1.) குடியிருப்பு வசதிகளாக
குடியேற இருப்பிடங்கள்
குறைவற இருப்பினும்,
மக்கள் எவரும்
பாதையாகவேனும்
பாவித்து பயணிக்காத
சாலையின் வெறுமை
மனதிலும் வெறுப்பேற்றி
மடியாமல் நடை போடுகிறது.. ...
###################################
2.) சாலை வெறுமை என்ற
இந்த கண்ணாடியில்
மனதில் கலந்து விட்ட
வேதனைகளின் கனத்த
பிம்பங்கள் ஏனோ
பிரதி தினமும் இங்கு
பிழையின்றி பிரதிபலிக்கின்றன....
###################################
3.) கெளதம புத்தருக்கு
போதி மரத்தடியில்
ஞானம் கற்பித்து
தனக்கு இணையாக்கிய
இறைவன் மனமிறங்கி
இந்த சாலை சூன்யத்தில்
சற்றே அஞ்ஞானமகற்றி
அந்த ஞானமென்ற
சூட்சுமத்தை நமக்கும்
பட்சமாக கற்பித்தால்,
புத்தரின் பாதத்தில்
அவரை விரும்பியபடி
வீற்றிருக்கும் ஒரிரு
தூசி துகள்களில்,
ஒரு துகளுக்கு கண்டிப்பாக
நாமும் இணையாகலாம்.....
###################################
4.) மரங்கள் அடர்ந்திருந்த போது
மக்களுக்கு நிழலாக,
மண்ணிற்கு அரவணைப்பாக,
மலர்களுக்கு பிறப்பிடமாக,
மகிழ்வின் கீதமிசைத்து கொண்டு
தன் மனதின் இனிமையோடு
அதன் அவசர மடிவையும்
அதி விரைவிலேயே
சந்திக்காது இருந்திருக்கும்.
ஆனால், தனித்துவமான
வீடுகளின் உதயத்திற்காக,
விதி செய்யும் சதிக்காக,
மட்டற்ற மரங்களை பலி தந்தும்,
மக்களின் வேண்டுதல்கள்
பரிபூரணமாகாத அதிருப்தியிலும்
பிற பட்டுப்போன மரங்களும்
பார்த்துப் பதறாத
பரவச பார்வையிலும்.
பூத்துக் குலுங்கும் ஏனைய
மற்ற மரங்களும் மண்ணோடு
மண்ணாக இங்கு மடிந்து
மக்கிப் போயிருக்கின்றன.....
###################################
இதற்கு முன் இங்கு வந்த போது கட்டுமானங்கள் இல்லாத இந்த வெறும் இடங்களில், சாலைகளில் பறவைகளும், கால்நடைகளுமாக பறந்து / நடந்து மகிழ்ந்திருந்ததை ரசித்திருக்கிறேன். ஒரு வருட இடைவெளிக்குப் பின் நிறைய கட்டிடங்கள் இங்கு முளைத்திருந்த போதும், இந்த வெறிச்சென்ற சாலையை கண்டதும் என் கைப் பேசியில் படமெடுத்து விட்டேன். படத்தை எடுத்துப் பார்த்ததும் நாலு வரி எழுத வேண்டுமென என்னுள் உதயமான வார்த்தைகள் அந்த கட்டிடங்களின் சிமிண்ட் கற்களைப் போல சேர்ந்தெழுந்து வரிசையாக நின்று கொண்டன. படம் குறித்த கவிதையை போலான (இந்த இடத்தில் சிறப்பான வார்த்தைகளுடன் சரளமாக கவிதைகளை புனையும் சகோதரர்கள் ஸ்ரீ ராம் அவர்களும், துரைசெல்வராஜ் அவர்களும் என் ஒழுங்கற்ற வார்த்தை கோர்வைகளுக்கு மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.) வரிகள் உங்களுக்கும் ஏதோ பிடித்திருக்குமென நினைக்கிறேன். படித்து கருத்திடும் நட்புறவுகளுக்கு என் பணிவான நன்றிகள்.. 🙏.
இதை எழுதி வைத்து விட்டேனே தவிர பல மாதங்களாக வெளியிடும் எண்ணமே வரவில்லை. ஆனால் எ. பியில் சென்ற வெள்ளியன்று பகிர்ந்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கர்ணன் படப்பாடல் என் மன நிலையை மாற்றி விட்டது.
"என்னையே சரண் என்று நீ முழுமையாக நம்பி விட்டால், உன்னுடையது என இந்த உலகில் எதுவுமில்லை" என்ற கீதாசாரம் மிகுந்த அந்த பாடலில், மன்னரும் நானே மக்களும் நானே. . மரம் செடி கொடியும் நானே... சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்...துணிந்து நில் தர்மம் வாழ... என்ற வரிகளினாலும், காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க... என்று தன் கடமையைை செய்ய அர்ஜுனனுக்கு போதிக்கப்படும் இறுதி வரிகளினாலும் இந்தப் பதிவு தைரியமாக இன்று அரங்கேறுகிறது. "இன்றிருப்பார் நாளையில்லை" என்ற ஞான விளக்கங்களும் பக்க வாத்தியங்களாக உடனிருந்து இதை அரங்கேற செய்துள்ளது. எல்லாம் அவன் செயல்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம். 🙏.
