Wednesday, September 25, 2024

கனவு மெய்ப்பட வேண்டும்

தூக்கமும் விழிப்புமற்ற நிலை. இன்னும் சற்று நேரம் படுத்திரேன் என்று மனதை உடல் ஆணையிட்டது. பொதுவாக மனது சொல்வதை கேட்கும் உடல், இன்று அதிகாரமாக உரிமையோடு மனதிற்கு ஆணையிடுவதை அந்த மனது சிறிதும்  விரும்பவில்லையெனினும், உடலின் அந்த அசதி அதற்கும் சற்று இருந்ததால், அதுவும் மெளனமாக ஏதும் கூறாமல், தன் கண்களை மூடிக் கொண்டது.

இது என்ன அந்தகாரமான ஓரிடம்..! பிரகாசமான விளக்கின் ஒளிகள் தூரத்தே தெரிந்தாலும், இங்கு எதற்காக இப்படியான இருள் சூழ்ந்துள்ளது...?அந்த இருட்டிலும் ஏதேதோ வாசனைகள் கலந்து நாசியை துளைப்பதை உணர முடிகிறது. . எதற்காக இங்கு வந்திருக்கிறேன்..? எப்படி இந்த இடத்தை விட்டு மெள்ள நகர்ந்து அந்த ஒளி மிகுந்த இடத்திற்குச் செல்லப் போகிறேன்.?அதற்குள் இந்த இருட்டின் தடங்கள் என் கண்களுக்கு பழக்கமாகி விடுமா..? என பல விதத்தில் யோசனைகள் செய்த போதினில், எதிரே இரண்டு பிரமாண்டமான ஆண் உருவங்கள் தோன்றின. 

நல்ல பராக்கிரமசாலிகள் என அவர்களை பார்த்தவுடன் அந்த இருட்டிலும் தெரிந்தது. சிறிது நேரத்தில் அவர்களை மட்டும் ஒரு ஒளி சூழ்ந்தது. அதில் அவர்களை பார்க்கையில் பருத்த தோள்கள், வாட்ட சாட்டமான உடல்வாகு, பெரிய கண்கள், அந்த கண்களில் சிறிதும் கருணை இல்லாத பார்வைகள், கடைவாயின் இரு ஓரத்திலும் சற்றே நீண்டிருந்த இரு பற்கள்...என  கண்டவுடன் என் வயிற்றில் ஏதோ ஒரு அமிலங்களை சுரக்கச் செய்தன.. 

அவர்கள் என்னிடம் பேசும் போது  அந்த பற்கள் வேறு  கண்டிப்பாக பயமுறுத்துமென தோன்றியது. யார் இவர்கள்..? அரக்கர்களா? இல்லை அரக்கத்தனம் கொண்ட மானிடர்களா? என நினைக்கும் போதே அருகில் வந்து என் இரு கைகளையும் முரட்டுத்தனமான அழுத்தத்துடன் பிடித்தனர்.

"வா.! வா..! ஏன் இன்னமும் தாமதம்?இனிதான்  உனக்கு நடை பழக கற்றுக் கொள்ள வேண்டுமா?" கர்ண கடூரமான குரலில் ஓருவன் உறுமினான். மற்றொருவன் ஏளன புன்னகையுடன், "அதில் சந்தேகமென்ன..? இனி எல்லாமே முதலில் இருந்துதானே கற்க வேண்டும். இவளிடம் என்ன பேச்சு.? தரதரவென இழுத்துக் கொண்டு சென்று நம் மன்னரிடம் சேர்ப்பது மட்டுந்தான் நம் கடமை..!" என்றபடி இழுக்க முற்பட்டான்.

" ஆ.. என்னை விடுங்கள்.. விடுங்கள்.. கைகள் வலிக்கிறதே ..! ஐயோ என்னை காப்பாற்ற இங்கு யாருமே இல்லையா.. ?" என நான் பார்த்த பழைய தமிழ் சினிமா கதாநாயகிகள் போல நான் கத்த ஆரம்பிக்க, அவர்களின் பிடி இன்னமும்  இறுகியது. 

ஒரு வழியாக அவர்கள் இழுத்த இழுப்பிற்கு என் கால்கள் நகர்ந்து அந்த ஒளி நிரம்பிய பகுதியை வந்தடைந்தோம். அங்கு என்னைப் போலவும் ஆட்கள் பலர் செய்வதறியாமல் நின்று கொண்டிருக்க, அந்த பலசாலிகளைப் போல பலர் அவர்களை ஏதும் பேச விடாமல், அருகில் நின்றபடி மிரட்டிக் கொண்டிருந்தனர்.

என்னையும் அவர்களுடன் இணைந்துகொண்டு சென்று நிறுத்திய பின்  அதுவரை என் கைகளை அழுத்தமாக பிடித்திருந்தவர்கள் சற்றே பிடியை தளர விட்டனர். அதற்குள் அங்கு நடுவில் போடப்பட்டிருந்த இரு பெரிய சிம்மாசனங்களில் சற்று பெரியதாக இருந்த ஒன்றில், இந்த பராக்கிரமசாலிகளைப் விட இருமடங்கு பிரமாண்ட உருவமாக தோன்றிய ஒருவர் தலையில் பெரிய கிரீடத்தை சுமந்தவாறு வந்து அமர, இந்த பலசாலிகள் அனைவரும் ஏதோ மொழியில், அவரை கோரஸாக வரவேற்று அவரை சிரம் தாழ்த்தி மண்டியிட்டு வணங்கினர். செய்வதறியாது நின்று கொண்டிருந்த எங்களையும் கால்கள் மடக்கி குனிய வைத்து வணங்க வைத்தனர்.

சிறிது நேரத்தில் அங்கிருந்த மற்றொரு சிம்மாசனத்தில், வேறொருவரும் அதே மாதிரி ஆனால், சின்னதாக கிரீடம் அணிந்து வந்தமர அவருக்கும் அதே மரியாதை கலந்த வரவேற்பு கிடைத்தது. அவர் முன்னவர் போல பயமுறுத்தும் பயில்வான் போலில்லாமல் சற்று  பூலோக மனிதர்களைப் போலிருந்தார் . 

"வாரும் சித்ர குப்தரே ..! இன்று நீர் அரசவைக்கு வர  ஏன் இத்தனை தாமதம்.? எப்போதும் இவ்வாறு தாமதிக்க மாட்டீரே. .? என்று முன்னரே வந்தமர்ந்தவர் பின்னர் சற்று தாமதமாக வந்தமர்ந்தவரை பார்த்து சற்று அதிகார குரலில் ஆனால், கோபமான தொனியில் உறுமுவது போல கேட்க," மன்னிக்க வேண்டும் பிரபு. இன்று காலை ஆகாரமாக  உணவு உண்பதற்கு தோதாக ஏதும் பிடிபடாமல் இருக்கவே ஒரு வழியாக அதை செய்து முடித்து பசியாறி  விட்டு வர நேரம் கடந்து விட்டது. மன்னிக்கவும் பிரபு...!! என்று அவர் எழுந்து பணிவாக கூறிய பின் அவரை கைக் கூப்பி வணங்கி விட்டு அமர முதல் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவரின்  கோபம் சற்றே கலைந்ததற்கான அறிகுறி அவர் முகத்தில் தெரிந்தது. 

ஆகா....! இதுதான் நாம்  பூவுலகில் இருக்கும் போது அடிக்கடி கூறும் எம தர்ம ராஜா பட்டிணமா.. ? இவர்தான் அந்த யமதர்மராஜன் போலும்..! அதுதான் மன்னரிடம் இழுத்துக் கொண்டு சேர்ப்பிக்க வேண்டுமென என் கைகளை பிடித்து அழைத்து வந்தவர்கள் கூறினார்களா? 

அட..! அப்போது நான் உயிருடன் இல்லையா? பூவுலகிலிருந்து வாழ்ந்த வாழ்வை விட்டு இறந்து இங்கு விட்டேனா? அப்படியென்றால், இவர்கள் பேசுவது எல்லாம் நன்றாக  கேட்கிறதே ? எப்படி..? இங்கு வந்த பின்னும் ஐம்புலன்களும் வேலை செய்யுமா.. ? ஒரே குழப்பமாக நான் ஏதோ சிந்தித்து கொண்டிருக்க, "சித்ர குப்தா" என்ற அந்த சிம்மக்குரல் என்னை அதிர வைத்தது. 

அந்த அதிரடி குரலில் சுயநினைவு பெற்ற நான் (அட..! சுயநினைவு வேறு இருக்கிறதா உனக்கு..? அது அங்கு  இல்லையென்று ஆன பிறகுதானே இங்கு வந்தடைந்திருக்கிறாய்..!! என யாரோ கூக்குரலிடுவது காதில் கேட்டது. அது வேறு யாருமில்லை...! மிச்சம் மீதி இருக்கிற மனசாட்சி பட்சிதான் என்பதையும் சிறு பொழுதில் உணர்ந்து கொண்டேன்.) குழப்பதிலிருந்து வெளி வந்தேன். 

"சித்ர குப்தா.. இன்றைய நாளில் வந்திருக்கும் இவர்களது பூலோக பாப புண்ணிய  கணக்குகளை சீக்கிரமாக எடுத்து வாசி." என்று தர்மராஜன் பகிர்ந்ததும், சித்ர குப்தன் கைகாட்டிய திசைக்குச் சென்று ஒரு பலசாலி தூக்க மாட்டாமல் ஓர் அடுக்கு ஓலைச் சுவடிகளை கொண்டு வந்து வைத்தான். 

" என்ன இது.. சித்ர குப்தா..? வழக்கத்திற்கு மாறாக என்றைக்கும் இல்லாமல் இன்று இவ்வளவு ஓலைச்சுவடி கணக்குகளா ? பிரமிப்பாக உள்ளதே..? யமதர்ம ராஜன் குரலில் பயங்கர ஆச்சரியம் கலந்து ஒலித்தது. 

" ஆம்.. பிரபோ.. ! இன்று இங்கு வந்தவர்களின் பாப புண்ணிய கணக்குகள்தாம் இவை. இதில் பாதிக்கு மேல் இருப்பவை அதோ அந்த அம்மையாருடையது..!" என சித்ரகுப்தர் என்னை நோக்கி கை காட்டவும், யமதர்மரின் பார்வை என்னை விழுங்குவது போல் என்னை நோக்கி பாய்ந்தது. 

அவர் பார்வை ப(சு)ட்டதும் எனக்கு பயத்தினால் கால்களில் ஏற்பட்ட நடுக்கம் (அடாடா.. இங்கு வந்தும் கால்களில் அதே பிரச்சனையா..?) அதிகமாகி, நிற்க இயலாமல் தடுமாறவே பலகிரமசாலிகள் என் கைகளை அழுத்தமாக பிடிக்கத் துவங்கினர். 

எனக்கு முன்னால் இருப்பவர்களை விசாரித்து, கணக்கு வழக்கை முடித்தவுடன்தான் என்னிடம் விசாரணைக்கு வருவார்கள். அதற்குள் அங்கு  நடப்பதைப் பார்த்து அதற்கு தகுந்தாற்போல எப்படி நடந்து கொண்டால், எப்படியும் கிடைக்கும் தண்டனைகளை மனமொப்பி ("அந்த மனம் என்பதுதான் உன்னை விட்டு கொஞ்சங்கொஞ்சமாக விலகிப் போய் கொண்டிருக்கிறதே" என்று ஒரு பட்சி வேறு அடிக்கடி வந்து காதில் கூவி விட்டுப் போகிறது.) ஏற்றுக் கொள்ளலாம் நான் போட்ட கணக்கு மாறுபட்டு பிசகுகிறதே என்று நினைப்பதற்குள்.....! 

"ஏய் தூதர்களா..! முதலில் விசாரணைக்கு அந்த அம்மையாரை இங்கு என் முன்னர் அழைத்து வாருங்கள்.." என்ற யமதர்மரின் கட்டளைக்கு என்னை தள்ளிக்கொண்டு (கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு) சென்றார்கள் அந்த தூதர்கள். 

"சித்ர குப்தா..! இந்த அம்மையாரின் கணக்கை இப்போது எடுத்து வாசி"என்று யமதர்மர் சித்ரகுப்தரைப் பார்த்து கட்டளையிட்டதும்," பிரபோ..! இவரின் பாப கணக்கை விட புண்ணிய கணக்கு நிறைய உள்ளது. இதில் முதலில் எதை வாசிக்கட்டும்..? என சித்ர குப்தர் வினவியதும், எனக்கு உயிரே வந்தது போலிருந்தது. (அட..!! உயரே வந்த பின்னும் உனக்கு மீண்டும் உயிரே வேறு வந்து விடும் ஆசையா..? என்ன ஒரு அசாத்திய நம்பிக்கை உனக்கு.. ! என பட்சி காதில் கிண்டல் செய்து நகர்ந்தது.)

" அப்படியா..!! அப்போது இவரை தேவ லோகத்திற்கு அனுப்பாமல்,  இங்கு கொண்டு வந்ததின் காரணம்..?" யமதர்மர் சந்தேகமாய் வினவினார். 

" பிரபோ..!  முன்பு பூலோகவாசிகள் செய்யும் புண்ணியங்களுக்கு  தகுந்தபடி நேரடியாக தேவ லோகத்திற்கும்,செய்த  பாவங்களுக்கு தக்கபடி இங்கும் அவர்களை கொண்டு வந்து கொண்டிருந்தோம். இப்போது மாற்றி  இயற்றிய புது சட்டத்தை மறந்து விட்டீர்களா.? இங்கு முதலில் வந்த பின் அவர்கள் செய்த பாபங்களை அலசி ஆராய்ந்து, அதற்கேற்றபடி புண்ணிய கணக்கையும், கூட்டி,கழித்து பெருக்கி, வகுத்தப் பின்தான் உடனே வையகத்துக்கு அனுப்பவா... ,? இல்லை, தேவ லோகவாசியாக சிறிது காலம் இருக்கும்படி செய்து விட்டு,பின்பு  சுகவாசியான மானுடபிறப்பிற்கென பிறக்கும்படி செய்து அனுப்பவா..! என நீங்களும், பிரம்மதேவரும் சேர்ந்து  இயற்றிய அந்த சட்டத்தை மறந்து விட்டீர்களா.. ? 

சித்ர குப்தர விளக்கியதும் தெளிவடைந்தார் யம தர்மர். 

"சரி.. அப்படி இவரின் புண்ணியங்கள் நிறையவென்றால், அதை முதலில் சுருக்கமாக விவரியுங்கள்." என்றார்

என் சம்பந்தபட்ட ஓலைகளை சித்ர குப்தர அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, "சுருக்கமாக என்பதற்கு எதிர்பதந்தானே விவரிப்ப தென்பது..! இப்படி இரண்டையும் சொன்னால் அவர் என்ன பண்ணுவார்..?பாவம்..! என நான்  சித்ர குப்த்ருக்காக யோசிக்க, சித்ர குப்தர் என்னை ஒருதடவை திரும்பிப் பார்த்து முறைத்தார். "ஆகா..!என் யோசனை இப்போது எந்த கணக்கில் சேர்த்தியோ..! "என்ற எண்ணம் வந்ததும் "நான் இப்படியெல்லாம்  யோசிப்பதை நிறுத்தச் சொல்ல பறந்து வந்தது அந்த பட்சி." 

"பிரபோ..! இவர் பூவுலகில் நாம் பிறப்பெடுத்து தந்தது முதல், தம் பெற்றோர்களுக்கு அடங்கிய மகவாய், திருமணமாகி வாழ்ந்த காலத்தில் ஒரு நல்ல மனைவியாய், உற்றம், சுற்றம் மற்றும் அனைவர்க்கும் அன்பானவராய் நம் கணக்கின்படி இவருக்கென இவர் மூலம் ஜனிக்க வைத்த சிசுக்களுக்கு நல்ல தாயாகத்தான் வாழ்ந்திருக்கிறார். இவர் வாழ்ந்த இவ்வளவு வருடங்களில் அதிலெல்லாம் எந்தக் குறைகளையும் வைக்காமல் நல்ல விதமாக இவர் நிறைய புண்ணியங்கள் செய்திருக்கிறார். ஆனால், தினமும் உலகில் உள்ள ஜீவன்களுக்கு ஆதாரமாக நாம் படைத்து தந்த உணவு வகைகளில், அடிக்கடி "உபுமா" என்றொரு வஸ்தை கொண்டு குடும்பம், மற்றும் இவரை நாடி வரும் உறவுகள் அனைவரின் மனதை சில சமயங்களில் வருத்தும்படிக்கு செய்து தந்து பாப கணக்குகளில் இடம் பிடித்திருக்கிறார். "

" நிறுத்துங்கள் சித்ர குப்தா..! அது என்ன "உபுமா"? இதுவரை நாம் அறிமுகப்படுத்தியதில் கேட்காத மொழியாக உள்ளதே..? என யமதர்மர் குறுக்கிடவும்..., 

"மன்னிக்கவும் பிரபோ..அது" உபுமா"இல்லை." உப்புமா"  நான் இந்த ஒரு ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் போது ஓரெழுத்து தவறியுள்ளது. மற்றதில் எல்லாம் சரியாக உள்ளது.." என அவசரமாக சித்ர குப்தர மறுக்கவும், நான் வாய் விட்டு சிரித்து விட்டேன். ("அட..! இங்கு வந்த பின்னும் உன்னால் சிரிக்கக் கூட முடிகிறதே..! "முதல் தடவையாக பட்சி வந்து பாராட்டிச் சென்றது.) 

யமதர்மர், மற்றும் சித்ரகுப்தன பார்வைகள் என்னை தீயில் குளிப்பாட்டி தணிந்தன." என்ன சிரிப்பு..?" என்று கோபபடுவார்களோ அதற்கு என்ன தண்டனையோ ? என எதிர்பார்த்த அடுத்த விநாடி," "அம்மையே..! உன் அர்த்தமற்ற சிரிப்புக்கு உன்னை மன்னிக்கிறேன் "உப்புமா" என்றால் அது என்ன வகையான  பதார்த்தம் என்பதை விளக்கிக்கூறு...?" என்று யமதர்மராஜன் கேட்டதும், 

"அது வேறு ஒன்றுமில்லை பிரபோ..!  இந்த உப்புமாக்கள் செய்வதற்கென்று பூலோகத்தில் சில வஸ்துக்கள் இருக்கின்றன. அதில் இவர் அதை வைத்து பல விதமான இனிப்புக்கள், இந்த மாதிரி" உப்புமா*" ரகங்கள் என பலவற்றை  தன் பல சுற்றங்களுக்கு பிடிக்காமல் போனால் கூட செய்து தந்து வாழ்நாளில் தன் பாப கணக்கை கூட்டியுள்ளார். ஆனால், நான் கூட இவர் செய்ததை நினைவில் வைத்தபடி, மேலும் அதன் சுவையை நானும் சுவைத்துப் பார்க்க நினைத்து, பூலோகத்திலிருந்து அந்த பொருட்களை தருவித்து அதை செய்ய  ஓரிரு தினங்களாக முயற்சி செய்கிறேன். ஆனால், அது எனக்கு இந்த அம்மையார் செய்வது போல சரியாக வரவில்லை. மேலும், அதுதான்  இன்று காலை நான் அரசவைக்கு வர தாமதமான காரணம். அது குறித்து கூட உங்களிடம் தெரிவித்தேனே. ..!  என்று சித்ர குப்தர குறுக்கிட்டு விளக்கி கூறினார். 

.... அதுதான் காரணமா? சரி.. இவரது பாபங்களை இப்போதைக்கு ஒரு மூட்டையில் கட்டி வைத்து விட்டு, நாம் அதை பிறகு பரீசீலிக்கலாம். இப்போது அந்த பொருட்களை வைத்து அந்த "உப்புமாவை" இவர் செய்து இங்கு கொண்டு வர உத்தரவிடுகிறேன். நீங்கள் சொன்னதிலிருந்து எனக்கும் அதை உண்பதற்கு ஆசை வந்து விட்டது...!" என யமதர்மர் சொன்னதும், சித்ர குப்தர் "இவரை என் அரண்மனை உணவு கூடத்தில் கொண்டு விடுங்கள்" என என்னருகில் நின்றிருந்த அந்த பலசாலிகளுக்கு ஆணையிட்டார். 

"அட.. ராமா.. இங்கு வந்தும் இதே வேலையா?" என நான் சலித்துக் கொண்டாலும் அவர்கள் சொல்படி கேட்டாக வேண்டுமே..!! என்ன செய்வதென அவர்களுடன் அந்த உணவு கூடம் நோக்கி நடந்தேன்/ நடத்தப்பட்டேன் . சிறிது நேரத்தில் "உப்புமா" என் சொல் பேச்சு கேட்டு நடக்க, மறுபடியும் "என் தயாரிப்புடன்" யமதர்மராஜா முன்னர் ஆஜர்படுத்தப்பட்டேன். 

" அட..! அதற்குள் செய்து கொண்டு வந்தாகி விட்டதா? எங்கே கொண்டு வாரும் அந்த பதார்த்தத்தை..." அவரது ஆணையில் நான் செய்த "உப்புமா" அவருக்கு அருகில் சென்றமர்ந்தது. 

"ஆகா..  என்ன ருசி. என்ன ருசி. நம் தேவ லோகத்து அமிர்தம் கூட இந்த ருசியில் சேராது...! சித்ர குப்தா இங்கு வாரும். நீரும் சாப்பிட்டு பாரும்.." என்ற யமதர்மராஜாவின் மகிழ்ச்சியான வார்த்தைகளை கேட்ட நொடியில், அதற்காகவே காத்திருந்தது போல், சித்ரகுப்தரும் அவர் அருகில் சென்றமர்ந்து அந்த உப்பமாவை ருசிக்க ஆரம்பித்தார். இருவரின் கண்களிலும் அபரிமிதமான ஆனந்தம் தாண்டவமாடியது

பூலோக வாசியாக இருந்த போது, வருடந்தோறும் சித்ரகுப்தர் விரதம் அனுஷ்டிக்கும் போது நான் உப்பில்லா நோன்பு இருந்தது லேசாக நினைவுக்குள் வந்தது. இவரானால் இந்த "உப்பு"மாவை இத்தனை ருசியுடன் புகழ்கிறாரே என்று  நினைத்தேன். 

"சித்ர குப்தா..!  இவரது பாப கணக்குகளை ஏதும் ஆராய வேண்டாம். இவருக்கு இப்போது எந்த தண்டனையும் தரவேண்டாம். எனக்கு இந்த வஸ்துவை ருசிக்க ஆசை வரும் போது, இதை மட்டும் செய்து தரச் சொல். அதற்காக இவருக்கு வசதியான அறை ஒன்றை ஏற்பாடு தந்து அதில் தங்கச்செய். இதுதான் இவருக்கு இங்கு யாம் தரும் தண்டனை." என்று யமதர்ம ராஜன்  சொன்னவுடன்" உத்தரவு மஹாராஜா. அப்படியே ஆகட்டும் .." இவரை அழைத்துச் சென்று நல்லதொரு அறையை தங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்...! மேலும் இவருக்கு எந்த தொந்தரவும் வராமல் மரியாதையாக கவனித்து கொள்ளுங்கள்.." என்று அதே ஆணையை தம் பணியாளர்களிடம் தெரிவித்தார் சித்ரகுப்தர். 

எனக்கு அங்கு நடப்பது எல்லாமே விசித்திரமாக இருக்கவே ஸ்தம்பித்து நின்றிருந்தேன். அப்போது பளபளவென தங்ககவசங்கள், பட்டாடைகள் ஜொலிக்க இரு ஆடவர்கள், தங்க விமானத்தில் வந்து இறங்கினர். உடனே யமதர்மராஜா முதற் கொண்டு எழுந்து அவர்களை மரியாதையாக வணங்கி வரவேற்று புகழ் பாடி வந்த விஷயத்தை சொல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டனர். 

"யமனே.. நாங்கள் இந்த அம்மையாரை அழைத்துப் போவதற்கு விஷ்ணு உலகத்தில் இருந்து வந்திருக்கிறோம். இவருக்கான பாவங்கள் அனைத்தையும் இங்கு விமோசனம் செய்து விட்டு இவரை  எங்களுடன் அனுப்பி வைப்பாயாக..! இது எங்கள் பிரபுவின் உத்தரவு..!  என்றதும் யமதர்மர், சித்ர குப்தர முகங்களில் கவலை ரேகைகள் படர்ந்தன . 

"ஏன் இந்த முடிவு..? இவர் கொஞ்ச காலங்கள் இங்கிருந்து கழித்த பின் இவரது பாபங்களை புண்ணியமாக்கி நாங்களே அங்கு அனுப்பி வைக்கிறோம். இன்றுதான் இவரின் பாப கணக்கின் உட்பட்ட இவர் வழக்கமாக பூலோகத்தில் செய்த வஸ்து ஒன்றை இங்கு அடிக்கடி செய்யுமாறு பணித்திருக்கிறோம். அதற்குள்...! " யமதர்மரை முடிக்க விடவில்லை வந்தவர்கள். 

"அதற்குத்தான் இவரை அங்கும் அழைத்து வர உத்தரவிட்டிருக்கிறார் எங்கள் பிரபு. அவருக்கென்று ஒரிரு நாட்கள்  பூலோகத்தில் பூஜைகளை செய்யும் பொழுதில் இவர் படைத்ததை அவரால் நேரடியாக வந்து உண்ண இயலவில்லையாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த பதார்த்தத்தை எங்கள் பிரபுவுக்கும் உண்ண ஆசைதான். இவரின் கணக்கை ஆராய்ந்து நாங்கள் வந்து அழைத்துப் போவதற்குள் நீங்கள் இங்கே அழைத்து வந்து விட்டீர்கள்....!!" அவர்கள் பேச, பேச, கேட்டபடி நின்றிருந்த எனக்கு தலை சுழல்வது போலிருந்தது. 

" நாராயணா..  என்றோ ஒருநாள் நான் உனக்கு அவரச கதியில் செய்து நைவேத்தியமாக படைத்த உப்புமாவை ருசிக்க  உனக்கும் விருப்பமா? என்ன ஒரு புண்ணியமான செயலாக அது என்னை மாற்றியுள்ளது..! இந்த உப்புமாதான் என்னை ஈரேழு உலகத்திற்கும் அழைத்துச் செல்ல காத்திருக்கிறதா ? பகவானே இதோ வருகிறேன். உன் அழைப்புக்கு வராமல் நான் மறுப்பேனா....உன்னை சந்திக்க நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும். என்னப்பனே..! நாராயணா. நாராயணா. . " என நான் உணர்ச்சி வசப்பட்டு  மடமடவென உரக்கப் பேசியபடி, கூக்குரலிட யாருடைய பிடிமானமில்லாமல் தொப்பென கீழே விழுந்தேன். 

திடுமென சடாரென்று  கட்டிலில் அலுப்புடன் புரண்டதில்  சற்றே விழிப்பு வந்து எழுந்தமர அந்த சத்தம் கேட்டு" எழுந்து விட்டீர்களா? இன்று இரவு டிபனுக்கு ரவை உப்புமா செய்து விடுகிறீர்களா ? . குழந்தைகளுக்கும் நீங்கள் செய்யும் உப்புமா மிகவும் பிடிக்கிறது என்கிறார்கள். . விரும்பி சாப்பிடுகிறார்கள் "என்றபடி அறையின் வாசலில் இருந்து ஆணை வர "அடாடா..! எல்லாமே சிறிது நேர உறக்கத்தில் வந்த கனவா..? இந்த உப்புமா என்னை படுத்தும் பாடு இருக்கிறதே....!என்றபடி  எழுந்து முகம் அலம்பச் சென்றேன்.

வேறு ஒன்றுமில்லை...! "இந்த டிபன் வகைகளில், ரவை உப்புமா செய்யும்போது, சுலபமாக செய்யும்படி  இருக்கும் இந்த உப்புமாவைதான் இதுவரை என் வாழ்வில் எவ்வளவு தடவைகள் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், தினமும் புதிதாக செய்வது போல் உணர்கிறோம். காரணம்.... நிறைய பேருக்கு எனும் போதில் சட்டென செய்வது சுலபமாக உள்ளது. அனைவரும் "நான் நீயென"  காத்திராமல் ஒரே நேரத்தில் உண்ணும்படிக்கும் உள்ளது. நாளை இந்த டிபன் செய்து கொண்டிருக்கையில், யமன் வந்து கூப்பிட்டால் கூட இரு.. இரு.. இதை செய்து முடித்து விட்டு பிறகு வருகிறேன் எனக் கூறுவேனோ..! என்னவோ..! " என  நகைச்சுவையாக கூறினேன். அது தொடர்பான ஒரு நகைச்சுவை கற்பனை பதிவு  இது..!  

எப்போதும் போல் இதை படிப்பவர்களுக்கும், கருத்துகள் வழங்குபவர்களுக்கும்  என் பணிவான நன்றிகள். 🙏. 

45 comments:

  1. உப்புமா‌ புராணம் அருமை..வாழ்ததுகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவை ரசித்து படித்து வாழ்த்துகளை தந்தமைக்கு என் பணிவான நன்றி. நீண்ட நாட்களுக்குப்பின் என் பதிவுக்கு தாங்கள் வருகை தந்து கருத்து வழங்கியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துரைகளை தாருங்கள். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.  யமதர்மன் எதிரே இருக்கும்போது எழும் சிந்தனைகள் மிக சுவாரஸ்யம்.  உயிர் திரும்ப வருவது.  மனம் பற்றிய சிந்தனை என்று மிகவும் சுவாரஸ்யம்.  அங்கு இயற்றப்பட்டிருக்கும் புதிய சட்டம் பற்றிய விளக்கம் கேட்கவே...  படிக்கவே  நன்றாக இருக்கிறது.  

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உடனடியாக வந்து பதிவை ரசித்து நல்லதொரு கருத்தை தந்திருப்பதற்கு என் மகிழ்வான நன்றி. என்னால்தான் தங்கள் கருத்தை கண்டவுடன் உடன் வந்து பதிலளிக்க இயலவில்லை. யமலோகத்தை விட பூலோகத்தில் வேலைகளை செய்யாவிடில் உடனடி தண்டனை கிடைத்து விடும். இப்போதுதான் வந்து கைப்பேசியை கையில் எடுத்தாளுகின்றேன். அது வேறு நடுநடுவில் நெட் பிரச்சனையால், கருத்தை உட்செலுத்தவே இயலாமல் போகிறது. இன்று கலையில் எ. பியில் ஒரு அரை மணி நேரம் கழித்து கருத்தை செலுத்த ஒத்துழைத்தது. மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. என் பாஸ் செடியும் ரவா உப்புமா சிறப்பாக இருப்பதாக உப்புமா விரும்பிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  நீண்ட இடைவெளிகளில் நானும் சுவைத்திருக்கிறேன்.  ஒருமுறை அப்பாவுக்கு நான் உப்புமா செய்யநேர்ந்தபோது அதில் புளிப்பு மோர் இரண்டு ஸ்பூன் விட்டு செய்யவும் அன்று அப்பா அந்தச் சுவையைக் கண்டு பிடித்து சிலாகித்ததும் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. அப்பாவிற்குச் செய்துகொடுத்தீர்களா? எனக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை. அப்பாவை வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை, என் சொகுசு காரில் (பஹ்ரைனில்) அழைத்துச் செல்லவில்லை என்ற வருத்தம் என்றுமே இருக்கிறது. அப்புறம் அப்புறம் என்று தள்ளிப்போட்டுவிட்டேன், பைத்தியக்காரத்தனமாக

      Delete
    2. அப்பாவுக்கு என் சமையல் பிடிக்கும். 

      எனக்கும் அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றாத வருத்தம் உண்டு.  அவர் தனது கடைசி காலங்களில் என் கையைப் பிடித்துக்கொண்டு 'என்னை சென்னைக்கு அழைத்துப் போ' என்று கேட்டுக் கொண்டே இருந்தார். 

      அதை நிறைவேற்ற முடியவில்லை.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உங்கள் பாஸின் தயாரிப்பான உப்புமாவும் சூப்பராக இருக்குமென்பது மகிழ்ச்சியான செய்தி. நாங்கள் எப்பவாவது சென்னைக்கு தங்கள் வீட்டிற்கு வந்தால் இனி கவலையில்லை. எங்களுக்கு பிடித்தமான உப்புமா சுவையான முறையில் கிடைத்து விடும்.

      உங்கள் அப்பாவுக்கு புளித்த மோர் கொஞ்சம் சேர்த்து செய்து தந்திருப்பதாக நீங்கள் ஏற்கனவே பலமுறை சொல்லியுள்ளீர்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்த உப்புமா( என் பழைய பதிவொன்று) பதிவில் தான் நீங்கள் முதன்முறையாக வந்து என் வலைத்தளம் கருத்தை தந்தீர்கள். அப்போதுதான் நாம் அறிமுகமானோம். அப்போதும் இந்த புளித்த மோர் சேர்த்து செய்யலாம் எனச் சொன்னீர்கள். நாங்கள் கொஞ்சம் மாறுபட்ட முறையில் உப்புமாவுக்கு தயிர் தொட்டும் சாப்பிடுவோம். உங்கள் பாணியில் ஒரு முறை புளித்த மோருடன் செய்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. வணக்கம் சகோதரரே

      உங்கள் அப்பாக்களை நினைத்து நீங்களும், சகோதரர் நெல்லைத் தமிழரும் வருத்தப்பட்டிருப்பது எனக்கும் மனதை வருத்தியது. திருமணமான பின் என் தாய் தந்தையர் இருவரும் நாங்கள் கூட்டுக் குடும்பமாய் வசிக்கும் சென்னை வீட்டிற்கு வர தயங்குவார்கள். அம்மாவாவது எங்கள் குழந்தைகள் பிறக்கும் சமயங்களில் கொஞ்ச நாட்கள் உதவிக்கென வந்து தங்குவார்கள். ஆனால், என் அப்பா வர மாட்டார். நான் எப்போதாவது தி. லி. போகும் போது அவருடன் இருக்கும் காலங்கள்தான் பொன்னானவை. அவர்களுக்கு செய்ய வேண்டியதை மனதில் போட்டு மறைத்து வைத்தே வாழ்நாட்களை கழித்தாகி விட்டது. , இப்போது நினைத்தால் கூட குற்ற உணர்ச்சி மனதை அழுத்தும். என்ன செய்வது..? ஆண் பிள்ளைகளாகிய நீங்களே வருந்தும் போது நான் அக்காலகட்டங்களில் வெறும் வாய் பேசாத ஜடம். இப்போதைய இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்.  ஆனால் ஏன், நீண்ட இடைவெளிகள் விடுகிறீர்கள்?  உப்புமா பற்றிய வித்தியாசமான ஒரு ப்ரசன்டேஷனை இன்று படித்தது சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நிறைய எழுத வேண்டுமென்ற தாக்கம் என்னுள் புதைந்து உள்ளது. தங்களின் ஊக்கம் மிகுந்த கருத்துக்கள்தான் என்னை இப்படி இடைவெளிகள் விட்டாலும் தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு உங்களனைவருக்கும் நான் பதிலுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை. ஆனால், தொடர்ந்து என் எழுத்தார்வத்தினால் வரும் பதிவுகளுக்கு தங்களது அன்பான கருத்துக்களை தந்து கொண்டிருங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. முதல் இரண்டு பத்திகளின்போதே இது இறப்புக்குப் பிந்தைய அனுபவம் என்று புரிந்துவிட்டது. போன உயிரை, ஆசுவாசப்படுத்தி அன்புடன் அழைத்துச் செல்வதாகத்தான் படித்திருக்கிறேன்.

    சில மாதங்களுக்கு முன்பு, அதாவது 90 நாட்களுக்கு முன்பு, இறந்தது பெண்ணாக இருந்தால் பெண் கிங்கரிகளும் ஆணாக இருந்தால் கிங்கர்ர்களும்தான் கொண்டுவர வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்களாம்.. அது என்ன 90 நாட்கள் என்றால், நம் கணக்கில் 90 வருடங்களுக்கு முன்பு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /போன உயிரை, ஆசுவாசப்படுத்தி அன்புடன் அழைத்துச் செல்வதாகத்தான் படித்திருக்கிறேன்./

      அதுவும் நல்லதற்குத்தான்..! இப்பவே அதை நினைத்து பயப்பட தேவையில்லை. நானும் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். :))

      /சில மாதங்களுக்கு முன்பு, அதாவது 90 நாட்களுக்கு முன்பு, இறந்தது பெண்ணாக இருந்தால் பெண் கிங்கரிகளும் ஆணாக இருந்தால் கிங்கர்ர்களும்தான் கொண்டுவர வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்களாம்.. அது என்ன 90 நாட்கள் என்றால், நம் கணக்கில் 90 வருடங்களுக்கு முன்பு/

      ஆகா.. இந்த விபரங்கள் முன்பே தெரிந்திருந்தால், நானும் அங்கே சில கேள்விகளை கேட்டிருப்பேன்.பரவாயில்லை அடுத்த முறைச் செல்லும் போது இதை உபயோகப்படுத்திக் கொள்கிறேன். ஹா ஹா ஹா.

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. முழு பாபக் கணக்கையும் படித்து முடிக்கவில்லையா? அதில் இரண்ட்டு பத்திகளில் எழுத வேண்டியதை, இருபது பத்திகளில் எழுதுவதையும் குறிப்பிட்டிருப்பார்களே.. ஹா ஹா ஹா. (சும்மா நகைச்சுவைதான். எழுத்து சுவாரசியமாய் இருந்தது)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /முழு பாபக் கணக்கையும் படித்து முடிக்கவில்லையா?/

      எங்கே அதற்குள்தான் உப்புமா புராணம் துவங்கி விட்டதே..!

      /அதில் இரண்ட்டு பத்திகளில் எழுத வேண்டியதை, இருபது பத்திகளில் எழுதுவதையும் குறிப்பிட்டிருப்பார்களே../

      ஓ.. அது வேறேயா? நோட் செய்து கொண்டேன்.மிகவும் அநியாயந்தான். அடுத்தமுறை செல்லும் போது தட்டிக் கேட்டு குரல் எழுப்ப வேண்டும். ஹா ஹா ஹா.

      தங்களது ரசிப்பிற்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. உப்புமா செய்வது அங்கேயும் தொடர்ந்து விட்டதா…. உப்புமா விடாது கருப்பு போல துரத்துகிறது! கற்பனையாக எழுதிய பதிவு மிகவும் சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      எங்கேயும் உப்புமா ஒரு சுலபமான டிபன் செய்முறை என்பதால், தொடரத்தான் செய்கிறது. :)) இத்தனை எழுதியும் நேற்று இரவு முகம் சுளிக்காமல் இந்த ரவை தான் கை கொடுத்தது.

      தாங்கள் பதிவை ரசித்துப்படித்து தந்த பாராட்டிற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் வாழ்த்துக்களும் மிக்க நன்றி சகோதரரே. தொடர்ந்து உங்களது ஊக்கம் நிறைந்த கருத்துக்களை என் பதிவுகளுக்கு தவறாது தாருங்கள். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. நான் டயட்டில் இருப்பதால் பத்து நாட்களுக்கு முன் இரவு உணவாக (5;30 மணி) உப்புமா கேட்டேன் (தட்டில் சாலட், பருப்பு வகைகள், ஒரு காய்கறி-கரேமது அல்லது கூட்டு, ஒரு உணவு.. எல்லாம் ஒரே ளவு இருக்கணும்) எண்ணெய் விடக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போட்டதால் ரொம்ப சுமாராக இருந்தது. மூன்று நாட்களுக்கு முன் அவளின் அம்மாவிற்கும் சகோதரனுக்கும் செய்த உப்புமாவில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் சூப்பராக இருந்தது. அதனால் இன்று பண்ணச் சொல்லலாம் என நினைத்தால் இங்கோ உப்புமா புராணம். (என் டயட்டை தினமும் படமெடுத்து அனுப்புஙதால், மருத்துவர் உப்புமா, ரவை என்பதால் தடா.. கோதுமை ரவையில் வேண்டுமானால் பண்ணிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டது சோகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /ஒரே ளவு இருக்கணும்) எண்ணெய் விடக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போட்டதால் ரொம்ப சுமாராக இருந்தது. /

      அடாடா.. டயட் என்றால் மிகவும் கடினம்தான்.. அதை மீறவும் முடியாது.. அதே சமயம் நாக்கின் சுவையை தடுத்து நிறுத்தவும் முடியாது. எங்கள் இளைய மகனும் இப்படித்தான் டயட் என்று சொல்லி, சில உணவுகளுக்கு தடா விதிப்பார். .

      கோதுமை ரவை உப்புமாவும் ருசியாகத்தான் அமையும். ஆனால், அதற்கும் உடன் சேருபவைகள் (எண்ணெய், வெங்காயம் போன்ற காய்கறிகள்) விதி விலக்கில்லாமல் இருக்க வேண்டும்.

      நல்ல ரவை உப்புமாவுக்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வெறும் ப. மி. இஞ்சி சேர்த்து செய்து சாப்பிட்டால் கூட சுகந்தான். அது போதும். விரைவில் அதற்கான சந்தர்ப்பம் தங்களுக்கு அமைய வேண்டுகிறேன்.

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பைப் பார்த்தால், கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டிய மற்ற டிபன் வகைகளை வீட்டில் உள்ளவர்கள் கேட்காமல் சுலபமாகச் செய்யக்கூடிய உப்புமாவைக் கேட்கவேண்டும் என்று பிரார்த்திப்பதுபோலத் தோன்றுகிறதே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பைப் பார்த்தால், கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டிய மற்ற டிபன் வகைகளை வீட்டில் உள்ளவர்கள் கேட்காமல் சுலபமாகச் செய்யக்கூடிய உப்புமாவைக் கேட்கவேண்டும் என்று பிரார்த்திப்பதுபோலத் தோன்றுகிறதே/

      ஹா ஹா ஹா. அப்படியில்லை. இந்த கற்பனை கனவின்படி இறைவனே வந்து என் சமையலை உண்டு சிலாகிக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். அது இந்தப் பிறவியில் நடந்தால் மகிழ்ச்சியின் எல்லைக்கே செல்லலாம் என்பதற்கான தலைப்பு அது. நடக்க வேண்டுமென நீங்கள் அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.🙏 நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. நல்ல உப்புமாவிற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம். தேவைனா ஒரு ஸ்பூன் சீனி போதும். உங்கள் வீட்டில் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. நல்ல தரமான - கவனிக்கவும் - நல்ல தரமான எலுமிச்சம்பழ ஊறுகாய்.

      Delete
    2. எனக்கு ரவா பொங்கலுக்கு நீங்க சொன்ன மாதிரி எலுமி கார ஊறுகாய் மிகவும் பிடித்தமானது. ஏன் சப்பாத்திக்கு, மெல்லிய தோசைக்கும் பிடிக்கும். ரவா உப்புமாவிற்கும் தொட்டுக்கொண்டுள்ளேன். அது மாதிரி மாங்காய் ஊறுகாய் வராது.

      Delete
    3. உண்மையில் எனக்கு எலுமிச்சம் ஊறுகாய் பிடிக்காது.  கிடாரங்காய் ரொம்....... பப்பிடிக்கும்.  சில இடங்களில் சில ஸைட் டிஷ் பொருத்தம்.

      Delete
    4. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உப்புமாவுக்கு தொட்டுக் கொள்ள தே. சட்னிதான் வேண்டுமென்பது புகுந்த வீட்டின் வழக்கம். அம்மா வீட்டில் உப்புமாவே அரிது என்பதால், அப்போது ஜீனி. (அதற்கு உடல் அப்போது எந்த தடையும் செய்யவில்லை.) இப்போது எங்கள் குழந்தைகளுக்கு இட்லி மிளகாய் பொடி,, சட்னி, சாம்பார் இத்யாதிகள் வேண்டியுள்ளது. பேரன் பேத்திகள் ஜீனி மட்டுந்தான் விரும்புகிறார்கள். எப்படியும் இந்த உப்புமா வாரத்தில் ஒரு முறை சமயத்தில் இரு முறை கூட நம் அனுமதிகளை கேட்டுக் கொண்டிராமல் இடம் பெற்று விடுகிறது. :)) தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. வணக்கம் சகோதரரே

      உங்களிருவரின் கருத்துரைகளுக்கு மிக்க நன்றி. எலுமி ஊறுகாய் தயிர் சாதத்திற்கு நன்றாக இருக்கும். ஆனால், நான் பொதுவாக இந்த ஊறுகாய்களை நிறைய போட்டுக் கொண்டதில்லை. சென்னை, மதுரை என வெய்யில் பகுதிகளுக்கும், இந்த காரவகை ஊறுகாய்களுக்கும் என் உடல் நிலை ஒத்துக் கொள்ளாமல் போய் விட்டது.

      /எனக்கு ரவா பொங்கலுக்கு நீங்க சொன்ன மாதிரி எலுமி கார ஊறுகாய் மிகவும் பிடித்தமானது. ஏன் சப்பாத்திக்கு, மெல்லிய தோசைக்கும் பிடிக்கும். ரவா உப்புமாவிற்கும் தொட்டுக்கொண்டுள்ளேன். அது மாதிரி மாங்காய் ஊறுகாய் வராது. /

      / சில இடங்களில் சில ஸைட் டிஷ் பொருத்தம்./

      உண்மை.. அதுவும் சிலவற்றிக்கென்று சிலதை சிலர் விரும்பித்தான் சாப்பிடுவார்கள்.மற்றும் சிலருக்கு அது விருப்பமில்லாமல் இருக்கும். அவரவர் மனநிலையை பொறுத்த உணவுகள்.

      தங்கள் இருவரின் கருத்து பரிமாற்றங்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. வணக்கம் சகோ
    தொடக்கத்திலேயே இது கனவு என்பது புரிந்தது.

    உப்புமா புராணம் சுவாரஸ்யமாக இருந்தது பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தாங்கள் பதிவின் தொடக்கத்திலேயே ஊகித்து அறிந்தது கண்டு மகிழ்வடைந்தேன்.

      உப்புமா புராணம் சுவாரஸ்யமாக இருந்தது என பாராட்டியமைக்கு என் அன்பான நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. மற்றைய அன்புள்ள சகோதர சகோதரிகள் யாரும் இன்றைய பதிவுக்கு வர இயலாத சூழ்நிலைகள் போலும்.. அவசரமில்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து படித்து கருத்திடுங்கள். உங்கள் அனைவரின் கருத்துகளை என் எழுத்தெனும் பயிருக்கு நல்லதொரு உரமாக நினைக்கிறேன். இதுவரை கருத்துக்களை பரிமாறி கொண்ட நட்புக்களுக்கு என் பணிவான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. மிக அருமையான உப்புமா கனவு.

    உங்கள் உப்புமா, எமலோகத்தார் சாப்பிட்டு மயங்கி விட்டார்களே!

    இன்று இங்கு ரவா உப்புமா தான்.
    சிறு வயதில் உறவினர் வீடுகளுக்கு (திருநெல்வேளியில்) சென்றால் மாலை நேரமாக இருந்தால் ரவா உப்புமா, தேங்காய் சீனி கலந்த கலவை, வாழைப்பழம், கை முறுக்கு, அல்லது தேன்குழல் இருக்கும் .
    எனக்கும் பிடிக்கும் இப்படி சாப்பிட.
    என் கணவருக்கு ரவா உப்புமா அதற்கு என்ன உபசரணை, பக்கமேளங்கள் தொட்டுக் கொள்ள வைத்தாலும்
    அதனால் செய்வது இல்லை.
    உறவினர்களும் அதை விரும்ப பாட்டேன் என்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /உங்கள் உப்புமா, எமலோகத்தார் சாப்பிட்டு மயங்கி விட்டார்களே!/

      ஹா ஹா ஹா. நிஜத்தில் என்னுடன் வசிக்கும் பூலோகவாசிகள் தயக்கத்துடன் மயங்குவார்கள். ஆனால், என் கற்பனையில் எமலோகத்தார் தயக்கமின்றி மயங்கி விட்டார்கள். தாங்களும் இந்தப்பதிவை சிலாகித்து சொல்லியிருப்பதற்கு என் மனம் நிறைந்த மகிழ்வுடனான நன்றி சகோதரி.

      ஆ.. அங்கும் உங்கள் வீட்டில் ரவை உப்புமாவா .? ஆச்சரியம்தான்..! நம் இருவருக்கும் எப்படி ஒத்துக் போகிறது என்பதை நினைத்தால் வியப்பு வருகிறது.

      நீங்கள் சொன்ன தின்பண்டங்களுடன் மாலை நேரம் அந்த சிறுவயது பிராயத்தில் கவலைகள் ஏதுமின்றி, ஒருவருக்கொருவர் அரட்டை அடித்தபடி கூடி உண்பது மிகவும் மகிழ்ச்சியை தருமல்லவா? இப்போது நான் அதை கற்பனையில்தான் காண முடியும். தங்களின் சிறு வயது அனுபவங்களும் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

      தங்கள் கணவருக்கு உப்புமா பிடிக்காதா? ஆம் சிலருக்கு அதை அதிக தடவை உண்ணப் பிடிக்காது. எங்கள் புகுந்த வீட்டிலும், சிலருக்கு அதை அறவே பிடிக்காது. ஆனால், இட்லி, தோசை இல்லாத நாட்களில் வேறு வழியின்றி ஒரு வித்தியாசமாகத்தானே இதை செய்கிறோம். இவங்கள் வீட்டில் அதற்கு நீங்கள் சொல்வது போல், பக்கத்துணையாக சுவையாக ஏதேனும் வைத்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. எங்கள் வீட்டில் எனப் படிக்கவும். "இவங்கள்" என வந்து விட்டது.

      Delete
    3. நானும் தப்பு தப்பாய் அடித்து இருக்கிறேன் அவசரத்தில் ஊர் பேர் தப்பு, என் கணவருக்கு உப்புமா பிடிக்காது என்பது மனதில் எழுத்தில் வரவில்லை.

      அவர்கள் ஹாஸ்டலில் படிக்கும் போது அடிக்கடி ரவா உப்புமா செய்வார்களாம், அதனால் பிடிக்காமல் போய் விட்டது. ரவா இட்லி, சட்னி, சாம்பாருடன் என்றாவது ஒரு நாள் சாப்பிடுவார்கள்.
      அவசரத்திற்கு கை கொடுப்பது ரவா உப்புமாதான்.

      Delete
    4. வணக்கம் சகோதரி

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      தட்டச்சு பிழை சர்வ சாதரணமாக வருகிறது. நாம் ஒன்று டைப்பிங் செய்தால் அது வேறு அர்த்தத்தை உடைய வார்த்தைகளை தருகிறது. சில நேரம் கவனிப்பதற்குள் கைவிரல்கள் அதை அவசரமாக வெளியிட்டும் விடுகிறது. நான் ஒற்றை விரலால்தான், (ஆள்காட்டி விரல்) என் கைப்பேசியில் தட்டச்சு செய்கிறேன்.

      ஓ.. அடிக்கடி சாப்பிட்டதால்தான் அவருக்கு பிடிக்காமல் போய் விட்டது போலும்..! ரவா இட்லிக்கு சாம்பார் நன்றாக இருக்கும். ஆம். உண்மை. ஒரு அவசரம் என்றால் உப்புமா கிளறினால்தான் சீக்கிரமாக டிபன் கடை முடியும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. // பிரபோ..! முன்பு பூலோகவாசிகள் செய்யும் புண்ணியங்களுக்கு தகுந்தபடி நேரடியாக தேவ லோகத்திற்கும்,செய்த பாவங்களுக்கு தக்கபடி இங்கும் அவர்களை கொண்டு வந்து கொண்டிருந்தோம். இப்போது மாற்றி இயற்றிய புது சட்டத்தை மறந்து விட்டீர்களா.? இங்கு முதலில் வந்த பின் அவர்கள் செய்த பாபங்களை அலசி ஆராய்ந்து, அதற்கேற்றபடி புண்ணிய கணக்கையும், கூட்டி,கழித்து பெருக்கி, வகுத்தப் பின்தான் உடனே வையகத்துக்கு அனுப்பவா... ,? இல்லை, தேவ லோகவாசியாக சிறிது காலம் இருக்கும்படி செய்து விட்டு,பின்பு சுகவாசியான மானுடபிறப்பிற்கென பிறக்கும்படி செய்து அனுப்பவா..! என நீங்களும், பிரம்மதேவரும் சேர்ந்து இயற்றிய அந்த சட்டத்தை மறந்து விட்டீர்களா.. ? //

    இப்படி எல்லாம் புது சட்டமா?


    "//சித்ர குப்தா..! இவரது பாப கணக்குகளை ஏதும் ஆராய வேண்டாம். இவருக்கு இப்போது எந்த தண்டனையும் தரவேண்டாம். எனக்கு இந்த வஸ்துவை ருசிக்க ஆசை வரும் போது, இதை மட்டும் செய்து தரச் சொல். அதற்காக இவருக்கு வசதியான அறை ஒன்றை ஏற்பாடு தந்து அதில் தங்கச்செய். இதுதான் இவருக்கு இங்கு யாம் தரும் தண்டனை."//

    உங்கள் உப்புமாவை சுவைக்க நல்ல தண்டனை தான்.


    //அதற்குத்தான் இவரை அங்கும் அழைத்து வர உத்தரவிட்டிருக்கிறார் எங்கள் பிரபு. அவருக்கென்று ஒரிரு நாட்கள் பூலோகத்தில் பூஜைகளை செய்யும் பொழுதில் இவர் படைத்ததை அவரால் நேரடியாக வந்து உண்ண இயலவில்லையாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த பதார்த்தத்தை எங்கள் பிரபுவுக்கும் உண்ண ஆசைதான். இவரின் கணக்கை ஆராய்ந்து நாங்கள் வந்து அழைத்துப் போவதற்குள் நீங்கள் இங்கே அழைத்து வந்து விட்டீர்கள்....!!" அவர்கள் பேச, பேச, கேட்டபடி நின்றிருந்த எனக்கு தலை சுழல்வது போலிருந்தது. //

    நிதானமாக வரும் புரட்டாசி சனிக்கிழமை செய்து கொடுத்து விடுங்கள் . சுவைத்து சாப்பிட்டு விட்டு இங்கு கமலா பக்தை வீட்டிலேயே தங்கி விடுகிறேன். கமலாவுக்கு புது தெம்பை கொடுத்து எனக்கு பிடித்த பண்டங்களை செய்து தர சொல்லி சாப்பிட போகிறேன். என்று சொல்லி விட போகிறார் நாராயணன் லட்சுமியிடம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /இப்படி எல்லாம் புது சட்டமா?/

      ஆம்.. இப்படிக்கூட அங்கு சட்டங்கள் வந்துள்ளது. ஹா ஹா. சகோதரர் நெல்லைத் தமிழர் அங்கிருக்கும் வேறு பல சட்டங்களையும் அவர் கருத்தில் குறிப்பிட்டுள்ளார். :))

      பதிவில் அத்தனையையும் ரசித்துப் படித்து இங்கு குறிப்பிட்டு சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரி.

      /நிதானமாக வரும் புரட்டாசி சனிக்கிழமை செய்து கொடுத்து விடுங்கள் . சுவைத்து சாப்பிட்டு விட்டு இங்கு கமலா பக்தை வீட்டிலேயே தங்கி விடுகிறேன். கமலாவுக்கு புது தெம்பை கொடுத்து எனக்கு பிடித்த பண்டங்களை செய்து தர சொல்லி சாப்பிட போகிறேன். என்று சொல்லி விட போகிறார் நாராயணன் லட்சுமியிடம்./

      அப்படியே செய்கிறேன் சகோதரி. நாராயணன் வந்து எங்கள் வீட்டில் தங்கிச் சென்றால் நல்லதுதானே..! உங்கள் வாக்கு மூகூர்த்தம் நல்லபடியாக பலிக்கட்டும். நாராயணர் மட்டும் வராமல், அன்னை மஹாலக்ஷ்மியுடன் வந்து சேர்ந்திருக்கட்டும். இதற்கு எத்தனைப் பிறவிகள் தவம் செய்திருக்க வேண்டுமோ? இந்தப் பிறவியில் அது ஏதேச்சையாக கிடைத்தால் ஆகா.. நான் எத்தனை பாக்கியசாலி.! அப்படி எங்களுடன் வந்து தங்கும் போது, நம் நட்புகள் வீட்டிலும் சென்று தங்கி உங்கள் அருளை அனைவருக்கும் தாருங்கள் என கண்டிப்பாக அவரிடம் வேண்டுகோள் விடுப்பேன். ஆக.. நம் அனைவருக்கு மே நல்லது நடக்கும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. வீட்டுக் கடமையில் இருக்கும் போது அழைத்தால் வேலையை முடித்து விட்டு தான் வருவேன் என்று சொல்லும் வாய்.
    ரசித்து படித்தேன், நன்றாக நகைச்சுவை எழுத வருகிறது உங்களுக்கு.

    வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      அவ்வளவு சுலபமாக அவர் வந்து அழைத்தால் நல்லதுதானே சகோதரி..! வீட்டில் யாருக்கும் ஒரு தொந்தரவு தராமல் அந்த பாக்யம் எனக்கு அமைய வேண்டுமென்றுதான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்.

      சும்மா என் மனகிடக்கையை நகைச்சுவையாக அடிக்கடி இப்படிச் சொல்லுவேன்.

      பதிவை ரசித்துப்படித்து தங்களின் வேலைகளுக்கு நடுவில் விபரமான கருத்துரைகளை தந்து, பாராட்டுகளும், வாழ்த்துகளும் தந்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. நான் நினைச்சேங்க அந்த உலகிலும் கண்டிப்பாக உப்புமா செய்யச் சொல்லி எம ராஜா கேட்கப் போகிறார் என்று வாசித்து வந்த நேரத்திலே நீங்களே அதையும் சொல்லிட்டீங்க!!!! ஹாஹாஹா....

    ஏன்னா நானும் இப்படி சிலது எழுதி வைச்சிருக்கேனே!!!! கதையாக....அதில் சில பிட்ஸ் தான் பாட்டி கதையில் இடையில். நான் இப்படி எழுதியதற்கு பாட்டிதான் மெயின் காரணம். அதிலிருந்து பிறந்த கதையை எழுதி வைத்திருக்கிறேன் ஆனால் அது முடிக்கப்படவில்லை!!!! வழக்கம் போல.

    ரொம்ப அழகா எழுதிர்யிருக்கீங்க க்மலாக்கா...இதோ முழுவதும் வாசித்து வரேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      வாருங்கள் சகோதரி. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி

      உங்களைத்தான் காணவில்லையே என உங்கள் வரவுக்கு காத்திருந்தேன் வந்து விட்டீர்கள். மிகவும் மகிழ்வாக உள்ளது.

      நீங்களும் இதைப்போல் எழுதி வைத்துள்ளீர்களா ? சீக்கிரமாக முடித்து வெளியிடுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம். உங்கள் எழுத்தின் திறமைகள் பல நல்ல கதைகள், பதிவுகள், அனுபவங்கள், சமையல் என பல விதங்களில் பிரகாசிப்பதை நான் இந்த பதிவு உலகிற்கு வந்த பிறகு கண்டிருக்கிறேன்.

      ஆம்.. நம் பாட்டிகள்தான் நமக்கு எத்தனை விஷயங்களை போதித்து வளர்த்திருக்கிறார்கள்.. உங்களுக்கு அப்பா வழி பாட்டி. எனக்கு அம்மா வழி பாட்டி. எங்கள் பாட்டிதான் எங்கள் அம்மாவை விட கருத்துடன் எங்களை வளர்த்தார்கள். ஆனால், 19 வயது வரை அவர்களிடம் கற்றது ஏராளம். அதன் பின்னும் தொடர முடியாதபடிக்கு அவர்களின் ஆசைப்படி திருமணம் நடந்து விட்டது. இன்னும் அவர்களுடன் சேர்ந்திருக்கும்படியாக அப்போதைக்கு திருமணமாகாமல், வருடங்கள் தள்ளிப் போயிருக்க கூடாதா என பலமுறை நான் நினைத்திருக்கிறேன் . என்ன செய்வது.. எல்லாம் விதி வழி என நான் இன்றளவும் நம்புவது எங்கள் பாட்டியின் வளர்ப்பினால்தான்..

      நிதானமாக வாருங்கள் சகோதரி. உங்களின் அனுபவ கருத்துரைகள் என் எழுத்துக்கு ஒரு உரம். பலம். காத்திருக்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. ஹாஹாள், ஆஹா ஆரம்பத்திலேயே கனவுன்னு தெரிந்துவிட்டது ஆனால் செம சுவாரசியமா எழுதியிருக்கீங்க கமலாக்கா.

    அங்க உங்கள் எண்ணங்கள் அவங்க பேசிக் கொள்வதான உரையாடல்கள், அவங்க சொல்லிக் கொள்ளும் பாவக் கணக்குதண்டனை அது புதிய சட்டத்தின் படி waiver வழங்கப்படுவது என்று செம சுவாரசியமா உங்க கற்பனை அசாத்தியமா சிறகடிக்க எழுதியிருக்கீங்க!
    என்னதான் சொல்லுங்க உப்புமா உப்புமாதான். எனக்கும் ரொம்ப்அப் பிடிக்கும். ஆனால் நான் எண்ணை கையில் தெரியும்படி செய்வதில்லை!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      மீண்டும் வந்து பதிவை படிக் த்து ரசித்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி

      கனவு என ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டதா? "தூக்கமும் கண்களை தழுவட்டுமே." என நீ ஆரம்பித்தால், அது சம்பந்தமான கனவு பதிஙதான் இது என தெரியாமல் போகுமா" என மனது இடித்துச் சொல்கிறது. ஹா ஹா ஹா.

      பதிவை ரசித்து தந்த தங்களது அன்பான கருத்துக்கும், பாராட்டுதலுக்கும், மிக்க நன்றி சகோதரி.

      உங்களுக்கும் உப்புமா பிடிக்கும் என்ற விஷயம் அறிந்து மகிழ்ச்சி. எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்தாலும் அது ருசியாகத்தான் அமையும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. வாசித்து முடித்ததும் என்னவோ தெரியவில்லை உப்புமா சாப்பிட வேண்டும் போல் தோன்றிவிட்டது!! உப்புமாவை வைத்து ஒரு கற்பனையில் அருமையாக, சுவாரசியமாக நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      பதிவுக்கு உங்களின் வரவும் கருத்தும் மன மகிழ்ச்சியை தருகிறது.

      /வாசித்து முடித்ததும் என்னவோ தெரியவில்லை உப்புமா சாப்பிட வேண்டும் போல் தோன்றிவிட்டது/

      ஹா ஹா ஹா.. ஆகா.. செயது சுவைத்து வீட்டீர்களா? தங்களது பாராட்டுதல்கள் மன மகிழ்வை அளிப்பது மட்டுமின்றி என்னை மேலும் எழுத வைக்க ஊக்கமும் அளிக்கிறது. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete