு இந்த லெட்டரோடு என் கடிதாசியையும் எழுதி வைக்கிறேன். நீ. இதை பார்க்கும் போது என்னை மன்னிசுடும்மா.... 

சிவகாமிக்கு அம்மாவின் கடிதம் கண்களில் மளமளவென்று நீரை வரவழைத்தது. அப்பாவிடம் பேசிய நடராஜன் என்ன கடிதமென்றாலும் அதை என்னிடம் தந்திருக்கலாமில்லையா? அப்பாவிடம் அவன் பேசினதைப் பற்றி கூட தன்னிடம் எதுவும் சொல்லவில்லை. அம்மா சொல்லித்தான் அறிந்து கொண்டாள். போகட்டும்....!!!! அப்பாவிடம் தைரியமாக பேசி அவர் மனக்குறைகள் போக்கி சம்மதம் வாங்கி விடலாம் என்றிருந்தவளுக்கு அப்பாவின் மரணம் சவுக்கடியைத்தான் தந்தது. அதன் பின் நடராஜனை பற்றிய திருமண நினைவுகளையும், ஒரு பள்ளி மாணவியாய், தான் அறியாமல் எழுதியதை ரப்பரால் அழிப்பதை போன்று அழித்து மனதோடு உதறி விட்டாள். 

"என்னை மணம் செய்து கொள்ள உங்களுக்கு சம்மதமா? என கண்ணியமாக கேட்ட நடராஜனின் உருவம் மட்டும் தன் மனதிலிருந்து அழியாததால், அப்பாவின் மறைவுக்குப் பின், தங்கைகளின் திருமணத்திற்குப் பின் தன் அம்மா எத்தனையோ நாட்கள் தன்னிடம் தன் திருமணத்தைப்பற்றி வலியுறுத்தும் போதும் அவள் அதை நிராகரித்து இருக்கிறாள். 

அம்மா.. எனக்கு இனி திருமண பந்தமே வேண்டாம். தம்பிதான் நான் பெறாத பிள்ளை. அவன் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து அவனுக்கு திருமணம் நடத்தி, அவன் வாரிசுகளை கொஞ்சி மகிழ்வதுதான் எனக்கு சந்தோஷம் தரும். அதை பார்க்கும் நாட்களுக்காக நீயும் என்னுடன் காத்திரு..!! இப்போதைக்கு நீயும், தம்பியுந்தான் நான் பாதுகாக்க வேண்டிய என் இரு கண்கள்....! இப்போதைக்கு அதை தவிர வேறு ஏதும் பேசாதே.. .! என கண்டிப்பான உறுதியுடன் சொல்லும் போது அம்மாவின் கண்களில் கண்ணீர் அருவியாக பெருக்கெடுத்து ஓடும். 

நினைவுகளின் சுமையில் ஆழமான மூச்சு வெளிப்பட்டது சிவகாமிக்கு. மெல்ல அந்த கடித துணுக்களை சேர்த்தெடுத்து வேறு ஒரு காகிதத்தில் பரப்பி சேர்த்து வைத்து படிக்கும் ஆவல் வந்தது. இதற்காகவே இன்று தம்பியை தன்னிடமிருந்து இறைவன் பிரித்து வைத்து வேடிக்கை செய்கிறானோ எனவும் தோன்றியது. 

தன் திட்டப்படி வேறு காகிதத்தில் நிறைய நேரங்களுக்குப்பின் கிழிந்த காகித துணுக்குகளை ஒன்று சேர்த்து வைத்து உருவாக்கிய கடிதத்தை ஒரு வழியாக படிக்க ஆரம்பித்தாள். 

அன்புள்ள சிவகாமிக்கு 

நான் எவ்வளவோ முயன்றும் உங்கள் தந்தை நம் திருமணத்திற்கு மறுத்து விட்டார். மற்றவர்கள் போல் அவர் உத்தரவு இல்லாமல் நாம் திருமணம் செய்து கொள்வது அந்த பந்தத்திற்கே இழுக்கு. ஆகவே காத்திருப்போம். உங்களால் உங்கள் குடும்ப சூழலால் அது முடியவில்லையென்றாலும், மற்றபடி இதற்கு முடிவேதும் கிடைக்கவில்லையென்றாலும், நான் இப்படியேதான் இருப்பேன். . உங்களைப் போல் என் குடும்பம் என்ற பந்தங்களும் என்னுடன் பிணைந்து சுற்றுவதால், என் காத்திருப்பு வேதனைகளும் எனக்கு பெரிதாக தெரியாது. உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் வேலையை விட்டு அகலுகிறேன். நம் சந்திப்புகள் தொடர்ந்து இருந்தால், உங்கள் மனம் வேதனையுறும். அதன் விளைவுகள் உங்கள் குடும்பத்தில் எதிரொலிக்கும் என்பதால், வேறு ஊரில் வேலை தேடி போகிறேன். என்றாவது ஒரு நாள் உங்களை சந்திக்கும் போதும் இந்த நடராஜன் சிவகாமி இல்லாத பழைய நடராஜனாகத்தான் இருப்பான். அது நிச்சயம். ...! ஏன். சத்தியமும் கூட... 

இப்படிக்கு

உங்கள் நடராஜன். 

தடுமாறியபடி கடிதத்தை படித்து முடித்ததும், அப்படியே சிலையாக அமர்ந்திருந்தாள் சிவகாமி. தன் வாழ்வின் திசை திரும்பல்கள் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதை நினைத்து வேதனைபடுவதா. .. வியப்படைவதா... எனத் தெரியாமல் அப்படியே மணிக்கணக்கில் அமர்ந்திருந்தாள். 

தொடர்ந்து வரும்.

Wednesday, August 14, 2019

மன மாற்றம்.

விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்டாள். நானும் ஒரு வ (வீ) ம்பில் சரியென சம்மதம் தந்து விட்டேன்.

வம்பென்றால் அது  இதுதான்....
"பூ... இது என்ன பொல்லாத வேலையா? வீடு பெருக்கி, துடைத்து பாத்திரங்களை சுத்தம் செய்வது இதெல்லாம் ஒரு கடுமையான வேலையா? இதற்கு இத்தனை பில்டப்பா உனக்கு? என்னமோ நீ ஒருத்திதான் இதை நித்ய கர்மாவாக செய்கிற மாதிரியும், நாங்கெல்லாம் ஏதோ உன் செயலுக்கு ஏதோ அபகீர்த்தி பண்ற மாதிரியும் என்ன ஒரு அலட்டல் உனக்கு..! இது பொல்லாத வேலையா? இதை சாக்கிட்டு எத்தனை நாள் எங்களுக்கு பண்ண வேண்டிய (காலை வக்கணையாய், வாய்க்கு ருசியாய் பண்ற டிபனை)  வேலைகளை ஒத்தி வைச்சோ, இல்லை நிராகரித்தோ, இருந்திருக்கிறாய் ! இதுதான் வம்புக்கு முதல் படிகளும், அதற்கு ஏற்றிச்சென்ற மேற்படி படிகளும்.

 வீட்டு வேலைகளுக்கு  உபகாரத்துக்கென்று  ஒரு ஆள் கூட வைத்துக் கொள்ளாமல், திருமணமாகி பதினைந்து வருடங்களாக, பள்ளிக்குச் செல்லும் இரு குழந்தைகளையும், வாய்க்கு ருசியாக குக்கரில் சாதம் என்ற வஸ்துவை கூட சமைக்கத் தெரியாமல், அதட்டி உருட்டி (அன்பாகத்தான்)   "வெளியில் சென்று வேலை பார்த்து குடும்பத்தை நிமிர்த்துவது மட்டுந்தான் என் வேலை"  என்ற கண்டிப்போடும், "மற்றபடி குடும்பத்தை நீதான் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமென்று" (ஐஸ்) வைத்து ஒப்பேற்றி வரும் என்னையும், சமாளித்து வாழ்ந்து வருபவள் விசாலாட்சி என்ற என்னருமை மனைவி விசாலி.

திடீரென ஒரு நாள் அவளுடைய இயலாமையை சுட்டிக் காட்டி அவள் அக்கம்பக்கம் தோழிகள் உபதேசங்கள் செய்ததையும்,( அதை அவளே அவள் வாயால் சொன்ன வாக்குமூலங்கள்தான்.! இல்லையென்றால் எனக்கு எப்படி தெரியும்?) ஒரு துணையாளை வைத்துக்கொள்ள சிபாரிசு செய்ததையும் சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

 சில வீட்டு தோழிகள் இந்த மாதிரி துணையாளை வைத்துக் கொள்வது விட நம் துணைவனையே அவ் வேலைகளுக்கு "பக்கபலமாக" வைத்துக் கொண்டால், பணத்துக்கு பணமும் மிச்சம்.. நம்முடைய சுமைகளும் குறைந்து கூன் விழும் முதுகை நிமிர்த்தி காப்பாற்றலாம் என திருவாய் மொழிந்தருள , அதுவும் அன்றைய கூட்டத்தில் பலத்த கைதட்டல்களுக்கு நடுவே  "பரிந்துரை பேச்சாக" வந்ததாம். (இதுவும் அவள் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது. இதைச் சொல்வதில் தன்  கணவர் உஷாராகி விட்டால் என்ன செய்வது என்ற பயமில்லாமல், வெகுளி மனப்பான்மையில் அதையும் மறைக்காமல் சொன்ன இவளை இந்த விஷயத்தில்  பாராட்டியே ஆக வேண்டும்.)

ஆக இந்த விஷயங்கள் பொழுது போகாத ஒரு நேரம், பொழுதை போக்க வைத்த பேச்சுகளாக மாறி எங்களுக்குள் அலசபட்டதின் காரணமாக ஒரு துணையாளை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது.

அந்த துணையாளைப்பற்றி ஒரு மாதகாலம்  விசாலியால்  கூறப்பட்ட புகழுரைகள்  நாளடைவில் "பெளர்ணமி தினத்திற்கு பின்வரும் நாட்களாய்" ஆகிப்போனதின் காரணம், அந்த துணையாளின் கவனகுறைவுகளும், அவர் எடுத்த சம்பளம் பிடித்தமில்லாத விடுமுறைகளுந்தான்.

அதன்பின் பக்கத்து வீட்டு தோழிகளின் துணையாளர்கள் ஷிப்டு முறையில் வந்து தோற்றுப் போயினர். அதன் காரணமும், "உன்னுடைய அதீதமான சுத்த கெடுபிடிகள்தான்" என" பழகிய வட்டாரங்கள்" எச்சரித்துப் பேசியதில் சற்று எரிச்சலாகி போனாள் விசாலி. . அந்த எரிச்சல்கள் என் மீது அடிக்கடி "அர்ச்சுனன் அம்பாக" பாய மேற்கூறிய வம்புக்கு  அது விதைகளாகின.

வருடக்கணக்காக ஒரே வேலைகளை கடமையாக செய்தும் அசராத விசாலி, ஆறுமாதம் பணி விலக்கி  பணி மாற்றி உழைத்ததில் கொடி மாதிரி இருந்தவள் கொஞ்சம் வளர்ந்த "கொடிக் காயாய்" ஆனதில், அக்கம்பக்கம் விசாரிப்புகள் பலமாகி அவளிடம் இதுவரை இல்லாத பிணிகள் தஞ்சமாக வந்து அடைக்கலம் தேடியதோடு, தனக்கு  "பேர்கிடைத்த சந்தோஷத்திலே," மருத்துவரை சந்திக்க மனம் குளிர பயணித்தன.

இப்படியாக நாட்கள் நகர்ந்து பார்த்து தோல்வியுற்றதில், அந்த ஒரு "வம்பு நாள்" எனக்கு சோதனையாக அமைந்தது. அதுதான் விசாலி என்னிடம் நாம் இருவருமாக ஒருநாள விட்டு ஒருநாள் வேலைகளை பங்காக்கிக் கொள்ள வேண்டுமென " ஒப்பந்த தாள்" இல்லாமலே, முடிவாக்கிய நாள்.

மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து என் கடமைகளை  துடைப்பத்தின் துணையுடன் கைப்பிடித்தேன். பெருக்கி,  துடைத்து, அவள் சமையல், டிபனை முடித்துப் போட்ட பாத்திரங்களையும்., அதற்கு முன்பே எனக்காக காத்திருந்த பாத்திரங்களையும் கழுவி முடித்து நிமிரும் போது, மணி ஒன்பதை காட்டியது.

இடையிடையே விசாலியின் "கரெக்ஷன் குரல்" வேறு இரண்டு மூன்று முறை நான்   செய்த வேலையை "இம்போஸிஷன்"  செய்ய வைத்தது.  பழக்கமில்லாத வேலையை செய்ததில் என் முதுகும் அறையிலிருந்த பீரோ கண்ணாடியை பார்த்து தாண்டிய போதெல்லாம் ஒன்பதை நினைவூட்டியது.

என் மகன்கள் பள்ளிக்கு கிளம்பும் அத்தனை அவசரத்திலும், என்னை நமுட்டு சிரிப்புடன் பார்த்து கடப்பதாக தோன்றியது. அப்போதெல்லாம் வேர்த்து விறுவிறுத்த  முகத்தை சிரிப்பால் துடைத்தபடி "அப்பா எப்படி? சுறுசுறுப்பாக வேலைகளை முடிக்கிறேனா ? " என்று "பரீட்சை முடிவு" எதுவும் எதிர்பார்க்காத "பிரி. கே. ஜி குழந்தை" மாதிரி கேட்டாலும், "நீங்களும் இப்படி மாட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லையடா" என மனதுக்குள் (ஒரு சந்தோஷத்துடன்) சொல்லிக் கொண்டேன். ஆக ஒன்பதரைக்குள் நான் அவசரமாக ரெடியாகி ஆபீஸ் கிளம்பும் போது, விசாலி அன்றைய வேலைகளை முடித்து விட்ட "திருப்தியோடு" எனக்கு  விடை கொடுத்தாள்.

ஒரு மாதம் வரை இப்படி ஒடியது. அவள்  முறை வரும் போது, என் வேலையாக காய்கள் நறுக்குவது, குக்கர் எப்படி ஒழுங்காக வைப்பது, தோசை, இட்லி வார்ப்பது என சின்ன சின்ன வேலைகளும் கொஞ்ச கொஞ்சமாக என் வசமாகிப் போனதில் நான் இப்போது பாதி "குடும்ப பொறுப்பாளானாக" பதிவி உயர்வு பெற்றேன்.

இத்தனை நாள் விசாலி அவளே செய்து வந்த வேலைகளின் கடினங்கள் புரிய ஆரம்பித்தன. பாவம். .! எனக்காகத்தானே அவள் "எள்ளத்தைனை" வேலைகளை கூட என்னிடம் தராது அவளே பார்த்து, பார்த்து செய்திருக்கிறாள் என்ற பச்சாதாபம் மனதுள் பொங்கிய பிரவாகமாக  ஆர்பரித்தெழுந்தது. ஆனால் வீட்டின் வேலைகளுக்கிடையே அலுவலகத்து கெடுபடிகளும் சேர்ந்து என்னைக் கொஞ்சம் களைப்படைய வைத்ததென்னவோ உண்மை. அடிக்கடி இப்படி  களைப்படையும் காரணத்தை மருத்துவரிடம் சென்று விசாரிக்கும்  எண்ணமும் எனக்கு அடிக்கடி எற்பட்டது.  இருந்தாலும் "பச்சாதாப அலைகளின்" விளைவாய் விசாலியிடம் ஒன்றும் காண்பிக்காது நான் இருந்ததில் மாதங்கள் கடந்து குழந்தைகளில் பெரியவன் கல்லூரியில் காலடி எடுத்து வைத்து விட்டான்.

"என்னங்க மணி எட்டு.. இப்படி தூங்கறீங்க? இன்னைக்கு சன்டே குழந்தைகளுடன் எங்கேயாவது போயிட்டு வரலாமா?" சியாமளா அசந்து தூங்கிய கணவனை எழுப்பினாள். 

எழுந்து நீண்ட சோம்பலொன்றை விட்டபடி மீண்டும் படுத்தான் தியாகு.  "ஆமாம் எங்கே போறது? தீபாவளி வேறு நெருங்கியாச்சு... அந்தச் செலவெல்லாம் இருக்கு. நீ என்னவோ இன்னைக்கு வீடெல்லாம் க்ளீன் பண்ணுன்னு  வேறு சொல்லிகிட்டிருந்தே! அது தவிர இப்படி எங்கே போனாலும் காசு செலவுதான்... என்றான் முணுமுணுப்பாக. 

"அதெல்லாம் இருக்கட்டும்! அடுத்தவாரந்தானே பண்டிகை. அதுக்குள்ளே வீடு சுத்தம் செஞ்சிட்டு போச்சு! இன்னொன்னு ! பக்கத்து வீட்டுக்கு  இப்பத்தான் புதுசா வந்திருக்கிற உதவியாளரை இங்கேயும் நம்ப வீட்டுக்கும் வந்து வேலைக்கு ஒத்துக்க ஏற்பாடு பண்ணிடலாமா ? ..." 

நீயா? அனாவசியமா பணம் செலவழிக்க உனக்குப் பிடிக்காதே. ! செலவை மிச்சபடுத்தனும்தானே,யார் சொல்லியும் கேக்காம  நீயும் நானும் இந்த வேலையெல்லாம் செய்றோம். இன்னைக்கு எனக்குன்னு ஒரு வேலை வேறே இருக்கு.. அது சரி.! உனக்குள்ளே எப்படி இந்த தீடீர் மாற்றம்?" என்றான் தியாகு சற்று கேலியாக. 

ஆமாம்..நான் கொஞ்சம் ஆரம்பத்திலிருந்தே சிக்கனந்தான்... அதனாலே நம்ப வீட்டு வேலையே நாமளே பண்ணிட்டா அந்த பணம் வேறு எதுக்காவது பயன்படுமேன்னு யோசிப்பேன். ஒரு விதத்துல அதுவும்  கஞ்சதனந்தான்னு இப்ப உணர்ந்திட்டேன். 

எப்போதும் போல நீங்க எழுதுற கதையெல்லாம் வெளியிடுற பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்க நம்ப வீட்டு கதையையே கிண்டலும், கேலியுமாக பேர் மாத்தி கொஞ்சம் கருவும் மாத்தி எழுதி  ஒரு கதையை உருவாக்கி வைச்சதை நேற்று யதேச்சையா  நான் படிச்சுட்டேன். முடிவா நீங்க அதிலே ஏதாவது காமெடிங்கிற பேர்லே விபரீதமா சொல்லி கதையை சோகமயமா  மாத்துறதுக்குள்ளே உண்மையிலேயே நான் என் முடிவை மாத்திகிடனும்னு தோணிச்சு. இனி  சிக்கனமாக இருக்க வேண்டியதுதான்.  ஆனா அநாவசியமா கஞ்சத்தனம் பார்க்க கூடாதுன்னு முடிவு எடுத்திட்டேன். இந்த வாரம் நான் அவங்ககிட்ட பேசி வீட்டு வேலைகளுக்கு உதவியா  ஏற்பாடு செய்துடுறேன். இனி உங்களுக்கு, மட்டுமில்லை எனக்கும் கொஞ்சம் வேலை பளு குறையும். எழுந்திருங்க....! குழந்தைகளையும் ரெடி பண்றேன்... இன்னைக்கு நாமெல்லாம்  எங்கேயாவது ஜாலியா போயிட்டு, அப்படியே வெளியிலேயே சாப்பிட்டு வரலாம்.! " என்றபடி எழுந்த தன் மனைவியை ஒரு அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்தான் தியாகு . 

சிக்கனமாக இருக்க வேண்டுமென வார்த்தைக்கு வார்த்தை உபதேசித்து, தன்னையும் வருத்திக் கொண்டு, என்னையும் வேலைகள் வாங்கி, பணத்தை எண்ணி எண்ணி செலவு செய்த  தன் மனைவி தான் எழுதியதை பார்த்ததும் திருந்தி விட்டாள் என்பது ஆச்சரியப்பட வைத்தது.

அறைக்கு வெளியில் சென்றவள் மறுபடி உள்ளே வந்து, "நீங்க எனக்கு நல்லபடியா வேணும். கதையிலே உங்க உடம்பு படுத்துற மாதிரி இருக்கிறதை திருத்தி எழுதிடுங்க.. கதை முடிவுலே ஏதாவது அசுபமா மட்டும்  எழுதிராதீங்க. அதை என்னாலே தாங்கவே முடியாது... என் சிக்கன எண்ணத்தாலே நீங்க எவ்வளவு சொல்லியும் கூட மாட ஒத்தாசைக்கு ஆள் வைத்துக் கொள்ளாது இருக்கும் என் போக்கையும் பொறுத்துக் கொண்டு, நீங்க ஒருநாளைப்போல  ஆபீஸும் போய்கிட்டு, வீட்டிலேயும் தினமும்  எனக்கு உதவிகிட்டும்  வர்றீங்க. ஆனா, உங்க அசெளகரியத்தை நான் ஒருநாளும் புரிஞ்சுக்காமே இருந்திட்டேன்.  உங்களுக்கு, உங்க உடம்புக்கு கதையிலே வருகிற மாதிரி ஏதாவது பிரச்சனையென்றால், என்னாலே......என்னாலே.. ." என்றபடி  பேச முடியாமல் கண்ணீர் வழிய உணர்ச்சி வசபட்டவளை, "என்மீது உனக்கு இவ்வளவு பாசமா? என்று மனதுள் கொஞ்சமில்லாமல் நிறையவே பெருமைபட்டவனாய் எழுந்தவன்  பிரியமுடன் அவளின் கைப்பற்றி கட்டிலில் தன்னருகே  அமர்த்திக் கொண்டான் தியாகு. 
                             நிறைந்தது. 

அனைவருக்கும் 
சுதந்திரதினதி
நல்வாழ்த்துகள்.🙏.













     🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
                              நன்றி கூகிள்.. 

Monday, May 21, 2018

நன்றிக் கரையல்கள்


அனைவருக்கும் வணக்கம் .

சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார். அதை படித்தது முதற்கொண்டு, நான் காகங்கள் குறித்து எழுதிய இரண்டு கதைகளை என் பதிவில் போடும் ஆவலில் இருந்தேன். ஒரு கதையாக "மனசு" வெளியிட்டேன். அதற்கு பாராட்டுகள் தெரிவித்த அனைவருக்கும் என் மனமுவந்த நன்றிகள். மற்றொன்றாக இந்த "நன்றிக் கரையல்கள் "கதை. இந்தக்கதையையும்  வெளியிட வேண்டுமென  என் "மனசு"ம் ஆசைப் பட்டதினால், அதையும் ஆமோதித்து என் படைப்பாக இன்று இது...

படிக்கும் அனைவருக்கும் அன்பார்ந்த நன்றிகள்........

நன்றிக் கரையல்கள்





வெயிலின் தாக்கம் மதிய நேர குட்டித் தூக்கத்தை பாதித்தது. குழந்தைகள் இல்லாததினால் வீடு வெறிச்சென்று இருந்தது என் மனதை போல....

என் மனைவியின் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் நான் அலட்சியப் படுத்தியதால் குழந்தைகளுக்கு வரிசையாக வந்த நான்கைந்து நாள் விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு, என்னை உதாசினபடுத்திவிட்டு,  குழந்தைகளுடன் பக்கத்து ஊரிலிருக்கும் தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டாள்.

அவளுடைய புதிய யோசனைகள் என்னை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும் என்பதை நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும், அவள் புரிந்து கொள்ள வில்லை.

அவளது கோபத்திற்கு வடிகாலாக அவளுக்கு தாய் வீடு உதவுகிறது. ஆனால் அலுவலக வேலையை விட்டுவிட்டு நான் எங்கு போவது? மனதில் வேதனையை சுமந்து வாரத்தின் விடுமுறை நாளை கழித்து கொண்டிருக்கிறேன்.

உள்ளேயும் வெளியேயும் இருக்கும் புழுக்கத்தைக் குறைக்க மாலை சிறிதுநேரம் காலாற நடந்தால்தான், இரவில் நல்ல தூக்கத்தை சந்திக்க இயலும் என்பதால், வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடை பயணம் தொடங்கினேன்.

நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் நிழலாக நின்றிருந்த பல சாலையோர மரங்கள், சாலை விரிவாக்கதிற்காக சாவை சந்தித்து விட்டும், சில சந்தித்தும் கொண்டுமிருந்தன

மொத்தத்தில் விரையும் வாகன வசதிக்காக தன் வாழ்நாளைத் தொலைத்துக்  கொண் டிருந்தன.

மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்றி மக்கள் தங்கள் வாசஸ்தலத்தை விருத்தி பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஆங்காங்கே வானளாவிய கட்டிடங்களும் வணிக வளாகங்களும் பெருகி இருந்தது. மக்களின் வசதிக்காக சாலைகள் புனரமைக்க பட்டு இயற்கை புரையோடி போயிருந்தது.

நடந்து வலித்த பாதங்கள், இனி நாலடி கூட நகர முடியாது என்பதை உணர்த்த, பூத்துக் குலுங்கிய பூங்கா ஒன்றில் புகுந்து புல் தரையில் அமர்ந்தேன்.

"மரங்கள் மடிந்தால் என்ன! நாங்கள் இருக்கிறோம்" என்று மார்தட்டியபடி புதியதாய் உருவாக்கபட்ட அந்த பூங்காவின் புற்கள், காற்றில் சிலிர்த்தபடி கண் சிமிட்டி கொண்டிருந்தன.

மாலை சூரியன் மங்கினாலும் மேகவீதியில் மறைந்து மறைந்து மேகங்களுக்கும் பொன்னிறத்தை கொடுத்தபடி மேற்கே மறைய தலைப்பட்டு கொண்டிருந்தான்.

வான் வெளியில் விதவிதமான பறவைகள் வட்ட மிட்டும், குறுக்கும் நெடுக்குமாகவும், பறந்துக் கொண்டிருந்தது.

"எங்களுக்கு வான்வெளியே போதும், இந்த மண்ணும் மரங்களும் அவ்வளவாக அவசியமில்லை. எங்கள்  கூர்மையான பார்வை கொண்டு அங்கிருந்தபடியே, எதையும் கண்காணிப்போம்" என்ற அலட்சியத்தோடு, கழுத்தை நிமிர்த்திக் கொண்டு, கழுகுகள் தங்கள் வாழ்நாளில் பாதியை வட்டமிட்டபடியே கழித்துக் கொண்டிருந்தன.

மற்றும் வாலில்லா பறவைகளும், வால்நீண்ட பறவைகளும், "எங்களுக்கு மட்டும் பறக்க தெரியாதா, என்ன?" என்றபடி கூச்சலிட்டு கொண்டு அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தது.

காக்கைகளும், புறாக்களும், "எங்களுக்கு கீழ்நோக்கி பறக்கவும் தெரியும்" என்று நிரூபிக்க புல்தரைகளில் நடந்து காட்டி பறந்து சென்று மரமேறி, மறுபடியும் வானில் பறந்து வித்தைகள் செய்து கொண்டிருந்தன.

வானின் மற்றோரு மூலையிலிருந்து மேகங்களுடன் புறப்பட்டு கொண்டிருந்த மழை, "இவர்களது விளையாட்டுகளை ரசிக்க நானும் வரவா?" என்று கேட்டது.

"நீ வந்தால் அவ்வளவுதான்! உன்னைக் கண்டதும் இவர்கள் ஓடிவிடுவார்கள். என்னுடைய ஒளியிலும் அதன் இதத்திலும்தான் இவர்களால் உல்லாசமாக ஓடியாட முடிகிறது" என்று சூரியன் சிரித்தபடி மேகத்தினின்று வெளிப்பட்டு கூறி விட்டு, மீண்டும் ஒரு மேகத்தின் மறைவுக்கு சென்றான்.

"அது சரி, உன்னை விட நான் ஒன்றும் குறைந்தவன் அல்ல; உன் வெப்பத்தைவிட என் குளிர்ச்சியைதான் அனைவரும் அதிகமாக விரும்புவார்கள். உன்னிடம் இருக்கும் ஒளியைவிட நான் குறைந்து விட்டேனா! என் ஒளி கண்ணைக்கூச செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக்கும்." என்றபடி பளிச்சென்று ஒரு மின்னலை தோற்றுவித்தது  மழை மேகம்.

"நீ எவ்வளவு தான் குளிர்வித்தாலும் என் வெப்பம் இல்லாவிட்டால் எல்லோரும் தவித்து போய்விடுவார்கள் தெரியுமா? தினமும் வந்து போகும் நான் எங்கே, எப்பொழுதோ வந்து போகும் நீ எங்கே?" என்று கூச்சலிட்டபடி மேகங்களை தூர விலக்கி கொண்டு, சூரியன் ஆவேசமாக வெளிவந்து  கேட்டு சுட்டெரித்தான்.

"போதும்... உங்கள் சண்டை! யார் பெரியவன் என்ற வீண் சர்ச்சையை விடுத்து உங்கள் கடமையை செய்யுமிடம் என்னுடையது, என்பதை மறந்துவிடாமல் அவரவர் கடமையை ஒழுங்காக செய்யுங்கள்" என்று வானம் இந்த சண்டைக்கு ஒரு முற்று புள்ளி வைப்பதுபோல் ஒரு முறை உறுமியது.

ஒருபுறம் வானத்தின் வர்ணஜாலங்கள் மனதை மயக்கியபடி இருக்க, மறுபுறம் அருகிலிருந்த மரமொன்றில் அதன் அடர்த்தியான கிளையொன்றில் காக்கைகள் விடாது கரைந்து கொண்டிருந்தது.

தலை திருப்பி அந்த காக்கைகளை பார்த்தபடி, புல்வெளியில் சாய்ந்து படுத்தேன். அந்த கிளையில் காக்கை கூடுகட்டி இருந்தது. கூட்டுக்குள் இருந்தபடி, இரண்டு குட்டி காக்கைகள் கரைந்து கொண்டிருந்தது. அருகில் பெரிய காகம் தன் அலகுகளால், தன்னுடைய இறக்கைகளை கோதி கொண்டும், அடிக்கடி சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டும், தன் குட்டி காக்கைகளுக்கு காவலாக அமர்ந்து கொண்டிருந்தது.

இரை தேடி சென்றிந்த தன் இணை பறவையை எதிர் நோக்கி அமர்ந்திருந்த அந்த காகம், பசியினால் கத்தும் தன் குட்டிகளுக்கு, அருகில் சென்று தன் அலகால் அதன் தலைகளையும் கோதி விட்டது. "தாய் வந்ததும் பசி ஆறலாம், சற்று பொறுங்கள்" என்று சொல்லாமல் சொல்லி உணர்த்திய அந்த காக்கையின் செயலுக்கு படிந்த குட்டி காக்கைகள் கண் மூடி அனுபவித்த அந்த கிறக்கம், என் மனதில் ஆழப்பதிந்தது.

பறவைகளின் பாசபிணைப்பும், நம்மைப் போல் பேசி ஆற்றிக்கொள்ள முடியாத பாச சொற்களும், இவைகளும் நம்மைப் போல் பேசினால் எப்படி இருக்கும் என்று, என் மனதில் எழுந்த கற்பனை, காட்சியாய் மனதினுள் விரிய கண்மூடினேன்.

தன் குழந்தைகளின் தலையை பாசத்துடன் தடவி சமாதானபடுத்திய அந்த காகம், "குழந்தைகளே! உங்கள் தாய் இரைதேட வெகுதூரம் சென்றிருக்கிறாள் போலும், அதனால் தான் நேரமாகிறது. நானும் சென்று விட்டால் உங்களை யார் கவனித்து கொள்வார்கள்? அதனால் சற்று பொறுங்கள்! தாய் வந்தவுடன் பசியாறலாம்" என்று அன்புடன் கூறிகொண்டிருந்தபோது, சாலையில் சென்ற ஓர் வாகன இரைச்சலில் பீதி அடைந்த குட்டி காக்கைகள், சிறிது வளர்ந்த இறக்கைகள் படபடக்க தந்தையின் அருகில் மேனி நடுங்க ஒட்டி கொண்டனர்.

 "அப்பா! இவர்களுடன்தான் நான் வாழ வேண்டுமா?" என்று ஒரு குட்டி காகம் பயத்துடன் கேட்டது.

"ஆம் மகனே!, நாம் இவர்களை அண்டிதான் வாழ வேண்டும். வேறு வழியில்லை. முன்பெல்லாம் இவர்கள் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 

நமக்கு அடைக்கலமாக அவரவர் வீட்டு கொல்லைபுறத்தில் விதவிதமாக  மரங்களை வளர்த்து, நாம் நிம்மதியாக வாழவும் வழிவகுத்து தந்திருந்தார்கள். 

நம்மை அவர்களின் முன்னோர்களாக மதித்து, நமக்கு தினமும் சோறிடுவது அவர்களின் வழக்கமான செயல்களில் ஒன்றாகவும் நினைத்து வாழ்ந்து வந்தார்கள்.

அப்போதெல்லாம் நாம் உணவுக்காக அந்தளவு அல்லல் படுவது கிடையாது. ஆனால் இப்போது, காலம் மாறி விட்டது. 

அவர்கள் கூட்டு குடும்பத்தை சிதைத்து, அவர்களின் வசதிக்காக "நான்," நீ, "என்று பிரிந்து போனதில், கொல்லையும் மரங்களும் காணாமல் போனதில், என் அன்னை தந்தை காலத்திலேயே, நான், சாலையோர மரங்கள், பூங்காவின் மரங்கள் என ஊரின் எல்லைக்கு வாழவந்தாயிற்று.

நம் பறவை இனங்களில் சில, இவர்களின் விஞ்ஞான முன்னேற்றதிற்கு ஈடு கொடுக்க முடியாமல், நம்மிடம்கூட சொல்லிக் கொள்ளாமல், எங்கோ வெகு தொலைவிற்கு  சென்று விட்டன. 

நாம்தான் வேறுவழியின்றி இவர்களுடன் காலத்தை கழித்து வருகிறோம்.

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில், இந்த ஜகத்தினை எரித்திடுவோம்!" என்று இவர்களின் ஒருவன் பாடினான்.

"தனித்திருக்க நமக்கோர் இடமில்லையெனில், இந்த தரணியை தகர்த்திடுவோம்! என்று நாம் தினமும் பாடினாலும், இங்கு கேட்பார் ஒருவரில்லை" என்று பெருமூச்சுடன் சொல்லி நிறுத்தியது காக்கை.

காக்கை குழந்தைகள், தங்கள் முன்னோர்களின் கதையை கேட்டு கொஞ்சம் பசியை மறந்தது.

தந்தை காகம் சுற்றுமுற்றும் மறுபடி ஒருமுறை பார்த்துவிட்டு, தன் இறக்கைகளை சிலுப்பிக்கொண்டு தன் அலகால் கோதிவிட்டு கொண்டது. 

அமர்ந்த இடத்தை விட்டு சற்று தள்ளி அமர்ந்த போது அதன் ஒரு காலில் விரல்கள் ஏதுமில்லாததால், சற்று சறுக்கி சமாளித்து மறுபடி குட்டிகளின் அருகே நகர்ந்து அமர்ந்தது

தந்தையின் கால் வித்தியாசத்தை கண்ட குட்டி காகங்கள், "அப்பா! தங்கள் பாதங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறது?" என்று கேட்டது.

"அது ஒரு கதை! நம் கூடு கட்டும் பணிக்காகவும் உணவுக்காகவும் நானும் உங்கள் தாயும் அடிக்கடி மரத்திலிருந்து சாலைகளில் இறங்க வேண்டிருந்தது.

அப்பொழுது ஒரு நாள் விரைவாக மோதி விடுவதுபோல் வந்த ஒரு வாகனத்தின் இரைச்சலுக்கு பயந்து சட்டென்று அருகிலிருந்த மரத்தில் பாய்ந்து ஏற முயன்றதில் மரக்கிளை சறுக்கி கிளையில் கால் மாட்டிக்கொள்ள, என் கால் விரல்களை இழந்து விட்டேன்" என்று காகம் கூற குழந்தைகள் தந்தையை வேதனையுடன் பார்த்தன.

காகம் குழந்தைகளை சமாதான படுத்த மறுபடி தன் அலகால் அவர்களின் தலையை தடவிவிட்டது.

 "குழந்தைகளே! கவலைபடாதீர்கள், மனிதர்கள் தங்கள் வசதிக்காக ஏற்படுத்திகொண்ட வாகனங்களால் அவர்களுடன் நம் இனத்தவர்களுக்கும் பாதிப்புதான், என்ன செய்வது? அதை அவர்கள் புரிந்து கொள்ள அந்த ஆண்டவன்தான் அருள் புரிய வேண்டும்.

நம் முன்னோர்கள் வாழ்ந்த இரைச்சலற்ற இன்பமான வாழ்க்கையை, நாம் இனி கனவில்தான் வாழ முடியும்." என்று குழந்தைகளை அன்புடன் தேற்றிக் கொண்டிருந்த போது தாய் பறவை பறந்துவந்து, தான் தேடி கொண்டுவந்த உணவுகளை தன் குழந்தைகளுக்கு ஊட்டி விட்டது. 

பசியுடனும் தந்தையுடன் உரையாடிய களைப்புடனும் இருந்த காக்கை குட்டிகள் தாயின் அன்பில் திளைத்து பசியாறி சற்று கண்ணயர்ந்தன.

"கா", "கா" என்று குரல் கேட்டு என் கற்பனை சிந்தனை அனைத்தும் கலைய கண் விழித்தேன். மரத்தில் குட்டி காக்கைகள் உறங்க, உண்மையிலேயேே அதன்் தாய், தந்தை பறவைகள் அருகருகே அமர்ந்து காவல் காத்துக் கொண்டிருந்தன.

சற்று கழித்து "நீ இரு! நான் சென்று இரைதேடி வருகிறேன்" என்பது போல் அதில் ஒரு காகம் "விர்" என்று பறந்து சென்றது.

வானம் லேசாக இருண்டிருந்தது, சூரியன் முற்றிலுமாக மறைந்து கொண்டிருந்தான்.

அவனை விரட்டுவது போல் மழைமேகங்கள் வேகமாக வானில் வந்து கொண்டிருந்தன.



"உனக்கு பயந்து செல்லவில்லை.. இன்று என் கடமை முடிந்து விட்டது. இனி என் வரவை மனிதர்களும் பறவைகளும் மறுபடி நாளைதான் ஆவலுடன் எதிர்பார்பார்கள்.. அதற்காக செல்கிறேன்!" என்று சற்று அலட்சியமாக சொல்லிவிட்டு சூரியன் மறைந்து சென்றான்.

"வந்துவிட்டேன் பார்த்தாயா?" என்று எக்களிப்புடன் மழைமேகங்கள் முற்றிலுமாக சூழ்ந்துகொண்டது.

"மறுபடியும் சண்டையா! எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீர்களா?" என்று வானம் சற்று கோபமாக உறுமத் தொடங்கியது.

அந்த காக்கை மறுபடி பறந்து வந்து மரமேறி கொண்டது. நானும் அவ்விடத்தை விட்டு எழுந்து வீடு நோக்கி பயணமானேன்.

சற்று வலுத்த மழை துளிகளுக்கு பயந்து வாகனங்களும், மக்களும் தங்கள் வேகத்தை கூட்டினார்கள்.

தெப்பலாக நனைந்த படி வீடு வந்து உடைமாற்றி என் நளபாகத்தை உண்ட பின் படுக்கையில் விழுந்தேன்.

மாலையில் கண்களில் தென்பட்ட காட்சிகளும், என் கற்பனையில் நடந்த காக்கைகளின் உரையாடல்களும் சுற்றி சுற்றி வந்தன.

 எனக்கும் என் மனைவிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் நினைவுகளும் நடு நடுவே வந்து போயின.

 "வீட்டின் பின்புறம் இருக்கும் காலி நிலத்தில் நாலு அறையெடுத்து அதையும் ஒரு வீடாக்கி வாடகைக்கு விட்டால் பணத்திற்கு பணமும் ஆச்சு! நாளை நம் குழந்தைகள் வளர்ந்தபின்பு அவர்களுக்கும் பயன்படும்" என்று நச்சரித்த மனைவியின் பேச்சும், ஏற்கனவே கடனாளியாக இருக்கும் என் நிலையும், அதனை அவளுக்கு புரிய வைக்கும்போது எழுந்த கோப தாபங்களும், நினைவுக்கு வர மறுபடியும் நிம்மதி பறிபோய்விடுமோ.... என்ற பயத்தில் உறக்கம் வரவில்லை.

பிறர் முதுகின் அழுக்கை விமர்சிக்கும் நாம், நம் முதுகை ஆராயவதில்லை! அதை பற்றி கவலை ஏதும் அடைவதுமில்லை.

நிதர்சனத்தின் உறுத்தலில் நீண்டநேரம் நித்திரை வர மறுத்தது.

 பலவிதமான எண்ணங்களின் இறுதியில் மனதில் ஒரு தெளிவான முடிவு வந்தது.

நாளை காலை மனைவியின் எதிர்ப்பையும் மீறி அந்த காலி நிலத்தில் நிறைய மரக்கன்றுகளை வாங்கி நட்டு பராமரித்து வரவேண்டும்.

வரும் சிறிது காலத்திற்குள், காக்கைகளும் பிற பறவைகளும் வந்து அம்மரங்களில் தங்கி உண்டு உறங்கி  வாழவும் அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற முடிவால் நிம்மதியுடன் நல்ல உறக்கமும் வந்தது.

இரவு உறக்கத்தில் வந்த கனவில், காக்கை களுடன் பிற பறவைகளின், "நன்றிக் கரையல்கள்" காதில் இனிமையாக ஒலிக்க நல்ல உறக்கம் விடிந்த பிறகும் தொடர்ந்தது.

Friday, January 19, 2018

தந்தையின் தனித்துவம்....




   இவ்வுலகத்தில்  அன்னை, தந்தை எனவும், மாதா  பிதா  எனவும் பேச்சு வழக்கில் அன்னைக்குதான் முதலிடம் தருகிறோம். தாயிற்சிறந்த கோவிலுமில்லை ! தந்தை சொல் மிக்க மந்திரமல்லை! என்று தாயை கோவிலாக்கி  தந்தையை வெறும் மந்தரமாக்குகிறோம். பொறுமைக்கு மறு அர்த்தமாக விளங்கும் நாம் வசிக்கும் இந்த பூமியையும், ( நம் அன்னை அந்த பொறுமையின் அவதாரமாகையால்)  தாய் பூமி, எனவும், தாய் நாடு எனவும் தாய் மண் எனவும் அழைக்கின்றோமே தவிர தந்தையை அடை மொழியாக்கி எதையும் கூறுவதில்லை.

அன்னைக்கு முதலிடம் தருவதில் தவறில்லை. பத்து மாதம் தன்னுயிருக்குள், ஒரு உயிராக நம் உயிரையும்  சேர்த்து சுமந்து, பல இன்னல்களையும் மெளனமாக அனுபவித்து, வேதனைகளுக்கு நடுவே சற்றேனும் முகம் சுளிக்காமல் நம்மை பத்திரமாக இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பதிலிருந்து, சீராட்டி, பாராட்டி  நம்மை வளர்த்து முழுமையாக நாம் வளர காரணமாயிருக்கும் நம் அன்னைக்கு முதலுரிமை தருவதில் தவறேயில்லை! ஆனால் அன்பு முதற்கொண்டு, வீண் விவாதம் வரை உரிமையுடன் தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நாம், தந்தையிடம்  சில வேளைகளில், சற்றே பாராமுகமாக நடந்து கொண்டு சில சமயங்களில் அவரை புறக்கணிக்கிறோமே அதுஏன்?

சிறுவயது பருவம் கடந்து  வளர்ந்து வரும் பருவத்தில், நம் நல் வாழ்க்கைக்காக, அவர் செய்யும்  அளப்பரியா தியாகங்களை உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்காமல்,  அப்பா பேச ஆரம்பித்தாலே  அறிவுரையாக ஏதாவது  (நாம்தான் இந்த அறிவுரை என்ற சொல்லை அகராதியிலிருந்து அகற்ற வாழ்நாள் முழுக்க பாடுபடுகிறவர்களாயிற்றே!  )  சொ(கொ) ல்வார் என்ற திட நம்பிக்கையில்,   எத்தனை அலட்சியங்களை அவருக்கு  பரிசாக சமர்பித்திருக்கிறோம். அத்தனையும்  பொறுத்துக்கொண்டு கண்டும் காணாததும் மாதிரி நடந்து கொண்டு இன்னமும் முன்பை விட அதிகமாக நம்மை கவனித்து பேணி வளர்க்கத் தயாராகும் உன்னத மனிதரல்லவா இந்த தந்தையெனும் மாபிறவி.! அந்தளவிற்கு  நாம் அவருக்கு மதிப்பு தராவிடினும், நம்மை மதித்து போற்றுவதன்றோ தந்தையர் குணம்.

( தந்தையர் தினம் இன்னமும் வரவேயில்லையே!  எதற்காக தந்தை புகழ் பாடும் இந்தப் பதிவு?  என அனைவரும் எண்ணலாம். பெற்றோர்களை பற்றி நினைக்கவும், எழுதவும் அந்தந்த நாட்களை நினைவில் அமர்த்தி அன்றைய நாட்களில்தான் கூற வேண்டுமென்பதில்லேயே!  இரண்டாவதாக தந்தையை பற்றிய, அவர்தம் பெருமையை பற்றிய  பதிவொன்றை நான் படித்தேன். அதனால்  எழுந்ததுவே இந்தப் பதிவு!. அந்தப்பதிவின் வாசகங்களை யார் எழுதியது என அறியேன். ஆனால் அதைப்படிக்கும் போது என் கண்ணில் கண்ணீர் முத்துக்கள் இம்மண்ணில் உதிர்ந்ததென்னவோ உண்மை!. அதை எழுதியவருக்கும் , என்னுடைய பதிவையும் , நான் படித்துப் பகிர்ந்த பதிவையும் படிக்கும் உங்களனைவருக்கும் என்  மனமார்ந்த நன்றிகள்.)

ஆனால், அனைத்து இல்லங்களிலும்,  இந்த மாதிரிதான் என்று நான் சொல்லவில்லை. சிலர்  தந்தையை. தாயை விட அதிகமாக நேசித்து  அவரை பெருமைபடுத்தி மகிழ வைக்கவும் செய்கிறோம் என்பதிலும் ஐயமில்லை.!   அவர்களுக்கெல்லாம்  என் தலை சாய்த்த வணக்கங்களை மண்டியிட்டு தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரை தாயும் தந்தையும் ஓருயிர்..! நம்மை பெற்று வளர்த்து நாம் ஒருநிலை எய்துவதற்கு. இருவருமே சமபங்கை, சரிபாதியாக எடுத்துக்கொண்டு செயலாற்றுபவர்கள். ஒரு முகத்திற்கு இரு விழிகள் எந்தளவுக்கு  பயன்பாடோ, அதே மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் பெற்றோரும் என நினைக்கிறேன். சில முரண்பாடான சமயங்களில், தந்தையே தாயுமாகி, அன்னையே அனைத்துமாகும் சூழ்நிலைகளை படைத்தவனால் உருவாக்கப்படலாம். இவ்வாறு நிறைய எழுதலாம்!. பதிவின் நீ..ள..ம் கருதியும், படிப்பவர்களின் (படித்தால்) பொறுமையெனும் நலத்தையும்  நினைவு கூர்ந்து இத்துடன் நிறுத்தி படித்ததை பகிர்கிறேன்.

                     படித்தமைக்கு  நன்றிகள்.




படித்து பிடித்தது.....

*அப்பாவிற்கு அழத்தெரியாது!!*
⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!
⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!
என்னடா வாழ்க்கை இது என
*ஒருநாளும் அழுதிருக்கமாட்டார்!*
⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து!
⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து!
⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!
போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!
தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!
*நாம் அவரை கல்லெனவே நினைத்துவிட்டோம்!*
⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்!
⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!
ஆனால்,
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!
நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!
தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் *ததும்பும் ஜீவன் அது!*
⚽ நாம் திண்ணும் சோறும்!
⚽ உடுத்தும் உடையும்!
⚽ படித்த படிப்பும்!
அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டியதில்லை!
நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!
ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!
அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!
*அப்பாவின் பாசத்தை உணரக்கூட இல்லையோ!*
⚽ நமக்கு மீசை முளைத்தால் அவர்
குதூகளிப்பார்!
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!
வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!
நம் வாழ்க்கையின் பின்னால்...
*அப்பா எப்போதுமே இருப்பார்!*
⚽ அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!
⚽ அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
⚽ அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
⚽ அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
⚽ அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!
⚽  *அந்த பைத்தியத்திற்கு*
*அழவும்தெரியாது!*
⚽ வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்! 
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!
*நம்ச ந்தோசத்திற்காகவே எதையும் தாங்கும் ஆன்மா அவர்!*
⚽ பாசமோ!
⚽ மன்னிப்போ!
⚽ அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே  வெளிப்படுத்தி விடுங்கள்!
 ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா   
      மரணமோ!
 உங்கள் அப்பா வயதுடைய யாரோ
     ஒருவரின் மரணமோ! 
 உங்களை புரட்டி போட்டு!
     அவர் பாசம் புரிந்து!
     அப்பாவை தேடி ஓடிரும்போது!
 வீட்டில் அப்பா...
      சிரித்துக்கொண்டிருக்கலாம்...
      புகைப்படத்தில்!!
*பாவம்_அவருக்குதான்..*
*அழத்தெரியாதே!!*
படித்தேன்!
பகிர்ந்தேன்!!

Monday, March 16, 2015

ஒரு தீயின் ஆரம்பம்.. (சிறுகதையின் பகுதி 3)

விச்சு.! எழுந்துக்கோ! என்ன பண்றது.! நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்! மனசை தேத்திண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம்.! மூத்த அண்ணனின் சமாதானங்கள் என் செவியில் விழுந்தாலும், எதுவும் தோன்றாத மனநிலையில் நான் விழுந்து கிடந்தேன். என்னைச் சுற்றி உறவு பட்டாளங்கள் அங்குமிங்கும் நடமாடியபடி இருந்தன. அத்தனை உறவுகளையும் ஒரு சேர பார்க்க விரும்பிய என் அம்மா இது ஒன்றையும் உணராத நிலையில் படுத்து, இல்லையில்லை! படுக்க வைக்கப் பட்டிருந்தாள். அன்று அத்தனை ஜூரத்திலும், தனக்கு ஒன்றுமே நடவாத மாதிரி சில நாட்களில் எழுந்து நடமாடிய அம்மா ஒருமாத அவகாசத்தில் இப்படி தீடிரென, எங்களை பரிதவிக்க விட்டு செல்வாள் என்று நானும் அப்பாவும் நினைத்துக்௬ட பார்க்கவில்லை.! அப்பா பாதி உயிர் போன மாதிரியான அதிர்ச்சியில் உறைந்திருந்தார்.“ இனி என்னிடம் வடிப்பதற்கு கண்ணீர் இல்லை!” என சோர்ந்த நிலையில் மயங்கிய கண்களுடன் இருக்கும்  அவரைப் பார்க்கவே மனதை பிசைந்தது. அம்மா! ஏம்மா இப்படி யாருகிட்டேயும் எதுவும் சொல்லாமே, எங்களையெல்லாம் பார்க்கப் பிடிக்காத மாதிரி இனி எங்களோடெல்லாம் வாழப் பிடிக்காத மாதிரி..ஏம்மா இப்படி..?” மனசு இதே கேள்வியை கணக்கே இல்லாமல், ஜபித்தபடி புலம்பிக் கொண்டேயிருந்தது. அம்மா எதுக்கும் எனக்கு பதில் தெரியாதென்ற பாவனையில் விழி மூடி மெளனித்திருந்தாள். அம்மா! நீ வரணும்முன்னு எதிர்பார்த்த அத்தனை பேரும் இப்போ வந்துருக்கா பாரு! உனக்கு சந்தோஷமா? இதுக்காவது ஒரு பதில் சொல்லேன்.! நா அன்னைக்கே என் கற்பனையை உன்கிட்டே சொல்லி உன்னை சந்தோஷப்படுத்தனுன்னு நினைச்சேன். இப்போ நிஜமாவே இவங்களைப் பார்த்து நீ சந்தோஷப்படுறியான்னு, என்னாலே பார்க்க முடியிலேம்மா! ஆனா, நீ கண்டிப்பா சந்தோஷபடுவே! எனக்குத் தெரியாதா? உன் மனசிலே எழுந்த அத்தனை எண்ணங்களின் ஒவ்வொரு எழுத்தையும் கொஞ்சமும் தவறில்லாமே  நீ எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கியே! உன்னோட ஆதங்கங்கள் அனைத்தையும்  என்னிடந்தானே வடித்திருக்கிறாய்? ஆனால், வந்தவர்களுடன் களித்துப்பேசி உலாவி மகிழ நீ இல்லையேம்மா.! மனசு தான் பாட்டுக்கு பயித்தியம் மாதிரி பேசி என் விழிகளை குமுற வைத்துக் கொண்டிருந்தது. சித்தம் முழுதுமாக கலங்கி இருந்ததில், இதை எப்படி தாங்கிக் கொண்டிருக்கிறோம்? என்ற சுய பச்சாதாபத்தில் கை கால்கள் சொல்லவொண்ணா சோர்வடைந்திருந்தன. யாரோ வந்து என்னப்பா? இப்படியே எத்தனை நாழி? என்று சிறிது உரிமையுடன் அண்ணாவிடம் ஏதோ ௬றிச்சென்றார். அண்ணா கண்ணைத் துடைத்தபடி அவர் பின்னாடி எழுந்து நடந்தான்.

நானும் தள்ளாடும் உடலை சாமாதானப் படுத்தியபடியே, எழுந்து வீட்டின் பின்பக்கம் சென்றேன். ஹாலுக்கு அடுத்த அறையில், “அவ எப்பவுமே அப்படித்தான்.! தன் குடும்பம் நல்லா இருக்கனும்னு ௬ட பாக்காமே எல்லாத்தையும் புகுந்த வீட்டு உறவுக்களுக்கு பாத்துப்பாத்து தானமா கொடுத்துட்டு , தானும், தன் குழந்தைகளும் சந்தோஷபடாமே கஸ்டத்திலே வாழ்ந்தா.!   நம்மகிட்டே மட்டும் அப்ப கொட்டியா கிடந்தது.? உதவி செய்றதுக்கு.! பொழைக்க தெரியாமே கஸ்டப்பட்டா, நாம என்ன பண்றது? என்று தன் தங்கையின் கடந்த கால வாழ்வைச் சொல்லி தன் அண்ணா, அண்ணியிடம், அங்கலாயித்து கொண்டிருந்தாள் பெரியம்மா. அதே பெரியம்மாவுக்கு ஏதோ பணமுடை வந்த போது அம்மா தன் நகைகளை விற்று உதவி செய்ததை நானும் அறிவேன். அந்த உதவிப்பணம் இன்று வரை வந்து சேராதது வேறு விஷயம்.! அதைப்பற்றி எப்போதாவது வீட்டில் பேச்சு வரும்போதும் "கிடைக்கும் போது கொண்டு வந்து தர மாட்டாளா.? கேட்டால் அவ மனசு கஸ்டமாயிடும், பணமா பெரிசு? நாம போகும்போது எதையும் கொண்டுபோக போவதில்லை..!" என்று சாதாரணமாக பேசி, பணத்தை விட மனிதாபிமானந்தான் பெரிது என்று வாழ்ந்த அம்மா அதைப்பற்றி என்றும் கவலையும் படவில்லை என்பதும் நாங்கள் அறிந்த விஷயமே.! அன்று வராத ஆத்திரம் லேசாக மேலெழுந்தது. அம்மா உறவை மட்டுந்தானே விரும்பி யாசித்தாள்.! இவர்கள் பணத்தை மட்டுமே பிரதானமாக கருதி இவள் எங்கு பதிலுக்கு உபகாரத்தை நம்மிடம் எதிர்பார்த்து விடுவாளோ?” என்ற யோசனையில் இன்று வரை ஆயிரம் காரணங்களைச் சொல்லி பாராமுகப் படுத்தியது நினைவுக்கு வந்தது.!

அவர்களிடம் எதுவும் பேசப் பிடிக்காமல், பின் பக்கம் சென்ற போது, முற்றத்தில் அருகருகே நாற்காலியில் அமர்ந்திருந்த இரண்டு அத்தைகளும், “அண்ணியோட அக்கா என்ன பேச்சு பேசுறாங்க தெரியுமா? ஏதோ நம்ம வாழ்க்கையை நல்லா அமைச்சு குடுத்துதான், அண்ணாவும், அண்ணியும். வாழவே முடியாத ஒரு நிலைமைக்கு போய்ட்டாங்களாம்.! எல்லாம் நம்ம நேரம்.! நம்ம அம்மா இருந்திருந்தா இப்படியெல்லாம் ஒரு பேச்சு வந்திருக்குமா? அப்படி என்னதான் இந்த புண்ணியவதி ஊர்ல உலகத்திலே இல்லாததையெல்லாம் நமக்கு வாரி வழங்கிட்டாங்க.! எனக்கு வந்த கோபத்திலே…."என்று நான் வந்ததைப்பற்றி ௬ட கவலைப்படாமலோ, இல்லை கவனிக்காமலோ, பேசிக் கொண்டேயிருந்தார்கள். அப்பாவை கைப்பிடித்து வந்த போது சின்ன வயதில் தாயை இழந்து நின்ற இவர்களுக்கு பெறாத தாயாய் மாறி, அந்தப் பெற்றதாய்  செய்யமுடியாமல் போனதையெல்லாம், அதற்கும் மேலாக பார்த்து பார்த்து செய்த, என் அம்மாவின் நிழல் ௬ட இவர்கள் மேல் பட அருகதை யில்லையென்ற  கோபம் என்னுள் எழுந்ததை என்னால் கொஞ்சமும் தடைசெய்ய இயலவில்லை.!

நடை தடுமாற்றத்துடன் அவர்களை கடக்க, பார்க்கப் பிடிக்காமல், உள்திரும்பிய போது, ஆமா.! எல்லாத்தையும் பாவம் பரிதாபம்னு தானம் கொடுத்தே தேச்சிட்டாங்க.! நமக்குன்னு என்ன வச்சிருக்க போறாங்க.! ஒரு நல்ல நகை நட்டாவது மிச்சம் வச்சிருக்காங்களானு தெரியல்லையே ? இந்த ஒட்டை வீட்டையாவது, காப்பாத்த முடியுமான்னு யோசிக்கனும்.! இல்லாட்டி இதுல வர்ற பங்கும் போயிடும்.! என்று கொஞ்சம் சத்தமாகவே அண்ணிகள் இருவரும் சமையல் அறை வாசலில் நின்றபடி முணுமுணுத்தது காதில் சோதனையாக வந்து விழவும், மனதிலெழுந்த கோபம் தீயாக மாறட்டுமா? என்று உக்கிரமாக கேட்டபடி, ஒரடி முன் வைத்தது.

ஹாலுக்கு தடுமாற்றத்துடன் வந்தவுடன், மனசெல்லாம், வருத்தத்திலும், கோபத்திலும் படபடத்தது. உறவுகள் ஆளாளுக்கு ஒரு இடத்தில் அமர்ந்தபடி, அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று பாதி உயிருடனிருந்த அப்பாவிடமும், அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த அண்ணன்களிடமும், கேட்டபடி இருந்தார்கள். நடுநடுவில்  நீ பசி தாங்க மாட்டாயே.? எவ்வளவு நேரமாகுமோ தெரியவில்லை.? அடுத்து இங்கிருந்து புறப்பாடு ரயிலா? பேருந்தா? எப்போதோ?” என்ற கேள்விகளும், பதில்களுமாய், வேறு பிற உறவுகளின், சுக கஸ்டங்களைப் பற்றிய விவாதங்களுமாய், தங்கள் வியாதிகளையும், இதர பிராயாணங்களை பற்றிய சம்பாஷனைகளுமாய், எப்படியாவது இன்றைய பொழுதை போக்கி கழித்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட வேண்டுமென்ற உத்வேகத்துடன் மட்டும் இருப்பதை காண முடிந்தது. ஒருவராவது "உறவுகளின் உள்ளங்களை மட்டுமே விரும்பிய ஒரு ஜீவன், தாம் வந்த போதெல்லாம், காலை முதல் இரவு வரை தமக்கு வேண்டியதை உற்சாகத்துடன் சமைத்து போட்டு, தன்னைப்பற்றி ௬ட கவலையுறாது,  தாம் அங்கங்கு செல்லும் பிரயாணங்களுக்கு உடனிருந்து உதவி செய்து, தன்னலம் கருதாது, தமக்காக பாடுபட்டதே என துளியும் நினைக்காது, அந்த ஜீவனை பிரிந்த உடலுக்கு மரியாதையாக, பரிவாக ஏதாவது பேசி நினைக்க வேண்டாமா.?" என்ற பச்சாதாபம் ஊடுறுவிய எண்ணங்களின்றி, சிந்தனைகளின்றி சுயநலத்தின் மொத்த அவதாரமாக இருந்ததைக் கண்டு என் மனதில் எழுந்த கோபமும், வருத்தமும் ஒன்று சேர்ந்து, ஏற்கனவே எழுந்த தீயின் ஜூவாலையுடன் ஒருசேரக் கலந்தது.

மெதுவாக அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தேன். விச்சு! உன்னை அநாதையாக்கிட்டு, நான் மட்டும் கொஞ்ச நேரத்திலே புறப்பட்டுருவேனோ? ஆனா ஒண்ணு! என் பேச்சிலிருந்து இன்று முதல் நீ தப்பித்தாய்? அது வரைக்கும் உனக்கு நல்லதுதானே.?” வழக்கப்படி அம்மா கேலியாக கேட்பது போல் இருந்தது. அம்மா! பாரும்மா! நாள்தோறும் வரவேண்டும் என்று விரும்பிய இந்த உறவுகளுக்கா, நீ தவமாய் தவமிருந்தாய்? உன்னிடம் நிதி நிலவரத்தின் ஆளுமை குறைய தொடங்கியதுமே, உன் அன்பு மட்டுமே மாறாது மிஞ்சி நின்ற மனதை புரிந்து கொள்ளாத இந்த உறவுகள் உன்னை சுற்றிச்சுற்றி வருமென நீ தினம்தினம் ஒரு கனவுடன் வாழ்ந்திருந்தாயே.! நீ உயிருடன் இருந்த போது இவர்களது உதாசீனங்கள் உன்னையும் பாதிக்கவில்லை.! எங்களையும் அண்ட விடாமல் பேசி சமாளித்தாய்.! ஆனால், இன்று இவர்களின் நடவடிக்கைகள், என்னை வெறுப்படைய செய்கின்றதே.! நீ எப்படி இதுநாள் வரை பொறுத்துக்கொண்டாய்? உன் பொறுமை எனக்கில்லையே! ஏன்? ஏம்மா, இவங்க இப்படி இருக்காங்க.? இவர்களைப்பற்றி பேசிப்பேசி நம்மை பற்றி சிந்திக்கவும் மறந்தோமே.! ஒரு வேளை நானும் இன்னும் நல்ல நிலைக்கு வந்து நம் வாழ்வு சிறப்படைந்திருந்தால், இவர்கள் நம்மை மறுபடியும் சுற்ற ஆரம்பித்திருப்பார்களோ, என்னவோ? அதைப் பார்த்தாவது உன்மனசு ஆனந்தமடைந்திருக்குமே அம்மா.! அதற்குள் ஏன் என்னை விட்டுப் போய்விட்டாய்? அம்மா! நீ இல்லாமல் இனி ஒவ்வொரு நொடியும் எப்படி தனித்திருக்கப் போகிறேன்.! தெரியவில்லையே அம்மா..!" மனசுக்குள் அழுகை வெடித்து பிரவாகமாகி, ஒரு ஓரமாய் எழுந்த தீயின் ஜூவாலைகளை அணைக்கப் பார்த்தது.

விச்சு.! அழாதே.! எழுந்துக்கோ.! ஆக வேண்டியதை கவனி.! இப்படியே அழுதுகிட்டே இருந்தா போறுமா.? நேரமாகிறது பார்.! யாரோ பசி அரக்கனுக்கு பயந்து சமாதானபடுத்த அருகில் வந்தவுடன், அணையலாமா என யோசித்த தீ மடமட வென்று எரிந்தது. “தயவு செஞ்சு என்னை அழ விடுங்க! உங்களுக்கெல்லாம் பசியோ, இல்லை வேறு ஏதாவது வேலைகளிருந்தால், கிளம்பி போயிண்டே யிருங்கோ.! எப்போதும் உங்களுக்காகவே  வாழ்ந்த என் அம்மாவை  என்னோட கொஞ்ச நேரமாவது வாழ விடுங்க.! இனி எந்த உறவும் என் அம்மாவை சங்கடபடுத்த வேண்டாம்.! நான் பார்த்துக் கொள்கிறேன் என் அம்மாவை. நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம்.! என் அம்மாவின் நினைவுகள் முழுதும் இனி எனக்கு மட்டுந்தான். அதையும் தானமா எடுத்துண்டு போயிடாதீங்க.! அப்பாவும், நானும் இனி அவளோட நினைவுகளிலேயே எப்படியோ வாழ்ந்துடுவோம்.! மனதின் பலவீனத்தில் எழுந்த என் சத்தமான கதறலில் அப்பாவும் வந்து பங்கெடுக்க, வந்திருந்த மொத்தக்௬ட்டமும் ஹாலில் நிரம்பியது. அண்ணன்கள் என் வாயிலிருந்து வெளியேறிய பேச்சில் ஸ்தம்பித்து நிற்க, சொல்லிக் கொள்ளாமல், கிளம்பி விடும் சூழ்நிலையில் இருக்கும் உறவுகள், உண்மையிலேயே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பலாமா? என்று ௬டிக்௬டிப் பேசி யோசித்துக் கொண்டிருந்தது.” விச்சு.! நீ  ஒருவனே என் உறவு என நினைத்து அப்பாவும் நானும் வாழ்ந்திருக்கனும்டா.! உறவின் கதைகள் பேசிப்பேசி உன்னை ரொம்பவே காயப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன். உன்னை இப்படி வருத்தப்பட வச்சதுக்கு என்னை மன்னிச்சுகோடா.!” என்று அம்மா தலையை கோதிவிட்டு ஆறுதல் படுத்துவது மாதிரி எனக்குத் தோன்றியது. “அம்மா! நீயும் என்னை மன்னிச்சிடு.! நானும் உன்னை மாதிரி இது நாள் வரைக்கும் எதுக்குமே கோபப்பட்டதில்லையே அம்மா.! இன்னைக்கு உன் அனுமதியில்லாமே, நீ ரொம்ப விரும்பி அனுசரிச்சி போன இந்த உறவுகளை, அவங்க உன்னைப்பத்தி பேசின வார்த்தைகளை, கேட்டு பொறுக்க முடியாமே, எனக்கு வந்த கோபத்திலே, வருத்தத்திலே வார்த்தைகளை விட்டுட்டேன்என்னை மன்னிச்சுடு..! மனசுக்குள் சொல்லியபடி  நான் விம்மி விம்மி வாய் விட்டு அழுது மனதில் கொழுந்து விட்டெறியும் தீப் பிளம்புகளை முழுதுமாக அணைக்க ஆரம்பித்தேன்சுற்றி நின்ற வேறு உறவுகளை பற்றி கவலைபடாமல், அம்மாவிடம் வருத்தங்களை சொல்லி அழும் போது, உடலின் சோர்வோடு ஒருசேர கனத்திருந்த மனமும் லேசாக, உள்ளுக்குள் ஆரம்பமான தீயின் தாக்கங்கள் படிப்படியாக மறைவதற்கு ஆயுத்தமாகியது..

முற்றும்...

கீழுள்ள இந்த பாடலுக்கும், கதைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.! ஆனால் எஸ். பி. பியின் இனிமையான குரல் எனக்கு மிகவும் பிடித்தமாகையால், இந்த இனிமையான பாடலை பகிர்ந்துள்ளேன். இதன் வரிகளின் அர்த்தங்கள் அன்பை சார்ந்திருப்பதால் இனிதான அந்த குரலுடன் கேட்கும் போது மனசுக்கு இதமாக இருக்கும்.. கேட்கும் அனைவருக்கும் நன்றிகள்...!