கதையின் 4 ம் பகுதி.
"அடாடா...சே... என்ன... இவன் இப்படியெல்லாம் பிரித்து பேச ஆரம்பித்து விட்டான்...? தெரிந்தவர்கள் குறை சொல்லும் போதெல்லாம் அவனுக்காக அவர்களிடம் பரிந்து பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது. அப்படி யாருக்கு எடுத்து கொடுத்து விட்டேன்...? முகம் தெரியாத வேண்டாதவர்களுக்கா...? அவன் கூடப் பிறந்த தங்கைக்கு, அவள் வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே பிரச்சனை வந்து விடாமலிருக்கவும், அவனை பத்து மாதம் சுமந்து பெற்ற அவன் அம்மாவின் சிரமத்தையும் குறைக்கத்தானே கொடுத்தேன்... சொல்லபோனால் அவன் எப்பாடுபட்டாவது செய்ய வேண்டிய கடமையைதானே நான் செய்தேன்.... நான் ஏதோ குற்றம் செய்து விட்ட மாதிரி பேசுகிறானே....? " நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. மொத்தத்தில் அன்று இரவு தூக்கம் முழுமையாக பறி போனது அவருக்கு.
அதன் பின் திருமணத்திற்கு தன்னுடன் வரச்சொல்லி மகன் அழைத்தபோது ௬ட, "நான் எதுக்குப்பா...? நீயும், உன் மனைவியும், போய் வாருங்கள். நான் வரவில்லை... ." என்று ஏதோ சாக்கு போக்கு சொல்லி தப்பித்து விட்டார். அங்கு சென்ற பிறகு இவன் தன்னை வைத்துக் கொண்டு ஏதாவது பேச போக பிரச்சனை பெரிதாகி அது அந்தக் கல்யாணத்தை பாதித்து விட்டால்... பாவம்.. . .! அந்த பெண்....! என்ற கழிவிரக்கத்தில் அவர் மனம் திருமணத்திற்கு செல்ல ஒப்பவில்லை. இந்த விஷயமெல்லாம் நண்பர் பாலுவுக்கு தெரியாது. இவரும் எதைப் பற்றியும் சொல்லாமல், வழக்கப்படி தன் மனதில் போட்டு புதைத்து விட்டார். ஏற்கனவே தன் மகனை பற்றி அடிக்கடி குற்றம் சொல்லி கொண்டிருக்கும் பாலுவுக்கு இது தெரிந்தால் தன் மகனை நிற்க வைத்து கேள்வி கேட்டு பிரிவை பெரிதாக்கி விடுவார் என்ற பயம் தந்த தயக்கத்தில் சதாசிவம் பாலுவிடம் எதுவும் கூறவில்லை.
இருவரின் யோஜனைகளிலும் சிறிது நேரம் மெளனமாகவே நகர்ந்தது. அப்போது சுசீலா கஞ்சியும் மாத்திரையும் கொண்டு கொடுத்து விட்டு, "கஞ்சி குடித்து விட்டு மாத்திரை போட்டுக் கொள்ளுங்கள் மாமா" என்று ௬றி விட்டுச் சென்றாள்.
சற்று நேரம் பொறுத்து மெளனம் கலைந்த பாலு, "சரி, சதா.... நா கிளம்புறேன். உன் மகனை பத்தி குத்தம் சொல்ல எனக்கு மட்டுமென்ன ஆசையா..? உன்னோட நிலையை பாக்க பொறுக்காமேதான் மனசுலே படறதை சொல்றேன். நீ தப்பா எடுத்துகிட்டாலும் சரி,... நான் இன்னொன்றும் உன் நல்லதுக்காக மறுபடியும் சொல்றேன், இந்த வீட்டை விக்கறதுக்கு மட்டும் நீ மறுபேச்சில்லாமல் சம்மதிக்காதே.... அவ்வளவுதான்..! என்னாலே சொல்ல முடியும். சரி...சரி.. நீ கஞ்சியை குடிச்சிட்டு, மாத்திரை போட்டுகிட்டு நல்லா ஓய்வு எடுத்துக்கோ... நா மறுபடியும் சாயங்காலம் வந்து பாக்கறேன்... " என்றபடி எழுந்தார்.
" சரி, போய்வா.. . "என்று நண்பருக்கு விடை கொடுத்த சதாசிவம் கஞ்சியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.
அன்றொரு நாள் தன்னை சந்திக்க வெளியூரிலிருந்து வந்திருந்த நண்பனை என் அருகாமையில் நின்றபடி விடை கொடுத்து அனுப்பும் போது, இவர் மகன் அவனிடம் ௬றிக் கொண்டிருந்ததை, நானுந்தான் கேட்டேன்... "ஆமாப்பா... இது ஒரு நல்ல சான்ஸ்.. இதை நா கோட்டை விட்டுட்டா அப்புறம் இதைப் போல கிடைக்கவே கிடைக்காது. எப்படியாவது இந்த பதவி உயர்வை பயன்படுத்திகிட்டு சென்னைக்கு போயிட்டா, அப்புறம் ஒரு ஆறு மாசத்திலே வெளிநாடு போற வாய்ப்பு கம்பெனி மூலமா வருது..... அது கிடைச்சா என் வாழ்க்கையே பிரமாதமாயிருக்கும். அதுக்காகவே நான் சென்னைக்கு போக ஒத்துக்கனும், அப்பாவையும் ஒத்துக்க வைக்கனும். வேற வழியில்லை,.. ..! இந்த வீட்டை வித்துட்டு சென்னையிலே கொஞ்ச மாதங்களாவது ஏதேனும் வாடகை வீடு பார்த்து செட்டிலாக வேண்டியதுதான்..... அங்கிருக்கும் என் நண்பனிடம் சொல்லி அப்படி ஒரு நல்ல வீடு பார்க்க ஏற்பாடு செய்ய சொல்லியிருக்கிறேன். " அவன் குரலில் பதவி உயர்வின் ஆசையும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறியும் தெரிந்தது...
"சரி.... நீ சென்னைக்கு போய் சில மாதங்களாவது செட்டிலான பிறகு உனக்கு வெளிநாடு வாய்ப்பு வந்ததும் உன் குடும்பத்தை மட்டும் விட்டு விட்டு செல்ல முடியுமா,? அப்போது இந்த வீடு இருந்தால், அவர்கள் இங்கு வந்து வசிக்க வசதியாக இருக்குமே... " என்ற அவன் நண்பனின் கேள்விக்கு, " இல்லை, இல்லை. .. வெளிநாட்டில் எப்படியும் சில வருடங்களுக்கு மேலாக இருக்க வேண்டி வரும். அதனால் மனைவி, குழந்தையை விட்டுட்டு போக முடியாது. அப்பாதான் பிரச்சனை.. அவரை கூடவே அழைத்து செல்லவும் முடியாது. அவர் உடம்புக்கும் அந்த ஊர் ஒத்துக்காது. முடிந்தால் அவர் அங்கேயே தனியாக இருக்கட்டும் இல்லையென்றால் ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் அவரை சேர்த்து விட்டுட்டு போக வேண்டியதுதான்.... " என்ற அவனின் அலட்சியமான பதிலில் நான் ஆடி போய் விட்டேன் இதை அவரிடம் நான் எப்படி சொல்வதென்று தெரியாமல் தவித்துக் கொணடிருந்த போதுதான் அவர் நண்பர் பாலு அது பற்றி அவரிடம் விவாதித்தது எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தனக்காக தன் உழைப்பையும், வாழ்க்கையையும், தியாகம் செய்தவரை, வயதான காலத்தில் அவரை கவனித்து கொள்ள வேண்டியது தன் கடமை என்று உணராமல், சுயநலமாக மட்டும் திட்டமிடும் மகனுக்காக, இன்னும் வாதிடும் அவரை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாகவும், கவலையாகவும் இருந்தது.
தொடர்ந்து வரும்...













