Showing posts with label . ஸ்ரீவிநாயகர் அருள் ஆன்மிகம். Show all posts
Showing posts with label . ஸ்ரீவிநாயகர் அருள் ஆன்மிகம். Show all posts

Thursday, September 8, 2022

காக்கும் கடவுள் கணபதி.

பிள்ளையார் சுழி. 

புதிதாக வந்த என் கைப்பேசியில் முதன் முதலாக எடுத்தவுடன் ஸ்ரீ விக்னேஷ்வரரைப் பற்றிதான் எழுத வேண்டுமென ஆசைப்பட்டேன்.  ஏனென்றால், நான்  பிறந்ததிலிருந்து எனக்கு  நிழலாக இருந்து, என் உயிரோடு கலந்து என் நினைவிலே எப்பொழுதும் நிறைந்து நிற்பவன் "அவன்"தான். எங்கள் வாழ்வில் எந்த செயலுக்கும் "அவன்" துணைதான் எங்களுக்கு சஞ்சலங்கள் இல்லாத  நிம்மதியை தருவது. ஆனால்,  அதற்குள் "அவன்" ஆணையில் அந்தக் கைபேசி வந்த விபரம் குறித்து எழுத வைத்து விட்டான். சரி..இப்படி ஏதோ எழுத ஆரம்பித்து விட்டோமே என அவ்வப்போது டிராப்டில் ஏதோ கிறுக்கி வைத்ததையும் பகிரலாம் என அதையும், பழைய போட்டோக்களையும் நான் பார்வையிட்ட போது "என்னை வைத்து ஏதோ எழுத நினைத்தாயே..! இதோ..!! உன் பழைய கைப்பேசியில் ஆர்வத்துடன் என்னை
எடுத்த புகைப்படத்தை வைத்து உன் ஆசைப்படி ஒரு பதிவாக்கி துவக்கி விடேன்." என்று "அவன்" புன்னகையுடன் மறுபடி ஆணையிட சரியென சம்மதித்தேன். எனக்கு அந்த கோவிலைப் பற்றிய  விபரங்கள் சரியான அளவில் கூறத் தெரியாது என்றாலும், கூகுளில் தேடிப்பிடித்து என்னாலான விபரங்கள் தந்துள்ளேன். அதன்படி பிறந்தது இந்தப்பதிவு. எல்லாம் "அவன்" செயல்தானே.... 🙏. 

எங்கள் மகன் இளையவன் ஊரிலிருநது
வந்திருந்த சமயம் தொற்று குறைந்திருந்தாலும், இரண்டு வருடங்களாக நாங்கள் படி தாண்டாத பத்தினியாகத்தான் வாழ்ந்து வந்தோம். நீண்ட வருடங்கள் கழித்து முதன் முதலில் அவனுடன் வெளியில் செல்லும் போது பிள்ளையார் கோவிலுக்குத்தான் செல்ல வேண்டுமென நான் விருப்பப்பட்டதால். அதன்படி பசவனகுடி தொட்ட கணபதியை  தரிசிக்கலாமென ஒரு நல்ல நாளில் காலையில் ஒரு ஒன்பது மணியளவில் வீட்டிலிருந்து  கிளம்பினோம். பன்னிரண்டு வரை கோவில் திறந்திருக்கும். பிறகு மாலை நான்கு மணிக்கு மேல்தான் தரிசனம் காண முடியும். ஒரே பெரிய பாறை போன்ற கல்லில் செதுக்கி அமைத்த பெரிய விநாயகர் சிலையுடன் உள்ள  கோவில்தான். இது நாங்கள் இங்கு வந்த பின் அடிக்கடி சென்ற கோவிலும் கூட. . முதலில் குடியிருநத பழைய வீட்டிலிருந்து 2 கி. மீ தொலைவு இருக்கும். சனி ஞாயறுகளில் நடந்தே சென்று விடுவோம். அனைத்திற்கும் அவனிடம் வேண்டிக் கொண்டு அங்கு சென்று சிதறுகாய் போட்டு விட்டு வருவோம். இந்த தொற்றினால் அந்தக் கோவிலுக்குச் சென்று இங்கு வந்த பின் மூன்று வருடங்களுக்கும் மேலாகி விட்டது. அதன் அருகில் பத்தடி தொலைவில் இருக்கும் படிகள் ஏறிச் மேலே சென்றால் புல்டெம்பிள் என்ற நந்திகேஷ்வரரின் தனிக் கோவில். நந்தியின் பின் அலங்காரத்துடன்  அழகான சிறிய சிவபெருமான். இருவரையும் மனதாற தரிசித்து விட்டு  அந்தப் பக்கம் படிகள் இறங்கினால்  அழகான கண்களுக்கு விருந்தாக பெரிய பூங்கா. அன்று இந்தக் கோவிலுக்கு எங்களால் செல்ல இயலவில்லை. வேறொரு வேலையும் அந்த நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில்  அவசியம் முடிக்க வேண்டியிருந்ததால், விநாயகரை மட்டும் வணங்கி விட்டு, இன்னொரு சமயம் அங்கு வரலாமென வந்து விட்டோம். 

பின்வரும் செய்தி... 
இது கூகுள் உதவி மூலமாக தினமலர் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட செய்தி. 
நன்றி கூகுள் மற்றும், 
நன்றி தினமலர் செய்திகளுக்கும். . 

பெங்களூர் பசவனகுடியில் நந்தி கோயிலுக்கு அருகே எழுந்தருளியுள்ளார் தொட்டகணபதி. தொட்ட என்றால் கன்னடத்தில் பெரிய என்று பொருள். ஒரே பாறையில் பெரிய அளவில் விநாயகரின் திருஉருவம் மேற்குநோக்கி செதுக்கப்பட்டுள்ளது. மூன்று நிலை ராஜகோபுரத்தோடு மிக அழகாக இந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. பெங்களூரில் புதிய வாகனங்கள் வாங்குவோர் முதலில் இந்த கணபதிக்கு பூஜை செய்த பிறகே வாகனத்தை ஓட்டுகின்றனர். இந்தப் பெரிய விநாயகர் விபத்தைத் தவிர்த்து சுபிட்சத்தை அளிப்பார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

இது புல்டெம்பிள் எனப்படும் பெரிய நந்திகேஷ்வரர் கோவில். 

பசவன குடியில், நந்திதேவருக்கு என தனியே ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் பெங்களூரை நிர்மாணித்த ராஜகேம்பே கவுடாவால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு யானைத் தந்தங்கள் போன்ற அமைப்பு, கோயில் செல்லும் நுழைவாயிலில் காணப்படுகிறது. வடக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலுக்கு ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. 46 மீட்டர் (135 அடி) உயரமுள்ள ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட நந்திதேவர் வடக்கு நோக்கி அருள் புரிகிறார்.

நந்திதேவரின் பின்னால் சிவ பெருமான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். தனது வாகனத்திற்குச் சிறப்பளிக்கும் வகையில் சிவபெருமான் இங்கு சிறுவடிவில் காட்சியளிப்பது நந்திக்கு கிடைத்த சிறப்பு. கோயிலுக்கு முன்பு உள்ள பழமைமிக்க அரச மரங்களின் பின்னால் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நந்திதேவரை வணங்கு; தடை யாவும் விலகும் என்பது ஐதிகம்.

இக்கோவில்களின் புகைப்படங்கள் அங்கு சென்ற பொழுதெல்லாம் குழந்தைகள் தங்கள் கைப்பேசியில் எடுத்ததுதான். அவையனைத்ததையும் டெஸ்க் டாப்பில் ஏற்றி அடிக்கடி நாங்கள்  பார்ப்பதுண்டு. ஆனால் அதுவெல்லாம் இப்போது இருக்கிறதாவென தெரியவில்லை.. எல்லாம் அழிந்து விட்டதாக குழந்தைகள் கூறினார்கள். அதனால் இப்போது சென்ற போது நான்கைந்து  படங்கள மட்டும் நான் என் கைப்பேசியில் எடுத்தேன். கோவிலின் உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை. படத்தைப் பெரிதாக்கி பார்த்தால் அருள் பாலிக்கும் பெரிய பிள்ளையாரை மனங்குளிர காணலாம். 





இக்கோவில் இந்தியாவில்  உள்ள புகழ் பெற்ற விநாயகர் கோவில்களில் ஒன்றாக இருப்பதாக ஒரு செய்தி பட்டியலில் இடம் பெறுகிறது

தொட்ட கணபதியை மனதாற தரிசித்து விட்டு சிதறு காய்களும் போட்டு விட்டு மனத்திருப்தியுடன் வேறு வேலைகளையும் முடித்து விட்டு மாலை வீடு திரும்பினோம்.

இது எங்கள் வீட்டில் விநாயகர் வந்தமர்ந்த படங்கள். 





இத்துடன் இந்த வருடம் எங்கள் வீட்டில் வழிபட்ட விநாயகர் சதுர்த்தி பூஜை படத்தினையும் பகிர்ந்து கொள்கிறேன். இதில் முதலாவதாக  அமர்ந்திருக்கும் பிள்ளையார்  (கொழுக்கட்டை, அவர் வாகனம் சகிதம் இருப்பவர்) மகள் அவளின் குழந்தையின் (எங்கள் பேத்தி) விருப்பத்திற்காக செய்தது. நல்ல அம்சமாக வந்தது. பூஜைக்கென மண் சிலை வாங்கவில்லையே என்ற குறையை போக்கியது. 

வீட்டிலிருக்கும் படங்களையும், இருக்கும் விநாயகர் சிலைகளையுந்தான் இப்போதெல்லாம் பூஜையில் வைப்பது வழக்கமாகி விட்டது. திருமங்கலம் வரை பூஜைக்கென அன்றைய தினம் விநாயகர் மண் சிலைகளை வாங்குவது வழக்கமாக இருந்தது. இங்கு வந்த பின் அவ்வளவாக அதுபோல் வாங்குவதில்லை. 

இந்த வருடம் என்னால் இயன்ற நேவேதனங்களைத்தான் (கொழுக்கட்டைகள் , சர்க்கரைப் பொங்கல், வடை, மஹா நேவேத்தியத்துடன் என சிம்பிளாக) செய்தேன். மூன்று வகை கொழுக்கட்டைகளை சாஸ்திரத்திற்காக பதினொன்றுதான் செய்தேன். அதுவும் இருதினம் முன்பே எனக்கு பல்வலி துவங்கி விட்டதால், பல்லை கடித்துக் கொண்டுதான் செய்ய முடிந்தது. எப்போதும் இடம் பெறும் கலவன் சாதங்கள் எதுவும் செய்ய இயலவில்லை. அவருக்கென பச்சரிசி இட்லி கூட செய்யவில்லை. எப்போதும் போல் இட்லி அரிசியில் அரைத்த மாவாகையால் அந்த இட்லிகளை அவருக்கு நேவேதனத்திற்கு வைக்க முடியவில்லை. பிள்ளையார் பொறுத்துக் கொண்டு அனைவரையும் தன் நல்லருளால் காத்தருள்வார் என வேண்டிக் கொண்டேன்.

எப்போதும் போல் நீளமான பதிவு என்றாலும், பொறுமையாக படித்த உங்களனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.