Saturday, October 25, 2014

இமயமும் போற்றும்..!




கடவுள் தந்த வாழ்வு இதுவெனவே

கனிந்த மனமுடன் அதை ஏற்றாலும்,

காலமும் நேரமும் சேர்ந்தால்தான்

கடினச்செயலும் எளிதாகுமென்பதும்,



நன்மை தீமைகள் ஊழ்வினையால் இங்கு,

நடத்தி முடிப்பவனின் கட்டளையில்

நடந்து முடியும் என்பதெல்லாம்,

நாம் நன்றே அறிந்த ஒன்றாகிலும்,



காசும், பணமும் காடுடன் நாமும்,

கடுகளவேனும் கட்டிச்செல்லல்

கடினமான செயல் என்பதுவே,

கணிசமாய் மனம் உணர்ந்தாலும்,



வீடும் வாசலும் உறவும் சுகமும்,

வீதியோடன்றி, வீழ்ந்த உடலுடன்

விருப்பமாய் நம்மை தொடராதென்பதும்,

விரிவாக நமக்கு விளங்கினாலும்,



சூழ்ச்சி, வஞ்சனை, போட்டி, பொறாமை,

சூதும், வாதும், வெஞ்சினம், போன்றவை

ஏதும் அறியா நல்மனதுடனே நாம்

இயல்பாய் இருக்க ஏன் பழகவில்லை.?



உலகைப்படைத்தவன், தன் உளமாற

உயர்வாய் தந்த பிற அருங்குணங்களை

உள்ளத்தில் வேராய் ஊடுறுவ செய்து

உன்னதச்செடியாய் நாம் வளர்த்தால் என்ன?



௬டி வாழும் நற்குணங்கள் நம்மை

நாடி வரும் வேளையிலும், அதைத்

தேடிச்சென்று பகிராமல், பகையுடன்

ஓடி ஓடி ஏன்தான் ஒளிகின்றோம்..?



இத்தனை அறிந்தும் இத்தனை புரிந்தும்

இசைவாய் இத்தீயதுகளை விலக்கித் தள்ளி,

உயர்வாய் நாமும் விளங்கத்துவங்கினால்,
உயர்ந்த மலையும் நம்மை புகழ்ந்து போற்றும்..!



நன்றி Google..

4 comments:

  1. தேடிச்சென்று பகிராமல், பகையுடன்
    ஓடி ஓடி ஏன்தான் ஒளிகின்றோம்..? //மிக மிக வாஸ்தவமான வரிகள். கவிதை ஆழமாக சென்று அசத்துகிறது.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி.!

    தங்கள் உடனடி வருகைக்கும், ரசித்து கருத்திட்ட கருத்துப்பகிர்வுக்கும்,
    என் மனமார்ந்த நன்றிகள்.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே.!

    தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.!

    வலைப்பதிவர்கள் சந்திப்பு திருநாளில், அதில் கலந்து கொள்ளும் தங்களுக்கும்,மற்றும் அனைத்துப்பதிவர்களுக்கும், என் அன்பார்ந்த வாழ்த்துக்கள் .!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete