Thursday, May 17, 2018

அன்னை ...


இந்த ஒரு சொல்லுக்குள்தான் எத்தனை பாசங்கள் இழையோடி அழகாக அமர்ந்திருக்கிறது. அன்னையர் தினம் நம்மை கடந்து சென்று விட்டது. அன்னையர் நினைவுகள் நம்மை என்றும் கடக்காது.. கடக்கவும் விட மாட்டோம். 

கடந்த ஒருவார காலமாக  காய்ச்சல், பல்வலி, இருமல் என உடல்நல குறைபாடு. இதில் ஒவ்வொரு நாளும் நம் கடமைகளை செய்யும் போது (சமையல், இதர வேலைகள்)  வேலைகளில் விருப்பபின்மை இல்லாது, ஏதோ சுவாரஸ்ய குறைவோடு,  என்னை நான் கடந்து கொண்டிருந்த போது  அன்னையர் தினம் என்னை கடந்து விட்டது. அதற்காக பதிவெல்லாம் ரெடி பண்ணி எழுத நினைத்தது இயலாமல் போய் விட்டது. 

என் சிறு வயதில் விடாமல் 20 நாட்களுக்கும் மேலாக துரத்திய ஜுரமொன்றில், என் அன்னை என்னை நினைத்து கலங்கியது இன்னமும் என் நினைவின் அடித்தளத்தில் பதிந்திருக்கிறது. அப்போதெல்லாம் இந்த மாதிரி தெருவுக்கு தெரு டாக்டர்  என்ற வசதி கிடையாது. ஒரு காய்ச்சலுக்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, அரத்தை, இஞ்சி இதை விட சிறந்ததாக எதுவும் கிடையாது என்ற நம்பிக்கையே காய்ச்சலை அலறி அடித்து ஓடிப் போகச் செய்து விடும்.  ஆனால் அந்த தடவை அது அலறாமல், தைரியமாக டாக்டரை சந்திக்காமல் நகர மாட்டேன் எனவும், ,எந்தவசதியும் இல்லாத எங்கள் இடத்திலிருந்து, சோர்ந்திருந்த என்னை தூக்கிக் கொண்டே நடந்து,  நீண்ட தொலைவிலுள்ள மருத்துவரிடம் சென்று காண்பித்து,  அவர் பரிசோதனை செய்த பின் "டைப்பாயிடு" எனவும் அதற்கும் கலங்கி, (அப்போது  அந்த ஜுரம் அனைவரையும் பயமுறுத்துவது ) எனக்கு குணமாகிற வரைக்கும் கண்ணின் மணியென காத்த என் அம்மாவின் நினைவு இப்போதும் ஜுரம் வந்தவுடன் வந்து விட்டது.  அன்னையிடம் சொல்லி ஆறுதல் பட முடியாததை இந்த அன்னை பதிவில் உங்களைவரிடமும்  சொல்லி,  மன ஆறுதல் அடைகிறேன். 

அன்னையர் தினம் கடந்து விடினும், அன்னையை தினமும்  மனந்தனில் சுமப்பவர்களுக்கு
தினமும் அன்னையர் தினமே..... 


படித்ததில் பிடித்ததாக மற்றொன்றும்.. 

வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்
தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.
அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும்.  நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான்.  தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள்.

ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,
சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் –  என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம். அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,

ஒன்றுமில்லை மகனே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள்.

தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான்.

அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள்.

மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான்.

சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட  விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய்.  நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய்.

உடனே நான் எழுந்து உனக்கு  உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்

மகன் திகைத்து நின்றான்.

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன்   – என்றாள் தாய்.

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம்.  

தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது.
தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை  என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான்.  நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்

23 comments:

  1. அற்புதமான சிறப்புப் பதிவு வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் தந்த வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களது ஊக்கமும், வாழ்த்துகளுந்தான் என்னை இன்னமும் எழுத வைக்கிறது. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. //அரத்தை,//

    சித்தரோட அத்தையைத்தானே இப்படி சொல்லி இருக்கிறீர்கள்?!!! (சித்தரத்தை)

    :)))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      /அரத்தை,//

      சித்தரோட அத்தையைத்தானே இப்படி சொல்லி இருக்கிறீர்கள்?!!! (சித்தரத்தை)/

      ஹா.ஹா. ஹா. ஹா நல்ல தமாஷ்..

      வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு யோகும்... என்றா இந்த ஜோக். நன்றி. நன்றி..

      சித்தர்களின் உறவுகளை அறிந்து கொண்டேன்.

      சித்திரத்தை இதை சுருக்கி அரத்தை என அம்மா வீட்டில் கூறிப் பழக்கம். அதே அப்படியே வந்து விட்டது. நல்லவேளை "சிறுத்தை" என்று வராமல்
      என்று தப்பியது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ஹா ஹா ஹா ஸ்ரீராம் நாங்களும் இப்படித்தான் சொல்லிச் சிரித்துக் கொள்வதுண்டு

      சித்தரின் அத்தையை எடு....

      ஏலம் போடற காய்...கிராமத்துப் பூ . மது ரம் அதி இப்படி எங்களுக்குள்..

      அப்புறம் காலைல எழுந்த்தும் பல் தேய்க்காம யாராவதுசாப்பிடக் கேட்டால்...முதல்ல வெள்ளை கேட்டுல கோல் போடு அப்புறம் கேட்டைத் திற...இப்படி நிறைய...ஹா ஹா

      கீதா

      Delete
  3. உடல்நலம் சரியில்லையா சகோதரி? இப்போது சரியாகி விட்டதா? ஓய்வெடுங்கள். உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் சமைக்க வேண்டுமா? இப்போதெல்லாம் வெளியில் கறி,காய், கூட்டு என்று வாங்கி கொள்ளும் வசதி வந்து விட்டதே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தற்சமயம் பரவாயில்லை.. சென்ற வாரந்தான் சற்று கடினமாக இருந்தது.
      அதனால்தான் "அன்னை" எனக்காக சற்று தள்ளி வந்தார்கள்.

      என் உடல நலம் குறித்து விசாரித்த தங்கள் அன்புக்கு நன்றி சகோ.

      வெளியில் வாங்கி சாப்பிடலாமென்றுதான் வீட்டில் அனைவரும் கூறினார்கள். ஒரு அன்னையாக இது என் கடமையில்லையா? இரண்டாவதாக இது பழகியும் போய் விட்டது. ஒரு ரசம் ஒரு துவையல் சாதத்துடன் சிம்பிளாக..
      விசாரித்தமைக்கு மறுபடி நன்றி..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அன்னையைப் பற்றி நல்லதொரு சிறுகதை மூலம் நயம்பட சொல்லி இருக்கிறீர்கள். உண்மைதான். இது என்ன வியாபாரமா? எதிர்பார்ப்பில்லாமல் வருவதுதானே இதெல்லாம்? மகனுக்குப் புரிந்திருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /உண்மைதான். இது என்ன வியாபாரமா? எதிர்பார்ப்பில்லாமல் வருவதுதானே இதெல்லாம்? மகனுக்குப் புரிந்திருக்கும்!/

      அன்னையின் பாசத்தை நன்றாக விளக்கி கூறினீர்கள். மிகவும் நன்று.

      நான் படித்து எழுதியதை படித்தமைக்கு மிகவும் மன மகிழ்வடைகிறேன். தங்களது ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்தார்வத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. தாயின் பெருமையை விளக்கிய கதை சொன்ன விதம் அழகு.

    தங்களது உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள் சகோ. வாழ்க நலம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும், பாராட்டினிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      தாயின் பெருமைகளை விளக்க இன்னமும் பக்குவங்களை முழுதாக அடைய வேண்டும்.
      தாயிற் சிறந்த கோவிலுமில்லை.. தாயன்பு இந்த உலகத்திலுள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

      என் உடல் நலத்தினை விசாரித்தற்கும், தாயைப்போல அன்போடு கவனித்துக்கொள்ள சொன்னதற்கும், என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும், அன்பான பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.

      தாங்கள் வந்து என பதிவுகளுக்கு கருத்துக்கள் இட்டால், என் எழுத்துக்கள் என்றும் வளம் பெறும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. //எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்//

    அருமையான பதிவு.

    படித்ததில் பிடித்த பகிர்வும் அருமை.
    உடல் நலம் இல்லையென்றாலும் நாமே சமைத்து கொடுத்தால் தான் மன திருப்தி.
    உங்கள் உடல் நலம் இபோது எப்படி இருக்கிறது.
    கவனித்துக் கொள்ளுங்கள்.
    எனக்கும் ஒருவாரமாய் பல்வலி, மூட்டுவலி இருந்தது. பல்வலி சரியாகி விட்டது, மூட்டுவலி படுத்துகிறது மருத்துவரை பார்ப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டு கைவைத்தியங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
    மருத்துவரைப் பார்த்துதான் ஆக வேண்டும் போல் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் மனம் நிறைந்த பாராட்டுதலுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      என் உடல் நலம் குறித்து விசாரித்து, அன்போடு கவனித்துக் கொள்ளுங்கள் என கூறியமைக்கு, என் அன்பான நன்றிகள்.

      தற்சமயம் ஜுரம் குணமாகி விட்டது. இருமலும் கொஞ்சம் குறைந்து வருகிறது. என்ன இருந்தாலும், நம் குழந்தைகளை நாம்தானே கவனித்தாக வேண்டும்.

      தங்கள் உடல் நலம் தற்சமயம் எவ்வாறுள்ளது? தாங்களும் கை வைத்தியத்தை மேற்கொண்டுள்ளீர்களா? ஆங்கில வைத்தியம் தங்களுக்கு சரியாகி வருமா? ஆயர் வேத வலி நிவாரண தைலங்கள் மேற் பூச்சாக உபயோகபடுத்தலாமே.. எனக்கு ஆயர் வேதம் கொஞ்சம் கேட்கும்.. அதிகம் ஓய்வு எடுங்கள். தங்கள் உடல் நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
      மருத்துவரை பார்த்து தங்களது மூட்டு வலிகள் சீக்கிரம் குணமாக வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. டாக்டரிடம் போக வேண்டும் கமலா, எங்கள் டாக்டர் ஊருக்கு போய் இருக்கிறார்.இந்த மாத கடைசியில் தான் வருவார்.
    வலி மருந்துகள் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வருகிறேன்.கொஞ்சம் ஓய்வு எடுத்து வருகிறேன்.
    உங்கள் பிராத்தனைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தற்சமயம் (இன்று) தங்கள் உடல் நிலை சற்று குணம் கண்டுள்ளதா?

      தங்கள் மருத்துவர் வந்து அதற்கேற்ற மாத்திரை
      மருந்துகள் தரும் முன் தாங்கள் கூறியுள்ளது போல் தாற்காலிகமாக வலி நிவாரண தைலங்களை தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வாருங்கள். அதுவே கொஞ்சம் வலிகளை மட்டுப்படுத்தும்.

      எந்த உபாதையும் வரும் போது விரைவாக, சுலபமாக வந்து விடும். செல்லும் போது அந்த வலிகளுக்கு வழி தெரியாமல் நம்மை கொஞ்சம் திண்டாட விட்டு, நம் பொறுமையை சோதித்து விட்டுத்தான்,செல்லும் வழி கண்டு பிடித்து அகலும். அது வலிகளின் சுபாவ அறிவு...என்ன செய்வது? நான் இப்படித்தான் நினைப்பேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது - அதனால்தானோ என்னவோ அவன் தன் மகனுக்கு மகளுக்கு ஓரளவு அதைச் செய்து திருப்திப்பட்டுக்கோள்கிறானோ?

    அன்பு என்பது எப்போதும் கீழ் நோக்கிப் பாயும் தண்ணீர் போன்றாதல்லவா? அது மேல் நோக்கிப் பாயும் என்று எதிர்பார்க்கமுடியுமா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் அன்பான வருகைக்கு மனம் மகிழ்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்துக்கள் உண்மை. தாயின் தியாகத்தை அந்த அளவிற்கே திருப்பி தர இயலாது. அப்படியே சரிபங்கை அவன் தந்தாலும், தன் சந்ததிகளுக்கு மற்றொரு பாதியை தன் உழைப்பாலும், ஊதியத்தாலும் ஈந்து மகிழ்வடைகிறான்.
      வாழையடி வாழையாக இது நடந்து கொண்டிருப்பதுதானே.. நன்றாக கூறியிருக்கிறீர்கள்..

      /அன்பு என்பது எப்போதும் கீழ் நோக்கிப் பாயும் தண்ணீர் போன்றாதல்லவா? அது மேல் நோக்கிப் பாயும் என்று எதிர்பார்க்கமுடியுமா?/

      உண்மையான கருத்துக்கள். வரவேற்கிறேன். அந்த நதி அனைவரின் உள்ளத்திலும்,என்றும் வற்றாத ஜீவ நதியாக இருக்கவும் வேண்டுகிறேன். நன்றி..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அருமையான பதிவு
    தொடருவோம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் அருமையான பதிவு என்ற பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அருமையான பதிவு! தாய்க்கு நிகர் தாய்தான். அதை ஈடுகட்ட எந்த ஒரு ஸ்தானமும் இல்லை. (இதில் எக்ஸெப்ஷனல் கேசை எடுத்துக் கொள்ள வேண்டாம் நாம்...)

    கதையும் நன்றாக இருக்கிறது.

    சகோதரி தங்கள் உடல் நலம் இப்போது தேவலாம் என்று நினைக்கிறோம். பார்த்துக் கொள்ளூங்கள்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதர,சகோதரி இருவருக்கும்.

      தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என உடல் நலம் இப்போது முற்றிலும் குணமடைந்து வருகிறது. அன்புடன் விசாரித்தமைக்கு மிகவும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete