Sunday, September 21, 2014

“என்னையும்” தேடி வந்த விருது…



டந்த ஒரு வார காலமாக, சற்று உடல்நிலை குறைவின் காரணமாக வலைப்பக்கம் வரவில்லை..! இன்றுதான் என் வலைப்பூ பக்கம் வந்தபோது புதிதாக வந்த தகவல் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சகோதரர் கில்லர்ஜி ஏதோ விருது ஒன்றை எனக்கு அளித்திருப்பதாக ௬றிச் சென்றிருந்ததைக்கண்டு ஒன்றும் விளங்காமல், என்ன விஷயம்.! இது? என்று சிறிது நேரம் புலப்படாமல், முழித்து விட்டு பின் அவர் வலைப்பூவிலும் சென்று பார்வையிட்டு படித்த பின்தான், அனைத்தையும் புரிந்து கொண்டேன். (நான் எழுத்துலகத்திற்கு புதிதாகையால், உடன் விளங்கும் திறன் சற்று (நிறையவே) கம்மி என நினைக்கிறேன்.)
      
சில மாதங்களுக்கு முன்பு பதிவுலகில் சுற்றி வந்து அனைவரின் புகழ் பரப்பிய தொடர் பதிவு மாதிரி, இந்த தொடர் விருதும், புதுமுக எழுத்தாளர்களை பதிவுலகத்திற்கு அடையாளம் காண்பிக்கும் என்ற நல்ல மனதோடு இதை ஆரம்பித்து வைத்த நல்ல உள்ளங்களுக்கு, என் பணிவான வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!
          
எழுத வேண்டும், எல்லா எழுத்தாளர்கள் மாதிரி, கொடி கட்டி பறக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே மிகவும் ஆசை.! (ஒரு கனவு) ஆனால், நேரம், காலம், சூழல், என்று எதுவுமே ஒத்து வரவில்லை.!  நாம் நினைப்பதெல்லாம், அனைத்துமே நடந்து விடுமா என்ன..? எதை நமக்கு இறைவன் அளிக்கிறானோ..! அதை பெற்றுக்கொண்டு நகர்வதுதான் நமக்கழகு..! என்ற மனதையும் இறைவன் ௬டவே கொடுத்து விட்டமையால், காலங்களும், வயதும் மிகவே கரைய, கடமை என்பது ஒன்றே கண்ணுக்கு தெரிய, பின் நிதானித்து சற்று பின் நோக்கி பார்க்கும் போது வாழ்நாளில் “பாதி..?” சொல்லாமல் கொள்ளாமல் ஒடி விட்டது.! பின்னர் கனவே ஆகி விட்ட எழுதும் ஆசையை, என் வாரிசுகளின் (மகள், மகன்) ஊக்குவிப்பால், நிஜ உலகிற்கு அழைத்து வந்து, எழுத்துலகை தொட்டதும், “னவு பலிக்குமா..?” என்ற நப்பாசையுடன், “னவையும்” சேர்த்துக்கொண்டு, வலைப்பூவில், (உலாவி) பயணித்து வருகிறேன்.!
  
இங்கு (வலையுலகில்) அனைத்து எழுத்தாளர்களும், மிகச்சிறப்பாக. மிக நேர்த்தியாக, ஒவ்வொரு பதிவிலும் அருமையான விஷயங்களாக பதிந்து கொண்டிருக்க, ஏதோ, இந்தளவுக்கு எனக்கு எழுத வாய்ப்பு கிடைத்ததே..! என்ற சிறு ஆனந்தத்துடன், (ஒரு சிறு குழந்தையின் குறுநடை போல்) நடை பழகி கொண்டிருந்த எனக்கு இன்று ஒரு சிறந்த விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..! இதை எனக்கு அளித்த சகோதரர் திரு. கில்லர்ஜிக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! நட்புக்கு இலக்கணமாய், நல்ல சிந்தனைகளும், எண்ணங்களும் நிறைந்தவராய், பல பயனுள்ள பதிவுகளை, எழுதி வரும் சகோதரர் கில்லர்ஜி, அவருக்கு கிடைத்த இந்த விருதை, வலைத்தள உறவுகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று மனதாற விரும்பி, அதில் என்னையும் ஒரு பொருட்டாக அங்கீகரித்து, எனக்கும் பகிர்ந்தளித்த, அவரின் பெருந்தன்மைக்கு, மீண்டும் பணிவுடன் நன்றி ௬றிக் கொள்கிறேன்.
    
இது என் எழுத்துக்கு முதன் முதலில் கிடைத்த பட்டமாகையால், ஆச்சரியம் கலந்த பெரும் ஆனந்தமடைகிறேன்.! இந்த விருதை பெறும் தகுதி எனக்கிருக்கிறதா..? இனி வரும் எழுத்துலகத்திற்கு நம் சாதனையின் பங்கு என்ன..? இதுவரைக்கும் சொல்லிக் கொள்கிற மாதிரி என்னதான் சாதித்து விட்டோம்..? என்ற வினாக்கள் வேறு எழுந்து, விடை தெரியாத ஒரு பயத்தை வேறு அளிக்கிறது..! இருப்பினும், “என்னைத்தேடி வந்த விருது! “நீ, எனக்காக எதையாவது சாதிப்பாய்..! என்ற நம்பிக்கையை வேறு விதைக்கிறது..! இந்த இருவேறு மன நிலையில்தான் இந்தப்பதிவை எழுதுகிறேன்.
     
இந்த விருதை பெற்ற அனைவரும் அதன் விதி முறைகளை கடைப் பிடித்துள்ளார்கள் என்பதை படித்து அறிந்து கொண்டேன்..!
அதன்படி முதலாவதாக, நானும் சகோதரர் கில்லரஜியின் பெருந்தன்மைக்கு தலைவணங்கி அவரின் வலைப்பதிவு விலாசத்தை முதலில் இங்கு பகிர்கிறேன்..!

 
இரண்டாவதாக, என் வலைத்தளத்திலும், சகோதரர் திரு. கில்லர்ஜி அன்புடன் தந்த இந்த முதல் விருதை சந்தோஷமாக, பணிவன்புடன், பதிந்து கொள்கிறேன்.!

மூன்றாவதாக, என்னைப் பற்றி சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாம்சங்கள் எனக்கு எதுவுமில்லை என எண்ணுகிறேன்..! இருப்பினும், விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு என்நிலை விளக்குகிறேன்..!
1.     நான் ஒரு முழுநேர இல்லத்தரசி..!
2.     என் மூன்று ( வளர்ந்த ) குழந்தைகளுக்கு இனிய அம்மா..!
3.     எனக்கு பழமை மிகவும் பிடிக்கும்..! ஆனால் புதுமைக்கு முழு எதிரியும் அல்ல..! அனுசரித்து போவது வாழ்க்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்று..! என நினைக்கிறேன்..!
4.     கதை புத்தகங்கள், படிக்க மிகவும் பிடிக்கும்.! அதை வடிக்கவும் மிகவும் விருப்பம்..! ( ஏதோ என்னால் இயன்ற வரை..! எனக்குத்தெரிந்த தமிழ் கொண்டு கிறுக்கி கொண்டுள்ளேன்..!)
5.     இயற்கையை ரசிப்பது, எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று..! எனக்கும்தான்..! ( நம் கற்பனையை தட்டி விட உதவும் கரங்களே இவைதானே..! )
6.     கோலங்கள் போடுதல், வரைதல், கைவேலைகள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். (ஆனால் முன்பு மாதிரி பெரிய கோலங்கள் போடுவதற்கு இப்போது இடவசதியும் இல்லை..!) முதலாவதை தவிர்த்து மீதமிரண்டையும் முறைப்படிக் கற்றதில்லை..! மற்றபடி என் கற்பனையின் உதவியுடன் அவ்வப்போது அவைகளில் ஈடுபடுவது வழக்கம்..!
7.     கடவுள் (விதிதான் கடவுள் எனவும் நினைக்கிறேன்..!) நம்பிக்கையும் அதிகம்..! விதித்தபடிதான் எதுவும் நடக்கும்..! என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகிறேன்..!
    அடுத்தது நான்காவதாக, பகிர்ந்தளிப்பது என்பது மிகவும் நல்ல ஆரோக்கியமான விஷயம்..! ஆனால், என்னைத்தேடி வாழ்த்த வந்த நட்பு வட்டங்கள் மிகக்குறைவு..! காரணம், நானும் தேடிப்போய் வட்டத்தைப் பெரிதாக்கும் முயற்சி ஏதும் பண்ணாமல் இருந்து விட்டேன்..! (பதிவுலகை பற்றிய புரிதல் குறைபாட்டின் காரணமோ, இல்லை, என் தாழ்வு மனப்பான்மையோ, இதன் காரணமாய் இருக்கலாம்..!) எப்படியாயினும், இந்த முதல் விருது உங்களில் நானும் ஒரு பதிவர் எனும் விஷயத்தை உறுதிபடுத்தியதால், மனசு இறக்கை கட்டிய பறவையாய், சந்தோஷ வானில் உலா வருகிறது..!
     
இதுகாறும் என்னை ஊக்கப்படுத்தி, என் எழுத்துக்கும் அன்பான பின்னூட்டங்கள் இட்டு, மேலும் எழுத உதவிய (சகோதரர் கில்லர்ஜி யையும் சேர்த்து ) அனைத்து பதிவர்களுக்கும், மற்றும் வலையுலக அனைத்துப் பதிவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை ௬றிக் கொள்வதுடன், இன்னொன்றையும் விண்ணப்பிக்கிறேன்..! என்னை விட இங்கு உலா வரும் அனைவரும், சிறந்த எழுத்தாளர்கள் என்பது ஐயமின்றி தெரிந்த ஒன்றாகையால், யாருடன் இந்த விருதை பகிர்வது என எனக்கு தெரியவில்லை..! என்னை பொறுத்த வரை வலையுலக உறவுகள் மொத்தமும் இந்த விருதை பெறும் திறமைசாலிகள்தான்..!
எனினும் என் எழுத்துக்களுக்கு கருத்தெனும், உரமிட்டு வளர்த்த இவர்களுடன் இந்த விருதை பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்..!












எனவே, என் எழுத்துக்களுக்கு ஊக்கமளித்த நீங்கள் இந்த விருதை என்னுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ளுமாறு, மனதாற பணிவன்புடன், தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்..!

அன்புடன்,
கமலா ஹரிஹரன்.

16 comments:

  1. விருது பெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      நான் விருது பெற்ற சந்தோஷத்தை பகிர்ந்தவுடன் முதலில் வந்து என்னைப்பாராட்டி மனமாற வாழ்த்தியமைக்கு, என் பணிவான நன்றிகள் சகோதரரே.! தங்களுடைய கருத்துப்பகிர்வுகள்தான் என் எழுத்துக்களை வளமாக்க உதவுகின்றன..!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. வணக்கம் தோழி.
    தாங்கள் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
    அவ்விருதை எனக்கும் பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.!

      நான் விருது பெற்றமைக்கு, என் வலைத்தளம் வந்து என்னை மனதாற வாழ்த்தியமைக்கு, மிக்க நன்றி சகோதரி..! நான் அவ்விருதை, தங்களுக்கு பகிர்ந்தளித்ததை, ஏற்றுக் கொண்டமைக்கும், என் பணிவான, உவகையுடன் ௬டிய நன்றிகள்..!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. வணக்கம் சகோதரி விருது பெறும் தகுதி தங்களுக்கு உண்டு என்பதற்க்கு தங்களின் பதிவுகளே சாட்சி.
    சகோதரி வாங்கிய இரண்டு விருதுகளுக்கே எமக்கு தகுதி உண்டா ? என்பதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன் இதில் தாங்களும் ஒரு விருது கொடுத்தால் ? சுமைகள் தாங்கும் பக்குவம் எமக்கில்லை சகோதரி இருப்பினும் தங்களின் அன்புக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      விருது பெறும் தகுதி எனக்குண்டு, என்று தாங்கள் கணித்து, தங்களுக்கு கிடைத்த விருதை எனக்கும் , பகிர்ந்ததற்கு என் பணிவான நன்றிகள் சகோதரரே.! தங்களுக்கும், விருதுகள் பெறும் தகுதிகள் உள்ளதால்தான், தங்களைத் தேடியும், விருதுகள் வந்து குவிகின்றன..! இனிமேலும் பல விருதுகள் தங்களை வந்தடைய இறைவனை உளமாற பிரார்த்திக்கிறேன்..!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      எனக்கு விருது கிடைத்தமைக்கு என் வலைத்தளம் வந்து வாழ்த்தியமைக்கு, மிக்க நன்றிகள் சகோதரரே.! தங்களின் ஊக்கமிக்க வாழ்த்துக்கள், என் எழுத்துக்களுக்கு ஆணி வேராக அமைகிறது.! பணிவான நன்றிகள்..!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. விருது பெற்றமைக்கு பாராட்டுகள்....... மற்றும் வாழ்த்துகள்.

    எனக்கும் விருதினை அளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      நான் விருதை பெற்றமைக்கு, என் வலைத்தளம் வந்து பாராட்டி, வாழ்த்துக்களும் அளித்த தங்களுக்கு என் பணிவான நனறிகள் சகோதரரே.! என் எழுத்துக்களுக்கு,பதில் கருத்திட்டு ஊக்கமளிக்கும், தங்கள் பண்புக்கு பரிசாக,என் விருதினை தங்களுடன் நான் பகிர்ந்து கொண்டதை மனதாற ஏற்றுக் கொண்டமைக்கும், மிக்க நன்றிகள் சகோதரரே.!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. வணக்கம்
    சகோதரி

    வேலையின் நிமிர்த்தம் இரண்டு நாட்கள் வெளியிடம் சென்றாதால் வலைத்தளம் வருவது குறைவு இருந்தாலும் இன்று பார்ப்போம் என்று வலைப்பூவை திறந்தால் தங்களின் விருது பற்றிய தகவல் வந்திருந்தது.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... தாங்கள் பெற்ற விருதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள்... மேலும் எழுத்துலகில் புதிய பரிநாம வளர்ச்சி பெற எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      நம்முடைய மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிரும் போது கிடைக்கும் மகிழ்ச்சி முதலில் பெறும் மகிழ்ச்சியை கண்டிப்பாக இரட்டிப்பாக்குகிறது சகோதரரே.! எனக்கு சகோதரரர் கில்லர்ஜி கொடுத்த விருதை பெற்ற மகிழ்ச்சியை, நான் என் எழுத்துக்களை கருத்திட்டு ஊக்குவித்த தங்களுடன் பகிர்ந்து கொண்டதை, அன்புடன் ஏற்றுக்கொண்டு, என் வலைத்தளம் வந்து தங்கள் மகிழ்வை தெரிவித்து, மேன்மேலும் நான் எழுத்துலகில் சிறக்க வாழ்த்துக்களும் ௬றி, என் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கி விட்டீர்கள்..!
      தங்களுடைய கருத்துப் பகிர்வுக்கும், உளம் கனிந்த வாழ்த்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள் சகோதரரே.!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கூடிமகிழ் நற்குணங்கள் கொண்டவரை ஊக்கமிட
    நாடிவரும் நன்றே விருது !

    வாழ்த்துக்கள் சகோ !
    விருதுகள் பெற்றமைக்கும் தங்கள் கரங்களால் விருதுகள் வழங்கியமைக்கும் !

    ஆமா எனக்குமா விருது !

    மிக்க நன்றி சகோ வாழ்க வளமுடன்
    நேரம் கிடைப்பின் பதிவிடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      நான் விருது வாங்கியமைக்கு என் தளம் வந்து வாழ்த்துரைத்த தங்களுக்கு நன்றி..!
      நான் பகிர்ந்த விருதை அன்புடன் ஏற்றுக்கொண்டமைக்கும், என் பணிவான நன்றிகள் பல..!
      தமிழில் புலமை பெற்ற தங்களுடன், என் விருதை பகிர்ந்து கொண்டமைக்கும், தாங்கள் என் வலைத்தளம் வந்து வாழ்த்தியமைக்கும், பெருமைபடுகிறேன். சகோதரரே..!
      தாங்கள் என் பதிவுக்கு கருத்திடும், வரிகள், என் எழுத்தின் வளர்ச்சிக்கு உரமாக அமையும்.! நன்றி சகோதரரே.!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. வணக்கம் சகோதரி.
    உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள், தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்..என்னுடம் விருதைப் பகிர்ந்து கொண்ட அன்பிற்கு உளமார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி!

      என் வலைத்தளம் வந்து என்னை வாழ்த்தியமைக்கு, என் பணிவான நன்றிகள் சகோதரி.!
      என் எழுத்துக்கு கருத்திட்டு ஊக்கப்படுத்திய, உங்களுடன் என் விருதை பகிர்ந்து கொண்டதை, தாங்கள் அன்போடு ஏற்றுக் கொண்டதற்கும், உள்ளன்போடு என்னை வாழ்த்திய தங்கள் அன்புள்ளத்திற்கும், மகிழ்ச்சியுடன் ௬டிய பல கோடி நன்றிகள் சகோதரி.!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete