இன்று மஹாகவி பாரதியார் பிறந்த நாள், மற்றும், சர்வ தேச மலைகளின் தினம். பெரிய மலைகளைப் போல நல்ல குணங்களில் இவரும் உயர்ந்தவர் என்பதினால், மலைகளும் இவருடன் இன்று சேர்ந்து புதிதாக பிறந்த சந்தோஷத்தை இணைத்து கொண்டதோ ? "பா"க்களுக்கு பெருமை சேர்த்த அவருடன் அழகுக்கென்ற வார்த்தைக்கு மறுபெயரெடுத்த "ரதி"யும் அவர் பெயருடன் சேர இணங்கியதால்,"பாரதி" என்றானாரோ..? இல்லை,"பார்" உள்ள வரை இவரின்"பா"க்களுடன்,"ரதி" போன்ற அழகும் சேர்ந்து மிளிரும் என்பதினால் இவர் பா(ர்)ரதி என்று ஆனாரோ..? எது எவ்வாறாயினும், இந்த மஹாகவியை நம் மனமென்ற ஒன்று உள்ளவரை அந்த மனதிலிருந்து அகற்ற இயலாது.
இது சின்னதாக என் சிந்தனையில் உதித்த ஒரு கவிப்பாடல்.(?)
மஹாகவியின் மனதினிலே
மலர்ந்த கவிதை பூக்களை
மலர்சரமாக ஏற்றுக் கொள்ள
மலையும், மடுவும் கடுகளவும்
மறுத்ததில்லை.
பறவைகளும் இவரின்
பாக்களை அனுதினமும் கேட்டு
பரவசத்துடன் தானும் அவ்வாறே
பயிற்சித்து பாடி மகிழ்ந்தன.
சித்தம் மகிழ தன் கிளை பரப்பி
சிரிப்போடு, வளைந்தோடும்
சிந்து நதி மட்டும், தம்
சித்தம் களித்து அவர் ஈந்த
இச்சிறப்பான கவியை
சிறிதளவேனும் மறுக்குமா...!
இது நம் தேசமான இந்திய ஒருமைப்பாட்டை விளக்கும்/விவரிக்கும் ஒரு பாடல். பாரதியார் அவர்கள் இயற்றிய அருமையான பாடல். நடிகர் திலகத்தின் அருமையான முகபாவங்களுடன் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இன்று பாரதியாரின் பிறந்த நாள் என காலையிலேயே என் நினைவடுக்குகளின் மூலமாக தெரிந்தவுடன் என் மனதினில் அடிக்கடி உதித்து வந்த பாடல். ஏதோ என்னால் இயன்ற வண்ணம் அவசரமாக இன்று மாலைக்குப் பின்னர் தொகுத்த இப்பதிவினில், அவர் புகழ் பற்றி இன்னும் நிறைய எழுதும் அளவிற்கு நான் கற்கவில்லை. ஆதலினால் இப்பாடலை ரசித்து அவர் புகழை நினைவு கூர்வோம்.
இன்றைய நாளை நம் சகோதரிகள் கீதா சாம்பசிவம் அவர்களும், அனுராதா பிரேம்குமார் அவர்களும் எப்போதுமே மறந்ததில்லை..! வருடந்தோறும் மஹாகவியின் நினைவுகள் அவர்கள் நெஞ்சில் இந்த நாட்களில் மலர்ந்த பதிவுகளாகி விடத் தவறியதில்லை. அவர்கள் வீட்டின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களின் எண்ணங்களையும், நேரங்களையும் இன்று தனதாக்கி கொண்டதோ என்னவோ? அவர்களுக்காக, அவர்களின் சார்பாக இன்று பாரதியாரின் நினைவுகளை நாம் போற்றுவோம். அவர் கவித்துவமான மனதை வாழ்த்தி (மலைகளின் உயரத்திற்கும் மேல் ஒப்பான அவர் கவிமனதை வாழ்த்த நமக்குத் தகுதியில்லை.) வணங்குவோம். 🙏.
இம் மண்ணில் பிறந்து சிறந்து விளங்கிய மாமனிதராகிய மஹாகவிக்கும் வணக்கங்கள்.🙏. மண்ணில் உயர்ந்து நிற்கும் இந்த மாமலைகளுக்கும் வணக்கங்கள்.🙏.
இப்பதிவை ரசித்துப் படிக்கும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.

