இந்தப்பதிவுச்செடி இங்குமுளைத்தற்கு உதவியாக இருந்தது சென்ற சனியன்று எ. பியில் வெளிவந்த "சாப விமோசனம்" என்ற கதை. அதைப் படித்த பின் நான் அதற்கு சொன்ன கருத்துக்கு பதிலாக வந்த இந்த பதில் கருத்துக்கள்தான் இதன் காரண விதைகள்.
நானும் இன்று காலையிலேயே நல்ல புகழ் பெற்ற இந்த எழுத்தாளரின் கதைகளை படித்து விட்டேன். ஆனால், கருத்து சொல்ல யோசனையாக உள்ளது. (மாறுபட்டு விட்டால் என்ன செய்வதென்ற மனக்குழப்பங்கள்.) இது நான்.
கவலையே படாதீர்கள்... தயங்காதீர்கள்.. அதுதான் வேண்டும். மாறுபட்ட கருத்துக்கள்தான் வேண்டும்...இது சகோதரர் ஸ்ரீராம்.
கமலாக்கா தயங்கவே வேண்டாம். மாறுபட்ட கருத்துகள் வேண்டும். அப்போதுதான் சிந்தனைகள் பிறக்கும் யோசிக்கும் திறன் வலுவடையும்.
சும்மா ஒரே குட்டைல இருந்தால் மனமும் மூளையும் நாறிப் போகும்!! கமான் கமலாக்கா உங்கள் கற்பனை, எண்ணங்கள் கருத்துகள் சிறகடிக்கட்டும். இது சகோதரி கீதாரெங்கன்.
தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே & சகோதரி. உங்களிருவரின் ஊக்குவிப்புக்கு என் மனதில் பட்டதை எ. பியில் கருத்து சொல்ல ஆரம்பித்தேன். அது பதிவாக நீண்டு விட அதை இங்கேயே கொண்டு வந்து சிறைப் பிடித்து தங்க வைத்து விட்டேன். வந்து படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.
இவ்வகையான புராண கதைகள் பல விதங்களில் பலரால் அலசப்படுவது இந்த கதைகளின் சுவாரஸ்யந்தான் காரணமா? இல்லை. மனிதர்களாகிய நம் மன விகாரங்களின் வேறுபாடுகளா?
அகல்யை ஒரு கற்புக்கரசி. சிறந்த அழகி. அவள் பெயர் காரணமே அதைதான் குறிக்கிறது தர்மம் வழுவாத ரிஷி பத்தினி. தேவலோக தலைவனான இந்திரனின் மனதில் ஏற்பட்ட காமம் அவள் தலையெழுத்தை மாற்றி, தன் கணவரின் வாயாலேயே கடுமையான சாபம் பெற்று கல்லாக (ஆனால், அவள் பெயரிலேயே கல் உள்ளதே.! அதுவே அவளுக்கு ஒரு பிறவி சாபந்தான் போலும்..!) போகச் செய்தது.
பின்னர் இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமரின் கால் (பாத துளிகள்.) அவள் மேல் பட்ட விநாடி அவள் மீண்டு சாபவிமோசனம் பெற்று, பழைய நிலைக்கு உருப்பெற்றாள். (இது இறைவனின் அவதாரமாக அவதரித்த ஸ்ரீ ராமரின் மகத்துவத்தை காட்டக் கூடியது.) அதன் பின் கௌதம மகரிஷி அவளை ஏற்றுக் கொண்டார் என்பது வரைதான் புராண காலத்து இப்பத்தினி பெண்மணியின் சிறப்பாக நாம் நம் வீட்டு பெரியவர்களின் கதை சொல்லி வளர்க்கும் திறனோடு பால காண்டமாக சொல்லி நாம் அறிந்தது.
அதன் பின் அகல்யை கல்லாக மாறவில்லை. தன் சாப விமோசனத்திற்காக மனம் கல்லாக இறுகி ஸ்ரீ ராமனின் வரவுக்காக காத்திருந்தாள். தவிரவும், அவளும், தன் பால்ய வயதில் மனதில் பல ஆசைகளை வளர்த்துக் கொண்டிருந்தாள்..! என்கிற மாதியான கதைகளை கேட்(படிக்)கும் போதெல்லாம், புராணங்களில் வரும் கதை மாந்தர்களை நாம் (மனிதர்கள்) எப்படியெல்லாம் மாற்றியமைத்து கதைகளை கயிறாக...! ஒரு நூலாக....! (அப்படி திரிக்கும் நூல் என்ற பெயரைத்தான் நாம் தயாரிக்கும் புத்தக வடிவிற்கும் "நூல்கள்" என வைக்கிறோமோ..?:)) ) திரிக்கிறோமோ என எண்ணும் போது, புராணங்களில் மேல் நமக்கிருந்த கொஞ்ச நஞ்ச ஆர்வங்கள் ( நமக்கு மட்டுமென்ன.. எதையும் முழுதாக நம்பும் ஆர்வங்களா? ஆயிரம் சந்தேகங்களுடன் கூடிய ஆர்வ கோளாறுகள்தான். :)) ) இனி நம் சந்ததிகளுக்கு சுத்தமாக வராதோ என்ற நினைப்பும் எழுகிறது.
இளவயதில் தான் பழகி, தனக்கு பிடித்த இந்திரனையே தன் திருமண பிராயத்தில் "தன் விருப்பம் இவர்தான்.." என சொல்ல முடியாத மனநிலையில் இருந்திருக்கிறாள் அகல்யை. ஆனால், தன்னைப் படைத்த தந்தையான பிரம்மதேவர் கௌதமரை அவளுக்கென வரித்த போதும் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. மாறாக அன்றே அவள் மனது கல்லாகி போனது. (மானசீக காதல்கள் அப்போதே அந்த புராண காலத்திலேயே தோற்றுப் போய்யுள்ளது.)
பிரம்மதேவர் தான் படைத்த பெண் ஒரு சிறந்த தவமுனிவருக்கு பயனுள்ளவளாக இருக்க வேண்டுமென நினைத்தாரே ஒழிய அப்பெண்ணின் உள்ளத்து மனநிலையை கேட்டறியவில்லை. (அவரின் "தான் சொல்வதை அவள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற குருட்டு நியதிகள் இன்று வரை நம்மையும் (அவர் படைத்த மனிதர்களாகிய நம்மையும். ) விடாது துரத்துகின்றன.:))
இந்திரன், கௌதமர் இருவருமே அகல்யையை மணமுடிக்க ஆசைப்பட்டால், பிரம்மன் இந்திரனுக்கும், கௌதமருக்கும் இடையே வைத்த ஒரு சுயவரப் போட்டியின்படி, முன்னும் பின்னும் ஒரே முகம் கொண்ட ஒரு பசுவை வலம் வந்த பின் சாட்சியுடன் முதலில் வருபவருக்கு அகல்யை பரிசாக கிடைப்பாள் என்ற முடிவு. கௌதமரும் முன்னும், பின்னும் ஒரே முகமுடைய ( அந்த பசு தன் வயிற்று சிசுவை அந்நாள் வரை சுமந்து பின் அதை ஈன்று பெறும் தருணம். ) ஒரு பசுவை நாதரின் யோசனையின் பேரில் கண்டு அதை மூன்று முறை சுற்றி வந்து நாதரின் சாட்சியோடு போட்டியில் வென்று அகல்யையை கைப்பிடித்தார்.
இந்திரன் தன் ஐராவதி வாகனத்தில் மூவுலகும் சுற்றி அப்படிபட்ட பசுவைத் தேடி அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பிய போது கௌதமருக்கு, அகல்யை உரிமையாகி இருந்தாள். (பல பல யாகங்கள் செய்து இந்திர பதவியை தன் வசம் பெற்றிருந்த இந்திரனுக்கு அவ்விதமான பசுவைப் பற்றிய சூட்சுமம் தெரியாதா? இல்லை நாரதர்தான் இந்திரனுக்கு எதிரியா?) எல்லாம் பிரம்மன் போட்ட முடிச்சு. அவர் கணக்கு என்றும் தப்பாது. அந்த மாயைதான் இன்று வரை உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் மாறு(வேறு)பாடில்லாமல், நடமாடி கொண்டுள்ளது.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கின்படி அகல்யை கௌதமருக்கு மனைவியாகி ஒரு நல்ல சதி தர்மத்துடன் நடந்து வந்தாலும், அவள் மனதில் இந்திரனின் மேல் தான் ஆசைப்பட்டதையும், தன் பிதாவாகிய பிரம்மன் அது தெரிந்திருந்தும், தன்னை ஒரு வார்த்தை கூட கேட்காது கௌதமருக்கு பாணிக்கிரணம் செய்து தந்தது முதல் அவள் மனது கல்லாகி போனதென இப்போது ஒரு கதையில் படித்தேன்.
பெண்ணின் மனது எத்தனை முறைதான் கல்லாகும்படி அக்கால சூழ்நிலைகள் அவளை பாடாக படுத்திருக்கின்றன. அதன்பின் இந்திரனின் செய்கையால், அதைக்கண்டு கணவர் சபித்ததினால் அவள் உயிருள்ள கல்லாகி போனது வேறு. அதுதான், ( இப்படி கல்லாகி போவது) ஏற்கனவே அவளுக்கு பல முறை பழக்கமானது ஆயிற்றே..!
இந்திரனும், தன்னை மணப்பதற்காக அகல்யை காந்தர்வ முறையைச் சொல்லி வறுப்புறுத்திய போது கூட "அவசரம் கூடாது. தர்ம நியதிப்படி பெரியவர்களின் ஆசிகளோடுதான் நாம் மணந்து கொள்ள வேண்டுமென" அறிவுரை கூறினாராம். இதுவும் அந்த கதையில் தான் படித்தேன்.
இப்போது எ. பியில் சனியன்று வெளிவந்த பிரபல எழுத்தாளர் புதுமை பித்தன் அவர்கள் எழுதிய "சாப விமோசனம்" என்ற கதையில் அகல்யை ஸ்ரீ ராமரின் மூலம் சாப விமோசனம் பெற்றபின், நிறைய இன்னல்களையும், தன்னோடொத்த பிற ரிஷி பெண்களின் அவச்சொற்களையும் அவமானத்தோடு சந்தித்த பிறகு மனம் வெறுத்து துவண்டு போயிருக்கும் போது, அந்நிலையில் அவள் மிகவும் அல்லலுறுவதை கண்டு ஒரு நாள் அவளைத் தேற்ற வரும் கணவனின் அன்பையும், அருகாமையையும் உணருங்கால் அவள் மனது மீண்டும் கல்லாவது போல் கதை வடித்து தந்துள்ளார். நல்ல எழுத்து. சிறந்த உவமானங்கள்.
இந்நிலையில் இடையே கௌதமர் அகல்யை இருவருக்கும் ஒரு மகன் பிறந்து சதானந்தர் என்ற பெயருடன் மிதிலையின் மன்னர் ஜனகருக்கு அரசசபையில் தத்துவ விசார ஆலோசகராக இருந்து வருவதோடு துறவு வாழ்க்கையிலும் ஈடுபட்டு வருகிறார். அவரும் தந்தை தாய் படும் தீர்க்க இயலாத மனதின் துக்கங்களை கண்டு தன் மனம் வாடுகிறார்.
இவர்களுக்கு ஒரு மகளும் இருப்பதாக மற்றோர் இடத்து கதையிலும் படித்தேன். அந்த மகளின் பெயர் அஞ்சனை. இவரது மைந்தர்தான் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஆவார்.
கற்பில் சிறந்த பஞ்ச கன்னிகைகளில் முதலில் இடம் பெறுபவர் அகல்யைதான். அதன்பின் சீதை, திரௌபதி, தாரா, மண்டோதரி இவர்கள். இதில் தங்கள் கற்பின் திறனை வெளிப்படுத்த தன்னை தீயில் இட்டு அது பூக்களாக்கி குளிர்வித்து தர தங்கள் கற்புத்திறனை உலகிற்கு மெய்பித்தவர்கள் சீதை, திரௌபதி, தாரா ஆகியோர். அகல்யை தன்னை சுற்றியுள்ளவர்களால் தன் வாழ்நாள் முழுவதும், மனம் கல்லாகி இறுகி இருந்தாள் என்றால், மண்டோதரியும் தன் கணவனின் குறுகிய செயல்களில் மனம் குன்றி, அவர் மீது பாசம் மிகுந்த மரியாதையை தந்த போதும் தன் மனதை கல்லாக்கிக் கொண்டவள்.
ஆக பெண் எனப்பட்டவள் அந்த காலங்களில் தங்கள் சூழலின்படி பல விதமான சுக துக்கங்களை அனுபவித்தே வந்திருக்கின்றனர். அவர்களின் தொடர்ச்சியாக பரசுராமரின் தாய் ரேணுகா தேவி, அனுசுயாதேவி, தமயந்தி, சந்திரமதி, பக்த மீரா, சக்குபாய் என ஆசிரமங்களின் பெண்களும், ராஜவாழ்வில் பிறந்த பெண்களுமாக தொடர்ந்து அல்லல்களும், இன்னல்களும் பட்டுக் கொண்டேதான் இருந்தனர்.
