கதையின் 5 ஆவது பகுதி.
ஒரு மனிதன் பிறக்கும் போதே சுயநலத்துடன்தான் பிறக்கிறான்... அவன் தேவைகள், அவன் ஆசைகள் இது மட்டுமே நிறைவேறினால் போதும் என்ற மனதுடன்தான் வளர்கிறான்... வாழ்கிறான்... பிறந்த குழந்தை தன் அன்னையின் அரவணைப்பிலிருந்து இறங்கி நடக்க கற்றுக் கொள்வது கூட, தான் விரும்பும் இடத்திற்கெல்லாம் தவழும் சுயநலத்திற்காகத்தான், இருக்குமோ....?
இப்படி தன் ஆசைக்காக, தன் தேவைக்காக, தான் விரும்பியபடி வாழ ஆரம்பிக்கும் மனிதன் சுயநலத்தின் பிடியில் படிப்படியாக முழுவதுமாக சிக்குகிறான். தன்னை பெற்றவர்களுடனும், மற்றவர்களுடனும், குடும்பத்துடனும், இதர சொந்த பந்தங்களுடனும், தன் குழந்தைகளுடனும், தான் வாழும்போது இதே சிந்தனைதான் அவன் மனதில் மேலோங்கி நிற்கிறது. இறுதியில் வாழ்நாளின் கடைசியிலும் தன் வாரிசுகளை சார்ந்தே இருக்க வேண்டுமென நினைக்கிறான். மடிந்த பின்பும் தன் சந்ததியினர் தன் நினைவு நாளை நினைவாக நினைவு கூர்ந்து கொண்டாட வேண்டுமென எண்ணுகிறான். அந்த அளவுக்கு அவன் சுயநலத்துடன் ஒன்றி போகிறான்.... ..
இப்படி பிறப்பிலிருந்து, இறப்பு வரை தனக்காக மட்டுமே வாழ ஆசைப்படும் மனிதர்கள் வாழும் போது தன்னுடன் வாழும் மற்றவர்களின் உணர்வுகளை மட்டும் ஏன் புரிந்து கொள்ளாமல் போகிறார்கள்.? சரி....... அப்படி அதை உணர்ந்து அந்த குணத்தை சிறிது கஸ்டப்பட்டேனும் மாற்றியமைத்தானேயானால் அவன் உலகில் வாழத் தெரியாதவனாகிறான்.. . "திறமையற்றவன்.... ஒன்றுக்கும் உதவாதவன். .. உபயோகமில்லாதவன்...." இன்ன பிற பட்டங்களை பிறர் சுலபமாக தர அதையும் சுமக்கிறான்.... அப்படி சுயநலமாக வாழும் போதும் மனிதனே மனிதனுக்கு பெரும் பகையுமாகிறான்...... ஆதி பிறப்பிலிருந்து தோன்றிய இந்த மனித வர்க்கங்களின் சுபாவங்கள்தாம் எத்தனை விசித்திரமானது...!!!
மனதில் தோன்றிய இந்த சிந்தனைகள் சதாசிவத்தின் உள்ளத்தை முள்ளாக குத்தி வருத்தியது... "யோசித்து பார்த்தால், நானும் ஒரு வகையில் அப்படிப்பட்ட சுயநலவாதிதானே...!" என்று உண்மையை நினைத்த மாத்திரத்தில் மனசின் மைய பகுதியில் சுரீரென்று வலித்தது.... "நான் வளர்த்த பையன், என் வளர்ப்பு மகனானலும், அவன் என்னையே தஞ்சமென அண்டி இருக்க வேண்டும். வயதான என்னை நான் கண் மூடும் கடைசி காலம் வரை என் சொந்த வீட்டிலேயே சேர்ந்திருந்து அன்புடன் அனுசரித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தில்தான், அவனுக்கு வேண்டியதெல்லாம் நான் பார்த்து, பார்த்து செய்தேனோ...? " என நினைத்த போது இதயம் வெடித்து விடும் போலிருந்தது...
கண்கள் கலங்க அருகிலிருந்த மரத்தை தழுவி கொண்டார்.... . கைகளால் அதன் சொரசொரப்பை வாஞ்சையுடன் தடவியபோது உள்ளம் சற்று லேசாகியது. அண்ணாந்து சற்றே வீட்டின் பக்கமாக வளைந்திருந்த மரத்தை அதன் உச்சி வரை பார்த்தார். இந்த மரங்கள்தான் எத்தனை மேன்மையானவை..... "பொதுவாக உயரமான மனிதரை... மரம் மாதிரி வளர்ந்திருக்கிறாரே தவிர அறிவு வளரவில்லை..." என்பார்கள். ஆனால் மரத்தின் சிறப்பாம்சங்கள் மனிதனிடம் முழுமையாக இருந்துவிட்டால் அவன் உண்மையிலேயே உயர்ந்தவன்தான்.....
தன்னை நாடி வருபவர்களுக்கு நிழல் தந்து, பறவைகளுக்கு புகலிடமாக இருந்து, சுயநலமில்லாமல், தனக்காக எப்போதும் வாழாமல், தான் வாழும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பூ, காய், கனி, என மரங்கள் பிறருக்கு உதவியாக இருப்பதுடன், தன் மடிவை சந்தித்தும் மரங்கள் மனிதனுக்கும், பிற உயிர்களுக்கும், எவ்வளவு உதவியாக இருந்து வாழ்ந்து காட்டுகிறது. மரங்களுடன் வேறு எதையும் ஒப்பிட முடியாது. அதனால்தான் மரத்தின் பெருமை விளங்குமாறு, அதனை அத்தனை உயரமாக படைத்திருக்கிறான் இறைவன்......! " எனக்கு அடுத்த பிறவி என்ற ஒன்றிருந்தால் உன் மாதிரி மனிதனை உனக்கே உரித்தான நேயத்துடன் கவனித்து கொள்ளும் உன்னைப்போல் ஒரு மரமாக உன்னருகிலேயே பிறக்கவேண்டும்..... " என்று முணுமுணுத்தவாறு கண்களில் நீர் மல்க மீண்டும் அன்புடன் மரத்தை லேசாக அணைத்துக் கொண்டார் சதாசிவம்.
அவர் சொன்னதை ஆமோதித்து அவரை அமைதிபடுத்துவது போல் மரத்திலிருந்து சில இலைகள் அவர் மீது விழுந்து பின் தரையை தொட்டன.. . .மனஉளைச்சல் தந்த அலுப்பின் காரணமாக கட்டிலின் விளிம்பில் சாய்ந்து படுத்து கண்களை மூடிக்கொண்டார் சதாசிவம்.
"உன்னையும், அவனையும் ஒரே மாதிரியான பாசத்துடன்தானே வளர்த்தேன்... அவன் மனதில் மட்டும் இத்தனை வேறுபாடுகள் இருப்பதாக ஏன் அனைவரும் குறைச் சொல்கிறார்கள்.? அவன் தன்னிடமிருக்கும் பாசமெனும் கிளைகளை ஏன் அவ்வப்போது யாரும் பார்க்காமலேயே வெட்டிக் கொள்கிறான்.
தாய் தந்தையை சிறுவயதிலேயே இழந்து சில உறவுகளின் பாராமுகத்திலும், சில உறவுகளின் பராமரிப்பிலும் எப்படியோ வளர்ந்து, நான் காலூன்றிய போது, நல்ல உண்மையான அன்புக்கு ஏங்கிய போது, அந்த உண்மையான பாசத்தை என் மனைவியின் வடிவில் இறைவன் கைப்பிடித்து கொடுத்தாள். அதன் பின் எங்களுக்காக உங்கள் இருவரையும் அதே பாசத்தின் பிணைப்பில் கட்டுண்டு வளர்த்த போது, அவன் மட்டும் ஏன் இப்படி மனதளவில் வேறானான்.....?
எத்தனையோ சிரமங்கள், மனைவி பிரிந்ததும் ஏற்பட்ட சோகமான எத்தனையோ நினைவுகளை அவனோடு கூட அதிகம் பகிராத வேதனைகளை, மனதோடு உன்னிடம் சொல்லி, பகிர்ந்த போதெல்லாம்.,.... எங்கள் அன்பை புரிந்து கொள்ளும் உன் இயல்பான ஆற்றலோடு, உனக்கு மட்டும் பேசும் சக்தியையும் இறைவன் தந்திருந்தால், நீ எத்தனை ஆறுதலாக என்னோடு வாய் விட்டு பேசி இருந்திருப்பாய்.... !" கண் மூடி தான் வளர்த்த மரத்தோடு பேசிய அவரை, அவர் பேச்சை, அவர் மனதை புரிந்து கொண்ட மனோபாவத்துடன் மரத்தின் கிளைகள் மேலும் அசைந்து, பல இலைகளை அவர் மீது உதிர்த்து தானும் அமைதி பெற்று கொண்டு, அவரையும் ஆசுவாசபடுத்தியது...... !!"
இது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கை சுவடுகள் மனக்கண் முன் வந்து போயின.. .. இன்றும்,.... அதிகம் பேசாது பிறர் மனம் கோணது, தனக்கென வாழாது, தமக்கென்று வாழ்ந்து மறைந்த மனைவியின் நினைவில், அவள் அன்பின் பிரிவில், மனது அழுததால் அவர் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது.
நண்பர் பாலு எச்சரித்து சொன்ன விஷயங்கள் வேறு மனதை லேசாக சலனப்படுத்தியது..... .! பட்ட பகலில் எல்லோரும் பார்க்கக் கூடிய பொது இடத்தில் இப்படி சிறு குழந்தையாக உணர்ச்சிவசபடுகிறோமே என்ற வெட்கத்தில் கண்களை அவசரமாக துடைத்தபடி திறந்த போது கண்கள் திறக்க முடியாமல் எரிந்தன. காலையில் சற்று குறைந்திருந்த காய்ச்சல் இப்போது மறுபடி அதிகமாயிருந்தது.
சுசீலா கஞ்சியுடன் கொடுத்துச் சென்றிருந்த , சாப்பிட மறந்து விட்டிருந்த அந்த மாத்திரைகளை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டுமென்று நினைத்த போதில், "எதற்காக மாத்திரை சாப்பிட்டு அப்படி இந்த உடம்பை பாதுகாக்க வேண்டுமென்ற" வெறுப்பு ஒரு கணம் தோன்றியது.... "யாருக்கும் சிரமம் கொடுக்காமல், என்னையும் சிரமபடுத்தாமல், என்னை அழைத்துக் கொண்டு போய்விடு..." என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருக்கையில், காற்று சில்லென்று அடிக்க, ஓரிரு மழைத் துளிகள் முகத்தில் வந்து விழுந்தது.
கண்களை சிரமப்பட்டு திறந்து பார்த்தார். மதியம் அடித்த வெயிலுக்கு பலத்த மழை வரும் போலிருந்தது. வானம் ஓர் மூலையில் ஒரு கறுத்த பெரிய யானையை போன்ற தோற்றத்துடன் கருமையாக காட்சியளித்தது.. ..கருமை அதிகம் படர்ந்த சூல் கொண்ட மேகங்கள் துரிதமாக ஆங்காங்கே பரவி விரிந்து அழகான நீலவானத்தை தன் மழை மேகங்களினால் மேலும் கறுப்பாக்கி விடும் லட்சியத்தை மிக விருப்பமான மனதுடன் நிறைவேற்றும் பணியில் செயல்பட ஆரம்பித்திருந்தன...
காய்ச்சல் வேகத்தில் எழுந்து நிற்கவே முடியாத சிரமத்துடன் எழுந்து நின்ற சதாசிவம் குடித்து முடித்திருந்த கஞ்சி பாத்திரங்களையும், மாத்திரை கவர்களையும் ஒரு கையில் எடுத்தபடி, மற்றொரு கையால் கயிற்று கட்டிலை மடித்து அருகிலிருக்கும் வீட்டு சுவற்றில் சாய்த்து விட்டு தள்ளாடியபடி நடந்து வீட்டினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்..
தொடர்ந்து வரும்.. .
//"பொதுவாக உயரமான மனிதரை... மரம் மாதிரி வளர்ந்திருக்கிறாரே தவிர அறிவு வளரவில்லை..." என்பார்கள். ஆனால் மரத்தின் சிறப்பாம்சங்கள் மனிதனிடம் முழுமையாக இருந்துவிட்டால் அவன் உண்மையிலேயே உயர்ந்தவன்தான்.....//
ReplyDeleteஆமாம், உண்மை.
//தன்னை நாடி வருபவர்களுக்கு நிழல் தந்து, பறவைகளுக்கு புகலிடமாக இருந்து, சுயநலமில்லாமல், தனக்காக எப்போதும் வாழாமல், தான் வாழும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பூ, காய், கனி, என மரங்கள் பிறருக்கு உதவியாக இருப்பதுடன், தன் மடிவை சந்தித்தும் மரங்கள் மனிதனுக்கும், பிற உயிர்களுக்கும், எவ்வளவு உதவியாக இருந்து வாழ்ந்து காட்டுகிறது.//
நானும் இப்படித்தான் நினைப்பேன். இங்கு இலையுதிர் காலத்தில் இலைகள் வண்ணம் மாறி அழகு கொடுக்கும் அப்புறம் கீழே விழும். இலைகளை உதிர்க்கும் போது கூட கண்களுக்கு விருந்து அளித்து விழுகிறது என்று எழுதினேன்.
எத்தனை பறவைகள் இளைப்பாறி செல்கிறது. மரத்தில் வந்து தங்கும் பறவைகள் குஞ்சு பொரித்து அவைகளுக்கு இறக்கை முளைக்கும் வரை பாதுகாக்கிறது அப்புறம் அவை நம்மை பாதுகாக்க வேண்டும் என்று
பறவைகளும் நினைப்பது இல்லை. மனிதன் மட்டுமே நினைக்கிறான். என்பதும் உண்மை.
//யாருக்கும் சிரமம் கொடுக்காமல், என்னையும் சிரமபடுத்தாமல், என்னை அழைத்துக் கொண்டு போய்விடு..." என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருக்கையில், காற்று சில்லென்று அடிக்க, ஓரிரு மழைத் துளிகள் முகத்தில் வந்து விழுந்தது.//
அவர் நினைப்பு நடக்கும் என்று இறைவன் ஆசீர்வாதம் செய்தது போல மழைத்துளி அவர் முகத்தில் விழுந்ததோ!
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கதையை ரசித்துப் படித்து நல்லதொரு விமர்சனம தந்தமைக்கு மிக்க நன்றிகள்.
/நானும் இப்படித்தான் நினைப்பேன். இங்கு இலையுதிர் காலத்தில் இலைகள் வண்ணம் மாறி அழகு கொடுக்கும் அப்புறம் கீழே விழும். இலைகளை உதிர்க்கும் போது கூட கண்களுக்கு விருந்து அளித்து விழுகிறது என்று எழுதினேன்/
ஓ.. அப்படியா...! நீங்கள் எப்போதுமே இயற்கையின் நேசர். இயற்கையையும், பறவைகளையும், கண்ணாலம், கேமராவிலும் சிறை பிடித்து வைப்பவர். நானும் உங்களைப் போலவே சிறுவயதிலிருந்தே இயற்கை மரம் செடி, கொடிகள் என பார்த்து ரசிப்பதில் ஆர்வம் உடையவள். இங்கு வந்த பின் பால்கனியில் வளர்த்த செடி கோடிகளுடன் பேசுவேன். நாம் பேசுவது அதற்கு மிகவும் உற்சாகமாக இருப்பது போல் உணர்வேன்.
/தன்னை நாடி வருபவர்களுக்கு நிழல் தந்து, பறவைகளுக்கு புகலிடமாக இருந்து, சுயநலமில்லாமல், தனக்காக எப்போதும் வாழாமல், தான் வாழும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பூ, காய், கனி, என மரங்கள் பிறருக்கு உதவியாக இருப்பதுடன், தன் மடிவை சந்தித்தும் மரங்கள் மனிதனுக்கும், பிற உயிர்களுக்கும், எவ்வளவு உதவியாக இருந்து வாழ்ந்து காட்டுகிறது.///
ஆம்.. உண்மை.. பிறப்பிலிருந்தே மனிதனின் இயல்பை மாற்றியத்தவன் இறைவன்தானே.
/அவர் நினைப்பு நடக்கும் என்று இறைவன் ஆசீர்வாதம் செய்தது போல மழைத்துளி அவர் முகத்தில் விழுந்ததோ!/
நடப்பது என்றும் நடந்தேதானே தீரும். அதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை கூடவே மனிதனுக்கு தந்திருப்பவன் இறைவன்தான்.
தொடர்ந்து வந்து நல்ல கருத்துக்கள் தரும் தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//இது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கை சுவடுகள் மனக்கண் முன் வந்து போயின.. .. இன்றும்,.... அதிகம் பேசாது பிறர் மனம் கோணது, தனக்கென வாழாது, தமக்கென்று வாழ்ந்து மறைந்த மனைவியின் நினைவில், அவள் அன்பின் பிரிவில், மனது அழுததால் அவர் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது. //
ReplyDeleteவாழக்கை துணையை அதுவும் அன்பான துணையின் பிரிவு நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் கொட்டும்தான்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எல்லாமே இறைவனின் விளையாடல். நாம் அவன் கையிலிருக்கும் பொம்மைகள்.அவன் விளையாட்டில் கை தவறும் மண் பொம்மைகள். உங்களுக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சதாசிவத்தின் சிந்தனைகளாக கொடுத்திருக்கும் வரிகள் அபாரம். அருமையான சிந்தனை. மரம் போல வளர்ந்துவிட்டால் என்பது எவ்வளவு உயரிய சிந்தனை என்று தோன்றுகிறது. ஒருபக்கம் மரத்தின் பிரதிபலன் எதிர்பாரா அன்பை உணர்ந்து பிரமித்து, தானும் சுயநலம்தானோ என்றெண்ணி, மகன் செய்தது தவறில்லை என்ற முடிவுக்கு வந்து, கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் மனித பலவீனத்தால் மகன் ஏன் பாசம் இல்லாமல் இருக்கிறான் என்று யோசிப்பது இயல்பு. அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். குழந்தை கூட தான் நினைத்த டியதுக்கு செல்லத்தான் சுயநலத்துடன் நினைக்கிறது என்பது வித்தியாசமான கற்பனை.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கதையை படித்து தந்த கருத்துரைக்கு மிக்க நன்றி.
/ஒருபக்கம் மரத்தின் பிரதிபலன் எதிர்பாரா அன்பை உணர்ந்து பிரமித்து, தானும் சுயநலம்தானோ என்றெண்ணி, மகன் செய்தது தவறில்லை என்ற முடிவுக்கு வந்து, கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் மனித பலவீனத்தால் மகன் ஏன் பாசம் இல்லாமல் இருக்கிறான் என்று யோசிப்பது இயல்பு./
ஆம்..சரியாக சொல்லியுள்ளீர்கள். மனித மனங்கள் நிலையில்லாமல் தாவும் இயல்புடையது. ஒரு பக்கம் ஒருவரை வெறுக்கும் போது, வெறுக்கப்படுகிறவர்கள் எதிரில் வந்தால், அந்நேரம் அவர்களை மன்னித்து, உபசாரம்/உதவி செய்யும் இயல்பை பெற்றது.
உங்களது கருத்துகளுக்கும் பாராட்டுக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். தொடர்ந்து வருகை தந்து கதையினை தவறாது படித்து கருத்திடுஙதற்கும் தன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இங்கிருந்து கதையின் முடிவை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. சரியாய் இருக்கிறதா என்று நிறைவு பெறும்போது பார்க்கவேண்டும்!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கதையின் முடிவை யூகித்து விட்டீர்களா? இறுதியை நெருங்கும் போது நமக்கே ஒருவாறு மனதில் கதையின் முடிவு வந்து விடும். எத்தனை விதவிதமான கதைகளை படித்திருக்கிறீர்கள். உங்கள் யூகம் சரியானதாக இருக்கலாம். தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மழை வரும் போலிருந்தது. வானம் ஓர் மூலையில் ஒரு கறுத்த பெரிய யானையை போன்ற தோற்றத்துடன் கருமையாக காட்சியளித்தது.. ..கருமை அதிகம் படர்ந்த சூல் கொண்ட மேகங்கள் துரிதமாக ஆங்காங்கே பரவி விரிந்து அழகான நீலவானத்தை தன் மழை மேகங்களினால் மேலும் கறுப்பாக்கி விடும் லட்சியத்தை மிக விருப்பமான மனதுடன் நிறைவேற்றும் பணியில் செயல்பட ஆரம்பித்திருந்தன... //////
ReplyDeleteமழை, மரம் ,மேகம் என்று தமிழில் சிறப்பு வர்ணனைகளுடன்
பெரியவரின் சிந்தனை சோகம் வெளிப்படுகிறது.
பிள்ளைக்காக வாழாவிட்டால் போகிறது,
இறைவன் கொடுத்த உயிரையும் உடலையும்
பேணி
மற்றவர்களுக்கும் சேவை செய்யலாமே.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கதை குறித்த கருத்துக்களை அழகாக விமர்சனம் செய்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி
கதையை ரசித்து இயற்கையின் வர்ணனைகளையும் ரசித்து பாராட்டி இருப்பதற்கு என் தாழ்மையான நன்றிகள். உங்களின் ஊக்கம் நிறைந்த வார்த்தைகள் என் மனதுக்கு மகிழ்வை தருகிறது. தொடர்ந்து வருகை தந்து கதையினை தவறாது படித்து கருத்திடவும் வேண்டுகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அடுத்த பகுதியை ஊகிக்க முடிந்தாலும்
ReplyDeleteமகிழ்வாக
இருக்க மனம் விழைகிறது.
நன்றி கமலாமா.
அற்புதமான எண்ணங்களுக்குச் சொந்தக்காரர் நீங்கள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த பகுதியை நீங்களும் ஊகித்து விட்டீர்களா? நீங்கள் எவ்வளவு பெரிய பதிவர். எத்தனை கதைகளை தந்திருப்பீர்கள். உங்களால் ஊகிக்க இயலவில்லை என்றால்தான் ஆச்சரியம். தொடர்ந்து வருகை தந்து தரும் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும். மனமுவந்த நன்றிகள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சதாசிவத்தின் வாயிலாக உங்கள் சிந்தனைகள் எத்தனை ஆழமான சிந்தனைகளுக்கு நீங்கள் சொந்தக்காரர் என்பதைச் சொல்லுகிறது. பிரியமான மனைவியை இழந்து நிற்கும் பல ஆண்களும் நினைத்து நினைத்து வருந்துவதையும் பார்த்திருக்கேன். என்ன செய்ய முடியும்? ஆனால் சதாசிவம் அவர்கள் மருந்தைச் சாப்பிடாமல் இருப்பது சரியல்லவே! இதை யார் அவரிடம் எடுத்துச் சொல்லுவது? கதை எப்படிச் செல்லும் என்பதை யூகித்துக் கொண்டாலும் அது சரியா என அறியக் காத்திருக்கேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/பிரியமான மனைவியை இழந்து நிற்கும் பல ஆண்களும் நினைத்து நினைத்து வருந்துவதையும் பார்த்திருக்கேன். என்ன செய்ய முடியும்?/
எங்கள் சொந்தத்திலேயும் அத்தகைய மனமொடிந்த பிரிவுகளை சந்தித்துள்ளேன். இறைவனின் கட்டளைகளை யாரால் மாற்ற முடியும்.?சொல்லப்போனால், அந்த இடத்தில் இறைவன் இருப்பதை நாம் உணர்கிறோம்.
உங்கள் யூகமும் சரியானதாகத்தான் இருக்கும். எத்தனை சிறந்த எழுத்துக்களுக்கு (பதிவுகளுக்கு) உரிமையாளர் நீங்கள். தொடர்ந்து வந்து நல்ல கருத்துக்களை தருவதற்கும் பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இங்கேயும் ரோபோ வந்துவிட்டது. :(
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteஅடாடா... அதற்குள் இங்கும் ரோபோ வந்து விட்டதா...? இருப்பினும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பெரியவர் சதாசிவம் அன்புக்காக ஏங்குகிறார் புரிந்து கொள்ளும் உறவுகள் இல்லாத பாவப்பட்ட மனிதர்.
ReplyDeleteதொடர்கிறேன் மரத்தையும்...
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
/பெரியவர் சதாசிவம் அன்புக்காக ஏங்குகிறார் புரிந்து கொள்ளும் உறவுகள் இல்லாத பாவப்பட்ட மனிதர்./
ஆமாம்.. அதை புரிந்து கொள்ள அங்கு எவருமில்லை.. கதையை படித்து தந்த கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து வருகை தந்து கதையினை தவறாது படித்து கருத்திடுவதற்கும் மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஏக்கமான எண்ணங்கள்... விவரிப்பு அருமை...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/ஏக்கமான எண்ணங்கள்... விவரிப்பு அருமை.../
தொடர்ந்து வந்து கதையினை படித்து நல்ல கருத்துக்கள் இடுவதற்கும் ஊக்கம் நிறைந்த பாராட்டுக்கள் தருவதற்கும் மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிந்தனைகளைச் சொல்லியது சிறப்பு. அவர் எண்ணங்கள் அனைத்துமே அழகாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள். மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து வந்து கதையை படித்து தந்த கருத்துக்கள் கண்டும், மனமுவந்து தந்த பாராட்டிற்கும் மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து வருகை தந்து கதையினை தவறாது படித்து கருத்திடவும் வேண்டுகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.