Showing posts with label தேங்காய் பொடி.. Show all posts
Showing posts with label தேங்காய் பொடி.. Show all posts

Monday, September 2, 2024

தேங்காய் வறுத்த பொடி.

உலக தேங்காய் தினம். 

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். இப்போதெல்லாம் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொன்றின் தினமாக அடையாளம் காட்டப்படுகிறது. 

இன்று உலக தேங்காய் தினமாம்.அதாவது 2.9.24 ஆகிய இன்று  தேங்காய்களின் சிறப்பை உணரும் தினமாக சிறப்பித்து குறிப்பிட்டுள்ளனர்.. 

மங்கலகரமான இந்த  தேங்காய்கள்  ஒரு வீட்டிற்கு அன்றாடம் எப்போதும் எப்படி இன்றியமையாதது போலவோ, அது போல், அது தரும் பயன்களும் நமக்கு எண்ணிலடங்காதது அல்லவா. ? வீட்டில் தேங்காய் இல்லாத சமையல் என்றுமே ருசிக்காது என்பதையும் நாமறிவோம். 

வீட்டின் எந்த ஒரு சுபமான  விஷேடங்களுக்கும் வெற்றிலை, பாக்கு பழங்களுடன் சபையில் வந்து முன்னிற்பது இந்த காய்கள்தானே..! இறைவனுக்கு நாம் தவறாது பல பழங்களுடன் தேங்காய்களை சமர்ப்பிப்பது என்பது காலங்காலமாய் நம்மிடையே இருந்து வரும் ஒரு சம்பிரதாய பழக்கந்தானே ..! . தவிரவும் நம் துயரங்கள் நீங்க இறைவனிடம் வேண்டிக் கொண்டு நம் துன்பங்கள் அனைத்தும் சிதறிப் போகும் வகையாக சிதறுகாயாக உடைக்கப் பயன்படுவதும் இதுதான் என்பதையும் அனைவரும் அறிவோம். . 

நம் சந்ததிகளை (பிள்ளைகளை) அன்புடன் கவனித்து வளர்த்து போற்றுவது போல இந்த தென்னை மரத்தையும் ஒரு பிள்ளையாக்கி "தென்னம்பிள்ளை" என அவைகளை செல்லத்துடன் அடைமொழியாக விளித்து நாம் ஒவ்வொரு வீட்டிலும் அன்புடன் வளர்க்கிறோம்

சில பெற்றோர்கள் சமயங்களில் தங்கள்  பிள்ளைகளின் மேல்  வரும்,கை,கோப,தாப உணர்ச்சியில், "இந்தப் பிள்ளையை பெற்று வளர்த்ததை விட ஒரு தென்னம் பிள்ளையை வளர்ந்திருந்தாலும் அது எனக்கு கடைசி வரை உபகாரமாக இருந்திருக்கும்" என மனம் வெறுத்து தென்னை மரத்தை  தம் பிள்ளைகளுக்கும் மேலாக உயர்த்திக் சொல்வார்கள். 

இங்கு (பெங்களூரில்) ஒரு திருமணம், கிருஹபிரவேசம் போன்ற சுப காரியங்களுக்கு பச்சை தென்னை ஓலையில் அழகாக பந்தல் பின்னி வாசலில் கட்டி கொண்டாடுகின்றனர். (இது மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபடுகிறது என்பது வேறு விஷயம்.) எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும் இப்போது பழகி விட்டது. 

 இத்தனை சிறப்பு மிக்க தேங்காய் தினத்தை பார்த்ததும், தேங்காயை வைத்துச் செய்யப்படும் இந்த உணவு நினைவு வந்தது. இது ஏற்கனவே நான் திங்கள் பதிவாக எ. பியில் பகிர்ந்துள்ளேன். இருப்பினும் என் பதிவிலும் ஒரு அடையாளமாக இருக்கட்டுமென இடம் பெறுகிறது (நிறைய  பதிவுகள் நேரமின்மையால், பாதி எழுதியும், முடிக்காது பாதியுமாக இருக்கின்றன. அதனால் பழசையே (ஆனால், இங்கு இது புதியதுதான்.) மறுபடி திரும்பி பார்க்கிறேன். (இரண்டாவதாக பதிவுகளின் எண்ணிக்கையும் கூடுமென்ற சுயநல ஆசையும் ஒரு காரணம்.) இதை ஏற்கனவே அனைவரும் படித்திருந்தும், செய்முறைகளை அறிந்திருந்தும் இங்கு வந்த ஊக்கத்துடன் உற்சாகமும் அமையுமாறு கருத்துரை தரும் என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

இனி எ. பியில் பகிர்ந்த பதிவு. இதை அன்று என் செய்முறையாக எழுதி அனுப்பியதை, அன்புடன் எ. பியில் பகிர்ந்து எனக்கு ஊக்கமளித்த எ. பிக்கும், அதன் நிர்வாக ஆசிரிய பெருமக்களுக்கும் என் பணிவான நன்றிகள் எப்போதும்


இது ஊற வைத்து உலர்த்திய பச்சரிசி


அதை நல்ல நைசான மாவாக மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளுங்கள்


நான் ஒரு டம்ளருக்கு ஒரு மூடி தேங்காய் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டேன். கால்படிக்கு அரிசிக்கு ஒரு நல்ல திண்ணமான பெரிய தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேங்காய் துருவல் கணிசமாக இருக்கும்


பொடியாக துருவிய தேங்காய் துருவல்


சலித்து வைத்த மாவையும் தேங்காய் துருவலையும் நன்கு கலந்து கொள்ளவும். 


ஒரு கடாயில் இந்த மாவைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து இரு பாகங்களாக வறுக்கவும். 


நன்றாக கை விடாமல் யார் மேலும் கோபம் இல்லாமல் (கோபம் வைத்தால் கவனம் சிதறி மாவு சரியான பக்குவத்திற்கு வறுபடாமல் போய் விடும்.) மனதில் பொறுமையுடன் வறுக்கவும்.
 

இறுதியில் இந்த கலருடன் மாவு மொறுமொறுவென தயாராகி விடும். 


  இதை நாங்கள் தேங்காய் வறுத்த மாவு என்போம் . முன்பு நான் பிறந்த வீடு (தி. லி) சென்று சென்னை திரும்பும் போதெல்லாம் தாய் வீட்டு சீதனமாக சாம்பார் பொடி, மற்ற இத்யாதி  பொடிகளுடன்  ஏனைய பட்சணங்களுடனும் இந்தப் பொடியும் கண்டிப்பாக இடம் பெறும். இது மாதக்கணக்கில் கெட்டுப் போகாது. 

சாயங்காலம் விடுமுறை நாட்களில் மாலை சிற்றுண்டியாக வெல்லத் தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து வெல்ல வாசனை போனதும் , வடிகட்டிய ஆறிய  வெல்ல நீருடன் இந்த மாவை கலந்து சாப்பிடுவோம். கூடவே காரமாக ஏதாவது ஸ்நாக்ஸ். இல்லை வீட்டில் போடும் பஜ்ஜி போண்டா.... வகைகள். 

அதுபோல் காலை பசிக்கும் போதும் டிபன் ஏதும் சரியாக அமையாத போதும்.. வழக்கமான  இட்லி, தோசை அல்லாத புளி அரிசி மாவு உப்புமாவோடும் இது ஜோடி சேர பிணக்கு கொள்வதேயில்லை. ஏதாவது பூஜை விரத நாட்களிலும், உப்பு மோருடன் கொஞ்சம்  மாவை கலந்து சாப்பிடுவோம். பூஜையெல்லாம் முடிந்து சாப்பிடும் வரை பசியை அடக்கி தாக்குப் பிடிக்கும். இல்லையெனில் பொழுது போகாமல் இருக்கும் போது, கொஞ்சம் மாவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வீட்டில் எல்லோரும் ஏதாவது அரட்டை அடித்தபடி, இல்லையென்றால் ஒரு ஸ்வாரஸ்யமான நாவலை படித்தபடி  கொஞ்ச கொஞ்சமாக ஸ்பூனினால் அள்ளி அப்படியே சாப்பிடுவோம். இப்போது இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கனவாகி விட்டது. ஸ்வீீட் எல்லாவற்றிகும் தடா... (நாவல் படிக்கலாம். ஆனால் எதையும் சாப்பிடாமல்...! இரண்டாவதாக அது உடனே பற்களில் மாட்டிக் கொண்டு நாவலின் சுவாரஸ்யமான கவனத்தை திசை திருப்பி விடுகிறது.) 

 2 மாதம் இங்கு  வந்திருந்த என் மகனின் மலரும் நினைவுகளுக்காக இதை கொஞ்சம் செய்தேன். இதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் இதை, இதன் செய்முறையை அறிந்திருக்கலாம் . இதைதான் திணை மாவு என்பார்களோ. ? அதையும் அறியேன்.  இதன் பெயர் உங்கள் அளவில் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.இது ப. ப. (பழைய பஞ்சாங்கம்) ஆனாலும், படங்களை ரசிப்பதற்கும், பகிர்வை படித்து ரசிப்பதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏.