Thursday, April 16, 2015

அந்த நால்வரின் மனம்... ( பகுதி 2)

முந்தைய பகுதியின் முடிவு

சரி! வா, உன்னை வீட்டுலே டிராப் பண்ணிடறேன்! நீ நாளைக்கு அவங்கிட்ட பேசிட்டு நல்ல பதிலா எனக்குச்சொல்லு! நானும் நல்லதொரு பதிலுக்கு வெயிட் பண்ணறேன். என்றபடி பிரபாவை காரில் ஏறச் சொல்லி காரை ஸ்டார்ட் செய்தான் கார்த்திக்.

இன்றைய தொடர்ச்சி..

தன் அப்பாவின், ஒகோவென்று செல்லாவிட்டாலும், ஒரளவு சென்று கொண்டிருந்த மளிகைக்கடை வியாபாரம், அப்பாவின் ஆரோக்கிய குறைவினால், திடிரென்று படுத்து விட, அப்போது கண்ட ஆட்டம் தன் குடும்பத்தை இப்படி பாடாய் படுத்துமென்று கொஞ்சம்௬ட நினைத்துப்பார்க்கவில்லை பிரபாகர். அண்ணனின் சம்பாத்தியமும், அப்பாவின் வருமானமும் அந்த குடும்பத்தை ஒரளவு ஓட வைத்தபடி நாட்களை நகர்த்தி கொண்டிருந்தது. தக்க சமயம் பார்த்து தன் விருப்பத்தை வீட்டில் சொல்லி அருணாவும் வேலைக்குச் செல்வதால், “எங்கள் இருவரின் வருமானமும் குடும்பத்தை சற்று உயர்த்த செளகரியமாயிருக்கும்என்ற உண்மையை உணர வைத்து சம்மதம் வாங்கிவிடலாம் என்ற அவனின் பகல் கனவை திடிரென முளைத்தெழுந்த குடும்பச்சூழல் முரட்டுத்தனமாக நிராகரித்து துவம்சமாக்குமென அவன் எந்தக் கனவிலும் காணவில்லை. பட்டகாலில்தான் படும்என்பார்கள். ஆனால் அது முற்றிலும் முழுக்க முழுக்க உண்மையானது பிரபாகரின் வீட்டில்தான் எனலாம்.
    
பிரபாகரின் அண்ணன் பார்த்துக்கொண்டிருந்த வேலையும், அவன் வேலை செய்த கம்பெனியின் நஷ்டத்தில், தொலைந்து காணாமல் போக, இவன் ஒருவனின் குறைந்த சம்பாத்தியம், அப்பாவின் மருத்துவம், அண்ணன் குழந்தைகளின் கல்வி செலவு, தங்கையின் படிப்பு, வீட்டு நிர்வாகம், என அனைத்து செலவுகளையும், பிடித்து இழுத்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி, உயிரை விடவா? என்று கேட்டபடி போராடிக் கொண்டிருந்தது. இந்த லட்சணத்தில்தன் கணவருக்கு உயிருக்கு ஆபத்தில்லாமலிருக்க இருதயத்தில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்! அதற்கு லட்சகணக்கில், பணம்வேண்டும்! எப்படியாவது புரட்டி கொடுடாஎன்று அக்கா வந்து அழுது கொண்டே நின்றவுடன் இவன் இதயம் கத்தி காயம் ஏதும் படாமலே கடும் வலியை உண்டாக்கி ரணமாக்கியது.

யாரிடம் கடன் கேட்பது? கடன் பட்டாலும் எப்படி சாமளிப்பது? குடும்ப பிரச்சனைகள் தலையை சுற்றிக்கொண்டிருந்த போது அண்ணியின் மூலம் அந்த குடும்பத்துக்கு ஒரு விடிவு காலம் வந்தது. இவனுக்கு அது கேடு காலமாக தோன்றியது. அண்ணியின் நெருங்கிய உறவினர் ஒருவர், வேறு ஊரிலிருந்து இங்கு இடம் பெயந்தவர், அண்ணியை நினைவு வைத்துக்கொண்டு, நலம் விசாரிக்கும் சாக்கில் அடிக்கடி வந்துபோக இவர்களது குடும்ப சூழலை ஒரளவு தெரிந்து கொண்டவராய், உண்மையிலேயே இவர்கள் நிலைமைக்கு இரக்கப் பட்டவராய் இவர்களுக்கு அபய கரம் நீட்ட முன் வந்தார். ஆனால் பதிலுக்கு முடிந்தால் பிரபாவுக்கு தன் ஒரே மகளை திருமணம் செய்து கொடுக்க ஆசையாய் இருக்கிறதென்றும், விருப்பம் இருந்தால் முயற்சிக்கலாமே என்று லேசான நிர்பந்தம் மாதிரி ஒரு தோற்றத்துடனும், அவர் அக்குடும்பத்தை, நெருங்கிய போது, பிரபாகரைத் தவிர மற்ற அனைவரும் அவரை மனதாற வரவேற்று, பிரபாகரை, பலிகடாவாக்க சம்மதித்தனர்.

என்னாலே இதுக்கு சம்மதிக்க முடியாதம்மா! அதுக்கு இப்படியே எல்லோரும் கஷ்டப்பட்டே செத்து போயிடலாம்!” என்று பிரபாகர் பிடிவாதம் பிடிக்க, “ஏன் அவர் சொன்னபடி கேட்டால் என்ன? அண்ணனுக்கும் உனக்கும் அவர் புதிதாய் ஆரம்பித்த கம்பெனியிலேயே நல்ல பதவியில், நல்ல வேலை போட்டுக் கொடுக்கிறேன் என்கிறார். அக்கா கணவருக்கு மருத்துவச்செலவு, தங்கைக்கு படிப்புச்செலவுடன் திருமணம் முடித்து கொடுப்பது வரை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.” “தன் ஏகப்பட்ட சொத்துக்கும் ஒரே வாரிசான தன் பெண்ணையும் கொடுத்து இத்தனையும், செய்தால், உனக்கு கசக்கிறதா? நீ எங்களையெல்லாம் கொஞ்சமும் நினைக்கவேயில்லை! நினைத்திருந்தால், எங்கள் மீது பாசம் இருந்திருந்தால் இப்படி சம்மதிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டாய்…!” என அப்பா, அம்மா அண்ணன் அக்கா என்று குடும்பமே அவனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த, அவன் சற்று திகைத்து தடுமாறித்தான் போனான். தன்மனதின் எண்ணங்களை இவர்களிடம் எப்படிச் சொல்லி புரிய வைப்பது எனத்தெரியாமல் திண்டாடினான்….!

தொடரும்

10 comments:

  1. நிகழ்வுகள் வேகமாக நகர்கின்றன. நிறுத்தி சற்றே விவரித்து எழுதினால் இந்த பாகத்தை மட்டும் மூன்று பதிவுகளாக எழுதலாம். பிரபைகள் நிலை சங்கடம்தான். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை விவரித்து எழுதலாம். ஆனால் அது படிப்பவர்களை போரடிக்க செய்து விட்டால் என்ன செய்வது ? என்று என் மனதில் ஏற்பட்ட யோசனையில்தான் நிகழ்வுகளை சுருக்கமாக ௬றிச்செல்கிறேன். மற்றபடி தங்கள் விரிவான கருத்துரைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பணிவுடன் என் நன்றிகள்.

      தொடர்ந்து வந்து படித்து கருத்திட்டு ஆதரவு தந்து மேலும் எழுத ஊக்கமளிப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அடுத்து நடந்தது என்ன...?

    ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் ஆவலுடன் ௬டிய எதிர்பார்ப்புகள், என் எழுத்துக்களை வளமாக்கும் என நம்புகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. உண்மைதான் சகோ பலரின் வாழ்க்கை குடும்ப உறவுகளின் சிக்கி இப்படித்தான் குழம்புகிறார்கள்
    நானும், ஆவலுடன்......

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம் மனதிலிருப்பதை குடும்ப உறவுகளுக்குள் வெளிப்படுத்தி அவர்கள் புரிந்து கொள்வதற்குள் சிக்கல்கள் ஏற்பட்டு உறவே பகையாகிறதே. எல்லாம் நேரம்தான்.!

      தாங்களும் கதையை மேலும் படிப்பதற்கு ஆவலுடன் ௬டிய எதிர்பார்ப்புகளுடன் இருப்பதற்கு, என் மனப்பூர்வமான நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. நல்லா போகுது,,,,,,,,,,, அருமை. தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.!

      தங்களின் என் தளத்திற்கு தந்த முதல் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இனியும் தொடர்ந்து வந்து கருத்திடுமாறு வேண்டுகிறேன். நானும் தொடர்கிறேன். நன்றி சகோதரி ..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. வணக்கம்
    சொல்லிச் சொல்லும் நடை நன்றாக உள்ளது... அடுத்தது என்ன நடக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கேன். பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆவலுடன் கதையை மேலும் படித்திட காத்திருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அதற்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete