Tuesday, April 3, 2018

அரிசி சேவை......


நான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி தேவையான அளவு உப்பு சேர்த்து  கிரைண்டரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.  
அரைத்த மாவை கொஞ்சம் நீர்க்க இதுபோல்
கரைத்து வைத்துக் கொள்ளவும். 


 தோசை மாவு பதத்திற்கும் சற்று நீர்க்க இருக்குமாறு அரசியும் துருவிய தேங்காயும் சேர்த்து அரைத்தெடுத்த மாவு.......  


தேன்குழல் அச்சில் ஓமப்பொடி தட்டுடன் 
சிறந்த சேவை செய்வதற்காக காத்திருக்கும் புண்ணிய கருவிகள்......  


 ஒரு கடாயை அடுப்பிலேற்றி அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி  சற்று காய்ந்ததும் கரைத்து வைத்துள்ள மாவை அதில் விட்டு கை விடாமல்  கொழுக்கட்டைக்கு  கிளறுவதை போல் கிளறி வைத்துக் கொள்ளவும். 


சூடு ஆறுவதற்கு முன்பாக கிளறி வைத்த மாவை எடுத்து குழலில் இட்டு இட்லித் தட்டில் இது போல் பிழிந்து  கொள்ள வேண்டும். சூடு ஆறுவதற்குள் முடிந்த அளவு பிழிந்து விடவும். ஆறிய மாவு கெட்டியாகி விட்டால் பிழிவது சிரமம். 


பிழிந்ததை குக்கரில் ஒரு பத்து நிமிடம் வைத்து ஆவியில் வெந்ததும்  எடுத்து தட்டில் கொட்டி விடவும். இப்படியே கரைத்து வைத்துள்ள மாவை சேவைகளாக்கி கொள்ளவும்.  அதன் பிறகு நம் விருப்பபடி  விதவிதமாய் தேங்காய் சேவை, வெல்லச்சேவை  லெமன் சேவை தயிர்சேவை என்று தயாரித்து கொள்ளலாம்.  


ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு,  காய்ந்த மிளகாய் இரண்டு ஆகியவற்றை போட்டு தாளித்ததும்  பச்சை மிளகாய் இரண்டு, கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளி சேர்த்து  தேங்காய்  துருவல் ஒருகரண்டி போட்டு வதங்கியதும், உதிர்த்த சேவையை சேர்த்து உப்பு தேவைப்பட்டால் கொஞ்சம்கலந்து அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் பிரட்டி விட்ட பின்   அடுப்பை அணைத்து விடவும்..
சுவையான தேங்காய் சேவை ரெடி..... 


நான் முன்பெல்லாம் சேவை செய்தால், இந்த மாதிரி ஒரு நான்கு விதமாய் செய்வேன்.  இந்த  தடவை மிகவும் சுலபமாக இதை மட்டுந்தான் செய்தேன். 



கடைசியில் இந்த சேவை பிழியும் போது பிழிய வராமல் அடம் பிடித்த மாவை கொஞ்சம் மிளகாய் தூள், உப்பு, எண்ணெய் ஒரு ஸ்பூன், பெருங்காயம் ஒரிரு  சிட்டிகை,  கறிவேப்பிலை கிள்ளி சிறிதளவு சேர்த்து, நன்கு கலந்து சிறுசிறு உருண்டைகளாக செய்து, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். நல்ல சுவையான காரக் கொழுக்கொட்டையையும் சுவைக்கலாம்.

நான் அதை படமாக்க மறந்து விட்டேன். அடுத்த தடவை நிறைய வெரைட்டி  சேவைகளுடன் சந்திக்கிறேன்... 
நன்றி. 

17 comments:

  1. அடடே.. சுவையான பதிவு. எங்கள் வீட்டில் என் அம்மா காலத்தில் சேவை நாழி இருந்தது. அம்மா அரைத்து, வேகவைத்து, சேவை நாழியில் இட்லிகளை அடைத்ததும் நாந்தான் பிழிவேன். தீபாவளி சமயங்களில் அம்மா பட்சணம் செய்யும்போதும் நான் தான் உதவியாளன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எங்கள் வீட்டில் என் அம்மா காலத்தில் சேவை நாழி இருந்தது. அம்மா அரைத்து, வேகவைத்து, சேவை நாழியில் இட்லிகளை அடைத்ததும் நாந்தான் பிழிவேன். தீபாவளி சமயங்களில் அம்மா பட்சணம் செய்யும்போதும் நான் தான் உதவியாளன்/

      அம்மாவுக்கு உதவிகள் செய்திருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதனால்தான் இப்பவும் தங்கள் கைமணத்துடன் சமையலில் அசத்துகிறீர்கள்.

