வணக்கம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்.
அதென்னவோ நான் எழுதினால், எப்போதுமே எனக்கு நீ.. ண்... ட.. பதிவுகள், கதைகள், படங்கள் பல விதங்களுடன் எடுத்த சமையல் குறிப்பு பதிவுகள் என வந்து விடும். என்றேனும் ஒருநாள் நானும் சுருக்கி எழுதலாம் என நினைத்து எழுதியதை, வெளியிடலாம் என ப்ரிவியூவில் போய் பார்க்கும் போது அதை பார்த்ததுமே மனசு "அட.. சே.. ! என்ன கஞ்சத்தனம் உனக்கு.. இவ்வளவு சின்னதாகவா எழுதுவது.? " என இடிக்க ஆரம்பிக்கும். சரியென்று... மறுபடி வெளி வந்து ஒன்றிரண்டு வாக்கியங்களை உருவாக்கி, இல்லை, பதிவு சம்பந்தபட்ட வேறு ஏதேனும் சேர்த்து நிறைய உருவாக்கி விட்டோமோ எனஅச்சத்துடன் மறுபடி ப்ரிவியூவில் சென்று பார்க்கும் போது "இப்பத்தான் சூப்பர் .".. என அந்த மனசு குதூகலிக்கும். ஆனால் படிக்கும் போது உங்கள் அனைவருக்கும் "என்ன... இந்த சகோதரி எல்லா பதிவுமே மிதி வண்டி மாதிரி எழுதாமல், தொடர் வண்டி மாதிரி நீ.. ள.. மா..க எழுதுகிறார்களே.." எனத் தோன்றும் என்பதை என் உள் மனசு உணர வேண்டாமோ....... ? சரி.. அதுதான் போகட்டும்.... எல்லோரும் எழுதும் பதிவுகளிலும் என் கருத்துரை மட்டும் வித்தியாசமாக பெரியதாக இருப்பதையாவது இந்த மனசு புரிந்து கொண்டதா என்றால் அதுவுமில்லை. எனக்கு மட்டுந்தான் கருத்திட்டு விட்டு படிக்கும் போது நீளமாக இருப்பது தெரியும். அந்த நீ... ள.. மே.... என்னை அங்கிருந்து விரட்டி வெளிகொண்டு வந்து துரத்தி விடும்.
சரி. ... இந்த தொடர்கதை என்ற பதிவை (நானும். அவரும்) பாகமாக பிரித்து போடலாம் என நான் நினைத்தவுடன், ஏதேதோ சம்பவங்கள் நடந்து பதிவை போட விடவில்லை. சரி.. ஒருவழியாக அதற்கான நேரம் என்ற ஒன்று வந்ததும், சற்றே நெடுங்கதையாக எழுதியதை, பிரித்து (இதிலாவது ஒவ்வொன்றும் சிறிதாக காணக் கிடைக்குமே என அற்ப சந்தோஷம்... எனக்கு மட்டுமில்லை... படிப்பவர்களுக்கும் வருமே என்ற ஒரு சந்தோஷம்.. வந்தது. ) தினமும் ஒரு பதிவாக ஆறு நாட்கள் தொடர்ந்து போட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலும் எழுதி, ஆங்காங்கே சென்று பிறரின் பதிவுகளை படித்து, அதற்கும் கருத்துக்கள் தந்து இதெல்லாம் இந்த கைப்பேசிக்குள் என்னால் முடியுமா...?" என நான் எப்போதும் போல் தயங்க, மனசு "உன்னால் முடியும் "என்ற தன்னம்பிக்கை ஊட்டி வெளியிட வைத்தது.
ஆனால், நாலாவது பதிவிலே ஆட்டம் ஆரம்பித்து விட்டது. வழக்கமாக வரும் தலை, பல் வலிதானே என சமாளித்து வரும் போது, ஜுரமும் என் வலிகளுடன் தன் தலையை பிடிவாதமாக காட்ட, ஐந்தாவதில் கொஞ்சம் திண்டாட்டந்தான். தொடர் கதையையும் உடனுக்குடன் தந்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். நாள் விட்டுப் போனால் படிப்பவர்களுக்கு நினைவிருக்க வேண்டாமா? என்பது என் எண்ணம் வேறு.....! அதனால் எப்படியோ ஆறாவதையும் அன்றே வெளியிட்டு விட்டேன்.
அன்று இரவு முழுவதும் எனக்கு நல்ல ஜுரம். கொஞ்சம் கூட தூங்கவேயில்லை. அன்று இரவிலிருந்து மறுநாள் காலை, மதியம் என ஆயுரவேத மருந்து சாப்பிட்டதில், மறுநாள் மாலைக்கு மேல் கொஞ்சம் கடுப்பாகி அது என்னை விட்டு விலகியது. உடம்பு அதன் வலியில் கண்மூடி படுக்க மட்டுந்தான் அனுமதி கேட்ட வண்ணம் இருந்தது / இப்பவும் இருக்கிறது. அதனால் அன்று என்னால் அனைவருக்கும் உடன் பதிலளிக்க இயலவில்லை. அனைவரும் என்னை மன்னிக்கவும். அதனால்தான் பதில் கருத்து தர தாமதமாகும் என்பதை மட்டும் பதிவில் குறிப்பிட்டேன்.
இப்போதெல்லாம், மனசாட்சிக்கு பயப்படுகிறோமோ இல்லையோ, லேசான ஜுரம் வந்தாலே பயப்படுகிறோம்...அது வேறு.. ஜுரத்தை விட உடம்பை பலகீனமாக்குகிறது. (எங்களை இந்த மாதிரி சாதாரண ஜுரத்திற்கு பிறந்த வீட்டிலிருக்கும் போது சிறுவயதிலிருந்தே ஆங்கில டாக்டரிடம் அழைத்துச் சென்றது கிடையாது. காலை வெறும் வயிற்றில் இஞ்சி சாறு எடுத்து,அதில் லிங்க செந்தூரத்தை அளவோடு கலந்து கொடுப்பார்கள். (எங்கள் மாமாதாத்தா நல்ல நாட்டு வைத்தியர். ,அவர் தயாரித்து தரும் நாட்டு மருந்துகள், தலைக்கு தேய்த்து குளிக்கும் மூலிகை எண்ணெய்கள் என எங்கள் வீட்டில் நிரந்தரமாக இருக்கும்.
எந்த ஒரு உபாதைகளும் எங்களில் யாரையாவது கிட்ட வந்து பயமுறுத்தினால், கடிதம் எழுதி துவரங்குறிச்சியில் இருந்த (அந்தக் காலத்தில் கடிதந்தானே. . .) அவரை எங்கள் வீட்டுக்கு வரவழைத்து விடுவோம்...அவரும் வந்து உடனிருந்து நாட்டு மருந்துகள் வாங்கி தயாரித்து தந்து எங்களை நலமாக்கி விட்டுத்தான் பிறகு செல்வார்..) மதியம், இரவு உணவு புழுங்கல் அரிசி கஞ்சிதான். (அப்போதுதான் விதவிதமாக சாப்பிட வேண்டுமென நாக்கு பரபரக்கும். எப்போதும் சாப்பிடச் சொல்லி, நாம் வேண்டாமென மறுத்த பிடிக்காத உணவை கூடவாவது தர மாட்டார்களா என மனசு ஏங்கும். ) இரவு அவர் ஆலோசனைபடி மிளகு, சுக்கு, திப்பிலி, நறுக்குமூலம், நிலவேம்பு, அக்கரா, சித்தரத்தை என்ற மருத்துகளை உரலில் இடித்து பொடி செய்த பின் அதைக் கொண்டு தயாரிக்கும் கஷாயம் என ஜுரம் இரண்டு நாட்களில் சொல்லாமல் வந்தது போல், சொல்லாமல் ஓடியும் விடும். மழை நாட்களில் கபத்துடன் கூடிய ஜுரம் வந்தால் ஆடாதொடை இலை, துளசி இலைகளும் அந்த கஷாயத்தில் ஐக்கியமாகும்.. . (எப்போதாவது சில சமயங்களில் எங்களுக்கே போக்கு காட்டும் சில விடாத ஜுரத்திற்கு ஆங்கில மருந்துகளை நாடி குணப்படுத்தி கொண்டுள்ளோம்.. ) ஒரு நாள் அடிக்கும் ஜுரமே ஆறுமாத பலத்தை அபகரித்து கொண்டு விடும் என எங்கள் பாட்டி சொல்வார்கள்.
திருமணமான பிறகு வாழ்ந்த காலத்தில் நடுவிலெல்லாம் இந்தமாதிரி நீடிக்கும்படியான காய்ச்சல் எங்களுக்கும் சரி.. எங்கள் குழந்தைகளுக்கும் சரி வந்தால், சமயத்தில் ஆங்கில மருத்துவரிடம் சென்றிருக்கிறோம். பின் அவர்கள் தரும் மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடுவோம். சரியாகி விடும். குழந்தைகளுக்கு பொதுவாக ஊசியெல்லாம் போட மாட்டார்கள். பெரியவர்களுக்கு காய்ச்சலின் தீவிரத்தை பொறுத்து ஊசி உண்டு. ஊசிக்கும் அடங்காவிடில் டெஸ்ட் உண்டு. மறுபடியும் டெஸ்டுக்கு ஏற்ற மருந்து, ஊசி என உண்டு இல்லையென ஆக்கிய பின் விடாக்கண்டனான ஜுரம் வேறு வழியின்றி ஓடி விடும். இப்போதுதான் இந்த பயங்கள் வந்திருக்கின்றது.
அப்புறம் அந்த காலத்தில் வெறும் காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவரிடம் செல்லும் போது நிறைய பேர் என்ன சாப்பிட வேண்டுமென எப்போதும் விடாப்பிடியாக ஜுரததில் சாப்பிடும் உணவை பற்றிய கருத்தை கேட்பார்கள். அவரும், காஃபி, கஞ்சி, ரொட்டி, இட்லி, வெந்நீர் என்று சொல்லி சலித்துப் போவார். (இவர்கள் கொடுக்கும் வைத்திய தட்சணையான ஐந்து ரூபாய்க்கு அவர் ( மருத்துவர்) ஜுர அளவை கணக்கிட்டு, மருந்துகள் எழுதி கொடுத்து, "பயப்பட வேண்டாம் .. இரண்டு நாளில் சரியாகி விடும்.. . .." என்ற தைரியமளிக்கும பேச்சுக்களைத் தவிரஅவரை நிறைய பேச வைக்கும் எண்ணம் இவர்களுக்கும் இருக்குமோ என்னவோ?) குடும்ப மருத்துவராக ஆகி விட்டால், அவரே இவரிடம் தொடர்ந்து வரும் இவர்களைப் பற்றிய குடும்ப விஷயங்களை பற்றி கேட்டு தெரிந்து அளவளாவிய பின்தான் நிம்மதியாவாரோ என்னவோ அதுவும் தெரியவில்லை. எப்படியோ நோயாளிகளுக்கும், அவர்கள் அடிக்கடிச் செல்லும் மருத்துவருக்குமிடையில் மனிதநேய பண்(உடன்) பாடு இருந்தால் சரிதான்....!
மருத்துவர் கடைசியாக தான் பரிந்துரைத்த மாத்திரைகளுடன் அந்த மிக்ஸரை கலந்து தரும்படி தன்னுடைய உதவியாளரை( கம்பெளண்டர் ) சொல்லும் போது இவர்கள் (நோயாளிகள்) லாலாகடை மிக்ஸரை கற்பனையில் நினைத்துக் கொண்டு,, அத்தனை ஜுரத்திலும், நாக்கின் சுவையை கூட்ட உதவிய மருத்துவரை வாழ்த்துவார்கள். இது குறித்து அந்த கால திரைப்படங்களிலும் சரி,, பத்திரிக்கைகளிலும் நகைச்சுவை பகுதிகளாக வந்திருக்கிறது. இப்போதெல்லாம் அந்த மாதிரி மருந்தெல்லாம் இருக்கிறதா என்று கூட தெரியாது.
இந்த தடவை அனுபவத்தில் மனதிலுள்ளதை ஒரு பதிவாக எழுத உதவிய அந்த ஜுரத்திற்கும் அவசியம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். (கொஞ்சமாவது சின்ன பதிவாக வந்திருக்கின்றதா ?) படிக்கும் அன்புள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.
பி. கு. இப்போது பூரண நலமாகி விட்டேன். உடல்நலம் பாதித்த மறுநாளே எழுதி வைத்த பதிவு இது. தொடர்கதை இறுதிக்கு என்னிடமிருந்து பதில் கருத்துகள் வரவில்லயே என நீங்கள் எதிர்பார்த்திருக்கும் போது வந்திருக்க வேண்டியது. "வழக்கப்படி நீ.. ள. ம்.... மற்றும் தாமதம் என்றேன் நான். நீ.. ள. மா? இன்னும் எனக்குள்ளும் நிறைய விஷயங்கள் இதைப்பற்றி உள்ளது. அதை உனக்கு நினைவுபடுத்தி எழுத வைக்கலாம் என நினைத்தேன். சரி... போ.... எப்படியோ உருப்படியா எழுதியது வெளியாகிறதே என்றது மனசு." 😁😁😁😀... நன்றி. 🙏.
நல்ல விரிவான பதிவு, விரிவான பின்னூட்டம் எல்லாம் நல்லது தானே! ஏன் சலித்து கொள்ள வேண்டும். உங்கள் திறமையான எழுத்தை எல்லோரும் விரும்புவார்கள்.
ReplyDeleteஉங்கள் அனுபவங்கள், மருத்துவ குறிப்புகள், சமையல் குறிப்புகள் எல்லாமே நன்றாக இருக்கிறது.
இப்போது உடல் நிலை பூரண நலமாகி விட்டது அறிந்து மகிழ்ச்சி.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை குறித்த தங்கள் ஆலோசனை மகிழ்வை தந்தது. எனக்குத்தான் சற்று பெரிதாக எழுதுகிறோமோ என்ற சஞ்சலம். தங்கள் அன்பான பதில் கண்டு அச்சந்தேகம் நீங்கி விட்டது. தற்சமயம் உடல்நிலை பூரண குணமடைந்து விட்டது. உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//மனசு "உன்னால் முடியும் "என்ற தன்னம்பிக்கை ஊட்டி வெளியிட வைத்தது. //
ReplyDeleteமனசு நல்ல தன்னம்பிக்கை தருகிறது. அது இல்லியென்றால்தான் வருத்தம்.
உடல் நிலை ஆட்டம் கண்டாலும் மனதிடத்தால் பதிவை நிறைவு செய்தமைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
//மறுநாள் மாலைக்கு மேல் கொஞ்சம் கடுப்பாகி அது என்னை விட்டு விலகியது//
எப்படியோ ஆயுர்வேத மருத்து சாப்பிட்டு அதை ஓட வைத்து விட்டீர்கள்.
//(எங்கள் மாமாதாத்தா நல்ல நாட்டு வைத்தியர். ,அவர் தயாரித்து தரும் நாட்டு மருந்துகள், தலைக்கு தேய்த்து குளிக்கும் மூலிகை எண்ணெய்கள் என எங்கள் வீட்டில் நிரந்தரமாக இருக்கும்.//
வீட்டில் இப்படி கண்கண்ட மூலீகை வைத்தியம் இருக்கும் போது என்ன கவலை? நோய்களை விரட்டி விடலாம். மாமாவும், தாத்தாவும் வைத்தியர்களா? மகிழ்ச்சி.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம்.. உடல் அவ்வப்போது படுத்தினாலும், மனதிடத்தால்தான் வழக்கம் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்.
நான் கூடியவரை ஆயுர்வேத மருந்துகள்தான் எடுத்துக் கொள்வேன்..ஜீரம் என படுக்க மாட்டேன்.பகலில் படுத்தால் இரவில் தூக்கம் வரமாட்டேன் என்கிறது. முடிந்த வரை வேலை செய்வதிலேயே அதுவும் போய் விடும்.
/வீட்டில் இப்படி கண்கண்ட மூலீகை வைத்தியம் இருக்கும் போது என்ன கவலை? நோய்களை விரட்டி விடலாம். மாமாவும், தாத்தாவும் வைத்தியர்களா? மகிழ்ச்சி./
நான் எங்கள் வீட்டில் எனச் சொன்னது அம்மா வீட்டில். அவர் எங்கள் அம்மாவுக்கு சொந்த மாமா.. எனக்கு தாத்தாதானே .. நாங்களும் அவரை மாமாதாத்தா என்றுதான் அழைப்போம். எனக்கு 15,16 வயதிலியே அவர் தவறி விட்டார். அதன் பின்பு நாங்களும் ஆங்கில மருத்துவத்தை அடிக்கடி நாடியுள்ளோம். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்ஸர் மருந்து கண்ணாடி பாட்டிலில் எல்லா வியாதிக்கும் கொடுக்கபடும். ஒரு முறை குடித்து இருக்கிறேன் அது சர்பத் என்று நினைத்துக் கொண்டு மாமாவீட்டில் அதன் மணம், நெடி கூட மறக்க முடியாது.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/மிக்ஸர் மருந்து கண்ணாடி பாட்டிலில் எல்லா வியாதிக்கும் கொடுக்கபடும்/
ஆமாம்.. கண்ணாடி பாட்டிலில்தான் தருவார்கள். இரண்டாவது முறை மருத்துமனைக்கு வரும் போதே அந்த கண்ணாடி பாட்டிலை கொண்டு வரச் சொல்வார்கள்.அதன் மணம் இன்னமும் நாவில் உள்ளது. தாங்கள் அன்புடன் வந்து நல்லதொரு கருத்துக்களை தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் கமலா,
ReplyDeleteநல்ல உடல் நலம் பெறுங்கள்.
அப்போதெல்லாம் மருத்துவரை நாடுவது இரண்டு மூன்று நாட்கள்
தொடர்ந்து ஜுரம் இருந்தால் தான்.
கஷாயம் எப்போதும் ரெடி. இருமலுக்கு சித்தரத்தை, மற்றபடி சுக்குக்
கஷாயம்.
அந்தக் கசப்பில் காய்ச்சல் காணாமல் போய் விடும்.
உங்கள் பதிவுகளும், பின்னூட்டங்களும்
சுவாரஸ்யமானவை.
நல்ல எழுத்துக்கு உரிமையாளர்.
அதனால் உங்களை யாரும் தவறாக நினைக்க வாய்ப்பே இல்லை.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/அப்போதெல்லாம் மருத்துவரை நாடுவது இரண்டு மூன்று நாட்கள்
தொடர்ந்து ஜுரம் இருந்தால் தான்./
உண்மை... ஆரம்ப கால ஜுரங்களை நம் வீட்டு மருந்துக்களே குணப்படுத்தி விடும். அதிலும் ஆடாதொடையின் கசப்பு ஜுரத்தை உடனே போக்கடித்து விடும். உங்களுடைய கனிவான பதில்கள் ஆறுதலை தருகின்றன. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காய்ச்சல், வயிற்றுப் போக்கு எல்லாவற்றிற்கும் இனிப்பு மிக்சர் ஒரு சிவப்புக் கலரில்
ReplyDeleteஇருக்கும்.
அது நாலு வேளையில் குணப்படுத்திவிடும்.
உங்கள் வீட்டிலெயே மருத்துவர் இருந்தது மிக நன்மை. ஆரோக்கியமான
வாழ்வுக்கு அஸ்திவாரம் ஆயுர் வேத மருந்துகளே.
முன்பு ஸ்ரீஹரி என்னும் நல்ல மருத்துவர்
சொன்ன மருந்துகளை
அம்மா பின்பற்றுவார்.
பதிவுகளும் பின்னூட்டங்களும் இருக்கவே இருக்கு.
மெல்ல வாருங்கள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/காய்ச்சல், வயிற்றுப் போக்கு எல்லாவற்றிற்கும் இனிப்பு மிக்சர் ஒரு சிவப்புக் கலரில்
இருக்கும்./
ஆம். எங்கள் பிறந்த வீட்டில் இருக்கும் போதுதான் இந்த அனுபவம் எனக்கு. வயிறு சரியில்லாததற்கு மோர் குழம்பு மாதிரி ஒரு மிக்ஸர் மருந்து தருவார்கள். திருமணமாகி சென்னை வந்த பின் கிடைக்கவில்லை.
நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆயுர் வேத மருந்துகள் சிறப்பானவைத்தான்.. அந்த காலத்தில் உங்கள் வீட்டிலும் ஆயுர்வேத முறைகள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
பதிவுகளுக்கு வந்து படித்து கருத்திட்டு போனாலே எனக்கு மனதிற்கு நிம்மதியாக உள்ளது. என் பதிவுகளுக்கு தொடர்ந்து வரும் உங்கள் ஆதரவுகளும் சந்தோஷத்தை தருகிறது. மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான மருத்துவக்குறிப்புகள். நீங்கள் விரிவான கருத்துரைகள் தருவது போல் பதிவுகளும் விரிவாக இருக்கின்றன. அதனால் என்ன? தப்பெல்லாம் இல்லை. உங்கள் வீட்டிலேயே மருத்துவர் இருந்தது நல்லதே! நாங்கல்லாம் குழந்தைகளாக இருந்தப்போ மதுரை மேலமாசி வீதியில் இருந்த மருத்துவர் மலையாளி ஒருவரிடம் போவோம். அவர் பெயர் என்னனு தெரியாது. மலையாளி என்றே அழைப்பார்கள். கடைசியாக எனக்கு ஏழெட்டு வயசு இருக்கையில் ஜூரம் வந்து அளவு கடந்து போனதில் ஜன்னி கண்டுவிட அவர் கையை விரித்துவிட்டாராம் பின்னர் என் பெரியப்பா பையர் (அண்ணா) அவங்க குடும்ப ஆங்கில மருத்துவரை அழைத்து வந்து வைத்தியம் பார்த்து என்னைப் பிழைக்க வைத்ததாய்ச் சொல்லுவார்கள். அதன் பின்னர் ஆங்கில மருத்துவம் தான்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் ஊக்கம் நிறைந்த வார்த்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சி.
/கடைசியாக எனக்கு ஏழெட்டு வயசு இருக்கையில் ஜூரம் வந்து அளவு கடந்து போனதில் ஜன்னி கண்டுவிட அவர் கையை விரித்துவிட்டாராம் பின்னர் என் பெரியப்பா பையர் (அண்ணா) அவங்க குடும்ப ஆங்கில மருத்துவரை அழைத்து வந்து வைத்தியம் பார்த்து என்னைப் பிழைக்க வைத்ததாய்ச் சொல்லுவார்கள். அதன் பின்னர் ஆங்கில மருத்துவம் தான்7
அடாடா... எவ்வளவு கடினமான கால கட்டங்கள் பாருங்கள்.. உங்கள் அம்மா, அப்பாவுக்கு அந்த நேரம் எவ்வளவு பதட்டமாக இருந்திருக்கும்... இந்த மாதிரி சூழ்நிலைகளும் எப்படியோ வந்து விடுகின்றன. ஒரு மருத்துவம் கைவிடும் நிலையில் மற்றொரு மருத்துவம் பலன் தருகிறது. அப்போது என்றில்லை.. இப்போதும் கூட அந்த நிலைமைகள் வருகின்றன. மொத்தத்தில் நம் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.அவ்வாறிருக்க ஆண்டவனின் அருளும் நம்முடன் பக்கபலமாக துணையிருக்க வேண்டும். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் உடல் நலம் சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் தான் நீங்க பதிவுகள் பக்கம் வரலைனு நினைத்தேன். உடல் நலம் முக்கியம். அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி நீங்கள் உடல் நலமில்லாமல் படுக்கிறீர்கள். உடலை நன்றாய்க் கவனித்துக் கொள்ளுங்கள். முன்னெல்லாம் எனக்கும் இப்படித் தான் அடிக்கடி ஜூரம் வரும். இப்போதெல்லாம் பரவாயில்லை. சீதோஷ்ணமும் காரணமாக இருக்கலாம். சிலருக்கு "பெண்"களூர் சீதோஷ்ணம் ஒத்துக்காது. அதனாலோ என்னமோ! நன்றாய்க் கவனித்துக்கொண்டு முழு ஓய்வு எடுத்துக் கொண்டு வாருங்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் கால்வலி எப்படி உள்ளது? காலையில் எ.பியில் இன்னமும் குணமாகவில்லை என்றதும் கவலையாய் இருந்தது.அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொண்டு வேலைகளை கவனியுங்கள். விரைவில் நல்லபடியாக குணமடைய இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எனக்கு வலைத்தளம் வந்தால்தான் மனது சந்தோஷமாக நன்றாக
உள்ளது. அப்படியே பழகி விட்டது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், என்னால் வர முடியாத நாட்களில் கூட பிறகு வரும் போது சொல்லி விடுவேன்.
இது போல் எப்போதாவதுதான் ஜுரம் வரும். அதிகமாக ஜுரமென்று வந்ததில்லை. இல்லை, வெளியில் எங்காவது செல்லும் போது எப்போதாவது சறுக்கி கீழே விழுந்து காலில் அடிபட்டுக் கொள்வேன். மற்றபடி இந்த சீதோஷ்ணம் எனக்கு எப்போதுமே ஒத்து வராமல் போனதில்லை. நாங்கள் இங்கு வந்து 13 வருடங்கள ஆகி விட்டது. அப்போது வந்த புதிதில் இருந்த குளிர் கூட இப்போதில்லை.
உங்கள் அன்பான கருத்துகள் மகிழ்ச்சியை தருகின்றன. உங்கள் ஆதரவு தரும் கருத்துக்களை தொடர்ந்து தர வேண்டுகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீளமாக எழுதுவதை பார்த்து நீங்கள் குற்ற உணர்ச்சி கொள்கிறீர்கள். நானும்தான். நான் அவ்வளவு படித்து உள்வாங்காமல் கருத்திட்டுச் செல்கிறேனோ என்கிற குற்ற உணர்ச்சியை உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு கொடுக்கும்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/நான் அவ்வளவு படித்து உள்வாங்காமல் கருத்திட்டுச் செல்கிறேனோ என்கிற குற்ற உணர்ச்சியை உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு கொடுக்கும்./
ஹா.ஹா..ஹா. அடாடா ... என்னால் உங்களுக்கும் சிரமந்தானா? ஆனால் உண்மையை மனம் திறந்து ஒத்துக் கொண்ட உங்களைப் பாராட்டுகிறேன்... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. நீங்கள் எப்போதும் குற்ற உணர்ச்சிக்கு இடம் கொடாது இயல்பாக இருங்கள். இதிலென்ன இருக்கிறது.. உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தற்போது முற்றிலும் குணமாகி விட்டதா> எனக்கும் பல்வலி படுத்துகிறது. ஒன்றும் செய்வதற்கில்லை. இப்போதைக்கு மருத்துவரிடம் போகப்போவதில்லை!
ReplyDeleteமருத்துவரிடம் போக வேண்டாம். கிராம்பு தைலம் பஞ்சில் நனைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
DeleteJayakumar
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இப்போது முற்றிலும் குணமாகி விட்டது. ஆனால் ஜுரம் வந்த அன்று உடம்பு வலி, தலைவலியென சற்று பீதியை கிளப்பி விட்டது. இப்போதுள்ள நிலையில் வெளியில் சென்று மருத்துவரிடம் செல்லவே பயமாக இருக்கிறது.
உங்கள் பல்வலிக்கும் சகோதரர் ஜெயகுமார் சந்திரசேகரன் அவர்கள் சொல்வது போல், கிராம்பு தைலம் பயன்படுத்துங்கள். நானும் எப்போதும் அதைதான் பயன்படுத்துகிறேன். கொஞ்சம் நல்லெண்ணெய் எடுத்து வலிக்கும் பற்களில் விட்டு வைத்திருந்து கொப்பளித்தாலும் பல்வலி மட்டுப்படுகிறது. முயற்சித்து பாருங்கள். அன்பான கருத்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எனக்குத் தெரிந்து நீளமான பின்னூட்டங்கள் கொடுப்பதில் முதலில் எனக்கு நினைவுக்கு வருபவர் மஞ்சுபாஷிணி சம்பத்குமார். அப்புறம் நீங்கள். அப்புறம் கீதா ரெங்கன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் மனம் திறந்த கருத்துக்கு நன்றி சகோதரரே. இனி நானும் உங்களனைவரைப் போலவே இரண்டு மூன்றாக பின்னூட்டங்கள் கொடுக்க முயற்சிக்கிறேன்.. சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் அவ்விதம் கொடுத்து பார்த்துள்ளேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மருத்துவ தகவல்கள் அருமை சகோ.
ReplyDeleteமனதில் பட்டதை தொடர்ந்து எழுதுங்கள்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவில் குறித்த தகவல்கள் நன்று என பாராட்டியமைக்கு நன்றிகள். மனதில் பட்டதை எழுதுங்கள் என ஊக்கமும், உற்சாகமும் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சொல்ல வேண்டியதை முழுமையாக சொல்ல வேண்டுமென்றால், பதிவு நீண்டதாகவே அமையும்... அதுவே சரி... தொடருங்கள்...
ReplyDeleteஉடல்நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்...
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம் சொல்ல வேண்டியவற்றை சொல்லிச் செல்லும் போது சுவாரஸ்யம் காரணமாக பதிவு நீண்டதாக அமைந்து விடுகிறது. ஆனாலும் அதுவே சரி.. என நீங்கள் உறக்கம் தந்து கருத்து தெரிவித்திருப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள். என் உடல்நலம் சரியாகி விட்டது. உங்கள் அன்பான அக்கறையுடன் கடிய கருத்துக்கு மிக்க நன்றி சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருந்துகிறேன். "ஊக்கம் தந்து கருத்து தெரிவித்திருப்பதற்கு" என்பதற்கு பதில் தவறுதலாக எழுத்துப்பிழைகள் வந்து விட்டன. திருத்திப் படிக்கவும். வருந்துகிறேன்.
Deleteசரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள், இப்போதெல்லாம் இரண்டு தும்மல், லேசான இருமல் இவையே பயமூட்டுகின்றன. சென்ற வாரத்தில் வயிறு அப்செட் ஆனபோது கொஞ்சம் பயமாகி விட்டது.
ReplyDeleteஉடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பின்னூட்டங்களில் பதிவின் ஒவ்வொரு அம்சத்தையும் கவனித்து விமர்சிப்பீர்கள். அது நல்ல விஷயம்தானே?
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம் இப்போது என்ன உடல் உபாதைகள் வந்தாலும் சற்று பயமாகத்தான் உள்ளது. முதலில் வந்ததை சரி செய்ய மருத்துமனைக்கு செல்லவே அச்சம் வருகிறது. உங்கள் உடம்பையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
என் உடல்நலம் இப்போது சரியாகி விட்டது.
/உங்கள் பின்னூட்டங்களில் பதிவின் ஒவ்வொரு அம்சத்தையும் கவனித்து விமர்சிப்பீர்கள். அது நல்ல விஷயம்தானே/
உங்களின் ஊக்கம் நிறைந்த தட்டிக் கொடுக்கும் பதிலில் மகிழ்வடைந்தேன். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாசகர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.
ReplyDelete1. தமிழ் தட்டச்சு தெரிந்து எண்ணங்களுக்கேற்ப நேரே தட்டச்சு செய்து வெளியிடுபவர்கள்.
2. கூகிள் transliterate வழி உருவாக்கி காபி பேஸ்ட் செய்பவர்கள். ( நான் இந்த வகை)
3. மொபைலில் செல்லினம் போன்ற ஆப் உபயோகித்து சொல்ல வேண்டியதை தட்டச்சு செய்து வெளியிடுபவர்கள்.
இவர்களில் முதலாமவர் மட்டும் எப்போதும் விரிவாகவே எழுதுவார். சுருங்க சொல்ல தெரியாது. சில சமயங்களில் தலைப்புக்கு பொருந்தாத விஷயங்களும் உட்படும்.
லிங்க செந்தூரம் என்ற போது எனக்கு என்னுடைய அம்மா காய்ச்சல் வந்தால் லிங்க கட்டு பூரக்கட்டு என்று இரண்டையும் தேனில் உரைத்து கொடுத்தது நினைவுக்கு வருகிறது.
லிங்க செந்தூரம் என்பது mercury chloride என்று சுஜாதா எழுதிய ரா வி ரா என்ற சிறுகதையின் மூலம் தெரிந்து கொண்டேன்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நீங்கள் என் தளம் வந்து அருமையான, விரிவான கருத்துக்களை தந்திருப்பதற்கு என் நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியையும், பணிவான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் முதலில், டெஸ்க்டாப் கணினி தான் உபயோகித்தேன். சில காரணங்களால் அதை தொடர்ந்து உபயோகிக்க இயலாமல் போய் விட்டது. இப்போது மொபைலில் பதிவு எழுதவும், படித்த பதிவுகளுக்கு கருத்துரை எழுதவும், என் மகன் சொல்லித்தந்து நான்கைந்து வருடங்களாக இதைத்தான் பயன்படுத்துகிறேன்.
எங்கள மாமாதாத்தா ஊரிலிருந்து அவர் வரும் போதே இந்த லிங்க செந்தூரம் போன்ற பற்பங்களை தயார் செய்து கொண்டு வந்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன். மூலிகை எண்ணெய்கள் மட்டும் எங்கள் வீட்டில் வந்த பின் காய்ச்சித் தருவார். அதனால் அவர் செந்தூரம் அப்படியே எங்கள் வீட்டிற்கு வந்த பின் தயாரித்திருந்தாலும் பார்த்ததில்லை. பள்ளி சென்று விடுவோம். இரண்டாவதாக அப்போது நாங்கள் சின்ன வயது என்பதினால் பெரியவர்களின் பேச்சுக்களில் கலந்து கொள்ள அனுமதித்ததில்லை. தாங்கள் கூறிய சுஜாதா எழுதிய கதையை நானும் கண்டிப்பாக படிக்கறேன். உங்கள் விரிவான கருத்துக்கும் ஆலோசனைகளுக்கும் என் அன்பான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இங்கு வருவதற்குத் தாமதம் ஆகி விட்டது..
ReplyDeleteஉடல் நலம் சரியில்லாமல் இருந்து தற்போது குணம் அடைந்திருக்கின்றீர்கள்.,
அதுவே மகிழ்ச்சி.. ஆறுதல்..
எல்லாவற்றுக்கும் இறைவனும் இயற்கையுமே துணை...
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தாமதம் என்றில்லை சகோதரரே.. தங்கள் பணிகளுக்கிடையே நீங்கள் என் தளம் வந்ததே என்னை பெருமையடையச் செய்கிறது.
என் உடல் நலம் தற்சமயம் பூரண குணம். ஆமாம். எல்லாவற்றிற்கும் காரணம் இறைவன் நம் அனைவருக்கும் துணையாய் இருப்பதுதான். உங்கள் அனைவரின் அன்பான வார்த்தைகளும். நலம் விசாரிப்பும் என் உடல் நலத்தை சீர் செய்கிறது. கனிவான ஆறுதல் வார்த்தைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மூலிகைகளின் பயன்கள் சொல்வதற்கு அரியவை.. நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கின்றீர்கள்.. சிறப்பான பதிவு..
ReplyDeleteஇயற்கைக்கு மாற்று எதுவும் இல்லை..
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவின் விஷயங்கள் சிறப்பாக உள்ளதென கூறியமை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
இயற்கை மருந்துகள் நம்மை பொறுமையாக நலம் பெறச் செய்பவை. என்னுடைய அந்த காலத்திய நினைவுகளில் தங்கியிருப்பவை பதிவில் வெளிவந்து விட்டன. இப்போதும் நான் முடிந்த வரை ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொள்கிறேன். பின் ஆண்டவன் சித்தம். உங்கள் அன்பான நல்ல கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மருத்துவ முறைகள் - குறிப்பாக நாட்டு வைத்தியம் பற்றிய தகவல்கள் நன்று. அப்போதெல்லாம் பல வீடுகளில் இப்படியான நாட்டு/வீட்டு வைத்தியம் தானே. இப்போது மீண்டும் நாட்டு மருந்துகளுக்கான வரவேற்பு கிடைக்க ஆரம்பித்திருப்பது போல தெரிகிறது.
ReplyDeleteநீண்ட பதிவு நல்லதே. சொல்ல வரும் விஷயங்களைச் சொல்வது நல்லது தானே.
உடல் நலம் முக்கியம். ஜாக்கிரதையாக இருங்கள்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம்.. நாட்டு மருந்துதான் முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு உபயோகப்படுத்தி பலன் கண்டு வந்தோம். இப்போது மறுபடியும் இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு வரவேற்பு பலமாகி இருப்பதற்கு மகிழ்ச்சி. இது கொஞ்சம் தாமதமாக, ஆனால், நல்ல பலனை தரும்.
நீண்ட பதிவாக எழுதுவதற்கு தங்களிடமிருந்து வரவேற்பு கிடைத்திருப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.உங்கள் ஆலோசனைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
தற்சமயம் உடல் நிலை நல்லபடியாக சீராகி விட்டது. உங்கள் அன்பான அக்கறையான கருத்துகளுக்கு என் மனமுவந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
ReplyDeleteஉங்கள் ஊகம் சரிதான், மூன்று நாட்கள் வெளியூர் பயணம். தகவல் சொல்லி சென்று இருக்கலாம். நலமாக இருக்கிறேன்.
உங்கள் அக்கறையான உரிமையான கேள்வியால் மனதுக்கு மகிழ்ச்சிதான்.
உங்கள் பிரார்த்தனைக்கும் விசாரிப்புக்கும் நன்றி நன்றி.
வணக்கம் சகோதரி
Deleteதாங்கள் வெளியூர் பயணமாக இருந்ததை வந்து சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நலமாக இருப்பதற்கும் மகிழ்ச்சி. உங்களை சில நாட்கள் எங்கும் காணவில்லையே என்ற கவலையால்தான் தங்கள் தளம் வந்து விசாரித்தேன். உடனே வந்து பதில் தந்தமை கண்டு ஆறுதலடைந்தேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.