Showing posts with label ஆத்மா. Show all posts
Showing posts with label ஆத்மா. Show all posts

Thursday, July 26, 2018

இயல்பு...

பிறப்பு என்பது சகஜமெனில் இறப்பும் இயல்பானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டுமே இறைவனால் நிர்ணயக்கபட்டவை.  என்றுமே அவனுடைய ஆளுமைக்கு உட்பட்டவை. எத்தனையோ விஞ்ஞான மாற்றங்கள் வந்திருப்பினும் , இவைகளில் எந்த வித மாற்றமுமில்லை. அந்தந்த நொடிப் பொழுதில் ஜனன மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

 "மரணத்தின் சோகம் தாக்கிய ஒரு வீட்டில் உறவுகள் அழுது கொண்டிருப்பதை கண்ட பட்டினத்தார் "எதற்காக இவர்கள் அழுகிறார்கள்? இறந்த ஒரு பிணத்தைச் சுற்றி , நாளை இறக்கப் போகிற பிணங்கள் இப்படி அழலாமா?  என்று கேட்டாராம்." அவரின் ஞானம் தீடீரென முற்பிறவியின் கர்ம வினையால் உதித்தது.  அந்த ஞானம் நம்முள் தோன்ற  எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டுமோ? அப்படியே எடுத்தாலும், அதற்கென ஒரு வேளையும், பொழுதும் ஆண்டவன் நமக்கு அமைத்து தர,  நாம் எத்தனை பிறவிகளில் எவ்வளவு புண்ணியங்கள் செய்ய வேண்டுமோ?

திருக்குறளில் நிலையாமை அதிகாரத்தில் அழிந்து போகும், செல்வம், பொருள் போன்றவற்றுடன் இறப்பையும் குறித்து திருவள்ளுவனார் கூறியுள்ளனவைகளில் சில...

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.


குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

விளக்கம்......   உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

ஆனால்,  எத்தனையோ விதங்களில் சான்றோர்கள் இறப்பை பற்றி கூறினும் நம்மனம் பக்குவமடைய இறைவனின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும். அது ஒன்றை உலகில் நமக்கு சாசுவதம். . 

இன்னமும் எத்தனையோ மகான்கள் இறப்பை மனதாற ஏற்றுக்கொள்ளச் சொல்லி அவர்களுடைய செய்கைகளி னாலும், உபதேசத்தினாலும், ஞான மார்க்கத்தில்  நம்மை வழி நடத்திச் செல்ல முயற்சித்திருக்கிறார்கள். மனது பக்குமடையுமாறு நிறைய புராண கதைகள் கேட்டும், படித்தும் வளர்ந்துள்ளோம்.. ஆனாலும், இறப்பினால் ஏற்படும் பிரிவை மட்டும் நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. .

ஒவ்வொரு நொடிப் பொழுதிலும், அடுத்த நொடிப் பொழுதை பற்றி கவலையுறாது, சந்தோஷத்தை தரும் பிறப்புகளும், வருத்தத்தை தரும் இறப்புகளும் உலகில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் வீட்டின் மகிழ்வுகளும், இழப்புகளும், என்றுமே முறையே சிறந்தது, கொடுமையானது  என்ற மனோபாவம் நிறைந்த சுயநல, பச்சாதாபத்தில் ஒவ்வொரு மனித மனங்களும் சுழன்று, முடிவில் அவற்றின் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை சந்திக்கின்றன.

நம் விருப்பங்களும், அதன் விளைவாய் "அவனி" டத்தில் வைக்கும் விண்ணப்பங்களும் மட்டுமே நம்முடையதன்றி, நடப்பதனைத்தும் "அவன்" செயல்....

சென்ற சனியன்று காலை என் பெரிய நாத்தனார், எங்கள் குடும்பத்தில் மூத்தவர், (ஒரு வருடமாகவே உடல்நிலை முடியாமல் இருந்தார்.) இவ்வுலகை துறந்து விட்டதாக செய்தி வர, ஏற்பட்ட மன வருத்தத்துடன் என் வலையுலக உலா பயணம் தடைபட்டது.  அவரின் நினைவுகளில், என் பதிவில் வந்த கருத்துக்களுக்கும் உடனே  பதிலளிக்க இயலவில்லை என்பதையும், (நேற்று, இன்றாகத்தான் பதில் கருத்திட முடிந்தது.) அனைத்து வலைத் தளங்களுக்கும் வந்து பதிவுகளை படித்து கருத்துக்கள் இட முடியவில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னிக்கவும்....

Thursday, January 2, 2014

ஆத்மாவின் ( ஸ்) வாசம்





என்னுடனே நீ பிறந்தும்,
என்னுடன்தான் நீ வளர்ந்தும்,
எனதுயிராய் நீ இருந்தும்,
என்றும் உனை கண்டதில்லை.
            சொந்தம் பல அடைய வைத்தாய்!
சொர்க்கமென உணர வைத்தாய்!!
பந்தம் பலவும் அமைய வைத்தாய்!
பாதையைதான் மாற்றி வைத்தாய்!
           பகட்டு வாழ்வில் பலகாலம்
பந்தாக உருண்டபின்,  படியேறி  நான்
பார்க்கையில், இந்த பயணங்கள் வீணென்று
பாங்காக, பதவிசாய், புரிய வைத்தாய்!
              நரையுடன்,  திரை விழுந்து, கை
நடுக்கம் வந்தவுடன் சொந்தமது எனை
துறந்து சோகங்களை தந்திட, அத்
துன்பங்கள் மறையுமுன், பந்தங்கள்தான்
துரத்த,  பக்குவமாயாக்கி வைத்தாய்!

             மலை போல் துயர் வந்து
மனமதனை  வாட்டி வதைத்திட
உடன் பிறந்த உன்னிடத்தில்,
உரிமையுடன் என் குறை இறக்கி,
உணர்த்தி, மனமுவக்கும் உன் மறுசொல் விரும்பி,
உனைத்தேடி நான் வந்தால்,
இளமையுடன்    நீயிருக்க,
நிலமை மாறி நானிருக்க
என்னுடனே  நீ  பிறந்தும்,
  "ஏன்? இந்த பாரபட்சம்?" என,
வெகுண்டெழுந்து  வினவ,  நான்,
வெட்கும் வண்ணம் நீ புன்னகைத்தாய்!
            “ஏன்? இந்த ஏளனம் ? எனை பார்த்து”
       என்ற என் கேள்விக்கு,
“வந்துபோகும் எனக்கெல்லாம்
வயதாகும் கவலையில்லை, எனக்கென்று ஓர்
வயது என்றைக்குமில்லை, என,
வரிந்து கட்டிக்கொண்டு வாதாட
அதரம் அசைத்து  பேச
ஆரம்பித்தாய் அந்த ஆத்மாவாகிய  …… .” நீ”…..

                 “ வட்டநிலா  பதினைந்து முறை
வான் வெளியில் வட்டமிட்டு சுற்றியபின்,
தேய்பிறையாய்  தேய்ந்த அந்த நிலா
தேகம் பெற்று வரவில்லையா?
                  சொந்த பந்தத்தை இரு சகடையாக்கி,
சுயநலமாய் பலகாலம் சோர்வில்லாமல் சுற்றிய நீ
சுகவீனமடைந்தவுடன் சுற்றிவர இயலாமல்
சொல்லிச் சொல்லி புலம்புகிறாய்.
                         பிறந்தவுடன்  என்மீது பற்றுவைத்து
             பிரியாமல், எனை பார்த்திருந்தால்,
              பார்த்த  உனை  பார்முழுதும் திரும்பி
          பார்க்கும்படி செய்திருப்பேன்.
                        எனக்கிட்ட விதிப்படியே
உன்னுடனே நான் பிறந்தேன்.
உன் ஸ்வாசம் நிற்கும் வரை,
என் ஸ்வாசம் உனதாகும்.
உன் ஸ்வாசம் நின்றவுடன்
என் வாசம் வேறாகும்.
அடுத்தடுத்து  வரும் பிறவிகளில்
ஏதேனும் ஒரு பிறவியில்,
என்னுடன் மட்டுமே நீ வாழ விரும்பினால்,
விதியிடம் ,;எங்களை ஒருபிறவி சேர்த்து வை ‘என
விண்ணப்பம் ஒன்று வேண்டுகிறேன்.
மற்றெதுவும் என்னால் ஆகாது என
மறுபேச்சுக்கு  மறுத்த….  நீ …..
மறுபடியும்  மவுனமாகி போனாய்”!

     இதழ் விரித்து  ஏளனமாய் எனை பார்த்து,
இமை திறந்து கனிவாக நீ சொன்னதை
காலத்தில் நான் கேட்டிருந்தால்,
காலனை சிறிது நாள் கட்டாயம் ஜெயித்திருப்பேன்.
               பணபோதை,  புகழ்போதை ,இரு
பேய்களாகி பல காலம் எனை சுற்ற,
பாவி நான் உனை பாராமல் பரிகசித்து,
பாராமுகமாய் இருந்து விட்டேன்.
     இனி வரும் பிறவிகளில்,
இத்தவறு செய்யாதிருக்க ,
இறைவனிடம் வேண்டிக்கொண்டு,
 இமை மூடி பிராத்தித்தேன்.