Friday, November 7, 2014

நற்குணங்கள் ...... (1) பொறுமை

ஒவ்வொரு மனிதனும் பிறந்ததிலிருந்து தன்பிறவி சுபாவம்என்ற குணங்களின் அடிப்படையில்தான் வளர்ந்து வாழ்ந்து வருகிறான். அவனின் குறை, நிறைகளை, பிறர் சொல்லும்போது, தாய் தந்தை மற்றும் நெருங்கிய உறவுகளின் சுபாவங்களை சுட்டிக்காட்டிஅப்பாவை போலவே இருக்கிறான்.! என்றும், இல்லையில்லை.! இவன்  அம்மாவின் குணம் அப்படியே வந்திருக்கிறது! என்றும், இல்லை, நான் பார்த்த வரை அவன் மாமா போலவே நடை உடை பாவனை என்றும், அவரவர்களுக்கு மனதில் எது தோன்றுகிறதோ, அதன்படி ௬றுவார்களே அன்றி அவனுக்கென்று தனித்திருக்கும் மற்ற சுபாவத்தை மறந்து (மறைத்து) விடுவார்கள்.! (அவனுக்கும் சுத்தமாக மறக்கடித்து விடுவார்கள்.)

இது இப்படியிருக்க, மனிதனுக்கே இருக்க வேண்டிய குணங்களாகிய பொறுமை, நிதானம், தர்மம், (ஈகை) இன்சொல் பகருதல், ஒழுக்கம் போன்ற இத்யாதி நல்ல குணங்கள், தோன்ற காரணமாயிருப்பவை, இந்த கோபம், பொறாமை, ஆத்திரம், வன்சொல் ௬றுதல், பகையுணர்ச்சி, போன்றவைதான்.! ஆமாம்! இதையெல்லாம் ஒரு மனிதன் என்று, தலைமுழுகி தீக்கிரையாக்கி, துகள்களை, மனதில் ஓடும் சிந்தனை என்னும் புண்ணிய நதியில் கரைத்து விடுகிறானோ..! அன்று, அவன் மனதில் மேற்க்௬றிய நல்ல குணங்கள் துளிர்த்து தளைத்து, வளர்ந்து, விருட்சமாகி, நிலைத்து தங்கி விடும்தானே..! ஆக எப்போதும் இருக்க வேண்டிய நல்ல குணங்களுக்காக, தானாக வந்த அத்தீய குணங்களை அழிக்க வேண்டியது சரியான தீர்ப்புதானே..! (யார்ரா அது! தீர்ப்பையெல்லாம், மாத்தி போடறது..!) சத்தமாக ஒரு குரல் ஒலிக்க, ((ஐயோ.!மூக்கை கொஞ்சம் சுற்றி தொட்டு விட்டேனோ..?) என்று உள் மனசு பதற (சரி! சரி! எப்படியோ! சொல்ல வந்த கருத்தை கொஞ்சம் வளர்த்து விட்டாலும் புரிந்தால் சரிதான்.!) என்று என் மனசு உள் மனசையும், குரலையும் பொய்யாக சமாதானபடுத்தியது.!)

முதலில், இந்த பொறுமை என்ற குணமே மிகவும் சிறந்ததாகும்.! (ஆமாம்! எழுதும் உனக்கும், அதைவிட படிக்கும் எங்களுக்கும் இல்லாத சிறப்பா, அதற்கு வந்துவிடப் போகிறது..? என்ற லேசான, இல்லை, இல்லை சற்று பலமான முணுமுணுப்பு கேட்கிறது..!) சரி! சரி! விஷயத்துக்கு வருவோம்.! “பொறுத்தாள்வார் பூமியாள்வார்”! என்றும்பொறுமை கடலினும் பெரிது..” என்றும்  பொறுமைக்கு சில உதாரணங்கள் சொல்வார்கள்.! பொறுமைக்கும் பூமிக்கும் அப்படி என்ன சம்பந்தம் என்றால், பூமித்தாய் மிகவும் பொறுமையுடன் இருப்பதால்தான், பொறுமையின்றி (சமயத்தில் பொறுப்புமின்றியும்) இருக்கும் நம் மனித பிறவிகளை, தினமும் தூக்கி சுமந்தபடி இருக்கிறாள்.! அந்த குணம் இப்பூமியில் அவள் குழந்தைகளாய் பிறந்து, எதையாவது சாதித்து அவளை பெருமைபடுத்த உலவும், நம்மிடமும் அவசியம் இருக்க வேண்டியது அத்தியவசியமான ஒன்றல்லவா…?

அந்தக்கால மன்னர்கள், முனிவர்கள், பெரியோர் சான்றோர், பெண்கள் என எத்தனையோ பேர் பொறுமைக்குமுதலிடம் கொடுத்திருப்பதை படித்திருக்கிறோம்..! கஜனிமுகமது நம் நாட்டை அடைய எத்தனையோ முறை படையெடுத்தும், தோல்விகளை அடுக்கடுக்காய் சந்தித்தும், “பொறுமையாகமீண்டும் மீண்டும் தன் படையெடுப்பை தொடரவில்லையா..? “பொறுமைக்கும்” ‘பொறுமையால்கிடைத்த சாதனைகளுக்கும் இன்னும் ஏராளமான உதாரணங்கள் உள்ளது..! (எனக்குத்தான் மேலும் விஸ்தாரமாய் சொல்ல இப்ப கொஞ்சம் பொறுமையில்லை..! மன்னிக்கவும்..)
 
பெண்களுக்கு இக்குணம் சற்று இயல்பாக அமைந்து விடுமென்று  (அப்படி அமைந்து விடவேண்டுமென்று பண்டைய காலத்திலிருந்தே, வலியுறுத்தியும் வறுப்புறுத்தியும் பழக்கப்பட்டும் இருக்கலாம்..!) நினைக்கிறேன்.! ஏனென்றால் சுமப்பது பூமித்தாய்அல்லவா..? (“தாய் என்பது பெண் பால்தானே..) ஆண்களுக்கு இக்குணம் அநேகமாக,  (இருங்கள்! இருங்கள்..!சொல்ல வருவதை முழுவதுமாக கேட்காமல்பொறுமையிழந்துகையில் கிடைப்பதை எடுத்து விடாதீர்கள்..!) சிலரை தவிர்த்து இருந்து கொண்டுதான் இருக்கிறது..! இப்போது இருக்கும் கால கட்டத்தில், “பெண்களை விட எங்களுக்குதான் பொறுமை நிறைய இருக்கறது..!” என்று ஆண்கள் பொங்குவது ( பொருமுவது ) புரிகிறது..! பொறுமையுள்ளவர்தானே, (அது ஆணாகினும், பெண்ணாகினும்) எதையும் சாதிக்க முடியும்..! இன்றைய மாறி வரும் உலகச்சூழலில்,   “வாழ்க்கையெனும் கடலில், “ஒருநாள்என்னும் படகில் பயணிக்கவேபொறுமைஎனும் துடுப்பை மிகவும் பலமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.!. ஆக பொறுமைஎன்பது நம் அனைவருக்கும் (ஆண், பெண் பாகுபாடின்றி ) சமம் எனப்புரிந்து கொண்டு, நாம் வளர்த்துக்கொள்ளும் குணங்களில் ஒன்றென உணர்ந்து கொண்டு, “இனி எதற்கும் பொறுமையுடன் இருப்போம்”! என்று உறுதி எடுத்துக்கொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்..!


ஒரு கதை..! (பழைய கதைதான்..! என் செளகரியத்திற்கு சற்று கற்பனையை கலந்துள்ளேன்..!)

ஓர் வயதான ஆமை தன் பேரனுக்கு பழைய கதைகளை சொல்லிக்கொண்டு இருந்தது..! (இந்தகாலத்தில், நம்மிடையே தன் வாரிசுகளின் வாரிசுக்கு கதைகள் சொல்வதும், அவர்கள் கேட்பதும் அரிதாகி விட்டது. அவர்கள்தான் பள்ளியிலிருந்து வந்தவுடன் இரவு தூங்குவதற்கு இடைப்பட்ட நேரத்தில் தாங்கள் சென்று வந்த கராத்தே, பாட்டு, விளையாட்டு பயிற்சி, போன்றவிடத்தில் நடந்த சம்பவங்களை நகைச்சுவையாக, (அதுவும் அவர்களுக்கு மனமிருந்தால்) விவரிக்கிறார்கள்.! நாமும் திறந்த வாய் மூடாது கேட்போம்..! (நாமெல்லாம் இந்த மாதிரிபொறுமையாஎங்கேயும் போனது கிடையாது..!) மற்றபடி கதைச்சொல்லு பாட்டி என்று நச்சரிப்பது நம்காலத்தோடு போய் விட்டது. எங்கேனும் அது அரிதாக தொடரலாம்..) சரி நான் கதையை விட்டு எங்கோ சென்று விட்டேன்..!

அந்த பேரன் ஆமை தன் பாட்டியிடம், “பாட்டி! நம் தாத்தா முயலுடன் ஒட்டப் பந்தயம் வைத்து ஜெயித்த கதையை சொல்லு!” என்றதும் பாட்டி ஆமையும், பெருமையுடன் அந்தக்கதையை ஒரு வரி விடாமல்பொறுமையுடன்சொல்லி முடித்தது..! (நமக்கு நம் பாட்டியிடம் கேட்டு கேட்டுபொறுமைபோய் விட்டதால் இங்கு விவரிக்கவில்லை..!)

கதை முழுவதும், “பொறுமையுடன்கேட்ட குட்டி ஆமைஎன்ன இருந்தாலும், பாட்டி நாமனைவரும், சோம்பேறிகளாம்..! அந்த முயல் தாத்தா ரொம்ப சுறுசுறுப்பாம்..! அதனாலே அவங்க இந்த கதையையே, மாத்தி மாத்தி சொல்லி, என்௬ட சேர்ந்து விளையாட வரும்போது உங்க தாத்தா ஒன்னும் ஜெயக்கவேயில்லை..! எங்க முயல் தாத்தாதான் உங்க தாத்தாவுக்கு விட்டுக்கொடுத்தாங்க..! நீங்க நடக்கற நடைக்கு உங்களுக்கு ஓட்டப்பந்தயம் வேறான்னு கிண்டல் பண்ணுறாங்க பாட்டி..! என்று வருத்தத்துடன் ௬றியது..!

சொன்னா சொல்லிட்டு போகட்டும்..! நாம ஜெயிச்சதென்னவோ உணமைதானே..!” என்று பேரனை சமாதானபடுத்தியது பாட்டி ஆமை..! ஆனாலும் பாட்டி நாம இப்படி மெள்ள நடக்குறோமே..! ஏன்..? என தன் சந்தேகத்தையும் பாட்டியிடம் வைத்தது.. அந்த குட்டி ஆமை.!.

இதோ பார்.. நமக்கு நிதானங்கிற செல்வத்தை தந்தது அந்த கடவுள்! அந்த நிதானம்தான்பொறுமைக்குஅடிப்படை குணம்.! அதனால் நாம் எல்லா செயலையும், “மிகப்பொறுமையாகசெய்வதால், நம் ஆயுளுக்கும் ஆபத்து இல்லாமல், நீண்டநாள் உயிரோடு இருக்கிறோம்.!.  நிதானமான நம்ம செய்கையை பார்த்து நம்மை சோம்பேறின்னு கிண்டல் செய்ரவங்களை பத்தி நீ கவலைபடாதே.! நிதானமா, யோசிச்சு, “பொறுமையாசெய்யும் எந்த ஒரு செயலும் சாதனையைநமக்கு பரிசா தரும்..! அதனாலேதான் முயலுடன் ஒடிய போது பதட்டபடாமே மெள்ள போனாலும், “பொறுமையாபோனதுனாலே, உங்க தாத்தா அந்த முயல் தாத்தாவை ஒரு சாதனையாஜெயிச்சாரு..! அவசரபட்டு வேகமா போயிருந்தா, நாம அன்னைக்கு மூச்சு வாங்கி தோத்துதானே போயிருப்போம்…? அதனாலேபொறுமைக்குமுக்கியம் கொடுத்து நாம என்னைக்குமே நிதானமாவே நடந்துப்போம்..! சரியா! நீ இப்ப எதை பத்தியும் கவலைபடாமே, உங்க தாத்தா ஜெயிச்சாருங்கற சந்தோஷத்திலே நிம்மதியா தூங்கு பார்க்கலாம்…!” என்று பாட்டி பொறுமையாகசொன்ன அறிவுரையில் குட்டி ஆமை மயங்கி தூக்கத்தை தழுவி கொண்டு தூங்க ஆரம்பித்தது..!

என்னபொறுமையாகஒரு கதை படித்த உங்களுக்கும் தூக்கம் வருகிறதா..? சரி மேலும் உங்களை தொந்தரவு செய்ய போவதில்லை..! இனி மற்ற குணங்களைப்பற்றியும் அப்பப்ப எப்பவாச்சும் இப்படி ஒரு அலசு அலசுவோமா..?

(என்ன முணுமுணுப்பு? என் கேள்விக்கு பதிலையே காணோமே..? என்ன சொல்லறீங்க..? காதுலேயே விழல்லியே…! உங்க பொறுமையே போயிடிச்சா..! இனி என் பதிவை பார்க்க ௬ட வர மாட்டிங்களா..? கடவுளே..! ஹலோஹலோ….! கொஞ்சம் சத்தமாத்தான் கேக்கற மாதிரி சொல்லுங்களேன்..!)