Sunday, January 28, 2024

தவத்தின் பலன்.

தவமும், வரமும். 

பூமி தோன்றியவுடன் புத்தம் புதிதாக  தானும் தோன்றிய, பச்சை பசேலென்று இருந்த இயற்கை வனப்புகள் அனைத்தும் காலச்சுழற்சியில் தன்  பொலிவிழந்து  மங்கி காட்சியளித்தது.  என்னதான் கால மாறுதல்கள் அதன் மதிப்பை உணராமல் சீரழிக்க தன் பெருங்கரங்கள் கொண்டு உதவினாலும்,தான் இறைவனால் படைக்கப்பட்ட போது இருந்த தன் அழகுகள் இவ்வாறு மங்குவதற்கு அவனால் படைக்கப்பட்ட மனிதர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை  இயற்கையன்னை கடவுளை சந்திக்கும் போதெல்லாம் வருத்தத்துடன் தன் குறைகளைச் சொல்லி அங்கலாய்த்துக் கொண்டது. 

ஒவ்வொரு வீட்டிலும், குடும்பங்கள் சில பல, இடங்களிலும் தமது முந்தைய தலைமுறைகளின் பேச்சுக்கு மதிப்பளித்து இயற்கை சம்பிரதாயங்களை போற்றியபடி வாழ்ந்து வந்தாலும், செய்கைப் பூச்சுக்கள் அந்த இயற்கையின் சாராம்சத்தை அவ்வப்போது ஆசைதீர அள்ளிப் பருகி, தன்  ஆடம்பரங்களையும், அதன் விளைவால் பார்ப்பதற்கு பகட்டாக தோற்றமளித்த பொலிவுகளையும் பிறர் பார்த்து மெச்சும்படிக்கு  தக்க வைத்தபடி வளர்ந்து, கூட்டு குடும்பங்களின் கூட்டுறவான ஆணிவேரை சற்று ஆழமாக  பதம் பார்த்துக் கொண்டும், விருட்சமாக வளர்ந்து பெருகி அசையாதிருக்கும்  தன் சுயநலத்தின் பேரில் காலூன்றியபடியும் நிமிர்ந்து நிற்கவும் தொடங்கின. 

இவ்வாறு முடக்கப்பட்ட இயற்கை அம்சங்களும்,  கடவுளை காணும் போதெல்லாம், தன் மீது காலப்போக்கில்  திணிக்கப்பட்ட செயற்கை கவசத்தை அகற்றுமாறு வேதனையுடன் வேண்டிக் கொண்டது. 

மனிதர்களால் உருவாக்கப்பட்ட பெரு நகரங்களும், கிராமங்களால் சூழப்பட்ட சிறு நகரங்களும், பெரு நகரமாக ஆசை கொண்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் சிறு நகரங்களும், இத்தகைய சூழலில் வளரலாமா, வேண்டாமா என சீட்டுக்குலுக்கி முடிவெடுக்கும் நிலையில் உள்ள பிற பகுதிகளும், பணத்தினால் ஏற்படுத்திக் கொள்ளும்  வசதிகள் ஒன்றையே பிரதானமாக கொண்டு வளர்ந்து, பெருநகரங்கள், கிராமங்களான நகரங்கள் அனைத்தும் வெவ்வேறு பல நாடுகளாகி, தங்களுக்குள் பல பிரிவுகள் ஏற்படுத்திக் கொண்டு, மனிதர்களின் கலாசாரம், பண்பாடு இவற்றை மாற்றியமைப்பதே தன் குறிக்கோளாக்கி, பூமிக்குள்ளேயே பிரிந்து போய் சந்தோஷப்பட்டுக் கொண்டது

இப்படி பிரிந்த பண்பாடுகளில் மக்களின் ஆர்வங்கள் காரணமாக யார் உயர்ந்தவர்கள்/தாழ்ந்தவர்கள் என்ற விகிதாசாரங்களில் பூமி செய்வதறியாது திகைப்புற்று திணறி கொண்டிருந்தது. மனிதர்கள் காலம் தந்த வசதியினால் ஒருவரை ஒருவர் இழிந்தும், பகைத்தும்  கொண்டார்கள். ஏழ்மை, வறுமை பகைமை பேதமை போன்றவைகள் உருவாயின

பணத்துக்காகவும், அது தந்த வசதிகளுக்காகவும் மனிதர்கள் எந்த பாதகங்களையும்,  அஞ்சாமல் செய்தார்கள். இது போக சுயநலங்கள் என்றவொன்று அவர்களின் இயல்புகளாகிப் போயின. தோன்றியவுடன் இயற்கையிலேயே அவர்களுடன் தோன்றிய பாசம், பந்தம், கடமை என்பதெல்லாம் வெறும் புரளி, கற்பனை என்ற மனோபாவங்கள் எளிதாக அவர்களிடம் குடி புகுந்தன. விலங்குகளின் குணங்களோடு மனித மனங்களும் ஒத்துப் போவதை கண்டு விலங்குகளே சில சமயங்களில் அதிர்ச்சியடைந்தன. 

இயற்கை தன் வலுவிழந்த போதும், இயற்கை மாறி கலாசாரங்களின் விதி முறைகள் மாறிய போதும், மனிதர்கள் தன்னையொத்த  மற்றவர்களால் வஞ்சிக்கப்படும் போதெல்லாம் எழுந்த வேதனை ஒலிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொஞ்ச கொஞ்சமாக ஒரு" மாய உருவம்" திடகாத்திரமாக வளர்ந்து வந்தது. "அது" தன் நிலையில் என்றும் அழிவில்லாமல்  நிலைத்திருக்க வேண்டி இறைவனை நோக்கி கடுமையான  தவம் செய்ய ஆரம்பித்தது.

 ஆழமான "அதன்" தவத்தைக்கண்ட இறைவன் அதன் முன் காட்சியளித்து "நீ வேண்டும் வரம் என்ன?" என்றார். "முதலில் எனக்கு அழிவில்லாத வரம் வேண்டும். நான் வேதனைகளிலிருந்து பிறந்து வந்திருக்கிறேன்.அதனால் நான் யாரை அண்டி தீண்டினாலும், அவர்கள் வேதனையடைய வேண்டும்." என்றது.  சரி.. ! அவ்வாறே ஆகட்டும்... "என்றபடி வரத்தை தந்து விட்டு இறைவன் மறைந்தார். 

மீண்டும் முன்னைவிட பலத்துடன் "அது" பலகாலம் இறைவனை நோக்கி தவமிருக்கவே வந்த இறைவன் "இப்போது எதற்காக என்னை நினைத்து தவமிருந்தாய்?" எனக் கேட்கவும், "இன்னமும் என் தவங்கள் பூர்த்தியாகவில்லை. வரங்களும் என் விருப்பமான முறையில் கிடைக்கவில்லை." என "அது" குறை கூறவே "இப்போது சரியாக கேட்டு பெற்றுக் கொள்" என இறைவன் கூறவும்  "நான் உனக்கு நிகராக செயல்பட வேண்டும்... உன்னைப் போல் உயிர்களை படைப்பதில் எனக்கு சிறிதும் ஆர்வமில்லை. . ஆனால்  அழித்தலில் என் வஞ்சம் தீரும்படி என்னைக் கண்டு மானிடர் அனைவரும் அஞ்சி நடுக்க வேண்டும். இயற்கையை இழிந்த பாவத்திற்கு, அவர்களுக்கு வரும் இயற்கை முடிவு என்றால் என்னவென்றே தெரியாமல் அவர்கள் திணரும் நிலை என்னால் உருவாக்கப்பட வேண்டும். என்ற "அதன்" குரலில் இருந்த காட்டமான வெஞ்சினத்தைக்கண்டு இறைவனே சற்று மன தடுமாற்றத்துடன் கலக்கமுற்றார்.  

"ஏன் இந்த வரம்.? மானிடர்களுக்கு அவரவர் விதிப்படி, நன்மை, தீமைகளை பெற்று வாழும் நிலைதான் அவர்கள் பிறந்தவுடனேயே நிர்ணயிக்கப்பட்டு விட்டதே..! மேலும் தவறுகள் செய்யாதவர்களும் தண்டனை அனுபவிப்பது நீதிக்கு புறம்பானதல்லவா...! அப்படியிருக்க இந்த வரத்தை நான் எப்படி உனக்குத் தருவது?" என்றார் இறைவன். 

அப்படியில்லை...! வேதனைகளிடமிருந்து பிறந்த என் நோக்கம் மானிடர்களை துன்புறுத்துவதுதான்.. . அதற்காகத்தான் இப்படி கடுந்தவமிருந்து வருகிறேன். இந்த வரம் நீ தராமல் போனால், இன்னமும் கடுந்தவமியற்றுவேன். எப்படியும் என் தவத்தின் பலனுக்கு பரிசளிக்க நீ வந்துதான் ஆக வேண்டும். . அதுதான் வழக்கமான தவத்தின் நியதி..."என்று ஆக்ரோஷமாக"அது" கூச்சலிட்டது.

" அது" கேட்ட வரங்களை வேறு வழியின்றி தந்த இறைவன்," சரி இனி என்னை அழைக்காதே.. " என்றபடி செல்ல முற்பட்ட போது, தடுத்து நிறுத்தியது "அது" ...   "இரு..இரு... இவ்வளவு பராக்கிரமங்களை பெற்ற எனக்கு ஒரு நல்ல பெயர் இல்லை பார்...அதையும் உன் வாயால் வைத்து அழைத்து விடு... இந்த வரத்தையும் தந்து விட்டு போ..." என்று வேண்டவும், "இதோ பார்....உன் தவத்தை மெச்சி உனக்கு வேண்டும் வரங்களை தந்தாகி விட்டது. இதுவும் என்னையும் மீறி தன்னிச்சையாக நடைபெற்ற செயல். இதில் உனக்கென ஒரு பெயர் வைத்து அழைக்கும் மன நிலையில் நான் இல்லை. உன் விதிப்படி உனக்கான பெயரை நீ விரும்பி நாடும் மானிடர்களே வைத்துக் கொள்வார்கள். இனி நீ அழைத்தாலும், உன்னால் சிரமப்பட்டு மன/உடல் நோகும் மானிடர்களே அழைத்தாலும் நான் வருவது சிரமமே.... ஏனெனில் இது விதியின் உக்கிர பிரவேசம்.  இந்த பிரவேசத்தில், பிரபஞ்சத்தில் அதன் வீரியங்களை யாராலும் தடுக்க இயலாது. உன் இந்த தவங்களும், வரங்களும் அது தீர்மானித்தவை. இதற்கு ஒரு முடிவென்பதையும் அதன் நேரம் வரும் போது அதுவேதான் தீர்மானிக்க வேண்டும். அப்போது அதன் அழைப்பில் பக்கபலமாக நான் அனைவரையும் காக்க அதனுடன் வருவேன். அப்போது நீ பெற்ற வரங்கள் பலனற்றுப் போகலாம். உன் பராகிரமங்கள்  தூள் தூளாகிப் போகலாம். எனவே இனி என்னை மறுபடியும் அழைக்கும் முயற்சியில் அடிக்கடி இறங்காதே. . " என்று சற்று கோபத்துடன் சொன்ன  இறைவன்  அடுத்த நொடியில் மறைந்தார். 

தவத்தினால் பெற்ற வரங்களை விதியின் வருகையை ஒரு பக்கம் எதிர்பார்த்தபடி, செயலாற்ற தொடங்கியது" அது."  அதன் பிடியில் அதன் வேண்டுதல்படி சிக்கி மானிடர்கள் மீள வழியின்றி தவித்தனர். செய்த, வினைகள், செய்யப்படுகிற வினைகள் செய்யப் போகும் வினைகளின் விளைவுகள்  இப்படி எதற்கும் அஞ்சாத மானிடர்கள், இதற்கு அஞ்சி ஒளிந்து கொண்டனர். "அது"வும்  இறைவன் கூற்றுப்படி தனக்கு மனிதர்களாலேயே ஒரு பெயர் கிடைத்த மகிழ்வில், தன் அரக்கத்தனமான செயலின் விபரீதத்தை பற்றி சிறிதும் கவலையில்லாமல், "அலை, அலையாக "அதனுள் எழுந்த  சந்தோஷங்களில் மூழ்கியபடி பூமியில் உலா வந்தது. 

 நாமும் இறைவன் வரவு குறித்தும், "அது" முற்றிலும் அழியப்போகும் தருணம் குறித்தும் இறைவனை மனமுருக சிந்தனையில் இருத்தி வேண்டிக் கொண்டேயிருப்போம். எத்தனை தூரம் "அவனால்" படைக்கப்பட்ட மானிடர்கள் துன்புறுவதை பொறுப்பான் "அவன்." 

அந்த விதியும், "அவன்" மனவருத்தம் உணர்ந்து, அவன் சொல் கேட்டு விரைவில் மனம் மாறி அவனுடன் இணைந்து வரும். நம்புவோம். 🙏. 


மனதின் வேதனைகளில் இந்தப் பதிவை எப்போதோ இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் எழுதினேன். இதில் ஏகப்பட்ட  மாற்றங்கள் இப்போது வந்திருக்கலாம். இப்போது இந்த நோயைப் பற்றிய பயங்கள் மக்களுக்கு பழகி விட்டதென்றாலும், அது மறுபடி, மறுபடி எழுந்து வந்து "நான் இன்னமும் இருக்கிறேன்" என்றபடி  பயமுறுத்திப் போகிறது. நெருக்கடியான சூழல்களில், மக்கள் கூட்டம் அலை மோதும் பிரதேச பகுதிகளில் மீண்டும் முகம் மூடி அலைய வைக்கிறது. தோன்றியதிலிருந்தே இயல்பாக வரும் சாதாரண ஜலதோஷங்கள் கூட நீடித்து பலவிதமான  தொந்தரவுகளைத் தந்தபடி அதன் பெயரை நினைத்து தடுமாற வைக்கிறது. ஆனாலும், ஆண்டவன் மேல் நாம் எந்நாளும் கொண்டிருக்கும் நம்பிக்கையை  தவிர்க்காமல்  இருந்தால் நல்லது. 

இந்தப் பதிவை படித்து அருமையான இந்தப்பாடலை கேட்பவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் .. 🙏... 

Monday, January 22, 2024

ஸ்ரீராம பக்தி.

ஸ்ரீராம ஜெயம். 


 *Namaskar.*                               Sending the rare portrait of SriRama pattabhishekam collected from AYODHYA. We request you to forward this to as many people as you can before Ram Lalla pran prathishtai on 22nd Jan 2024  Please do this as a mission to circulate the blessings of Lord Hanuman and positive vibrations in the society.                                 *Jai Sriram*

அன்பின் மறு உருவமாக 

விளங்கியவனே ஸ்ரீராமா...! 🙏. 

அருளின் திரு உதயமாக

அவதரித்தவனே ஸ்ரீராமா...!🙏. 

கருணையின் பிரதிபிம்பமாக

திகழ்ந்தவனே ஸ்ரீராமா...! 🙏. 

கதிரவனின் வழித்தோன்றலாக

தோன்றி,ஆதவனைபெருமையுற 

வைத்தவனே ஸ்ரீராமா...! 🙏. 

பெற்றோருக்கு மதிப்பளித்து

மகிழ்வுற்றவனே ஸ்ரீராமா...!🙏 

ஒரு சொல்,ஒரு தாரமே 

வாழ்வில் நிலைத்திருக்குமென 

நிரூபித்தவனே ஸ்ரீராமா...! 🙏.

நட்பின் இலக்கணத்தோடு

நன்மைகள் பலவும்

புரிந்தவனே..! ஸ்ரீராமா🙏. 

சத்தியத்தின் உதாரணமாக 

வாழ்ந்து நின்றவனே ஸ்ரீராமா.!🙏.

அநீதியை அன்பாலும் 

அழிக்கலாமென வென்று

காட்டியவனே ஸ்ரீராமா...! 🙏. 

சாந்தத்தின் முழு அளவென

பிரதிபலித்தவனே ஸ்ரீராமா..!🙏.

பொறுமையின் சிகரமாக 

பூமியில் கோலோச்சி

வீற்றிருந்தவனே ஸ்ரீராமா...!🙏. 

தர்மத்தின் பாதையை உலகிற்கு

எடுத்துரைத்தவனே ஸ்ரீராமா...!🙏.

ராம், ராம், ராம், ராம், ராம், ராம், 

என்ற புனிதமான சொல்லுடன், 

எங்களுடன் இயைந்து 

எங்கள் உள்ளொளியாய் 

கலந்தவனே ஸ்ரீராமா...! 🙏.🙏.🙏. 


நன்றி
கூகுள். 

உன் பாத கமலங்களை 

உள்ளன்போடு மறவாது 

போற்றித் துதிக்கும் பக்தியை

ஆனந்த பரவசமாக்கி

அனுபவிக்கும் ஸ்ரீராமபக்த 

ஆஞ்சநேயரின்ஆசிகளோடு 

எங்களுக்கும் உன் அருளமுத 

பார்வையிலான பக்தியை

பருக தந்துவிடு ஸ்ரீராமா...!🙏. 


ஸ்ரீராம ஜெயம்...ஸ்ரீராம ஜெயம்...

ஸ்ரீராம ஜெயம்...ஸ்ரீராம ஜெயம்... 

ஸ்ரீராம ஜெயம்... ஸ்ரீராம ஜெயம்...


இன்றைய நன்னாளில் வாட்சப்பில் குறுஞ்செய்தியுடன் வந்த ஸ்ரீராம பட்டாபிஷேக படத்துடன், என் மனதில் தோன்றியவைகளையும் எழுத்துருவாக்கி பதிந்திடத் தந்த ஸ்ரீராமபிரானின் பாதங்களை பணிவுடன் பற்றி வணங்குகிறேன். .

பதிவை படித்த என் சகோதர சகோதரிகளுக்கு  என் அன்பான நன்றிகள். 

ஜெய்ஸ்ரீராம்.

ஜெயராம். 

Thursday, January 11, 2024

விதியின் சாகசம்.

பாதையை காட்டி பயணிகளை
பயணிக்க பணித்தான் ;
படைத்தல் ஒன்றையே அந்த 
பாழும் விதியிடம்
பரிசாக பெற்ற " படைத்தவன் ”


அண்டத்தையும், அகிலத்தையும்,
அழகாக, அமைத்து காட்டினான்.
அற்புதங்கள் பலவும் அதில்
அதிசயிக்கவே  நிகழ்த்தி வைத்தான்.


கோடி ஜீவ ராசிகளுக்கும் உயிர்,
தேடியே கொடுத்து 
உலாவச் செய்தான்.
பிழைப்பதற்கும் வழி காட்டினான், மனம் பேதலிக்கவும், வழி வகுத்தான்.


பந்தத்தையும், பாசத்தையும், இரண்டு
பகடை காய்களாக்கி, அதை
பாழும் பிறவிகள், உருட்டி 
பிரட்டி சூதாடுவதை
பார்த்து, பார்த்து ரசித்தான்.


இருப்பினும், இறுதியில்
இறப்பெனும், நிதர்சனத்தை,
விதியிடம், கொடுத்து விட்டு
வேதனையின்றி விலகி நின்றான்.


விதி அவனை படைத்ததா? அல்லது
விதியை அவன் வகுத்தானா?
விளங்காத கேள்விகளில்,
விடை தெ(பு)ரியாத, பதில்களில்,


தலைவிதியை ச(பி)கித்து கொண்டு,
தடுமாறி, தத்தளித்து, 
தவித்து கொண்டு,
படைத்தவன் காட்டிய வழியில்,
கண் மூடி, அவன் கட்டளைகளுக்கு


பய(ணி)ந்து, கடமை தவறாது,
அப்பாதையில், பயணிக்கும்
அப்பாவி பா(தை)த சாரிகள்...!! 
இன்னல்கள் பல பட்டாலும்,
இவர்களின் பிரிவுகள் இரு விதம்.


விதியிடம் அடி வாங்கி வெ(நொ) ந்து  
விருப்பமின்றி எழுந்தோர்க்கு,
விளங்காத கேள்வி….. "இந்த  அதியச
விநோதங்களையெல்லாம்,
விளைவிப்பவன் யார்? அவன் நம்
விரோதியா... இல்லை....நம் 
விருப்பமான நண்பனா??" 

விரும்பிய நண்பனானல், ஏன்
விரோதி போல் 
விலகி நிற்க வேண்டும்.
நண்பனல்லாதவனை, நமக்கு 
நன்மை நினைக்காதவனை, எவ்விதம் நாம்
நட்புடன், நினைக்க தோன்றும்.
( இப்படி ஒரு சாரார் )


விதி வகுத்துத் தந்த 
அதிர்ஷ்டங்களில்
அத்தனை இன்பங்களையும்
அள்ளி பருகுபவர்களுக்கு
ஆண்டவன் ஒரு அரிய வரப்பிரசாதம்’
அவனன்றி ஒர் அணுவும் அசையாது,
அவனன்றி எதுவும் நடக்காது என, 
அவன்பால், அசைக்க முடியாத 
அசாத்திய நம்பிக்கை.  
( இப்படி ஒரு சாரார் )


இவ்விதம் பிரிவுகள் இரண்டாயினும்,
இன்னல்களை பல அருளும் அந்த,
இறைவனின் இருப்பிடத்தை அறிய பல வகையான 
புராணங்களை புரட்டி பார்த்தால்,
புரண்டிருக்கிறான்...!! "அவனும்" விதியிடம்.

பாபங்களையும், அதன் விளைவான 
பல சாபங்களையும்
சந்தித்திருக்கிறான்,
சகித்திருக்கிறான்
விதைத்தலை ,விதியிடம்
விரும்பி பெற்றவன்...! 
அந்த விசுவாசத்திற்குதான் ,
அதற்கு பிரதிபலனாக,
பரிசாக பெற்ற பாவத்திற்காக,,
அறுவடை அத்தனையையும் 
ஆதாயமேதுமின்றி மொத்தமாக,
அதற்கே அள்ளி கொடுத்து
விட்டான் போலும்...! 


விதியின் வஞ்சனையின்,
விளைவால், அந்த விதியிடம்,
அத்தனை உ(ப)யிர்களும், 
ஓர்நாள் சென்றடைந்து 
மடியத்தான் போகிறது.

படைத்தவனையே தொடருமந்த 
விதி, படர விட்டவனால், 
படர்ந்திருப்பவைகளை
படராமல், சற்றும் தொடராமல், 
விட்டு விடுமா என்ன.? 
விதிக்கு முன்னால் யாரும்
விதி விலக்கல்ல போலும்...!!!! 
விதி வலியதுதான்..!! 


இது மன வேதனையில் எப்போதோ உருவானது.வலையுலகிலும் என பக்கத்தில் பதிந்திருக்கிறேன். பத்து வருடங்கள் கழித்து மீண்டும் உங்கள் அனைவரின் பார்வைக்காகவும்...! கருத்துக்கள் எப்போதுமே நேர், எதிரானதுதான். 

நாம் அனைவரும், ஒத்த வடிவமுடைய மனிதர்கள் என்றாலும், நம்முள்ளிருக்கும் மனங்கள் வெவ்வேறானதுதானே...!! கருத்தை தருவோர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வழக்கப்படி எதிர்பாராத சூழ்நிலைகளினால் பதில் தர தாமதமானால், பொறுத்துக் கொள்ளும்படியும் உங்களனைவரிடமும் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.