Thursday, May 3, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை


 கதைகள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி எழுதிய கதைகள் மற்றவர்களையும் ஈர்க்க வேண்டுமென்றுதான் பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்ய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த கதைகள் நான் என் இளவயதில் எழுதியவை. இவை அந்தளவிற்கு படிப்பவரின் மனதை ஈர்க்குமா என்று தெரியாததால் வாளாவிருந்து விட்டேன்  அதன் பின் குடும்பம் என்ற சூழ் நிலையினால் எழுத்தார்வத்தில் எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை. தற்போது வலைத்தள உறவுகளின்   ஊக்குவிப்பால் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இன்னமும் நிறைய எழுத வேண்டுமென்ற ஆர்வத்தை நல்கிய சகோதர, சகோதரிகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்..

இது எழுத துவங்கிய காலத்தில் 76 களில் எழுதியதால் அப்போதைய சூழலை மையமாக கொண்டு என் கற்பனையில் வடித்தவை.  குற்றம் குறை இருப்பின்  இப்போதைய எனக்காக அவைகள் சகிக்கப் படும் என நம்புகிறேன். 

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை

            சுருள்சுருளாக மேகக்கற்றைகள் வானில் வந்து குவிந்து கொண்டிருந்தன. மழை வரும் போலிருந்தது. அவன் தன் வீட்டு வாசல்படியில் அமர்ந்தவாறு எங்கோ வெறித்து நோக்கி கொண்டிருந்தான். அவனை பார்த்தாலே அலட்சியமாய் தோள்களை குலுக்கிகொண்டு முகத்தை சுளித்துக்கொள்ளும் அண்ணன் சதீஷ்..... மூத்த அண்ணன் தனக்கு தேவையானதை கேட்டதும் வாங்கித்தருகிறான் என்ற திமிரில், கர்வத்தில், நீ எனக்கு இதுவரை எதுவுமே வாங்கி தந்ததில்லையே; பணமாக தர வேண்டாம், அட்லீஸ்ட்  அதை வைத்துக் கொள்ள ஒரு பர்ஸ் ௬ட வாங்கித் தரமாட்டேங்கிறியே பிரகாஷ் அண்ணா... என்று அவன் வேலையில்லாமல் வீட்டிலிருப்பதை நா௲க்காய் கேலியாக குத்திக் காட்டும் கல்லூரியில் படிக்கும் தங்கை சுதா...  வீட்டுக்கு வருவோர் போவோரிடமெல்லாம் இவனை பி.ஏ.வரை படிக்க வச்சேன். தண்டம்... ஒரு வேலைக்கும் போகாமல் வீட்டிலே தண்டசோறு சாப்பிட்டு கிட்டு வேலைவெட்டியில்லாமே, உட்கார்ந்து கொண்டிருக்கிறான், என்று அவன் காது படவே கண்டபடி கேவலமாக பேசும் அப்பா நாகராஜன்... இவர்களை நினைத்தாலே, உலகத்தின் மீதே ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது அவனுக்கு.

இந்த வேலையில்லாத திண்டாடத்தில் சிக்கி திணறும் எத்தனையோ பேர்களுக்கு நடுவில் அவன் தானும் ஒருவனாய் இருப்பதை நினைத்து வருந்தாத  நாளில்லை... ஆனால் அதை புரிந்து கொண்டு அவனுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தை  பேச யாருமில்லை.... யாருக்கும்
மனமில்லை என்பதை உணர்ந்து கொண்டவனாய், அவன் தினமும் தன் படிப்பு சான்றிதழ்களுடன் ஒவ்வொரு அலுவலகமாக ஏறி, இறங்கி கொண்டுதான் இருக்கிறான். ஆனால், இன்னமும் ஒருவேலைதான் கிடைத்தபாடில்லை....

            "ஏண்டா... இப்படி அடிக்கடி மோட்டுவளையத்தை பாத்துகிட்டு உட்காந்திருக்கே... படிச்சவனுக்கு வேலை கிடைக்காமலா போயிடும்.... அல்லது, கிடைக்கிறதும், கிடைக்காமலிருப்பதும் நம் கையிலா இருக்கு. நீ கவலைபட்டு ஒடம்பெ கெடுத்துகாதே... சாப்பிட வா.. உனக்கு பிடிச்ச வெண்டைக்காய் கறி பண்ணியிருக்கேன்" என்று அவனை அன்புடன் சமாதானம் செய்து பரிவுடன் பார்த்து பாரத்து பரிமாறிஅவனை சாப்பிடவைக்கும் அவனின் அன்புமிகுந்த தாய் மீனாட்சி... அவளை நினைத்தாலே அவன் மனம் பாகாய் உருகி கண்களில் கண்ணீரை கசிய வைத்தது.... அந்த அன்புச்சொற்களை கேட்கும் போதெல்லாம் அவன் உடலும் உள்ளமும் எத்தனையோ நாட்கள் சிலிர்த்திருக்கின்றன. அந்த அன்பில் அவன் தந்தை, உடன் பிறந்தவர்கள், பிற உற்றார் உறவினர்கள் அனைவரும் கொஞ்சம் ௬ட நாகரீகமில்லாது பேசும் கேலி பேச்சுக்ககைள மறந்திருக்கிறான். சொல்ல போனால் அம்மாவுகாக எப்படியாவது ஒரு வேலை தேடிக்கொண்டு இவர்கள் எதிரில் வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற வெறி அவன் மனதில் ஆழ பதிந்திருந்ததால்  அவன் சோர்ந்து விடாமல் வேலை தேடிக்கொண்டிருந்தான்......

              "கடவுளே... அந்த அன்பு தெய்வத்திற்காகத்தான் நான் இந்த உலகில் உயிரை வைத்திருக்கிறேன்... இல்லாவிட்டால் என்றோ உன்னை வந்தடைந்திருப்பேன்..." என்று கோவிலில் இறைவனின் முன்பு அவன் உருகிய நாட்கள் எத்தனையோ....
               கடவுளின் கருணையினாலோ என்னவோ அன்று அவனுக்கு வேலை கிடைத்திருப்பதாக, இருபது நாட்களுக்கு முன்பு  நேர்முக தேர்வுக்கு போன ஒரு அலுவலகத்திலிருந்து, தகவல் வந்திருந்தது... அவன் மிகுந்த சந்தோஷமடைந்தாலும் வீட்டில் அவன் எதிர்பார்த்த உற்சாகம் அமையவில்லை. அதுதான் அவனுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது.... அப்பாவிடம் வேலை கிடைத்திருப்பதை அவன் சொன்ன போது.... "ம்... இவ்வளவு மட்டுக்காவது தண்ட சோறு சாப்பிடுகிறோம் என்ற உணர்வு வந்ததே உனக்கு.." என்று அலட்சியமாக ௬றிவிட்டு, "அறிவுரை" என்ற பெயரில் அவனை கொஞ்சம் புண்படுத்திவிட்டு, அவன் பதிலை எதிர்பாராது அப்பால் நகர்ந்தார். சதீஷிடமிருந்தும், சுதாவிடமிருந்தும் அவனுக்கு கிடைத்தது அந்த மாதிரி அலட்சியமான வார்த்தைகள்தான்.... அவன் இதை எதிர்பார்க்கவில்லை.... வேலை கிடைத்த பிறகாவது அவர்கள் தன்னை அன்புடன் பாரப்பார்கள்.. தன்னிடம் அன்புடன் பேசி மனம் மகிழும்படி நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தான் ஆனால் அவர்கள் அவனை புரிந்து கொள்ளாமல், அன்பை வெளிப்படுத்துவது அநாகரீகம் என்பது மாதிரி நடந்து கொண்டது அவன் மனதை காயபடுத்தியது..... வழக்கபடி தாய் மீனாட்சிதான் தன் அன்பால் அவனை திளைக்க செய்து அவன் வேலையை ஒத்துக்கொள்ள செல்லும் ஊருக்கு அனுப்ப மனமில்லாமல் ஆசி கூறி அனுப்பி வைத்தாள்....
தொடரும்.... 
           

12 comments:

  1. தங்களது வாழ்வில் எல்லா ஆண்களும் கடக்கும் ஒரு கட்டம். தொடர்கதையா? தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து கருத்துக்கள் தெரிவித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      /தங்களது வாழ்வில் எல்லா ஆண்களும் கடக்கும் ஒரு கட்டம். தொடர்கதையா? தொடர்கிறேன்./

      உண்மை..ஆண்களின் கடமை சார்ந்த கால கட்டங்கள்.
      தொடர்கதை என்றால் நீ.ண்.ட கதை அல்ல. இது ஒரு சிறுகதைதான். பிரித்து 2 3 பாகமாக போட்டால் படிக்க இலகுவாக இருக்குமே என்பதற்காக பகுதிகளாக பதிவிடுகிறேன். தொடர்கிறேன் என்றமைக்கு மிகவும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. தாய்தான் வடிகால் கதையின் தொடக்கமே மனதை பிசைகிறது சகோ.

    தொடர்கிறேன்.......

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      அன்புக்கு தாய்தான். நம் மனச் சுமைகளுக்கும் வடிகால் தாய்தான். நன்றாக சொன்னீர்கள்.

      தொடர்கிறேன் என்றமைக்கு என் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. தொடக்கமே நன்றாக இருக்கிறது சகோதரி. பாவம் பிரகாஷ்! அவன் ஏதோ சாதிக்கப் போகிறான் என்று மட்டும் தெரிகிறது...அவனை எல்லோரும் மதிக்கத் தொடங்குவார்கள் என்று தொடர்கிறோம்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தொடக்கமே நன்றாக உள்ளது என பாராட்டியமைக்கும் மிகவும் மகிழ்ச்சி சகோ.

      /பாவம் பிரகாஷ்! அவன் ஏதோ சாதிக்கப் போகிறான் என்று மட்டும் தெரிகிறது../

      பாவந்தான் பிரகாஷ். கதையின் நாயகன் அல்லவா.. ஹா ஹா. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த திருப்பமினறி கதை நகர்வதாக அடுத்தடுத்த பகுதிகளில் உங்களுக்கு தோன்றுமென எனக்கு தோன்றுகிறது.

      கதையை தொடர்கிறேன் என்றமைக்கு என் மனமுவந்த நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. கதை நன்றாக இருக்கிறது.
    இப்படிகூட இருப்பார்களா சகோதர சகோதரிகள்? என்று நினைக்க வைக்கிறார்கள்.
    சகோதர சகோதரிகள், அப்பா எல்லாம் அன்பை உணர்ந்து கொள்ளும் காலம் வரும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு குணாதிசயங்கள் அமைந்து விடுகிறது. குடும்ப உறவுகளிலும் அவ்விதமான வேறுபாடுகள் எங்கேனும் இருப்பது சகஜம்தானே.. அப்படியாக கதை உருப் பெற்று விட்டது.

      /சகோதர சகோதரிகள், அப்பா எல்லாம் அன்பை உணர்ந்து கொள்ளும் காலம் வரும்./

      அந்த காலம் வந்தால் நன்று சகோதரி. கதையில் மட்டுமல்ல.. இயல்பான அனைவரின் குடும்ப வாழ்விலும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. பிரமாதமாக இருக்கிறதே
    அன்றைய நாளின் மிகப் பெரும்
    பிரச்சனையே வேலையின்றி வேதனைப்பட்ட
    ஆண்களும் முதிர் கன்னியர்களுமே
    அது குறித்து கதையோ கவிதையோ
    எழுதாதவர்கள் இல்லை என்றே
    சொல்லி விடலாம்
    அற்புதமான துவக்கம்
    தொடர வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் அன்பு கூர்ந்து தொடர்ந்து வந்து கருத்திட்டு வாழ்த்துவது என் எழுத்துக்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது. மிக்க நன்றி.

      /அன்றைய நாளின் மிகப் பெரும்
      பிரச்சனையே வேலையின்றி வேதனைப்பட்ட
      ஆண்களும் முதிர் கன்னியர்களுமே
      அது குறித்து கதையோ கவிதையோ
      எழுதாதவர்கள் இல்லை என்றே
      சொல்லி விடலாம்/

      உண்மை.. வேலை இல்லா திண்டாட்டத்தை நிறைய கதைகள் விளக்கியிருக்கிறது. நிஜத்திலும் பலரின் அனுபவங்களும் உணர்த்தியிருக்கின்றன.

      தொடரும் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. கதை விறுவிறுப்பாக ஆரம்பித்து நகர்கிறது. வேலை தேடும் இளைஞன் அனுபவிக்கும் வேதனைகள், குடும்பத்தாரின் குத்தல் பேச்சுக்கள், அன்னையின் கனிவான அன்பு எல்லாம் சொல்லிய விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      கதையை பாராட்டி கூறியதற்கும் என் மனமுவந்த நன்றிகள்..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete