வலைத்தளம் ஆரம்பித்து எழுத (கிறுக்க)
வந்த போதே என் தமயந்தி பாகத்தையும் (ஆண்கள் சமையல் என்றால் நள பாகமாகும் போது பெண்களின் சமையலை தமயந்தி பாகம் என்று
சொல்லக் ௬டாதா..?
) அவ்வப்போது வெளியிட எண்ணம் கொண்டேன். ஆனால் அது
உண்மையாகவே “தமயந்தி பாகமாகி” விட்டால்
என்ன செய்வது என அமைதி காத்து விட்டேன். (ஏனெனில், அரச குடும்பத்தில் பிறந்து செல்வ செழிப்பில் வாழ்வின் முதல் அத்தியாயத்தை கழித்த
தமையந்தி சமையல் அறையே எவ்விடம் உள்ளது என அறியாதவளாகத்தானே இருக்க முடியும். அதன் பின்புதானே சமைப்பது..!) ஆனால் அரசனாகப்பிறந்தும், விதியின் பரிசாக
ஆய கலைகள் அறுபத்திநான்கிலே ஒன்றான சமையல் பக்குவத்தில் கைமணமாக செய்து முடிக்கும்
திறன் நளனிடம் இயல்பாகவே
வரப்பிரசாதமாக குடி கொண்டிருந்தது. நளனுக்கு நிகர் வேறு யாருமில்லை
(இன்றளவும்) என்னும் வண்ணம் “நள பாகமென்ற” அடை மொழி அந்த அரசனிடமிருந்து சுவையாக சமையல்
செய்யும் அனைவரிடமும் ஆண் பெண் பேதமின்றி ஒட்டிக்கொண்டது. ஆனால் சந்தர்ப்பவசத்தால் ஆண்கள் உணவு
தயாரிக்கும் போது பொதுவாக “இன்று நள பாகந்தான்” என்று
அலுத்துக் கொள்வது மாதிரி சொல்லிக்கொள்ளும் வழக்கம் வந்து விட்டது. உண்மையில் சுவையான பாகந்தான் “நள பாகம்”. அந்த மாதிரி சுவையான உணவு கலையில் பல சகோதரிகள் வலைத் தளத்தில் கலக்கி கொண்டிருக்க,
என் சமையல் குறிப்புக்கள் தமையந்தி பாணியில் அமைந்து விட்டால் என்ன செய்வது
என்ற தயக்கம் இது நாள்வரை கைகளை கட்டி விட்டது. இன்று ஒரு மாற்றத்திற்காக
இந்தப்பதிவில் என் சமையலையும் சற்று இனிப்பாக ஆரம்பிக்கட்டுமா.?
வேறு வழியில்லை.! சகித்துதான்
ஆகவேண்டும். விதிதான் அவ்வளவு சுலபமாக
எல்லோரையும் விட்டு விடுமா என்ன.? (உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.)
மைசூர் பாகு….
கடலை
மாவு சலித்தது இரண்டு கப்
சர்க்கரை நாலு கப் (மாவுஒன்றுக்கு
இரண்டு சர்க்கரை என்ற கணக்கில் சொல்லியுள்ளேன். இனிப்பு அதிகம்
தேவைபடுகிறவர்கள் ௯ட அரைக் கப் எடுத்துக் கொள்ளலாம்.)
நல்ல நெய் இரண்டு கப் (அவ்வளவு கொழுப்பா
உனக்கு ..?என்று என்னை கேட்பவர்கள்) அதிகம்
என நினைத்தால் அரைக் கப் குறைத்துக் கொள்ளவும். வாயில் போட்ட
மறுநிமிடம் கரைய வேண்டுமென நினைத்தால் அந்த மாதிரி கேள்வி ஏதும் கேட்காதீர்கள்.!
ஒரு வட்ட( ஓவல் ) வடிவ சற்று ஓர விளிம்பு உயரமாக உள்ளத் தட்டில் (அதன்
விளிம்பின் சுவர்களில் நன்கு படியுமாறு ) தட்டு முழுவதும் உட்பக்கம்
நெய் விட்டு பரவலாக தடவி வைத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் ! இனி மைசூரை
(ஊரை இல்லைங்க) கிண்ட போகலாமா?
கடலை மாவை ஒரளவு பச்சை வாசம் போகும் வரை சற்று நிறம் மாறும்
வரை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். அதை ஒரு
தட்டில் கொட்டிக் கொண்டு
அதே கடாயில் சர்க்கரையை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து அது மூழ்கும் வரை (ஒரு கப்) தண்ணீர் விட்டு கிளறினால் சற்று நேரத்தில் சர்க்கரை
கரைந்து கொதி வரும். அப்போது வறுத்து வைத்திருக்கும் கடலை மாவை
சிறிது சிறிதாக சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறவும். இரண்டு கலவையையும்
சேர்ந்து கை விடாது கிளறும் போது சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளற கிளற இட்லி மாவு
பதத்திற்கு கெட்டியாக வரும் போது, ஏற்கனவே நெய் தடவி வைத்திருக்கும்
தட்டில் கொட்டி சமன்படுத்தி சற்று ஆறிக் கொண்டுள்ள போதே, வில்லைகள்
செய்து வேறு ஒரு பெரிய தட்டில் அதை கவிழ்த்தால், சூடான சுவையான
மைசூர் பாகு கட்டிகள் தயார்.
இந்த மைசூர் பாகு இருக்கிறதே.! அது வாயில் விண்டு போட்டால், (முதலில் விண்டு போடும்
அளவுக்கு இலகுவாக இருக்க வேண்டும். கை விரல்களின் எலும்பை உடைத்து
விடும் அளவுக்கு இரும்பை ஒத்ததாக இருக்க ௯டாது. கிளறும் போது
விள்ளும் பதத்தை அதுவோ, இல்லை நாமோ கொஞ்சம் மறந்து விட்டாலும்
இரும்பு கட்டிகளாகும் நிலை சாதாரணமாக சொல்லிக் கொள்ளாமல் உருவாகி விடும். எனவே எச்சரிக்கை.!) வாயில் கரைய வேண்டும். கண்கள் இரண்டும் கடாயிலிருக்க கவனம் முழுதும் மைசூரில் இருக்க
வேண்டும். நான் சொல்வது நாம் செய்யும் “மைசூர் பாகில்” இருக்க வேண்டும். அதை விடுத்து சென்ற தடவை சென்று வந்த எழில் மிகும் பிருந்தாவனத்தையும்,
அருள் தரும் சாமுண்டிஸ்வரி கோவிலையும், கண் கவரும் அரண்மனை
அழகையும், இன்னும் விழிகளில் மிச்சம் மீதி இருக்கும் உண்மையான
“மைசூர்” அழகையும் அசை போட்டபடியிருந்தால்,
மைசூருக்கே சென்று கல் கொண்டு உடைத்தாலும் நாம் செய்யும் மைசூர் பாகு
உடையாது. (இப்படி ஆதியில் யாராவது செய்து பார்த்துதான் இதற்கு
இந்த நாமகரணம் உருவானதோ என்னவோ.? அது வேறு விஷயம்.)
அந்த காலத்தில் முன்பெல்லாம் வார மாத பத்திரிக்கை இதழ்களில்
தீபாவளி சிரிப்பு வெடிகள் என்றால், புது மாப்பிள்ளையும்,
இந்த மைசூர் பாகும் அனாசயமாக
இடம் பெற்று விடும்.
அந்த வகையில் ஒரு நகைச்சுவை …
தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வந்து கொண்டாடி விட்டு தன் வீட்டிற்கு திரும்பும் போது கணவன் மனைவியிடம் ௬றுகிறான்.
தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வந்து கொண்டாடி விட்டு தன் வீட்டிற்கு திரும்பும் போது கணவன் மனைவியிடம் ௬றுகிறான்.
“நான் தீபாவளிக்கு எதிர்பார்த்து வந்த மாதிரி
உங்க வீட்டிலே சீர் செனத்தி ஏதும்தான் கிடைக்கலே. விரல்லே இருக்கறதே
தெரியாத மாதிரி ஒரு மோதிரமும், ஊர் போய் சேர்றதுக்குள்ளே கிழிய
மாதிரி ட்ரெஸூம் எடுத்து கொடுத்து உங்க அப்பா தீபாவளியை ஓட்டி விட்டுட்டார்.
உங்கம்மா செஞ்ச தீபாவளி பலகாரத்துலே, அந்த மைசூர்
பாகையாவது ஒருநாலு ௬ட கேட்டு வாங்கிக்கோ.” என்று கணவன்
“அன்பாய் “மனைவியிடம் கட்டளை போடுவான்.
மனைவி “ஏனாம்! நேத்தைக்கு ௯ட ரெண்டு போட்டுக்கோங்கன்னு
அம்மா ஆசையா போட வந்தப்போ, எனக்கு ஏற்கனவே “பல் வலி” அத்தைன்னு, சொல்லி அம்மாவை
வருத்தப்பட வச்சேளே.! இப்ப ௯ட வேறே கேட்டு வாங்கனுமாக்கும்.?
என்று அழகாய் நொடிக்க,
அட! ஒரு காரணமாய்தாண்டி சொல்றேன்.! கல்யாணத்துக்கு சீரா உங்கப்பா கொடுத்த கட்டிலின் கால் ரெண்டு சரியில்லை.!
படுத்தா ஆடிண்டேயிருக்கு இப்போ உங்கம்மா செஞ்ச மைசூர் பாகை முட்டு கொடுத்தாவது ஆட்டத்தை
நிறுத்தினா மனுசன் இனியாவது
நிம்மதியா தூங்குவேனில்லையா.? என்று மேலும் கணவன் கிண்டலடிப்பான்.
இப்படியான
நகைச் சுவைகளை மனதில் நிறுத்தியபடி, வீட்டுக்கு
வந்திருக்கும் என் பெண்ணிற்காக நானும் இந்த மைசூர்பாகை செய்து (இதற்கு முன் நிறைய தடவை செய்து மைசூரூக்கு மிக அருகேயோ, இல்லை, அதையும் தாண்டியோ, ஓடிய
அதை விடாமல் பிடித்திழுத்து பெயர் சூட்டு விழா நடத்தியாயிற்று. ) வீட்டிலிருக்கும் அனைவரும் சாப்பிட்டோம். (நல்ல வேளை! விடுமுறைக்கு வந்திருந்த என் மாப்பிள்ளைக்கு
பல்வலி ஏதுமில்லை.! மைசூரும் வாயில் போட்டதும், (எங்களுருக்கு கொஞ்சம் அருகில் இருப்பவள் இவள் என்று இரக்கப்பட்டதால்
“அது” என் பெயரை காப்பாற்றி விட்டதோ என்னவோ?) நன்றாகவே கரைந்தது. மாப்பிள்ளையும் ஊருக்கு போகும் போது “பார்சல்”ஏதும் கேட்கவில்லை!
நீங்களும் இதை எடுத்துக்கொண்டு கரைகிறதா, நன்றாகயிருக்கிறதா ?என்று சொல்லுங்களேன்.
ரொம்பவும் நன்றாகவேயிருக்கிறது என்று சொல்லபவர்களுக்கு (“பல்வலி” என்று பொய்யாக
ஏதேனும் ௯றித் தப்பிக்க மட்டும் செய்யாதீர்கள் ..!) இதுமாதிரி
சமையல்களை சுவையாகச் செய்து அவ்வப்போது பரிசாகத் தருகிறேன்.
சாப்பிட்டவர்களுக்கு நன்றி.!

