Friday, August 3, 2018

பயணித்த காதல்....

சகோதரர் கில்லர்ஜி அவர்கள் ஆயிரம் அர்த்தங்கள் என்ற பதிவில், மாற்றுத் திறனாளிகளின் உன்னத குணங்களைப் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும், அவர்களின் தன்னம்பிக்கை குறித்து நான் எழுதி வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் அதை உடனே பதிவிட்டு விட்டேன்.

நினைவூட்டியமைக்கு, 
நன்றி சகோதரரே..... 

பயணித்த காதல்..... 

நீ பயணித்த பேருந்தில்
நீண்ட நாட்களாக நானும் பயணித்ததில், 
            அமர்ந்து வர 
இருக்கைகள் இல்லாத காரணத்தால்,
இருவரும் பரிச்சியமானோம்!
பரிச்சியத்தின் வேர்களை
பார்வை  என்ற உரமிட்டு
"பார்த்து பார்த்து" பேணிய உன்
பாசத் தொல்லை பொறுக்காமல்,
மாறா என் உள்ளத்தை முற்றிலும்
மாற்றிக்  கொண்டு மறுத்தளிக்காது

பரிச்சியத்தின் பாசப்பிணைப்பை
மொழிகளில் அல்லாது வெறும்
விழி வழி பரிமாறிய என்னைப் பற்றிய
விபரங்கள் அறிய நீ அழைத்த
விலாசத்திற்கு ஓடி வந்தேன்... என்
விதி அங்கு தான் விளையாடியது.

பார்வையால் மட்டுமே பேசமுடிந்த என்
பரிதாபத்தை உணர்ந்த உன் 
பாசத்தில் சற்று விரிசல் விழுந்ததை 
பாவை நான் அன்று உணரவில்லை.

இதோ... இன்றும் உனக்காக
அதே பேருந்தில் பயணிக்கிறேன்
ஆனால் உன் வருகை தான் ஏனோ..  
அரிதிலும் அரிதாகி விட்டது.

இன்று அரிதாய் அமர கிடைத்த
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்ததும்
என் விழிகள் கண்டது உன் உருவை...
எங்கு போனாய்....என்னவனே.. என
கண்ணின் மொழியில் கேட்பதற்கு முன்
வழித்தடம் மாறிய வேறொரு பேருந்தில்
மற்றொரு மங்கையின் தோள் சாய்த்து
மயக்கத்தின் போதையில்  நீ மிதந்தாய்...

அவளின் இரு அதரங்கள் சப்தித்த
அசைவுகளில் அமிர்தமாய் இடை வரும்
ஒலி கற்றையின் ஓசையின் பால்... நீ
ஒடுங்கி கிடந்த கோலம் கண்டு
என் சப்தநாடியும் ஒடுங்கி போனது.

உன் உள்ளத்தின் உதாசீனத்தை
உணர்ந்த என் ஊமை விழிகள்
உணர்ச்சிகளை கட்டுபடுத்த இயலாது
உடைப்பெடுத்துக் கொண்டது.

மௌன மொழிகளின் மேன்மையை
உணராத, நீ... மன்னிக்கத் தகாதவன்.
பாசமொழிகளை பயன்படுத்தி நேசம்
பரிமாறி, வஞ்சித்த உன்னை அந்த
பாசமே என்றும் மன்னிக்காது.

இழிவான உன் செய்கையால்
இடிந்துபோன என் உள்ளத்தை
இயல்பான நிலைக்குக் கொண்டுவர
இறுகிய என் மனதில் பயணித்த வரிகள்..
                           
                                    இதோ....
"நீயோ.. மாற்றுத்திறனாளி !
அவனோ ஏமாற்றுவதில் திறனாளி !
தீயில் விழுந்தும் கருகாமலர் நீ !
திறமையுடன் திசை திரும்பும் 
தீயினும் கடுமையான தீ அ(ய)வன்..

இனி உன் வாழ்வு வசந்தமாகும்
வழியில் சந்தித்த அவன் வரவினால்.. 
விதி உனக்கு சாதகத்தை தந்ததன்றி,
பாதகத்தை ஈன்று தந்து பாரினில்,
பறைசாற்றிக் கொள்ளவில்லை...
மனதை மாற்றிக்கொள் ! மனம் மகிழ,
மகாராணியாக வாழ்வாய். "
                              இப்போது

மன தைரியம் கொடுத்த 
மாற்று வழி" தன்"னம்பிக்கையில்
நீ இல்லா பேருந்தில், உன்
நினைவுகளை மறக்கடித்து
நிம்மதியாக பயணிக்கிறேன்...

23 comments:

  1. இழப்பின், ஏமாற்றத்தின் வலியை கவிதை வழி மொழிந்திட்ட பகிர்வு அருமை சகோ.

    எனது பதிவு தங்களுக்கு நினைவுகளை மீட்டி விட்டதில் எமக்கும் பெருமையே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வந்து கருத்துக்கள் தந்திருப்பதற்கும், பாராட்டுதல்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      நாம் சகோதரத்துவத்துடன் ஒருவரையருவர் பெருமைப்படுத்திக் கொள்ளுதல் மகிழ்ச்சிக்குரிய விஷயந்தானே சகோ. நான் எழுதியதை சற்று திருத்தி வெளியிட உங்கள் பதிவை பார்த்த பின்தான் தோன்றியது. உண்மையில் உங்களுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. குட்மார்னிங் கமலா சிஸ்... கவிதை மிக அருமையாய் வருகிறது உங்களுக்கு. உணர்வுகள் வார்த்தைகளில் அருமையாய் விழுந்திருக்கின்றன. நிறைய வரிகள் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      வரிகளை ரசித்து பாராட்டியமைக்கு மிகவும் பணிவான நன்றிகள். உங்களைப் போன்றோரின் ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்துக்களை சீர்படுத்தும் என நம்புகிறேன். தொடர்ந்து தங்களனைவரின் ஆதரவு கருத்துக்கள் கிடைக்க வேண்டும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கதைகள் மட்டுமில்லாமல் கவிதைகளிலும் வெளுத்து வாங்கறீங்க! நல்ல கற்பனை வளம். அருமையான கருத்துடன் கூடிய கவிதை. மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும், ரசித்து பாராட்டியமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      எல்லாம் உங்களிடமிருந்து கற்றுக் கொண்டவைதான் சகோதரி . தங்களுடைய பாராட்டுகளும், கருத்துக்களும் என்னை மென் மேலும் எழுத தூண்டுகின்றன. என் எழுத்தை செம்மையாக்குவதற்கு உதவும் தங்களுக்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மௌன மொழிகளின் மேன்மையை
    உணராத, நீ.//

    அருமை.

    //மன தைரியம் கொடுத்த
    மாற்று வழி" தன்"னம்பிக்கையில்
    நீ இல்லா பேருந்தில், உன்
    நினைவுகளை மறக்கடித்து
    நிம்மதியாக பயணிக்கிறேன்...//

    அதுதான் வேண்டும், மனதைரியம், மனவலிமை, தன்னம்பிக்கை பெண்ணே நீ வாழ்க!

    வாழ்த்துக்கள் கமலா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும். வாழ்த்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      மேற்கோள்கள் காட்டி கவிதையை ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.
      தங்கள் ஊக்கமிகு கருத்துரைகள் என்னை மென்மேலும் எழுத வைக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஊக்கமிகு கருத்துக்கள் தர வேண்டுகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      தங்களின் ஊக்கப்படுத்தும் கருத்துரைகள் மிகவும் மகிழ்வாக உள்ளது. தங்கள் கருத்துரைகள் என் எழுத்தை வளமாகும் என நம்புகிறேன். பாராட்டியமைக்கு பணிவான நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. ஆகா..

    பதிவில் இருந்து பதிவு...

    நன்றாக இருக்கின்றது... மேலும் மேலும் எழுதுக..

    நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /பதிவில் இருந்து பதிவு...

      நன்றாக இருக்கின்றது... மேலும் மேலும் எழுதுக../

      ஆம் பதிவினால் வந்த பதிவு.
      மேலும் மேலும் எழுத வாழ்த்துகள் தந்த தங்களுக்கு என் பணிவான நன்றிகள். தங்களின் ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்தை வளமாக்குமென நம்புகிறேன்.
      மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. உணர்வு பூர்வமான கவிதை வரிகள்....

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் என் தளம் வந்து கவிதையை ரசித்துப் பாராட்டியது கண்டு மிகவும் மகிழ்வடைகிறேன். தங்களின் ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்தை வளமாக்குமென நம்புகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. பார்வையால் மட்டுமே பேசமுடிந்த என்
    பரிதாபத்தை உணர்ந்த உன்
    பாசத்தில் சற்று விரிசல் விழுந்ததை
    பாவை நான் அன்று உணரவில்லை.//

    அசத்துறீங்க... கவிதை மொழியில்....அழகு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தங்கள் கருத்துரைகள் என் எழுத்தை மேன்மை யாக்குமென நம்புகிறேன். எல்லாம் உங்களைப்போன்ற பதிவர்களிடமிருந்து கற்றதுதான் சகோதரி. எனினும் பாராட்டியமைக்கு பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்துக்கள் என் எழுத்தை செம்மையாக்குகின்றன. பாராட்டுகளுக்கும், தொடர்ந்து வந்து கருத்துக்கள் கூறி என்னை உற்சாகப்படுத்துவதற்கும் என் பணிவான நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. வணக்கம்

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    விபரமறிந்தேன். மகிழ்ச்சி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. துளசிதரன்: சகோதரி கமலா ரொம்ப அருமையாக எழுதியிருக்கின்றீர்கள். கவிதை என்பது எனக்கு எட்டாக்கனி. வரவே வராது. ரசித்தேன் தங்கள் கவிதையை. உங்கள் தமிழும் அழகாக இருக்கிறது.

    கீதா: கமலாக்கா அம்மாடியோவ்....கவிதை, கதை, கட்டுரை, ரெசிப்பினு அதகளம் பண்ணுறீங்க சிலம்பு சுழற்றி ஆடுறீங்க...செம கற்பனை வளம். கண்டிப்பாக உங்களுக்கு இங்கு கருத்துகள் எல்லாம் வாசிக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும் இல்லையா அக்கா. அதுவும் இந்த வயதில் இப்படி பாராட்டுகள் கேட்கும் போது கண்டிப்பாக மிக மிக மகிழ்ச்சியும் இன்னும் ஊக்கமும் அளிக்கும். அதுவும் நீங்கள் கல்லூரிக்காலம் முன்பிருந்தே எழுதியதை எல்லாம் இங்கு தரும் போது என்ன அழகா எழுதியிருக்காங்கனு எனக்குத் தோன்றும். அப்போது பல காரணங்களால் உங்களால் உங்கள் திறமைகளை வெளிக் கொணர இயலாமல் போயிருக்கலாம். (ஒரு வேளை நீங்கள் எழுதியிருக்கின்றீர்களோ பத்திரிகையில், மங்கையர்மலரில்? எனக்குத் தெரியாமல் போயிருக்கலாம்... ஆனால் இப்போது அத்தனையும் இங்கு வரும் போது உங்களுக்கு ரொம்பவே மனம் மகிழ்வுறும் இல்லையா? அக்கா? எனக்கு அப்படித்தான் தோண்றுகிறது அதனால்தான் உங்களுக்கும் அப்படி இருக்கலாம்னு தோன்றியது.

    இன்னும் உங்கள் திறமைகள் அத்தனையும் வெளிக் கொணருங்கள் அக்கா.
    கவிதை அருமை அருமை. வரிகளை மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      தாங்கள் நலமா? புயல், மழை, வெள்ளம் என்ற பேரிடர்களுக்குப் பின் என் தளத்தில் தங்கள் வருகை கண்டு மிகுந்த மன மகிழ்ச்சியடைகிறேன். என்ன மழை.. வந்தாலும் கஸ்டம்.. வராவிடின் மிக கஸ்டம் என்றாகி விட்டது. எல்லாம் காலத்தின் மாறுதல்கள்தான்.. வேறு என்ன சொல்வது?

      தங்களின் கருத்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நான் உண்மையிலேயே மிகவும் மன மகிழ்ச்சியடைகிறேன்.
      17 வயதில் எழுதிய கதைகளுக்கு இப்போது அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து ஒரு அங்கிகாரம் கிடைத்து அதை வலைத்தளத்து உறவுகள் படித்து ரசித்து பாராட்டும் போது என் கண்களில் உண்மையிலேயே ஆனந்தத்தில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கின்றன. எதற்கும் ஒரு காலம் வர வேண்டுமென்பார்கள்.இந்த பொன்னான காலம் (தங்கள் அனைவரின் உள்ளங்களும் ஒரு சேர பாராட்டி வாழ்த்தும் காலம்) வரும் எனபதற்காகத்தான் கடவுள் என் உடலில் உயிர்தனை ஒட்ட வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறான் போலும்.. நன்றி இறைவா...

      தங்களின் ஊகங்கள் சரிதான் சகோதரி. என் மனம் மகிழ்வை தங்கள் மனக்கண் மூலம் கண்டுணர்கிறீர்கள். தங்கள் ஆசிகள் இன்னமும் என் உணர்வு உள்ளவரை என்னை எழுத வைக்கும் என நம்புகிறேன்.

      கவிதை அருமை என்ற பாராட்டுதலுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள்.இனியும் என்னை தொடர்ந்து ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete