Thursday, October 16, 2014

குறையொன்றும் இல்லையே..?




“எங்கள் வீட்டின் பால்கனியையே என்றும்

உங்கள் வீடாக பகிர்ந்து கொண்டு,

அடைக்கலமாய் சிலநேரம், ஆசுவாசமாய் பலநேரம்,

அமர்ந்து செல்லும் அழகுப் புறாவே!”

வீட்டின் மாடத்தையே, ௬ட்டின் மாளிகையாய்,

விரும்பி நீ ஏற்றதலினால், மாடப்புறாவானாயோ..?

உங்கள் உருவங்கள் வேறின்றி ஒன்றாகிலும்,

உள்ளமும், அவ்வாறே இறைவன் அமைத்தான்..!

ஆனால், எங்கள் படைப்பிலும் அவ்விதமே,

ஆண்டவன் அற்புதமாய் அமைக்கவும் தவறியதேனோ..?

  மனம் கொத்தும் வார்த்தைகளை சொல்லும்

மனிதரைப்போல், மற்றவர்களுக்கு தீங்கும்,

மறைமுகப்பேச்சும், மனிதாபிமானமற்ற செயலும்

மறந்தும் நீ என்றும் எண்ண மாட்டாய்..!

பசிக்கு கொத்தும் தானியங்களை தவிர்த்து,

பாவங்கள் ஏதும் நீ செய்ய மாட்டாய்.!

விரித்துப் பறந்திடும் சிறகொன்றால், பிறருக்கு

விசனங்கள் ஏதும் நீ தர மாட்டாய்.!

அவ்வாறிருக்க, இன்று நீ இயல்பை மாற்றி,  

அடங்கிப்போய் அமைதியாய், உன் சிறகில்

முகமதை மறைத்து, உடலதை சுருக்கி,

முடங்கி கிடந்து முகம் சுழிப்பதேன்.?

உடல் நலத்தில் குறைவோ உனக்கு?

உள்ளதை உள்ளபடி ௬றிவிடு எனக்கு.!

  பசி என்பதையும் சிறிதும் உணராமல்,

பட்ட பகலிதுவே என்பதுவும் அறியாமல்,

விழி திறந்து பின்னர் விழி உருட்டி,

விரல் சொடுக்கும் நேரத்தில் உடல் சிலிர்த்து,

கண்மூடி, களைப்பின் மொத்த உருவாய்,

கடுந்தவ முனிவரின் கர்ம சிந்தைனையுடன்,

ஒற்றைக் காலில் நின்று கொண்டும்,

ஒரு மனதோடு ஓரிடத்தை தேர்ந்தெடுத்தும்,

இருந்தவிடம் விட்டு அசையாது, அகலாது,

இரவிலிருந்து, பகல்முழுதும் முடியும் வரை,

உந்தன் மற்ற இனத்தோடும் சேராமலும்,

உந்தி எழுந்து சிறகடித்தும் பறக்காமலும்,

மெளனம் காக்கும் உன் நோக்கம் என்ன?

மெளனித்தலே ஒரு மருந்தெனவும், நினைத்தாயோ?

  நன்றெனவே ஒன்றை, நான் நவில்வதை,

நலம்பெறவே செவிமடுத்து கேளாய் புறாவே..!

“கொடியதோர் கழுகாம் தன்பிடி இறுக்கி,

கொய்யவும் வந்த உன்னினத்தின் ஒருயிரை

காக்கவும் நினைத்தான் கருணை வள்ளலாம்,

கடுஞ்சொல்லும் ஏதறியா, மாமன்னன் “சிபியரசன்”.!

தானங்கள் தருமங்கள், தப்பாமல், செய்துவந்து

தயாளசிந்தையிலே, பேரெடுத்த அந்த தருமசீலனும்,

அன்று உன்னினத்திற்கு ஊறு விளைவித்த

அக்கழுகிற்கு பசியாற தன்னுடலையே வகுந்து,

எடைக்கு எடையாக மனமுவந்து தந்து,

எளிய செயல் இதுவென்று அக்கழுகிடம்,

சமரசமாய் உன்னினம் காக்கப் பரிதவித்ததை

சற்றே நீயும் மறந்து போயினையோ.?” மற்றும்,

  காக்கை சிறகினிலும், கண்ணனையேக் கண்டான்,

கவிகளிலே, சிறந்த எங்கள் மன்னனவன்.!

எங்களில் பலரும் உன் பறவையினத்தை,

எள்ளி நகையாடாமல் சிறப்பித்து உயர்த்தியது,

நீயும் நன்கறிந்ததொரு செய்திதான்.!” எனவே,

நிச்சயமாயதை நான் சொல்ல தேவையில்லை.!

ஏன், இதுவெல்லாம் நீ அறிய இயம்புகிறேன்

என்றால், மானுடத்தின் இயல்பினிலே மறைந்தவர்கள்,

நாளை இறையருளால், ஒருநாள் மறுபடியும்

நம்மை நாடிவர மலர்ந்தெழுந்து வந்தாலும்,

இப்பிறவிதனை விட்டு, வெகு விரைவில்

இறைசேர நானும், பெயர்ந்தெழுந்து சென்றாலும்,

நாங்கள் சந்திக்கும் அவ்வேளையொன்றில், மிக

நாணி தலைகுனிய சங்கடமாய் சில கேள்வி

அச்சமயம் சடுதியிலே உண்டாகும்.! யாதெனில்,
 

  “அந்த ஓருயிரை காத்திடவும், உன்னத வழியொன்றும்

அறியாயோ.? நாங்கள் எம் குடும்பமதை, 

தவிக்க விட்டும், தனித்து விட்டும்,

தாயாகி, தனிப்பெரும் கருணையிலே நின்று,

வளர்த்து விட்ட பாரதமெனும் அன்னையையும்,

வாஞ்சையுடன் உடன் பிறந்த தமிழினையும்,

பாடுபட்டு காப்பதொன்றே, இப்பாரினில் பிறந்தெமக்கு

பரிசென்று நாங்களெண்ணி, பலகாலம் போராடி

பரந்த மனதோடு, பாரதத்தை கைப்பிடித்து,

பயனாக்கி, பின் பரிசாக உமக்களித்து, பத்திரமாய்

பாதுகாத்து, பலனுள்ளதாக்கிப் பங்காற்றுங்கள் என்று,

தந்து விட்டு தவிர்க்க முடியாத சுழ்நிலையில்,

தனித்திங்கு நாங்கள் வந்தால், தகிடுதத்தம்

பலவும் செய்து, பல்லாயிரம் உயிர்களையும்,

பலகோடி ஜீவனையும், பரிகாசமாய் பணயமாக்க,

உங்கள் பாழும்மனமும் பக்குவமும் பட்டு விட்டதா.?

உயர்ந்ததொரு பிறவியாம், மனிதராகப் பிறந்தும்,

உண்மையில் ஓருயிரை காக்கவும் மனமில்லை.!

உன்னதமாய் செயல்களை உலகமே உவந்திட

எங்கனம் எவ்வழியில் செயலாற்ற போகின்றீர்.?”

எனக்கேள்விகள் பலவந்து எனைத்தாக்கும் முன்,


  உடல் நலத்தில் சுகவீனமோ உனக்கு.?

உள்ளதை உள்ளபடி ௬றிவிடு எனக்கு..!

மருத்துவ உதவியும் வேண்டுமா.? அல்லது

மனநிலை மாற்றமேதும் தேவையா.? எதுவாயினும்,

மனம் திறந்து பகிர்ந்து விடு புறாவே…! மற்றும்,

எவ்வுதவி வேண்டுமெனினும், மனதாறச் செய்யும்

என்செயலோடு “அவன்” இருப்பான் தக்கத்துணையோடு.!

உன்செயலோ, தளர்வினை தகர்ப்பதுதான்.! தகர்த்திட்டால்..!

தரணியில் தங்கி தனிமையின்றி வாழ்ந்திடுவாய்…!”

தங்குமின்பம் என்றும் சிறக்க தழைத்தோங்கி சிறந்திடுவாய்…! 

 படங்கள்..  நன்றி ௬குள்..!

8 comments:

  1. புறாவை என்னமாய் நேசித்து கவிதை படைத்து இருக்கிறீர்கள்...

    “உடல் நலத்தில் சுகவீனமோ உனக்கு.?
    உள்ளதை உள்ளபடி ௬றிவிடு எனக்கு..!

    அருமை அருமை தோழி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி.!

    நாங்கள் வசிக்கும் வீட்டைச்சுற்றி எங்களுடன் வாழும் புறாக்களிடம் பேச நினைத்ததெல்லாம், பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.!

    தங்கள் முதல் வருகையும், கருத்தும், புறாவை நேசித்த என் பரிவுக்கு பன்மடங்கு மதிப்பைக் ௬ட்டி விட்டது சகோதரி.!

    ரசித்துப் பாராட்டி வழங்கிய கருத்துக்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.!

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.!

      சொந்தங்களின், அன்பை பகிர்ந்து மனம் களித்திருக்கும் இவ்வேளையிலும், எங்களையும் மறவா தங்கள் பண்பிற்கு மிக்க நன்றிகள்..!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அருமையான படைப்பு. இங்கேயும் புறாக்கள் நிறையவே.....

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.!

      தாங்கள் வசிக்கும் இடத்திலேயும் நிறைய புறாக்கள் இருக்கின்றனவா? புறாக்கள் இறக்கை விரித்து "விர்" ரென்று பறக்கும் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.! அவ்வளவு அழகு.! நம் மனமும் அவற்றுடன் பறக்கும்.!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. வணக்கம்
    ஒரு வித்தியாசமான பதிவு... படிக்க படிக்க திகட்ட வில்லை... படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகு பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே.!

    தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும், மகிழ்வுடன் ௬டிய என் பணிவான நன்றிகள் சகோதரரே.!

    தங்களின் பின்னூட்டங்கள் என் எழுத்தை மென்மேலும் சிறப்புறச் செய்யும் என மனப்பூர்வமாக நம்புகிறேன். நன்றி.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete