Pages

Sunday, March 17, 2019

மயிலாக நான் மாற வேண்டும்.


சென்ற வருடம் திருநெல்வேலிக்கு  போகும் போது அகஸ்தியர் அருவிக்கும் சென்றிருந்தோம். வரும் வழியில், பல இயற்கை காட்சிகள், அருமையாக இருந்தது. ஓரிடத்தில் காரை மெதுவாக ஓட்டி வரும் போது ( ஓட்டி வந்தது அண்ணா பையன்தான்.) நாங்கள் வந்த காருக்கு அருகில் தைரியமாக ஒரு மயில் வந்து நலம் விசாரித்தது.(நாங்களும் காருக்குள் இருந்ததினால் தைரியமாகத்தான் இருந்தோம்.) ஏதாவது சாப்பிட இருக்கிறதா?எனகேட்கும்  பாவத்தில், காரைச் சுற்றி வந்தது. கைவசம் கொண்டு போன நொறுக்குத்தீனிகள் பையை துழாவினோம். நாங்கள் இயற்கையை ரசித்த போதினில், கண்கள் இமை கொட்டாதிருந்த சமயம் பார்த்து, கையும், வாயும் மட்டும் நட்புறவாக பேசி வைத்த மாதிரி பையை காலி செய்திருந்ததை  கண்கள் அப்போதுதான் பார்த்து அதிர்ச்சியடைந்தது. "நல்லவேளை.!" ( அந்த மயிலுக்குத்தான்)  ஒரு அரை டஜன் முறுக்கு பாக்கெட் மட்டும் சற்று முறுக்கிக்கொண்டு  வாய், கைகள் நட்புறவில் சேராமல் "கா"விட்டு  ஓரத்தில்  ஒளிந்திருக்க கண்டு கண்களுடன் சேர்ந்து மனதும் நிம்மதியடைந்தது.

இவர்கள் ஒன்றும் தராமல் நம்மை வேடிக்கை பார்க்கும் ஜீவன்கள் போலிருக்கிறது என்ற எண்ணத்தில் எங்களை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு "ஒருமையில்" வந்த "அம்மயில்" நகரும் முன் நாங்கள் அந்த  முறுக்கை கார் ஜன்னல் கதவை திறந்து வெளியில்  போட சற்று அவநம்பிக்கையுடன் திரும்பிய மயில் அட,.! முறுக்கா...!  இதைக் கொடுக்கத்தான் இவர்களுக்கு இத்தனை முறுக்கா ? என்று இளப்பமாக ஒருதடவை பார்த்து விட்டு சாப்பிட ஆரம்பித்தது.

அப்போது எடுத்த படங்கள்தான் இவை.


நலமா? என விசாரிக்க வந்த மயில்.


உங்களிடம் சாப்பிட ஏதாவது இருக்குமாப்பா ...?


அட.! உங்களைத்தான் கேட்கிறேன்.. உங்கள் இதய கதவை... வேண்டாம்.. கார் ஜன்னல் கதவை திறக்க கூட மனமில்லையா உங்களுக்கு?


அட. .! போங்கப்பா.. நீங்களும் உங்க உபசாரமும்.. ஏதோ தேடு தேடென்று தேடுகிறீர்களே ஒழிய ஒன்றும் கை நீட்டி வெளியில் வர மாட்டேங்குது..


நானும் எவ்வளவு நேரந்தான் பொறுமையாயிருப்பது? சரிப்பா.. வரட்டா..! வேறே ஏதாவது வண்டி வந்தா அவங்ககிட்ட கேட்டுக்கிறேன்.. அடேடே.! கிளம்புற நேரத்திலே கார் ஜன்னல் கதவு லேசாக திறக்குதே.!


ஒரு மட்டும் ஒரு முறுக்கை ரொம்பவும் முறுக்கிக்காமே எப்படியோ போட்டுட்டாங்கப்பா.. சரி.. சாப்பிட்டு பார்க்கலாம்.


இதைக்கடிக்க கூட முடியலயே.! இதை எங்கேயிருந்து வாங்கிட்டு வந்தாங்களோ.! இதையா இந்த மனுசங்க இவ்வளவு நேரம் தின்னுகிட்டு வந்தாங்க... சுத்தமா ரசனையில்லாத மனுசங்கப்பா...


இது முறுக்கு தானா? வேறு ஏதாவது தந்து நம்மை கடத்தி, கிடத்தி காரிலேயே கொண்டு போயிடுவாங்களா.. ?


இந்தப் பக்கம் வேற நிறைய போட்டிருக்காங்களா? இதைப் பாக்கவேயில்லையே.. .!


இதுவாச்சும் நல்லாயிருக்குமா . ? கொஞ்சம் டவுட்டு வருகிறது. அதான் கேட்கிறேன்...


இல்லை.. அந்தப் பக்கம் ஒன்னு இருக்கே.. அதை சாப்பிடலாமா?


அட...! இங்கேயும் அதே வஸ்துதான் போடறீங்களா? இது எப்படியிருக்குமோ?


என்னவோ.. போங்க.! சுத்தி, சுத்தி வந்ததுக்கு ஒரே "கைசுத்தல்" முறுக்கா போட்டுட்டு கிளம்புறீங்க! இது எங்கிட்டே வரும் போது எத்தனை "கைசுத்தி" வந்திருக்கோ .! சரி.. சரி... நிதானமா சாப்பிட்டுகிறேன். போயிட்டு வாங்க.. ஆனா.. அடுத்த தடவை இந்த முறுக்கை மட்டும் கொண்டு வந்துராதீங்க...! என்ன இருந்தாலும் உணவை கொடுத்ததுக்கு நன்றி.. .! உங்களுக்கும் மட்டுமில்லை.. நம்மையெல்லாம் படைத்தவனுக்குந்தான்..!

இத்தனை மயில் படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு போனஸாக இந்த வீடியோ..

எத்தனை அழகாக பறக்கிறது இந்த ண் யில்...



"மயிலாக நான் மாற வேண்டும்.  வள்ளி மணவாளன் என் தோளில் இளைப்பாற வேண்டும்." என அருமையாக பாடியுள்ள சீர்காழியின் கம்பீரமான வெங்கல குரலுடைய பாடல்  நினைவுக்கு வருகிறது.

இதோ.. போனஸுக்கு ஒரு போனஸாக இந்தப் பாடலும்..... இதையும் கேட்டு ரசிக்க வேண்டுகிறேன். 


இந்த வீடியோக்கு மட்டும்... கூகுளுக்கு  நன்றி....

என் பதிவையும், நான் எடுத்த மயிலாரின் படங்களையும். நான் பதித்த வீடியோவையும்,  கூகுளிடமிருந்த பெற்ற சீர்காழியின் பாடல் வீடியோவையும் ரசித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

Friday, March 1, 2019

கடத்தலில் வந்த கலவன் சாதம்...

சகோதர,சகோதரிகள்
அனைவருக்கும் வணக்கம். 

வலையுலகில் நிறைய எழுத ஆசை. என் எழுத்தை (எழுத்தை என்பதை விட ஆசையை) இங்குதான் பதிவாக்கி சந்தோஷம் அடைய முடியும். என்னைப் போன்ற கத்துக்குட்டிக்கு ஆதரவாக இருக்கும் நல்லுள்ளங்களுடன் கூடிய பல பெரிய,, திறமையுள்ள பதிவர்கள் கோலோச்சி கொண்டிருக்கும் வலைத்தளத்தில் எழுதி அவர்களின் அன்பான கருத்துக்களையும், வாழ்த்துகளையும் பெறுவதை பெரும் பாக்கியமாக கருதி எழுதும் ஆசையை வளர்த்து வருகிறேன். அவ்வப்போது ஆசைகளை எழுத்தாக்கி பதிவிட்டும் வருகிறேன். என் வலைத்தளம் வந்து படித்து என் பதிவுக்கு மட்டுமல்லாது, கதை, கவிதை என்று நான் எழுதும் அனைத்திற்கும், ஊக்கமும், உற்சாகமும் தந்த அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகள்.

சமீப காலமாக பதிவுகள் எழுத பெரிய பெரிய தடைகள் விழுந்து விட்ட என் நிலையை  நானும் விளக்கியுள்ளேன். அப்படியும்  ஏதாவது எழுத வேண்டுமென மனமும் பொழுதும் ஒத்துழைத்த ஒரு நேரத்தில் ஒரு பக்தி பதிவாக இந்த வருடம் முதலில்  ஆரம்பிக்கலாமென, "மனதினுள் கடத்தல்" என ஒரு பதிவு எழுதினேன். அதற்கு கருத்துரை தந்தவர்களுக்கு மிக்க நன்றி.

வந்த கருத்துக்களும், அதற்கு  பதிலாக நான் தந்த கருத்துக்களுமாக  37ஐ தொட்டு கடந்து போய்க் கொண்டிருக்கையில், வேறு ஏதாவது எழுதலாம் என நான்  முயற்சித்து கொண்டிருந்த போது  கண்மூடி திறந்த ஒரு நிமிடத்தில் ( அந்த ஒரு விநாடி ஒரு மயக்கம் கலந்த உறக்கம்.. காரணம் அப்போது பேய்களும் உறங்கி விழும் அர்த்த ராத்திரி.. அப்போதுதான் எனக்கு கிடைத்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாமென்று  வழக்கமான கைபேசியில்,  பதிவொன்றை டைப் பண்ணிக் கொண்டிருந்ததில் எப்பேர்பட்ட உறக்கமும் மயக்கம் கலந்துதானே வரும்.. இதிலென்ன ஆச்சரியம்? .) என் "மனதினுள் கடத்தலை" என் விரல்கள் என் மூடித்திறந்த கண்ணெதிரிலேயே  சுலபமாக "கடத்திச்" சென்று விட்டன.

ஒரு வங்கியில் சிரமப்பட்டு சேமித்ததை ஒரு அவசர தேவைக்காக எடுக்கலாம் என செல்பவர்களுக்கு, எடுத்த பணத்தையும், கையோடு கொண்டு சென்ற கொஞ்ச பணத்தையும் சேர்ந்து ஒரு பையில் வைத்து கொண்டவாறு அந்த அவசர தேவையை சுபமாக முடிக்கலாம் என திரும்பும் போது, அதை மொத்தமாக சேர்த்து இழக்கும் போது  எவ்வளவு வருத்தம் வருமோ. .! அந்த வருத்தம் அன்று இரவு என்னையும் தொற்றிக் கொண்டது. ஏனென்றால்,, என் கையிருப்பை விட சேமித்ததை பொக்கிஷமாக கருதியவள் நான்.

இதில் கையோடு வைத்திருந்த பணம் நான் எழுதிய பதிவு. 

சேமித்ததால் வந்த பணம் அன்பான சகோதர,  சகோதரிகள் அனைவரின் கருத்துக்கள். 

இரண்டையும் கோட்டை விட்டவுடன் உறக்கமும், அதனுடன் வந்த மயக்கமும் ஒன்றாகவே கை கோர்த்துக் கொண்டு போயே  போச்சு. மறுநாள் காலை தெரிந்தவர்களிடம்  (என் குழந்தைகள்தான்) காணாமல் போனதை சொல்லி  பத்திரமாக மீட்டு வந்து விடலாம் என்ற நினைப்பில் படுத்தாலும், "கடத்தலை"   அங்கீகரிக்க இயலாமல் "மனதினுள் " பதிவின் ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறு  திசைகளில், நர்த்தனமாடியபடி இருக்க, வந்த கருத்துக்களும் சுதி லயத்தோடு ஒட்டாமல் இசை பாடி  தப்புத்தாளங்கள் போட, தூக்க தேவதைக்கு நித்திரையை மறந்து ஒரே கொண்டாட்டந்தான்...!

அந்த கொண்டாட்டத்தில் ஈடுபடாமலிருக்க, எழுதியதை நினைவில் கொணர்ந்தது மீண்டும் எழுதினால் என்ன?  என்று தோன்றியது. படிக்கும் காலத்தில் எழுதியதை மனனம்  செய்ய  அப்போது ஒத்துப் போன மூளையில், இப்போது புரட்டிப் போட்டு சிந்தித்தாலும், எழுதிய வார்த்தைகள் வரி பிசகாமல் வருவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்ட பின், ஒரளவுக்கு வரிகள் வசப்பட ஆரம்பித்தன. அனைவரின் அன்பான கருத்துக்களையும், அவ்வாறே நான்  முயற்சிக்க,  வீட்டிலுள்ள அனைவரும் அவர்களது பெற்ற வரம் கலையும் நேரத்தில், எனக்கு ஒரு மட்டும் வந்தது.... உ.ற.க்.க.ம்... ஹா. ஹா ஹா. ஹா

பின் காலை "பாதுகாவலர்" துணை கொண்டு  "வலை வீசி" தேடியதில், "கடத்தியதுகள்" மூலைக்கொன்றாக கிடைத்தது . சேமித்ததையும் சேர்த்த பின்  வங்கிக் கணக்கில் போட்டு சேர்க்கிறேன். பாராதவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது வந்த பசி மயக்கத்திற்காக கோவைக்காய் சாதம்.. நான்கு நாட்களாக வெவ்வேறு விதத்தில் உபயோகித்த கோவைக்காய், (அவியல், காரக்கறி, கூட்டு, சாம்பார்) இன்னமும் மிகுதியாக இருந்து கொண்டேயிருந்தது. இன்று என்னை பயன்படுத்த விட்டால், நாளை கண்டிப்பாக ப(கி)ழமாகி விடுவேனுங்கோ..! என்று பயமுறுத்தியபடி மிகவும் கோவத்துடன்  காத்துக் கொண்டிருந்தது. நமக்கே கோவம் வரும் போது, கோவ(வை) க்காய்க்கு வராதா என்ன?

                                   நன்றாக


                                      அலம்பி


எடுத்த கோவக்கார காய்கள். 


வறுப்பதற்கு எடுத்த  ( இல்லை.. இல்லை... வறுத்த பின் எடுத்த என்று மறுத்துக் கூறும் நிலையில் நாங்கள்  இல்லை..  ஏனென்றால் ஏற்கனவே எங்களை வறுத்து எடுத்து விட்டார்களே..) ஒரு ஸ்பூன் க. ப, ஒரு ஸ்பூன் உ. ப, இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை  காரத்திற்கு அவரவர் விருப்பம் போல் மி. வத்தல்  நான் 5,6 எடுத்திருந்தேன். இரண்டு ஈர்க்கு கறிவேப்பிலைகள்.


  வறுத்த  பின்னும் அதே போஸில்                        சலிப்பில்லாமல் நாங்கள்தான்..


    பொடிதாக   அரிந்த  இரண்டு  அல்லது            மூன்று  பெரிய  வெங்காயம்..


கோவைக்காய்க்கு கோவம் என்று பாட்டு பாடி விட்டு கண்ணில் நீர் வர பெரிதாக அரிந்து வைத்து இருக்கும் எங்களை "பொடிதாக" என்று  உங்களுக்கு அறிமுக  படுத்துகிறார்கள். நாங்க எப்படி.?  எவ்வளவு கோவம் இருந்தாலும், எங்களைத்தொட்ட வர்களின்  கண்ணுல தண்ணியை வர வைத்து  பார்த்துருவோம்ல்லே.....


அலம்பி எடுத்த கோவைக்காய்களை இருப்பக்கமும் காம்பு நீக்கியபின், கொஞ்சம் பழுத்ததை அது கோவப்பட்டாலும்  பரவாயில்லையென்று ஒதுக்கி விட்டு, மற்ற காய்களை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டு சுற்றுக்கள் சுற்றி வைத்துக்கொள்ளவும்.


இதுதான் எங்களுக்கு கோவம்..! கவிஞர்கள் பெருமையாக "கொவ்வைப்பழம்" போலும் சிவந்த அதரங்கள் என பெண்களின் உதட்டழகிற்கு  எங்களை உதாரணம் காட்டி விட்டு,  காலப்போக்கில் பெயரையும் "கோவைக்காய்"  என மாற்றிவிட்டு, பழமாகிப் போனால நன்றாக இருக்காது என இப்படி ஒதுக்கி வைத்தால்..... எங்களுக்கு கோபம் வராமல் இருக்குமா? இயல்பாகவே பழம் எங்கள் பெயருடன் ஒட்டிக் கொண்டது. செடியிலிருக்கும் போதும் கிளிகளுக்கு, மற்ற பறவைகளுக்கு பயனாகிறோம். எங்களிடம் இருக்கும் மருத்துவ குணம் உங்களின் "இனிப்பு நோயை" கட்டுப்படுத்தும் திறனுடையது தெரியுமா?


ஒரு வாணலியில் கடுகு, உ. ப தாளித்துக் கொண்டு அரிந்து வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.


அது நன்றாக வதங்கி வரும் சமயத்தில்,


துருவிய கோவைக்காயைப்போட்டு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் வேக விடவும்.


வெந்த அதனுடன், வறுத்து வைத்ததை கரகரப்பாக பொடித்து அதனுடன் கலந்து


வாசம் வரும் வரை கலவைகளை திருப்பி விட்டு ஐந்து நிமிடங்களில் அனைத்தும் நன்கு கலந்ததும்,


ஏற்கனவே தயாராக ரெடியாகி  உதிரியாக ஆற வைத்து காத்திருக்கும் சாதத்தை  இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து இதனுடன் கலந்து   விடவும்.


கோவைக்காய்  சாதம் தயார். மேல் அலங்காரத்துக்கு மு. ப வேண்டுமானால் (ஒத்துக் கொள்கிறவர்கள். போட்டுக் கொள்ளலாம். ஆனால் போட்டால் அது  மறுப்பேதுமின்றி ஒத்து கொள்ளும். ) பொடித்து வறுத்து போட்டுக்கொள்ளலாம்.


இதற்கு வழக்கம் போல் தயிரில், பச்சை மிளகாய் தேங்காய் அரைத்து விட்டு  கடுகு தாளித்து தொட்டுக்கொள்ளலாம். அதுவும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது.


இப்ப நம்ப கோவைக்காய்க்கு  கோவம் தணிந்து சாதத்துடன் நட்புறவாகி விட்ட காரணத்தால் சமரசம் ஆகி இருக்கும்,. இரண்டாவதாக அதன் பயன்களை அவையே "அவை" முன்னால் சமர்ப்பிக்க வேறு வைத்து விட்டேனே.! 


இனி என்ன? தடையேதுமின்றி கோவைக்காய் சாதத்தை சாப்பிடலாம்.!  இல்லையேல், இதுவும் என் உறக்க மயக்கத்தில், என்றேனும், ஒருநாள் ஓடி விடும்.

நன்றி...அனைவருக்கும்.