வணக்கம் நட்புறவுகளே...
தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து விட்டது. ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ..இது மனிதர்களாகிய நமக்கு மட்டுமில்லை.... மற்ற ஜீவராசிகளுக்கும் அது ஒரளவு வளரும் வரை அன்னை தந்தையின் அக்கறை கலந்த கண்காணிப்பான பாசம் அத்தியாவசியமாகிறது.
முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து தன் இனங்களை காப்பாற்றி காக்கும் பாசமுள்ள பறவையினங்களும், குட்டிகளை சுமந்து ஈன்று பிரியத்துடன் பாலூட்டி வளர்க்கும் விலங்கினங்களுக்கும், தன் பாசத்தை அவைகள் ஒரளவு வளரும் வரை தனது வளர்ப்புகளுக்கு தரும் வகையில்தான் இறைவன் அவைகளுக்கும் சிலவற்றை உணர்ந்தறியும் பகுத்தறிவையும் அமைத்து வைத்திருக்கிறான் இதில் அயராது தன் இணையுடன் பாடுபடும் அந்த தந்தை இனங்களுக்கும் அப்படி ஒரு பாசப்பங்குகள் உண்டெனில் அவைகளுக்கும் தந்தையர் தினமென்ற ஒன்றில் ஒர் தனிச்சிறப்பு உண்டல்லவா.. ? இப்படியெல்லாம் கீழுள்ள சிட்டுக்குருவிகள் என்னை யோசிக்க வைத்தது.
இந்த சின்னஞ்சிறிய பறவைக்குத்தான் என்ன சுறுசுறுப்பு, கடமை உணர்ச்சி. காலை நேரத்தில், முந்திய இரவே பேசி வைத்து கொண்டதை போன்று வேறு எந்த நோக்கமுமின்றி, நேராக கூட்டமாக வளர்ந்திருக்கும் தாவரங்களுக்கிடையே அடையாளம் கண்டு அங்கு சென்று தன் சின்னஞ்சிறு அலகால் பறிப்பதும், (அது ஏதோ புல் வகையை சேர்ந்த மாதிரி இருக்கிறது .) மீண்டும் பறந்து வந்து கூடு கட்டும் இடத்திற்கு வந்து சேர்வதுமாக என்ன ஒரு பொறுப்புணர்ச்சி..
அதுவும் ஒரு பறவை வந்ததும், மற்றொரு பறவை அதற்கெனவே காத்திருந்த மாதிரி விருட்டென்று பறந்து அந்த புல் பறித்து வர வேகமாக பறந்து செல்கிறது. அது வந்ததும் இதுவும் அப்படியே....காத்திருந்தது போல.. ! இப்படியே தொடர்ந்து மணிக்கணக்கில்... நடுவில் சிறிதேனும் அயர்ச்சியோ. சோம்பலோ காட்டவில்லை. அதற்கு பசியே எடுத்தாலும் அதற்கு கூட நேரம் ஒதுக்காது போலிருக்கிறது என இவைகள் விடுவிடுவென எங்கோ மேல் மாடியில் கூடு கட்டும் அழகை பார்த்துக் கொண்டிருந்த நான் எண்ணி வியந்து கொண்டேன்.
"அப்பாடா.. நம் சிறு அலகிலிருந்து இது எங்காவது நழுவி விடுமோ என்ற பயம் போக்குவதற்காகவே இந்த ஜன்னல் கம்பி கிடைத்திருக்கிறது. கொஞ்சம் நேரம் இதில் அமர்ந்து விட்டு செல்லலாம். ஆண்டவா..! இதை கொண்டு போய் எனது வீட்டிற்கு பக்க பலமாக அமைக்க சேர்க்கும் வரை, இது என் அலகிலிருந்து நழுவி விடாமல் இருக்கச் செய்து விடு. என்று பிரார்த்திக்கிறதோ... " இந்த சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி.
" இவர்கள் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனாலும் எத்தனை தடவை இந்த கம்பியில் வந்து வந்து அமர்வது? இன்னும் கொஞ்ச தூரந்தானே.. ! இது எப்போதையும் விட கொஞ்சம் பளுவாகத்தான் இருக்கிறது..! கஸ்டப்படாமல் ஒரு செயலை முடிக்க இயலுமா.. ? இருந்தாலும் ஒரு எம்பில் எழுந்து பறந்து விடலாம். இதோ.. முயற்சித்தே விடுகிறேன்..!" என்கிறதோ இந்த சின்னச் சிட்டு.
" இவர்களுக்கென்ன ஜாலியாக பிற மனிதர்களின் உதவியுடன் வீடு கட்டிக் கொண்டு வெய்யில், மழை, குளிர் என்ற சீதோஷ்ண நிலை பற்றியெல்லாம், கவலையில்லாமல் உள்ளேயே சகல வசதியும் செய்து கொண்டு அவர்கள் குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். எங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு வீடு கட்ட எங்கள் இருவரைத் தவிர வேறு யாரையும் உதவிக்கு அழைக்காது நாங்களே சிரமபட்டாலும், படைத்தவனின் கருணையெனும் உதவியை நினைத்து ஆனந்தம் அடைந்தபடி, வாழ்வில் பயணித்துக் கொண்டேயிருக்கிறோம். அவ்வளவுதான்.. ! அவரவர் விதிப் பயன்களை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.. "என்ற தத்துவங்களில் சிறிது நேரம் லயித்து செலவிடுகிறதோ..? இந்த சிங்கார சின்னச்சிட்டு.
" என்னத்தான் தத்துவங்களை நான் உதிர்த்தாலும், எங்களுக்கும் சபலங்கள் உண்டு. சண்டை சச்சரவுகள் உண்டு. அதையும் மீறி இந்த அன்பு, பாசம் எங்களுக்குள்ளும் உண்டு. அதுவும் உங்களைப் போன்ற மனிதர்கள் எங்களுக்கு அடைக்கலமாய் இடம் கொடுப்பதால், உங்களிடம் நன்றியும் உண்டு. இந்த நன்றியுணர்வை எங்களுக்கு தந்த அந்த ஆண்டவனுக்கும் நன்றி. இன்னமும் கடமை முடியவில்லை வரட்டுமா? எனக்காக அவள் காத்திருப்பாள்.." என்றபடி பறந்து செல்ல தயாரானது அந்த சின்னக்குருவி.
இந்த சிட்டுக்குருவிகளை பார்த்து புகைப்படங்கள் எடுத்து வருடமாகி விட்டது. படங்களை பதித்து பதிவாக எழுததான் இத்தனை தாமதமாகி விட்டது. இதைப்பற்றி பதிவாக எழுத நினைக்கும் போதெல்லாம், எனக்கு சகோதரி "கோமதி அரசு அவர்களின்" நினைவுதான் வரும். அவர்களும் இப்படித்தான் பறவைகளைப்பற்றி ஏதாவது அபிமானமாய் பதிவுகளை எழுதிக் கொண்டேயிருப்பார் என நான் நினைக்கும் பொழுதெல்லாம் அவரும் "ஜன்னல் வழியே" என பறவைகளைப் பற்றி நிறைய பதிவுகள் எழுதிவிட்டார். "பறவைகளின் பாச மலரான" அவருக்கும் அந்தப் பறவைகளின் நன்றியோடு என் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கவிதை (அதற்கு கவிதை என்றுதான் நான் பெயர் வைத்துள்ளேன்.) அவ்வாறு இல்லையென்றால் இந்த குருவிகளும், என்னை மன்னித்து விடட்டும்.
சிட்டுக்குருவி கவிதை....
சின்னஞ்சிறு உன் தேகம் கண்டு
சிட்டுக்குருவி என ஆனாயோ..இல்லை,
சிட்டென பறக்கும் உன் திறன் கொண்டு
சிகரமாய் உன் பெயர் அதுவானதோ. ..
இன்றும் விருட்டென்று நீஅங்குமிங்கும்
பயந்தும், பாய்ந்தும் செல்லும் அழகில்
பட்டான உன் மேனியழகு கண்டு
பரவசமாகுது என் உள்ளம்.
சிறுமி நான் உனைக் கண்ட நாளதில்
"சிட்டான உன்னைப்போல் அதுவும் ஓர்
சிட்டு என்பதால், அதன் பெயர்
சிட்டுக்குருவி" என்ற என் தாயின்
சின்ன அறிமுகம்... உன்னுடனான
சிறந்த நட்பாய் விரிந்தது. உன்
சின்னஞ்சிறிய அலகால் நான் இடும்
சிறு உணவுப் பருக்கைகளை நீ
சிதறாமல் கொத்தும் அழகை
சிறிது நேரமாவது தினமும் நான்
சிந்தையொன்றி பார்த்துவந்தது என்
சிறு வயது நினைவிலிருந்து இன்னும்
சிறிதேனும் விலகவில்லை.
நடுவில் நான் உன்னைத் தேடிய
நல்லதோர் நாட்களில், நீ என்னை
நாடி வந்து பசியாற இயலாமல்,
என் பட்டிண வாசங்கள் உன்னை
என் பார்வையில் படாமல்
எங்கோ பதுக்கி வைத்திருந்தது.
கூடு கட்டி குடித்தனம் அமைக்க இந்த
கூச்சல் நகரம் உனக்கு தோதில்லை
போலுமென என் மனதை தேற்றிய
போதினிலே, காலப்பொழுதுகள்
பழுதாகி அமைந்த காரணத்தால்,
போலிகள் இல்லாத ஓர் இடம் தேடி,
"போய் வருகிறேன்"எனவும் சொல்லாது
உன்னினங்கள் கிளம்பி போய் விட்டதை
உன்னிப்பாய் கவனித்து கேட்டதில் ,
உயிர் போன வேதனை என்னுள்ளே ...
உள்ளம் துடிக்க எழுந்ததை
உளமார நீ உணர்வாயா .. ! என்
உள்ளங்கவர்ந்த சிட்டுக்குருவியே..!
ஆண்டுகள் பலவும் கடந்த பின்பு,
ஆறுதல் பெற்று நாங்கள் இன்புற
மீண்டு வந்த உன்னைக் கண்டதுமே
மற்றுமோர் பிறவி எடுத்து வந்த
மட்டற்ற மகிழ்வு இன்று எங்கள்
மனதினில் இடம் பிடித்து அமர்கிறது.
காக்கை. குருவி எங்கள் இனமென
களிப்புடன் நல் பாடல் தந்த கவி
பாரதியின் சொல் வாக்கை மீறி, இனி நீ
வேற்றிசை சென்றே வாழ்ந்திடும்
பிற வேறெந்த எண்ணங்களும்
பின்னாளில் கொள்ள வேண்டாம்.
பார் உள்ளளவும் உன் பேர் சொல்லி,
பாசமுள்ள பறவைகள் இதுவென்று
இனி வளரும் எங்கள் சந்ததிக்கும்
பிரித்துணர்த்தி காட்டிப் பழக்கும்
பேறொன்றை மட்டும், அந்த
பாரதியின் நினைவாக நீ. . , பெரும்
பரிசெனவே எங்களுக்கு தந்து விடு...!
சிறப்பு பிராத்தனைகள்....
ஏதோ எனக்கு தெரிந்த உரைநடை கவிதை என்ற பெயரில், சில பல வார்த்தைகளை வரிசையாக கோர்த்து வடித்துள்ளேன். இதில் யாரும் நெற்றிக்கண் என்ற ஒன்றை திறவாமல், அப்படியே திறந்தாலும், இதிலுள்ள குற்றங்களை மட்டும் சத்தமின்றி பொசுக்கி, குறைகளை உருவாக்கியவரை சுட்டெரிக்காமல் ,காத்தருள வேண்டுமாயும் எல்லாம் வல்ல சிவபெருமானையும் கூடவே நக்கீரரையும் மனமுருக வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
🙏. 😀😁😀😁. 🙏.