Saturday, March 14, 2015

ஒரு தீயின் ஆரம்பம்.. (சிறுகதையின் பகுதி 1)

பெரிய அத்தை சமையலுக்கு தேவையான காய்கறியை அம்மாவிடம் கேட்டு, கேட்டு நறுக்கிக் கொண்டிருந்தாள். சித்தியின் கை மணம் சமையலறைக்குள்ளிருந்து, ஹால்  வரை  ருசியை பரவ விட்டு  பசியைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது. பெரியம்மா  தன் வீட்டில் தனக்கும், மற்ற உறவுகளுக்கும் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை சத்தம் போட்டு சொன்னபடி, தானும் இடையிடையே அந்த நினைவுகளை ரசித்த வண்ணம் சிரித்து  தன்னைச்சுற்றி அமர்ந்தவாறு  சமையலுக்கு உதவிக் கொண்டிருந்த பெரிய அத்தை, தன் பெரிய மருமகள் இவர்களையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள். சமையல் அறையிலிருந்து சித்தியுடன்  சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த அம்மாவின் அண்ணி அவ்வப்போது வெளியில் வந்து பெரியம்மாவின் பேச்சை ரசித்து  விட்டு தன் பங்குக்கு சிறிது நகைச்சுவையை உதிர்த்து விட்டு, மேலும் அந்த இடத்தை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தாள். இது ஒன்றையும் பற்றி அக்கறைக் கொள்ளாது, அவரவர்களின் கணவன்மார்கள், இன்றுதான் நமக்கு சுதந்திரநாள் என்ற சிந்தனையுடன் வாசலறையில் ஆளுக்கொரு நாற்காலிகளில் இடம் பிடித்தபடி, மனம் போனபடி தமக்கு தோன்றியதெல்லாம் பேசி சிரித்தபடி இருந்தார்கள்.

இவற்றையெல்லாம், பார்த்து ரசித்தபடி உள்ளுக்கும், வெளிக்கும்  ஓடி ஓடி காரியங்களை கவனித்துக் கொண்டிருந்த அம்மாவின் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்?. ஏதோ பெரிய சமஸ்தானமே தன் வீட்டில் நிரம்பியிருந்தது மாதிரியான நிறைவுடன் எத்தனைப் பூரிப்பு.? அவ்வப்போது வாசலில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த தன் அண்ணா, மச்சினர், அத்திம்பேர், மாப்பிள்ளை, இவர்களிடம்  சென்று காப்பி, தேனீர் போன்ற பானங்களை வேண்டுமா? எனக்கேட்டு அதை தயாரித்து கொடுத்து, உபசாரம் பண்ணியபடி இருந்தாள். நடுநடுவே, பூஜையறையில் அமர்ந்திருக்கும் தன் கணவனுக்கும் சில பணிவிடைகளுடன், ௬டத்திலிருக்கும் தொலைக் காட்சியில் முழ்கி, வாசலிலிருக்கும் உறவுகளுடன் ஒட்டாமல். ஏனோ, தனோவென்று பேச்சை முடித்துக் கொண்டு ஏதோ ஒரு படத்தை சுவாரஸ்யத்துடன் பார்த்தபடியிருக்கும் என் இரு அண்ணன்களுக்கும், அவர்களை விட்டு எந்நாளும் அகலாமலிருக்க சபதங்கள் எடுத்துக்கொண்ட அவர்களின், சகதர்மிணிகளுக்கும் உபசாரங்கள், ௬டத்தறையின் ஒட்டினாற்போல் அடுத்தடுத்து இருக்கும் இரு பெரிய படுக்கையறையின் ஒன்றில், அப்போதுதான் ஊரிலிருந்து வந்திருக்கும் சின்ன அத்தையின் குடும்பம் ஆசுவாசமாக அமர்ந்திருக்க, அவர்களிடம்குளித்து பலகாரம் சாப்பிட்டு விடலாமே!” என்ற வண்ணம் சில வார்த்தைகள் பேசியபடி அம்மா காலில் சக்கரம் கட்டாத குறையுடன் அங்குமிங்கும் ஓடி சந்தோஷத்தின் மறு அவதாரமாகியிருந்தாள்.

அம்மா இந்த காலத்திற்குதான்,  எத்தனை ஏங்கியிருக்கிறாள் என்று  எனக்கு மட்டுந்தான் தெள்ளத்தெளிவாகத் தெரியும்.! எத்தனை முறை இந்த உறவுகளைச் சொல்லி, இவர்கள் நம்மை மதித்து ஒன்று ௬டி, அனைவரும் சேர்ந்து வந்து அவர்களும் சந்தோஷித்து, நம்மையும் சந்தோஷப்படுத்த போகிறார்களோ? என்று புலம்பியிருக்கிறாள். சின்ன வயதின் நினைவுகளை எத்தனை அருமையாக்கி, கதைகள் போல் சொல்லி மகிழ்ந்திருக்கிறாள். ௬டப்பிறந்த அண்ணா, அக்கா, என்ற உறவுகளை பற்றிய விபரங்களோடு, புகுந்த வீட்டின் உறவாகிய மச்சினன், இருநாத்தனர், இவர்களை தான் முன்னின்று வாழ்க்கை அமைத்துக் கொடுத்த விபரங்களையும், எங்கள் அனைவரிடமும் சொல்லிச்சொல்லி உறவின் வேர்களை எங்கள் உள்ளத்தில் ஆழப்படுத்தியிருக்கிறாள். இரு அண்ணன்களும், சிறிது காலம் இதையெல்லாம் செவிமடுத்தவர்கள், “எப்ப பாரு இதே புராணமா? சுத்த போர்மா!” என்றபடி உறவின் வேர்களை சுமையாக கருதி அழுக விட, அம்மா என்னிடம் மட்டும் இதைப்பற்றி, அடிக்கடி பேச ஆரம்பித்தாள். “டேய் விச்சு! உனக்கும் இந்தப் பேச்செல்லாம் என்னைக்கு போராக போகப் போகிறதோ?” என்று அம்மா என்னுடன் பேச ஆரம்பிக்கும் போதே, சொல்ல நான்அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா! எனக்கு நீ சொல்வதெல்லாம் தினமும் புதுசு புதுசாத்தான் இருக்கு! அவங்களுக்கு வேணா அப்படியிருக்கலாம். என்கிட்டே நீ எப்பவும் மாதிரி பேசிண்டே இரு! நான் சந்தோஷமா என்னைக்கும், உன் பேச்சை கேட்டுண்டே இருப்பேன்.” என்று சொல்லவும் அம்மா கண்களில் ஆனந்தத்தின் ஒளி சட்டென்று தெரிந்து மறையும்.  . இருந்தாலும்," உனக்குன்னு ஒரு கல்யாணம் ஆகி உன் வாழ்க்கை  மாறும் போது உனக்கும் என் பேச்சு பிடிக்காதடா.” என்று கேலியாகச் சொல்லிச்சிரிப்பாள். "இல்லை அம்மா! எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உன்னையும், உன் பேச்சுக்களையும் நா எந்த அளவு நேசிக்கிறேன்னு சொல்லி புரிய வைக்க முடியாது. உன் மனசோட தாபத்தையெல்லாம் நான் தினமும் கேட்டுகிட்டே இருக்கனும்.  அதுக்கு ஆறுதலா நாலு வார்த்தை நான் சொல்லிட்டே இருக்கனும். இதைத்தான் நான் தினமும் என்னை உன்  மூலமா படைச்ச கடவுள்கிட்டே வேண்டி கிட்டே இருக்கேன்.” என்று மனசுக்குள்ளேயே, மறுத்துக் ௬றிக் கொள்வேன் நான்.

செல்வ செழிப்பில் மிதக்கவில்லையென்றாலும், குடும்பத்தை தாங்கிப் பிடித்து ஓட்டும் அளவுக்கு அப்பாவின் வருமானம் இருந்தது அம்மாவுக்கு போதுமான மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்ததென்று அம்மா அடிக்கடி பேசும் போது சொல்லியிருக்கிறாள். அப்பாவுக்கு அடுத்தபடியாக பிறந்திருந்த  தம்பி மற்றும் இரு தங்கைகளின் வாழ்வை நல்லபடியாக  அமைத்துக் கொடுத்த பெருமை அம்மாவையே சாரும் என்று அப்பாவும் அம்மாவை, அடிக்கடி  புகழ்ந்து பேசியிருக்கிறார். இப்படி இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விட்டுத் தராமல்,  நல்ல தம்பதிகளாகதான் வாழ்க்கைப் பயணத்தை அன்பாகவே தொடர்ந்திருக்கிறார்கள். உறவுகள் உதாசீனப் படுத்தினாலும், உறவுகளுக்கு ஓடிச்சென்று உதவிசெய்வதில் அலாதி ஆனந்தம் அவர்கள் இருவருக்கும்.
(தொடரும்...)

12 comments:

 1. ஆஹா தொடர் கதையா ? ஆரம்பமே அமர்க்களம் தொடர்கிறேன்
  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்..

   சிறுகதை என்ற தலைப்புகேற்றவாறு, சிறிதாகவே ௬றி முடித்து விட ஆசைப்பட்டுத்தான் இக்கதையை ஆரம்பித்தேன். ஆனால் எழுதும் போது வழக்கப்படி வார்த்தைகள் பிரபாகமாய் பெருகிட வரிகளின் ஆதிக்கங்கள் அவசியத்தின் அளவின்படி அதிகமாகி விட்டது. மொத்தமாக பதிவிடும் போது, தங்களின் ஆலோசனைகள் நினைவு வர, 3 பகுதியாக பிரித்து விடலாம் எனத் தோன்றவே, அவ்வாறே செய்துள்ளேன் . தங்கள் ஆலோசனைக்கு நன்றிகள். தொடர்ந்து படித்து கருத்திட வேண்டுகிறேன்.( பதில் கருத்தே இவ்வளவு விரிவா? என மலைக்க வேண்டாம்.) தொடர்ந்து படிப்பதற்கு நன்றிகள் சகோதரரே...

