மனித மனங்கள்
என்னைப்பொறுத்தவரை (என்னையும் சேர்த்துதான் சொல்கின்றேன்.) சற்றே விசித்திரமானது.
விலங்குகளுக்கு தந்த ஐந்தறிவை விட, ஆறறிவாக “பகுத்தறிவு” என்ற பெயருடன் இறைவன் நமக்கு தந்தால்,
நம்மல் எத்தனை பேர் இந்த ஆறாம் அறிவை முறையாக பயன்படுத்துகிறோம்.?
பேசுவதற்கும், யோசிப்பதற்கும் எதையும் ஆராய்ந்து
முடிவு எடுப்பதற்கும், பயன்படும் இந்த ஆறாம் அறிவால்,
நம்முடன் வாழும் பிற மனித மனதினை புண்படுத்தாமல், இதமாக பேசிப்பழகி, உதவியாக உடன் நின்று சுமைகளை தோள்
சுமந்து, அன்பாக அரவணைத்து, “உனக்கு எப்போதும்
நானிருக்கிறேன்” என்பதை வருத்தம் வாராது சுட்டிக்காட்டி,
ஒரு கலங்கரை விளக்காய், படகுக்கு உதவும் துடுப்பாய்,
நிழல் கொடுக்கும் மரமாய், நிம்மதி தரும் உறவாய்
எத்தனை பேர் உலகில் உலாவி வருகிறோம்.?
எதிலும்
எந்த ஒரு விஷயத்திலும், போட்டி, பொறாமை, பிறருக்கு கஷ்டம்
வந்தால் அதைப்பார்த்து வெளிக்காட்டாவிடினும், மனதின் ஓரத்தில்
ரசித்து அனுபவிக்கும் ஈவு இரக்கமற்றத்தன்மை, எதையும் தான் மட்டுமே
அனுபவிக்க வேண்டும். யார் எப்படி போனால் என்ன? என்ற தர்மம் மறந்த சுயநலமனப்பான்மை, எதையும் தன் நன்மைக்காக
மட்டும் சாதித்துக்கொள்ளும் (அதனால் மற்றவர்கள் மனது எப்படி புண்பட்டாலும்
சரி! நமக்கென்ன?) பிடிவாத குணம்,
பழி வாங்கும் ரோசத்தினால் ஏற்படும் அன்பை மறந்த வன்மகுணம், பிறரை எதற்கெடுத்தாலும் மட்டம் தட்டி தன் செய்கையும் பேச்சுமே சிறந்தது என
தலைகர்வம் கொள்ளும் குணம், இவ்விதமான குணங்கள் தாம் சற்று நம்மிடையே
மேலோங்கி இருக்கிறது என்பது என் அனுபவ அபிப்பிராயம். (இக்குணங்களைப்பற்றி
தெரியாதவர்கள், அறியாதவர்கள் இவ்விதமான குணங்கள் முற்றிலும் இல்லாதவர்களை, என் எழுத்துக்கள் காயப்படுத்துகிற மாதிரி இருந்தால், இப்படி எழுதியமைக்கு என்னை மன்னிப்பீர்களாக.!)
ஆனால்
இத்தகைய குணங்களின் மொத்த உருவாக இருக்கும் மனித உயிர்கள், சில பல சமயங்களில் மற்றவர்களுக்காக
தத்தம் குணங்களை தளர்த்திக்கொண்டு, சிறிதாவது பிறருக்கும்,
தன்னை சார்ந்தவர்கும், “விட்டுக்கொடுக்கும்” பண்பினை உண்டாக்கிக்கொண்டு, அன்பினை உணவாக்கி,
பரிவையும், பாசத்தையும் நிழலாக்கித்தந்து,
மற்றவர்களை ஆரோக்கிய பாதையில் அழைத்துச் சென்றால், அந்த இடம் ஆயிரத்திற்கும் மேலாக ஒருசேர வளர்ந்து நிற்கும் மரங்களுக்கு நடுவே
கிடைக்கும் குளிர்ச்சியையும், சுகமான சுகந்தம் வீசும் சூழலையும்
தருமே.! யோசிப்போமா?
ஒரு கதை...
இதில்
தான் நினைத்ததை கெடுதலுக்காக சாதித்து காட்டும் பிடிவாத குணமுடைய ஒரு பெண்ணைப்பற்றிய
கதை.. எப்போதோ
படித்தது! (இப்போதும் அடிக்கடி படித்துக் கொண்டிருப்பது...)
“ஸ்ரீராம கிருஷ்ண மட வெளியீடாக” என் மகனின் பள்ளிப்
பருவத்தில் பரிசாக வந்த புத்தகத்தில் படித்தது. சில கதைகள் படித்ததுமே
மனதின் அடிஆழத்தில் சென்று நிரந்தரமாகி வேரூன்றி விடும். அப்படிபட்ட
ஒருகதை இது… பொதுவாக ஒரு கதை மனதில் படியும் சமயம், இந்தக் கதை மாந்தர்கள் மாதிரி கெட்டவர்களாக நாம் இருக்கக்௬டாது.! இல்லை அந்த கதையில் வரும் நல்லவர்கள் மாதிரி நாமும் வாழ்ந்து வாழ்க்கையை முடிக்க
வேண்டும்.! இந்த மாதிரி நல்ல எண்ணங்கள்தாம் கதையின் பாதிப்பாக
வந்து நம்மிடையே ஒட்டிக் கொள்ளும். அதனால்தான் நல்ல விசயங்கள்
௬றும் கதைகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுப்போம். இதை ஏற்கனவே நீங்களும் படித்து இருக்கலாம்.
எனினும் என் பதிவிலும் படிப்பதற்கு என் பணிவான நன்றிகள்…
முன்னொரு
காலத்தில் “கரவீரபுரம்” என்ற ஊர் ஸஹ்யாசலம் என்ற மலையடிவாரத்தில்
இருந்தது.. அவ்வூரில் உத்தம குணங்கள் நிறைந்த தர்மதத்தர் என்பவர்
அவரது வழக்கப்படி கார்த்திகை மாத ஏகாதசியன்று முறைப்படி பெருமாளை வழிபட்டு வந்தார்.
அன்றும் இரவு முழுவதும் கண் விழித்து உபவாசத்துடன் விரதமிருந்து கடைசி
ஜாமத்தில் இறைவனை பூஜித்து தொழுவதற்காக பூஜை சாமான்களை சேகரித்தபடி கோவிலுக்கு சென்று
கொண்டிருந்தார். சென்ற வழியில் பயங்கர சப்தமிட்டபடி ஒரு அரக்கி
தன் எதிரில் ஒடி வருவதை கண்டவுடன், ஏற்கனவே பட்டினியுடன் தளர்ந்திருந்த
அவரது உடல் பயத்தினால் மேலும் தளர, இறைவனின் நாமத்தை இடையறாது
அவரது வாய் உச்சரித்து கொண்டிருந்தாலும், தப்பித்துக் கொள்ளும்
நோக்கம் யதேச்சையாக அவர் சிந்தையில் எழவும், பூஜைத் தட்டை அந்த
அரக்கியின் மேல் விட்டெறிந்தார்.
சிறந்த
பக்தியுடனும், முறைப்படி பெருமாளை பூஜித்து வருபருமான பக்தரின் கையால் தன்மேல் விழப்பட்ட
பூஜா பொருள்களினால் (துளசிதளம், தீர்த்தம்)
அந்த அரக்கிக்கு பழவினைகள் அகன்று பூர்வ ஜன்ம நினைவுகள் வந்தன.
உடனே அவள் தர்மதத்தரின் காலில் விழுந்து வணங்கி, “தன் பூர்வஜன்ம வினையால் தான் அரக்கியாக உலாவி வருவதாகவும், சிறந்த பக்தராகிய தங்கள்தான் தன்னை நல்ல நிலையடைய ஒரு வழி செய்திட முடியுமென்று
பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொண்டாள்.” இரக்க குணம் மிகுந்த தர்ம
தத்தரும், “உன் பூர்வஜன்ம கதையை ௬று. பகவான்
அருளினால் நானும் ஏதாவது உதவி செய்ய முடிந்தால் செய்து உன் பாபத்தை போக்குகிறேன்.”
எனவும் அரக்கி தன் முந்தைய வரலாற்றை உரைக்கலுற்றாள்..
செளராஷ்டிர
நகரில் பிக்ஷு என்ற பெயருள்ளவருக்கு மனைவியாக கலகா என்பவள் வாழ்ந்து வந்தாள். அவள் பெயரைப்போலவே, அவள் குணங்களும், செய்கைகளும் அமையப் பெற்றிருந்தன.
அவள் தன் கணவனை ஒருபோதும் மதித்ததே கிடையாது. அவர்
ஏதாவது நல்லதை செய்யச் சொன்னால், அதை பொருட்படுத்தாமலும்,
தீங்கானவற்றை சுட்டிக்காட்டி “அதை செய்யாதே”
என்றால், அதை முன்னின்று முதலில் செய்வதுமாக,
அவர் மனதை தன் செய்கைகளினால் துன்புறுத்தி வந்தாள். அவருக்கு அவள் போக்கு தர்ம சங்கடமாயிருந்ததால், கவலையடையந்த
மனமுடையவராய் வாழ்ந்து வந்தார். தன் கணவன் சொன்னபடி அவருக்கு
பிடித்தமான சமையலை செய்தாலும், வெளியில் சென்ற அவர் திரும்பி
வருவதற்குள் அவருக்கு பிடித்தனவற்றையெல்லாம் தான் உண்டு விட்டு மிச்சம் மீதி இருக்கும்
உணவுகளை அதுவும் அவருக்கு பிடிக்காத உணவுகளைத்தான் அவருக்கு பரிமாறுவாள்.. இவ்வித குணமுடையவளை மணந்த பாவத்துடன் செய்வதறியாமல் காலந்தள்ளி வந்தார் பிக்ஷு.
ஓருநாள்
தூரத்திலுள்ள தன் நண்பனின் வருகையை ஒட்டி, அவனுக்கு விருந்துடன் உணவு பரிமாற ஆசை கொண்டார்
பிக்ஷு. ஆனால் மனைவியிடம் அவனுக்கு சமையல் செய்யச் சொன்னால், அவள் அன்று அடுப்படிக்கே போக மாட்டாள். என்ன செய்வது?
என்று யோசித்த போது அவருக்கு ஒரு யோசனை வந்தது. தன் மனைவியை அழைத்தவர், “இதோ பார் கலகா! இன்று என் நண்பன் வெகு தொலைவிலிருந்து வரவிருக்கிறான். அவன் ஒரு சாப்பாட்டு பிரியன். இங்கு வந்து நல்ல சாப்பாடாக
கேட்பான். அதனால் நீ இன்று அடுப்பே மூட்டாதே! அவனுக்காக நீ எதையும் பண்ண வேண்டாம்..!” என்றதும்,
கலகா விழுந்தடித்துக்கொண்டு நல்ல சமையலாக தேர்ந்தெடுத்து நல்லவிதமாக
பண்டங்கள் தயாரித்து பரிமாறி, வந்த நண்பனை நன்றாக கவனித்து அனுப்பி
வைத்தாள். எப்படியோ தன் ஆசை நிறைவேறியதே! என்று மனசுக்குள் சந்தோஷப் பட்டுக்கொண்டார் பிக்ஷு.
இதே மாதிரி
தான் செய்ய வேண்டுமென விருப்பப் பட்ட செய்கைகளை நேர் மாறாகச்சொல்லியே ஒரளவு சமாளித்து
வந்தார். தன் தந்தையின்
திவசத்தையும் தான் செய்யப் போவதில்லை என்று சொல்லி, கடைசியில்
அவளுக்காக வேண்டா வெறுப்புடன் பண்ணுவதாக ஒரு பிரமையை உண்டாக்கி தந்தையின் திவச காரியங்களை
நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் இப்படி எத்தனை காலந்தான் சாமளித்து
வருவது?
திருந்துபவர்களை
எதையாவது இப்படிச்செய்து நல்ல பழக்கத்துக்கு ஆட்பட செய்து திருத்த முற்சிக்கலாம். திருந்தாத பிறவிகளை எப்படி திருத்துவது?
இவ்வாறே நேருக்கு மாறாக எத்தனை காலந்தான் சொல்லி வருவது? தப்பி தவறி எதையாவது மாற்றச் சொல்லி விட்டால், முதலிலிருந்தே
கோணலாகி விடும் செய்கைகளை எப்படித் திருத்துவது? அப்படியும் அவள்
திருந்தின மாதிரி ஒருநாளாவது தெரியவில்லை.! நாளடைவில் அவருக்கும்
வாழ்க்கை வெறுக்கவே. உறவும் ஊரும் நிர்பந்திக்க, அவளுக்குத் தெரியாமல், வேறொரு பெண்ணை திருமணம் செய்து
கொண்டு தன் வாழ்க்கையை தொடங்கினார்.
தன் கணவன்
தனக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது கலகாவுக்கு தெரிந்ததும், வழக்கத்திற்கு மாறாக எந்த ஆர்பாட்டமும்
செய்யாது, தன்னுயிரை தானே போக்கிக் கொண்டாள். யமதூதர்கள் வந்து அவள் உயிரை மீட்டு யமதர்ம ராஜனின் முன் நிறுத்தினர். யமதர்மன் அந்த உயிரின் பாவ புண்ணியங்களை அருகிலிருந்த சித்ர குப்தனிடம் கேட்க,
அவளின் பாப கதை கேட்ட யமதர்மன் பைசாச உருவில் நிறைய காலங்கள் பூலோகத்தில்
அலைய விட ஆணைப் பிறப்பித்தான். அவ்விதமாக மூன்று உடலில் புகுந்த
பின்னும் நற்கதி அடைய முடியாமல், அலைந்து கொண்டிருக்கும் போதுதான்,
மேற்௬றிய தர்மதத்தரை தான் சந்தித்ததாக தன் கதையைக் ௬றி முடித்தாள் அந்த
அரக்கி உருவிலிருந்த கலகா.
தர்மதத்தர்
அவள் கதை கேட்டு அவள்மீது இரக்கம் கொண்டார். தன் வாழ்நாளில் இதுவரை ஏற்று செய்து கொண்டிருக்கும்,
கார்த்திகை மாத ஏகாதசி விரதப்பலனில் பாதி புண்ணியத்தை அவளுக்கு அளித்தால்,
அவளின் அரக்க வடிவம் நீங்கப்பெற்று, அவள் புண்ணியலோகம்
செல்வாள் என நிச்சயமாக நம்பி, ஸ்ரீமன் நாரயணனின் திருமந்திரத்தை
மனமுருகி உச்சரித்து அவளின் பாபம் களைய எம்பெருமானை வேண்டவும் அங்கு ஒர் அதிசயம் நிகழ்ந்தது.
கோர வடிவத்திலிருந்த கலகா தன் பாபங்கள் நீங்கப்பெற்று அழகிய மங்கையாக
காட்சித்தர அவளை புண்ணிய லோகத்திற்கு அழைத்துச் செல்ல பகவான் விஷ்ணுவின் தூதர்கள் புஷ்பக
விமானத்தில் எழுந்தருளினார்கள்.
அவர்களை
கண்டவுடன் பணிந்த தர்மதத்தரை நோக்கி, “தர்மதத்தரே! உங்களின் செயல் அற்புதமானது.
முன் பின் தெரியாத இவளுக்காக உங்கள் புண்ணியத்தில் பாதியை தானமாக்கிய
உமது செயலால் இவள் பாபங்கள் களையப்பெற்று விஷ்ணு லோகத்தில் இவள் ஆயுள் முடியும் வரை
தங்கியிருப்பாள்.. அப்போது நீங்கள் தானமளித்த புண்ணியம் பலமடங்கு
பெருகி தங்களை வந்தடையும். அதன் பலனால், தாங்களும், தங்களின் இரு மனைவியரும் இப்பூலோக வாழ்க்கை
முடிந்ததும், புண்ணிய லோகம் வந்து சில காலம் வசித்தப்பின்,
அடுத்த பிறவியாக அயோத்தியை ஆளும் மன்னனாக “தசரதன்”
என்னும் பெயருடன், பிறப்பீர்கள். தங்களின் இரு மனைவியரும், அந்தப் பிறவியிலும் தங்கள்
மனைவியராக, “கோசலை, சுமித்திரை”
என்ற பெயருடன் தங்களுடன் வாழ்வார்கள். இந்தப் பிறவியில்
தங்கள் புண்ணியத்தைப் பெற்ற காரணத்திற்காக இந்தப் பெண்ணும், தங்களின்
மனைவியாக “கைகேயி” என்ற பெயருடன் தங்களை
மணம் புரிவாள். அந்தப் பிறவியில் தங்களுக்கு மகனாக பகவான் ஸ்ரீமன்
நாராயணனே, வந்து அவதரிப்பார்.” என்ற விபரங்கள்
௬றிய தூதர்கள் பாபங்கள் நீங்கிய அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு விஷ்ணுலோகம் ஏகினர்.
புண்ணியங்கள்
ஏகமாய் பெற்றாலும், அந்த “அரக்க” மனம் சிறிதளவு அவளிடம்
ஒட்டியிருந்ததால் தான், அரச வம்சத்தில் பிறந்து செளபாக்கிய வாழ்வை
பெற்றும் “கைகேயி” ராமரின் வனவாசத்திற்கு
ஆதாரமாயிருந்து, தன் மணவாழ்வு முடிவதற்கும் காரணமாயிருந்தாளோ,
என்னவோ என்பதாக கதை முடிகிறது…
ஆக, அத்தனைப் புண்ணியம் பெற்றவளுக்கும்,
அடுத்தடுத்த பிறவிகளுடன் பிறவி வாசம் தொடரும் போது, நம்பாடு எப்படியோ? நாம் வாழும் நம் உயிர்களுக்குள் எத்தனை
“கலகாக்கள்” இடம் பெற்று தன் குணங்களை வெளிப்படுத்திக்
கொண்டிருக்கின்றனவோ? ஆனால் அந்த மாதிரி புண்ணியம் நமக்கு ஒருபோதும்
கிடைக்க வாய்ப்பில்லை.. நம் குணங்களை மாற்றியமைத்து வாழவேண்டுமென
நான் முதலில் எழுதியது போல் நினைத்தாலும், “முழுதாக” மாற இன்னும் எத்தனைப் பிறவிகளோ.? இந்தக்கதையும்
“பிடித்(வா)தமாக”
என் மனதில் பதிந்ததால் படித்ததில் ((பிடிவாதமாக) பிடித்ததாக பதிவில் பதிந்து விட்டேன். படித்தமைக்கு
நன்றி…
(நீதான் அந்த கலகாவின் அடுத்தடுத்த பிறவியோ? என்று நீங்கள்
மனதுக்குள், எனக்கு கேட்காமல் முணுமுணுத்தாலும், எனக்கு தெளிவாக கேட்கிறது…)
நன்றி.. ஸ்ரீராம கிருஷ்ண மடத்திற்கும்.. இக்கதையை எழுதிய
“சரஸ்வதி” என்ற எழுத்தாளருக்கும்…
நல்ல குணங்கள் அமைவதற்கும் விதி வேண்டும் போலும்! சுயநலம் இல்லாமல் இருந்தால் தர்ம சிந்தனை வளரும். ஆசைகளை விட்டொழித்தால் சுயநலம் அகலும். எதிர்பார்ப்பை நிறுத்திக் கொண்டால் ஆசைகள் மறையும். எல்லாம் நடக்க வேண்டுமே!
ReplyDeleteவணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் கருத்து சரிதான்.! ஆசைகள்தாம் சுயநல வேரென பெருகி வளர்ந்து எதிர்பார்த்தலை தூண்டி விட்டு தர்ம குணத்தையே மனதிலிருந்து முற்றிலும் அகற்றுகிறது. ஓர் ஆசையை அகற்ற வைராக்கியத்தால், கஸ்டத்துடன் வென்று வருவதற்குள் மற்றொரு ஆசை அதனுடனே சேர்ந்து கொண்டு அறிவுகண்களை மூடி விடுகிறது. பிறவிதோறும் இதுதானே நடக்கிறது. எந்தப் பிறவியில் முழுமையாக ஜெயிப்பது.? விதி வசமிருந்தால்தான் அது நடக்கும். அது வரை எத்தனைப் பிறவியோ/?
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
கதை படித்ததில்லை... அதற்கு முதலில் நன்றி...
ReplyDeleteஇந்த வயது என்று ஒன்று இருக்கிறதே... அதுவும் காலமும் அனைத்தையும் கற்றுக் கொடுத்து விடும்...
வணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.
கதையை படித்து ரசித்தமைக்கு மிகுந்த நன்றிகள்..மற்றவர் மனத்தை நம் செய்கைகளினால் புண்படுத்தாமல், இருக்க வேண்டுமென்ற கருத்தை உணர்த்துவதுதான் இக்கதையின் சிறப்பு.
அக்கருத்து பிடித்திருந்ததால் பதிவில் பகிர்ந்தேன்.
தங்கள் கருத்தும் உண்மைதான்.! வயதும், காலமும் அறிவை மேம்பட செய்ய நானும் ஆண்டவனை வேண்டுகிறேன்.
I read this powraanic story for the first time. Did the magazine provide any information on the source
ReplyDeleteSubbu thatha
I read this powraanic story for the first time. Did the magazine provide any information on the source
ReplyDeleteSubbu thatha
வணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராம கிருஷ்ண மடம் அச்சகத்திலிருந்து, 1984 ம் ஆண்டு ஆன்மிகக் கதைகள் என்ற தலைப்பில் இப்புத்தகம் அச்சிடபட்டுள்ளது. சிறுவர்களுக்கு நல்ல கருத்தினை கதைகளாக போதிப்பதற்காக இதை வெளியிடுகிறோமென பதிப்புரையில் ௬றப் பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு கதையை படித்து பதிவில் எழுதினேன். தங்கள் கருத்துரைகள் என் எழுதும் ஆவலை மேலும் விருத்தியாக்குமென நம்புகிறேன். நன்றி..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
நல்குணங்கள் 80 பரம்பரையில் வருவதா ? இல்லை இடைப்பட்ட வாழ்விவில் மா(ற்)றிக்கொள்கிறதா ? பரம்பரைக் குணங்கள் இடைப்பட்ட வாழ்வில் விடுபடுவதும் உண்டு சிலருக்கு நல்ல குணங்கள் இடையில் தொற்றிக் கொள்வதும் உண்டு
ReplyDelete6 அறிவு என்று சொல்லப்பட்ட மனிதரில் 5 அறிவு மிருகங்களும் வாழுகின்றன...
5 அறிவு என்று சொல்லப்பட்ட மிருகங்களில் சில மனிதர்களைப்போல் நாய் பூனைக்குட்டிக்கு பால் கொடுத்து வளர்த்து விடுகிறது.
உதாரணக் கதை அருமை
அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுவோம்.
வாழ்க வளமுடன்
வணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
தங்கள் கருத்துக்கள் உண்மைதான். பரம்பரை சுபாவங்கள் ஒரளவு அனைவரிடம் ஒட்டிக்கொண்டு வருமே ஒழிய, மற்ற உயிர்களிடம் அன்பு காட்டுவது, சடாரென்று பிறருக்கு எதைப்பற்றியும் யோசிக்காது பொருளாலோ, உழைப்பாலோ உதவியாயிருப்பது, முக்கியமாக தன்னைப் போல பிறரை நினைத்து மதிக்கும் மனப்பான்மை, இவை போன்றவை எல்லாம்,பிறக்கும் எல்லோரிடமும் ஒரே மாதிரி இருப்பதில்லையே.! ஒரே வீட்டில் தாய் தந்தை குழந்தைகள் என பல உறவுகள் சேர்ந்திருந்தாலும், குணங்கள் ஒருவருக்கொருவர் மாறிதானே அமைகின்றன.. உதாரணத்திற்கு கை விரல்களை உவமைபடுத்திக் ௬றுகிறோம். மொத்தத்தில் அன்பை வளர்க்க ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க வேண்டும். யார் விட்டு தருவது என்ற ஈகோ சுயநலமாக பிறப்பெடுத்து நம்மை நாசமாக்குகிறது.
ஏதோ மனதில் எழுவதை எழுதுகிறோம். இதை தீர்ப்பது ஆண்டவன் கையிலும் அவரவர் விதியிலுந்தான் உள்ளது.( நிறைய எழுத எழுத கருத்துரை பதிவாகி விடும்.)
பாராட்டுதலுக்கு நன்றி..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
நல்ல கதை. ஆறறிவு ஜீவிகள் என்று சொல்லப்படும் மனிதர்களிடத்தில் எத்தனை எத்தனை இழுக்குகள், கெட்ட எண்ணங்கள். இவர்களை விட ஐந்தறிவு ஜீவராசிகளே மேல் என நினைக்கும் வண்ணம் நடந்து கொள்கிறார்கள்.
ReplyDeleteகலகா கதை இது வரை படித்திராதது....
வணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
தங்கள் ௬ற்றும் உண்மைதான். கெட்ட எண்ணங்களை முழுமையாக தொலைத்து, நல்ல எண்ணங்களுடன் என்று ஒரு மனிதன் மாறுகிறானோ அன்றே அவன் ஆறறிவு உள்ளவனாகிறான்.
கலகா கதையை படித்து ரசித்தமைக்கும் என் நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வணக்கம்
ReplyDeleteஎல்லாமனிதர்களும் இவ்வாறு நடப்பார்கள் என்றால் புவியில் ஏது பிரச்சினை அருமையாக சொல்லியுள்ளீர்கள்
உதாரணத்துக்கு எமது விரல்கள் ஒவ்வொன்றும் வித்தியாசம் உள்ளது அதைப்போலதான் மனித குணங்களில் வித்தியாசம் உள்ளது சகோதரி பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்--
வணக்கம் சகோதரரே.!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.
தங்கள் கருத்தும் சரிதான். உலகில் படைக்கப்பட்ட எல்லோருமே குணத்தில் ஒரே மாதிரி அமைந்து விட்டால் ஏது பிரச்சனை.? ஆனால் அப்படி அமையாத பட்சத்தில் உறவுகளிலும் சரி... வெளியிடத்திலும் சரி... ஒருவருக்கொருவர் விட்டுத்தரும் குணத்திலாவது, அன்பை பறிமாறிக் கொள்ளலாம். மற்ற கெடுதலான குணங்களை தவிர்க்கலாம்...!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன் .