      என்னிடமும் இரும்பில் சேவை நாழி உள்ளது. முன்பெல்லாம் அதைதான் பயன் படுத்தினேன்.ஆனால் எப்போதாவது செய்யும் சேவைக்காக அதை எடுத்து சுத்தப்படுத்தி மெனக்கடாமல் இதை பயன்படுத்த ஆரம்பித்தேன். கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. ஆஹா படங்களே ஆசையை தூண்டுகிறது.
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் உடனடியாக வருகை தந்து நல்லதோர் கருத்துக்களைச் சொல்லி பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. படங்களுடன் அருமையான வழிகாட்டல்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்களைச் சொல்லி பாராட்டியமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
      தங்கள் கருத்துக்கள் என் எழுத்துக்களை ஊக்குவிப்பதாக அமைகிறது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  4. சேவை நாழி - மரத்தில் இருந்தது முன்பு. இப்போதெல்லாம் பல வீடுகளில் ரெடிமேட் சேவை தான்!

    சுவையான குறிப்பு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், நல்லதோர் கருத்துப் பகிர்வுக்கும், மனம் நிறைந்த பாராட்டுதலுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் கூறியபடி மர சேவை நாழி எங்கள் அம்மா வீட்டில் இருந்தது. அதிலும் சூடு ஆறி விட்டால் பிழிவது கொஞ்சம் கஸ்டந்தான்.
      சுலபமானது ரெடிமேட்தான்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. எங்கள் மாமியார் வீட்டில் கொழுகட்டையாக வேக வைத்து சேவை நாழியில் கொழுகட்டைகளை போட்டு அழுத்தம் கொடுத்து சுத்த வேண்டும்.கீழே பாத்திரத்தில் சேவை விழும்.

    ஆண்கள் தான் சுற்ற வேண்டும்.நம்மால் முடியாது.

    நான் பச்சரிசி மாவு தயார் செய்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாழி அளவு மாவை பாத்திரத்தில் போட்டு வெந்நீர் விட்டு பிசைந்து சூடாய் பிழிந்து விடுவேன் இட்லி தட்டில், அப்புறம் வேக வைப்பேன்.

    வித விதமாய் புளி சேவை, எலுமிச்சை சேவை, தேங்காய் சேவை செய்யலாம்.

    ஆனால் குழந்தைகள் வந்தால்தான்.

    படங்கள், செய்முறை எல்லாம் அருமை.
    பார்க்கவே அழகு.

    //சிறுசிறு உருண்டைகளாக செய்து, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். நல்ல சுவையான காரக் கொழுக்கொட்டையையும் சுவைக்கலாம்.//

    தேங்காய், மிளகாய்வற்றல் அரைத்து கடுகு , உளுத்தப்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து விடுவேன்.
    சுவையாக இருக்கும்.




    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /எங்கள் மாமியார் வீட்டில் கொழுகட்டையாக வேக வைத்து சேவை நாழியில் கொழுகட்டைகளை போட்டு அழுத்தம் கொடுத்து சுத்த வேண்டும்.கீழே பாத்திரத்தில் சேவை விழும்./

      தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி முன்பு கொழுக்கட்டைக்ள் செய்து பிழிந்திருக்கிறேன்.எங்கள் வீட்டில் இரும்பு அச்சில் சைடிலும் துவாரங்கள் இருப்பதால், பிழியும் போது கை கால்களில் தெறிக்கும். அதனால்தான் இந்த வழிமுறையை தேர்ந்தெடுத்தேன்.

      ஆம். பச்சரிசி மாவில் தங்கள் முறையில் செய்யலாம். அவ்வழியே ் செய்வது தங்களுக்கு சுலபமாக இருக்குமா? என் அம்மாவும் பச்சரிசியில்தான் செய்வார்கள். அப்போதெல்லாம் முக்கால்வாசிப் பொழுது விரததினங்களில் இந்த சேவை கைங்கரியம். விரதத்திற்கு புழுங்கல் அரிசி கூடாதே.. அதனால்..

      /வித விதமாய் புளி சேவை, எலுமிச்சை சேவை, தேங்காய் சேவை செய்யலாம்.

      ஆனால் குழந்தைகள் வந்தால்தான்./

      ஆம் குழந்தைகளின் விருப்பதற்காகத்தானே நாம் இதையெல்லாம் செய்கிறோம்.

      /தேங்காய், மிளகாய்வற்றல் அரைத்து கடுகு , உளுத்தப்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து விடுவேன்.
      சுவையாக இருக்கும்./

      இப்படியும் செய்யலாம். நல்லதொரு குறிப்பு. குறிப்புகளை பகிர்ந்தமைக்கும் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. வணக்கம் சகோதரரே

    தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனம் நிறைந்த பாராட்டுதலுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. வணக்கம் நண்பரே.. !

    உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது, பார்வையிடவும். தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது.

    உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் இணையத்தளதிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி
    http://gossiptamil.com/aggre/

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      விபரம் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. உங்கள் வலைத்தளத்தை எங்கள் தளத்தில் சேர்த்தும் பதிவுகள் வந்ததை அறிவிக்கவே இல்லை இந்த ப்ளாகர். ப்ளாகர் டேஷ் போர்டிலும் இல்லாததால் தவறவிட்டுவிட்டோம்/.

    துளசிதரன்: எங்கள் வீட்ட்டில் இடியாப்பம் சேவை போன்றவை செய்வதே இல்லை. கேரளத்துச் சாப்பாடு மட்டும் தான்

    கீதாள: ஆஹா நான் அடிக்கடி செய்யும் டிஃபன். சேவை நாழி உண்டு. அதில்தான் பிழிவேன். மாவு அரைத்து வணக்கி கொழுக்கட்டையாக ஆவியில் வேக வைத்துவிட்டு நாழியில் பிழிந்துவிடுவது. நான் இட்லி அரிசி அல்லது டொப்பி அரிசி என்று சொல்லப்படும் ஐ ஆர்20 யில் செய்வது வழக்கம்.

    இப்படியான மெத்தட் இடியாப்பம் நான் பச்சரி மாவு தயாரித்து வைத்துக் கொண்டு அதில் செய்வது ...

    சேவை கலந்த சேவை செய்தாலும் எங்கள் ஊரில் பொதுவாக புளிசேரி அல்லது மோர்க்குழம்பு (திருநெல்வேலி மோர்க்குழம்பு) செய்து வற்றல் வடாம் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது அல்லது தேங்காய்ப்பால் வெல்லம் அதுவும் நன்றாக இருக்கும்.

    இடியாப்பம் செய்தால் இலங்கை சொதிதான் தொட்டுக் கொள்ள பெரும்பாலும்

    அருமையாகச் செய்திருக்கீங்க படங்களும் ரொம்ப அழகாக இருக்கு. புழுங்கரிசி சேவை எப்படி அச்சில் பிழிந்தீர்கள்? கடினமாக இருக்குமே..நான் இடியாப்பம் மட்டுமே இதில் பிழிவது....சேவை என்றால் நாழிதான்...

    ரொம்ப நல்லாருக்கு உங்கள் பதிவு...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், தங்களது விபரமான கருத்துப் பகிர்வுகள் கண்டும் மிகவும் மனம் மகிழ்ந்தேன்.

      தங்களுக்கு எப்போது சௌகரியபடுகிறதோ அப்போது வந்து கருத்துக்களை தாருங்கள்..தங்களைப் போன்றோரின் கருத்துக்கள் என் எழுத்துக்களை செம்மையாக்கும் என நம்புகிறேன்.. நன்றி.

      இடியாப்பம் என்பது வேறு பாணியா ? குழல் புட்டு என்பதும், இடியாப்பம் என்பதுவும் ஒன்றுதான் என நினைக்கிறேன். அதற்கு அரிசி மாவு தயாரித்து கொண்டு
      இடியாப்ப அச்சில் வைத்து பிழிந்து வேக வைக்க வேண்டுமா? நான் இதுவரை செய்ததில்லை.. அதனால்தான் கேட்கிறேன்.

      நான் எப்போதும் இந்த சேவைதான் செய்து வருகிறேன். அம்மா வீட்டில் கலவை சேவைதான் செய்து பழக்கம். மாமியார் வீட்டுக்கு வந்தபின் எப்போதும் சேவைக்கு மோர் குழம்புதான். இரண்டு வகை ஸைடிஸ்மே இன்றுவரை சுவையானதுதான்.

      தங்களது தயாரிப்புகளும் மிகவும் சுவையாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி

      புழுங்கலரிசி கொஞ்சம் கடினம்தான். ஆனால் தனிதனியாக ஒட்டாமல் வரும். சேவை நாழியும் இருக்கு..இரும்பு நாழி. ஆனால் அதை எடுத்து சுத்தப்படுத்தி மெனக்கடாமல் இதை பயன்படுத்த ஆரம்பித்தேன். அதுதான் மிச்சமாகும் மாவை கை வலிக்காமல் அம்மணி கொழுக்கட்டைகளாக உருட்டி விட்டேனே... ஹா ஹா ஹா ஹா

      தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்கு க்கும் மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. ஆமாம் நான் அம்மணிக்கொழுக்கட்டையும் செய்வதுண்டு...நீங்கள் சொல்லியிருப்பது போல்...அப்படிக் கொழுக்கட்டை செய்து உசிலி செய்வது போலும் பருப்பு உசிலி போன்றும் செய்வதுட்னு..

    .சூப்பர்...ரெசிப்பி சகோதரி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
      அம்மணி கொழுக்கட்டைகள் தேங்காய் துருவல் சேர்த்து பச்சை மிளகாய் பொடிதாக அரிந்து சேர்த்து உருட்டி செய்தாலும் சுவையாய் இருக்கும்.
      ஆமாம் சகோ.. சேவைகளின் வகைகளில் இந்த பருப்பு உசிலி செய்து சேர்த்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். தங்கள் கருத்தும் என் எண்ணங்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.
      தங்களின் கருத்துகளுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete