Saturday, October 18, 2014

பதிவுலக திரு(டர்)வாளர்களுக்கு, என் பணிவான வணக்கங்கள்.!!!

செய்யும் தொழிலே, சிறந்ததோர் தெய்வமென,
சிறப்பான வழியினிலே, சீர்வகுத்த புலவரையே,
சிந்தைதனில் நிறுத்தி வைத்து, சிறிதேனும் கற்றுணர்ந்து,
சீரான வாழ்வதையே, சிலகாலமேனும் வாழுங்கள்.!!

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினிலே, எழுத்துக்கலையின்
அருமை பெருமைகளை, நாளும் உயர்த்த எண்ணும்,
அருந்தவ உடன்பிறப்புகளின், ஆதங்கம் ஏதுமறியாமல்,
அவர்களின் படைப்புகளை, அநியாயமாய் உண்ணாதீர்கள்.!!

திருட்டென்ற கொடுந்தொழில் செய்து பின்னர்,
திருந்தி வாழ்ந்து, சென்ற திக்கெல்லாம் புகழடைந்து,
திருப்தியுடன் இறைவனது திவ்யமலரடி தொழுது,
திரும்பவும் பிறப்பெய்தாத, வரமுடன் சென்றடைந்தவருண்டு.!!!

அவரைப்போல் நாங்களும், திருட்டென்ற பாபம் செய்து,
அகிலத்திலே பெயரெடுத்து, புவனம் உள்ளளவும்,
அவனியிலே பவனி வருவோமென கற்பனையில் களிக்காதீர்கள்.!!!
அவரும், நீங்களும், சத்தியமாய் எந்நாளும்,
அவனிதனில் சரிநிகராய் ஆகவும் இயலாது.!!
அவர் தான்சுமந்த பாபத்தை இறக்கிவைக்க அவதரித்தார்.!
அவரித்த நாமனைவரும், அதைச்சுமக்கத்தான் பிறந்துள்ளோம்.!

முல்லைக்குத்தேர் கொடுத்தோன், பறவைக்கு உயிர்தரவே
முயன்றவரை உடல் கொடுத்தோன், கவி எழுதும்
முயற்சிக்கு பொருள் கொடுத்தோன், பிறர் வளர்ச்சிக்கு,
முன்னின்று தோள் கொடுத்தோன், இவர்களை படிப்பித்த
மூத்தோர்சொல் வார்த்தைகளை, நினைவினின்றி நீங்கச்செய்து
முழுமையாக முழுவீச்சில் மறந்துதான் போனீர்களோ.?

உயிர் விடும் வேளையிலும், உடல் தொய்ந்த பொழுதினிலும், தன்
உதிரத்தால் தான் உவந்து பெற்ற தர்மமெல்லாம், கேட்டவர்க்கு
உவகையுடன் தானமளித்த கர்ணன் எனும் மாமன்னன்,
உலகில் அழியாப் புகழோடு இன்றுவரை வாழுகின்றான்..!!

இன்னும் இறந்தும் தானமளித்தார் சீதகாதி வள்ளளவர்.!
இங்கணம் இடுக்கண் களைவோர், இப்புவியில் ஏராளம்.!
இவர்கள் பிறந்த மண்ணில்தான், நாங்கள் பிறந்து வந்ததினால்,
இல்லையென்று சொல்ல எங்கள் நாவும் மனமும் ௬சும்.!
இனிமேலாவது திருடாமல், இணக்கமாய் வேண்டி பெற்றிடுங்கள்.!
இயன்றவரை படைத்ததை பெருமையாய் தந்திடுவோம்..!

இத்தனையும் விரிவாய் ஏன் சொன்னேன் என்றால்,?
இத்தனைக்கதையிலும், ஏதாவதை சுயமாய் எழுதப்பழகுங்கள்.!
இத்திருட்டை இனியும் இசைவான மனமுடனே செய்யாதீர்கள்..!!
இதற்குத்தான் இப்பதிவு, இயல்பாய் எழுந்தது என்னுள்ளே..!!!!
இத்தனைச்சொல்லியும், எந்நாளும் திருந்தோம் என்றால்,
இப்படைப்பையும், என் உரிமையின்றி உமதாக்கிக் கொள்ளுங்கள்..!

14 comments:

 1. அருந்தவ உடன்பிறப்புகளின், ஆதங்கம் ஏதுமறியாமல்,
  அவர்களின் படைப்புகளை, அநியாயமாய் உண்ணாதீர்கள்.!!

  சகோதரி...பொருந்தச் சொன்னீர்கள்...இவ்வளவு விரிவாக அழுத்தமாக ..சொல்லி இருக்கிறீர்கள். உணர்ந்து திருந்தினால் நல்லது

  அவர்களும் தாம் எழுதியதை பலரும் கண்டு பதில் போட ஆனந்தப்படலாம்..

  இது புரியாமல் ஏன் குறுக்கு வழியில் பயணிக்கிறார்களோ...

  நல்ல பதிவு. தொடர வாழ்த்துக்கள்.
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.!

   தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப்பகிர்விற்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.!

   சென்ற நாட்களில் சில சகோதரிகளின் பதிவுகள், இந்த பதிவுலக திருட்டைப்பற்றியே இருந்தது. நானும் படித்துப்பின் அவர்கள் குறிப்பிட்டிருந்த, "சிவராமன்" என்பவரது தளத்திற்கு சென்று பார்த்தால், அங்கு இருப்பவை அனைத்தும், (அனேகமாக அனைத்துமே ௬ட இருக்கலாம்.. ) கடத்தப்பட்ட நம் குழந்தைகள்..!
   என்னுடைய பதிவு, இன்னும் நான் அறிந்தவர்களின் பதிவு, இதைப்பற்றி எழுதிய மற்ற சகோதரிகளுடையது, என நிறைய பதிவுகள்..!
   அதைப்பார்த்ததுந்தான், இந்த பதிவு பிறந்தது. இதையும், மற்ற சகோதரிகள் எழுதியதை பார்த்தும், அவர்கள் திருந்த ஆண்டவன் அருள் புரிவாராக.!!

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. மிகவும் அழகான விரிவான கவிதை. இதையும் யாராவது திருடி போட்டு விட்டால்...?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   தங்கள் முதல் வருகைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும், என் மனப்பூர்வமான நன்றிகள் சகோதரரே.!

   \\ இதையும் யாராவது திருடி போட்டு விட்டால்...? //


   நம் பதிவுகளை கவர்ந்து தங்களுடையது என விளம்பரபடுத்திக் கொள்பவர்கள், அதே போல் அதையெல்லாம், வேறு எவராவது அவரிடமிருந்து கவர்ந்து செல்லும் போது,அப்போது பயன்படுத்திக் கொள்ள உபயோகமாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் "இதையும்" எடுத்துச்சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!

   நமக்குத்தான் "அதுவும் போச்சு அரோ கரா"

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.!

   \\திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது...//


   நீங்கள் சொல்வதும் உண்மைதான்.! அவர்களாகப் பார்த்து திருந்தினால் சரிதான்..! எப்படியோ என் படைப்பும் திருடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தாகி விட்டது..!

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. உங்கள் கவிதை படித்தேன்... பல பதிவுகள் இப்படி களவாடப்படுவது தொடர்கிறது. ம்ம்ம்ம்.

  சிலரை மாற்ற முடியாது!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.!

   \\ பல பதிவுகள் இப்படி களவாடப்படுவது தொடர்கிறது...

   சிலரை மாற்ற முடியாது!//


   உண்மைதான்..! நான் பதிவுலகிற்கு புதிதாகையால், ஜீரணிக்க சற்று சிரமமாக இருந்தது. இனி பழகி விடுமென்று நம்புகிறேன்.!

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. Hi sister please read my post this year month of june name of the title Emergency 2
  Thank u

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.!

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.!

   இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ௬றியமைக்கு, மகிழ்வுடன் ௬டிய நன்றிகள் சகோதரி.!

   நட்புடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. வணக்கம்
  சகோதரி

  இப்படிப்பட்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்... அருமையாக சொல்லியுள்ளீர்கள். இவை எல்லாம்இவர்களுக்கு கை வந்த கலை... மாற்ற முடியாது.. பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.!

   தங்கள் வருகைக்கும், பகிர்வுடன் ௬டிய கருத்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள் சகோதரரே.!

   \\இப்படிப்பட்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.. இவை எல்லாம் இவர்களுக்கு கை வந்த கலை... மாற்ற முடியாது.//

   உண்மையான வரிகளை உரைத்துள்ளீர்கள்.! அவர்களே கடவுள் அருளினால், மாறினால் நன்று.! காத்திருப்போம்.!

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete