சென்ற வருடம் திருநெல்வேலிக்கு போகும் போது அகஸ்தியர் அருவிக்கும் சென்றிருந்தோம். வரும் வழியில், பல இயற்கை காட்சிகள், அருமையாக இருந்தது. ஓரிடத்தில் காரை மெதுவாக ஓட்டி வரும் போது ( ஓட்டி வந்தது அண்ணா பையன்தான்.) நாங்கள் வந்த காருக்கு அருகில் தைரியமாக ஒரு மயில் வந்து நலம் விசாரித்தது.(நாங்களும் காருக்குள் இருந்ததினால் தைரியமாகத்தான் இருந்தோம்.) ஏதாவது சாப்பிட இருக்கிறதா?எனகேட்கும் பாவத்தில், காரைச் சுற்றி வந்தது. கைவசம் கொண்டு போன நொறுக்குத்தீனிகள் பையை துழாவினோம். நாங்கள் இயற்கையை ரசித்த போதினில், கண்கள் இமை கொட்டாதிருந்த சமயம் பார்த்து, கையும், வாயும் மட்டும் நட்புறவாக பேசி வைத்த மாதிரி பையை காலி செய்திருந்ததை கண்கள் அப்போதுதான் பார்த்து அதிர்ச்சியடைந்தது. "நல்லவேளை.!" ( அந்த மயிலுக்குத்தான்) ஒரு அரை டஜன் முறுக்கு பாக்கெட் மட்டும் சற்று முறுக்கிக்கொண்டு வாய், கைகள் நட்புறவில் சேராமல் "கா"விட்டு ஓரத்தில் ஒளிந்திருக்க கண்டு கண்களுடன் சேர்ந்து மனதும் நிம்மதியடைந்தது.
இவர்கள் ஒன்றும் தராமல் நம்மை வேடிக்கை பார்க்கும் ஜீவன்கள் போலிருக்கிறது என்ற எண்ணத்தில் எங்களை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு "ஒருமையில்" வந்த "அம்மயில்" நகரும் முன் நாங்கள் அந்த முறுக்கை கார் ஜன்னல் கதவை திறந்து வெளியில் போட சற்று அவநம்பிக்கையுடன் திரும்பிய மயில் அட,.! முறுக்கா...! இதைக் கொடுக்கத்தான் இவர்களுக்கு இத்தனை முறுக்கா ? என்று இளப்பமாக ஒருதடவை பார்த்து விட்டு சாப்பிட ஆரம்பித்தது.
அப்போது எடுத்த படங்கள்தான் இவை.
நலமா? என விசாரிக்க வந்த மயில்.
உங்களிடம் சாப்பிட ஏதாவது இருக்குமாப்பா ...?
அட.! உங்களைத்தான் கேட்கிறேன்.. உங்கள் இதய கதவை... வேண்டாம்.. கார் ஜன்னல் கதவை திறக்க கூட மனமில்லையா உங்களுக்கு?
அட. .! போங்கப்பா.. நீங்களும் உங்க உபசாரமும்.. ஏதோ தேடு தேடென்று தேடுகிறீர்களே ஒழிய ஒன்றும் கை நீட்டி வெளியில் வர மாட்டேங்குது..
நானும் எவ்வளவு நேரந்தான் பொறுமையாயிருப்பது? சரிப்பா.. வரட்டா..! வேறே ஏதாவது வண்டி வந்தா அவங்ககிட்ட கேட்டுக்கிறேன்.. அடேடே.! கிளம்புற நேரத்திலே கார் ஜன்னல் கதவு லேசாக திறக்குதே.!
ஒரு மட்டும் ஒரு முறுக்கை ரொம்பவும் முறுக்கிக்காமே எப்படியோ போட்டுட்டாங்கப்பா.. சரி.. சாப்பிட்டு பார்க்கலாம்.
இதைக்கடிக்க கூட முடியலயே.! இதை எங்கேயிருந்து வாங்கிட்டு வந்தாங்களோ.! இதையா இந்த மனுசங்க இவ்வளவு நேரம் தின்னுகிட்டு வந்தாங்க... சுத்தமா ரசனையில்லாத மனுசங்கப்பா...
இது முறுக்கு தானா? வேறு ஏதாவது தந்து நம்மை கடத்தி, கிடத்தி காரிலேயே கொண்டு போயிடுவாங்களா.. ?
இந்தப் பக்கம் வேற நிறைய போட்டிருக்காங்களா? இதைப் பாக்கவேயில்லையே.. .!
இதுவாச்சும் நல்லாயிருக்குமா . ? கொஞ்சம் டவுட்டு வருகிறது. அதான் கேட்கிறேன்...
இல்லை.. அந்தப் பக்கம் ஒன்னு இருக்கே.. அதை சாப்பிடலாமா?
அட...! இங்கேயும் அதே வஸ்துதான் போடறீங்களா? இது எப்படியிருக்குமோ?
என்னவோ.. போங்க.! சுத்தி, சுத்தி வந்ததுக்கு ஒரே "கைசுத்தல்" முறுக்கா போட்டுட்டு கிளம்புறீங்க! இது எங்கிட்டே வரும் போது எத்தனை "கைசுத்தி" வந்திருக்கோ .! சரி.. சரி... நிதானமா சாப்பிட்டுகிறேன். போயிட்டு வாங்க.. ஆனா.. அடுத்த தடவை இந்த முறுக்கை மட்டும் கொண்டு வந்துராதீங்க...! என்ன இருந்தாலும் உணவை கொடுத்ததுக்கு நன்றி.. .! உங்களுக்கும் மட்டுமில்லை.. நம்மையெல்லாம் படைத்தவனுக்குந்தான்..!
இத்தனை மயில் படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு போனஸாக இந்த வீடியோ..
எத்தனை அழகாக பறக்கிறது இந்த வண்ண மயில்...
"மயிலாக நான் மாற வேண்டும். வள்ளி மணவாளன் என் தோளில் இளைப்பாற வேண்டும்." என அருமையாக பாடியுள்ள சீர்காழியின் கம்பீரமான வெங்கல குரலுடைய பாடல் நினைவுக்கு வருகிறது.
இதோ.. போனஸுக்கு ஒரு போனஸாக இந்தப் பாடலும்..... இதையும் கேட்டு ரசிக்க வேண்டுகிறேன்.
இந்த வீடியோக்கு மட்டும்... கூகுளுக்கு நன்றி....
என் பதிவையும், நான் எடுத்த மயிலாரின் படங்களையும். நான் பதித்த வீடியோவையும், கூகுளிடமிருந்த பெற்ற சீர்காழியின் பாடல் வீடியோவையும் ரசித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.