Thursday, July 26, 2018

இயல்பு...

பிறப்பு என்பது சகஜமெனில் இறப்பும் இயல்பானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டுமே இறைவனால் நிர்ணயக்கபட்டவை.  என்றுமே அவனுடைய ஆளுமைக்கு உட்பட்டவை. எத்தனையோ விஞ்ஞான மாற்றங்கள் வந்திருப்பினும் , இவைகளில் எந்த வித மாற்றமுமில்லை. அந்தந்த நொடிப் பொழுதில் ஜனன மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

 "மரணத்தின் சோகம் தாக்கிய ஒரு வீட்டில் உறவுகள் அழுது கொண்டிருப்பதை கண்ட பட்டினத்தார் "எதற்காக இவர்கள் அழுகிறார்கள்? இறந்த ஒரு பிணத்தைச் சுற்றி , நாளை இறக்கப் போகிற பிணங்கள் இப்படி அழலாமா?  என்று கேட்டாராம்." அவரின் ஞானம் தீடீரென முற்பிறவியின் கர்ம வினையால் உதித்தது.  அந்த ஞானம் நம்முள் தோன்ற  எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டுமோ? அப்படியே எடுத்தாலும், அதற்கென ஒரு வேளையும், பொழுதும் ஆண்டவன் நமக்கு அமைத்து தர,  நாம் எத்தனை பிறவிகளில் எவ்வளவு புண்ணியங்கள் செய்ய வேண்டுமோ?

திருக்குறளில் நிலையாமை அதிகாரத்தில் அழிந்து போகும், செல்வம், பொருள் போன்றவற்றுடன் இறப்பையும் குறித்து திருவள்ளுவனார் கூறியுள்ளனவைகளில் சில...

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.


குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

விளக்கம்......   உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

ஆனால்,  எத்தனையோ விதங்களில் சான்றோர்கள் இறப்பை பற்றி கூறினும் நம்மனம் பக்குவமடைய இறைவனின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும். அது ஒன்றை உலகில் நமக்கு சாசுவதம். . 

இன்னமும் எத்தனையோ மகான்கள் இறப்பை மனதாற ஏற்றுக்கொள்ளச் சொல்லி அவர்களுடைய செய்கைகளி னாலும், உபதேசத்தினாலும், ஞான மார்க்கத்தில்  நம்மை வழி நடத்திச் செல்ல முயற்சித்திருக்கிறார்கள். மனது பக்குமடையுமாறு நிறைய புராண கதைகள் கேட்டும், படித்தும் வளர்ந்துள்ளோம்.. ஆனாலும், இறப்பினால் ஏற்படும் பிரிவை மட்டும் நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. .

ஒவ்வொரு நொடிப் பொழுதிலும், அடுத்த நொடிப் பொழுதை பற்றி கவலையுறாது, சந்தோஷத்தை தரும் பிறப்புகளும், வருத்தத்தை தரும் இறப்புகளும் உலகில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் வீட்டின் மகிழ்வுகளும், இழப்புகளும், என்றுமே முறையே சிறந்தது, கொடுமையானது  என்ற மனோபாவம் நிறைந்த சுயநல, பச்சாதாபத்தில் ஒவ்வொரு மனித மனங்களும் சுழன்று, முடிவில் அவற்றின் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை சந்திக்கின்றன.

நம் விருப்பங்களும், அதன் விளைவாய் "அவனி" டத்தில் வைக்கும் விண்ணப்பங்களும் மட்டுமே நம்முடையதன்றி, நடப்பதனைத்தும் "அவன்" செயல்....

சென்ற சனியன்று காலை என் பெரிய நாத்தனார், எங்கள் குடும்பத்தில் மூத்தவர், (ஒரு வருடமாகவே உடல்நிலை முடியாமல் இருந்தார்.) இவ்வுலகை துறந்து விட்டதாக செய்தி வர, ஏற்பட்ட மன வருத்தத்துடன் என் வலையுலக உலா பயணம் தடைபட்டது.  அவரின் நினைவுகளில், என் பதிவில் வந்த கருத்துக்களுக்கும் உடனே  பதிலளிக்க இயலவில்லை என்பதையும், (நேற்று, இன்றாகத்தான் பதில் கருத்திட முடிந்தது.) அனைத்து வலைத் தளங்களுக்கும் வந்து பதிவுகளை படித்து கருத்துக்கள் இட முடியவில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னிக்கவும்....

Saturday, July 21, 2018

புகைப்படங்கள் பகிர்வு.

மேக நாதன் .. 



மேகங்களில் ஒழிந்து மறைந்து
வேகமாக மாயமாகி போரிடுவதால்
மேக நாதன் என்னும் பெயர்
சந்தேகமின்றி நிலைத்து போனதோ..
அசுரகுல பிள்ளை எனினும்.
அவனின் நல்லமனம் உன்னிடமும்
அதிகமாக அருகி தங்கிப் போனதை
அவனி உள்ளளோர் நன்குணர்வர்.
சித்து பல கற்று தேர்ந்து நீ
இந்திரஜித்து  எனும் புகழ் பரப்பியும்
இங்கேயுன்  மேகம் கண்ட ஆசையினால்,
மாயவித்தையை மறுபடி காட்டிட
மாறி மாறி வந்தனையோ...





மெளனமாய் இருந்த மேக நண்பனை
மெளனம் கலைத்து பேசி பார்த்து
தோற்றுப்போனதில், அழகான
ஊஞ்சலில் அமர வைத்து 
ஆசையாய் ஆட்டியபடியே 
அழகு பார்த்து கோபம் தீர்த்த 
காற்றுத் தோழனின் அதீத கவனிப்பில் 
சற்று மனமுருகி கரைந்தே 
போனான் மேக நண்பன்  







வெளிச்சம் காட்டும் கண்ணாடியாம்
சூரியனை பாதரசம் துடைத்து நிமிடத்தில் 
மங்கிப் போகச் செய்தது மழை மேகம்




மேகக் குழந்தைகளைஅன்புடன்
தாலாட்டி சீராட்டியதால் வானம்
அன்னை என்ற அந்தஸ்தை 
அதிசுலபமாய்  பெற்றுக் கொண்டது





எங்களின் ஒவ்வொரு நிலையிலும்
எழிலான ஒவ்வொரு ண்ணங்ள்.
இவை இயற்கை எமக்களித்த  பரிசுகள்.
இப் பரிசினை, உங்கள் முன்னே 
பார்வையாக்கினோம்... உங்கள் 
படமெடுக்கும் அவாவை எங்கள் 
உள்ளம் உணர்த்தி போனதினால்..... 
தன்னிடம் இருப்பதை பகிரவும் ஒரு 
தயாள குணமும் வேண்டுமென்றோ... 
விரிந்து பரந்த இவ்வுள்ளம் எங்கள் 
வானத்தாயிடம் நிதமும் பெற்ற சீதனமாம்.



இது வான வீதியின் அழகில் மயங்கி நான் எடுத்தப் புகைப்படங்கள். சுமாராகத்தான் வந்திருக்கிறது... அதற்கேற்றவாறு ஜோடியாக கை கோர்த்து கொண்டு  வர்ணனைகள், இலக்கணக் கவிதை, புதுக்கவிதை, உரைநடைக்கவிதை என்ற எதிலும் சேராத ஒரு தத்து பித்து கவிதையாக உருவெடுத்து உங்கள் முன், (அதற்கு முன், என் முன்)  உருவெடுத்து நிற்கிறது. பொறுமையோடு சகித்து கொள்வோர்க்கு 
🙏

நன்றி.
=====*=====

Monday, July 16, 2018

உடைத்த அரிசி கொழுக்கட்டைகள்.

தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ,  ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு  கட்டளை இடுகிறது. என் மனசு மட்டுமில்லை... வீட்டிலுள்ளவர்களின் மனங்களுந்தான். சரி . நமக்கு தெரிந்த சிற்றுண்டி செய்யலாம் என்றால் வீட்டில் அனைவரிடமிருந்தும் ஒவ்வொரு வகை பட்டியல் கிளம்பி விடும்.  பரோட்டாவிலிருந்து, சப்பாத்தி, பூரி, வந்து இட்லி, தோசைக்கு தாவி, உப்புமா "போம்மா ஒரே போர்" என்ற விமர்சனம்  செய்து அப்புறம் உன் விருப்பம் உனக்கு எது சுலபமோஅதைச்செய்.. என பச்சை கொடி காட்டியதும், நாம் எது கொஞ்சம் மெனக்கெடனுமோ, அதை தேர்ந்தெடுப்போம்.  அதுதான் நம் ராசி... அரிசி உடைத்து உப்புமா கொழுக்கட்டை செய்யலாமென்று ஆரம்பித்த போது, ஆளாக்கில் எடுத்த அரிசிகள் பேச ஆரம்பித்தன. (பயம் வேண்டாம்... ஒரு கற்பனைதான். இந்த பதிவுக்காக மட்டும் என்னுள் எழுந்தவை.. )  

ஒரு வித்தியாசத்திற்காக இன்று எங்களை பயன்படுத்தி செய்யப்படும் பதார்த்தத்தை நாங்களே சொல்லுகிறோமே.... என்றன ஒவ்வொரு அரிசியும். 
அவைகளின் வேண்டுகோளுக்கு நான் அரை மனதாக இணங்கினாலும்,  "நானும் நடுநடுவில் கொஞ்சம் எடுத்துக் கொடுக்கலாம் என்ற முடிவுடன் "சரி" என்றேன். 


நான்கு டம்ளர் பச்சரிசி  எடுத்துக் கொண்டு அலம்பி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின் ஒரு பெரிய தட்டில் அரிசியை எடுத்து போட்டு உலர வைக்கவும்.
என் நா வழக்கத்தை மாறாது சொல்ல ஆரம்பித்ததும், 

"அட..சே.." இந்த மனிதர்களே இப்படித்தான் சரி யென ஒரு சொல் கூறி விட்டு உடனே மாறி விடுவார்கள்.. படபடவென அரிசிகள் ஒன்றுக்கொன்று பேசி நொடித்துக்கொண்டன. 

உடனே நான் அவசரமாக "ஸாரி" என்றதும்


இது  ஊறிக்கொண்டிருக்கும் அரிசிகளாகிய நாங்கள்...என்று அரிசிகளும் அவசரமாய் ஆரம்பித்தன. 

நாங்களே எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு நாங்கள் உருவாகும் விதத்தை கூறுகிறோம் என்றதற்கு சரியென சொன்னீர்களே.. என ஊறும் அரிசிகள்"உர் "ரென கோபிக்க... 

"சரி, சரி" இனி நீங்களே துவங்கலாம் என சமாதானப்படுத்தி நான் அமைதியானேன். 


இதுவும் நாங்கள்தான் ..ஆனால் எங்களை ஒன்றிரண்டாக உடைத்து "உப்புமா" என்ற பெயர் சூட்டு விழாவுக்கு ஆஜர் ஆகச் சொல்லியதால், அவசரமாக மிக்ஸியில் புகுந்து சுற்றி  வந்ததில் சற்றே துகள்களாக மாறியிருக்கிறோம் .......சற்று களைப்பாக வேறு இருக்கிறோம். கொஞ்சம் நிதானிக்கிறோம்.... என்ற அவகாசத்தில்... 


ஒரு ப்ரெஷர்பேனில் கடுகு அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் , காய்ந்த  மிளகாய் ஒரு ஆறு கிள்ளி போட்டு  தாளிக்கவும். கடுகு வெடித்ததும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கொஞ்சம் பெருங்காயபொடி   போட்டு நான்கு பச்சைமிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து வதங்கி கொணடிருக்கையில், ஒரு சின்ன மூடி தேங்காய் துருவல் சேர்த்து சற்று பிரட்டியதும்  ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று என்ற கணக்கில் 12 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.  தண்ணீர் நன்றாக கொதித்ததும்........ என்று கோர்வையாக நான் மீண்டும் பழக்கதோஷத்தில் சொல்லிக் கொண்டே போகும் போது, 

அரிசிகள் சுயபுராணம் சொல்ல போவதாக சொன்னது நினைவு வந்து நிறுத்தி திரும்பி உடைத்து வைத்ததை பார்க்க, அனைத்து அரிசி குருணைகளும் என் மேலெழுந்த கோபத்தில், மெளன விரதத்தை  தாங்கள் கையாண்டு விட்டதாக அருகில் அஞ்சறைப் பெட்டியில் இருந்த கடுகு உ. ப,  வத்தல் போன்றவற்றிடம் கூறி மெளனமாகி விட்டதாக அவைகளும் ( இதுவும் ஒரு கற்பனையே..) பேச ஆரம்பித்தது... 

சரி.. "நானே கூறி முடித்து விடுகிறேன். "  என்று நான் ஆரம்பிக்க, 

"ஏன் நாங்களும் இதில் உண்டல்லவா? அரிசிகள் மெளன முடிவெடுத்தால், மிச்சத்தை நாங்கள் கூறி முடிக்க கூடாதா என்ன? "என உ. ப, வத்தல் கடுகு போன்றவை கோபத்தில் கடுப்பாக, அதிலும் கடுகு கொஞ்சம் கூட பொறுமையின்றி எண்ணெய்யில் போடாமலே மிகவும் கடுப்பாகி சிடுசிடுத்தது, 

நானும் வேறு வழியின்றி சிறு கடுகுதானே எனஅலட்சியபடுத்தாமல் கடுகுக்கு விட்டுக்கொடுத்து வாய் மூடிய மெளனியானேன். 

(கடுகு சிறுத்தாலும், காரம் குறைவதில்லையில்லையா...) 



அஞ்சரைப் பெட்டியில் நாங்கள் "வந்த கதை போன கதை" என அளவளாவி கொண்டிருந்த போது  எங்களை தனித்தனியே பிரித்தெடுத்து அழைத்து வந்து நெருப்பின் சூட்டுடன் விளையாடச் சொல்லி, பரிசாக தந்த " தாளிதங்கள்" என்ற மற்றுமொரு பெயரையும், வேறு வழியின்றி நாங்கள் சகித்துக் கொள்ளும் தருணத்தில், தேங்காய் துருவல் வேறு எங்களை எட்டி நோக்கி "நானும்" என்றபடி எங்களுடன் குதித்தது.


நாங்கள் சூட்டில் வறுபடுவது போறாதென்று  எங்களுடன் தேங்காய் பூவும் வறுபட்டு  தன் நிறத்தை "கலரிங்" செய்து பெருமைப்பட்டுக் கொண்டது.



அதன் பின் எங்களின் கோபச்சூடு கொஞ்சம்  தணிந்த நேரத்தில், எங்களுக்கு குளிப்பாட்டுவது போல், தண்ணீரை எங்களுடன் கலந்ததும், எளிதில் கோபம் களைந்து குளிர்வானோம். 



ஆனால்,  பெயர் சூட்டு விழாவுக்கு மணியாகிறதென்றும்,  அனைவரும் ஆசி கூறி பின் சாப்பிட காத்திருக்கிறார்கள் என்பதாலும், மறுபடியும் அவசரபடுத்தி தண்ணீருடன் எங்களை கொதிப்படைய செய்து, எங்களுடன் முதலிலிருந்தே உடைபட்ட மனதுடன் வருத்தத்துடன் வாடிய முகத்துடன், மெளனச் சாமியாராக அமர்ந்திருந்த அரிசி குறுமணிகளையும்  எங்களுடன் சேர்த்து கிளறியதும்  நாங்கள் உப்புமா என்ற நாமகரணம் பெற்று அனைவரின் ஆசி(சை) களுக்காகவும், ஆனந்தமாக ரெடியாகி காத்திருந்தோம்..





ஒன்று சேர்ந்த எங்களை ஒரு தட்டில் ஆற அமர வைத்து அழகு பார்த்ததும் நாங்கள் அகமகிழ்ந்து போனோம். பிறகுதான் தெரிந்தது.... மறுபடியும் எங்களை உருமாற்றி எங்கள் பெயருடன் மற்றுமொரு புனைப்பெயரையும் இணைத்து விடத்தான் இத்தனை பிரயத்தனம் என்று புரிந்து கொண்டோம். எத்தனை பெயர்தான் என அலுத்துக்கொள்ளக்கூட எங்களுக்கு  அவகாசமில்லை. சின்ன சின்ன பந்துகளாக மாறிய பின் மற்றொரு சூட்டில் அமர்ந்து வெளிவந்ததும், "உப்புமா கொழுக்கட்டை" என்ற புதுப் பெயருடன் பளபளவென்றிருந்த எங்களைக் கண்டு எங்களுக்கே பெருமையாக இருந்தது. "நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம்"  என்று கூடிப் பேசி மகிழ்ந்து கொண்டேயிருக்கையில்,  மொத்தமாக இருந்த நாங்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சட்டென பிரிபவர்களை மாதிரி கொஞ்ச நேரத்தில் காணமல் போய்க் கொண்டேயிருந்தோம். கூட்டமாக குழுமியிருந்த நாங்கள் எங்கே  எப்படி போகிறோம்... என்று ஒன்றும் புரியாத நிலையில், கடைசியில் ஒன்றிரண்டு மீதமானவர்களுடன் அளவளாவி ஐயத்தை போக்கியதில், 

"நாம் பிறந்த பயனை அடைந்து விட்டோம். நமக்கு முன்னால் பிறந்த மனிதர்களின் சித்து வேலைகளில் இதுவும் ஒன்று. கடவுள்களின் துணையுடன், அவர்களால் உருவாக்கப்பட்டு, அவர்களால் புதிது புதிதாக  பெயர்களை அவர்களின் விருப்பங்களுக்கேற்ப வைக்கப்பட்டு, அவர்களின் ஆத்ம பூஜைக்காக, அவர்களின் வாய் எனும் குகைக்குள் பயணித்து புண்ணியம் அடைவதே நமது பணியாக இறைவன் நம்மை  படைத்திருக்கிறார் என்ற தகவல்கள் புரிபட்டன . வேறு வழி... மீதமிருந்த நாங்களும் கடவுளின் கட்டளைப்படி கடைசி யாத்திரைக்கு பயணமாக, பக்குவமான மனதுடன் காத்திருக்க ஆரம்பித்தோம்.

"இதற்குத்தான் உங்களை அழகாக படமெடுத்த நானே சுலபமாகவும் உங்களை ஒரு உருவமாக உருவாக்கிய கதைகளை சொல்லி முடிக்கிறேன் என்றேன். கேட்டீர்களா? பிறந்ததிலிருந்து புரியாததையெல்லாம், புரிந்த மாதிரி நினைத்துக்கொண்டு, ஒன்றும் புரியாமலேயே நடித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு துணையாகத்தான் உங்களையும் ஆண்டவன் படைத்துள்ளான் என்பதை  உணர்ந்தும், உணராத மாதிரி வந்து சொல்லி உணர்ந்ததும் வீணில் மன வருத்தமடைய வேண்டுமா?" என நான் மெளனம் கலைந்து உபதேசம் செய்து கொண்டிருக்கையில், 

அங்கு மீதமிருந்த பல கொழுக்கட்டைகளும் ஆத்ம பூஜைக்காக குகை நோக்கி பயணப்பட்டு கொண்டிருந்தன.




Friday, June 29, 2018

விளையாட்டுக்காக பிறந்த கதை...


பொதுவாக இன்பமும், துன்பமும் சேர்ந்து வருவதுதான் வாழ்க்கை.  இப்படி சந்தோஷங்களும், வருத்தங்களும் இணைந்து இரு தண்டவாளங்களாக முடிவில்லாத ரயில் பயணங்களாக பயணிக்கும் இவ்வாழ்வில், நமக்கு இன்பம் வரும் போது சந்தோஷிப்பதும், துன்பம் வரும் போது வருந்துவதும் வாடிக்கையாகி போன விஷயம்..  ( இப்ப என்னதான் சொல்லப் போறீங்க? "தலையும்,  வாலும் புரியலை" என நீங்கள் கொஞ்சம்  தலையை தாங்கிப் பிடிப்பதற்குள் நிச்சயம்  சொல்லி விடுகிறேன்.)

கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி என் உறவுகளிடமி ருந்து எனக்கு  வாட்சபில் வாழ்த்துகள் வந்து கொண்டேயிருந்தன. காரணம்  நான் அன்றுதான் (அன்று என்பதற்கு அப்போது என அர்த்தமில்லை. அன்றைய நாள் என்பதாகும்.) பிறந்தேனாம்.  (ஆஹா... சின்ன நூல் கிடைத்து விட்டது. இனி வருடம் என்ற கயிறு கிடைத்து விட்டால், உறவுச் சிக்கலை பிணைத்து  கட்டி விடலாம் என சகோதரி கீதா அவர்கள் சந்தோஸிப்பதும் என் மனக் கண்ணில் தெரிகிறது. ஹா ஹா ஹா ஹா. )  எனக்கும் இப்போதுதான் வாட்சப் வசதிகள் கொண்ட ஃபோன் கிடைத்திருப்பதென்பது குறிப்பிடத்தக்கது . நாங்கள் பொதுவாக பிறந்த மாதத்தில் வரும் ஜென்ம நட்சத்திரத்தன்று  நினைவில் வைத்துக் கொள்வோம். ஆங்கில தேதிகளில் வாழ்த்துக்கள் தெரிவிப்பது என் குழந்தைகள் ( சகோதரி அதிரா அவர்கள் மன்னிக்கவும் .. "குழந்தைகள் எப்படி கல்லூரியில்.... இந்த கமலா சிஸ்டருக்கு எவ்வளவு தடவை சொன்னாலும் புரியலே" என மனசுக்குள் சொல்வது கேட்கிறது. ஹா ஹா ஹா ஹா )  பள்ளி கல்லூரிக்கு சென்ற பிறகுதான் பழக்கமாகி போனது.

ஆனால் எனக்கு அன்றைய தேதியில் இன்றைய அனைவரின் வழக்கப்படி வாழ்த்துக்கள் வந்தது சற்றே விசித்திர மகிழ்வை தந்தது. "நான் எப்போதுமே ஒவ்வொரு வருடமும் கடக்கும் போது நாம் இந்த வருட இளமையை தொலைத்து விட்டு முதுமையை நோக்கித்தான் அடுத்து அடியெடுத்து வைக்கிறோம் என நினைத்துக் கொள்வேன். சில சமயம் அடுத்தப்பிறவியின் வாசல் படியென்றும் நினைத்துக் கொள்வேன்." (எனக்கு போட்டியா இவங்க அப்போதையிலிருந்தே இங்க  ஞானியா?  என சகோதரி அதிரா அவர்கள் ஆனந்தத்தோடு விய(ழு)ந்து விய(ழு)ந்து அதிசயப்பது  புரிகிறது.  ஹா.ஹா ஹா ஹாா..) எப்போதுமே என் பிறந்த நாளுக்கென்று சிறப்பான முறையில் ஏதும் செய்யாத நிலையில், இந்த வருடம் அனைவரின் வாழ்த்துகள் மட்டும் ஏனோ சிறிது ஆனந்தத்தை அளித்ததும் உண்மை.. (காரணம் புது வாட்சப் பாக இருக்கலாம். இல்லை.. நமக்கு அடுத்தபடியாக சிஷ்ய ஞானி உருவாகி விட்ட திருப்தியாகவும் இருக்கலாம். ஹா ஹா ஹா ஹா ஹா )

அதன் பின் அந்த மாதத்தில் பத்தொன்பதாம் தேதி என் நாத்தனார் பெண் அவர்கள் வீட்டில் பத்து வருடத்திற்கும் மேலாக வளர்த்து வந்த செல்லம் ( இங்கு செல்லம் என்று குறிப்பிடுவது சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு மிகவும் திருப்தியையும், சந்தோஷத்தையும் அளிக்கும் என நினைக்கிறேன்.) தீடிரென்று மரணித்து விட்டதாக அதே வாட்சபில் சொன்ன போது, மனசு சங்கடப்பட்டு அன்று முழுவதும் வேதனையாக இருந்தது.  அதற்கு முன் இரு தடவை அவர்கள் வீட்டுக்கு (ஹைதராபாத்) சென்ற போது அந்த செல்லத்தை பார்த்திருக்கிறேன்..  அந்த ஞாபகம் வந்து அதனை நினைத்து அன்று முழுவதும் அவர்களுடன் பேசிக்கொணடிருந்தேன். அவர்களும் அதன் காரணமாக குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து எங்கும் பயணப்பட மாட்டார்கள்.  யாரேனும் ஒருவர் அதற்கு காவலாக... இருப்பார்கள். அக்காலத்தில்  "வீட்டை காக்கும்" எனப் படித்தது ஞாபகம் வருகிறது.

இப்படியாக அந்த ஒரு மாதத்தில் இன்பமும் துன்பமுமாக இரு நிகழ்வுகள்.( முதலில் சொன்ன வரிகள் ஒரளவுக்கு பொருந்தி வந்து விட்டது.) இந்த பிறந்த நாள்என்றதும்  யாருக்கு யார் பெரியவர். சின்னவர் என்பதைக் கண்டதும், ஒரு நினைவு... நமக்கு தெரிந்த பதிவர்கள்  அனைவருமே ஒரிரு, இல்லையேல் நான்கைந்து, அதுவும் இல்லையேல் ஆறேழு, அப்படியும் இல்லையென்றால், ஏழெட்டு வயது வித்தியாசத்தில் இருப்போம்.  ஆனால்  சகோதரர் நெ. த அவர்கள் அரை விநாடி பின் பிறந்து விட்ட காரணத்தாால்,  கீதா ரெங்கனை "அக்கா" என அழைப்பதாக சகோதரி கீதா அவர்கள குறிப்பிடுகிறார்.
ஆனால் அதைப்பார்த்து "சகோ" என வாய் நிறைய அழைத்து வந்த சகோதரி கீதா அவர்கள் நான் எழுதிய  1976க்கு அப்பறம் கமலாக்கா என அழைத்து ஆனந்திக்கிறார். ஹா ஹா ஹா ஹா ஹா.

சரி "நினைவைச் " சொல்லவேயில்லையே... நாங்கள் சென்னையில் குடியிருந்த போது
நான்கு குடித்தனம். அதில் கீழ் வீட்டில் ஒரு அம்மா, இரண்டு மகள்கள் ஒரு மகன்,. தன் பெரிய பெண்ணின் மகளை தன் மகனுக்கு மணமுடித்திருந்தார். (பாட்டியே மாமியார்) அந்த பேத்திக்கு அப்போது என்னை விட ஒரு ஐந்து வயது கம்மியாகயிருக்கலாம். நான் அவர்களை எப்படி பேர் சொல்லி அழைப்பது என்று  பரஸ்பரம் இருவருமே "மாமி" என அழைத்துப் பேசிக் கொள்வோம். தீடீரென ஒருநாள் அந்த மாமியார் (பாட்டி) என்னிடம் "மாமி.. (அவரும் என்னை அப்படியே அழைத்தார் என்பது வேறு விஷயம்.) இனி எங்க பேத்தியை மாமி என்று அழைக்காதீர்கள்.  அவள் உங்களை விட சின்னவர். சீக்கிரமே திருமணம் செய்து விட்டோம். ஆனால் இப்போதுதான் ஒரு குழந்தை பிறந்திருக்கு. அதை வைத்துக்கொண்டு அவளை பெரியவராக நினைத்து விடாதீர்கள்.. இனி பேரைச் சொல்லியே கூப்பிடுங்கள்.. எனச் சொல்லவும் எனக்கு  என்னமோ போலாகி விட்டது. (பேத்தி என்பதால், மருமகளிடம் அவ்வளவு பாசம்..)  அதற்கு முன் பழகும் போதே எனக்கு பத்தொன்பது வயதில் திருமணமானதையும், சீக்கிரமாகவே குழந்தைகள் பிறந்திருப்பதையும் அறிந்து வியந்தவர்தான் அந்த அம்மா. சரி... அதுதான் போகட்டும்...ஒருநாள்,  " நான் உங்கள் அம்மா மாதிரிதான்... ஆனாலும் உங்களை பேர் சொல்லி அழைக்க என்னமோ மாதிரி இருக்கு.. அதனால் மாமி என்றே அழைக்கிறேன்" என்றாறே பார்க்கலாம்.

எனக்கு சிரிப்புதான் வந்தது. "என்னை எப்படி வேண்டுமானலும் அழைத்துக் கொள்ளுங்கள் . பாட்டி, கொள்ளுப்பாட்டி எள்ளுப்பாட்டி என அழைத்தாலும் ஆட்சேபனை இல்லை. கூப்பிட்டு விளிப்பதற்காகத்தான் பெயரிடுவது,  உறவை குறிப்பிடுவது எல்லாம்... எப்படி அழைத்தால் என்ன.... என்றேன். (ஆஹா எவ்வளவு பெருந்தன்மை... என அனைவரும் புகழாரம் பதியலாம் என யோசிப்பது புரிகிறது. ஆனாலும் வேண்டாமே....)
இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவங்கள் மறக்க இயலாதவையாக அமைந்து விடுகிறது.

அதெல்லாம் சரிதான்.. இன்னமும் பதிவில் முதலில் எழுதியது வரவில்லையே.. எண நீங்கள் பொங்குவதற்குள்,  சகோதரி பானுமதி அவர்கள் சகோதரி வல்லி சிம்ஹன் பதிவில், "என்ன  இந்த மாதம் எல்லோரும் புனித பயணமா இருக்கே" என நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டார்.

அதைத்தான் பதிவின் தொடக்கத்தில் ரயிலோடு இணைத்திருந்தேன்..     (இவங்களுக்கு நிஜமாகவே தலைசுத்தல் வந்ததை எந்த இடத்திற்கும் வந்து அடிச்சு சொல்றேன். ஆயுர்வேதமும் பலன் அளிக்கவில்லை போலும் ..) என பொறுமை தாளாமல் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் நினைப்பதும் என்னால் ஊகிக்க முடிகிறது.

அட.. எல்லோரும் கடுப்பாவது தெரிகிறது. இதோ.... விடுவிக்கிறேன்.விடுவித்தே விடுகிறேன். வரும் ஞாயிறன்று  மாலை குலதெய்வ வழிபாட்டிற்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் பிறந்து வளர்ந்த ஊருக்குச்  (திருநெல்வேலி) செல்கிறோம். ஒரு வாரம் அங்கு தங்க வேண்டியதிருக்கும். இந்த மாதம் குலதெய்வ மாதம் போலும். (அதனால்தான் முதலிலேயே பிறந்தது, இன்பம், துன்பம். அனைத்தையும் ரயில் பயணங்களுடன் கோர்த்து விட்டேன்.)
பொதுவாக உப்புமாவை எங்கள் வீட்டில் "இன்று குலதெய்வ வழிபாடு" என்றுதான் குறிப்பிடுவோம் . கிளம்பும் அன்றாவது உப்புமா இடையில் வராமல் இருக்க வேண்டும்.... ஆமாம்.. வளவளன்னு எழுதியதுதான் எழுதியாச்சு. (ஆனால் தலைப்பையாவது மாத்தி கொடுத்திருக்க கூடாதா? .. பேசாமே  கடைசியிலே சொன்னமாதிரியே "விளையாட்டா கோர்த்த பதிவு"ன்னு வச்சிருக்கலாம்..)  என்று சகோதரர் கில்லர்ஜி அவர்கள்  அவரின் நண்பர் இருவருடன் சத்தமாகவே பேசுவது கேட்கிறது.

அது சரி.. ஊருக்கெல்லாம் போயிட்டு நிதானமா வாங்கோ .  அவசரமேயில்லை. Day யை சொன்னீங்களே.. Year யும் சொல்லிட்டு போங்கோ.. கணக்கு போட்டு குழப்பம் தீர்க்கலாமே..  என அனைத்துக் குரல்களும் ஒருசேர  அழகான இசையாய் ஒலிப்பது கேட்கிறது.

போயிட்டு வர்றேன். சொல்லலாமா என்று  கேட்டு விட்டு வந்து  சொல்கிறேன். ( வேறு யாரிடம்? தெய்வத்திடந்தான்.....) 🙏...

அனைவரையும் விளையாட்டாகத்தான் குறிப்பிட்டேன். தவறெனின், 🙏. மன்னிக்கவும்... 
(அட... இங்கு தலைப்பும் வந்து விட்டதே...)


Friday, June 22, 2018

போலி

கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த லதா ஆளுயர நிலை கண்ணாடி முன் நின்று தன் அழகை தானே ரசித்து கொண்டிருந்தாள். லைட் நீல நிறத்தைக் கொண்ட புடவையும், அதே நிறத்தில் பிளவுசும் அவளை அழகு தேவதையாக்கி கொண்டிருந்தன. இந்த நேரத்தில் மோகன் தன் அருகில் இருந்தால் தன்னை எப்படியெல்லாம் வர்ணிப்பான். அந்த நினைப்பு அவள் உள்ளத்தில் எழுந்ததுமே, அவளது அழகிய அதரங்களில் ஒரு புன்னகை நெழிந்தோடியது.

"லதா" என்ற குரலைக் கேட்டதும் இனிய கனவுகளில் உலாவி கொண்டிருந்தவள் "பொத்"தென்று கீழே விழுந்து விட்டதை போன்று உணர்ந்தாள்.

சட்டென்று திரும்பி பார்த்தவள் அங்கு தன் அம்மா அன்னபூரணி கையில் பால் டம்பளருடன் நிற்பதை கண்டதும் " என்ன அம்மா ?" என்றாள் சற்றே சிடுசிடுப்புடன்.

"லதா, உனக்கு பரீட்சை முடிய இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?" என்று கேட்டாள் அன்னபூரணி.

"மூன்று...." மொட்டையாக பதில் வந்தது
லதாவிடம் இருந்து. 

தன் அழகை பூரணமாக ரசித்து திருப்தி அடைவதற்குள் அம்மா குறுக்கிட்டு விட்டாளே என்ற எரிச்சல் அவளுக்கு.

"லதா, உனக்கு பரீட்சை முடிந்து விடுமுறை விட்டவுடன், உன் திருமணத்தை முடித்து விடவேண்டும், என்கிறார் உன் அப்பா. அதற்கேற்றாற்போல், வரன்கள் வேறு வந்து கொண்டிருக்கின்றன. 

நேற்று கூட ஒரு வரன் வந்திருக்கிறது... இதோ, பையனின் போட்டோவை அனுப்பி இருக்கிறார்கள். உனக்கு பிடித்து இருக்கிறதா என்று பார்..."

அன்னபூரணி நீட்டிய போட்டோவை வாங்காமல், ஜன்னல் அருகே போய் நின்றவள், வெளியே தெரியும் நீல நிற வானத்தையே சற்று நேரம் மெளனமாக வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். 

பிறகு, "எனக்கு இப்போது திருமணம் வேண்டாமம்மா... நான் இன்னும் மேலே படிக்க போகிறேன். இதை நீ தான் அப்பாவிடம் சொல்லி அப்பாவின் சம்மதத்தை வாங்கி தரவேண்டும்.." அவள் குரல் கெஞ்சியது.

"இதையெல்லாம், நீயே உன் அப்பாவிடம் சொல்லிக்கொள். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நாங்கள் பார்க்கும் பையனைத்தானே  நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும்.." என்ற அன்னபூரணியின் குரலில் சற்று கண்டிப்பு ஒலித்தது.

ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த லதா திரும்பி, அன்னபூரணியை உற்று பார்த்தாள். பின் "நீங்களெல்லாம், உங்கள் பெற்றோர் பார்த்த பையனையே திருமணம் செய்து கொண்டு என்ன பயன் கண்டு விட்டீர்கள்?" என்று எகத்தாளமாக கேட்டாள்.

 அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அன்னபூரணி திணறிகொண்டிருந்த போதே, மேஜை மீதிருந்த புத்தகங்களை அள்ளி கொண்டு, "நான் கல்லூரிக்கு சென்று வருகிறேன்.." என்ற சொல்லையும் உதிர்த்து விட்டு சிட்டென பறந்தாள்.

திகைத்துபோய் நின்று கொண்டிருந்த அன்னபூரணிக்கு தன் மகள் கேட்ட கேள்வியும் சரியெனவே பட்டது. 

ஆம், அவள் செல்வநாயகத்தை திருமணம் செய்து கொள்ளும் போது  சற்று பயந்த சுபாவத்தில்தான் இருந்தாள். அதற்கேற்றாற்போல்  அவரும் எப்போதும் பணம் பணம் என்றே தன் பிஸினஸ் ஒன்றே குறியாக இருந்து  செல்வநாயகம் பெயருக்கேற்றாற்போல் செல்வத்தின் நாயகராகவே விளங்கினார். பணம் இருந்தது அவரிடம்.. ஆனால் எப்போதும் தன்மையாக பேசும் குணம் இருந்ததா?

மூர்க்க தனமாக மனைவியிடமும், மகளிடமும் சில வேளைகளில் சத்தம் போடுவார். ஒரே மகள் என்றதால் , அவளுக்கு சில சமயங்களில் , சுதந்திரம் தருவார். சில சமயங்களில், கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல்  பேசிவிடுவார். நிலையற்றது அவரது மனம். அதனால் அவரிடம் மனைவி மகள் வேலைக்காரர்கள் எல்லோருமே எப்படி பேசுவது என்பது தெரியாமல் நடுநடுங்குவார்கள். பாம்பா, பழுதா என அறிய முடியாத ஒரு குணம். 

அவர் அவ்வாறு என்னிடம் நடந்து கொள்வதால் தான் லதா அப்படி கேட்கிறாள். ஆனால் குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் அன்பையும், தன் மீதும், தன் ஒரே மகளான இவள் மீதும் அவருக்கு இருக்கும் பாசத்தையும், இவளுக்கு எப்படி புரிய வைத்து தன் வழிக்கு கொண்டு வருவது என்று நினைத்து கொண்டே அறையை விட்டு வெளியே வந்து மாடிப்படிகளில் இறங்கி சமையல் அறைக்குள் புகுந்தாள் அன்னபூரணி.

கல்லூரியிலிருந்து கலகலவென சிரித்து பேசியபடி வெளியேறி கொண்டிருந்த மாணவிகளின் கும்பலிலிருந்து  வெளிப்பட்ட  லதா தங்கள் வீட்டு கார் வந்திருக்கிறதா என்று சுற்று முற்று பார்த்தாள்.

"அம்மா! கார் அங்கே இருக்கு போவோமுங்களா?" குரல் வந்த திசையில் திரும்பினாள் லதா .

"அடடே!! சண்முகம், நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்? நான் உங்களைத்தான் தேடி  கொண்டிருக்கிறேன். அப்போதே வந்து விட்டீர்களா?" என்றாள் லதா .

"இல்லையம்மா, நான் இப்பொழுது தான் வந்தேன். காரை எடுக்கட்டுமா?" என்றார் டிரைவர் சண்முகம்.

"இல்லை சண்முகம், எனக்கு பிரைவேட் கிளாஸ் இருக்கிறது. அதனால் நீங்கள் காரை விட்டுவிட்டு வீட்டிக்கு போங்கள். கிளாஸ் முடிந்ததும் நானே காரை எடுத்துவருகிறேன்."

"வேண்டாம் அம்மா.. அய்யா சத்தம் போடுவார்.. நீங்க முடிச்சிட்டு வாங்க, நான் அதுவரைக்கும் கார்ல காத்துக்கிட்டு இருக்கேன்."

"வேண்டாம் டிரைவர், நீங்கள் புறபடுங்கள், எனக்கு கிளாஸ் முடிய வெகு நேரம் ஆகும். நீங்கள் அப்பாவின் ஆபீசுக்கு பெரிய காரை எடுத்துக்கொண்டு போக வேண்டாமா."

ஒரு மட்டும் போக மனமில்லாமல் அவ்விடத்தைவிட்டு நகர்ந்த டிரைவரை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்ட லதா , அவர் தலை மறைந்ததும் காரை ஸ்டார்ட் செய்தாள். 

கார் "பீச்"சை நோக்கி விரைந்தது. காரை ஓட்டி சென்ற லதாவின் மனம் மிகவும் சஞ்சலப் பட்டது. காலையில் தான் அவ்வாறு அம்மாவிடம் பேசியிருக்க கூடாதோ! பாவம்.. அம்மாவின் மனம் எவ்வளவு வருத்த பட்டிருக்கும்.

"மோகன் நாளைதானே என்னை சந்திப்பதாக கூறியிருக்கிறார். நாளை சந்திக்கும் போது அவரிடம் தனக்கு பையன் பார்ப்பதை கூறி அவரை சீக்கிரமாக பெண் கேட்க வரச்சொல்ல வேண்டும்." 

கார் கடற்கரையை அடைந்ததும் அதிலிருந்து இறங்கினாள் லதா . 

கடற்கரையில் அவ்வளவாக கூட்டமில்லை. காரை பூட்டி விட்டு கடலை நோக்கி நடந்தாள். கதிரவனின் கிரணங்கள் அவளது பொன்னிற உடலின் மீது பிரகாசித்து அவளது அழகை அதிகபடுத்தியது. 

அவளும் மோகனும், கடற்கரைக்கு வந்தால் ஒரு படகின் மறைவில் தான் அமருவார்கள். அந்த திசையை நோக்கி கண்களை செலுத்தியவள் அங்கு மோகன் இருப்பதை கண்டு ஒரு கணம் மகிழ்ச்சி அடைந்தாள்.

<மோகன்..> என்று அழைக்க நாவெடுத்தவள், அடக்கி கொண்டாள். அவன் அருகில் ஒருபெண் நெருக்கமாக மிக---மிக----நெருக்கமாக அமர்ந்திருப்பதை கண்டு, மெதுவாக அவர்கள் அறியாமல் கவனிக்காமல், அவர்கள் அமர்ந்திருந்த படகின் மறுபக்கத்தில் அமர்ந்துகொண்டு அவர்கள் உரையாடலை உன்னிப்பாக கேட்கத்தொடங்கினாள் லதா .

"நான்சொல்வதை நம்பு.. உண்மையாக நான் அந்த லதாவை நேசிக்கவேயில்லை " என்றான் மோகன்.

"அவளையே சுற்றிகொண்டிருந்து, விட்டு அவளை காதலிக்கவில்லை என்றால் எந்த குருடனும் நம்ப மாட்டான்.." என்றாள் அவள் கோபத்துடன். 

"ஸில்லி, உனக்கு எத்தனை தடவை சொல்வது... எப்படி சொல்வது என்றே எனக்கு புரியவில்லை, நானும் நீயும் வருடகணக்கில் நேசிப்பது அவளுக்கு தெரியாது... நான் அவளைத்தான் உயிருக்குயிராக காதலிப்பதாக, நம்பிக்கொண்டிருக்கிறாள், அந்த பைத்தியகாரப் பெண்... நான் அவளிடம் இருக்கும் பணத்தைத்தான் "லவ்" பண்ணுகிறேன். 

அவளும், நான் கேட்கும் போதெல்லாம், பணமும் நகையுமாக எப்படியாவது கொண்டு வந்து தந்து கொண்டிருக்கிறாள். நாம் இருவரும் இருக்கும் இந்த ஏழ்மை நிலைக்கு, அவள் தரும் பணம் மிகவும் உதவியாக இருக்கிறது. இன்னும் அவளிடம் இருந்து, ஒருபெரிய தொகையாக கறக்க ஒருதிட்டம் வைத்திருக்கிறேன்.. 

அந்தபணத்தை கறந்தவுடன் நாம் இந்த ஊரை விட்டு வேறு எங்காவது சென்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம்.." என்றான் மோகன்.

"உண்மையாகவா!!! அந்த பெண்ணை அப்படி ஏமாற்றுவது தப்பில்லையா??" அந்தபெண்ணின் குரலில் சற்று பயம் தொணித்தது...

"ஏய்! விட்டால், நீயே அவளிடம் சென்று சொல்லி விடுவாய் போலிருக்கிறதே... அவளை நானா ஏமாறச்சொன்னேன்??? அவளுடைய பணத்திமிர் அவளைஏமாறச்சொல்கிறது." அந்த கயவன் தன் காதலியை சமாதானபடுத்த ஏதேதோ சொல்லிக் கொண்டேயிருந்தான்...

லதாவின் தலையில் ஒருபெரிய பாராங்கல்லை தூக்கிப்போட்ட உணர்ச்சியுடன் சிறிதுநேரம் கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். 

கடல்அலைகளை போல அவள் மனமும் கொந்தளித்தது. மீண்டும் அவர்கள் அறியாமல் எப்படியோ காரை வந்தடைந்தாள்.  காரை திறந்து உள்ளே அமர்ந்தவள், இத்தனை நேரம் நெஞ்சில் குமுறி கொண்டிருந்த உணர்ச்சிகளை கண்களின் வழியே கொட்டித்தீர்த்தாள்.

தன்னை உயிருக்குயிராக அவன் காதலிப்பதாக சொன்னதல்லாம் வாயளவே.. <<தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, ஆபீஸில் ஒருவரிடம் கடன், பணமுடையில் என்னசெய்வதென்று தெரியவில்லை>> என்று அவன் உள்ளம் உருக பேசி தவித்த போது அவளும் இரக்கபட்டு, தன் அப்பா அம்மாவுக்கு தெரியாமல் பணமும் நகையுமாக அவன் கையில் தாரை வார்த்தெல்லாம் வீண்.

இந்த லட்சணத்தில் எனக்கு பணத்திமிராம்... வெறுப்புடன் பல்லை கடித்தவள், "நல்லவேளை, இப்பொழுதாவது இவன் குணத்தை பற்றி தெரிந்து கொள்ள கடவுள் ஒருநேரத்தை ஏற்படுத்தி கொடுத்தாரே," என்று நிம்மதி பெருமூச்சு விட்டவளாய் காரை கிளப்பினாள்...

தனிமையாக சிறிது நேரம் இருக்க வந்தவளுக்கு, அந்த தனிமையில் இனிமை  கிடைக்கவில்லை... உள்ளத்தின் வெப்பத்தை போக்க குளிர்காற்றை நாடி வந்தவளுக்கு, அந்த வெப்பம் பன்மடங்கு பெருகியதுதான் மிச்சம்...

காலையில் அம்மாவிடம் இதைப்பற்றி கூறலாமா என ஒரு நிமிடம் யோசித்தவள், "மோகனை நாளை சந்தித்து அவனிடம் அவன் தாய் தந்தையரை விட்டு பெண் கேட்டு வரச் சொன்ன பின் தன் தீர்க்கமான முடிவை சொன்னால், தன் பெற்றோர் வேறு வழியின்றி ஒத்து கொள்வார்கள்" என்ற நம்பிக்கையில் அம்மாவை கடிவது போல் பேசி விட்டு வந்து விட்டாள்.

இப்போது பீரோவில் இருக்கும் பணமும் கொஞ்சம் நகைகளும் காணவில்லையே என்ற பேச்சு வருவதற்குள் "அம்மாவிடம் எப்படியாவது உண்மையை விளக்கி கூறி அப்பாவின் காது வரைக்கும் போகாமல் எப்படி காப்பாறறுவது".. என்ற கவலை மிக தீவிரமாக அவளைப் பற்றிக் கொண்டது. மனசு அலை பாய எப்படியோ காரை ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். 

வீட்டை வந்தடைந்தவள், காரை வாசலில் நிறுத்தி விட்டு மாடிக்கு தன்னறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டவள், இயல்பாக இருப்பதை அம்மாவிடம் காட்டிக் கொள்வதற்காகவும், மனஅமைதிக்காகவும் ரேடியோவை திருப்பினாள்..

<<<ஆல்இண்டியரேடியோ... சென்னை வானொலி நிலையம்... திரைகானம்.. முதலில் பட்டாம்பூச்சி என்ற படத்தில்..
டி.எம் செளந்தரராஜன்... எஸ் ஜானகி...>>> அறிவிப்பாளரின் குரலை தொடர்ந்து பாடல் ஒலிபரப்பானது.

" எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி,
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி,"

பட்டென்று ரேடியோவை மூடினாள் லதா.

அப்போது காப்பி எடுத்து கொண்டு உள்ளே நுழைந்த அன்னபூரணியை கண்டதும் லதா வின் கண்கள் கலங்கின.

காலையில் அம்மாவை எடுத்தெறிந்து பேசியதிற்க்குத்தான் கடவுள் தண்டனை கொடுத்து விட்டாரோ!!! காப்பியை மேஜை மேல் வைத்து விட்டு "கிளாஸ், முடிந்ததா லதா, டிரைவர் வந்து சொன்னார்.." என்று கேட்டவாறே அங்கிருந்து நகரமுற்பட்ட அன்னபூரணியை தடுத்து நிறுத்தியது லதாவின் குரல்.

"அம்மா, என்னை மன்னித்துவிடு, காலையில் உன் மனம் புண்படும்படியாக பேசி விட்டேன் உங்கள் விருப்பப்படியே நேற்று பார்த்த அந்த பையனையே கல்யாணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் அப்பாவிடமும் நீயே சொல்லிவிடு."

அன்னபூரணி மகிழ்ச்சியுடன் மகளை நோக்கினாள்  "உண்மையாகவா சொல்கிறாய், லதா ? "ஆமாம்! அம்மா, உண்மையாகத்தான் சொல்லுகிறேன்."
மகளின் உறுதியான குரலில் தாய் மிகவும் சந்தோஷமடைந்தாள், 

அவளுக்கு தெரியுமா தன் மகள் காதல் என்பது ஒரு போலி வாழ்க்கை, பொழுதுபோக்கு என்பதை புரிந்துகொண்டு விட்டாள் என்று......

<<<பெற்றவர்கள் பார்ப்பதிலே பெருமை என்னவோ....  
அவர் மற்றவையும் பார்ப்பதினால் நன்மை அல்லவோ.......>>>> 

அந்த பாட்டு எங்கேயோ பாடிக் கொண்டிருந்தது..........
================================================================================
இதுவும் 1976- ல் எழுதியதுதான். அந்த காலகட்டத்தின் நடவடிக்கைகள் பாவனைகள் இவைகளை கருத்தில் கொண்டு எழுதியது. மேலும் கதைகள் என்ற ஒன்று எழுத வேண்டுமென ஆர்வத்துடன் மட்டுமே கவனம் செலுத்தி எழுதப்பட்டவை. இதில் குற்றம் குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
படிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். 

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.