Saturday, January 31, 2015

காலத்தின் அவசரங்கள்




எங்கும் அவசரம்.! எதிலும் அவசரம்!.மனிதன் சற்று நின்று நிதானித்து திரும்புவதற்குள், காலம் அவசர சக்கரத்தில், அவனை புரட்டி ஒட வைத்து விடுகிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து ரசிக்கும் மனப்பான்மை நம்மிடம் குறைவாக உள்ளதா.? அல்லது அவ்விதம் ரசித்துக் கொண்டிருந்தால், அடுத்து ஏராளமான நொடிகள் நம்மை வேகமாக கடந்து ஓடிவிடுமென்ற இயல்பான பயமா.? எதுவோ ஒன்று.!  நம்மை இந்த அவசர கதிக்குப் பழக்கப்படுத்தி விட்டது. ஆனாலும், ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு இருந்த நிதானங்கள், வாழ்வை  ரசிக்கும் தன்மைகள் , இப்போது இல்லையோ? என எண்ணத் தோன்றுகிறது. தானத்தில் சிறந்தது நிதானம் என்றொரு சொல்வழக்கு ஒன்றுண்டு. இப்போதுதானங்களின்வகைகள் ஆயிரத்திற்கும் மேலாக பெருகி விட்டாலும், “நிதானம் என்ற சொல்லின் பொருள் புரிந்துகொள்ள இயலாமல் , அது அவசரத்தின் பிடிகளில் புதையுண்டதோ? என நினைக்க வைக்கிறது.


காலை கண் விழிப்பது முதல், இரவு கண் துயில்வது வரை, அவசரக் கரங்களின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு, அன்றைய நாள் முழுவதும் ஓடி ஓடி சோர்கிறோம். இதில் மகிழ்வான செய்கைகளை பல எதிர் கொண்டாலும், மறதியாகும் பல விஷயங்களை அப்புறபடுத்தி, அதன் விளைவுகளையும், மனக்கசப்புடன் எதிர் கொள்கிறோம். அந்த நேரத்தில் மட்டுமே சற்றுநிதானித்திருந்தால்”, இத்தகைய நடப்புக்களை தவிர்த்திருக்கலாமே.! என்று ஒரு நிமிடம் சிந்தனை செய்யும் நம்மை , அடுத்த நிமிடமே அந்தநிதானத்திற்குசவக்குழி  ஒன்றை தோண்டும் எண்ணத்தை உண்டாக்கி விட்டு, அக மகிழ்வுடன் நம்மை அதனுடன் அழைத்துச் சென்று விடும் அந்த அவசரம்...! எங்கு எதை நோக்கி  இப்படி அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பதே விளங்காமல் நாளும் இந்தப் பயணம். இந்தப் பயணத்திற்கு, உதவும் இயற்கையை நின்று ரசிக்கவும் நமக்கு நிதானமான நேரமில்லை.! ஆனால், அந்த இயற்கையே அவசரத்திடம் சிக்குண்டதோ? என ஒவ்வொரு நாளும் வேகமாக சுழலும் காலத்தை பார்க்கும் போது தோன்றுகிறது.

                                         பகலவனைத் துரத்தும், முழுமதி

                                         பகலைத் துரத்தும், முன்னிருட்டு..

                                         நிலவைத் துரத்தும், நடு நிசி

                                         நித்திரையை துரத்தும் வைகறை

                                         இருளைத் துரத்தும் விடியல்

                                         இளமையை துரத்தும் முதுமை


அந்த முதுமையை துரத்தும் முடியாமைகள்என இறுதியில் மனிதனை துரத்தும் மரணங்களுக்காக  இந்தஅவசரம் காலத்தின் கைப்பாவையாக, தன் கடமையை  ஆற்றி  செயல்படுத்திக் கொண்டிருக்கிறதோ…? இதை எழுதும் எண்ணம் எனக்கு உண்டானதே அவசரமாக, உறவினருடன் சென்று வந்த ஒரு இடத்தினால்தான்


 பலனை எதிர் பாராமல், உன் கடமையை மட்டும் செய்து கொண்டே இரு.! அதற்கான பயன்கள்  உன்னை எப்போது வந்தடைய வேண்டும்  என்பதை  நான் பார்த்துக் கொள்கிறேன்.!” என்று கீதையின் பொருளை சுருக்கமாக சொல்லியருளிய  பரந்தாமனை கண்டு தரிசிக்க இங்கிருக்கும் இஸ்கான்கோவிலுக்கு சென்றிருந்தோம். கோவிலின் உள்ளே புகைப்படங்கள் எதுவும் எடுக்கக் ௬டாத   நிலையில், கண்ணனை கண் குளிர தரிசித்து விட்டு  வெளியேறும் போது நிறைய பேர் ஓரிடத்தில் புகைப்படங்களை எடுத்த வண்ணம் இருந்தனர். அது  என்னவென்பதை கண்டு, பின் நாங்களும் எடுத்ததை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பிறக்கும் ஒவ்வொரு ஜீவனையும், காலம் தன் கரம் கொண்டு எப்படி செதுக்குகிறது என்பதை உணர்த்தும் அருமையான காட்சி. பகவான் கிருஷ்ண பரமாத்மா சொல்படி , பலனை எதிர் நோக்காது கடமையை மட்டும் செய்தபடி இருந்து விட்டால், உலகம் ஒரு மாயை என்பதை முழுமனதாக உணர்ந்து விட்டால், காலமும், அவசரமும், நம்மை காயப்படுத்தாமல், கனிவுடன் கவனித்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்.

                       

                       சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.!