Showing posts with label பாகல் உசிலி. Show all posts
Showing posts with label பாகல் உசிலி. Show all posts

Sunday, September 29, 2024

இனிப்பும், கசப்பும்

 பாகல் உசிலி.

இறைவன் படைப்பில் அனைத்து காய்கறிகளும் பொதுவாக ஒவ்வொரு சக்திகளையும் கொண்டு உருப்பெற்றவை. ஆனால் இப்போது இன்றைய காலகட்டத்தில் நாம் எதை அதிகமாக எடுத்துக் கொண்டால் நல்லது, அல்லது எதை குறைத்தால், (முற்றிலுமாகவே) நல்லது என்ற விவாதத்தில் உள்ளோம். 

அந்தக் காலத்தில் மதிய உணவு என எடுத்துக் கொண்டால்,நல்ல சுவையான பல காய்கறிகளுடன் சாதம், பருப்பு, சாம்பார், ரசம், மோர் என அன்றாடம் நல்ல உணவைதான் சாப்பிட்டு வந்தோம். ஆனால், அந்த உணவிற்கேற்ற உடல் உழைப்பும் அப்போது இருந்தது. 

நாம் வெளியில் செல்வதானால் ,நம்  கால்களின் நடையைதான் நம்பினோம். "எப்படி இவ்வளவு தூரம் தீடிரென புறப்பட்டு வந்தாய்..?" என கேட்கும் உறவுகளுக்கு" பார்க்க வேண்டுமென நினைத்தேன். அதனால் நடராஜா சர்விஸில்தான் வந்தேன்.!" என்போம். 

நடை உடலுக்கு மிக, மிக நல்லது என இப்போது தரும் முக்கியத்துவத்தை அப்போது யாரும், யாருக்கும் கற்றுத் தந்ததில்லை. 

அப்போது அதிசயமாக ஒவ்வொரு ஊர்களிலும், உலவும் மிதி வண்டிகள் வந்து மனிதர்களின் கால்களுக்கு ஒரு பலத்தை தருகிறோம் என்ற ஆசையை விதைத்தது. அவ்வாறு மிதி வண்டிகள் வைத்திருப்பவர்கள் பெரும்  பணக்காரர்களுக்கு ஒப்பானவர்களாக மாறினர். 

காலம் மாற, மாற நமக்கு அடி பணியும் விலங்கினங்களை துன்புறுத்தி வெகு தூரத்தை கடக்க கூட பல வண்டிகள் வந்து உதவின. இந்த ஆசைகளில் சிக்கிய  இருசக்கர வண்டிகள் பிரபலமாகி தாங்களும் மண்ணில் இடம் பிடித்தபடி  ஆங்காங்கே பறக்க ஆரம்பித்தன. 

அதற்கு போட்டியாக பேருந்துகள் பல உருவாகி ஒவ்வொரு ஊர் விட்டு பல ஊர்களையும் சுலபமாக கடந்து காண்பித்தது. இதற்கிடையே பல சொகுசு வண்டிகளை சொந்தமாக வாங்கி தங்களின் சொந்த ப(ய)ணத்தில் மனிதர்கள் தம் கால்களுக்கு ஓய்வு தந்தனர். ஆக மொத்தம் மனிதர்கள் இறைவன் அளித்த தங்கள் கால்களை நம்பாமல், இப்படி சொகுசாக வாழவும் முடியும் என்ற ஆசை வளையத்தில் வசமாக மாட்டிக் கொண்டனர். 

பச்சை பசேலென்ற பசுமையான நிறைவுடன் வளர்ந்த தாவரங்கள் காய்கறிகள், மனிதர்களின் இந்த  பயண ஆசைகளுக்காக, தங்களின் ஜீவாதாரமான,  மண் வளத்தை நிராகரித்து, எப்படியும் தங்களாலும் வளரவும் முடியும் என நிரூபித்து காட்டின. 

அதற்கு காரணம் தாங்கள்தாம் என்ற குற்ற உணர்ச்சி ஏதுமற்ற மனிதர்கள் தங்கள் பயணங்களை வசதி மிக்கதாக செய்து கொண்டபடிக்கும், பொன்னான மண்வளத்தை கான்கீரிட் இருப்பிடங்களாகவும், அந்த இருப்பிடங்களின் வசதிக்காக மண் சாலைகளை ரசாயண கலவை சாலைகளாகவும் ஆக்கி, விளையும் தாவரங்களை அலட்சியபடுத்தி மகிழ்ந்தனர். 

தாவரங்கள் அப்போதும் தங்கள் கடமையை செய்ய அஞ்சவில்லை. மனிதர்கள்  வகுத்து தந்த மாற்றுப்பாதையில் தங்கள் விளைச்சலை நம்பியபடி வாழ்ந்து காட்டின. அதனால், அதனின் சத்துள்ள திடங்கள் முன்பு போலில்லை.. கணிசமாக குறைந்தனவென்ற புகாரையும் மௌனமாக ஏற்றுக் கொண்ட.ன. 

A முதல் Z வரை அதனிடம் இருந்த சக்திகள் இவர்களால் பொலிவிழந்து போனதற்காக அது முகம் சுளிக்கவில்லை.  நாளாவட்டத்தில் மக்கள்  தங்கள் வீட்டுக்கு நாலடி தள்ளி இருக்கும் கடைகளுக்கு கூட தங்கள் உடமையாகிய சொகுசு காரில் சென்று சாமான்களையும், காய்கறிகளையும் வாங்கவும் ஆரம்பித்தனர். 

நாடு விட்டு நாடு, ஊர், ஊராக செல்லும் வசதிகள் என வந்த விஞ்ஞான வளர்ச்சிகள்  நல்ல பயனுள்ள ஒரு  வாய்ப்பாக ஆக்கி காட்டினும், மக்களிடத்தில் பல நோய்களின் தாராளமயம் வேகமாக பரவியது. 

எந்த காய்கறியை சாப்பிட்டால், எந்த நோய் நம்மை அண்டாது விலகும் என்ற ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இடையில் வெற்றி பெற்ற அன்னிய மருந்துகளும், மாத்திரைகளும் தாங்கள் முன்னணி கண்ட திருப்தியில் திளைத்தன. 

இப்போது" இந்த மாத்திரைகளின் வண்டியில்தான் நம் வண்டி தினமும் ஓடிக் கொண்டிருக்கிறது.." என பெருமையாக காண்போரிடமெல்லாம் (நம் சுற்றங்களை, நட்புகள் ) சொல்லி அதை (மாத்திரை, மருந்தை) கௌரவபடுத்தவும் தொடங்கினோம். 

இப்போது ஏன் இந்த அலசல் என நீங்கள் நினைக்கலாம். இன்று இனிப்பு சக்தி என்ற ஒன்று உலகிலுள்ள அனைவரிடமும் அதீதமாக பரவியுள்ளது. அதை முற்றிலும் குணப்படுத்த மருந்தில்லையென்றாலும், கட்டுப்படுத்த பல மருந்துகள் உள்ளன. ஆனாலும் சிலது சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் போகும் அவஸ்தைகளும் அதில்  இருக்கின்றன. 

உணவுகளில் அறுசுவையில்,  இனிப்பு, புளிப்பு, உப்பு  இம்மூன்றையும் தினமும் அதிகமாக உட்கொள்வதை தவிர்த்து கசப்பு, துவர்ப்பு, காரம் (அளவுக்கதிகமான காரங்கள் இல்லாத காரம்  )  என்ற சுவைகளை  குறைவாகவேனும்  தினமும் உட்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என அந்த காலத்தில் நம் வீட்டு  பெரியவர்கள் கூறி வந்தனர். ஆனால், நம் நாவின் சொல்படி கேட்டு வளர்ந்த நமக்கு முதலில் கூறியவைதான் பிடித்தமான உணவாக இருந்தது.

அந்த கசப்பு சுவையுடன் கலந்த பாகல் அனேக பேருக்கு சிறு வயதில் அனைவருக்குமே  பிடிக்கவே  பிடிக்காது. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட வயது வரவேண்டுமென்றும் அப்போது சொல்வார்கள். 

பாகற்காயில் கசப்பு சுவை உள்ளதால், இனிப்பு (சுகர்) பேஷண்ட்ஸ் இரண்டொரு நாளைக்கு ஒரு  தடவை  உணவோடு இதை செய்து  சாப்பிடலாம். (அல்லது இதையை உணவாகவும் சாப்பிடலாம்.) அது போலவே துவர்ப்பான வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய் இவைகள் இந்த உபாதையை கட்டுக்குள் வைத்திருக்கும் எனவும் நம்புவோம். அதுவே ஒரு சிறந்த  மருந்தாகும். (உணவே மருந்து.) 

ஆனாலும், உணவில் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொண்டு, அரிசி, கோதுமை போன்றவற்றை கூடிய மட்டும் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக சிறுதானிய வகைகளை தேர்ந்தெடுத்து கொண்டால் நல்லதென்பது சிலர் வாதம். 

சிறுதானிய வகைகளையும், அளவோடு சாப்பிட்டு, காய்கறிகளையும் அளவோடு சாப்பிட்டால், இந்த நோயின் உபாதைகளிலிருந்து சிறிது மீளலாம் என்பது சிலர் வாதம். 

அந்தந்த நேரத்திற்கு சிறிதளவு மட்டும் உண்டு, கிடையாய் கிடைக்காமல் நடையாய் நடந்தால், நல்லதென்போரும் உண்டு. 

என்னவோ.. போங்கள்... ! ஆனால், இந்த இனிப்பு உபாதை  நம்மோடு இருக்கிறது என்பதை கண்டு பிடித்தது முதல் மன உளைச்சல்தான். நம்மோடு இருந்து சௌக்கியமாய் அது வாழ்ந்து விட்டுத்தான் "அதுவும் நம்முடன் போகும்.. " என்றால் அதுவும் மிகையாகாது. 

சரி.. சரி.. இந்த வம்பெல்லாம் இப்போது எதற்கு..? எங்கேயோ ஆரம்பித்து, தலைப்பை வேறு விதமாக போட்டு விட்டு அதன்படி சொல்ல வந்ததை சொல்லிச் செல்லாமல், சுற்றி வளைத்து மூக்கைத் தொடும் பாணியாக, வேண்டாததை பிதற்றாமல், வேண்டியதை மட்டும் சொல் என்கிறீர்களா?  அதுவும் சரிதான்..!! 

இப்போது அனைவரும் நம் உடம்புக்கு நல்லதென கூறும் இந்த பாகற்காய் உசிலி செய்முறையை பார்ப்போமா

நல்லதான பாகற்காய் இரண்டை வாங்கி, அலம்பி பின் அதை இது போல் சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.  


ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொண்டு அத்துடன் அரிந்த பாகலை போட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும். 


வழக்கமாக காய்கறி கலந்த பருப்பு  உசிலிக்கு போடுவதை போல துவரம். பருப்பு, கடலை பருப்பு பாதிக்கு பாதியாக எடுத்து கொண்டு அலம்பி ஊற வைக்கவும். 


அரை மணிக்கும் மேலாக ஊற வைத்த அந்த பருப்புடன் அதில் காரத்திற்கு  (அவரவர் விருப்பம்.) சிகப்பு வத்தல், ஏழு, இரண்டு பச்சை மிளகாய், தேவையான கல் உப்பு போட்டு கறிவேப்பிலை இரண்டு ஆரக்கு  பெருங்காயப்பொடி முதலியவற்றை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக  அரைத்துக் கொண்டு, அதை இட்லிதட்டில் இட்லி மாதிரி வேக வைத்துக் கொண்டு பின்  அதை கடாயில் சமையல் எண்ணெய் விட்டு உதிர்த்துக் கொண்டு, அத்துடன் இந்த வெந்த பாகற்காயை கலந்து சிறிது நேரம் வதக்கினால் சுவையான பாகல் உசிலி தயார். 

இதை மதிய உணவாக நினைத்து நிறைய தட்டில் போட்டுக் கொண்டு இத்துடன் ஒரு கரண்டி, அல்லது எண்ணி  நாலைந்து பருக்கை சாதத்தை இத்துடன் கலந்து சாப்பிடவும். இதுவும்  அவரவர் விருப்பம். ஹா ஹா ஹா. 

ஆக மொத்தம் அன்று நடந்த நடைகளாக பகல் பொழுதினில் நாம் செல்லவேண்டிய இடங்களுக்கென்று எங்கே சென்றாலும் வெய்யில், மழை பாராமல் நடந்தோம் . ஊரில் அருகில் உள்ள  ஒவ்வொரு கோவில்களை காலை, மாலை என்று நடந்து சென்று தரிசித்ததோடு, அங்கு உட், வெளி பிரகாரங்களை சுற்றி வருவதை ஒரு நடைப்பயிற்சியோடு கலந்த பக்தியாக்கி சந்தோசமும், திருப்தியும் அடைந்தோம். நடுவில் இவற்றை தொலைத்து விட்டு, இல்லாத நோய்களை சொந்தமாக்கி கொண்டு, அவைகளின் தீர்விற்கு மீண்டும் இவற்றுக்கெல்லாம் இப்போது முயற்சியும், பயிற்சியும் செய்கிறோம். எப்படியும் இதுவாவது "நடந்தால்" சரிதான்..! :))

நடை பாடல் ஒன்று. இது போல்  நடையை வலியுறுத்தி நடை பாடல்கள் பல உண்டு. நடக்கும் நடைகளை குதர்க்கம் சொல்லி கேலி காட்டினும், தன் எழுத்து நடையில் நடை பிசகு காணாத வண்ணம் எழுதிய அந்த  பாடலாசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.

இந்த வழக்கமான என் பிதற்றலுக்கும் அன்புடன் கருத்துரை தரும் அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏.