Saturday, March 10, 2018

புடலங்காய் பொரிச்ச குழம்பு .......

புடலங்காய்  பெரியதாக ஒன்று. நன்றாக அலம்பி விட்டு பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அரை கிளாஸ் துவரம்பருப்பை ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 

கடலை பருப்பு ஒரு ஸ்பூன், துவரம் பருப்பு ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், கொத்தமல்லிவிரை நாலு ஸ்பூன் அரை ஸ்பூன் மிளகு அரை ஸ்பூன் சீரகம் மிளகாய்வத்தல் ஆறு, (காரம் அவரவர்  ருசியை  பொறுத்து  வத்தல் கூடக்குறைய வைத்துக்கொள்ளவும்.) ஒரு சின்ன மூடி தேங்காய் துருவல், சிறிது கறிவேப்பிலை இவையெல்லாம் எடுத்துக்கொள்ளவும். 

ஒரு வாணலியில்  ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, ( கொஞ்சம் தாளிப்புக்கு ஏற்றாற்போல்) போட்டு தாளித்த பின் புடலங்காய் நறுக்கியதை  போட்டு நாலு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவு‌ம்.   பாதி கொதித்தப்பின்  ஒரிரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து தேவையான உப்பும் கலந்து கொதிக்க விடவும். (சில புடலங்காய் முதலிலேயே மஞ்சள் உப்பு சேர்த்தால் வேக மாட்டேனென்று பிடிவாதம் செய்யும்.) 

கொதித்துக் கொண்டிருக்கும் புடலங்காய்.........




வேறு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் குறிப்பிட்டுள்ள மசாலா சாமான்களை வறுத்து எடுத்துக் கொண்டு அதிலேயே தேங்காய் துருவலையும் கறிவேப்பிலையையும் லேசாக வறுத்து வைத்துக் கொண்டு சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். புடலங்காய் நன்கு வெந்ததும் அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கும் போது குக்கரில் வேக வைத்து இருக்கும் பருப்பையும் சேர்த்து கொதித்ததும்  அரிசி மாவு கரைசலை சேர்த்து கொஞ்சம்  பெருங்காயத்தூள் போட்டு மீண்டும் ஒரு கொதி வந்ததும் ஒரு ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.  
சுவையான புடலங்காய் குழம்பு ரெடி. இதை சூடான சாதத்தில்  நெய் விட்டு சாப்பிட இதற்கு சுட்ட அப்பளம் தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும். இட்லி தோசை போனறவற்றிக்கும் தொட்டு கொள்ளலாம்..



வறுபடும் சாமான்கள்.....




 

துருவிய தேங்காய்......  


வறுத்த பின் தேங்காய் துறுவல் ....,



அரைத்த விழுது...... 

வேக வைத்த துவரம் பருப்பு....... 


கரைத்து வைத்துள்ள அரிசிமாவு......



அத்தனையும் சேர்ந்து மொத்த வடிவெடுத்த புடலங்காய் பொரிச்ச குழம்பு...... 



இதுவும் அதேதான். ஒவ்வொன்றாக சேர்த்து கொதிக்க கொதிக்க வைத்தவுடன் கோபத்தில் கொதித்துக் கொண்டிருப்பது.



சுட்ட அப்பளம்......

நான் ரெடி! நீங்க சாப்பிட ரெடியா? என்று சுட்ட வலியில் கேட்பதற்குள் சாப்பிட வரலாமே!





19 comments:

  1. ஸூப்பர்... ஸூப்பர்... அழகிய படங்களுடன் சாப்பிடத் தூண்ட வைக்கிறது. தேங்காய் சற்றே அதிகமோ என்று என்ன வைப்பது படம் க்ளோசப்பில் எடுக்கப் பட்டதாயிருக்கலாமோ!! அருமை. எங்கள் திங்களுக்கும் நீங்களும் ரெசிப்பிக்கள் அனுப்பலாமே... கதைகளும். என் மெயில் ஐடி தெரியும்தானே?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //தேங்காய் சற்றே அதிகமோ என்று என்ன வைப்பது படம் க்ளோசப்பில் எடுக்கப் பட்டதாயிருக்கலாமோ!!/

      தேங்காய் அதிகமாக உபயோகப்படுத்துகிறேன் என வீட்டிலுள்ளவர்கள் எப்போதிலிருந்தே புகார் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.ஆனால் முனபிருந்ததை விட இப்போது குறைத்துள்ளேன்.தாங்கள் கூறியபடி க்ளோசப்பில் எடுத்திருப்பதால் அப்படி காண்பிக்கிறது எனநினைக்கிறேன்.

      /எங்கள் திங்களுக்கும் நீங்களும் ரெசிப்பிக்கள் அனுப்பலாமே... கதைகளும். என் மெயில் ஐடி தெரியும்தானே?/

      கண்டிப்பாக நல்லதொரு ரெசிப்பி எழுதி அனுப்புகிறேன் என் எண்ணமும் அதுவேதான். நானே உங்களிடம் அனுமதி கேட்கலாமா என தயங்கி கொண்டேயிருந்தேன். தாங்களே அனுப்பவும் என்றமைக்கு மிக மிக நன்றிகள்.
      இன்றைய பதிவின் பாராட்டுதலுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
    2. இதற்கெல்லாம் அனுமதி கேட்பார்களா என்ன!! கதைகளும் அனுப்பலாம். என் மெயில் ஐடி உங்களிடம் இருக்கிறது என்று நம்புகிறேன்.

      Delete
    3. தங்கள் அனுமதியுடன்தான் கதைகளும், சமையல் சார்ந்த ரெசிப்பிகளும் பதிவாக்கப் படுகிறதோ என நினைத்தேன். இனி தங்கள் மெயில் ஐடிக்கு அனுப்புகிறேன். என் எழுத்துக்களை ஊக்கப் படுத்துவதற்கு மிக்க நன்றி.

      Delete
    4. ஹா..... ஹா... ஹா.. என் அனுமதியுடன், நான்தான் வெளியிடுகிறேன். அதனால்தான் என் மெயில் ஐடிக்கு அனுப்பச் சொல்கிறேன்.

      Delete
    5. அட! ஸ்ரீராம் இன்றுதான் இவர்களின் தளம் வந்ததும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் ரெசிப்பியும், கதையும் வாங்கிப் போடலாமே என்று...நீங்களே கேட்டாச்சு....சகோதரியும் ஓகே சொல்லியாச்சு...இனி என்ன கலக்கல்தான்!! ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  2. புகைப்படங்களே ஆசையை தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் புகைப்படங்களை பாராட்டியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. படங்களுடன் அருமையான வழிகாட்டல்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் பாராட்டுடன், கூடிய கருத்துப் பகிர்வுக்கும என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.

      மிக்க நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. நாங்கள் பொரிச்ச குழம்புக்கு பாசிப் பருப்புதான் சேர்ப்போம். நீங்கள் செய்திருப்பது பிட்லே ஸ்டைலில் உள்ளது. அரிசி மாவு கரைத்து விடுவதே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நானும் பொரிச்ச குழம்புக்கு பாசிப்பருப்பு சேர்த்துதான் செய்வேன் சற்று வித்தியாசத்திற்காக துவரம் பருப்பு சேர்த்தேன். புடலங்காயுடன, கத்திரிக்காய், அவரை, சேனை முருங்கைகாய் என அனைத்தும் சேர்த்து இந்த பொரிச்ச குழம்பு செய்தால் ருசி அதிகம்.

      பிட்லேக்கு துவரம்பருப்புடன் கொஞ்சம் கடலைபருப்பையும் வேக வைத்துக்கொள்வேன். சிலருக்கு கடலைப்பருப்பு ஒத்துக்கொள்வதில்லை.

      அரிசி மாவு கூட்டு வகைகளுக்கு கடைசியில் சேர்த்தால் ஒ்ன்று சேர்ந்து இருக்கும். என் அம்மா பாணி.. இன்னமும் தொடர்கிறேன்.

      மீள்வருகை தந்து கருத்துக்கள் இட்டிருப்பதற்கு மிகவும் நன்றிகள்.

      Delete
  5. அருமையான பொரிச்ச குழம்பு.
    செய்முறை விளக்க படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      புடலங்காய் பொரிச்ச குழம்பை ரசித்து ருசித்து புசித்ததற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  7. கிட்டத்த பிட்லை போல இருக்கே!!! தேங்காய் வறுத்துதான் பிட்லையில் சேர்ப்பது இல்லையா...அதான்..

    சூப்பர்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பிட்லைக்கும் அப்படிதான். ஆனால் இதற்கும் வறுத்து அரைத்து சேர்க்கலாம். இன்னமும் அவரை முருங்கை கத்திரி போன்ற காய்களும் உடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

      பாராட்டியமைக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete