Friday, January 19, 2018

தந்தையின் தனித்துவம்....
   இவ்வுலகத்தில்  அன்னை, தந்தை எனவும், மாதா  பிதா  எனவும் பேச்சு வழக்கில் அன்னைக்குதான் முதலிடம் தருகிறோம். தாயிற்சிறந்த கோவிலுமில்லை ! தந்தை சொல் மிக்க மந்திரமல்லை! என்று தாயை கோவிலாக்கி  தந்தையை வெறும் மந்தரமாக்குகிறோம். பொறுமைக்கு மறு அர்த்தமாக விளங்கும் நாம் வசிக்கும் இந்த பூமியையும், ( நம் அன்னை அந்த பொறுமையின் அவதாரமாகையால்)  தாய் பூமி, எனவும், தாய் நாடு எனவும் தாய் மண் எனவும் அழைக்கின்றோமே தவிர தந்தையை அடை மொழியாக்கி எதையும் கூறுவதில்லை.

அன்னைக்கு முதலிடம் தருவதில் தவறில்லை. பத்து மாதம் தன்னுயிருக்குள், ஒரு உயிராக நம் உயிரையும்  சேர்த்து சுமந்து, பல இன்னல்களையும் மெளனமாக அனுபவித்து, வேதனைகளுக்கு நடுவே சற்றேனும் முகம் சுளிக்காமல் நம்மை பத்திரமாக இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பதிலிருந்து, சீராட்டி, பாராட்டி  நம்மை வளர்த்து முழுமையாக நாம் வளர காரணமாயிருக்கும் நம் அன்னைக்கு முதலுரிமை தருவதில் தவறேயில்லை! ஆனால் அன்பு முதற்கொண்டு, வீண் விவாதம் வரை உரிமையுடன் தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நாம், தந்தையிடம்  சில வேளைகளில், சற்றே பாராமுகமாக நடந்து கொண்டு சில சமயங்களில் அவரை புறக்கணிக்கிறோமே அதுஏன்?

சிறுவயது பருவம் கடந்து  வளர்ந்து வரும் பருவத்தில், நம் நல் வாழ்க்கைக்காக, அவர் செய்யும்  அளப்பரியா தியாகங்களை உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்காமல்,  அப்பா பேச ஆரம்பித்தாலே  அறிவுரையாக ஏதாவது  (நாம்தான் இந்த அறிவுரை என்ற சொல்லை அகராதியிலிருந்து அகற்ற வாழ்நாள் முழுக்க பாடுபடுகிறவர்களாயிற்றே!  )  சொ(கொ) ல்வார் என்ற திட நம்பிக்கையில்,   எத்தனை அலட்சியங்களை அவருக்கு  பரிசாக சமர்பித்திருக்கிறோம். அத்தனையும்  பொறுத்துக்கொண்டு கண்டும் காணாததும் மாதிரி நடந்து கொண்டு இன்னமும் முன்பை விட அதிகமாக நம்மை கவனித்து பேணி வளர்க்கத் தயாராகும் உன்னத மனிதரல்லவா இந்த தந்தையெனும் மாபிறவி.! அந்தளவிற்கு  நாம் அவருக்கு மதிப்பு தராவிடினும், நம்மை மதித்து போற்றுவதன்றோ தந்தையர் குணம்.

( தந்தையர் தினம் இன்னமும் வரவேயில்லையே!  எதற்காக தந்தை புகழ் பாடும் இந்தப் பதிவு?  என அனைவரும் எண்ணலாம். பெற்றோர்களை பற்றி நினைக்கவும், எழுதவும் அந்தந்த நாட்களை நினைவில் அமர்த்தி அன்றைய நாட்களில்தான் கூற வேண்டுமென்பதில்லேயே!  இரண்டாவதாக தந்தையை பற்றிய, அவர்தம் பெருமையை பற்றிய  பதிவொன்றை நான் படித்தேன். அதனால்  எழுந்ததுவே இந்தப் பதிவு!. அந்தப்பதிவின் வாசகங்களை யார் எழுதியது என அறியேன். ஆனால் அதைப்படிக்கும் போது என் கண்ணில் கண்ணீர் முத்துக்கள் இம்மண்ணில் உதிர்ந்ததென்னவோ உண்மை!. அதை எழுதியவருக்கும் , என்னுடைய பதிவையும் , நான் படித்துப் பகிர்ந்த பதிவையும் படிக்கும் உங்களனைவருக்கும் என்  மனமார்ந்த நன்றிகள்.)

ஆனால், அனைத்து இல்லங்களிலும்,  இந்த மாதிரிதான் என்று நான் சொல்லவில்லை. சிலர்  தந்தையை. தாயை விட அதிகமாக நேசித்து  அவரை பெருமைபடுத்தி மகிழ வைக்கவும் செய்கிறோம் என்பதிலும் ஐயமில்லை.!   அவர்களுக்கெல்லாம்  என் தலை சாய்த்த வணக்கங்களை மண்டியிட்டு தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரை தாயும் தந்தையும் ஓருயிர்..! நம்மை பெற்று வளர்த்து நாம் ஒருநிலை எய்துவதற்கு. இருவருமே சமபங்கை, சரிபாதியாக எடுத்துக்கொண்டு செயலாற்றுபவர்கள். ஒரு முகத்திற்கு இரு விழிகள் எந்தளவுக்கு  பயன்பாடோ, அதே மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் பெற்றோரும் என நினைக்கிறேன். சில முரண்பாடான சமயங்களில், தந்தையே தாயுமாகி, அன்னையே அனைத்துமாகும் சூழ்நிலைகளை படைத்தவனால் உருவாக்கப்படலாம். இவ்வாறு நிறைய எழுதலாம்!. பதிவின் நீ..ள..ம் கருதியும், படிப்பவர்களின் (படித்தால்) பொறுமையெனும் நலத்தையும்  நினைவு கூர்ந்து இத்துடன் நிறுத்தி படித்ததை பகிர்கிறேன்.

                     படித்தமைக்கு  நன்றிகள்.
படித்து பிடித்தது.....

*அப்பாவிற்கு அழத்தெரியாது!!*
⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!
⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!
என்னடா வாழ்க்கை இது என
*ஒருநாளும் அழுதிருக்கமாட்டார்!*
⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து!
⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து!
⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!
போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!
தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!
*நாம் அவரை கல்லெனவே நினைத்துவிட்டோம்!*
⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்!
⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!
ஆனால்,
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!
நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!
தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் *ததும்பும் ஜீவன் அது!*
⚽ நாம் திண்ணும் சோறும்!
⚽ உடுத்தும் உடையும்!
⚽ படித்த படிப்பும்!
அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டியதில்லை!
நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!
ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!
அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!
*அப்பாவின் பாசத்தை உணரக்கூட இல்லையோ!*
⚽ நமக்கு மீசை முளைத்தால் அவர்
குதூகளிப்பார்!
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!
வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!
நம் வாழ்க்கையின் பின்னால்...
*அப்பா எப்போதுமே இருப்பார்!*
⚽ அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!
⚽ அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
⚽ அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
⚽ அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
⚽ அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!
⚽  *அந்த பைத்தியத்திற்கு*
*அழவும்தெரியாது!*
⚽ வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்! 
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!
*நம்ச ந்தோசத்திற்காகவே எதையும் தாங்கும் ஆன்மா அவர்!*
⚽ பாசமோ!
⚽ மன்னிப்போ!
⚽ அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே  வெளிப்படுத்தி விடுங்கள்!
 ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா   
      மரணமோ!
 உங்கள் அப்பா வயதுடைய யாரோ
     ஒருவரின் மரணமோ! 
 உங்களை புரட்டி போட்டு!
     அவர் பாசம் புரிந்து!
     அப்பாவை தேடி ஓடிரும்போது!
 வீட்டில் அப்பா...
      சிரித்துக்கொண்டிருக்கலாம்...
      புகைப்படத்தில்!!
*பாவம்_அவருக்குதான்..*
*அழத்தெரியாதே!!*
படித்தேன்!
பகிர்ந்தேன்!!

Saturday, January 13, 2018

தை மகள் வருகை

வணக்கம் வலையுலக நட்புறவுகளே!

அனைவருக்கும்  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
தைமகளின் வருகை.....


தங்க மகள் போன்ற தை மகளாம்,
தளிர் நடை பயின்று வந்தாளாம்.
பூமித்தாயின் இன்முகம் காட்டிய
பாசமிகு  வரவேற்றலில், குளிர்வூட்டும்
புன்சிரிப்பில், அகம் மலர கண்டாளாம்.
பொங்கும் மங்கலம் இனியென்றும்
எங்கும் எதிலும் தங்குமென பூரித்து
மனமகிழ்வு  கொண்டாளாம்.

பசுமை செறிந்த செடி கொடிகளையும்,
பழுத்து நிறைந்த பழவினங்களையும்,
பூத்துக் குலுங்கும் மலர் வகைகளையும்,
பரவசமாக  பார்த்ததுமே, இத்தனையும்,
பூமித்தாயாம் எனதன்னை எனக்காக  
தந்த சீதனமென  பெருமையுடன் நின்றாளாம்.

தாயின் ஏனைய  செல்வங்களை,
தனித்தே சென்று சந்தித்துப் பேசி
நலம் நவின்று விட்டு வருவோமென,
துள்ளும் நடையில்  சுற்றி வருங்கால்,
பழையன  முற்றிலும் களைந்தகற்றி,
புதியன மட்டிலும்  புதிதாய் படைத்து, தன்
வரவுக்கு கட்டியமாய்  பல வண்ணங்களையும்
வார்த்தெடுத்து வைத்திருப்பதும், கண்டு

மங்களம் நிறைந்த மணமான மஞ்சளையும்,
மதிமுகம்  கொண்ட  பண்பான பெண்டிரையும்,
கொஞ்சிடும் அழகில்  மழழைகள் அனைவரையும்,
விஞ்சிடும் பொருளனைத்தும் ஒருங்கே புதைந்த
வீரத்தமிழையும், அத்தமிழர்தம் மரபும் , கண்டு

புத்தம் புது துகில்களை மாந்தர்களும்
பூரண மன நிறைவோடு தாம் உடுத்தி,
புதுப்பானை நிறைத்த புத்தரிசி பொங்கலையும்,
தித்திக்கும் நல் கரும்பை தோகையுடனே வைத்து,
திகட்டாத நல்லெண்( ண )ணெய் தீபச் சுடர்களோடு,
களிப்புடனே பண்டிகையை கொண்டாடி பின்னர்,
களமிறங்கும் வீர செயலனைத்தும், கண்டு

பொங்கிய மகிழ்வில் மனமது நிறைய,
பொங்கும் மங்கலம்  இனியென்றும்,
எங்கும்  எதிலும் தங்கி நிற்கட்டுமென
வாயார வாழ்த்திச் சென்றனளாம்.பொங்கும் மங்கலம் எங்கும் தழைத்திட வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.


நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Monday, January 1, 2018

ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

வணக்கம் நட்புறவுகளே!  உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த  வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவருக்கும் அன்பான வணக்கம்.

 நான் வலையுலகில், வலம் வந்து உங்களையெல்லாம் சந்தித்து நீண்ட நாட்கள்( இல்லையில்லை! நீண்ட  வருடம் ) ஆகி  விட்டது.எனினும், இன்னமும் மறவா அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள்.

குடும்ப  சூழல்களினால், வலைப்பக்கம் வர இயலாது போப் விட்டது மன்னிக்கவும்.!  வலையினுள் பிரேவேசிக்க முடியாத நேரங்கள், மிகுந்த வருத்தத்தை அளித்த அந்த நாட்கள் வருடமாக  வளர்ந்து  2018 ன் முதல் நாளை தொட்டு விட்ட தருணத்தில், மீண்டும்  என்  சகோதர சகோதரிகளை  சந்தித்து விட்டதை நினைத்து மிகவும் ஆனந்தமடைகிறேன்.


இ்ன்று பிறந்த புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும். அன்பையும், மகிழ்ச்சியையும், மனித நேயங்களையும் குறைவர தந்து, நோய் நொடி இல்லாத இனிதான வாழ்வையும்  மலர செய்யுமாறு,  மலர்ந்து மணம் பரப்ப வேண்டுமென  இறைவனை மனமாற வேண்டிக்கொள்கிறேன்.

அனைவருக்கும் என் அன்பான இனிய 2018 ம்ஆண்டின் ஆங்கிலப்புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்.
இத்துடன் வாட்சப்பில் வந்து படித்த செய்திகளையும் பகிர்ந்துள்ளேன். படித்தமைக்கு மிக்க நன்றி.


*புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்..*

1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள்
2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள். அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள்
3. ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்
4. இந்துக்களாக இருப்பின், மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமையாவது, குடும்பத்துடன் ஏதோ ஒரு புராதன கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள்.
5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோ மீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.
6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாய் இருக்க முயலுங்கள்.
       
7. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் நன்றாகத்தான் படிக்கும், நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள்.ஆக, இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்.
8. ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ, அக்கம் பக்கத்து குழந்தையோ, பத்து நிமிடமாவது முடிந்தால்  நாள் ஒன்றுக்கு அதனுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்
9. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள். யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள். முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.  
10. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் சொல்லிப்ப்பாருங்கள். ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவரையும் அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்
11. சின்ன விஷயங்களுக்கும் கூட நன்றி சொல்லப் பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள். அது உங்களை உயர்த்தும்.
12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இல்லை.
எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல் கவலையின்றி இறக்கவேண்டும்.
13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள், அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில் சம்பாதியுங்கள்.
14. வாரத்திற்கொரு முறை அரை மணியாவது தாய் தந்தையிடரிடம் தனிமையில் அன்போடு உரையாடுங்கள். அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு கேளுங்கள். அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில்  சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.
15  நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக இருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம். அது ஓலா எப்படி புக் செய்வது, யூபர் டாக்சியை எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக் கொள்ளுங்கள். எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும். மற்றவர்கள் கேலி பேசினால் உதாசீனப்படுத்தி முயலுங்கள்.
16.  உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும் விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ் பேசுவதாக,கதை எழுதுவதாக , சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள்,  வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள், குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது,வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல்.
18 இனிப்புகளை தவிர்க்க முயலுங்கள். மது, புகை  பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.    
   
19 எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து வாழுங்கள்..
நீங்க இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும், அதனால் இவற்றில் சிறிதாவது முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று "ஆசைப்படுவேன்" .
இவற்றை முயற்சி செய்தால் 2018  மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் தான் இருக்கும்.Friday, February 10, 2017

படித்ததில் பிடித்தது

வணக்கம்  படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

Who Will Cry When You Die?" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...*

*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*

*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.

*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.*

*3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.*

*4. அதிகாலையில் எழ பழகுங்கள்*.
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*

*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.*

*6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.*
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*

*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*

*8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*

*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.

*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*

*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*

*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*

*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்*.

*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*

*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.

*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*

*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*

*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*

*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!*
*"ஆணவம் ஆயுளை குறைக்கும்...*"

நன்றி.Friday, December 30, 2016

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

நாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில்  கால் பதித்து நடக்க ஆரம்பிக்கின்றன.ஆனால் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும், நாம், இந்த வருடம் அதன் முடிவை சந்திப்பதற்குள், இதையெல்லாம். சாதித்து முடிக்க வேண்டுமெனவும், வருடத்தின் முதல் நாள் தொடங்கி  இறுதி நாள் வரை, தினமும் இச்செயல்களை செவ்வனே செய்ய வேண்டுமெனவும்.நமக்குள் என்றும் வாய்பேசாது மெளனித்திருக்கும், சத்தியத்தை சாட்சி  துணையாக அழைத்துக்கொண்டு உறுதி மொழிகளை எடுத்துக்கொள்கிறோம். ( அதை சாதித்து செயலாக்க முடிகிறதா என்பது வேறு விஷயம்.) சிலருக்கு அந்த வாய்ப்புகள் அமையப் பெற்று, மகிழ்ச்சியையும், நிறைவேற்றி விட்ட சந்தோஷத்தையும்  தரலாம். ஆனால், பெரும்பான்மையாக பலருக்கு ஒரிரு மாதங்கள் உறுதிமொழியின்படி நடந்து விட்டு அதன்பின் வருட இறுதியில், தவற விட்ட நாட்களை நினைத்து வருந்தி மறுபடியும் வரும்  வருடத்திற்காக தவம் இருப்பதே வாடிக்கையாக போய் விடுகிறது.

போகட்டும்! .நடந்து வரும் கடந்து போய் கொண்டிருக்கும் 2016 ல் எத்தனையோ வளர்ச்சிகளையும், உன்னதங்களையும் சந்தித்திருந்தாலும்,  சில இழப்புக்களும், இன்னல்களும்  தலைகாட்டி நம்மை  வருத்தியிருக்கின்றன. இனி உதயமாகும்   2017 ம் ஆண்டு எல்லா வளங்களையும்  வாரி வழங்கி அனைத்து மக்கள்தம்  கனவுகளுக்கும், ஆசைகளுக்கும், சாதிக்கும் எண்ணங்களுக்கும் உறுதுணையாக நின்றபடி சிறப்புடன் அமைய, இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன். உலக அமைதியும், சகோதர ஒற்றுமையும்  எங்கும் தழைத்தோங்க இறைவனை வேண்டுவோம்.வலையுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும்  என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.