இன்றைய காலத்திலும், இப்படி கஸ்டபடும் பெண்கள் இருக்கிறார்கள். அப்படி அல்லாமல், இந்தப் பிறவியில் நல்லவிதமாக வாழும் பெண்கள். தன் வாழும் வாழ்விற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
நான் மெத்த படித்தவளும் இல்லை. பல புராணங்களை ஆழ்ந்து படித்து விவாதித்து அலசியதுமில்லை. ஏதோ என் சிற்றறிவுக்கு புலப்பட்டதை இங்கு எழுதியுள்ளேன். இதில் ஏதேனும் தவறிருந்தால், படிக்கும் அனைவரும் மன்னிக்கவும். 🙏.
படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.
"சாப விமோசனம்" கதையை தங்களின் புதிய பார்வையில் விமரிசித்து, அகல்யைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteபுராணங்களின் கதை சொல்பவரின் ஆர்வத்தால் பல மாற்றங்கள் பெறுவது சாதாரணம். மிக்க புராணக் கதைகளையும் பெருங்கதைகளில் இடைச்செருகலாக கருதலாம் என்று நினைப்பவன் நான்.
ஆகவே அகல்யை கதை பல வடிவங்கள் பெற்றது வியப்பில்லை. இதுவே சரியான வடிவம் என்று அறுதியாக ஒன்றையும் கூற முடியாது.
"நான் படிச்ச கதை" தங்களின் ஆர்வத்தைத் தூண்டி பதிவு எழுத வைத்தது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற ஈடுபாடுகள் அபூர்வம். நன்றி, நன்றி.
Jayakumar
உண்மை. இதை நானும் இன்று உணர்ந்தேன்.
Deleteவணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரரே பதிவுக்கு தாங்கள் முதலில் வந்து கருத்தைக் கூறியமைக்கு என் மனமார்ந்த நன்றி.
Delete"சாப விமோசனம்" கதையை படித்தவுடன் அகல்யாவை பற்றிய மனக்கலக்கங்கள் வரவே அதுசம்பத்தபட்ட கதைகளை படிக்க நேர்ந்தது. அதனால்தான் இந்த பதிவு வந்தது. பொதுவாக புராணங்களை ஆராய்யும் சக்தி நமக்கில்லை என நம்புபவள் நான். ஏனென்றால் வீட்டில் பெரியவர்கள் (பாட்டி, அப்பா, அம்மா) மூலம் சிறுவயதிலேயே இவ்விதமான பக்தி, மற்றும் புராண கதைகளை கேட்டு வளர்ந்தவள். எதிர் கேள்வி கேட்டாலும் பதில் ஒன்றும் கிடைக்காது என்ற சிறு பயணத்தோடு கேட்டுள்ளோம். (அது அப்போதைய அக்காலத்திய சூழ்நிலைகள்.) மேலும் நம் அனைவருமே அதை தூண்டி துருவி எதிர் கேள்விகளை கேட்காமல் அப்படியே மனதில் பதித்துதான் வளர்ந்துள்ளோம். (அதை எபியிலும் என் பதிலாக கூறியுள்ளேன்.) ஆனாலும், அன்று எ. பியில் நம் நட்புகள் தந்த தைரியத்தில் கூடுதலாக அகல்யாவை பற்றிய கதைகள் படித்தேன். அதில் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய அகல்யா கதையையும் கேட்டறிந்தேன். அதனால்தான் என் மனதில் ஏற்பட்ட குழப்பங்களை பதிவில் தெரிவித்துள்ளேன். மற்றபடி புராண கதைகள் அப்படியே இருந்தால்தான் அதற்கும் ஒரு மதிப்பு நிலவும் எனவும் நினைக்கிறேன்.
ஆயினும் என் இன்றைய பிதற்றலுக்கும் உடனடியாக வந்து நல்லதோர் கருத்தை தந்து என்னை ஊக்கபடுத்தியதற்கு என் பணிவான நன்றி. உங்களின் இந்த ஊக்கத்தினால் நான் மேலும் பல ஐயங்களை தெளிவாக்கி கொள்ள பல கதைகளை படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்/கிடைக்கிறது. அதற்கும் உங்களுக்கு என் பணிவான நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/உண்மை. இதை நானும் இன்று உணர்ந்தேன். /
நானும் இதை இன்றுதான் உணர்ந்தேன். ஹா ஹா ஹா. அதுவும், நீங்கள், சகோதரி கீதாரெங்கன் அவர்கள் தந்த ஊக்கத்தினால்.. நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
ஒருவகையில் கமலா அக்கா... அவள் பெயர் அ கல் யை என்றிருப்பதால் அவளை கல்லாய் போகும்படி ஜபித்தாலும், பெயர்க்க காரணமாக அவளால் கல்லாக ஆகமுடியாது என்றிருந்திருக்க வேண்டும்.
ReplyDeleteதர்மம் - அதர்மம்; கல் - அகல்
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தாங்கள் கூறியது உண்மை. பெயர் காரணம் இல்லை. இவள் அழகில் எந்த குறைவும் இல்லாதவள் என்பதுதான் அந்த பெயரின் அர்த்தமென அகல்யா கதையை படிக்கும் இடம்தோறும் சொல்கிறது.
கல் - அகல். குடத்தினுள் இட்ட அந்த அகல் விளக்கின் ஒளி போல பிரகாசமாக தன் கற்பு நெறியில் ஒளி விடுபவள்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நூல் - கயிறு திரிப்பது - பெயர் திரிபு சுவாரஸ்யமாக கையாண்டிருக்கிறீர்கள். நாம் பார்த்த, எல்லோரும் பார்த்த தலைவர்கள் பற்றியோ, வேறு ஏதோ பற்றியோ இப்படி புனைந்து மாற்றி எழுத நமக்கு கைவராது. பயம். ஆட்டோ வந்து விடும். ஆனால் நாம் கண்ணால் பார்க்காத பாத்திரங்கள், கண்ணால் பார்க்காத படைப்பாளர்...
ReplyDeleteஇப்போது நமக்கு அந்த திரிபு பயம் போய்விடுகிறது, நம் கற்பனையை அதில் கலக்க தைரியம் வந்துவிடுகிறது.
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பதிவை ரசித்ததற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.
/நாம் பார்த்த, எல்லோரும் பார்த்த தலைவர்கள் பற்றியோ, வேறு ஏதோ பற்றியோ இப்படி புனைந்து மாற்றி எழுத நமக்கு கைவராது. பயம். ஆட்டோ வந்து விடும். ஆனால் நாம் கண்ணால் பார்க்காத பாத்திரங்கள், கண்ணால் பார்க்காத படைப்பாளர்.../
ஆம். சரியாக சொன்னீர்கள். அதனால்தான் புராண கதையிலும் இத்தனை திரிபுகள் உருவாகின்றன. நதி மூலம், ரிஷி மூலம் யாரரிவார்.? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அகல்யை இந்திரனை விரும்பினாளா? எங்கு இருக்கிறது இது? இதுவே இடைச்செருகலாக இருக்கலாம்.
ReplyDeleteஇப்படிதான் திரௌபதி கர்ணனை விரும்பினாள் என்றும் ஒரு கதை உண்டு.
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/அகல்யை இந்திரனை விரும்பினாளா?/
எனக்கும் இதை கேட்கும் போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. யூடியூபில் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர் எழுதிய கதையாக கதை சொல்லி ஒருவரின் மூலமாக அகல்யா கதையை கேட்டறிந்தேன். அதைதான் பதிவில் குறிப்பிட்டேன். மற்றபடி இந்தக் கதையை அவரவர் மனப்பாங்குபடி கேட்கும் போதும் படிக்கும் போதும் எழுவது குழப்பங்களே .!
நேற்று கூட அகல்யா பற்றி ஒரு கதை கேட்கும் போது அதில் பிரம்மதேவர் அழகான ஒரு பெண்ணை படைத்து, அதை கௌதம மகரிஷியிடம் தந்து அவளை திருமண பிராயம் வரை வளர்க்கச் சொல்கிறார். அப்படியே அவர் வளர்த்து தந்த பெண்ணை, இந்திரனும் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பி பிரம்ம தேவரிடம் கோரிக்கை வைக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால், கௌதமன் மகரிஷியும் தனக்கு அந்தப் பெண்ணையே திருமணம் செய்து தாருங்கள் என பிரம்மதேவரிடம் விண்ணப்பிக்கிறார். வளர்த்தவர் தந்தைக்கு சமம் அல்லவோ..? இன்னும் இப்படி கேட்டுக் கொண்டிருந்தால் இதில் எத்தனை குழப்பங்கள் வருமோ என எழுதிய என் பதிவை அவசரமாக வெளியிட்டு விட்டேன்:))) இதில் தாங்கள் அறிந்தபடியான உண்மை கதைக்கு பிறழ்வு ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"கௌதம மகரிஷி" என திருத்தி படிக்கவும்.
Delete/இப்படிதான் திரௌபதி கர்ணனை விரும்பினாள் என்றும் ஒரு கதை உண்டு./
Deleteஆம் நானும் யூடியூபில் ஒரிடத்தில் இந்த கதையை பார்த்தேன். ஆனால் படிக்கவில்லை நன்றி.
அதானே எனக்கும் ஆச்சர்யம்.. அகலிகை எப்போ இந்திரனை விரும்பினா கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது பாவம் தன் பாட்டில் இருக்க, பாதி நித்திரைத்தூக்கத்தில இந்திரன் வந்து செய்த சதியால, அந்த வயதான முனிவர் சாபத்தைக் கொடுக்க... கல்லாகிட்டா.. இதில் அகலிகை செய்த பாவம் என்ன???... இந்திரனைக் கொன்றிருக்கலாமே அந்த முனிவர்.. அது முடியாம பாவம் அகலிகையைக் கல்லாக்கிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..
Deleteஎன்னோடு படிச்ச நண்பியின் பெயர் அகலிகா... அவ குழந்தைகள் குடும்பம் என இனிதாக இருக்கிறா கொழும்பில்.
நானும் முனிவர் பற்றி ஒரு புரளியைக் கிளப்பி விட வேண்டியதுதான்... அச்சச்சோ வாணாம் பயம்ம்மாக்கிடக்கூஊஉ பிறகு ஏதும் சாபம் வந்து சேர்ந்திட்டாலும் ஹா ஹா ஹா...
"குருட்டு நியதிகள் " -
ReplyDeleteஇப்போது இதைப் படிக்கும் கௌதம முனிவர். "அப்படியா... அம்மா அகல்யே... ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேம்மா..." என்பாரோ! நாரதரே நாதராகி இருக்கிறார்!
இந்திரன் அப்படி முன்னரே அகல்யை முன்னரே அறிந்திருந்தால் அவள் நீராடும்போது வந்து யார் இவள் என்று ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டானே...!
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/இப்போது இதைப் படிக்கும் கௌதம முனிவர். "அப்படியா... அம்மா அகல்யே... ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேம்மா..." என்பாரோ/
ஹா ஹா ஹா. இருக்கலாம். பிரம்ம தேவரே நிலையை உணர்ந்து அகல்கையின் விருப்பத்திற்கு செவி சாய்த்திருப்பார். பின்பு எப்படி இந்த அகல்யை கல்லான கதை வந்திருக்கும் .?
நான் படித்த அந்தக் கதையில் அகல்யை நீராடும் போது வந்த பார்த்த இந்திரன் மனது தடுமாறுகிறார் .
அகல்யையும் சற்று உணர்ச்சிவசப்பட்டு "நாம் இப்போதே காந்தர்வ விவாகம் செய்து கொள்ளலாமா.?" என்கிறாள். இந்திரன் அது தவறு என சுட்டிக் காட்டுகிறார். சகோதரர் நெல்லைத்தமிழர் சொல்வது போல் "பல கதை கதைகள்தாம்." தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
///இந்திரன் அப்படி முன்னரே அகல்யை முன்னரே அறிந்திருந்தால் அவள் நீராடும்போது வந்து யார் இவள் என்று ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டானே...!///
Deleteஎனக்குத் தெரியும் ஸ்ரீராம், அகலிகை இந்திரனை விரும்பவில்லை.... ஹா ஹா ஹா
ரிஷிபத்தினிகள் வார்த்தைகளால் புண்பட்டு மீண்டும் மனம் காணலாகும் அகல்யை மனதுக்குள் ஒரு குறள் எழுதி இருப்பாள்..."உடல் கல்லாவதும் பின் மனம் கல்லாவதும் தத்தம் கணவரால் வந்த வினை."
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/ரிஷிபத்தினிகள் வார்த்தைகளால் புண்பட்டு மீண்டும் மனம் காணலாகும் அகல்யை மனதுக்குள் ஒரு குறள் எழுதி இருப்பாள்..."உடல் கல்லாவதும் பின் மனம் கல்லாவதும் தத்தம் கணவரால் வந்த வினை."/
ஹா ஹா ஹா. குறள் அருமை. ஆனால் கல்லானாலும் கணவன் என்ற பழமொழியும் அவள் அறிந்திருக்கிறாள். அதனால்தான் தன் கணவர் சபிப்பதையும் மெளனமாக ஏற்றுக் கொண்டாள் போலும்.
இன்று ஒரு புராண கதைப்பற்றிய விஷயங்களை நிறைய படித்து தெரிந்து கொண்டேன். அதற்கு உங்களனைவருக்கும் மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்தக் காலத்தில எனில், "என்னைக் கல்லாக்க முயற்சித்தார்" என முனிவரை ஜெயிலுக்குள் அனுப்பிப்போட்டு, அகலிகை டிவோஸ் எடுத்திட்டு அமெரிக்கால போய் செட்டில் ஆகியிருப்பா ஹா ஹா ஹா...
Deleteவணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி
/இந்தக் காலத்தில எனில், "என்னைக் கல்லாக்க முயற்சித்தார்" என முனிவரை ஜெயிலுக்குள் அனுப்பிப்போட்டு, அகலிகை டிவோஸ் எடுத்திட்டு அமெரிக்கால போய் செட்டில் ஆகியிருப்பா ஹா ஹா ஹா../
ஹா ஹா ஹா உண்மை இந்தக் காலத்தில் இரவில் தன் கணவர் சற்று குறட்டை விட்டாலும், பலமாக விடாது தும்மினாலும் கோர்ட்டுக்குப் போகும் பெண்கள் இருக்கிறார்கள்.பிறகு தானே அமெரிக்கா போவது..?
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி தாமதமாக பதில் கருத்துக்கள் தருகிறேன். அதற்கு மன்னிக்கவும். 🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
அகலிகையை கல்லாகும்படி கௌதம முனிவர் சபிக்கவில்லை. வால்மீகி ராமாயணத்தில், முனிவர், இந்த ஆசிரமத்திலேயே நீண்ட காலம் காற்றே உணவாக, சாம்பலிலேயே படுத்து, யார் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்து வசி. தசரத சக்கரவர்த்தியின் மகன் இராமன் எப்போது இந்த ஆசிரமத்தில் கால் வைக்கிறானோ அப்போது உன் சாபம் நீங்கி, இராமனை வரவேற்று அதிதியாக உபசரித்து, உன் இயற்கையான காந்தியையும் குணத்தையும் அடைவாயாக என்று சாபம் கொடுக்கிறார்.
ReplyDeleteமற்றபடி வேறு பல கதைகள், கதைகள்தாம்
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
உண்மை. கதைகள் கதைகள்தாம் ..! ஒவ்வொரு இராமாயணத்திலும் ஒவ்வொரு மாதியான கதைகள் வந்துள்ளன. . அகல்யை தன் முறை தவறி நடக்க வில்லையென்றும் , தன்னைத் தொடுவது தேவேந்திரன் எனத் தெரிந்தும் அவள் புறக்கணிக்கவில்லையெனவும், இந்திரனை நோக்கி, இந்த பழிபாவத்திலிருந்து சீக்கிரமாக என்னையும், உன்னையும் காப்பாற்றிக் கொள் எனவும் பல இராமாயணத்தில் பல விதமாக படித்தேன். எது உண்மையோ, அகல்யை கற்புக்கரசி. அதனால்தான் தன் கணவரின் கட்டளைப்படி காற்றை மட்டும் உட்கொண்டு கல்லாக இறுகிப் போன உடம்போடும், மனதோடும் சிறந்த தபஸ்வியாக இராமரை காணும் வரை அவளால் இருக்க முடிந்தது என்பது மட்டும் உண்மை. நடந்து முடிந்த புராண கதைகளை முழுதாக நம்மால் ஆராய்வதென்பது எப்போதுமே முடியாத செயல். தங்கள் மனதிற்கு எது உகந்ததோ அதை உறுதியாக்கும் எண்ணங்களுடைய எழுத்துக்களை பதிவதே அவரவர் நோக்கமாக கொண்டு எழுதியுள்ளனர். இதை ஒரு குற்றமாக கருதி சொல்லவில்லை. அவரவர் கால கட்டங்களின் சிறப்பியல்கள் அது .அதுவும் மறுக்க முடியாத ஒன்று.
தங்கள் கருத்துக்கும் நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
///
Deleteநெல்லைத் தமிழன்October 26, 2024 at 2:21 PM
அகலிகையை கல்லாகும்படி கௌதம முனிவர் சபிக்கவில்லை.//
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈ.. அப்போ அகலிகையைக் கல்லாக்கியது யார்... சாபம் நீங்குவது எப்படி என்பதெல்லாம் கரெக்ட் ஆனா கல்லாக்கியது அந்த முமுமுமுனி...முனிவர் தானே...:)
மற்றபடி எழுத்தாளர்கள் தங்கள் மனம் போன போக்கில் எல்லாக் கதையையும் எழுதுவார்கள். இதிகாசங்கள் என்ன சொல்கிறதோ அதுவே உண்மை.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/மற்றபடி எழுத்தாளர்கள் தங்கள் மனம் போன போக்கில் எல்லாக் கதையையும் எழுதுவார்கள். இதிகாசங்கள் என்ன சொல்கிறதோ அதுவே உண்மை/
ஆம். உண்மை.. இதிகாசங்கள் சொல்வது உண்மை என்று கொளல் வேண்டும்.
இன்றைய தங்களின் பிரயாணம் நன்றாக உள்ளதா? அதன் நடுவிலும் வந்து பதிவை படித்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியும் சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஆஆவ்வ்வ்வ்வ் கமலாக்காவின் போஸ்ட்டின் ஆரம்பம் படிச்சதும் நேக்கு காண்ட்ஸ் உம் ஓடல்ல லெக்ஸ்சும் ஆடல்ல... :).. கீதா வேற கமோன் கமலாக்கா என்கிறா, ஸ்ரீராம் மாத்தி யோசியுங்கோ என்கிறார்.. இது எப்போ எங்கின கட்சிக்கூட்டம் நடந்ததுவோ.. நான் வேற ஊரில இல்லையே.. கமலாக்கா அரசியலில் குதிக்கிறா போல என ஷாஆஆஆஆஆஅக் ஆகிட்டேன் மீக்கு வேர்க்குது இந்தக் குளிரிலயும்.....:)
ReplyDeleteஎதுக்கும் முழுசாப் படிச்சிட்டு வாறேன் மீக்கு அடியும் புரியுதில்ல நுனியும் பிரியுதில்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))
வணக்கம் அதிரா சகோதரி.
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
/நான் வேற ஊரில இல்லையே.. கமலாக்கா அரசியலில் குதிக்கிறா போல என ஷாஆஆஆஆஆஅக் ஆகிட்டேன் மீக்கு வேர்க்குது இந்தக் குளிரிலயும்.....:)/
ஹா ஹா ஹா. சிரித்து முடியவில்லை எனக்கு. அப்படியே நீங்கள் என்னருகிலேயே இருந்தாலும் அரசியல் மட்டுமல்ல... எதிலேயுமே என்னால் குதிக்க முடியாது. உங்கள் ஊரின் தேம்ஸில் கூட.....! ஹா ஹா ஹா.
வாங்க. வாங்க என்று வரவேற்கிறேன். அகல்யை புராணம் தங்களை மிகவும் ஈர்த்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். (பின்னே ஒரு பெண் படும் கஸ்டங்கள், சிரமங்கள், தியாகங்கள் போன்றவற்றை இன்னொரு பெண்ணால்தானே புரிந்து கொள்ள முடியும்..!) பல கருத்துக்களை தங்கள் இயல்பான முறையில் தந்து அசத்தியுள்ளீர்கள் சகோதரி. உங்களின் ஆர்வத்திற்கும், அதனால் விளைந்த ஊக்கம் நிறைந்த கருத்துக்கும் எப்போதும் என் வணக்கங்கள். நன்றிகள்.
தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகிய அலசல், அதைவிடக் கொமெண்ட்ஸ்ல நல்ல அலசல்... நான் கொஞ்சம் லேட்டாகிட்டேன்போலும்...:)
ReplyDeleteகமலாக்கா எனக்கொரு கோபம் இருக்குது, அதையும் கொஞ்சல் அலசலாமே... அதாவது சீதையைத் தீக்குளிச்ச வைத்தது சரியா தப்பா?...
டீ குடித்துவிட்டு வா என்று சொன்னதைத் தவறா தீக்குளித்துவிட்டு வா என்று புரிந்துகொண்டிருப்பாரோ?
Deleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் மீள் வருகைக்கும் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.
/டீ குடித்துவிட்டு வா என்று சொன்னதைத் தவறா தீக்குளித்துவிட்டு வா என்று புரிந்துகொண்டிருப்பாரோ?/
ஹா ஹா ஹா. அப்படியும் இருக்க முடியாதே..! அப்போதே டீ குடிப்பது என்பது வந்து விட்டதா? சகோதரி அதிரா வந்து என்ன சொல்கிறார் பார்ப்போம். நன்றி.
நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி
/கமலாக்கா எனக்கொரு கோபம் இருக்குது, அதையும் கொஞ்சல் அலசலாமே... அதாவது சீதையைத் தீக்குளிச்ச வைத்தது சரியா தப்பா?./.
உண்மைதான் சகோதரி..! எனக்குள்ளும் அந்த கோபத்தின் வெளிப்பாடுகள் உண்டு. ஆனால் ஊர் உலகத்திற்காக ஸ்ரீ ராமன் எடுத்த முடிவு. அதற்கு ஜானகியும் சம்மதித்தே அந்த முடிவை ஏற்கிறார்.
ஆயினும் இருவரும் தெய்வாம்சம் நிறைந்தவர்கள். அந்த முடிவுடன் விளைவும், நல்லதே நடக்குமென்ற நினைவும் இருவரிடமும் நிறைந்த இருந்திருக்கும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சீதை சிறைவைக்கப்பட்டிருந்த அசோகவனம் போய்ப் பார்த்தேன் இப்போ, அங்கு ஆஞ்சநேயரின் பெரீஈஈஈஈய கால் தடமும் இருக்குது, என் யூ ரியூப்பில் போடுவேன் பாருங்கோ விரைவில்.
ReplyDeleteவணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
நீங்கள் மேற்கொண்டு பயணங்கள் குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் கண்ட காட்சிகளை தங்களது சேனலில் போடுவதும் குறித்தும் மிக்க மகிழ்ச்சி. கண்டிப்பாக தங்கள் யூடியூப் சேனலுக்கு வருகிறேன். நல்ல தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//இவ்வகையான புராண கதைகள் பல விதங்களில் பலரால் அலசப்படுவது இந்த கதைகளின் சுவாரஸ்யந்தான் காரணமா? இல்லை. மனிதர்களாகிய நம் மன விகாரங்களின் வேறுபாடுகளா?//
ReplyDeleteநல்ல கேள்வியை எழுப்பி நீங்களும் பிரபஞ்சன் அவர்கள் கதை படித்து அலசி விட்டீர்கள்
அகல்யா பற்றி நீங்கள் சொன்னது போல பதிவர்
தேனம்மை https://honeylaksh.blogspot.com/2019/03/19.html அவர்கள் போட்ட பதிவை படித்து இருக்கிறேன் முன்பு அது நினைவுக்கு வந்து 19 பேர் சொன்ன கருத்துக்களை படித்தேன் அதிலிருந்து சிலவற்றை உங்கள் பார்வைக்கு அனுப்பி இருக்கிறேன், நேரம் கிடைக்கும் போது 19 பேரும் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று படித்து பாருங்கள்.
பல்வேறு கோணங்களில் அகல்யா பற்றி 19சான்றோர் கருத்து இருக்கிறது.
அதில் சிறு பெண்ணை வயதானவருக்கு திருமணம் செய்து வைத்தது தப்பு என்று கவிஞர் கம்பதாசன் கவிதை இருக்கிறது படித்து பாருங்கள்.
//என்று அதிதியாய் வந்த இந்திரனுக்கு தேறலை வழங்கியதால் ஏற்பட்ட குற்றமெனவும், முந்தைய ஆரியர் விருந்தினருக்கு மனைவியை மனமொப்பி ஈந்தது வேதமுணர்ந்தோர் அறியாரோ எனவும் அகலிகையின் வாய்மொழியாய்க் கவி படைத்துள்ளார்.//
இது போலவே 1973 ல் வெளி வந்த "அவள்" படத்தில் அகல்யா நாடகம் இருக்கும். மற்றும் கதாநாயகி இது போல துன்ப படுவாள். பின் இந்திரன் போன்று தன்னை கெடுத்தவனை சுட்டுக் கொல்வாள்.
//அரு. ராமநாதனின் அகல்யாவில் பிரம்மாவின் பேரெழில் படைப்பான அவளை சூரியனும் சந்திரனும் தாரகைகளும் அவளை முத்தமிட்டு வளர்க்கிறார்கள். ஆயினும் இந்திரனின் முத்தத்தில் வித்யாசம் காணும் அவள் அவனைக் காதலிக்கத் துவங்க சூழ்நிலையோ அவளைக் கௌதமன் மனைவி ஆக்குகிறது. இன்பத்தின் கவர்ச்சிக்கும் மனோதர்மத்தின் அலறலுக்கும் நடுவில் அவளின் உணர்வுகளை வடித்துள்ளார் இராமநாதன். ஏகபத்தினி விரதன் ஒருவன் வரும்போது அவள் புனர்ஜென்மம் அடைவாள். அதுவரை கருங்கல் சிலையாவாள் என்று சாபமிடுகிறார் கௌதமன்.//
//அப்பப்பா எவ்வளவு விதமான பார்வைகள். !!! மொத்தத்தில் ஒரு கதைக்குப் பத்தொன்பது விதமான திரைக்கதை எழுதியது போலிருக்கிறது இத்தொகுப்பு. மேலும் பல இலக்கியவாதிகளின் புதுமை எண்ணங்களையும் அறிந்து வியப்பு ஏற்பட்டது.
அநேகமாக அனைத்திலும் கம்பீரமாகவே பார்க்கப்படுகிறாள் அகலிகை. கோதமனின் தந்திரமும், இந்திரனின் சூழ்ச்சியுமே வெறுப்பாகப் பார்க்கப்படுகிறது. கைலாசபதியின் ஆய்வு நிச்சயம் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.//
பாவம் அகல்யா கதை இன்னும் முடியவில்லை இன்னும் எத்தனை பேர் அவள் கதையை எடுத்து கொண்டு விவாதம் செய்வார்களோ!
உங்கள் கருத்தை தைரியமாக எடுத்து சொன்னதற்கு பாராட்டுக்கள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
பதிவை குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டேன். நீங்கள் தந்த சுட்டியிலும் சென்று படித்து வந்தேன். சகோதரி தேனம்மை அவர்கள் எழுதிய அகல்யையை பற்றி 19 சான்றோர் கருத்துக்கள் யாவும் அடங்கிய பதிவு மிக நன்றாக இருந்தது. படித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். இன்னமும் நன்றாக மனதில் இருத்திக் கொள்ள பல தடவைகள் படிக்க வேண்டும்.
உங்களின் இந்த கருத்தை எபியிலும், நேற்றைய பதிவில் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் சுட்டி காண்பித்து சகோதரி தேனம்மை அவர்களது சுட்டியையும் தந்துள்ளார். இந்த மாதிரி பல புராண கதைகளை பற்றி பல தெரியாத, இல்லை தெரிந்து கொள்ள ஆர்வபடும் விஷயங்களை பலருக்கும் பயன்படுமாறு சுட்டிகள் தந்துதவிய தங்களுக்கும் அவருக்கும், பதிவை திறம்பட தொகுத்த சகோதரி தேனம்மை அவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.
என் மகளுக்கு இன்று பிறந்த நாள் அதனால் இன்று வெளியில் செல்லும் (கோவிலுக்கு) ஒரு வேலை இருக்கிறது. கொஞ்சம் வேலைகளினால் காலையிலேயே தங்கள் கருத்தை படித்தும் உடன் பதில் தர இயலவில்லை. சகோதரி அதிர்வின் வருகையும், கருத்துக்களும் கண்டு மிக மகிழ்வடைந்தேன். உங்களிருவருக்கும் வெளியில் சென்று வந்த பின் இன்னமும் பதில்கள் தர தாமதமாகும் என தெரிவிக்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.
Deleteவணக்கம் சகோதரி
Deleteதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
எங்கள் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியிருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி. உங்களிடம் அவளுக்கு பிறந்தநாள் என சொல்ல வேண்டும் போல் இருந்தது அதனால் கூறினேன். தங்களது அன்பான வாழ்த்துகள் அவளுக்கு நல்லதை தரட்டும். அதுதான் நான் வேண்டிக் கொள்வது. நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இவ்வகையான புராண கதைகள் பல விதங்களில் பலரால் அலசப்படுவது இந்த கதைகளின் சுவாரஸ்யந்தான் காரணமா? இல்லை. மனிதர்களாகிய நம் மன விகாரங்களின் வேறுபாடுகளா?//
ReplyDeleteமன விகாரங்களின் வேறுபாடுகள் என்று சொல்வதற்கு இல்லை கமலாக்கா. அது ஒரு சில பேரின் விதண்டாவாதங்களாக இருக்கலாம் ஆனால் பொதுவாக அவை சுவாரசியமாக இருப்பதாலும் (fantasy) நாம் கற்கும் பல விஷயங்களின் அடிப்படையிலும், நம் சுய சிந்தனைகளின் கேள்விகளின் அடிப்படையிலும் சிந்திக்கும் போது எழுபவையே
கேள்விகள் பிறக்க வேண்டும் அப்போதுதான் புதிய பரிமாணங்கள் கிடைக்கும் வெளி வரும். அப்படித்தனே அறிவியல் ஆராய்ச்சிகள் வெளி வருகின்றன!
புராணக் கதைகளை இப்படி எழுதுவது ஒவ்வொருவரின் சிந்தனையில் எழும் interpretations எனலாம்
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
/கேள்விகள் பிறக்க வேண்டும் அப்போதுதான் புதிய பரிமாணங்கள் கிடைக்கும் வெளி வரும். அப்படித்தனே அறிவியல் ஆராய்ச்சிகள் வெளி வருகின்றன!/
உண்மை. தங்கள் கருத்து சரிதான். இதோ உங்கள் மூலமாகத்தான் இந்தப் பதிவு வந்து பிறந்துள்ளது
/புராணக் கதைகளை இப்படி எழுதுவது ஒவ்வொருவரின் சிந்தனையில் எழும் interpretations எனலாம்/
உண்மை. ஆனால் மூலம் மாறும் போது ஒவ்வொரு கதைகளின் அமைப்புகள் சற்றே சிதறுகின்றன என்பது என் கருத்து.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி தங்களின் பல வேலைகளுக்கும் நடுவில், உடனே வந்து தங்கள் கருத்துக்களை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா புராணக் கதைகளை உளவியல் ரீதியாகவோ இல்லை ஆராயும் மன நிலையிலோ வாசித்து எழுதினால் அதை ஏற்கலாம் ஆனால் திரித்து எழுதுவதில் எனக்கும் உடன்பாடில்லை. அதாவது அடிப்படையையே மாற்றி எழுதுவது நீங்கள் சொல்லியிருப்பதில் முதல் கதை போன்று அதாவது அகல்யை இந்திரனை விரும்பினாள் என்பது போன்றவற்றை நோ நெவர்.
ReplyDeleteவையவன் எழுதிய நோக்கில் பார்த்தால் அதில் கௌதம முனிவர் மிகவும் உயர்நிலையில் பேசுவதைச் சொல்லியிருப்பார் அப்படிப் பார்க்கும் போது கௌதம முனிவர் சொல்லியிருப்பார் அகலியை உன் விருப்பம் அதுவாக இருந்தால் சொல்லியிருக்கலாமே என்று!!!
திரித்து எழுதுவது என்பது மிகவும் மோசம். ஏற்க முடியாத ஒன்று
கீதா
அக்கா அந்தக் காலத்திலும் பெண்கள் அவதியுற்றனர் இக்காலத்திலும் தான் அவதியுறுகின்றனர். பாருங்க இப்ப கூட எத்தனைப் பெண்களைப் பற்றி ஒன்றுமே அறியாமல் உண்மையை அறியாமல் வாய்க்கு வந்தபடி பேசி காணொளிகள் வெளியிடுகிறார்கள். என்னவோ இவங்களே நேரில் பார்த்தது போல!!!
ReplyDeleteஇப்போது நாம் பார்க்கும் மாந்தர்களைப் பற்றியே இப்படிப் பேசி காணொளிகள் மற்றும் சில டெக்னாலஜி உதவியுடன் என்னவோ உண்மை போல அதை எடிட் செய்து வெளியிடும் போது, பல பல நூற்றாண்டுகளுக்கு முன்னான நடந்தவை எனப்படும் புராணங்களைப் பற்றி இப்படி எழுதுவது ஆச்சரியமில்லைதானே!
அவங்கவங்க எழுதுவதுதான் இதில் எது உண்மை என்று தெரியும்? இடைச் செருகல்கள் நிறைய இருக்கலாம்.
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது கருத்துக்கள் உண்மைதான்
/இப்போது நாம் பார்க்கும் மாந்தர்களைப் பற்றியே இப்படிப் பேசி காணொளிகள் மற்றும் சில டெக்னாலஜி உதவியுடன் என்னவோ உண்மை போல அதை எடிட் செய்து வெளியிடும் போது, பல பல நூற்றாண்டுகளுக்கு முன்னான நடந்தவை எனப்படும் புராணங்களைப் பற்றி இப்படி எழுதுவது ஆச்சரியமில்லைதானே!/
ஆம்.. இது எப்போதோ நடந்த கதை. அதை முன்னுக்குப் பின் முரணாக அவரவர் எண்ணங்களின்படி இப்படி இடைச் செருகலாக்கி வந்துள்ளதால், எதை உண்மை என நாம் நம்புவது? ஆனாலும் அகல்யை பற்றி தவறாக நினைக்க நம் மனம் எக்காலத்திலும் கூசும் என்பது மட்டும் உண்மை. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் கருத்தையும் முன் வைத்ததற்கு பாராட்டுகள் கமலாக்கா.
ReplyDeleteகீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்களது அன்பான பாராட்டிற்கு அடித்தளம் தாங்கள் தந்த ஊக்குவிப்புதான். அதற்கு உங்களுக்கு பல முறை நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அக்கா, நீங்கள் நாம் எல்லோருமே அகல்யை யை கற்புக்கரசியாகத்தான் பார்க்கிறோம் இல்லையா அப்படிக் கற்றது....
ReplyDeleteஆனால் வால்மீகியில் அகலிகை உணர்ந்தே சம்மதிப்பதாகவும் அது இந்திரன் அகலிகையின் விருப்பத்தால் நிகழ்ந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது.//
கோமதிக்கா கொடுத்திருந்த தேனம்மை அவர்களின் தளம் சென்று வாசித்தேன்.
வால்மீகியின் வெர்ஷனை ராஜாஜியும் அவர் எழுதியதில் சொல்லியிருப்பார். நெல்லையும் இதை எபி யில் சொல்லியிருந்தார்.
//ஆனால் கம்பனோ அகலிகையை உயர்த்தி இந்திரனை இகழ்ந்து படைத்திருக்கிறார்.//
இதில் எது சரியாக இருக்கும் என்பீர்கள்? எனவே இவை interpretations அவரவர் கோணத்தில்
எனக்குக் கம்பனின் தான் மனதில் பதிந்த ஒன்று.
பாரதியின் பாஞ்சாலி சபதமும் கூட அவரது கோணத்தில் மகாபாரதத்தின் இப்பகுதிக்கதையைப் பெண்ணுரிமைக் குரலாக எழுதியிருக்கிறாரே!
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
/கோமதிக்கா கொடுத்திருந்த தேனம்மை அவர்களின் தளம் சென்று வாசித்தேன்./
நீங்களும் அந்த தளம் சென்று வாசித்து வந்ததில் மகிழ்ச்சி. அங்கும் நிறைய சான்றோர்கள் தங்கள் கருத்தை பதிந்துள்ளனர்.
/ எனவே இவை interpretations அவரவர் கோணத்தில்/
ஆம் அவரவர்களுக்கு அந்தந்த காலத்தின்படி எது சரியாக படுகிறது அது. நமக்கு நம் வீட்டுப் பெரியவர்கள் சொன்னது போல நம்புவோம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//அகலிகையின் கதை படைக்கும் ராஜாஜி அதை வான்மீகியின் கதைப்படி படைக்கிறார். வான்மீகி ராமாயணத்தின் படி அகலிகை தெரிந்தே தவறு புரிந்ததாகவும் யார் கண்ணுக்கும் படாமல் அகலிகை தவம் செய்துவந்ததாகவும், இந்திரன் பூனையாகவும் இல்லை, அவன் உடம்பெல்லாம் யோனியாகவும் பின்னர் கண்ணாகவும் ஆகவில்லை எனவும் அதேபோல் அகலிகை கல்லாகவும் இல்லை, கல்லின் மேல் ராமனின் கால்தடுக்கி அகலிகை உயிர்பெறவும் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.//
ReplyDeleteஇதை என்னவென்று சொல்ல முடியும் கமலாக்கா?
இதுவே எனக்குப் புதுசு நான் அறிந்தவை நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான்...ஒரிஜினல் இப்படி இருக்கும் போது நாம் அறிந்தவை எப்படி நமக்கு வேறாகி வந்து மனதில் பதிந்ததோ அப்படித்தான் பலரும் அவரவர் கோணத்தில் சொல்லியிருக்கின்றனர். திரிபு எது என்று சொல்ல முடியும்?
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி
/இதுவே எனக்குப் புதுசு நான் அறிந்தவை நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான்...ஒரிஜினல் இப்படி இருக்கும் போது நாம் அறிந்தவை எப்படி நமக்கு வேறாகி வந்து மனதில் பதிந்ததோ அப்படித்தான் பலரும் அவரவர் கோணத்தில் சொல்லியிருக்கின்றனர். திரிபு எது என்று சொல்ல முடியும்?/
ஆம் நாம் அறிந்தவரை நம் வீட்டு பெரியவர்களின் மூலம் கேட்டு அறிந்தவை நல்ல விஷயங்கள். அதில் தவறுதலாக வேறு திரித்து சொல்லவில்லை. புராணங்களை ஒரு பக்தியுடன் கேட்டுள்ளோம். அவரவர் மனக் கோணங்களில் பலதும் சொல்லுகையில் எது உண்மையென்ற குழப்பங்களுக்கு நாம் ஆளாகிறோம்.. இந்த பதிவின் மூலமாக ஏற்பட்ட நல்லதொரு அலசல்களில் உங்கள் ஊக்கம் மிகுந்த கருத்தால் பல சந்தேகங்கள் தெளிவடைகிறது. அதற்கு முதலில் நன்றி சகோதரி. தங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அகல்யா குறித்த தங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்தது சிறப்பு. ஒரு பதிவு இன்னுமொரு பதிவுக்கு வழிவகை செய்திருக்கிறது. சிறப்பு.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.
பதிவை ரசித்து படித்து நல்ல கருத்தை தந்திருப்பதற்கு என் மகிழ்வான நன்றி. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.