Showing posts with label ஆதங்கம். Show all posts
Showing posts with label ஆதங்கம். Show all posts

Friday, January 19, 2018

தந்தையின் தனித்துவம்....




   இவ்வுலகத்தில்  அன்னை, தந்தை எனவும், மாதா  பிதா  எனவும் பேச்சு வழக்கில் அன்னைக்குதான் முதலிடம் தருகிறோம். தாயிற்சிறந்த கோவிலுமில்லை ! தந்தை சொல் மிக்க மந்திரமல்லை! என்று தாயை கோவிலாக்கி  தந்தையை வெறும் மந்தரமாக்குகிறோம். பொறுமைக்கு மறு அர்த்தமாக விளங்கும் நாம் வசிக்கும் இந்த பூமியையும், ( நம் அன்னை அந்த பொறுமையின் அவதாரமாகையால்)  தாய் பூமி, எனவும், தாய் நாடு எனவும் தாய் மண் எனவும் அழைக்கின்றோமே தவிர தந்தையை அடை மொழியாக்கி எதையும் கூறுவதில்லை.

அன்னைக்கு முதலிடம் தருவதில் தவறில்லை. பத்து மாதம் தன்னுயிருக்குள், ஒரு உயிராக நம் உயிரையும்  சேர்த்து சுமந்து, பல இன்னல்களையும் மெளனமாக அனுபவித்து, வேதனைகளுக்கு நடுவே சற்றேனும் முகம் சுளிக்காமல் நம்மை பத்திரமாக இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பதிலிருந்து, சீராட்டி, பாராட்டி  நம்மை வளர்த்து முழுமையாக நாம் வளர காரணமாயிருக்கும் நம் அன்னைக்கு முதலுரிமை தருவதில் தவறேயில்லை! ஆனால் அன்பு முதற்கொண்டு, வீண் விவாதம் வரை உரிமையுடன் தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நாம், தந்தையிடம்  சில வேளைகளில், சற்றே பாராமுகமாக நடந்து கொண்டு சில சமயங்களில் அவரை புறக்கணிக்கிறோமே அதுஏன்?

சிறுவயது பருவம் கடந்து  வளர்ந்து வரும் பருவத்தில், நம் நல் வாழ்க்கைக்காக, அவர் செய்யும்  அளப்பரியா தியாகங்களை உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்காமல்,  அப்பா பேச ஆரம்பித்தாலே  அறிவுரையாக ஏதாவது  (நாம்தான் இந்த அறிவுரை என்ற சொல்லை அகராதியிலிருந்து அகற்ற வாழ்நாள் முழுக்க பாடுபடுகிறவர்களாயிற்றே!  )  சொ(கொ) ல்வார் என்ற திட நம்பிக்கையில்,   எத்தனை அலட்சியங்களை அவருக்கு  பரிசாக சமர்பித்திருக்கிறோம். அத்தனையும்  பொறுத்துக்கொண்டு கண்டும் காணாததும் மாதிரி நடந்து கொண்டு இன்னமும் முன்பை விட அதிகமாக நம்மை கவனித்து பேணி வளர்க்கத் தயாராகும் உன்னத மனிதரல்லவா இந்த தந்தையெனும் மாபிறவி.! அந்தளவிற்கு  நாம் அவருக்கு மதிப்பு தராவிடினும், நம்மை மதித்து போற்றுவதன்றோ தந்தையர் குணம்.

( தந்தையர் தினம் இன்னமும் வரவேயில்லையே!  எதற்காக தந்தை புகழ் பாடும் இந்தப் பதிவு?  என அனைவரும் எண்ணலாம். பெற்றோர்களை பற்றி நினைக்கவும், எழுதவும் அந்தந்த நாட்களை நினைவில் அமர்த்தி அன்றைய நாட்களில்தான் கூற வேண்டுமென்பதில்லேயே!  இரண்டாவதாக தந்தையை பற்றிய, அவர்தம் பெருமையை பற்றிய  பதிவொன்றை நான் படித்தேன். அதனால்  எழுந்ததுவே இந்தப் பதிவு!. அந்தப்பதிவின் வாசகங்களை யார் எழுதியது என அறியேன். ஆனால் அதைப்படிக்கும் போது என் கண்ணில் கண்ணீர் முத்துக்கள் இம்மண்ணில் உதிர்ந்ததென்னவோ உண்மை!. அதை எழுதியவருக்கும் , என்னுடைய பதிவையும் , நான் படித்துப் பகிர்ந்த பதிவையும் படிக்கும் உங்களனைவருக்கும் என்  மனமார்ந்த நன்றிகள்.)

ஆனால், அனைத்து இல்லங்களிலும்,  இந்த மாதிரிதான் என்று நான் சொல்லவில்லை. சிலர்  தந்தையை. தாயை விட அதிகமாக நேசித்து  அவரை பெருமைபடுத்தி மகிழ வைக்கவும் செய்கிறோம் என்பதிலும் ஐயமில்லை.!   அவர்களுக்கெல்லாம்  என் தலை சாய்த்த வணக்கங்களை மண்டியிட்டு தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரை தாயும் தந்தையும் ஓருயிர்..! நம்மை பெற்று வளர்த்து நாம் ஒருநிலை எய்துவதற்கு. இருவருமே சமபங்கை, சரிபாதியாக எடுத்துக்கொண்டு செயலாற்றுபவர்கள். ஒரு முகத்திற்கு இரு விழிகள் எந்தளவுக்கு  பயன்பாடோ, அதே மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் பெற்றோரும் என நினைக்கிறேன். சில முரண்பாடான சமயங்களில், தந்தையே தாயுமாகி, அன்னையே அனைத்துமாகும் சூழ்நிலைகளை படைத்தவனால் உருவாக்கப்படலாம். இவ்வாறு நிறைய எழுதலாம்!. பதிவின் நீ..ள..ம் கருதியும், படிப்பவர்களின் (படித்தால்) பொறுமையெனும் நலத்தையும்  நினைவு கூர்ந்து இத்துடன் நிறுத்தி படித்ததை பகிர்கிறேன்.

                     படித்தமைக்கு  நன்றிகள்.




படித்து பிடித்தது.....

*அப்பாவிற்கு அழத்தெரியாது!!*
⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!
⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!
என்னடா வாழ்க்கை இது என
*ஒருநாளும் அழுதிருக்கமாட்டார்!*
⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து!
⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து!
⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!
போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!
தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!
*நாம் அவரை கல்லெனவே நினைத்துவிட்டோம்!*
⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்!
⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!
ஆனால்,
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!
நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!
தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் *ததும்பும் ஜீவன் அது!*
⚽ நாம் திண்ணும் சோறும்!
⚽ உடுத்தும் உடையும்!
⚽ படித்த படிப்பும்!
அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டியதில்லை!
நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!
ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!
அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!
*அப்பாவின் பாசத்தை உணரக்கூட இல்லையோ!*
⚽ நமக்கு மீசை முளைத்தால் அவர்
குதூகளிப்பார்!
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!
வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!
நம் வாழ்க்கையின் பின்னால்...
*அப்பா எப்போதுமே இருப்பார்!*
⚽ அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!
⚽ அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
⚽ அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
⚽ அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
⚽ அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!
⚽  *அந்த பைத்தியத்திற்கு*
*அழவும்தெரியாது!*
⚽ வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்! 
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!
*நம்ச ந்தோசத்திற்காகவே எதையும் தாங்கும் ஆன்மா அவர்!*
⚽ பாசமோ!
⚽ மன்னிப்போ!
⚽ அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே  வெளிப்படுத்தி விடுங்கள்!
 ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா   
      மரணமோ!
 உங்கள் அப்பா வயதுடைய யாரோ
     ஒருவரின் மரணமோ! 
 உங்களை புரட்டி போட்டு!
     அவர் பாசம் புரிந்து!
     அப்பாவை தேடி ஓடிரும்போது!
 வீட்டில் அப்பா...
      சிரித்துக்கொண்டிருக்கலாம்...
      புகைப்படத்தில்!!
*பாவம்_அவருக்குதான்..*
*அழத்தெரியாதே!!*
படித்தேன்!
பகிர்ந்தேன்!!

Monday, April 6, 2015

நிதர்சனங்கள்....


பட்டப் பகலென்ற அந்த ஒரு பெரும் பொழுதில்,
பலரும் பார்த்திருக்க, பல வண்ணங்கள் கலந்த
பளிங்கைப் போன்ற என்னைக் கண்ட பரவசத்தில்,
பார்வையை திருப்பி என்மேல் பதிய வைத்தாய்…..

பதிலேதும் சொல்லாத உன் முகபாவங்கள்
படுவேகமாய் வந்து என்னையும் பதம் பார்க்க.
பரிதவிக்கும் விழிகளுடன், பாசமான வாழ்வைத்தேடி
பகலிரவு பாராமல் உனக்காக காத்திருந்தேன்

சுற்றம் சூழ வந்திருந்த பிறிதொருநாளிலும்,
சுற்றி இருப்பவர்களை பற்றி சற்றும் உணராது,
என்னை உனதாக்கிக்கொள்ள, நீ பிரயத்தனித்தது கண்டு,
என்னுள்ளும் எழுந்தது மகிழ்ச்சியெனும் ஆரவாரப்புயல்

இன்று உன் கைத்தலம் பற்றி விட்டேன். சுருங்க௬றின்,
இனிதான உன் பாதத்தில் சரணடைந்து விட்டேன்.
நாட்கள் நகர்ந்ததில், “உனக்காக நான் மட்டுந்தான் எனும்,
நாட்கள் என்னை சிலிர்க்க வைத்துப் போயின..

உறவின் சந்திப்பிலும், நண்பர்களின் உரையாடலிலும்,
உலகத்தையே நீ மறந்தாலும், உன் உயிரோடு உறவாக,
என்னையும் மதித்தது, என்செய்கைகளை பெரிமிதபடுத்தியது,
என்னை, மீண்டும் இதே பிறவியுடனே உனையடைய வேண்டவைத்தது.

நீயும் நானும் எங்கு சென்றாலும், நீங்காது இணைந்திருந்தோம்.
நீண்ட காலங்கள் இதுபோல் பயணித்திருக்க வேண்டுமென,
நான் வேண்டாத தெய்வமில்லை! போகாத கோவிலில்லை!! அப்படியும்,
நம்மையும் பிரித்திட விதி செய்த சதியினிலே வீழ்ந்தேன் ஓர்நாள்

காலங்களின் ஓட்டத்தில், நீ என்னை சிறிது கண்டும், சிலநேரம்
காணாதும் போனதில், கவலைகள் கவலையின்றி என் மனம்புகுந்து,
கரம் பற்றி ஆறுதல் எனும் பெயரோடு என் ஆற்றாமைத் தீயை
கனலாக மாற்றி தகிக்க வைத்து விட்டுப் போனது

வாடிய முகமுடன் உன் வரவை எதிர்நோக்கி வாசலில் தவமிருந்தேன்
வந்ததும் உன்முகத்தில் அன்றைய மந்தகாசம் சுடருடன் பிரகாசிக்க,
விடியலில் உன்னுடன் இன்பபயணமென்று இரவை அசதிக்கு தந்து
விழிமூட, விடிந்ததும் விபரங்களை புரிய வைத்து தனியாக்கினாய்….

உற்சாகமாய் புதிதாக பிறந்த மகிழ்வுடன் புறப்பட்டு சென்ற உன்
உதாசீனங்கள் என் இனத்திற்கு என்றும் புதிதில்லையே.? இவையல்ல,  
மற்றவைக்கும் நாளை இக்கதியே.! என்ற தத்துவம் தோன்றி தேறிய
மனதினிலே சமாதானம் ஒருநொடியில் பிறந்தெழுந்து மறைந்தது..

அடுத்த நாள் என் இருப்பிடம் நீ ௬றாமலே எதுவென்றும் புரிந்தது.
அந்த நொடியில் என் வேதனை யாரறிவார் இப்புவியில்! எனினும்,
"காலுக்கு உதவாததை கழற்றி எறி," என்பது எங்களுக்கே வடித்த மொழி!
காலங்காலமாய் நாங்களறிந்த "பழமொழி!" பளபளக்கும் உடையுடனே
நாங்கள் உன் கைதவழ்ந்து புதிதாக வந்தாலும், வாழ்வெல்லாம் உன்
நிழல் பெற இயலாது.! ௬டிக்குலாவி நித்தமும் உன் காலுக்கு  
வேலியாய் நிரந்தரமாக முடியாது.! ஏனெனில் நான்.(ஏன் நீயும் ஓர்நாள்
வெறும் காதறுந்த பயனற்ற பழைய செருப்புதானே.!!


Thanks to Google
Thanks to Google


Saturday, October 18, 2014

பதிவுலக திரு(டர்)வாளர்களுக்கு, என் பணிவான வணக்கங்கள்.!!!

செய்யும் தொழிலே, சிறந்ததோர் தெய்வமென,
சிறப்பான வழியினிலே, சீர்வகுத்த புலவரையே,
சிந்தைதனில் நிறுத்தி வைத்து, சிறிதேனும் கற்றுணர்ந்து,
சீரான வாழ்வதையே, சிலகாலமேனும் வாழுங்கள்.!!

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினிலே, எழுத்துக்கலையின்
அருமை பெருமைகளை, நாளும் உயர்த்த எண்ணும்,
அருந்தவ உடன்பிறப்புகளின், ஆதங்கம் ஏதுமறியாமல்,
அவர்களின் படைப்புகளை, அநியாயமாய் உண்ணாதீர்கள்.!!

திருட்டென்ற கொடுந்தொழில் செய்து பின்னர்,
திருந்தி வாழ்ந்து, சென்ற திக்கெல்லாம் புகழடைந்து,
திருப்தியுடன் இறைவனது திவ்யமலரடி தொழுது,
திரும்பவும் பிறப்பெய்தாத, வரமுடன் சென்றடைந்தவருண்டு.!!!

அவரைப்போல் நாங்களும், திருட்டென்ற பாபம் செய்து,
அகிலத்திலே பெயரெடுத்து, புவனம் உள்ளளவும்,
அவனியிலே பவனி வருவோமென கற்பனையில் களிக்காதீர்கள்.!!!
அவரும், நீங்களும், சத்தியமாய் எந்நாளும்,
அவனிதனில் சரிநிகராய் ஆகவும் இயலாது.!!
அவர் தான்சுமந்த பாபத்தை இறக்கிவைக்க அவதரித்தார்.!
அவரித்த நாமனைவரும், அதைச்சுமக்கத்தான் பிறந்துள்ளோம்.!

முல்லைக்குத்தேர் கொடுத்தோன், பறவைக்கு உயிர்தரவே
முயன்றவரை உடல் கொடுத்தோன், கவி எழுதும்
முயற்சிக்கு பொருள் கொடுத்தோன், பிறர் வளர்ச்சிக்கு,
முன்னின்று தோள் கொடுத்தோன், இவர்களை படிப்பித்த
மூத்தோர்சொல் வார்த்தைகளை, நினைவினின்றி நீங்கச்செய்து
முழுமையாக முழுவீச்சில் மறந்துதான் போனீர்களோ.?

உயிர் விடும் வேளையிலும், உடல் தொய்ந்த பொழுதினிலும், தன்
உதிரத்தால் தான் உவந்து பெற்ற தர்மமெல்லாம், கேட்டவர்க்கு
உவகையுடன் தானமளித்த கர்ணன் எனும் மாமன்னன்,
உலகில் அழியாப் புகழோடு இன்றுவரை வாழுகின்றான்..!!

இன்னும் இறந்தும் தானமளித்தார் சீதகாதி வள்ளளவர்.!
இங்கணம் இடுக்கண் களைவோர், இப்புவியில் ஏராளம்.!
இவர்கள் பிறந்த மண்ணில்தான், நாங்கள் பிறந்து வந்ததினால்,
இல்லையென்று சொல்ல எங்கள் நாவும் மனமும் ௬சும்.!
இனிமேலாவது திருடாமல், இணக்கமாய் வேண்டி பெற்றிடுங்கள்.!
இயன்றவரை படைத்ததை பெருமையாய் தந்திடுவோம்..!

இத்தனையும் விரிவாய் ஏன் சொன்னேன் என்றால்,?
இத்தனைக்கதையிலும், ஏதாவதை சுயமாய் எழுதப்பழகுங்கள்.!
இத்திருட்டை இனியும் இசைவான மனமுடனே செய்யாதீர்கள்..!!
இதற்குத்தான் இப்பதிவு, இயல்பாய் எழுந்தது என்னுள்ளே..!!!!
இத்தனைச்சொல்லியும், எந்நாளும் திருந்தோம் என்றால்,
இப்படைப்பையும், என் உரிமையின்றி உமதாக்கிக் கொள்ளுங்கள்..!