வெண்டைக்காய் பிட்லை...
இது ஒரு விதம்....
கொஞ்சம் , முத்தல் இல்லாத ரொம்பவே இளசுமில்லாத (கொஞ்சம் லேசாக குழப்புகிறேனோ.! ரொம்ப இளசாக இருந்தால் கொதிக்கும் போது உடைந்து கரைந்து உருவமில்லாது போய் விடும்.அதுதான் நடுவாந்திரமாக அமைந்தால், தன் சுயஉருவத்துடன் சாப்பிடும் போது அதன் சுவையும் தனியே தெரியும்.) வெண்டைக்காய் அரைக்கிலோ வாங்கி சுத்தமாக அலம்பி, (சுத்தமாக அலம்புகிறேன் பேர்வழியென்று தண்ணீரை அதிகமாக செலவழித்து விட வேண்டாம்.. இப்போதெல்லாம் தண்ணீர் வெண்டையை விட மிகவும் காஸ்ட்லி. ) துணியால் துடைத்துக் கொண்டு பின் பருமனாகவும் இல்லாமல், ஒரேடியாக பொடியதாகவும் வராமல் பார்த்து அரிந்து கொள்ளவும். ( "அடாடா .!! என்ன ஒரு புகழ்ச்சி .! வெண்டைக்கே "எனக்கு இவ்வளவு பில்டப்பா" என்ற நாணம் சிறிது வந்திருக்கும்.)
ஒரு குக்கரில் சாதமும், (பின்னே பிட்லை பண்ணும் போது, சாதம் வேண்டாமா?இதை சூடான சாதத்தில் நெய் விட்டோ, இல்லை ந. எண்ணெய் விட்டோ சேர்த்து சாப்பிட்டால் தானே இந்த பிட்லைக்கே ஒரு பெருமை. உடைத்த அரிசி உப்புமா, இட்லி, தோசைக்கும் இது பொருந்தி வரும்.) அதன் மேல் தட்டில் துவரம்பருப்பு கால் டம்ளரும், க. பருப்பு ஒரு கரண்டியும் சேர்த்து வைத்து வேகுமாறு ரெடி பண்ணிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது வேர்க்கடலை போட்டு கொஞ்சம் வறுத்து எடுத்து கொண்ட பின், நான்கு பருப்பும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு (து. ப, க. ப, பா. ப, உ. ப) வெந்தயம் அரை ஸ்பூன், அவரவர்களுக்கு எவ்வளவு காரமோ அந்தளவிற்கு மி. வத்தலையும் எடுத்துக் கொள்ளவும். நான் ஒரு பத்து வத்தல் எடுத்திருப்பேன். (இது அவ்வளவாக காரமில்லாத நீட்டு வத்தல்.)
ஒரு ஏழெட்டு மிளகையும் நான் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இது அவரவர் விருப்பம். விருப்பமில்லாதவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டாம். மிளகு கபத்தை நீக்க வல்லது. ஜீரண சக்தியை கொடுப்பது. மருத்துவ குணம் வாய்ந்தவைதான் நம் அஞ்சறைப் பெட்டியில் (ஐந்து + அறை +பெட்டி) அமைதியாக அமர்ந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்.
அத்தனையும் சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்தவுடன் அதே கடாயில், கறிவேப்பிலை பிரட்டி வைத்தவுடன் கொஞ்சம் துருவிய தேங்காய் லேசாக வறுத்து அதனுடன் சேர்த்து சற்று ஆற வைத்து கொள்ளவும்.
இடையில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை ஆய்ந்து சுத்தபடுத்தி நன்றாக அலம்பி வைத்துக் கொள்ளவும்.
அந்த கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, ஒரு ஸ்பூன் உ. ப போட்டு வெடித்ததும், நறுக்கிய வெண்டையை போட்டு கொஞ்சம் வதக்கிய பின் கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தை அதில் விட்டு மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
அதற்குள் வறுத்த வேர் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வறுத்த சாமான்களை போட்டு ஒரளவு நைசாக அரைத்து புளிவாசனை போன வெண்டைக்காயுடன் கலந்து பின்னர் வாசம் வரும்வரை ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
பின்பு வேர்க்கடலை பொடியை சிறிது தண்ணீருடன் கலந்து அதில் விடவும். வெந்த பருப்பையும், நன்கு மசித்து விட்ட பின் மேலும் ஐந்து நிமிடம் எல்லாமாக கலந்து கொதித்ததும், அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதையும் சேர்க்கவும். கடைசியில் பச்சையாகவே சிறிது பெருங்காய பொடி அல்லது கட்டிப் பெருங்காயம் பொடித்துப் போட்டு, சிறிது சிம்மில் வைத்து நன்கு கொதித்த வாசனை வந்ததும், பச்சையாகவே ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும். அந்த சூட்டில் தேங்காய் எண்ணெயின் வாசனை கலந்து கமகமக்கும்.
வறுத்த பருப்புகள். மி. வத்தலுடன் கறிவேப்பிலை சகிதமாக தட்டில் காத்திருக்கின்றன.
எண்ணெய்யில் கடுகுடன் வதங்கும் வெண்டைகாய்கள் தன்னுடன் இணையும், புளி ஜலத்திற்காக காத்திருக்கின்றன.
வென்னீரில், ஊற வைத்த புளி, புளிகரைசலாக மாற காத்திருக்கின்றன.
சுத்தப்படுத்தி, அரிந்து வைக்கப்பட்டிருக்கும் கொத்தமல்லி தழைகள் "நமது முறை எப்போதோ" என்ற சிந்தனையில் காத்திருக்கின்றன.
புளிஜலத்தில் மஞ்சள்தூள் உப்புடன் கொதித்த கொண்டிருக்கும் காய்கள் மேற்கொண்டு சொந்தம் கொண்டாட வரும் அரைத்த மசாலா விழுதுக்காக காத்திருக்கின்றன.
வறுபட்ட வேதனையில் காத்திருக்கும் பருப்பு வகைகளுக்கு துணையாக நானும் வந்து விட்டேன் என்ற ஆறுதல் மொழிகள் பேசியபடி தேங்காய் துருவலும் காத்திருக்கின்றன.
வறுத்த வேர்கடலைகள் முன்னுரிமை பெற்ற சந்தோஷத்தில் மிக்ஸியில் காத்திருக்கின்றன.
முதலிலேயே "நீ குளித்து முடித்து புகழ் மாலை சூடி அலங்கரித்து வரும் முன்பிலிருந்தே நான் வெந்து, நொந்து அமர்ந்திருக்கிறேன் ." என்று வெண்டைகாய்களுடன் மானசீகமாக பேசியவாறு, சற்று கடுப்புடன் வெந்த பருப்புகள் காத்திருக்கின்றன.
" அதை இதை என சேர்த்து என்னை முழுமையாக்கி கொண்டிருக்கிறார்கள். இன்னமும் என்ன மீதமிருக்கிறதோ தெரியவில்லை.! என யோசித்தபடி கடாயில் கூட்டு தயாரிப்பான வெண்டை குழுமம் காத்திருக்கின்றன.
ஒரு வழியாக எல்லா பொருட்கள் சேர்ந்து ஒரு பெயர் கிடைத்த மகிழ்விலிருக்கும் "வெண்டைக்காய் கூட்டு/பிட்லை/" சந்தேகத்திற்கிடமின்றி நாம் சாப்பிட காத்திருக்கின்றன.
இதனை இந்த முறையில், இல்லை, வேறு விதமான முறையிலும் அனைவரும் செய்து ருசித்திருப்பீர்கள். எனினும் இந்த பக்குவம் உங்களுகெல்லாம் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்ந்து விட்டு, வரும் கருத்துகளுக்காக நானும் காத்திருக்கிறேன். நன்றி... 🙏...