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. நாளை வருகிறேன் சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.!

   தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி..

   \\நாளை வருகிறேன் //என்று ௬றி சென்றமைக்கும், தொடர்ந்து வந்து கருத்திடுவதற்கும் என் நன்றிகள்..

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. தொடர்கிறேன். நல்ல ஆரம்பம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   தாங்களைப் போன்ற சிறந்த பதிவர்கள், முதல் வருகையாக என் வலைப்பூவுக்கு வந்து, கருத்துச் சொல்லி இனியும் என் பதிவுகளை \\தொடர்கிறேன்// என்று ௬றியதே என் எழுத்துக்களுக்கு நல்ல ஆரம்பந்தான் சகோதரரே..

   தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், என் மனமார்ந்த நன்றிகள் ...
   இனியும் தொடர்ந்து வந்து கருத்திட்டு ஊக்கமளிக்க வேண்டுகிறேன்..

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. வணக்கம்
  கதை அருமையாக உள்ளது தொடருங்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..

   தாங்கள் சிறிது இடைவெளிக்கு பின் என் தளம் வந்து படித்து பாராட்டியது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது..
   தங்களைப் போன்ற பதிவர்கள் வருகைதான் என் எழுத்துக்களை வளப்படுத்தும். தொடர்ந்து வந்து கருத்திட வேண்டுகிறேன்..நன்றி.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. கதை அருமையாக கண்முன் காட்சியாக விரிகிறது. உறவுகள் அவர்களின் செயல்கள், அம்மா ஆசையாய் கவனிப்பது. அப்பாடா என ஆண்கள் கூட்டம் தனியாக , பெண்களின் காரியங்கள் மற்றும் பேச்சு சுவாரஸ்யம்....நம் இல்லத்தில் விஷேசத்திற்கு அனைவரும் வருகை நல்கும் போது ஏற்படும் பரவசம் அம்மாவிடம் நன்கு தெரிகிறது.

  பசங்க ஒரு தடவை 2 தடவை கேட்பார்கள். ஆனால் பெண் குழந்தைகள் திரும்பத்திரும்ப கேட்பார்கள் அது முற்றிலும் உண்மை. கதை நன்கு போகிறது சகோ. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி .!

   தாங்கள் மறுபடியும் வருகை தந்து கருத்துக்கள் ௬றி வாழ்த்துரைகள் தந்தமைக்கு என் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி..

   நம் அம்மாக்கள் அனைவருமே இப்படித்தான் சகோ..விருந்தினர் களையும், வீட்டில் வரும் சுப காரியங்களுக்கு வரும் உறவுக ளையும், விழுந்து விழுந்து கவனிப்பார்கள்.என் அம்மாவும் அப்படித்தான். காலங்கள் மாற, மாற இடம், பிறவசதிகள் அனைத்தும் குறைய, குறைய நாமும் மாறி விட்டோமோ? என்ற ஐயம் எழுகிறது.முன்பெல்லாம் ஒரு ஊருக்குச் சென்றால், சென்ற வேலை முடியும் வரை அங்கிருக்கும் உறவினர் வீட்டில் தங்கியிருந்து வேலைகளை முடித்து வருவார்கள்..!அங்கு உபசாரங்களும் பலமாயிருக்கும். தற்சமயம் தங்குமிடங்களில் சென்று தங்கி, (எதற்கு அவர்களுக்கு தொந்தரவு என்னும் மனோபாவத்துடன்)"முடிந்தால்" உறவுகளை சென்று சந்தித்து வரும் காலமாகி விட்டது. உறவுகளின் பிணைப்புக்கள் இந்த காலத்தில் அந்த நிலையில் உள்ளது. காரணம் காலங்களுடன் அனைவரின் மனோபாவங்களும் மாறி விட்டது..

   தாங்கள் ௬றிய கருத்துக்களும் உண்மைதான்..கதைகள்தான் சமயத்தில் நிஜ வாழ்க்கையாகிறது..வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் சில நேரத்தில் கதைகளோடும் ௬டிப் பிணைகிறது..

   தொடர்ந்து படிபபதற்கும், கருத்துக்கள் பகிர்ந்தமைக்கும் மீண்டும் நன்றிகள் சகோதரி..

   நட்புடன்,
   கமலா ஹரிஹரன்.


   Delete
 6. வாசித்தேன்... பகுதி-2யைத் தேடி விரைகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   சிறிது இடைவெளியுடன் தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே...

   பகுதி 2 ஐ வாசிப்பதற்கு விரைந்ததை கண்டு மன மகிழ்கிறேன். நன்றி...

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete