படங்கள் நன்றி. கூகுள்.
இறைவனே மனித அவதாரங்கள் எடுத்து மனிதர்களுக்காக மனிதனாக வாழ்ந்து காட்டிய நேரங்களில் எத்தனையோ இடர்களை சந்திக்க வேண்டியிருந்ததை இதிகாசங்களில் படிக்கும் போது இறைவனால் படைக்கப்பட்ட மனித குலமாகிய நாம் அவரவரக்களுகான விதிகளை மாற்றி வாழ்ந்து விட முடியுமா?
"தங்களுக்கு வினையை தேவாள் தாங்களே வருத்திக் கொண்டாள்" என்ற வரிகள் லலிதாம்பாள் சோபனத்தில் வரும்.
அப்படி தேவர்கள் தங்களுக்கே அவ்வப்போது வினையை வருத்தி பெற்று கொண்டனர். தேவர்களுக்கு தெய்வாம்சமான சக்திகள் இருந்தும் ஆசைகள் அதிகமானதால்தான் அவர்களும் அவர்களின் எதிரியாகிய அரக்கர் குலத்தவர்களால் ஏகப்பட்ட இன்னல்களை அனுபவித்தார்கள் என புராணங்கள் வாயிலாக அறிகிறோம். ஆக இந்த விதி, வேளை என்பதெல்லாம் நிஜமானதுதான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை அல்லவா?
விதியை மதியால் வென்றவர்களை (அக்காலத்து விக்கிரமாதித்தன் போன்ற மன்னர்கள்) பற்றி படிக்கும் போது சிறிது இது குறித்து சலனம் வரலாம். ஆனால் அதுவும் அவர்களுடைய நல் விதியின்பாற் சம்மந்தபட்டதுதான் அவ்வாறு யோசிக்கவும், அவர்களை வெற்றி பெறவும் வைத்துள்ளது. ஆக நல்லது, கெட்டவை அனைத்துக்கும் இந்த விதிதான் காரணமானது.
ஆஹா....! இந்த விதி புலம்பலை இப்போது நாம் கேட்பது எங்கள் விதியோ என நீங்கள் யோசிக்கும் முன், விஷயத்திற்கு வருகிறேன்.
சிவகாமியின் பந்தம் என்ற கதைப் பகிர்வு முதல் பகுதி எழுதி வெளியிட்டு விட்டு, அதன் மறுநாளே இரண்டாவதையும் வெளியிட்டு விட வேண்டுமென நினைத்தேன்.எனக்கும் ரொம்ப நாட்கள் கதைக்கு நடுவே இடைவெளி விட பிடிக்காது. (அது வழக்கம் போல் நீளமாக அமைந்து விட்டதால், இப்படி இரண்டு பாகமாக பிரிக்க எனக்குள் ஒரு முடிவு. "தெரியுமே...! நீங்களாவது சுருக்கமாக எழுதுகிறதாவது" என்று அவசரப்பட்டு கூறி விடாதீர்கள். அது என்னவோ எழுத எழுத கதை நீள்வது எனக்கென்று அமைந்த விதி. அதை பொறுமையாக படிப்பது உங்கள் விதி. இடையில் நான் என்ன செய்வது.? அப்பாடா.. ஒரு வழியாக இந்த விதியை இப்போதைக்கு துணையாக அழைத்துக் கொண்டு விட்டேன். :.)))) ) ஆனால், என் முடிவை அந்த விதி முழு மனதோடு ஒப்புக் கொள்ள வேணடுமே....
நேற்று காலை அவசரமாக குடும்பத்தடன் வெளியில் செல்ல ஒரு முடிவு. அதற்கு நான் போக வேண்டுமென்று இல்லை. ஆனால்,"அந்த தேவர்கள் தங்களை வருத்திக் கொண்ட மாதிரியான ஒரு கால கட்டத்தில்" நானும் சென்றேன். (அதுதான் ஆசை.) ஆசைக்குப் பலன் உடனடியாக கிடைத்தது. வீட்டிலிருந்து இறங்கி ரோடை கிராஸ் செய்த போது நடுவில் கோடு போட்டாற் போல் இருக்கும் தடுப்பில் கால் இடறி விழுந்து வலது கால் முட்டி அந்த தடுப்பு கல்லில் பட்டு நல்ல பலத்த அடி. நல்லவேளை...!! அந்த தடுப்பை தாண்டி, அந்தப் பக்கமோ, இந்தப் பக்கமோ விழுந்திருந்தால் ஏதாவது ஒரு வாகனத்தால் எனக்கு அடிபட்டிருக்கும். (வாகனத்திற்குந்தான்) (இன்னும் என் விதியின் பலாபலன்கள் என்னவெல்லாம் காண இருக்கிறதோ.. !! அதனால் வாகனங்கள் வந்து மோத அந்த விதி இடம் தரவில்லை.) எப்படியோ சமாளித்து, கீழே விழுந்து எழுந்த அவமானத்துடன் எழுந்து அவர்களுடன் சென்று வந்து விட்டேன். நேரமாக நேரமாக வலி பொறுக்க (எனக்குத்தான் எதையும் தாங்கும் பொறுமைசாலி என்ற பட்டத்தை நானே தந்து பெருமையுடன் கர்வத்தின் எல்லைக்கே வந்து நின்று கொண்டிருக்கிறேனே.. ..! அதனுடைய விளைவால் எவருக்கும் வலியை காண்பிக்கவில்லை. ) இயலாமல் வீடு வந்ததும் முட்டி வீக்கம், காலை அசைக்க முடியாத நிலையில் நேற்றெல்லாம் கழிந்தது. வந்தவுடன் அயோடக்ஸ் வைத்தியம் செய்தும் பயங்கர வலிதான்.
சுவாமி ஐயப்பனை தன் பொய்யான தலைவலிக்காக புலிப்பால் கொண்டு வரச் செய்தாள் பந்தள தேசத்து மகாராணி. அதுவும் அவரது தெய்வீக ரூபத்தை மக்களுக்கு காட்டி உணர்த்திட நேரம் பார்த்து காத்திருந்த அவரின் நல் விதியால்தான் நிகழ்ந்தது. இல்லையென்றால் அந்த தெய்வ குழந்தையை வளர்க்கும் பேறு பந்தளநாட்டு மஹாராஜனுக்கு கிடைத்திருக்குமா? அதுவும் அவரது நல்விதி.
இப்படியாகப்பட்ட நல்லவர்களின் நல் விதியை நினைத்தவாறும், நானும்,என் வலியின் கொடுமையால், எனக்கென்று அமைந்த என் விதியை நொந்தவாறும் தன் அம்மாவின் விருப்பப்படி புலிகளுடனே நாட்டுக்குள் நுழைந்த அந்த ஹரிஹரசுதனை மனதுக்குள் வணங்கியவாறு, இந்த மெய்யான வலி விரைவில் போக வேண்டுமென வேண்டியபடி, "புளிக்கரைசலை" கரைத்து கொதிக்க வைத்து இரு தடவைகள் பற்று போட்டுக் கொண்டேன்.
இன்று கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் வலி, வீக்கம் உள்ளது. அத்துடன் வீட்டு வேலைகளுக்காக எழுந்து ந(க)டந்து கொண்டிருக்கிறேன். மகளுக்கும் உடல் நிலை சரியில்லை. ஜுரம். (அதுவும் ஒரு விதிதான்.) இல்லையென்றால் அவளின் அன்பான உபகாரங்கள் கிடைத்திருக்கும்.
ஆக" நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் (விதி) ஒன்று நினைக்கும்" என்பது போல் உடனடியாக கதையை பகிர இயலவில்லை. முதல் பகுதிக்கு வந்த உங்களனைவரது கருத்துக்களுக்கும் உடனடியாக பதில் கருத்து தர இயலவில்லை. மன்னிக்கவும்.
இன்றைய தெய்வங்கள் சார்ந்த பதிவுகளுக்கு சென்று கருத்தளித்து விட்டு வணங்கி வந்தேன். நாளை நல்லபடியாக வலி கொஞ்சம் குறைந்தால் நல்லது. இப்போது சொல்லுங்கள். கதைப்பகிர்வுக்கு பதிலாக இந்தப்பதிவை இன்று என்னை எழுத வைத்திருப்பதும் என்னுடைய விதிதானே...! "ஆஹா.. இப்போது எங்களை இதை படிக்க வைத்திருப்பதும் எங்கள் விதிதான்... என நீங்கள் நினைப்பதும் எனக்குப் புரிகிறது.))) .
எனினும் உங்களுடன் பகிர்ந்து கொண்டால், என் துன்பங்களின் சுமைகளும் குறைந்து சற்று இலகுவாக மாறுவதாக உணர்கிறேன். அதனால் பகிர்ந்து விட்டேன். அதறகும் மன்னிக்கவும்.
உங்களனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.
நாளைய பாடு இதற்கும் வரும் கருத்துகளுக்கு பதில் தர முடியாத சூழ்நிலையை உருவாக்கினால் அதற்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. 🙏.

