Sunday, June 21, 2026

தந்தையின் கடமை.

உலகிலுள்ள அனைத்து சகோதரர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள். மற்றும் தாயுமாகி, தங்கள் செல்வங்களை ஒரு தந்தையின் அக்கறையான பொறுப்பில் பாதுகாத்து, தாயின் அன்புடன் சேர்ந்து ஒரு நல்ல தந்தையாகவே நின்று  தந்தையின் கடமையோடு வளர்த்து அவர்களை வாழ்வில் வளம் பெறச் செய்யும் தாய்மார்களுக்கும் என் அன்பான  வாழ்த்துகள். 🎉. 

நான் பதிவுகள்  எழுதி நிறைய நாளாகிறது. ஏன் மாதங்கள் பலவாகிறது எனவும் சொல்லலாம். ஏனோ முன்பு போல எழுதவே இயலவில்லை.அதற்கு  நேரமின்மைகள்தான் காரணம். இப்போதெல்லாம் தினசரி ஒரு நாளைய நேரங்கள் கண் மூடி திறப்பதற்குள் சிட்டாகப் பறக்கிறது. 

அன்னையர் தினத்திற்காக ஒன்று எழுதி, அது பாதியில் நிற்கிறது. (இன்னமும் நிறைய பதிவுகளும் அப்படித்தான். டிராப்டில்தான் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றன ) சென்ற (இட்லிதினம்) பதிவுக்கு அந்த தினத்திற்காக, அவசரமாக ஒரு நாலு வரி எழுதி, (அரைத்த மாவையே மறுபடி அரைத்து) ஒரு பதிவாக்கினேன். அதற்கு உடனடியாக கருத்து தந்தவர்களுக்கு தொடர்ச்சியாக பதில் தர இயலாமல் போனது. ஊருக்குப்பயணம், உடல் நிலை பாதிப்பு என பல காரணங்கள். (இன்னமும் நீ பதில்கள் தரவில்லை என மனம் சுட்டிக் காட்டுகிறது.) அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். சமயம் வாய்த்தவுடன் கண்டிப்பாக அதற்குப் பதில் தருகிறேன்.

இப்போது  அடுத்து தந்தையர் தினமே வந்து விட்டது. அதற்காகவேனும் ஏதேனும் எழுதலாமென்றால், அதற்கும் யோசிக்க நேரங்கள் சரியாக அமையவில்லை. அதனால், 2014ல் தந்தையர் தினத்திற்காக எழுதிய ஒரு கதையையே இந்த தடவையும் அவசரமாக மீள்  பதிவாக்குகிறேன். ஏற்கனவே அதைப் படித்து கருத்து தெரிவித்தவர்களுக்கு  என் அன்பான நன்றிகள். இப்போதும் இதைப் புதிதாக எண்ணிப் படிக்கும் என் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 

இனி தந்தையர் தினத்திற்காக அன்று எழுதிய "அப்பா" என்ற சிறுகதை. 




பெரியப்பா!..” என்று அழைத்தபடி ஓடி வந்து அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள் பிரியா.

“வாம்மா! உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்! எப்படி இருக்கே? மாப்பிள்ளை நல்லா இருக்காரா?” அவள் தோளை பற்றி லேசாக அணைத்தபடி, அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றார் அவள் பெரியப்பா சேகர்

பெரியம்மா, அண்ணன், அண்ணி, தங்கை என அன்பு உறவுகள் அவளைச் சுற்றி நலம் விசாரித்து அன்பு கடலில் மூழ்கடித்து அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

“பிரியா! போய் குளித்து விட்டு சாப்பிட வா! உனக்கு பிடிச்ச அடையும் அவியலும் பண்ணியிருக்கேன்! சீக்கிரம் வா! சூடு ஆறிடும்.” என்று அன்பு கட்டளை இட்டபடி பெரியம்மா உள்ளே சென்றாள்.

அண்ணனும் அண்ணியும் “அதேயே சொல்லி விட்டு முக்கியமான  வேலை ஒன்றுக்காக வெளியில் சென்று வந்து விடுகிறோம்” என்று ௬றி அகல, தங்கை “உன் லக்கேஜை உன் அறையில் கொண்டு வைக்கிறேனக்கா!” என்றபடி மாடியேறி சென்றாள்.

“பெரியப்பா! தம்பி இன்னுமா வரவில்லை? என்ற பிரியாவுக்கு, “அவனுக்கு வேலை அதிகமா இருக்கிறதாலே, இன்னைக்கு புறப்பட்டு நாளை காலையிலே வந்துடுவாம்மா! அதற்கு மறுநாள்தானே நிச்சயதார்த்தம்! சரி! நீ போய் குளித்து விட்டு வா! சாப்பிடலாம்! "என்ற பெரியப்பாவை கனிவுடன் பார்த்த பிரியா “சரி! இதோ! வந்து விடுகிறேன். நீங்கள் போய் சாப்பிட ஆரம்பியுங்கள். நான் வந்து உங்களுடன் ஜாயின் பண்ணிக்கிறேன்!” என்றபடி தன் அறைக்கு சென்றாள்.

             
அடுத்து வந்த இரண்டு நாட்களும் வீடு கலகலப்பாக இருந்தது. தன் ஒரே தம்பியின் நிச்சயதார்த்தம், உறவினர் ௬ட்டத்தின் கலகலப்போடு நன்றாக முடிய, அவன் திருமண தேதியும், இரு மாதத்திற்கு பின் முடிவு செய்யபட்ட சந்தோஷத்தில், அவள் தம்பியும், வேலை பார்க்கும் தன் ஊருக்கு திரும்பிச்செல்ல, பிரியாவும் தானும் தன் ஊருக்கு கிளம்ப போவதாக சேகரிடம் சொன்னாள்.

      “கல்யாணத்துக்கு நிறைய வேலை இருக்கு பிரியா! அதனாலே நீ இப்ப வந்த மாதிரி வராம பத்து இருபது நாளுக்கு முன்னாடியே புறப்பட்டு வந்து விடு! எனக்கும் முன்பு மாதிரி தனியா எல்லா வேலையும் பண்ண முடியல்லை!” என்று இடையில் வந்து சொல்லிச் சென்ற பெரியம்மாவுக்கு “சரி பெரியம்மா!” என்றவள் “பெரியப்பா! உங்களிடம் கொஞ்சம் தனியா பேசனும்!” என்றவாறே அவரது அறையை நோக்கி நடந்தாள்.

    “அதற்கென்ன! பேசலாம் வா!” என்றபடி தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்ற சேகர், “என்னம்மா பிரியா? நானும் பார்த்தேன்! நீ நேற்றிலிருந்து ஒரு மாதிரியாகவே இருக்கறே! என்ன விஷயம்? என்றார்.

   “ பெரியப்பா! நேரடியாக நான் விஷயத்துக்கே வருகிறேன். உங்களுக்கு பிறந்த இரு குழந்தைகளோடு என்னையும் என் தம்பியையும் நீங்கள்தான் சிறுவயது முதல் வளர்த்து ஆளாக்கி என்னையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து இப்போ என் தம்பிக்கும் நல்ல இடத்தில் பெண் பார்த்து ஒரு அப்பா அம்மா ஸ்தானத்திலே நின்னு எல்லாம் பண்ணறீங்க! நடுவிலே இந்த ஆளுக்கு இங்கு என்ன பெரியப்பா வேலை? இவர் ஏன் என் திருமணத்திலேயும் கலந்துகிட்டாரு? இப்போ தம்பி நிச்சயத்திலேயும்…. இன்னமும் அவன் கல்யாணத்திலேயும் வந்து அசிங்கபடுத்துவாரா? பெரியப்பா! ஏன் எங்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் அவருக்கும் சொல்லி அவரையும் கூப்பிடுறீங்க? என்று கோபமாக படபடத்தாள் பிரியா.   
        
“ஏன்னா? அவன் உன் அப்பாம்மா! உன்னை பெற்றவன் அவன்…! உங்களுக்கு நடக்கிற நல்லதுகளை பார்க்கிற உரிமை, சந்தோசம், திருப்தி அவனுக்கில்லியா? அதுக்கும் மேலே என் தம்பிக்கு நான் சொல்லி வரவழைக்காமே, இருக்க முடியுமா? சொல்லு!” என்று நிதானமாக ஆரம்பித்த பெரியப்பாவை இடைமறித்தாள் பிரியா.

               “அப்பாவா? அவரை அப்பா என்று அறிந்த நாள் முதல் கொண்டு மனதும் உடம்பும் கூசுகிறது! பெரியப்பா! 

தன் பெற்றோர் பேச்சுக்கு, மறுபேச்சு ஏதும் கூறாமல், அவர்களது வார்த்தைக்கு மதிப்பளித்து அவர்களது விருப்பப்படி இவரை கல்யாணம் செய்துகிட்ட அம்மாவை, வார்த்தைகளால், அவள் உயிரையும், மனதையும் கொன்ற கொலைகார பாவின்னு தெரிஞ்ச நாள் முதலாய் இவரும் போய் சேர்ந்திருக்க கூடாதான்னு மனசு அடிச்சுக்குது, 

ஜெயில் வாசம் மாதிரி எங்கேயோ கண்காணாத இடத்திலே இருந்தவர், ஒருநாள் திடீர்னு எங்க ஞாபகம் வந்து இங்க வந்து, "நான்தான் உங்கள் அப்பான்னு” அறிமுகப் படுத்திண்டு நின்ன அந்த நாளை என்னாலே மறக்கவே முடியாது பெரியப்பா! நம்ம பெரியம்மா அந்த கதையெல்லாம் எங்களுக்கு சொன்ன, அந்த நிமிடத்திலிருந்து, அவரை பார்த்தாலே எங்களுக்கு பிடிக்கல்லே பெரியப்பா! ஆனா, அதுவரைக்கும் எங்களுக்கு எந்த விபரமும் சரியா தெரியாததாலே உங்களைதான் பெரியப்பா நாங்க அப்பா, அம்மாவா நினைச்சு வாழ்ந்துகிட்டு வந்தோம். இப்பவும் உங்களை தவிர வேறு யாரையும்……மனசாலே ௬ட அப்பாவா ஏத்துக்க எங்களாலே முடியாது!” என்றபடி கண்கள் கலங்க பேச முடியாது, இன்னமும் சற்றும், கோபம் குறையாத குரலில் தடுமாறினாள் பிரியா. 

  அவள் அருகில் வந்து அன்புடன், அவள் கைபிடித்து கட்டிலில் அமர வைத்த சேகர், “நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே என் குழந்தைகள்தான், பிரியா! அதுலே எந்த மாற்றமும் கிடையாது! என்றதும் “அப்படியானால், இனி அவரை நீங்க தம்பி கல்யாணத்துக்கு வரச் சொல்லாதீங்க பெரியப்பா! தம்பியும் வருத்தப்பட்டான். நான்தான் உங்ககிட்டே பேசி "உன் கல்யாணத்துக்கு அவரை வராமே தடுக்கறேன்னு, அவனை சமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பினேன்." என்றாள் பிரியா.

        “இந்த கல்யாணத்தை மட்டும் அவன் பார்த்துட்டு அவன் பழையபடி தான் இது வரைக்கும் இருந்த இடத்துக்கே போயிடுவானம்மா! தன் குழந்தைங்க திருமணத்தை பார்க்கற வாய்ப்பை ௬ட அவனுக்கு நான் தராமல் போனால் எப்படி? அவ்வளவு பெரிய பாவத்தை நான் எப்படி செய்வேன்? பெரியப்பா குரல் கம்ம ௬றியதை கேட்டதும் பிரியாவுக்கு ஆத்திரமாக வந்தது.

    “ யார் பாவி? நீங்களா? இல்லை அவரா? அந்த பாவி மேல் ஏன்தான் இப்படி இரக்கம் காட்டுறீங்களோ தெரியல! தம்பி திருமணத்திற்கு அவர் வந்து பார்த்து விட்டு எங்கேயோ போவதற்கு முன், இப்போதே அவர் ஒரேடியாக போய் தொலைந்தால்தான் என்ன?" கோபத்தில் வார்த்தைகள் பிரியாவிடமிருந்து வெடித்தன.

            “பிரியா!!!!! சேகர் ஆவேசமாக கத்தினார். பின் ஒரு நிமிடத்தில் சற்று சுதாரித்து கொண்டவராய் அவள் அருகில் வந்து கையை பிடித்தபடி, பிரியா! என் தம்பியை பற்றி உனக்கு தெரியாது! அதனால்தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்!

பிரியா! உங்களுக்கெல்லாம் தெரியாத உண்மையை நான் இப்போது அவனுக்கு தந்த வாக்குறுதியையும் மீறி சொல்லத்தான் போறேன். இப்போது நீ புரிந்து கொள்ளும் வயதையும் அடைந்து விட்டாய்! "

உங்களுக்காகத்தான் உன் பெரியம்மா அன்று அப்படி சொன்ன பொய் கதை. உங்களுக்காக மாற்றிச் சொன்னாள் 
உன் பெரியம்மா சொன்னபடி 
உன் அம்மாவை அவன் கொல்லவில்லை!அவனைதான் கொன்று சிதைத்து விட்டாள் உன் அம்மா. அந்த மாதிரி ஒரு பழியை அவன் மீது சுமத்தி விட்டு நீங்கள் சின்ன குழந்தைகள்”னு ௬ட இரக்கம் இல்லாமே இயற்கையாய் அமையப்பெற்ற தாய் பாசத்தையும், உதறி தள்ளி விட்டு தன் சுகந்தான் பெருசா நினைச்சு என் தம்பியை விட்டுட்டு அவ வாழ்க்கையை சுதந்திரமாக வாழ  எங்கேயோ யார் கூடவோ போயிட்டா! தெரியுமா.? 

இந்த விபரம் அறிந்து நான் என் தம்பியைக்காண  சென்றேன், அங்கே என் தம்பி “அண்ணா. இந்த ரெண்டு பேரையும், உன் குழந்தைகளோடு நல்லபடியா வளர்த்து ஆளாக்கிற சிரமத்தை உன்கிட்டே கொடுக்கறேன். அம்மா இருந்தும், இவர்களுக்கு இல்லையென்று ஆகி விட்டது. “அவள் ஓடிப் போனவள்!” என்ற பெயரோடு இந்த குழந்தைகள் இங்கு என்னிடம் வளர்வதை விட அம்மா இறந்து போயிட்டா! அப்பா எங்கேயோ போயிட்டார்! அதனாலே அப்பா அம்மா இல்லாத குழந்தைகள் இதுங்கற, பரிதாபத்திலேயே வளரட்டும். அதுதான் இவங்க வாழ்க்கைக்கும் எந்த தொந்தரவும் வராமல் இருக்கும். இதை வேறு யாரிடமும் சொல்லாதே! எதையாவது சொல்லி சமாளிச்சுக்கோ! இந்த பிரச்சனைகள் முடிஞ்சதும் நான் வேறு எங்கேயாவது போய் என்னால் முடிஞ்ச அளவு ஏதாவது வேலை செய்து உழைச்சு, உனக்கு பணம் அனுப்புறேன். இந்த குழந்தைகளை கை விடாமல் காப்பாத்து!” அப்படின்னு சொல்லி, உங்களை என்னிடம் ஒப்படைத்து விட்டு என்கிட்டே சத்தியமும் வாங்கிட்டு போனான். நானும் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு உன் அம்மாவை, நல்லவளாக்கி, என் தம்பியை கெட்டவனாக்கி, ஊர் வாயை மூடி உங்களை வளர்த்தேன். 

உன் திருமணத்திற்கு சில மாதங்கள் இருக்கும் போது வந்தவன், உங்களை பற்றி கேள்விப்பட்டு, உங்களைப்பற்றி மனம் நிறையப் பேசி, எவ்வளவு சந்தோசப்பட்டான் தெரியுமா? “என் குழந்தைகளா இப்படி”ன்னு எவ்வளவு பூரிப்படைந்தான் தெரியுமா? நான் அழைத்ததால், உன் திருமணத்திற்கும் யாரோ ஒருவன் மாதிரிதான் வந்து பார்த்து வாழ்த்திட்டு போனான். எல்லோரின் உதாசீனத்தையும், வெறுப்பையும் பார்த்தவன், உடனே கிளம்பிச் செல்வதாகதான் சொன்னான்.

இனி நான் இங்கு வரவேயில்லையெனச் சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டான்  தெரியுமா.? நான் தான் “உன் பையனுக்கும் திருமணம் ௬டி வருகிறது. அதற்கும் வந்திருந்து பார்த்து விட்டுப் போ!” என்று தடுத்தேன். அவன் கொடுத்த பணத்தில்தான் அன்று உன் திருமணத்தை சிறப்பாக செய்தேன். உன் தம்பியை அவன் விருப்பப்படி படிக்க வைத்தேன் 

ஒரு சிறந்த அப்பா இடத்திலே இருந்து, மறைமுகமா மறைஞ்சிருந்து, மானசீகமா, நீங்க நல்லா வாழனுன்னு நினைச்சபடி, வாழ்ந்து வந்திருக்கான் என் தம்பி! அவனையா ‘ஒரேடியா’ போகனுன்னு நினைக்கிறே! உன் மனசாற சபிக்கிறே பிரியா! சொல்லு?....சொல்லு..!" உணர்ச்சியுடன் கண்களில் நீர் மல்க கேட்டார் சேகர்.

"தன் தாயின் தவறை மறைக்க, அதுவும் தங்களின் நல்லதுக்காக, தங்களுக்கு அவப்பெயர் ஏதும் வரக்௬டாது என்பதை கருத்தில் கொண்டு, தன் வாழ்வையே தியாகம் செய்தது அப்பாவா? அவரையா இத்தனை நாள் தவறாக புரிந்து கொண்டு வெறுத்தோம்?" இதயத்தில் கூரிய கத்தி கொண்டு அறுத்தது போல் பிரியாவுக்கு வலித்தது. தன் தாயினால் தன் தந்தை பட்ட துயரங்களை கேட்டதும் விக்கித்து போனவளுக்கு, இத்தனை நாள் தவறான கண்ணோட்டத்தில் தந்தையை தப்பாக நினைத்த தன் செய்கைக்கு மனதும், கடுமையாக கனத்ததால் அவள் விழிகளி்ல் கண்ணீர் ஆறாக பயணித்து ஓடியது.

சட்டென்று எழுந்து பெரியப்பாவின் கைகளை இறுகப் பற்றியபடி, “பெரியப்பா இப்பவே, எங்கள் அப்பாவை பார்க்க போவோமா?” எனக்கு உடனே எங்கப்பாவை பார்க்கனும். அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வாய் விட்டு அழவேண்டுமென்று இருக்கு!” என்றபடி முகத்தை கைகளால் மூடியவாறு விம்மி விம்மி அழலானாள் பிரியா.

கதை நிறைவுற்றது
 

இக்கதையைப் படிக்கும் அனைவருக்கும் மீண்டும் என் பணிவான நன்றிகள்.🙏. 

24 comments:

  1. தாய் என்பவள் எப்போதும் குழந்தைகளிடம் அன்பு உடையவள். ஆனால் அவர்கள் வாழ்க்கைப் பாதையைத் தெளிவாகத் தருபவள் அல்ல. அந்தக் கடமை அப்பாவிடம்தான். அதனால்தான் அவர் கண்டிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது. பசங்கள் வளர்ந்து அவர்களுக்கு குழந்தை குடும்பம் என்று ஆன பிறகுதான் தந்தையின் அருமை பொதுவாகத் தெரியும்.

    தந்தையர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும், பதிவைப்பற்றி தங்களின் முத்தான கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      ஆம்..! ஒருவரின் வாழ்வில் அக்கறை கொண்டவர் தந்தையின் கண்டிப்பும், கடமையுந்தான். அவரின் கண்டிப்பு இளவயதில் புரியாது அவரை பாசமே இல்லாதவராகவும் காட்டி விடும். ஆனால், வயது வந்து ஒரளவுக்கு நாம் நல்ல நிலைக்கு வந்த பின் அவரின் கடமையின் பாசம் நன்கு புரியும். இளவயதில் அவரை சற்று புறக்கணித்த வருத்தமும் வரும். அந்த கண்டிப்புத்தான் நம் வளமான வாழ்க்கைக்கு அடித்தளம் என உணரும் போது,, அவர் மீது அத்தனை நாள் இல்லாத பாசம் வரும்.

      தங்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள். உங்களுடைய வாழ்த்துக்களும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
    2. தாய் என்பவள் எப்போதும் குழந்தைகளிடம் அன்பு உடையவள். ஆனால் அவர்கள் வாழ்க்கைப் பாதையைத் தெளிவாகத் தருபவள் அல்ல. //

      அப்படிச் சொல்ல முடியாது நெல்லை. பல வீடுகளில் அம்மா கண்டிப்புடனும் அப்பா செல்லத்துடனும் இருப்பதைப் பார்க்கலாம். எங்கள் வீடுகளிலேயே கூட. எனக்குமே அப்படித்தான்.

      நம்ம வீட்டுல இவர் ரொம்பவே செல்லம் பையனுக்கு. நானும் என்றாலும் சில விஷயங்களை ரொம்ப ஸ்ட்ராங்காகச் சொல்வேன். அது போல அவன் வாழ்க்கைப் பாதைக்கும்...

      கீதா

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நீங்கள் கூறுவது உண்மைதான். ஒரு தாயின் இயல்பான பாசத்துடன் கண்டிப்பாக குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களும் உள்ளனர். அப்படி தாயால் வளர்க்கப்படுபவர்கள் நல்ல மனதுடன், நல்ல பண்புகளுடன் தங்கள் வாழ்வை ஒழுங்கான பாதையில், திறம்பட நடத்தி செல்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. தாய் குழந்தைகளிடம் குற்றம் காணுவதில்லை. கண்டாலும் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் கோபித்து அவமதித்தாலும் அவளால் மறந்துவிட முடியும். ஆனால் தந்தை அப்படி அல்ல. என்பதையும் இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உண்மைதான்..! தாய் என்பவள் அன்பே உருவானவள் . அதனால் தன் குழந்தைகள் எத்தனை அவமரியாதை செய்தாலும், அதைப் பொருட்படுத்தாது அவர்களை மன்னித்து விடுவதோடு, மறுபடியும் அவர்களை அன்பாகவே நடத்துவாள். அது தான் தாயுள்ளம். இறைவனையும் தாய்க்கு உவமானதாகத்தான் சொல்வது உண்டு. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. எழுதிய கதை வித்தியாசமானது.

    மனைவி ஓடிப்போனதை, அவளுக்குக் கெட்ட பெயர் வராமல் தான் தாங்கிக்கொண்டு, குழந்தைகளை அண்ணனிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னது வித்தியாசமான தீம். நன்றாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கதை வித்தியாசமாக இருப்பதாக ரசித்தமைக்கு மிக்க நன்றி. அந்த மனைவியைப்போல உலகில் வித்தியாசமான மனநிலையோடு உள்ளவர்களும் உள்ளனர். பொதுவாக இந்த மாதிரி கணவன் செய்யும் தவறுகளை பொறுத்துக் கொண்டபடி இருக்கும் மனைவிகளுக்கு மத்தியில் இப்படியும் சிலர். தன் குழந்தைகளுக்காக தன் மனைவியின் செயலை மறைக்கப் பார்க்கும் சிறந்த தந்தையை தந்தையர் தினத்திற்காக தேர்ந்தெடுத்தேன். கதையை ரசித்துச் சொன்ன தாங்கள் கருத்துக்கு என் பணிவான நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பொதுவா நீரடித்து நீர் விலகாது என்பார்கள்.

    குழந்தைகளுக்கு அப்பா பாசம் காணமல் போய் விடுமா என்ற கேள்வி எழுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      குழந்தைகளுக்கு அப்பா எவ்வளவு செய்தாலும், தங்கள் தாயிடந்தான் அதிக பாசத்தை காட்டுவார்கள். காரணம் அவர்களுக்கு வேண்டியவைகளை , தாயின் மூலம் கண்டிப்பு, அதட்டல் ஏதுமின்றி பெற்று கொள்ளலாம் என்ற சுதந்திரமான எண்ணங்கள்தாம். அதனால் தந்தையின் அப்போதைய பாசம் கண்களை காண விடாமல் மறைத்து விடும். பிறகு தான் ஒரு அப்பாவாகியப் பின் அதை உணரும் போது காலம் கடந்து நடந்து வந்த பாதைகளின் வலிகள் மனதை குடையும். இதுதானே இயற்கையாய் நடந்து கொண்டுள்ளது. சிலர் இதற்கு விதி விலக்காக வாழ்கின்றனர். எல்லாமே இறைவனின் செயல். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. தாயின் அன்புடன் தந்தையால் குழந்தைகளை வளர்க்கமுடியாது என்றே நான் நினைக்கிறேன். தாய் அன்பு என்பது எல்லாவற்றிர்க்கும் மேலானது. எதிர்பார்ப்பு இல்லாத அன்பு அது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். உண்மை. தாயின் ய அன்பு எந்த அளவுகோலாலும்அளவிடமுடியாதது.

      /தாய் அன்பு என்பது எல்லாவற்றிர்க்கும் மேலானது. எதிர்பார்ப்பு இல்லாத அன்பு அது.//

      உண்மை...! எதிர்பார்ப்பது தவறு என உணர்ந்த அன்பு. அந்த உன்னதமான அன்புக்கு நாம் என்றுமே அடிமைகள்தாம்.

      ஒரு தாயின் அன்பை போலத்தான் தாங்களும் இன்று நான் எபியில் தெரிவித்தவுடன் வந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள் தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இரண்டு மாதங்கள் கழித்து பதிவு வந்திருப்பதை இப்போதுதான் கண்டேன்... ரொம்ப ஸ்லோ இல்லையோ? உங்கள் ஊர் அருகில் உள்ள பிரம்மதேசம் பற்றியும் எழுத இருக்கிறேன். போயிருக்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம் இரண்டு மாதங்கள் கழித்து என் பதிவாக ஒன்று எழுதியிருக்கிறேன். நீங்கள் நான் எழுதிய பதிவைப்பற்றி குறிப்பிட்டவுடன் வந்து ஆறு கருத்துரைகளை தந்தது என்னை மகிழ்விக்க செய்கிறது. மிக்க நன்றி உங்களுக்கு. ஆனால் உங்களைத்தவிர வேறு யாரும் எட்டிப் பார்க்காத பதிவை ஏன் எழுதினோம் என்ற ஒரு கேள்வியும் இடையே இன்று மனத்துள் எழுகிறது. என்ன செய்வது. எல்லாம் இறைவனின் விளையாட்டுகளில் ஒன்றுதான்

      பிரம்மதேசம் பற்றி எழுதுங்கள். படிக்க ஆவலோடிருக்கிறேன். அங்கு எங்கள் ஒன்று விட்ட நாத்தனார் குடும்பத்துடன் வசித்து வந்தார். எங்களை பலமுறை தங்கள் வீட்டுக்கு வரும்படி அழைத்ததால், ஒரு தடவை சென்றதாக நினைவு. அதுவும் சரியாக நினைவில்லில்லை. ஒரு வேளை அவர்கள் அதற்கு முன் குடியிருந்த அம்பாசமுத்திரமோ என்னவோ.!!

      பிரம்மதேசத்தில், மிகவும் குறைந்த விலையில் ஒரு வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகி விட்டார்கள். வீட்டின் வாசல், ஒரு தெருவில் ஆரம்பித்து, வீட்டின் பின்புறவாசல் அடுத்த பக்கத்துத் தெருவில் கொண்டு போய் விடும். அவ்வளவு பெரிய வீடு. கடல் போன்ற வீடு. நமக்கு அங்கிருக்கும் கொடுப்பினை இல்லையென்றுதான் கூற வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. இட்லிகள் தினத்துக்கு அப்புறம் இன்றுதான் பதிவா... இட்லி இப்போதுதான் ஜீரணமாச்சு போல..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உங்களைத்தான் நேற்று முழுவதும் எதிர்பார்த்தபடி இருந்தேன். எங்காவது வெளியில் செற்றிருப்பீர்கள் எனவும் ஊகித்தேன்.

      /இட்லி இப்போதுதான் ஜீரணமாச்சு போல..!/

      ஹா ஹா ஹா. ஆம். ஆனால், அது எப்போதுமே சீக்கிரமாக ஜீரணமாகும் உணவு. அதுவும் அப்படியே ஜீரணமாகி, இந்த தடவை அதிக பசியே (பதிவு போடும் ஆசை) வந்து விட்டது. அதனால் பொறுமையின்றி அவசர சாப்பாடு மாதிரி பதிவை தயாராக்கிப் போட்டாகி விட்டது. தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. அப்பாக்கள் தினத்தை உணர்ச்சிபூர்வமாக எங்கள் குடும்பத்திலும் நேற்று கொண்டாடினார்கள்.  எல்லோரும் அவரவர் அப்பா பற்றி நாலு வார்த்தை சொல்லி இருந்தார்கள்.  எல்லோருக்கும் அவரவர் அப்பா ஸ்பெஷல்தான்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      அப்பாக்கள் தினத்தை நன்றாக கொண்டாடிய உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துகள்.

      /எல்லோருக்கும் அவரவர் அப்பா ஸ்பெஷல்தான். /

      உண்மை..அப்பாவின் கண்டிப்பில் அவரது பாசம் ஆழமாக அடங்கியுள்ளது. அது புரிந்து கண்டவர்களுக்கு அவரவர் அப்பாக்கள் என்றுமே ஸ்பெஷல்தான். நானும் இன்று எங்கள் அப்பாவின் நினைவுகளை பகிரத்தான் ஆசை கொண்டேன். ஆனால், ஒய்வெடுக்கும் இரவின் அந்த நேரத்திற்குள் அது சாத்தியமாகவில்லை. தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கதை நன்றாக இருக்கிறது.  கதையை யூகிக்க முடிந்தது.  இவ்வளவு தியாகம் ஒரு அப்பா செய்வாரா, சுற்றுப்புறத்திலிருந்தோர் யாரும் அறியாமல் மனைவி செத்துப்போனாள் என்று சொல்ல முடியுமா என்கிற கேள்விகளைத் தவிர நெகிழ்ச்சியான கதை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கதை நன்றாக உள்ளதென ஊக்கமளித்ததற்கு மனமார்ந்த நன்றி.

      நிறைய தியாகங்களை செய்த அப்பாக்கள் உலகில் உள்ளனர். கதைக்காக இப்படி ஒரு தியாகத்தை நாம் உருவாக்குகிறோம் ஆனால் இது எங்கேனும் நிஜமாகி போவதும் உண்டு. வாழ்வியல்தான் கதைகளாக நம்மால் உருவெடுக்கிறது. சில கதைகளும் சி(ப)லர் வாழ்வோடு சம்பந்தப்பட்டு போகிறது அல்லவா.? நெகிழ்ச்சியான கதையென பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அக்கா மெதுவா எழுதுங்க...என்ன இருந்தாலும் நான் எழுதும் ஸ்பீடுக்கு உங்களால போட்டி போட முடியாது!!!! ஹாஹாஹா என்ன சொல்றேன்னு புரிந்ததா!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /என்ன இருந்தாலும் நான் எழுதும் ஸ்பீடுக்கு உங்களால போட்டி போட முடியாது!!!! ஹாஹாஹா என்ன சொல்றேன்னு புரிந்ததா!!!/

      ஹா ஹா ஹா. புரிகிறது சகோதரி. உண்மைதான்..! ஆனால், என்ன ஆனாலும் உங்களுடன் என்னால் போட்டிப் போட முடியாது. . (உங்களின் அருமையான எழுத்துக்களுடனும்.. :)) .) இதை உண்மையாகவே சொல்கிறேன். உங்கள் எழுத்துத் திறமையை முற்றிலும் உணர்ந்தவளாகச் சொல்கிறேன். நீங்கள் எங்கே, நான் எங்கே. மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசந்தான்.

      இந்தக்கதையைப்பற்றி நீங்கள் ஒன்றும் உங்கள் கருத்தாகக் கூறவில்லையே..! உங்கள் அன்பான கருத்துக்கள் என் மனதிற்கு எப்போதுமே மகிழ்வைத் தரும். அதனால்தான் கேட்கிறேன். எனினும், உங்களின் வருகையை எதிர்பார்த்திருந்த எனக்கு தங்களின் அன்பான வருகை கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. கமலாக்கா, கதையை வாசித்துக் கொண்டிருந்த போதே கரன்ட் போச்!! நம்ம ஏரியாவுல அடிக்கடி போகுது...இப்பதான் வாசித்து முடித்தேன்.

      என் கருத்துகள் மெதுவாக வரும் ஹிஹிஹி...ஒன்று வாசித்து கருத்து போட்டு இடையில் வேலை ஏதேனும் முடித்து அப்புறம் அடுத்த கமென்ட் என்று!

      கதை நன்றாக இருக்கிறது. ஒரு தந்தை தன் மீது இப்படியான பழியை ஏற்பது என்பது, அதற்கு அளவுக்கு மீறிய பக்குவம் இருந்தால்தான்....கதையின் போக்கை யூகிக்க முடிந்தது.

      அம்மா இறந்துவிட்டதாகச் சொல்வது பக்கத்து வீடுகளுக்குத் தெரியாமல் போகுமா என்ற கேள்வி வந்தாலும் உடனே மற்றொன்றும் தோன்றியது....இப்ப நாங்க இருக்கும் வீட்டில் மாடியில் மூன்று பேர், யார் என்ன என்பதே தெரியாது. அது போல அவங்களுக்கும் நாங்க யார் என்னன்னே தெரியாது. ஸோ எங்க வீட்டுல என்ன நடந்தாலும் தெரியப் போவதில்லை அவங்க வீட்டுல என்ன நடந்தாலும் தெரியப்போவதில்லை. யாரும் உறவாடுவதும் இல்லை. ஒரு வேளை அப்படியும் இருக்கலாம்... ஆனாலும் கூடவே இக்கேள்வி ஹிஹிஹி..

      தியாகங்கள் செய்யும் அப்பாக்கள் நிறைய இருக்கின்றனர்.

      மற்றபடி கதை மனதிற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

      நல்லா எழுதியிருக்கீங்க கமலாக்கா

      கீதா

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி

      /என் கருத்துகள் மெதுவாக வரும் ஹிஹிஹி...ஒன்று வாசித்து கருத்து போட்டு இடையில் வேலை ஏதேனும் முடித்து அப்புறம் அடுத்த கமென்ட் என்று!/

      நானும் அப்படித்தான்.! வாசித்து விடுவேன். இடையில் கருத்துக்கள் தரும் போது ஏதாவது வேலைகள் வந்து விட்டால், கைப்பேசியை கையிலேயே வைத்துக் கொள்ள இயலாமல் போய் விடும். . அதனால் நிறுத்தி விட்டு பிறகு எனும் போது நேரங்கள் பறந்து விடும். இப்போது மழை வேறு அடிக்கடி, இணையத் தொடர்பு, கரண்ட் கட் என இடைஞ்சல்கள் வேறு வருகிறது.

      நேற்றைய உங்கள் கருத்துக்கு இன்று தாமதமாக பதில் தருகிறேன். மன்னிக்கவும் சகோதரி.

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி. உண்மைதான் இப்போதெல்லாம், அண்டை வீட்டில் எந்த பிரச்சனை என்றாலும் கவனிக்க ஆட்கள் இல்லை. அவரவர் வேலை அவரவர்களுக்கு.

      கதையில் தம்பி தன் அண்ணனிடம் "இங்குள்ள பிரச்சனைகளை சரி செய்து விட்டு வேறு எங்காவது வேலைக்குச் சென்று பணம் அனுப்புகிறேன்" எனச் சொல்வதாகக் கூறியிருக்கிறேன்.

      அது போல் பெரியம்மா கேள்வி கேட்டு நச்சரிக்கும் குழந்தைகளிடம், "உங்கள் அம்மா ஓடி விட்டாள் எனச் சொல்லா மல், ஏதோ கூறி அவர்களை சமாளித்திருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளேன் சுருக்கமாக எழுதியதால், அந தப்பகுதிகளை விவரிக்க இயலவில்லை. மன்னிக்கவும். இது 14ல் எழுதியது. அப்போது இந்தக்கதைக்கு நீங்கள் வரவில்லை. இப்போது வந்தமைக்கு கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

      மற்றபடி கதையை ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete