அன்றாடம் சமையலுக்கு பயன்படும் இந்த வெந்தயம், உடலுக்கு நலம் தரும் ஒரு அருமையான மருந்தின் வகையையும் சார்ந்தது.
வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை அடங்கியுள்ளது. இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.
நன்றி கூகுள்.
இந்த வெந்தயத்தை ஒரு கால் டம்ளர் அளவு எடுத்துக் கொண்டு, நன்கு அலம்பி விட்டு நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் நீரிலேயே சற்று நேரம் ஊற வைக்கவும்.
அத்துடன் கால் டம்ளர் பாசி பருப்பும், அதை அளவு பச்சரியும் எடுத்து கொண்டுஇவ்விரண்டையும் நன்கு அலம்பிய பின், ஊற வைத்த வெந்தய கலவையையும் போட்டு குக்கரில் பா. பருப்புக்கும் அரிசிக்குமாக சேர்த்து ஒரு ஒன்றரை, அல்லது, இரண்டு டம்ளர் தண்ணீரையும் சேர்த்து வைத்து நன்கு நாலைந்து விசில் வரும் வரை வைக்கவும்.
குக்கர் விசில் விட்டு ஓ.கே என்று சொன்னவுடன் குக்கரில் வேக வைத்த இந்த மூன்றையும் எடுத்து நன்கு மசித்து எடுத்த படம் முதலாவது. இத்துடன் தேவையான அளவு நீர் சேர்த்து, மறுபடியும் குழைவாக இருக்க வேண்டி அடுப்பில் சிம்மில் வைத்து அடிப் பிடிக்காமல், பத்து நிமிடம் வரை கிளறவும். (படம் இரண்டாவது.)
பிறகு அத்துடன் தேவையான வெல்லம் (சிலருக்கு வெல்லம் கொஞ்சம் அதிகமாக இருந்தால், பிடிககும். சிலர் குறைவாகவே சேர்த்து கொள்வார்கள். ஆயினும் அதிக வெல்லம் சேர்த்தால் அதன் பெயர் கஞ்சி என்பதிலிருந்து மாறி விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
வெல்ல வாசனை போனதும். (வெல்லம் நன்கு கரைந்ததும் வெல்லத்தின் பச்சை வாசனை அகன்று விடும். அதுதான் வெல்ல வாசனை போகும் பக்குவம். ) (ஆனால், வெல்லத்தில் கற்கள் மற்றும் அசத்தங்கள் இருந்தால், (இதை நாம் பார்த்தவுடனே தெரிந்து விடும்.) வெல்லத்தை கொஞ்சமாக நீர் சேர்த்து சுட வைத்த பின் அது நன்றாக கரைந்ததும் வடிகட்டி அந்த வெந்தய அரிசி, பருப்பு கலவையில் கலந்தும் விடலாம். இதுதான் ஒரு சிறந்த முறை. சமயத்தில் வெல்லம் நன்றாக இருந்தால், இந்த வடிகட்டலுக்கு தேவையிராது.) அந்த பச்சை வாசனை போனதும், இரண்டு டம்ளர் காய்ச்சிய பால் சேர்த்து விடவும்.
பால் சேர்த்த பின் நன்கு ஒரு கொதி வந்ததும், ஏலக்காய் பொடி (தேவைபட்டால்) சேர்க்கவும். ஆயினும் ஏலம் சேராத அந்த வெந்தய ருசி மாறாது அப்படியே பருகலாம்.
பாலோடு சேர்ந்து கொதித்த இந்த கஞ்சியை சற்று சூடாகவே குடிக்கலாம். சூடு ஆறிய பின்னும் அருந்தலாம். அது இன்னமும் சுவையாக இருக்கும். வெல்லம் வேண்டாம் என்பவர்கள் வெல்லத்தை தவிர்த்து வெறும் பால் மட்டும் சேர்த்து குடிக்கலாம். அவரவர் விருப்பம்.
இந்த கஞ்சி உடல் சூட்டிற்கு, வாய் புண், வயிற்றுப் புண் போன்றவைக்கும் மிக சிறந்தது. ஒரிரு நாட்கள் விட்டு விட்டு இவ்விதம் அருந்தி வந்தால், வாயில், அல்லது நாக்கில் உடல் சூட்டினால் உண்டாகும் இந்தப்புண்களின் நோவிலிருந்து விடுபடலாம். என் அனுபவத்தில் இது ஒரு கை கண்ட மருந்து.
இரு நாட்களுக்கு முன் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் பதிவில் பல பாயாசங்களின் பதிவை கண்டதும், நானும் இதை பல மாதங்களுக்கு முன் படங்களுடன் தொகுத்து, எழுதி வைத்ததை ஒதுக்கி வைத்து விட்ட நினைவு வந்தது. உடனே தேடி எடுத்து பகிரலாமென பகிரகிறேன். கூடவே நீண்ட நாட்களாக பதிவுகளை போடாதினால், பதிவுகளை போடவும் மறந்துவிடுமென தோன்றியதால் இந்த உடனடி முடிவு. இதைப் படிப்பவர்களுக்கு, என் அன்பான நன்றிகள். 🙏.
இது கடாயில் ந. எண்ணெய் சிறிது ஊற்றி அடுப்பில் காய வைத்த படம்.
இது இரண்டு டம்ளர் அரிசி மாவு, அதற்கு தகுந்த உப்பு, கொஞ்சம் காரப்பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து கலந்து வைத்த கலவை.
இது அடுப்பில் கடாயில் வைத்த அந்த ந. எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் கலந்து வைத்த அரிசி மாவு கலவையை விட்டு கை விடாமல் கிளறி அதை ஒரு வழியாக்கும் படம்.
இது அந்த கெட்டியான மாவு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்த படம்.
இந்த மாவு உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் போல் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
"நம் முன்னைய நிலை என்ன..? என எண்ணி கலங்கிய வண்ணம் இருந்தாலும், உ. ப. க. பாவாகிய நாங்கள் சி. வத்தல், ப. மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் இவைகளின் நட்பில் இணைந்து ஒரு கூட்டாகி இருக்கிறோம்.
அது போல் எங்களை முதலிலேயே முறையே படங்கள் எடுத்து பிரசுரபடுத்தவில்லையென்றாலும், இப்போது சிம்மாசனத்தில் வந்து அமர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளோம்
இது அந்த பருப்பு இட்லி மீண்டும் தன்னைச் சுடும் நெருப்பின் தணலால் மனம் உடைந்து உதிர்ந்து வரும் நிலை.
அப்பாடா..! ஒரு மட்டும் இதெல்லாம் கலந்த கலவையாக நான் உருபெறுமாறு செய்து ஒரு பெயரையும் சூட்டி விட்டார்கள். 😀
இனி இனிப்பு கொழுக்கட்டை.
நல்ல பெரிய தேங்காயாக( சற்று முதிர்ந்தது..அப்போதுதான் பூரணம் நன்றாக இருக்கும்.) ஒன்றை உடைத்து பொடிதாக துருவி வைத்துக்கொள்ளவும். 200 கிராம் பாசிப்பருப்பு, 100 கிராம் க. பருப்பு இரண்டையும் எடுத்துக்கொண்டு ( அடுப்பை பற்றவைத்துக்கொண்டு) வெறும் கடாயில் சற்று பொன்னிறமாக வறுத்து பின் நன்கு ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடித்துக் கொள்ளவும். அதே கடாயில் வெல்லத்தை உடைத்துப் போட்டு ( மண்டை வெல்லமாக இருந்தால் பெரிய சைசில் ஒரு உருண்டை அளவு போதும்! இந்தப் பக்குவத்திற்கு சரியாக இருக்கும். ) கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டிக்கொள்ளவும். பிறகு கடாயில் வடி கட்டிய வெல்லத்துடன் துருவிய தேங்காய் பூவை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டேயிருக்கவும். தேங்காய் பூவும் வெல்லமும் சேர்ந்து வரும் சமயம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பாசி பருப்பு பொடியை சிறிதுசிறிதாக அதனுடன் கலந்து கிண்டி கெட்டியாகும் தருணத்தில் ஏலப்பொடி சிறிதளவு சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு வேறு பாத்திரத்தில் ரெடியான வெல்லப் பூரணத்தை மாற்றிக் கொள்ளவும். பாசிப் பருப்புக்கு பதிலாக கடலைப் பருப்பை மட்டும் வறுத்து பொடி செய்தும் பூரணம் செய்யலாம். அல்லது பாதி பாதி அளவாக இரு பருப்பையும் எடுத்துக் கொண்டு தனித்தனியே வறுத்து பொடி செய்து போடலாம். இந்த கலவையும் ருசி நன்றாகவிருக்கும். நான் முக்கால்வாசி இந்த முறையில் செய்வேன். சில பேர் பருப்புகள் எதுவும் கலக்காமல் வெறும் தேங்காய் பூரணம் மட்டும் செய்வார்கள். போளிக்கு பூரணம் செய்வது போல் கடலைப் பருப்பை வறுத்து ஊற வைத்து அரைத்து தேங்காய் வெல்லப் பூரணத்துடன் கலந்தும் கொழுக்கட்டைகள் செய்யலாம். இப்படியான நாலு விதங்களில் நமக்கு எது சௌகரியபடுகிறதோ அவ்விதம் செய்து கொள்ளலாம்.
இத்தனை விதங்களில் உண்டான இனிப்பு பூரணத்தை ஆறியதும் இவ்விதமாக தனிதனியே தட்டில் உருட்டி வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை மேல்மாவையும் பூரணத்தையும் ஒருசேர தொட்டு செய்தால் கொழுக்கட்டைகள் ஒழுங்கான வடிவத்தில் வராது சிறிது அடம்பிடிக்கும்.
ஒரு கிலோ பச்சரிசி எடுத்து சுத்தப்படுத்தி மாவரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து மாவாக்கி அதை பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலேயே அரிசியை நன்கு கழுவி வடிகட்டிய பின் அரைமணி நேரம் ஈரத்துணியில் பரப்பி ஆற வைத்த பின்னர் மிக்ஸியிலேயே மாவாக்கி கொள்ளலாம். வீட்டில் விசேடங்களுக்கு ஸ்வாமி நேவேத்தியங்களுக்கு இப்படித்தான் நான் மாவு தயாரித்துக் கொள்வேன்.அல்லது தண்ணீரில் ஊற வைத்த ப. அரிசியை மிருதுவாக அரைத்து அந்த விழுதில் சற்றே நீர்க்க தண்ணீர் கலந்து கடாயில் கிண்டியும் தயாரித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு தயாரான மாவை ஒரு பங்குக்கு ஒன்றரை என்னும் அளவு விகிதத்தில் தண்ணீருடன் சிறிதளவு பொடிஉப்பையும் கலந்து கரைத்துக் கொள்ளவும். பின் அடி கனமான கடாய் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அந்த மாவு கரைசலை விட்டு கெட்டியாக கிண்டிக் கொள்ளலாம்.
இது வறுத்த, க. ப. பா. ப.
இது பொடிதாக துருவிய தேங்காய் துருவல்.
இது வறுத்தப்பருப்புக்களை மிக்ஸியில் பொடித்த மாவுகள்.
இது வெல்லமும், தேங்காய் துருவலும் கலந்த ஆரம்ப கலவை.
இது வெல்லம் கரைந்து, பருப்பு பொடி சேர்த்த கலவை. (இது முதல் படமாக இதற்கு கீழுள்ளதை பின்னுக்குத் தள்ளி சற்றே முன்னுக்கு வந்து விட்டது. நல்ல அறிவாளி.)
இது வெல்லம் தேங்காயுடன் கலந்த கலவை.
இது கிளறி முடித்ததும் ஆற வைத்த பூரண கலவை.
இது ஆறியதும் உருட்டி வைத்த பூரண உருண்டைகள்.
இது அதற்கான மேலே சொன்னபடி தயாரித்த மேல் மாவு உருண்டைகள்.
இது மேல் மாவை வைத்து கப் செய்து பூரணத்தை தன்னுள் அடக்கியபடி ஆனால், முழுமையான பூரணத்துவத்தும் பெறாத கொழுக்கட்டைகள்.
இது இட்லி தட்டில் வேக வைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்ட கொழுக்கட்டைகள்.
இது வெந்த பின் நாம் சாப்பிட போவதற்காக காத்திருக்கும் இனிப்பு வெல்லப்பூரண கொழுக்கட்டைகள்.
"என்ன...! இப்போது நீங்கள் சாப்பிட தயாரா..? என படங்கள் கேட்கின்றனவா... ?
புத்தாண்டின் ஆரம்பமாக சென்ற வருட இறுதியில் சென்று வந்த பயணத்தில் ஒரு இறை பதிவு ஒன்றை எழுதி வெளியிட்டேன் அது அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அந்தப் பதிவின் மனசோர்வை களைவதற்காக அடுத்து இனிப்பாக ஒன்றும், அதற்கு ஜோடியாக காரத்துடன் ஒன்றுமாக ஒரு பதிவு எழுதுவோமேயென்று எல்லோரும்/எல்லோருக்கும் அறிந்த, அனைவரும் அடிக்கடி செய்யும் இனிப்பு, காரங்களையே படங்களுடன் பதிவாக எழுதி பகிர்ந்திருக்கிறேன். இவை நம்முடன் அடிக்கடி வந்து பழகியவைதாம் என்பதால் பொறுத்து, மன்னித்துக் கொள்ளவும்.
பதிவை படித்து படங்களையும் ரசிக்கும் சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 🙏.
இந்த கார கொழுக் கட்டைக்குபூரணம் செய்ய வெள்ளை முழு உளுந்தை ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டு, நன்கு கழுவிய பின்னர் இரண்டு மணி நேரம் தேவையான தண்ணீரில் ஊற வைத்துக் கொண்டு பின் நீரை வடித்து அந்த உளுந்துடன் சிகப்பு மிளகாய் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் உப்பு முதலியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு மிகவும் நைசாகவும் இல்லாமல் ஒரேடியாக கரகரவென்றும் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்.
"கார விரும்பிகள்" அவரவர்களுக்கு தேவையானபடி மிளகாய்களை கூட்டி குறைத்து வைத்துக் கொள்ளலாம்.. இடையிடையே அரைக்கும் போது அந்த ஊறவைத்து வடித்த நீரை தெளித்துக் கொள்ளலாம். (அளவாக நீர்விட்டு ஊற வைத்தால் உளுந்தின் சுவையும் சக்தியும் வீணாவதை தவிர்க்கலாம்.) இவ்வாறு வடை பதத்திற்கு கெட்டியாக அரைத்ததை இட்லி தட்டுக்களில் சற்று எண்ணெய் தடவி இட்லி மாதிரி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு கொழுக்கட்டை மேல் மாவு செய்ய இரண்டு டம்ளர் அரிசியை அலம்பி ஊற வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் பெரிய தட்டிலோ, துணியிலோ உலர விட வேண்டும். பின் அதை மிக்ஸியில் நன்கு நைசான மாவாக அரைத்துக் கொண்டு, அந்த மாவில் தேவையான நீர், மற்றும் உப்பையும் கலந்து கரைத்துக் கொண்டு, பின் அடுப்பில் கடாயை ஏற்றி, அதில் சிறிது நல்லெண்ணெய விட்டு சற்று காய்ந்ததும், கரைத்த மாவை அதில் விட்டு கை விடாமல் நன்றாக பந்து போல் கிளறினால், கார கொழுக்கட்டைகளுக்கான மிருதுவான மேல்மாவு கிடைக்கும்.
முன்பே வேக வைத்திருக்கும் இந்த உளுந்து இட்லிகளை சற்று ஆற வைத்த பின், நன்கு உதிர்த்துக்கொண்டு அடுப்பில் வேறு ஒரு கடாயை வைத்து ஒரு கரண்டி ந. எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு போட்டு, அது வெடித்தவுடன் உதிர்த்து வைத்திருக்கும் பூரணத்தை சேர்த்து சிறிதளவு மஞ்சள் பொடியையும் அதனுடன் சேர்த்து மேலும் உதிராக வரும் வரை புரட்டி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.(நான் அரைத்த மாவுடனே ம. பொடி கலந்து விட்டேன்.)
இப்பொழுது தயாரித்து வைத்திருக்கும் மேல்மாவை கிண்ணங்களாக (செப்பு) செய்து அதனுள் ரெடியாகவிருக்கும் பூரணத்தை ஒரு சிறு ஸ்பூனினால் எடுத்து நிரப்பி, இரு விளிம்புகளையும் விரல்களில் எண்ணெய் தொட்டுக்கொண்டு மெல்ல அழுத்தி நீளமான கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும். பின் இட்லி கொப்பரையிலேயோ, குக்கர் பீரித்திலோஆவியில் வைத்து எடுக்கவும்.
இதுவே சுவையான கார கொழுக்கட்டைகள். இதற்கு ஜோடியாக விஷேட நாட்களில், இனிப்பு கொழுக்கட்டைகள் (தேங்காய், வெல்லம் சேர்ந்த பூரணம் வைத்து செய்யும் கொழுக்கட்டைகள். ) உடன் இருந்தால்தான் இது நன்றாக சோபிக்கும் என்பது என் கருத்து. ஆனால், மாலை நேர சிற்றுண்டிக்கென காப்பி, தேனீர் அருந்தும் நேரத்தில் இதை மட்டும் செய்து சாப்பிட்டாலும், நன்றாகத்தான் இருக்கும்.
இந்த மேல் மாவு (அரிசி மாவு) மீந்து விட்டால் அதிலும் தேவையான உப்பு, மிளகாய் தூள், கொஞ்சம் தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி,மற்றும் கறிவேப்பிலை பொடிதாக அதனுடன் அரிந்து சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டுக்களில் வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்து சாப்பிடலாம். இதுவே அம்மணி கொழுக்கட்டை எனப்படும். இதை புகைப்படம் எடுத்து வைத்திருந்தேன். இப்போது "அது இந்த அம்மணியிடம் என்ன சொல்வதென்ற எண்ணத்தில்" எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு விட்டது. ஹா ஹா ஹா.அதனால் பகிர முடியவில்லை. மற்றொரு முறை செய்யும் போது புகைப்படங்களுடன் பகிர்கிறேன்.
இந்த இரு கொழுக்கட்டைகளுமே நல்ல காரசாரமாக இருக்கும். (அவரவர் விரும்பியபடி காரங்களை கூட்டிக் குறைக்கலாம்.) ஆனால்,பொதுவாக சிலருக்கு அதிக காரம் ரொம்ப பிடிக்கும், சிலருக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும். சிலருக்கு இரண்டுமே அளவாக இருந்தால்தான் பிடிக்கும். சிலர் இனிப்பை தவிர்த்து காரமானதை மட்டும் எடுத்துக் கொள்வர். இது அவரவர் மன/உடல் நிலையை பொறுத்த விஷயங்கள்.
நம் சகோதரி அதிராவுக்காக இதை மட்டும் என் கொழுக்கட்டை பதிவிலிருந்து போட்டோக்களை எடுத்துப் மீள் பதிவாகவும், சில(நிறைய) வற்றை மீண்டும் புதிதாக எழுதியும், இணைத்துப் பதிந்துள்ளேன்.
அப்போது அதிரா சகோதரி என் வலைதளம் வந்து என்னுடன் பழக்கமாகவில்லை. எனவே இப்போது வந்து இந்த கொழுக் கட்டைகளைத் பார்வையிட்டு ரசித்து, (கண்களால் எடுத்து சுவைத்து ) மற்ற நட்புறவுகளுடன் தங்களின் நல்ல கருத்துக்களையும் தாருங்கள் அதிரா சகோதரி.
பதிவை படித்து ரசிக்கும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.
நேற்று எபியில் சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களின் தயாரிப்பான தஞ்சாவூர் அடையை பார்த்தவுடன் எனக்கும் அடை சாப்பிடும் ஆவல் வந்து விட்டது. அடையும் செய்து சாப்பிட்டு பல மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், எங்கள் வீட்டு சிறு குழந்தைகள் (பேரன், பேத்திகள்) அடையென்றால், அலர்ஜியாகி வேண்டாமென சொல்லி விடுவார்கள். ஏனோ அவர்களுக்கு இந்த அடை தோசை பிடிப்பதில்லை. அப்படி பிடிக்க வைக்கவும் (வறுப்புறுத்தி) கற்றுத் தரவில்லை. சாதா மாவினால் செய்யும் தோசையைதான் விரும்பி பிடித்து சாப்பிடுவார்கள். நேற்று வீட்டிலும் இட்லி மாவு இல்லை. பின் அவர்களுக்கு என கோதுமை மாவு, ரவை சேர்த்து கரைத்து விட்ட தோசையாக வேறு செய்ய வேண்டும். அது வேண்டாமென இந்த குணுக்கைத் தேர்ந்தெடுத்தோம்.
இதுவும் அடை மாவு மாதிரிதான் தயார் செய்து கொள்ள வேண்டும்.இது அனைவரும் அறிந்ததே..!
ஒரே அளவில் நான்கு பருப்புக்களையும் (து. ப, பா. ப, க. ப, உ. ப,) ஒவ்வொரு டம்ளர் அளவு எடுத்துக் கொண்டு நன்றாக அலம்பி பின் பருப்புக்கள் மூழ்கும் வரை ஊற வைத்தேன். புழுங்கல் அரிசி ஒரு டம்ளர், அத்துடன் முக்கால் டம்ளர் பச்சரிசி இரண்டையும் எடுத்து அதையும் அலம்பி பின் மூழ்கும் அளவுக்கு நீரில் ஊற வைத்தேன்.
இரண்டும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஊறியதும், முதலில் அரிசி கலவையுடன், சி வத்தல்10 , பச்சை மிளகாய் 3, தேவையான கல் உப்பு, கறிவேப்பிலை நான்கைந்து ஆர்க்கு, ஒரு டீஸ்பூன் பெருங்காயம் பொடி என சேர்த்து மிக்ஸியில் சற்று, கரகரப்பாக அரைத்துக் கொண்டேன். பின்னர் பருப்பு கலவையை நன்றாக அதுவும் தோசைக்குப் போல தண்ணீர் நிறைய விட்டு நைசாக அரைப்பது போல இல்லாமல் சற்று கொரகொரப்பாக கெட்டியாக அரைத்துக் கொண்டேன்.
இத்துடன் தேங்காய் பூ துருவி சேர்க்கலாம். இல்லை பெரியதோ, சின்னதோ, வெங்காயம் பொடிதாக நறுக்கி சேர்க்கலாம். தேங்காய், வெங்காயம் இரண்டுமே இரு வேறு மாதிரியான சுவைகளை கண்டிப்பாகத் தரும். ஆனால், நான் இதை சேர்க்கவில்லை. பதிலாக கொத்தமல்லி தழைகள் வீட்டில் நிறைய இருந்தன. அதில் இரண்டு கைப்பிடி அளவிற்கு எடுத்து பொடிதாக நறுக்கிச் சேர்த்தேன்.
கடாயில் சமையல் எண்ணெய் விட்டு அடுப்பில் ஏற்றிய பின், பருப்புக்களின் நிஜமான சுவையுடன் கூடிய அந்த கலவையை கொஞ்ச கொஞ்சமாக கிள்ளி சிறு சிறு உருண்டையாக எண்ணெயில் போட்டு எடுத்தேன். மாலை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர். இரவு மோர் சாதத்திற்கும் அவர்கள் விருப்பமாக அதை தொட்டுக் கொண்டு சாப்பிட்டனர்.( இரவில் எப்போதும் அவர்களுக்கு மோர் சாதந்தான் பிடிக்கும்.)
அவர்களுக்கு பிடிக்காத அடையை செய்து "உடம்புக்கு நல்லது..! அத்தனையும் புரதம்..! சாப்பிடு, சாப்பிடு..! " என கண்டிப்பதை விட, அவர்களுக்கு பிடித்ததை செய்து தரும் போது அவர்களும் அதே புரதத்தை விரும்பி சாப்பிடுவதை பார்க்கும் போது சந்தோஷம் வருகிறது. ஆனால் என்ன ஒன்று..! எண்ணெய்யில் பொரித்து தருவதுதான் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. சரி.. என்றோ ஒரு நாள்தானே இப்படி என சமாதானமடைய வேண்டியதுதான்...! இப்படியாக இந்த குணுக்கு நேற்று எங்கள் வீட்டில் எதிர்பாராமல் தோன்றியது.
இன்று மீதமிருக்கும் மாவு அதன் துணையாக பல பொருட்களை சேர்த்துக் கொண்டபடி, நான் வேண்டாமென ஒதுக்கிய வெங்காயத்தின் மனம் நொந்து விட்டதால், அதையும் பேசி சமாதானப்படுத்தி உடன் அழைத்துக் கொண்டு அடையாக மாறும் என நினைக்கறேன். மாற்றங்கள்நம்மை போல், இல்லை நம்மை விட அதற்கும் பிடிக்குமல்லவா?
வேறு படங்கள் எதுவும் ஆரம்பிக்கும் போது எடுக்கத் தோன்றவில்லையாததால், எடுத்துள்ள படங்களுடன் சூட்டோடு சூடாக எழுதிய பதிவிது. நீங்களும் இந்த மாதிரி அனேக முறைகள் உங்கள் வீட்டில் செய்து ருசித்திருப்பினும், இந்த சூடான குணுக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.
இறைவன் படைப்பில் அனைத்து காய்கறிகளும் பொதுவாக ஒவ்வொரு சக்திகளையும் கொண்டு உருப்பெற்றவை. ஆனால் இப்போது இன்றைய காலகட்டத்தில் நாம் எதை அதிகமாக எடுத்துக் கொண்டால் நல்லது, அல்லது எதை குறைத்தால், (முற்றிலுமாகவே) நல்லது என்ற விவாதத்தில் உள்ளோம்.
அந்தக் காலத்தில் மதிய உணவு என எடுத்துக் கொண்டால்,நல்ல சுவையான பல காய்கறிகளுடன் சாதம், பருப்பு, சாம்பார், ரசம், மோர் என அன்றாடம் நல்ல உணவைதான் சாப்பிட்டு வந்தோம். ஆனால், அந்த உணவிற்கேற்ற உடல் உழைப்பும் அப்போது இருந்தது.
நாம் வெளியில் செல்வதானால் ,நம் கால்களின் நடையைதான் நம்பினோம். "எப்படி இவ்வளவு தூரம் தீடிரென புறப்பட்டு வந்தாய்..?" என கேட்கும் உறவுகளுக்கு" பார்க்க வேண்டுமென நினைத்தேன். அதனால் நடராஜா சர்விஸில்தான் வந்தேன்.!" என்போம்.
நடை உடலுக்கு மிக, மிக நல்லது என இப்போது தரும் முக்கியத்துவத்தை அப்போது யாரும், யாருக்கும் கற்றுத் தந்ததில்லை.
அப்போது அதிசயமாக ஒவ்வொரு ஊர்களிலும், உலவும் மிதி வண்டிகள் வந்து மனிதர்களின் கால்களுக்கு ஒரு பலத்தை தருகிறோம் என்ற ஆசையை விதைத்தது. அவ்வாறு மிதி வண்டிகள் வைத்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்களுக்கு ஒப்பானவர்களாக மாறினர்.
காலம் மாற, மாற நமக்கு அடி பணியும் விலங்கினங்களை துன்புறுத்தி வெகு தூரத்தை கடக்க கூட பல வண்டிகள் வந்து உதவின. இந்த ஆசைகளில் சிக்கிய இருசக்கர வண்டிகள் பிரபலமாகி தாங்களும் மண்ணில் இடம் பிடித்தபடி ஆங்காங்கே பறக்க ஆரம்பித்தன.
அதற்கு போட்டியாக பேருந்துகள் பல உருவாகி ஒவ்வொரு ஊர் விட்டு பல ஊர்களையும் சுலபமாக கடந்து காண்பித்தது. இதற்கிடையே பல சொகுசு வண்டிகளை சொந்தமாக வாங்கி தங்களின் சொந்த ப(ய)ணத்தில் மனிதர்கள் தம் கால்களுக்கு ஓய்வு தந்தனர். ஆக மொத்தம் மனிதர்கள் இறைவன் அளித்த தங்கள் கால்களை நம்பாமல், இப்படி சொகுசாக வாழவும் முடியும் என்ற ஆசை வளையத்தில் வசமாக மாட்டிக் கொண்டனர்.
பச்சை பசேலென்ற பசுமையான நிறைவுடன் வளர்ந்த தாவரங்கள் காய்கறிகள், மனிதர்களின் இந்த பயண ஆசைகளுக்காக, தங்களின் ஜீவாதாரமான, மண் வளத்தை நிராகரித்து, எப்படியும் தங்களாலும் வளரவும் முடியும் என நிரூபித்து காட்டின.
அதற்கு காரணம் தாங்கள்தாம் என்ற குற்ற உணர்ச்சி ஏதுமற்ற மனிதர்கள் தங்கள் பயணங்களை வசதி மிக்கதாக செய்து கொண்டபடிக்கும், பொன்னான மண்வளத்தை கான்கீரிட் இருப்பிடங்களாகவும், அந்த இருப்பிடங்களின் வசதிக்காக மண் சாலைகளை ரசாயண கலவை சாலைகளாகவும் ஆக்கி, விளையும் தாவரங்களை அலட்சியபடுத்தி மகிழ்ந்தனர்.
தாவரங்கள் அப்போதும் தங்கள் கடமையை செய்ய அஞ்சவில்லை. மனிதர்கள் வகுத்து தந்த மாற்றுப்பாதையில் தங்கள் விளைச்சலை நம்பியபடி வாழ்ந்து காட்டின. அதனால், அதனின் சத்துள்ள திடங்கள் முன்பு போலில்லை.. கணிசமாக குறைந்தனவென்ற புகாரையும் மௌனமாக ஏற்றுக் கொண்ட.ன.
A முதல் Z வரை அதனிடம் இருந்த சக்திகள் இவர்களால் பொலிவிழந்து போனதற்காக அது முகம் சுளிக்கவில்லை. நாளாவட்டத்தில் மக்கள் தங்கள் வீட்டுக்கு நாலடி தள்ளி இருக்கும் கடைகளுக்கு கூட தங்கள் உடமையாகிய சொகுசு காரில் சென்று சாமான்களையும், காய்கறிகளையும் வாங்கவும் ஆரம்பித்தனர்.
நாடு விட்டு நாடு, ஊர், ஊராக செல்லும் வசதிகள் என வந்த விஞ்ஞான வளர்ச்சிகள் நல்ல பயனுள்ள ஒரு வாய்ப்பாக ஆக்கி காட்டினும், மக்களிடத்தில் பல நோய்களின் தாராளமயம் வேகமாக பரவியது.
எந்த காய்கறியை சாப்பிட்டால், எந்த நோய் நம்மை அண்டாது விலகும் என்ற ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இடையில் வெற்றி பெற்ற அன்னிய மருந்துகளும், மாத்திரைகளும் தாங்கள் முன்னணி கண்ட திருப்தியில் திளைத்தன.
இப்போது" இந்த மாத்திரைகளின் வண்டியில்தான் நம் வண்டி தினமும் ஓடிக் கொண்டிருக்கிறது.." என பெருமையாக காண்போரிடமெல்லாம் (நம் சுற்றங்களை, நட்புகள் ) சொல்லி அதை (மாத்திரை, மருந்தை) கௌரவபடுத்தவும் தொடங்கினோம்.
இப்போது ஏன் இந்த அலசல் என நீங்கள் நினைக்கலாம். இன்று இனிப்பு சக்தி என்ற ஒன்று உலகிலுள்ள அனைவரிடமும் அதீதமாக பரவியுள்ளது. அதை முற்றிலும் குணப்படுத்த மருந்தில்லையென்றாலும், கட்டுப்படுத்த பல மருந்துகள் உள்ளன. ஆனாலும் சிலது சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் போகும் அவஸ்தைகளும் அதில் இருக்கின்றன.
உணவுகளில் அறுசுவையில், இனிப்பு, புளிப்பு, உப்பு இம்மூன்றையும் தினமும் அதிகமாக உட்கொள்வதை தவிர்த்து கசப்பு, துவர்ப்பு, காரம் (அளவுக்கதிகமான காரங்கள் இல்லாத காரம் ) என்ற சுவைகளை குறைவாகவேனும் தினமும் உட்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என அந்த காலத்தில் நம் வீட்டு பெரியவர்கள் கூறி வந்தனர். ஆனால், நம் நாவின் சொல்படி கேட்டு வளர்ந்த நமக்கு முதலில் கூறியவைதான் பிடித்தமான உணவாக இருந்தது.
அந்த கசப்பு சுவையுடன் கலந்த பாகல் அனேக பேருக்கு சிறு வயதில் அனைவருக்குமே பிடிக்கவே பிடிக்காது. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட வயது வரவேண்டுமென்றும் அப்போது சொல்வார்கள்.
பாகற்காயில் கசப்பு சுவை உள்ளதால், இனிப்பு (சுகர்) பேஷண்ட்ஸ் இரண்டொரு நாளைக்கு ஒரு தடவை உணவோடு இதை செய்து சாப்பிடலாம். (அல்லது இதையை உணவாகவும் சாப்பிடலாம்.) அது போலவே துவர்ப்பான வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய் இவைகள் இந்த உபாதையை கட்டுக்குள் வைத்திருக்கும் எனவும் நம்புவோம். அதுவே ஒரு சிறந்த மருந்தாகும். (உணவே மருந்து.)
ஆனாலும், உணவில் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொண்டு, அரிசி, கோதுமை போன்றவற்றை கூடிய மட்டும் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக சிறுதானிய வகைகளை தேர்ந்தெடுத்து கொண்டால் நல்லதென்பது சிலர் வாதம்.
சிறுதானிய வகைகளையும், அளவோடு சாப்பிட்டு, காய்கறிகளையும் அளவோடு சாப்பிட்டால், இந்த நோயின் உபாதைகளிலிருந்து சிறிது மீளலாம் என்பது சிலர் வாதம்.
அந்தந்த நேரத்திற்கு சிறிதளவு மட்டும் உண்டு, கிடையாய் கிடைக்காமல் நடையாய் நடந்தால், நல்லதென்போரும் உண்டு.
என்னவோ.. போங்கள்... ! ஆனால், இந்த இனிப்பு உபாதை நம்மோடு இருக்கிறது என்பதை கண்டு பிடித்தது முதல் மன உளைச்சல்தான். நம்மோடு இருந்து சௌக்கியமாய் அது வாழ்ந்து விட்டுத்தான் "அதுவும் நம்முடன் போகும்.. " என்றால் அதுவும் மிகையாகாது.
சரி.. சரி.. இந்த வம்பெல்லாம் இப்போது எதற்கு..? எங்கேயோ ஆரம்பித்து, தலைப்பை வேறு விதமாக போட்டு விட்டு அதன்படி சொல்ல வந்ததை சொல்லிச் செல்லாமல், சுற்றி வளைத்து மூக்கைத் தொடும் பாணியாக, வேண்டாததை பிதற்றாமல், வேண்டியதை மட்டும் சொல் என்கிறீர்களா? அதுவும் சரிதான்..!!
இப்போது அனைவரும் நம் உடம்புக்கு நல்லதென கூறும் இந்த பாகற்காய் உசிலி செய்முறையை பார்ப்போமா ?
நல்லதான பாகற்காய் இரண்டை வாங்கி, அலம்பி பின் அதை இது போல் சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொண்டு அத்துடன் அரிந்த பாகலை போட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
வழக்கமாக காய்கறி கலந்த பருப்பு உசிலிக்கு போடுவதை போல துவரம். பருப்பு, கடலை பருப்பு பாதிக்கு பாதியாக எடுத்து கொண்டு அலம்பி ஊற வைக்கவும்.
அரை மணிக்கும் மேலாக ஊற வைத்த அந்த பருப்புடன் அதில் காரத்திற்கு (அவரவர் விருப்பம்.) சிகப்பு வத்தல், ஏழு, இரண்டு பச்சை மிளகாய், தேவையான கல் உப்பு போட்டு கறிவேப்பிலை இரண்டு ஆரக்கு பெருங்காயப்பொடி முதலியவற்றை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, அதை இட்லிதட்டில் இட்லி மாதிரி வேக வைத்துக் கொண்டு பின் அதை கடாயில் சமையல் எண்ணெய் விட்டு உதிர்த்துக் கொண்டு, அத்துடன் இந்த வெந்த பாகற்காயை கலந்து சிறிது நேரம் வதக்கினால் சுவையான பாகல் உசிலி தயார்.
இதை மதிய உணவாக நினைத்து நிறைய தட்டில் போட்டுக் கொண்டு இத்துடன் ஒரு கரண்டி, அல்லது எண்ணி நாலைந்து பருக்கை சாதத்தை இத்துடன் கலந்து சாப்பிடவும். இதுவும் அவரவர் விருப்பம். ஹா ஹா ஹா.
ஆக மொத்தம் அன்று நடந்த நடைகளாக பகல் பொழுதினில் நாம் செல்லவேண்டிய இடங்களுக்கென்று எங்கே சென்றாலும் வெய்யில், மழை பாராமல் நடந்தோம் . ஊரில் அருகில் உள்ள ஒவ்வொரு கோவில்களை காலை, மாலை என்று நடந்து சென்று தரிசித்ததோடு, அங்கு உட், வெளி பிரகாரங்களை சுற்றி வருவதை ஒரு நடைப்பயிற்சியோடு கலந்த பக்தியாக்கி சந்தோசமும், திருப்தியும் அடைந்தோம். நடுவில் இவற்றை தொலைத்து விட்டு, இல்லாத நோய்களை சொந்தமாக்கி கொண்டு, அவைகளின் தீர்விற்கு மீண்டும் இவற்றுக்கெல்லாம் இப்போது முயற்சியும், பயிற்சியும் செய்கிறோம். எப்படியும் இதுவாவது "நடந்தால்"சரிதான்..! :))
நடை பாடல் ஒன்று. இது போல் நடையை வலியுறுத்தி நடை பாடல்கள் பல உண்டு. நடக்கும் நடைகளை குதர்க்கம் சொல்லி கேலி காட்டினும், தன் எழுத்து நடையில் நடை பிசகு காணாத வண்ணம் எழுதிய அந்த பாடலாசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.
இந்த வழக்கமான என் பிதற்றலுக்கும் அன்புடன் கருத்துரை தரும் அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏.
இந்தகாஃபி குடிப்பது கெடுதல் என்ற பழக்கம் இப்போதுதான் வந்ததா? இல்லை, காஃபி குடிப்பது என்ற வழக்கம் வந்த ஆரம்பத்திலிருந்தே வந்ததா? என்றிலிருந்து வந்தது எனத் தெரியவிலலை. ஆனாலும் காஃபியில் இருக்கும் காஃபின் என்ற பொருள், நமது உடலை சுறுசுறுப்பாக வைக்கும், எண்ணங்களை தோற்றுவிக்கும் நமது மூளைக்கு நல்லதொரு செயல்பாட்டை தருமென்பது ஒரு கருத்து.
காஃபின் என்றால் என்ன?
இது ஒரு இயற்கை தூண்டுதலாகக் கருதப்படுகிறது. இது உலகளவில் பரவலாக நுகரப்படும் பானங்களில் ஒன்றாகும். இது பொதுவாக தேயிலை, காபி மற்றும் கொக்கோ செடிகளில் காணப்படுகிறது. காஃபின் உட்கொள்வது உடலுக்கு சில வழிகளில் நன்மைகளைத் தருகிறது. சோர்வு ஏற்படும் போது காஃபின் எடுத்துக் கொள்வது சுறுசுறுப்பைத் தருகிறது. இது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், விழிப்புடன் இருக்க வைக்கவும் உதவுகிறது.
காஃபின் உட்கொண்ட பிறகு, அது குடலில் இருந்து இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது. அதன் பிறகு இது கல்லீரலுக்குச் செல்கிறது. கல்லீரலிலிருந்து இது பல்வேறு கலவைகளாக உடைந்து, பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. காஃபின் முக்கியமாக மூளை செயல்பாட்டில் வேலை செய்கிறது. அதாவது அடினோசினின் விளைவுகள், மூளையைத் தளர்த்தி சோர்வடையச் செய்யும் நரம்பியல் கடத்தியாக அமைகிறது. ஆனால் காஃபின் உட்கொள்ளல் அடினோசின் வேலை செய்வதைத் தடுத்து சோர்வு மற்றும் மந்தத்தன்மையைத் தவிர்க்க உதவுகிறது.
இதனால் பல தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுவாக காஃபின் உட்கொள்வது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். காஃபின் ஒரு டையூரிடிக் அமிலமாக இருப்பதால், இவை உடலில் இருந்து அதிக சிறுநீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதே சமயம், சர்க்கரையுடன் கூடிய காபி மற்றொரு மோசமான கலவையாக அமைகிறது. இது கோடை வெப்பத்தில் நீரிழப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.
மற்றும், கோடைக்காலங்களில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, அது தூக்க முறைகளை சீர்குலைத்து விடலாம். மேலும், கோடையில் அறையின் வெப்பநிலையும் அதிகமாக இருப்பதால் தூங்குவது கடினம். இந்த நேரத்தில், காஃபின் எடுத்துக் கொள்வது அது உடல் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும். இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இதனால், எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்படும்.
அதிகளவிலான காஃபின் உட்கொள்ளலால் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டும் அதிகரிக்கப்படும். குறிப்பாக, கோடையில் காஃபின் உட்கொள்வது இருதய அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் இதய பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இது உடல் அசௌகரியம் அல்லது பிற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது
நன்றி கூகுள்.
காஃபி குடிப்பது கெடுதலா , நன்மையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். காஃபி போடுவதே ஒரு கலை என வாதிடுபவர்கள்தான் எனக்குத் தெரிந்த வரை நிறைய பேர் (உறவுகள்) இருக்கிறார்கள். காஃபி பில்டரில் புது டிகாஷன் இறக்குவதிலிருந்து, பாலை காய்ச்சி, அதற்கு தகுந்த சர்க்கரை சேர்த்து, (அல்லது சர்க்கரை இல்லாமலோ) நல்ல சூட்டில் (கவனிக்கவும். நல்ல சூட்டில்..) கலந்து தருவதை ஒரு அசுவமேத யாகத்தை எவ்வித குறையுமின்றி, தான் பூரணமாக செய்து முடித்த அளவுக்கு திருப்தியடைபவர்கள் நிறைய பேர். சரி..! இவர்கள் எப்போதும் ஒரே மாதிரி இவ்விதம் செய்து அனைவருக்கும். (இங்கும் கவனிக்கவும்... தினமும் வீட்டிலிருக்கும் அனைவருக்கும், தவிர எப்போதாவது வெளியிலிருந்து வரும் விருந்தாளிகளுக்கும் இப்படி காலை, மாலை, இடையில் அவர்கள் காஃபி என கேட்கும் போது என்று அவர்களுக்கு கலந்து தரும் அளவுக்கு பொறுமை உள்ளதா என்றால், அங்கு அதுதான் மிஸ்ஸிங்.)
சிலர் இந்த டிகாஷன் நன்றாக அமைந்தால்தான், காஃபி நன்றாக இருக்குமெனவும், சிலர் பாலின் தரம் சிறப்பாக இருந்தால்தான் காஃபி சுவையாக இருக்குமெனவும், வாதிடுவார்கள். மேலும், காஃபி பில்டரில் உள்ளிருக்கும் காஃபி பொடியில் கொதிக்கும் வென்னீர் மழை விடும் போது அதற்கு குடை வைப்பவர்களும் , குடையை ஒதுக்கி அது நன்றாக மழையில் நனையட்டுமென விடுபவர்களும் உண்டு. இதிலும், குடை தேவையா, இல்லை அவசியமில்லையா என்ற இருவகை கருத்துக்கள் வாதிடுபவர்களுக்குள் எழுவதுண்டு.
சிலர் அந்தக்காஃபி பொடி சரியில்லை, இதில் காஃபித் தூளில் கலக்கும் சிக்கரி நிறைய வந்து விட்டது எனவும், காஃபி கொட்டையாக கடையில் வாங்கி வீட்டில் அரைத்து நாமே தேவையான அளவு சிக்கரி கலந்து போட்டால்தான் நன்றாக இருக்குமெனவும், சிலர் சிக்கரி இல்லாமல் காஃபித்தூளை முறையான அளவில் கலந்து உபயோகித்தால் மட்டுமே காஃபியின் சுவை நன்றாக இருக்குமெனவும், சிலர் பசும்பாலை விட எருமைப்பாலில் காஃபி திக்காக நன்றாக வருமெனவும், சிலர் பசும்பால்தான் நல்லது எனவும், அவரவர் கருத்துகளை முன்னிறுத்தி, இறுதியில் அதைதான் ஸ்திரமான ஆணித்தரமான உறுதியும் ஆக்குவார்கள்.
காஃபி போடுவதையே விதவிதமாக பழக்கம் வைத்திருப்பவர்களும் உண்டு. சிலர் பில்டர் காஃபியை தவிர்த்து வேறு எந்த முறையிலும் போட முயல கூட மாட்டார்கள். சிலர் ஒரு பாத்திரத்தில் காஃபித்தூளை போட்டு வென்னீர் கொதிக்க வைத்து அந்த காஃபி பொடியில் ஊற்றி நன்கு கலந்து அதில் சிறிது தண்ணீர் தெளித்த பின் கெட்டியான காடா துணி உதவி கொண்டு மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி காஃபி தயாரிப்பார்கள், அவர்களுக்கு இந்த பில்டர் தேவையேயில்லை. சிலர் இப்போது ஏராளமாக வந்திருக்கும் "தீடிர் காஃபி" பொடியில் காஃபி கலந்து குடித்து விட்டு, வீட்டுக்கு வருபவர்களுக்கும் தந்து விட்டு எதைப்பற்றியும் கவலைபடாமல் "அக்காடா" என்றிருப்பார்கள். சிலர் காஃபி குடிக்கிறீர்களா என வீட்டுக்கு வந்தவர்களை ஒரு உபசாரத்திற்கு கூட கேட்க மாட்டார்கள். (கேட்டால்தானே இந்த வம்புபெல்லாம்.?:)) ) சிலர் அந்தப் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே ஏற்படுத்திக் கொள்ளாமல், அல்லது நடுவில் விட்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எங்கு சென்றாலும், எந்த பிரச்சனையுமில்லை. (அவர்களால் பிறருக்கும் பிரச்சனைகள் இல்லை.)
சில பேர்கள் இப்படி திக்காக ஒரே சகதி மாதிரி சிலர் வீட்டில் தருகிறார்கள் எனவும், டிகாஷன் அதிகம் கலக்காமல் பால் நிறைய கலந்து கொடுப்பவர்களை காயத்தால் கால் வீங்கியவர் கால்களை போன்ற மாதிரி வெள்ளையாக அவர்கள் வீட்டில் காஃபி இருக்கிறது எனவும் கிண்டல் செய்வார்கள்.
(ஆக மொத்தம் நாம் அருந்தும் ஒரு குவளை காஃபியில்தான் எத்தனை வேறுபாடான கருத்துக்கள்? இந்தக் காஃபி அளவுக்கு அதிகமாக அதாவது தினமும் ஓரிரு தடவைகளுக்கு மேலாக குடித்தால் சிலருக்கு தலைச்சுற்றல் வரலாம். சிலருக்கு பழக்கத்தினால் வராமலும் இருக்கலாம். இது அவரவர் உடல் வாக்கைப் பொறுத்தது. ஆனால், எனக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணிகளில், இந்த காஃபி போடும் விபரங்களை பல விதங்களில் ஒரு குற்றப் பத்திரிக்கையாக என் முன்னே வைத்து பரிசீலனை செய்யும் போது நிஜமாகவே எனக்கு தலைச் சுற்றத்தான் செய்கிறது.:)) )
நாங்கள் பிறந்து வளர்ந்த அந்தக்காலத்தில் காஃபியுடன் வேறு பல சத்துள்ள பானங்கள் என வரிசையாக வந்து விட்டாலும், பொருளாதார வசதி காரணமாக, எங்கள் அம்மா வீட்டில் எங்களுக்கு காஃபி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அது இத்தனை ஆண்டுகளாக தொடர்வதால், அதை முற்றிலும் நிறுத்தவும் இயலவில்லை. இன்று வரை ஒரு நாளைக்கு சில சமயம் காலை மட்டுமாவது ஒரு தடவையேனும் இந்தக் காஃபிக்கு அடிமையாகிறேன்.
திருமணமானவுடன், புகுந்த வீட்டில்,எல்லோரும் சேர்ந்திருக்கையில் (கூட்டுக் குடும்பம்) எனக்கு மட்டும் மூன்றாம், நான்காம் தடவையாக பில்டரில் விட்டு இறக்கிய காஃபி காலை, மாலை என முதல் தடவையாக கிடைத்தது. (முதல், இரண்டாவது எல்லாம் பெரியவர்கள்தான் குடிக்க வேண்டும் என்ற தீர்மானம் அந்த வீட்டில் இருந்ததும், நான் அப்போது அவர்களை விட மிக,மிகச்சிறியவள் என்பதும் அந்தப் 19 ஆவது வயதில் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. :)) ) அப்போதாவது இந்த மேற்படி பானத்தை ஒரேடியாக வெறுத்து ஒதுக்கி கை கழுவி விட்டிருக்கலாம். (அந்த காஃபியே ஒரு கை கழுவும் தண்ணீராகத்தான் இருந்தது. ஹா ஹா ஹா.) விபரம் தெரிந்த நாளிலிருந்து அம்மா வீட்டில் நல்ல காஃபியை குடித்து விட்டு இங்கு மாறுபடும் போது நாக்கு வித்தியாசத்தை காட்டியது. ஆனால், ஒருவரின் மனது நோக ஒரு சொல் சொல்வதும், ஒரு உணவுப் பொருளை வேண்டாமென்று மறுக்கவும், ஒதுக்கவும் தெரியாத மனது என்னுடையது. இதுவரை அப்படியேதான் இருக்கிறேன். தொட்டில் பழக்கம் கட்டை வேகும் வரை மாறாதது என்பது உண்மைதானே..!
அது என்னவோ காஃபியைப்பற்றி கூறும் போது இந்தப்பாடலும் நினைவுக்குள் வந்து விடுகிறது.
"காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி. அது கையில் கிடைத்த பின்னும் துடிக்கிது ஆவி." என்ற பாடலை மறக்க முடியுமா?
(என்னவோ போங்கள்.. இந்த காஃபியைப்பற்றி இப்படி அலச வேண்டுமென ஒரு காஃபி அருந்தும் வேளையில் எனக்கு தோன்றியது பாருங்கள். இது அந்த காஃபிக்கு வந்த சோதனையா? இல்லை பெருமையா?தெரியவில்லை. ஆனால், காஃபி அருந்துபவர்களின் மனதில் வரும் கருத்துக்களுக்கும், இல்லை அருந்தாதவர்களின் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களுக்கும், இந்தப் பதிவு ஒரு பாலமாக இருக்கும்.:)) )
உங்கள் அன்பான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.அதற்கு நான் என் கைப்பேசியிலேயே பதில் கருத்துக்கள் தருவதால் கொஞ்சம் தாமதமாகிறது. அதற்காக அனைவரும் மன்னிக்கவும் இருப்பினும் அன்புடன் உடனே வந்து கருத்துக்கள் பகிர்வோர்க்கு என் பணிவான நன்றிகள் . 🙏.
அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். இப்போதெல்லாம் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொன்றின் தினமாக அடையாளம் காட்டப்படுகிறது.
இன்று உலக தேங்காய் தினமாம்.அதாவது 2.9.24 ஆகிய இன்று தேங்காய்களின் சிறப்பை உணரும் தினமாக சிறப்பித்து குறிப்பிட்டுள்ளனர்..
மங்கலகரமான இந்த தேங்காய்கள் ஒரு வீட்டிற்கு அன்றாடம் எப்போதும் எப்படி இன்றியமையாதது போலவோ, அது போல், அது தரும் பயன்களும் நமக்கு எண்ணிலடங்காதது அல்லவா. ? வீட்டில் தேங்காய் இல்லாத சமையல் என்றுமே ருசிக்காது என்பதையும் நாமறிவோம்.
வீட்டின் எந்த ஒரு சுபமான விஷேடங்களுக்கும் வெற்றிலை, பாக்கு பழங்களுடன் சபையில் வந்து முன்னிற்பது இந்த காய்கள்தானே..! இறைவனுக்கு நாம் தவறாது பல பழங்களுடன் தேங்காய்களை சமர்ப்பிப்பது என்பது காலங்காலமாய் நம்மிடையே இருந்து வரும் ஒரு சம்பிரதாய பழக்கந்தானே ..! . தவிரவும் நம் துயரங்கள் நீங்க இறைவனிடம் வேண்டிக் கொண்டு நம் துன்பங்கள் அனைத்தும் சிதறிப் போகும் வகையாக சிதறுகாயாக உடைக்கப் பயன்படுவதும் இதுதான் என்பதையும் அனைவரும் அறிவோம். .
நம் சந்ததிகளை (பிள்ளைகளை) அன்புடன் கவனித்து வளர்த்து போற்றுவது போல இந்த தென்னை மரத்தையும் ஒரு பிள்ளையாக்கி "தென்னம்பிள்ளை" என அவைகளை செல்லத்துடன் அடைமொழியாக விளித்து நாம் ஒவ்வொரு வீட்டிலும் அன்புடன் வளர்க்கிறோம்.
சில பெற்றோர்கள் சமயங்களில் தங்கள் பிள்ளைகளின் மேல் வரும்,பகை,கோப,தாபஉணர்ச்சியில், "இந்தப் பிள்ளையை பெற்று வளர்த்ததை விட ஒரு தென்னம் பிள்ளையை வளர்ந்திருந்தாலும் அது எனக்கு கடைசி வரை உபகாரமாக இருந்திருக்கும்" என மனம் வெறுத்து தென்னை மரத்தை தம் பிள்ளைகளுக்கும் மேலாக உயர்த்திக் சொல்வார்கள்.
இங்கு (பெங்களூரில்) ஒரு திருமணம், கிருஹபிரவேசம் போன்ற சுப காரியங்களுக்கு பச்சை தென்னை ஓலையில் அழகாக பந்தல் பின்னி வாசலில் கட்டி கொண்டாடுகின்றனர். (இது மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபடுகிறது என்பது வேறு விஷயம்.) எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும் இப்போது பழகி விட்டது.
இத்தனை சிறப்பு மிக்க தேங்காய் தினத்தை பார்த்ததும், தேங்காயை வைத்துச் செய்யப்படும் இந்த உணவு நினைவு வந்தது. இது ஏற்கனவே நான் திங்கள் பதிவாக எ. பியில் பகிர்ந்துள்ளேன். இருப்பினும் என் பதிவிலும் ஒரு அடையாளமாக இருக்கட்டுமென இடம் பெறுகிறது (நிறைய பதிவுகள் நேரமின்மையால், பாதி எழுதியும், முடிக்காது பாதியுமாக இருக்கின்றன. அதனால் பழசையே (ஆனால், இங்கு இது புதியதுதான்.) மறுபடி திரும்பி பார்க்கிறேன். (இரண்டாவதாக பதிவுகளின் எண்ணிக்கையும் கூடுமென்ற சுயநல ஆசையும் ஒரு காரணம்.) இதை ஏற்கனவே அனைவரும் படித்திருந்தும், செய்முறைகளை அறிந்திருந்தும் இங்கு வந்த ஊக்கத்துடன் உற்சாகமும் அமையுமாறு கருத்துரை தரும் என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 🙏.
இனி எ. பியில் பகிர்ந்த பதிவு. இதை அன்று என் செய்முறையாக எழுதி அனுப்பியதை, அன்புடன் எ. பியில் பகிர்ந்து எனக்கு ஊக்கமளித்த எ. பிக்கும், அதன் நிர்வாக ஆசிரிய பெருமக்களுக்கும் என் பணிவான நன்றிகள் எப்போதும்.
இது ஊற வைத்து உலர்த்திய பச்சரிசி.
அதை நல்ல நைசான மாவாக மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளுங்கள்.
நான் ஒரு டம்ளருக்கு ஒரு மூடி தேங்காய் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டேன். கால்படிக்கு அரிசிக்கு ஒரு நல்ல திண்ணமான பெரிய தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேங்காய் துருவல் கணிசமாக இருக்கும்.
பொடியாக துருவிய தேங்காய் துருவல்.
சலித்து வைத்த மாவையும் தேங்காய் துருவலையும் நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் இந்த மாவைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து இரு பாகங்களாக வறுக்கவும்.
நன்றாக கை விடாமல் யார் மேலும் கோபம் இல்லாமல் (கோபம் வைத்தால் கவனம் சிதறி மாவு சரியான பக்குவத்திற்கு வறுபடாமல் போய் விடும்.) மனதில் பொறுமையுடன் வறுக்கவும்.
இறுதியில் இந்த கலருடன் மாவு மொறுமொறுவென தயாராகி விடும்.
இதை நாங்கள் தேங்காய் வறுத்த மாவு என்போம் . முன்பு நான் பிறந்த வீடு (தி. லி) சென்று சென்னை திரும்பும் போதெல்லாம் தாய் வீட்டு சீதனமாக சாம்பார் பொடி, மற்ற இத்யாதி பொடிகளுடன் ஏனைய பட்சணங்களுடனும் இந்தப் பொடியும் கண்டிப்பாக இடம் பெறும். இது மாதக்கணக்கில் கெட்டுப் போகாது.
சாயங்காலம் விடுமுறை நாட்களில் மாலை சிற்றுண்டியாக வெல்லத் தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து வெல்ல வாசனை போனதும் , வடிகட்டிய ஆறிய வெல்ல நீருடன் இந்த மாவை கலந்து சாப்பிடுவோம். கூடவே காரமாக ஏதாவது ஸ்நாக்ஸ். இல்லை வீட்டில் போடும் பஜ்ஜி போண்டா.... வகைகள்.
அதுபோல் காலை பசிக்கும் போதும் டிபன் ஏதும் சரியாக அமையாத போதும்.. வழக்கமான இட்லி, தோசை அல்லாத புளி அரிசி மாவு உப்புமாவோடும் இது ஜோடி சேர பிணக்கு கொள்வதேயில்லை. ஏதாவது பூஜை விரத நாட்களிலும், உப்பு மோருடன் கொஞ்சம் மாவை கலந்து சாப்பிடுவோம். பூஜையெல்லாம் முடிந்து சாப்பிடும் வரை பசியை அடக்கி தாக்குப் பிடிக்கும். இல்லையெனில் பொழுது போகாமல் இருக்கும் போது, கொஞ்சம் மாவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வீட்டில் எல்லோரும் ஏதாவது அரட்டை அடித்தபடி, இல்லையென்றால் ஒரு ஸ்வாரஸ்யமான நாவலை படித்தபடி கொஞ்ச கொஞ்சமாக ஸ்பூனினால் அள்ளி அப்படியே சாப்பிடுவோம். இப்போது இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கனவாகி விட்டது. ஸ்வீீட் எல்லாவற்றிகும் தடா... (நாவல் படிக்கலாம். ஆனால் எதையும் சாப்பிடாமல்...! இரண்டாவதாக அது உடனே பற்களில் மாட்டிக் கொண்டு நாவலின் சுவாரஸ்யமான கவனத்தை திசை திருப்பி விடுகிறது.)
2 மாதம் இங்கு வந்திருந்த என் மகனின் மலரும் நினைவுகளுக்காக இதை கொஞ்சம் செய்தேன். இதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் இதை, இதன் செய்முறையை அறிந்திருக்கலாம் . இதைதான் திணை மாவு என்பார்களோ. ? அதையும் அறியேன். இதன் பெயர் உங்கள் அளவில் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.இது ப. ப. (பழைய பஞ்சாங்கம்) ஆனாலும், படங்களை ரசிப்பதற்கும், பகிர்வை படித்து ரசிப்பதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏.
நம் நாட்டில் சிறந்த முக்கனிகளில் இந்த வாழைப்பழமும் ஒன்று. பொதுவாக வாழை மரம் சம்பந்தபட்ட அனைத்தும் அதன் பயன்பாடுகளில அனைவருக்கும் உடம்பிற்கு பல நல்லதையும் செய்யும். ஒவ்வாதவர்களுக்கு சில உபாதைகளுக்கான பாதையையும் காட்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாயுதொந்தரவு உள்ளவர்களுக்கும், இனிப்பு தடை செய்யப்பட்டவர்களுக்கும் முறையே வாழைக்காய், பழம் முதலியவை சில தொந்தரவுகளைத் தரும்.
ஒவ்வொரு வீட்டின், அல்லது கோவிலின் அனேக விஷேட தினங்களில் இந்த வாழை மரந்தான் அனைவரையும் வரவேற்கும் நல்ல மனதுடன் வாசலில் கட்டப்பட்டு அதன் சிறப்பை பறைசாற்றிக் கொள்ளும் பெருமையை பெற்றது.
வாழைப்பழம் கனிகளில் சிறந்தது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பது. எக்காலத்திலும் தடங்கலின்றி கிடைப்பதால், இறைவனுக்கு படைக்கப்படும் நிவேதனங்களில் இக்கனி முதலிடம் பெறும் பாக்கியத்தை பெற்றது.
வாழைக்காய் வகையில் கறி, கூட்டு, புளிச்ச கூட்டு, வறுவல் துவையல் பொடிமாஸ் எனப்படும் கறி போன்றவற்றிக்கு உறுதுணையாக இருக்கும். தவிரவும் வாழை இலையில் சாப்பிட்டு பழகியவர்கள் அதை விட சிறந்த தட்டுகளில் பரிமாறினாலும், இவையெல்லாம் இதற்கிணையாக (வாழை இலைக்கு இணையாக) வருமா என்று கூறுவார்கள். அந்தளவிற்கு இலையில் சாப்பிடும் உணவு பதார்த்தங்கள் கூடுதல் சுவை பெறும்.
வாழைப்பூ அதன் இயல்பான துவர்ப்பு சுகர் அதிகம் உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்து. தாராளமாக இதை மதிய உணவுடன் கறி, கூட்டு, பருப்புசிலி, வடை, அடை என செய்து சாப்பிடலாம். இதுவும் சில சமயங்களில் அதனுடன் சேரும் பொருட்களால் வாயு தொந்தரவை சிலருக்கு ஏற்படுத்தும். (எதுவுமே, அமிர்தமேயானாலும், அளவுக்கு மிஞ்சினால் அது விஷந்தானே...! .
வாழைத்தண்டிலும் அது போல் சிறந்த பலன்கள் உள்ளது. அதிலேயும் கறி, கூட்டு, உசிலி, அவியல் தோசை என அனேக விதமான உணவு வகைகள் செய்து சாப்பிட உடம்பிற்கு நல்லதைச் செய்யும் தன்மை கொண்டது. இப்படி வாழை மரத்தை நுனி முதல் அடி வரை நமக்கு பயனுள்ளதாக அமையுமாறு இறைவன் அதை தோற்றுவித்துள்ளான்.
இன்று வாழைக்காயுடன், காய்கறிகளில் ஒன்றான சேனைக் கிழங்கையும் (அந்த காலத்தில் மன்னர் ஆட்சியில் பலம் கொண்ட ஒரு படை என்பது. சேனை, படைக்கு தலைமை தாங்குபவர் சேனாதிபதி என்ற பெயர்களைப் போலவே இதற்கு யார் முதலில் சேனைக்கிழங்கு என்ற பெயர் வைத்தார்களோ தெரியவில்லை..) சேர்த்து செய்யும் உணவாகிய எரிசேரி. ( இதற்கும் இந்தப் பெயரை யார் வைத்தார்களோ?) இது மலையாள கரையோரம் அன்றிலிருந்து இன்றுவரை உலா வந்த / வரும் சிறப்பு உணவுகளில் ஒன்று. .
வாழைக்காயைப் போல இந்த சேனைக் கிழங்கிலும் பல நன்மைகள் உண்டு. இந்த இரண்டையும் சேர்த்து சமைக்கும் போது அது ஒரு ருசி. இதிலும் (சேனைக்கிழங்கிலும்) கறி, கூட்டு, சாம்பார், பிட்லை, வறுவல் என விதவிதமாக செய்யலாம். அவியலில் இவை இரண்டும் (வாழை, சேனை காய்கள்) எவ்வித மனவேறுபாடின்றி சேர்ந்து கொள்ளும்.
வாழைக்காய் எளிதில் வெந்து விடும். மாறாக சேனைக்கிழங்கு சில சமயம் அடம் பிடிக்கும். குக்கரில் வைத்தால் கூட அதன் மனது சிலசமயம் கல் மனதாகவே இருக்கும். சில சமயம் வெறும் கடாயில் அரிந்து போட்டு வேக வைத்தாலும், வெந்து விடும். பொதுவாக கொஞ்சம் சிகப்பு கலர் கலந்து இருக்கும் சேனைகள் இந்த மாதிரி அடம் பிடிக்கும். அதனால் வெள்ளை மனதுடையவையாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். சமயத்தில் அது நன்றாகவே வெந்து எரிசேரியில் சேரும் போது உருதெரியாமல் கலந்தும் விடும்.
இப்படி குழைந்து வெந்து விடும் சேனைக்கிழங்கு மசியல் செய்வதற்கு உகந்ததாக இருக்கும். இந்த சேனைக்கிழங்கு (இதை மட்டும் வைத்து செய்யும் சேனை மசியல்) மசியல் புளி விட்டும், இல்லை இறுதியில் எலுமிச்சைபழம் சேர்த்தும் பண்ணலாம். சாதத்துடன் கலந்து சாப்பிட அதன் ருசி நன்றாக இருக்கும். ஓரிரு சுட்ட அப்பளங்களை இதன் தொட்டுகையாக இருக்கடடும் என இது முழுமனதுடன் சம்மதித்து விடும். (இப்போது இங்கு சில சாமான் மால்களில் இந்தச் சேனைக் கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.)
இது வேக வைத்த வாழைக்காய் துண்டங்கள்.
இது வேக வைத்த வாழைக்காய் துண்டங்களுடன் கடுகு மட்டும் தாளித்து கொட்டியுள்ளேன்.
இது குக்கரில் சமர்த்தாய் வெந்து காத்திருக்கும் சேனைக்கிழங்கு துண்டங்கள்.
இது வறுத்து அரைக்க காத்திருக்கும் மசாலா சாமான்கள்.
இது எரிசேரி. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்கள் பண்ணும் போது எடுத்தவை. ஒன்றுக்கொன்று சம்பந்த மில்லாமல் குழப்புமோ என்னவோ? இது பண்ணும் போது தொடர்ச்சியாக எடுத்த நிறைய புகைப்படங்கள் பழைய கைப்பேசியிலிருந்து மாற்றும் போது காணமல் போய் விட்டது.
முதலில் சேனைக் கிழங்கின் தன்மையை பொறுத்து அதை கொஞ்சம் பெரிதான துண்டங்களாக்கி குக்கரிலோ தனியாகவோ வேக வைத்துக் கொள்ளவும். பின் வாழைக்காயை அதே அளவு பெரிய துண்டுகளாக்கி தனியே வேக வைத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.
ஒரு கடாயில் அவரவர் காரத்திற்கு தகுந்த மாதிரி சிவப்பு மிளகாய், ஒரு ஸ்பூன் தனியா, உ. ப, க. ப ஒவ்வொரு ஸ்பூன் இவற்றுடன் மிளகு ஒரு ஸ்பூன் என எடுத்து கடாயில் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். தேங்காய் அரை மூடி துருவிக் கொண்டு அதையும் கொஞ்சம் வாசனை வருமளவிற்கு வறுத்துக் கொண்டு நன்கு ஆறியதும், கொஞ்சம் கறிவேப்பிலையையும் கடாயில் அதனுடன் சேர்த்து வறுத்து உரலிலோ, மிக்ஸியிலோ போட்டு அரைத்து அந்த விழுதை வேக வைத்திருக்கும் காய்களுடன் சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு கொதிக்க விட்டு, (இதற்கு மேல் தேங்காய் அதிகம் சேர்த்தால் பாதகமில்லை என்பவர்கள் இரண்டு ஸ்பூன் தேங்காய்ப்பூவை நன்கு வறுத்து இறுதியில் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.) (அப்போது இந்த எரிசேரி நல்ல மணம் பெறும். ஹா ஹா. ) கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்து இறுதியில் ஒன்று சேர கொதித்து வருகையில், மூன்று பெரிய ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கிவிடலாம். இப்போது இதன் வாசனை கண்டிப்பாக உடனே நம்மை உணவருந்த அழைக்கும்.
இது மஞ்சள் தூள் சேர்த்த பொங்கலுடன் வறுத்த சாமான்களை சேர்த்த படம்.
மதியமோ, இல்லை, பசிக்கும் போதோ வெறும் சாதம் மட்டும் வைத்தால், மீதமிருக்கும் இந்த எரிசேரி ஒரு கை கொடுக்கும் என்பதால், எப்போதும் எங்கள் வீட்டில் இந்த பொங்கலுக்கு உடன் துணையாக வரும் சட்னிகள், சாம்பார், உ. வடை முதலியவை மறுபேச்சின்றி சத்தமின்றி ஒதுங்கிக் கொண்டன. (ஆனால், எப்போதும் அதன் துணையாக வருபவை அன்று பற்களை கடித்தபடி பழி வாங்கும் மன நிலையில் உள்ளதென்பதும் எனக்கு புரிந்தது. :)))
பி. கு. இன்னமும் இவை இரண்டின் நன்மைகள் (அதுதான் காய்கள் இரண்டின் நன்மைகள் ஏ முதலான விட்டமின், உடலிலுள்ள குறைகளை போக்கி நிறைகளை அதிகரிக்கச் செய்வது..) பற்றிய குறிப்பை இதனுடன் இணைக்க சேகரித்தேன். ஆனால், ஆகா.. ஒன்றுமில்லாத இந்தப் பதிவு இவ்வளவு நீ.. ள.. மா.. என்று பதிவின் நீளம் கருதி ஒருவரும் பொறுமையுடன் படிக்க வில்லையென்றால் என்ன செய்வதென்று அது எதையும் இணைக்கவில்லை.
இப்படி எத்தனைதான் நன்மை குறித்த குறிப்புகள் இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும், பயன்படுத்தும் அவரவர் உடல் நிலைக்கேற்றபடிதான் அவைகளும் நம்முடன் ஒத்துழைக்கும் இல்லையா..?
அறு(சு)வைப் பதிவை படிக்கப் போகும் அனைவருக்கும் அன்பான நன்றிகள். 🙏.