Friday, November 6, 2015

படித்ததில் பிடித்தது


வணக்கம் நட்புறவுகளே.!

இடைவெளிகள் விட்டு அவ்வப்போது வந்து ஏதாவது என் மனதில் பட்டதை எழுதிவிட்டுச் செல்வதே சிறிது காலமாக என் வாடிக்கையாகி விட்டது. அதையும் பொறுத்துக் கொண்டு மறவாது என் தளம் வந்து  நான் கிறுக்கியதை படித்து  கருத்துக்களும், வாழ்த்துரைகளும் தந்து விட்டுப் போகும் நல்ல உள்ள்ங்களுக்கு நான் எத்தனை நன்றிகளை ௬றினாலும் போதாது.

வலைத்தளம் வந்த புதிதில் பதிவுகள் என்றால் என்ன.?  எப்படி நாமும் எழுதுவது.? என்றெல்லாம் அவ்வளவாக தெரியாமல், கதைகள், புதுக்கவிதைகள்   என்ற பெயருடன் ஏதோ அளந்துவிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எழுத்து மேலுள்ள ஆழ்ந்த பற்றினால், நாமும் ஏதாவது எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற பிடிப்புடன் தொடர்ந்தேன். பிறகு  அனைவரது பதிவுகளையும் விடாமல் படிக்க வேண்டும். அனைவருக்கும் கருத்துரைகள் இட்டு , அனைவரும் என் வலைத்தளம் வந்து என் எழுத்துக்களுக்கும்  கருத்துரை தந்து நட்பு வட்டங்கள் பெருக வேண்டுமென்ற ஆவலுடனும்  இருந்தேன். ஆனால், அனைவருமே நன்றாக எழுதுகிறார்களே இதன் நடுவில்நம்மால்எப்படி என்ற தாழ்வு மனப்பான்மையோடு ௬டிய சிறு தயக்கமாக இருந்தாலும், வலைத்தளத்தின் ஒரு ஓரமாக உலாவிக் கொண்டேயிருந்தேன். ஆனால் என் எழுத்தையும் நேசித்து இத்துனை நாள் எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.


சிறிது காலமாக என் இல்லச் சூழலினால்  என் எழுத்துக்கள் தடைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனைவரின் வலைத்தளம் சென்று விடாமல் படிக்க ௬ட நேரமில்லை. அதற்காக அனைவரிடமும் மன்னிப்பை கோறுகிறேன். மன்னிக்கவும்.! இதோ.! இம்மாதம் 18 ல் நடைபெறும் இளைய மகனின் திருமண வைபவத்திற்காக  வேலை பளுவோடு நேரம் நகர்ந்து கொண்டிருக்கிறது.  இதை அனைவருக்கும் தெரிவித்து அனைவரின் மனதாற வாழ்த்துக்களை எதிர்பார்த்தும் இடையில் ஒரு பதிவாக படித்ததில் பிடித்ததைபகிர்ந்து கொள்ளும் சாக்கிலும், ஒரு சிறு உலா வந்து போகிறேன். இனி நேரம் கிடைக்கும் தருணத்தில், என் எழுத்துக்களும், விடாமல் வலையுலகில் சுற்றி வரவேண்டுமென்று சகோதர, சகோதரிகள் எனக்காக பிரார்த்திக்க வேண்டுமென்றும், பணிவு கலந்த அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நன்றிகள்.!


ஆண்டவனின் அருளின்றி எதுவும் சரி வர அமையாது என்பது நாமனைவரும் அறிந்த உண்மையான விஷயம். எத்தனையோ பிரயத்தனங்களை நம் (மனித) முயற்சியில் முடித்து விடலாம் என்று நாம் மனக்கோட்டைகள் கட்டி காரியத்தில் இறங்கினாலும், அதற்கு ஒத்துழைப்பாக அவன்அருளும் ஒரு பக்கபலமாக துணை வர வேண்டுமென்பதை உணர்த்தும் செய்தி இதோ..!


கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.
”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.
பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.
கடவுள் உடனே,
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.
விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.
”மழையே பெய்” என்றான்.
பெய்தது.
நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.
ஈரமான நிலத்தை உழுதான்.
தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.
மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.
பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.
வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.
அறுவடைக் காலமும் வந்தது.
விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.
அதிர்ந்தான்.
உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.
அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.
”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.
“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.
கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.
மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.
போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.
எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.
தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.
வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.
பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.
இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.
பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.
பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.


இரண்டாவதாக, ௬றப்படும் செயதி,  நம் வாழ்வில்  அதாவது  வாழ்ந்து கொண்டிருக்கும் போது, நம் செயல்களை குறித்து எவர் பாராட்டியோ, தூற்றியோ, விமர்சனங்கள் அளித்தாலும், அதை குறித்து கவலை கொள்ளாது நம் கடமையை  நாம்  இயன்றவரை செய்து கொண்டிருந்தால், விமர்சனங்களின் பாதிப்புக்கு உள்ளாகாமல்,  அதன் சலசலப்பின்று தப்பித்து நிம்மதியாக இருக்கலாம் என்பதற்கு சான்று.

பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகப் பெரிய கோடீஸ்வரரான அவர், ஒருநாள் அத்தனை செல்வத்தையும் துறந்துவிட்டு துறவறம் பூண்டார். கோவணத்துடன் கிளம்பினார். கையில் திருவோடு வைத்திருப்பது கூட உண்மையான துறவுக்கு எதிரானது என்பது அவர் கருத்து.
ஒருமுறை ஒரு வயல் வழியாக நடந்து சென்றவர் மிகவும் களைப்படைந்தார். அப்படியே வரப்பில் படுத்து உறங்கினார்.
வளர்ந்திருந்த நெற்செடிகள் காற்றில் அசைந்து அவரின் சட்டை அணிந்திராத உடம்பில் குத்தி ரணப்படுத்தின. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாதவராக அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
அப்போது பெண்கள் சிலர் அந்த வரப்பு வழியாக நடந்து வந்தனர். பட்டினத்தார் வரப்பின் மீது படுத்திருந்த காரணத்தால் அவர்களால் அவரைத் தாண்டி செல்வது கடினமாக இருந்தது. அவர்களுக்கு அவர் பட்டினத்தார் என்பது தெரியாது. யாரோ ஒரு சாமியார் என்று நினைத்தனர்.
அப்போது அதில் ஒரு பெண், “”யாரோ ஒரு மகான் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது,” என்று கூறி வரப்பை விட்டுக் கீழே இறங்கி நடந்தாள்.
இதைக் கேட்ட இன்னொரு பெண் மணியோ, “”இவரா பெரிய மகான்? ஆசையை அடக்க முடியாமல் தூங்குவதற்குக் கூட வரப்பை தலையணையாகப் பயன்படுத்திக் கொண்டு தூங்குகிறார் பாரு,” என்று இளக்காரமாகவும், கோபமாகவும் பேசினாள்.
இதனைக் கேட்ட பட்டினத்தார் அதிர்ச்சி அடைந்தார்.
“அந்தப் பெண்ணுக்கு இருக்கும் புத்தி கூட தனக்கில்லாமல் போய் விட்டதே…’ என்று வேதனைப்பட்ட அவர், அந்த பெண்கள் அங்கிருந்து கடந்து போனதும், வரப்பிலிருந்த தலையைக் கீழே வைத்துப் படுத்தார்சற்று நேரத்தில் அந்தப் பெண்கள் திரும்பி வந்தனர். அப்போது அந்த சாமியார் வரப்பிலிருந்து கீழே படுத்திருப்பதைப் பார்த்த அந்தப் பெண்மணி, “”பார்த்தாயா, நீ சொன்னதை கேட்டு வரப்பிலிருந்து தனது தலையைக் கீழே வைத்துப் படுத்துவிட்டார். இப்போது சொல் அவர் மிகப் பெரிய மகான்தானே?” என்று அகமகிழ்ந்து கூறினாள் ஒரு பெண்.
“”இவரா பெரிய மகான்? இந்த வழியாகப் போகிறவர்கள் எல்லாம் தன்னைப் பற்றி என்ன பேசிச் செல்கின்றனர் என்று ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றிக் கவலைப்படுகிறார். இவரைப் போய் பெரிய மகான் என்று சொல்கிறாயே!” என்றாள் அந்த இரண்டாவது பெண்மணி.
இதைக் கேட்டு பட்டினத்தார் உண்மையிலேயே அதிர்ந்து போனார். இனிமேல் யாருடையே விமர்சனத்திற்காகவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது கூடாது என்று அப்போது முதல் அவர் திடமாக முடிவெடுத்தார்.
விமர்சனத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று நேர்மறை விமர்சனம்; இன்னொன்று எதிர்மறை விமர்சனம்.
நேர்மறையான எண்ணம் கொண்டவர்களின் விமர்சனம் எப்போதும் திருப்தி அளிக்கும் விதமாகவே இருக்கும். அந்த முதல் பெண்மணி கூறியதைப் போலவே அது இருக்கும்.
எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் செய்யும் விமர்சனம் எப்போதும் குற்றம், குறைகளைக் காண்பதாகவே இருக்கும். அதாவது அந்த இரண்டாவது பெண்மணியைப்போல.
நியாயமான விமர்சனம்தான் உண்மையானதாக இருக்கும். ஆனால், அந்த வகை விமர்சனம் கிடைப்பது என்பது மிகவும் அரிது. அதில் குற்றம் குறைகள் சுட்டிக் காட்டப்படவும் செய்யும். நல்ல தன்மைகள் பாராட்டப்படவும் கூடும்.
எனவே, இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களுக்காக காத்துக் கிடக்காமல் உங்கள் உள்ளத்திற்கு எது நேர்மையானதாகத் தெரிகிறதோ, அந்த பாதையில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருங்கள். விமர்சனங்களைப் புறக்கணித்து விடுங்கள்.
வாழ்க்கை என்பது இறைவன் நமக்குத் தந்திருக்கும் உரிமை. இந்த மண்ணுலகில் பிறந்து விட்டோம். நல்லதை செய்து நலமாக வாழ்வோம்!.


இவ்விரு கதைகளும் இருவேறு கோணத்தில் என் மனதை கவர்ந்தது. உங்களுக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன்.

 
                                          படித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

8 comments:

  1. ஆட்டுக்கும் வாலை அளந்தே கொடுத்திருக்கும் அவன் செய்வதில் எல்லாவற்றுக்குமே ஒரு காரணம் இருக்கும் என்று தெரிகிறது.

    இரண்டாவது கதை நானும் படித்திருக்கிறேன். சில சமயங்களில் நாம் செய்வது எல்லாவற்றுக்குமே ஆதரவாகவும், எதிராகவும் சொல்ல நிறைய கதைகள் கிடைக்கின்றன. அடுத்தவர் அபிப்ராயத்தை மதிப்பதா, மதிக்காமல் இருப்பதா என்பது நம் மனசாட்சிக்கு அந்தந்த நேரத்தில் தெரிய வேண்டிய ஒன்று.

    உங்கள் இளைய மகனுக்கும், உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள். குடும்பத்துக்கு நேரம் நிறைய செலவிடுங்கள். அப்புறம்தான் இவை எல்லாம். நீங்கள் செய்வதே சரி!

    ReplyDelete
  2. இரு கதைகளும் மனம் கவர்ந்தது...

    இளைய மகனுக்கு வாழ்த்துகள் பல...

    ReplyDelete
  3. முதலில் தங்களது வீட்டு திருமண விழாவுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள் மணமக்களுக்கும் சேர்த்து....

    விவசாயி கதை நல்லதொரு படிப்பினையைக் கொடுத்தது நன்று

    பட்டிணத்தார் கதையில் வரும் விடயம் நன்று சமூகம் எப்பொழுமே ஒரே மாதிரியாக சொல்லாது நரம்பில்லாத நாக்கு நாலும் பேசும் அருமை சகோ வாழ்த்துகள்

    ReplyDelete
  4. இரண்டு கதைகளுமே எனக்கும் பிடித்தது.

    மகனுக்கு திருமணம் - மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இரண்டும் அற்புதமான கதைகள்
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    தங்கள் புதல்வனின் திருமணம் மிகச் சிறப்பாக
    நடைபெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய தீபாவளித் திரு நாள்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இரண்டு கதைகளும் அருமை சகோதரி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி,
    இனிய தீப திருநாள் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  8. படித்ததில் பிடித்தது அருமை.

    ReplyDelete