Friday, March 13, 2015

குரு தட்சனை….

காலங்காலமாய், கல்வி என்பதை ஒருவர் பயிற்றுவிக்க, ஏனையோர் அதை கற்பது என்பது மரபாகி போன விஷயம். பண்டைய காலத்தில், குருகுலவாசத்திற்கு தத்தம் குமாரர்களை சிறந்த குருவிடம், பெற்றோர்கள் அனுப்புவார்கள். குருகுலவாசத்திற்கு, 8 வயதிலிருந்து 12 வயது நிரம்புவதற்குள், ஆசிரமத்திற்கு குருவிடம் கல்வி கற்றுவர அனுப்பி வைப்பார்கள். அவர்கள் மேலும் அந்த குருவின் ஆஸ்மரத்தில், 12 வருடங்கள் தங்கி குருவுக்கு தேவையான பணிவிடைகளை செய்தபடி, அவர் கற்றுத்தரும் வேதங்கள் உபநிடதங்கள், சாஸ்த்திரம் வானவியல், சோதிடம், மருத்துவம் மற்றும் போர்ப்பயிற்சிகள் யோகா, மற்றும் அனேக கலைகளையும் கற்று தேர்ந்து சிறந்த மாணவனாக தம் இல்லம் ஏகுவர். அரசிளங்குமாரர்கள், நாட்டின் செல்வ பிரஜைகளின் செல்வங்கள், சாதாரண குடிகளின் புதல்வர்கள் என ஏழைப் பணக்காரன் என்ற பாகுபாடின்றி, அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாதி மத பேதமின்றி, கல்வியை கற்று கொள்வதே அங்கு பிரதானமாக இருக்கும். அக்கல்வியை கற்று முடிக்கும் வரை, மாணக்கர்கள் தங்கள் குடும்ப உறவுகளுடன் எவ்வித தொடர்புமின்றி, பந்த பாசங்களுக்கு ஆட்படாமல், குருவின் கண்காணிப்பில் அவருக்கு அடங்கிய பிள்ளைகளாய், கல்வியை கற்று தேர்வது ஒன்றே குறிக்கோளாய், நினைத்து வாழ்ந்து வருவார்கள்.

கல்வி முடிந்து அவர்கள் வீடு திரும்பும் சமயம், கல்வியை குறையற கற்று தந்தமைக்கு பரிசாக, அவரவர் வீட்டிலிருந்து அவரவர்களுக்கு இயன்ற வகையில், பொன், பொருள், போன்றவற்றைகுருவுக்கு காணிக்கையாக  தந்து  விட்டு  அவரவர்  வீட்டு  குமாரர்களை  அழைத்துச்  செல்வர். சிலர்  குருவின்  தேவையை  கேட்டறிந்து,, அவர் கேட்கும்  எதையும்  தன் சக்தியால்  முடித்து  வைப்பர்.. குருகுலவாசத்தில், குருவுக்கு மிகவும்  பணிவிடை  செய்து  அவர்  அன்புக்கு  மிகவும்  பாத்திரமாய்  ஆன  பட்சத்தில்  அவன் ஏழையாயிருந்தாலும்அல்லது  பணமுடையவனாய்  இருந்தாலும்குரு, தன்  தட்சனையை  புறக்கணித்து விடுவார். மொத்தத்தில்  நிர்பந்தித்து  தட்சனை  வாங்கும்  பழக்கங்கள்  இல்லாதிருந்தது. மகா பாரதத்தில், அர்சுனனின் குரு  துரோணாச்சாரி யாரைதன்  மானசீக  குருவாக  ஏற்ற  வேடன்  ஏகலைவன்  திருட்டுத் தனமாக  குரு அறியாமல்  வில் வித்தையை  கற்றதற்காககுரு  கேட்கிறார்  என்பதற்காக, வில்  வித்தைக்கு  ஆதாரமாக  இருக்கும்   தன்  வலக்கையின்  கட்டை  விரலேயே  தட்சனையாக  கொடுத்தான்அந்த அளவுக்கு  அக்காலத்தில்  குரு பக்தி  இருந்தது.

      ஒரு  கால  கட்டத்தில்  குருகுல வாசங்கள்  நிறைவுக்கு  வந்து அதன் பிரதி பலிப்பாக  திண்ணைப் பாடசாலைகள்  வந்து, மரத்தடி பள்ளிகள், ஓலை  போட்டஓடு  வேய்ந்த  பள்ளிக்  ௬டங்கள்..  நாளடைவில்  கட்டங்களுடன்  கல்விச்சாலைகள்  வந்து  நிறையவே  கல்விச்சாலையின்  தராதரங்கள்  மாற்றியமைக்கபட்டு விட்டது. ஆனால்  குருதட்சனை  மட்டும்  முன் ௬ட்டியே  கொடுத்து விடும்  அளவுக்கு  கட்டுப்பாடுகளும்கல்வியின்  அம்சங்களும்  மாறி  விட்டன.. காலங்கள்  மாறி  விட்டன  அந்த கால  கல்லூரிச்  செலவுகளும்இந்த  கால  பாலர்  கல்விகளும்  சமமாகி விட்டன. குரு தட்சனைகள்  நிறையவே  மாறித்தான்  வருகின்றன.  

முன்பெல்லாம், இயற்கையோடு மக்கள் பிணைந்திருந்தார்கள். இயற்கையும் மக்களோடு இணைந்திருந்தது. அந்தந்த காலத்திற்கு மழை, வெயில், பனி, காற்று என மக்களோடு ஒத்துழைக்கும்  காலங்களை தெரிந்து வைத்துக்கொண்டு, மக்களும் அந்தந்த காலங்களுக்கு அனுசரனையாக வாழ்ந்து வந்தனர். தமிழர்கள் இளவேனில், முதுவேனில், கார் (மழை), ௬திர் (குளிர்), முன்பனி, பின்பனி, என ஆறுகாலமாய் பிரித்து, முறையே ஆங்கில நாட்காட்டி, ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை அதுசமயம் நடந்து கொண்டிருக்கும் தமிழ் மாதம் சித்திரை, வைகாசி எனவும், ஜூன் 15 முதல் ஆகஸ்டு 14 வரை தமிழ் மாதம் ஆனி ஆடி எனவும்ஆகஸ்டு 15 முதல் அக்டோபர் 14 வரை தமிழ் மாதம் ஆவணி புரட்டாசி எனவும், அக்டோபர் 15 முதல் டிசம்பர் 14 வரை, தமிழ் மாதம் ஐப்பசி கார்த்திகை எனவும், டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 14 வரை, தமிழ் மாதம் மார்கழி தை எனவும், பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 வரை , தமிழ் மாதம் மாசி பங்குனி எனவும், பிரித்து அந்தந்த காலங்களுக்கு ஏற்ப தத்தம் பணிகளை, பயிர், உழவு நெசவுத் தொழில்களை  சிறப்புற செய்து செவ்வனே வாழ்ந்து வந்தனர்.

அதுபோல் இந்தியாவிலும், இந்து நாட்காட்டியிலும், ஆறு பருவங்களை பஸந்த் (இளவேனில்), ஷரத் (முதுவேனில்), வர்ஷா (மழை), ரிது ஹேமந்த் (முன் குளிர்), ஷிஷிரா (குளிர்), கிரிஷ்மா (கோடை) என்ற பெயருடன் அழைத்து வந்தனர்.  இப்போது எங்கு பார்த்தாலும் ஒரே சீதோஷ்ணம். ஆறு பருவங்களின் தடங்கள் திடீரென தப்பி விடுகிறது... மழை போதாமல் பஞ்சத்திற்கு வழி வகுக்கிறது. திடீரென அம்மழையே நன்றாய் விளைந்த விளைச்சலையும் அழிக்கிறது. (இங்கு பெங்களூரில் நான் வரும்போது 8 வருடத்திற்கு முன்பிருந்த காலநிலை இப்போது இல்லை. எப்போதும் குளு குளு வென்றிருந்த நிலை மாறி வெய்யிலின் தாக்கம் அதிகமாயிருப்பதாக தோன்றுகிறது.) “யாதும் ஊரே.! என அனைவரும் இடம் பெயர்ந்தால், நான் என்ன செய்வது?” என்ற இயற்கையின் புலம்பல்களும் காதுகளில் கேட்காமலில்லை!. நாமும் என்ன செய்வது? தற்சமய கால, தேச, வர்த்தமானம் அப்படி உள்ளதே.? காலத்தின் மாற்றங்களில் புதிதான பெயர்களுடன் வியாதிகள் உருவாகிறது. வியாதிகளின் சூழலுக்கேற்ப மருந்துகளின் பெயர்களும் விலைகளும், மாறுகின்றது. வேறு வழியில்லை.! அனைத்தையுமே (மாறி வரும் சூழல்) சகித்துதான் ஆகவேண்டும்.

பகவான் நாராயணன் உலகில் தர்மங்கள் அழிந்து அதர்மங்கள் தலைவிரித்து ஆடியபோது தர்மத்தை ஸ்தாபித்து, அதர்மத்தை வேரோடு அழிக்க, தானே வித விதமான ரூபங்களுடனும், மானுட பிறவியுடனுமாக பத்து அவதாரங்கள் எடுத்தார். அதனையே தசாவதாரம் என்று சொல்வர். (“தசம்என்ற சொல்லுக்கு தமிழில் பத்து என்று பொருள்.)

மச்ச, ௬ர்ம (௬ர்மம் என்றால் ஆமை) வராஹ (வராஹம் என்றால் பன்றி), நரசிம்ம, வாமண, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்ற பத்து அவதாரங்கள் எடுத்து உலகினை நல்வழியில் இயங்கச் செய்தார். இதில் ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் மானிடராகவே பிறந்து மானிடர்களுக்கு நடுவில் வாழ்ந்து, பிறப்பெய்தும் ஒவ்வொரு மானிடரும் எவ்வழியில் நடந்து கொள்ள வேண்டுமெனவும், தத்தம் வாழ்வின் தாத்பரியங்களை உணர்ந்து கொள்ள ஏதுவாய் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாகவும், இருந்தே காட்டினார் பகவான்.

இந்த தசாவதார திருக்கோவில், மூலவர்களாக பத்து விதமான அவதாரங்களின் சிறப்புடன் காட்சி தரும் கோவில், தமிழ் நாட்டிலுள்ள திருவரங்கத்தில் உள்ளது. மச்ச, ௬ர்ம வராக நரசிம்மம் ஆகிய நான்கு அவதாரத்துடன் கையில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார் எம்பெருமான். கையில் தாழம் குடையுடன் வாமணராகவும், கோடரியுடன் பரசுராமராகவும், வில் அம்புடன் ராமராகவும், கலப்பையுடன் பலராமராகவும், கை நிறைய வெண்ணையுடன் கிருஷ்ணருமாகவும், வாளும் கேடயமும் கொண்டு கல்கி அவதாரமுமாக, பத்து திருவுருவங்களும், ஒரே கோவிலில் குடிகொண்டுள்ளன. எம்பெருமானின் அடியவர்களாகிய, பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரின் விருப்பத்தி்ற் கிணங்கி எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் தான் எடுத்த அவதாரங்களின் உருவத்துடன், அவருக்கு காட்சி தந்து அந்த தலத்தில் ஒரே இடத்தில் குடி கொண்டுள்ளதாக புராணங்கள் ௬றுகின்றன.

பொதுவாக கோவில்களில் மூலவருக்கு பல உற்சவ மூர்த்திகள் உண்டு. ஆனால் இந்த கோவிலில், பத்து மூலவருக்கும் ஒரே ஒரு உற்சவ மூர்த்தியாக லட்சுமி நாராயணராக சுவாமி அருள்பாலிக்கிறார். அந்தந்த அவதாரங்களின் உருவத்தோடு ஒவ்வொரு கலசமாக விமானத்தில் பத்து கலசமாக கண்கொள்ளா காட்சியாக பெருமாளின் இந்த தசாவதாரக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஒன்பது கிரகங்களின் தோஷ நிவர்த்தி தலமாக விளங்குவதால், ஒன்பது அவதாரங்களையும் ஒவ்வொரு கிரக தோஷமுடையவர்கள் பரிகார பூஜை செய்து பிரார்த்தித்து பலன் அடையலாம். அவரவர்களின் கிரக தோஷங்களை முறையே எம்பெருமான் நிவர்த்தி செய்து சகல செளபாக்கியத்திற்கும் வழி வகுப்பார். நாமும் திருவரங்கம் சென்று தசாவதார கோவிலை கண்டு தரிசித்து தசாவதார மூர்த்திகளை வழிபட்டு வியாதிகளின்றி நலமுடன் வாழ பிரார்த்தித்து வருவோமா.?

என்னடா இது? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தமாய் என்ன இது? என்று நீங்களும், இயற்கையோடிணைந்து  புலம்புவதற்குள் முடித்து விடுகிறேன். இந்த இயற்கையின் மாறுபாட்டால், வந்த சளி ஜுரந்தானே! என்று கடந்த 15 நாட்களாக உடல்நலக் குறைவை கவனித்தும், கவனியாமலும் இருந்து வந்தேன். (கவனித்தது ஆயுர்வேதத்தோடு.! கவனியாதது அலோபதியை.!) அது நான் உன்னை விட்டு போக மாட்டேன் என்று அழும்பாக அடம்பிடிக்க, கவனியாத அலோபதி தட்சனையை நினைவுபடுத்தி நிர்பந்தமாய் அழைக்க, தட்சனையை விரைந்து சென்று செலுத்தி “கவனித்து” வந்தேன். (விரைந்து ஓட காரணம், வராக மூர்த்தியின் மேலிருக்கும் பயந்தான்வராக மூர்த்திக்கு உன்னை பிடித்து விட்டால் என்ன செய்வது..? என்று அதைச் சொல்லி வீட்டில் பயமுறுத்த, சரி! தட்சனை கொடுத்தாலாவது சரியாய் போகிறதா பார்ப்போம்..! என்று கொடுத்து விட்டு வந்தேன்.) தட்சனை கொடுத்தும், எப்போது குணமாகுமோ அந்த நேரத்தில்தான் அது நிவர்த்தியாகும். ஆனால் அதோடு கடமைகள் கைகளை கட்டியவண்ணம் அதன் போக்கில் இழுத்துச் செல்கிறது.

எப்படியோ குருதட்சனையோடு, இயற்கையை இணைத்து அந்த கால கல்வியை பற்றிய அலசல்களையும், காலங்களின் மாறுதல்களை பற்றியும், படித்ததை  சொல்ல  சான்ஸ்  கிடைத்ததே  என்று  ஆரம்பித்த  போது எம்பெருமான் கடவுளின் அவதாரங்களை பற்றியும் பகிர்ந்து கொள்ள தூண்டினார்… (நன்றி லட்சுமி நாராயணா) இதையெல்லாம் பகிர்ந்து ஒரு (தேவையற்ற) பதிவாக்க உதவியதே இந்த வராகமூர்த்தி மேலிருக்கும் பயபக்திதான்... என்னை பரிசோதித்த பிறகு வேறு எந்த பயமும் கொள்ள தேவையில்லை! சாதாரண காய்ச்சல்தான்! என ௬றிய குருவுக்கும், அந்த சாட்சாத் வராக மூர்த்திக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்…! என்ன சரிதானே..?   
    

ஓம் நமோ நாராயணாய நமஃ

நன்றி: விக்கிபீடியா, தினமலர், கூகுள்

8 comments:

 1. அடேங்கப்பா, ஒரு சளி பிடித்து ஜூரம் வந்ததால் இவ்வளவு விடயங்களா ? புராணக்கதைகள், முதல் குருதட்சிணை வரை எனது குருந்தன் வாத்தியார் நினைவில் வந்து போனார் தங்களால்.

  எங்கே ? சகோவை காணவில்லையே என நினைத்துக்கொண்டே இருந்தேன் அருமை இந்த வகை பதிவுகள் இனியும் தொடரட்டும் ஜூரமின்றி என வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   தங்கள் உடன் வருகைக்கும்,பொறுமையுடன் படித்து தந்த கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   என்னால் தங்களின் குருவை மறுபடியும் நினைவுபடுத்த முடிந்தமைக்கு அக மகிழ்கிறேன். (இந்த சின்ன உதவியை செய்ய முடிந்ததே என்ற சந்தோஷந்தான்.)

   தொடரும் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும், ஜூரம் சற்று குணமான தெம்பில் மறுபடியும் நன்றி ௬றுகிறேன்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. கல்வியும், குருதட்சணை அந்தக்காலம் + இந்தக்காலம் வரை காட்சியாக வந்து போனது.
  ஆறுகாலம்,12 மாதம் 10 அவதாரம்....என அருமையாய் பதிவு செய்திருக்கிறீர்கள் சகோ.

  சளி, ஜூரம் பார்த்துக் கொள்ளுங்கள், தொடர்ந்து கொண்டிருக்கிறேன் சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.!

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி..

   பொறுமையுடன் படித்து கருத்துக்கள் சொன்னதோடு, என் உடல் நலம் குறித்து அக்கறையுடன் கேட்டு அன்பாக ஆறுதல் தந்தமைக்கும், உங்கள் பதிவுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.என கனிவுடன் ௬றியமைக்கும் என் நன்றிகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி..

   என்றும் நட்புடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. இணைத்து சொன்ன விதத்தை ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..

   அனைத்தையும் நிதானமாக படித்து ரசித்தேன் என சொன்னமைக்கும், உடன் என்தளம் வந்து வாழ்த்துவதற்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. குரு தட்ச்சனை மிக அருமையான பதிவு. உங்களைப் போன்ற நல்ல பதிவர்களால் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. எனது வலைப்பூவின் உறுப்பினராக சேர்ந்து கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் சகோ.

  உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டேன். கவனித்துக்கொள்ளுங்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி..!

   தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி..

   நான் இன்னமும் ஒரு கத்துக் குட்டிதான் சகோதரி.. தங்களை போன்ற சிறந்த பதிவர்களின் பின்னூட்டங்கள்தான் என் எழுத்தை சிறக்க வைக்கும் என்பதால், தாங்கள் என்தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஊக்கமும், எழுதும் உற்சாகமும், தவறாமல் தர வேண்டுகிறேன்.நானும் தங்களின் பதிவுகளை தொடர்கிறேன். நன்றி.

   என் உடல்நலம் தற்சமயம் குணமாகி விட்டது சகோதரி...
   என் நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்த தங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் சகோதரி..

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete