இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா.
கணங்களுக்கு முதன்மையானவனே...
விக்கினங்களை களைபவனே...
விநாயகப் பெருமானே.. எனை என்றும்
காக்கும் கணேசா..! நல்லெழுத்துக்களை அறியவும், பதியவும் உன் துணை
வேண்டினேன். தப்பாமல் தந்தருள்வாய்
வேலனுக்கு சோதரனே....
ஓம் கார வடிவே கணேசா.!
எங்கள் உள்ளத்தில் ஓம் என ஓதினோம் நேசா.!
யேசுதாஸின் இனிமையான குரலில் என் இஷ்ட தெய்வத்தின் மீது எனக்குப் பிடித்த இனிமையான பாடலொன்றை கேட்கலாமா?
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவசமிகவாகுதே கண்ணா...
அந்த பரவசங்களுக்கு நடுவே உன் கோகுலத்தில், உன்னருகில் விளையாடும் ஒரு சிறிய பிறப்பாக நானும் பிறந்திருக்க கூடாதாவென என் பாழும் மனம் நினைக்கிறது கிருஷ்ணா.. அப்போதேனும் உன்னை தொட்டு தொடர்ந்து பால்யகால விளையாட்டில் பங்கேற்று சந்தோஷமடைந்திருப்பேனே தாமோதரா...
பிஞ்சு விரல்களால், நீ வெண்ணை உண்பதே அழகு. உன் அழகுக்கு அழகு செய்யும் ஆபரணங்கள் இடையே ஒரு சிறு கல்லாக நான் இருக்க கூடாதாவென என் மனம் ஏங்குகிறது கண்ணா? .அப்போதேனும் உன் அழகை அருகிலிருந்து கண்டு களித்திருப்பேனே கேசவா...
ஒரு விரலால் வெண்ணை உண்ணும் போது ,பிற விரல்களில் வடியும் வெண்ணையுடன் உன் அழகை காணும் போது, உருகும் வெண்ணையின் நிலையில் என் மனமும் தவிக்கிறது அந்த வெண்ணெய் ஒரு துளியில் எங்கேனும் ஒரிடத்தில் நானும் சங்கமித்து இருக்க கூடாதா நாராயணா ...
தானே வந்து தவழ்ந்த நிலையில், நிரம்பி வழியும் பாலமுதை கை நிறைய சிந்திச் சிதறி எடுத்துண்ணும் கோலம் காண தேவாதி தேவர்களும் வந்து பார்க்கும் காட்சியை கண்டு உண்ண மறந்து கை ஊன்றிய நிலையில் திரும்பி நோக்கி அதிசயக்கிறாயோ? அந்த பாலமுதம் கடையும் மத்தாக நான் இருந்திருக்க கூடாதா கிருஷ்ணா ? அந்த சமயத்தில் கடையும் பொழுதில் கடைக் கண்ணால் உன் அழகை தரிசித்திருப்பேனே த்ரிவிக்கரமா....
சின்னஞ்சிறு விரல்களால் நீ உண்டது போறாது என அன்பின் மிகுதியில், உன் தாய் ஊட்டி விடுவதை ஆனந்தமாக உண்ணும் கிருஷ்ணா... அதற்கு உன் தாயாகிய யசோதைக்கு கள்ளம் கபடமற்ற உன் உள்ளத்தையே பரிசாக்கி கொடுக்க நினைக்கிறாயோ? அந்த பொழுதில் உன் தாய் விரலில் அணிந்திருக்கும் கணையாளியின் ஒரு உலோகமாக நான் பிறந்திருந்திருக்க கூடாதா யசோதை கிருஷ்ணா? அப்போது உன்னை ஸ்பரிசித்து மன மகிழ்ந்திருப்பேனே நரசிம்மா....
என்ன தவம் செய்தாய் யசோதா....பரம் பொருளை உன் மகனாக அடைவதற்கு.. உன் மடியமர்ந்து உண்ட களைப்போ உன் மகனுக்கு.. அதனால்தான் உன் அணைப்பில் ஆசுவாசபடுத்திக் கொள்கிறனோ ? உன் தழுவலில் அவனும், நீயும் மெய்மறந்த அழகை, நீ அமர்ந்திருக்கும் மர சிம்மாசனத்தில் ஒரு பலகையாக இருந்திருந்தாலும், உங்கள் அன்புள்ளங்களை தரிசித்திருப்பேனே பத்மநாபா.....
அன்பு தாயின் கைகளால் வெண்ணையை உண்டு மகிழ்ந்த நீ பதிலாக அவ்வெண்ணை ஈந்த பசுவினத்தை மகிழ்விக்க உன் இதழ்கள் தந்த இசையமுதை அவை செவி குளிர மனம் நிறைய பருகச் சொல்லி அளிக்கின்றனையோ? அதன் மேல் சாய்ந்து நீ கானம் இசைத்த போது உனை சுற்றி மலர்ந்திருக்கும் மலரிடையே ஒரு மலராக நானும் மலர்ந்திருக்க கூடாதோ மணிவண்ணா? அப்போதாவது உன் மலர் முகம் கண்டு மகிழ்ந்திருப்பேனே புருஷோத்தமா....
உன் அருகாமையில் "ஆ" வினங்களை கட்டுண்டு நிற்க வைத்த மாதவா... அவைகள் முந்தைய பிறவியில் செய்த மாபெரும் புண்ணியந்தான் உன்னை அங்கு கொண்டு சேர்த்ததுவோ மதுசூதனா... அந்த "ஆ"வினங்களின் கொம்புகளில் கட்டிய சிறு மணியாகவாவது என்னை நீ உருவாக் கியிருக்க கூடாதா? அப்போதாவது உன்னை கண்டு அகமகிழ்ந்திருப்பேனே கோவிந்தா.......
உனது கான மழைதான் ராதையின் சுவாசம். அதனால்தான் அவள் உன்னுடனே பிரிக்க முடியாதபடி ராதா கிருஷ்ணனாக வாசமாகி சங்கமித்து விட்டாள். வண்ணமய ஆடைகள் அணிந்து அவளுடன் பாடிக் களித்திருந்த போது, அந்த பட்டாடையின் ஒரு நூலாகவேனும் நான் பிறப்பெய்திருக்க கூடாதா ராதே கிருஷ்ணா? அந்த சமயத்தில் உங்களிருவரையும் கண்டு ஆனந்தித்து பரவசமாகியிருப்பேனே வாமனா.....
உன்னையே நினைக்கும் அனைத்து உள்ளங்களிலும் நீ ஒருவனே குடியிருப்பாய். உன் புல்லாங்குழல் இசையில் மயங்கியதால் தன்னிலை மறந்த நிலையில் கோபிகா ஸ்திரிகளின் மெய் மறந்த கோலம்... உன் அருகிலிருக்கும் மரத்தின் ஒரு இலையாகவேனும் நான் பிறவி எடுத்திருக்கலாகாதா அநிருத்தா?அப்போதாவது உன்னை தரிசித்திருப்பேனே உபேந்திரா.....
பொன்னும், பொருளும் எனக்கு இணையாகுமோ? அன்புக்கு மட்டுமே என்றும் நான் ஐக்கியமானவன். ஒரு சின்னஞ்சிறு துளசி இதழுக்கு முன் அந்த பொருள்கள் எல்லாம் வீண். ஆடம்பரம் நிலைக்காதது என அந்த நிமிடம் உணர்த்திய அச்சுதா... அந்த துளசியின் அடி மண்ணில் ஒருசிறு துகள்களாக நான் ஜனித்திருக்க கூடாதா? அந்த சமயத்திலாவது உன்னை கண்டுகந்திருப்பேனே ஜனார்த்தனா..
நீதான் பரம் பொருள். உன்னை புரிந்தவர்களுக்கு மட்டும்.... உன்னையே உளமாற சரனென அண்டியவர்களை நீ என்றும் உன் கைகளில் தரித்திருக்கும் சங்கு சக்கரம் போல் கை விட்டதில்லை. உன் மணிமுடியில் ஆடும் முத்துச்சரத்தின் ஒரு முத்தாக நான் அலங்கரிக்கப்பட்டு இருக்க கூடாதா பரந்தாமா? அந்த நிலையில் உனைக் கண்டு அகமகிழ்ந்திருப்பேனே சங்கர்ஷணா....
ஒரு மனிதனாக செய்ய வேண்டிய செயல்களில், பலன்களை எதிர்பாராது கடமையை மட்டும் செய்து முடிக்க உன் பார்த்திபனுக்கு அன்பாக கட்டளையிட்ட பரந்தாமா ! அன்றேனும் ரத கஜ, துரக பாதாதிகளில், ஓருயிராக படைத்திருக்க கூடாதா? இத்தனை சமயங்களிலும் எந்த விதத்திலும் உன்னை தரிசிக்க இயலாமல் செய்து விட்ட என் ஊழ் வினையகற்றி என்னை உன் பார்த்திபன் நிலையில் நீ பிறந்த பொன்னாளான இன்றேனும் இப்போதாவது அனுகிரஹித்து விடு தீன தயாளா.!
கோவிந்தா 🎆 கோபாலா
ஹரே ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ
சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமுவந்த கிருஷ்ண ஜயந்தி நல் வாழ்த்துகள்.