உலகிலுள்ள அனைத்து சகோதரர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள். மற்றும் தாயுமாகி, தங்கள் செல்வங்களை ஒரு தந்தையின் அக்கறையான பொறுப்பில் பாதுகாத்து, தாயின் அன்புடன் சேர்ந்து ஒரு நல்ல தந்தையாகவே நின்று தந்தையின் கடமையோடு வளர்த்து அவர்களை வாழ்வில் வளம் பெறச் செய்யும் தாய்மார்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள். 🎉.
நான் பதிவுகள் எழுதி நிறைய நாளாகிறது. ஏன் மாதங்கள் பலவாகிறது எனவும் சொல்லலாம். ஏனோ முன்பு போல எழுதவே இயலவில்லை.அதற்கு நேரமின்மைகள்தான் காரணம். இப்போதெல்லாம் தினசரி ஒரு நாளைய நேரங்கள் கண் மூடி திறப்பதற்குள் சிட்டாகப் பறக்கிறது.
அன்னையர் தினத்திற்காக ஒன்று எழுதி, அது பாதியில் நிற்கிறது. (இன்னமும் நிறைய பதிவுகளும் அப்படித்தான். டிராப்டில்தான் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றன ) சென்ற (இட்லிதினம்) பதிவுக்கு அந்த தினத்திற்காக, அவசரமாக ஒரு நாலு வரி எழுதி, (அரைத்த மாவையே மறுபடி அரைத்து) ஒரு பதிவாக்கினேன். அதற்கு உடனடியாக கருத்து தந்தவர்களுக்கு தொடர்ச்சியாக பதில் தர இயலாமல் போனது. ஊருக்குப்பயணம், உடல் நிலை பாதிப்பு என பல காரணங்கள். (இன்னமும் நீ பதில்கள் தரவில்லை என மனம் சுட்டிக் காட்டுகிறது.) அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். சமயம் வாய்த்தவுடன் கண்டிப்பாக அதற்குப் பதில் தருகிறேன்.
இப்போது அடுத்து தந்தையர் தினமே வந்து விட்டது. அதற்காகவேனும் ஏதேனும் எழுதலாமென்றால், அதற்கும் யோசிக்க நேரங்கள் சரியாக அமையவில்லை. அதனால், 2014ல் தந்தையர் தினத்திற்காக எழுதிய ஒரு கதையையே இந்த தடவையும் அவசரமாக மீள் பதிவாக்குகிறேன். ஏற்கனவே அதைப் படித்து கருத்து தெரிவித்தவர்களுக்கு என் அன்பான நன்றிகள். இப்போதும் இதைப் புதிதாக எண்ணிப் படிக்கும் என் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.
இனி தந்தையர் தினத்திற்காக அன்று எழுதிய "அப்பா" என்ற சிறுகதை.
“பெரியப்பா!..” என்று அழைத்தபடி ஓடி வந்து அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள் பிரியா.
“வாம்மா! உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்! எப்படி இருக்கே? மாப்பிள்ளை நல்லா இருக்காரா?” அவள் தோளை பற்றி லேசாக அணைத்தபடி, அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றார் அவள் பெரியப்பா சேகர்
பெரியம்மா, அண்ணன், அண்ணி, தங்கை என அன்பு உறவுகள் அவளைச் சுற்றி நலம் விசாரித்து அன்பு கடலில் மூழ்கடித்து அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
“பிரியா! போய் குளித்து விட்டு சாப்பிட வா! உனக்கு பிடிச்ச அடையும் அவியலும் பண்ணியிருக்கேன்! சீக்கிரம் வா! சூடு ஆறிடும்.” என்று அன்பு கட்டளை இட்டபடி பெரியம்மா உள்ளே சென்றாள்.
அண்ணனும் அண்ணியும் “அதேயே சொல்லி விட்டு முக்கியமான வேலை ஒன்றுக்காக வெளியில் சென்று வந்து விடுகிறோம்” என்று ௬றி அகல, தங்கை “உன் லக்கேஜை உன் அறையில் கொண்டு வைக்கிறேனக்கா!” என்றபடி மாடியேறி சென்றாள்.
“பெரியப்பா! தம்பி இன்னுமா வரவில்லை? என்ற பிரியாவுக்கு, “அவனுக்கு வேலை அதிகமா இருக்கிறதாலே, இன்னைக்கு புறப்பட்டு நாளை காலையிலே வந்துடுவாம்மா! அதற்கு மறுநாள்தானே நிச்சயதார்த்தம்! சரி! நீ போய் குளித்து விட்டு வா! சாப்பிடலாம்! "என்ற பெரியப்பாவை கனிவுடன் பார்த்த பிரியா “சரி! இதோ! வந்து விடுகிறேன். நீங்கள் போய் சாப்பிட ஆரம்பியுங்கள். நான் வந்து உங்களுடன் ஜாயின் பண்ணிக்கிறேன்!” என்றபடி தன் அறைக்கு சென்றாள்.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் வீடு கலகலப்பாக இருந்தது. தன் ஒரே தம்பியின் நிச்சயதார்த்தம், உறவினர் ௬ட்டத்தின் கலகலப்போடு நன்றாக முடிய, அவன் திருமண தேதியும், இரு மாதத்திற்கு பின் முடிவு செய்யபட்ட சந்தோஷத்தில், அவள் தம்பியும், வேலை பார்க்கும் தன் ஊருக்கு திரும்பிச்செல்ல, பிரியாவும் தானும் தன் ஊருக்கு கிளம்ப போவதாக சேகரிடம் சொன்னாள்.
“கல்யாணத்துக்கு நிறைய வேலை இருக்கு பிரியா! அதனாலே நீ இப்ப வந்த மாதிரி வராம பத்து இருபது நாளுக்கு முன்னாடியே புறப்பட்டு வந்து விடு! எனக்கும் முன்பு மாதிரி தனியா எல்லா வேலையும் பண்ண முடியல்லை!” என்று இடையில் வந்து சொல்லிச் சென்ற பெரியம்மாவுக்கு “சரி பெரியம்மா!” என்றவள் “பெரியப்பா! உங்களிடம் கொஞ்சம் தனியா பேசனும்!” என்றவாறே அவரது அறையை நோக்கி நடந்தாள்.
“அதற்கென்ன! பேசலாம் வா!” என்றபடி தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்ற சேகர், “என்னம்மா பிரியா? நானும் பார்த்தேன்! நீ நேற்றிலிருந்து ஒரு மாதிரியாகவே இருக்கறே! என்ன விஷயம்? என்றார்.
“ பெரியப்பா! நேரடியாக நான் விஷயத்துக்கே வருகிறேன். உங்களுக்கு பிறந்த இரு குழந்தைகளோடு என்னையும் என் தம்பியையும் நீங்கள்தான் சிறுவயது முதல் வளர்த்து ஆளாக்கி என்னையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து இப்போ என் தம்பிக்கும் நல்ல இடத்தில் பெண் பார்த்து ஒரு அப்பா அம்மா ஸ்தானத்திலே நின்னு எல்லாம் பண்ணறீங்க! நடுவிலே இந்த ஆளுக்கு இங்கு என்ன பெரியப்பா வேலை? இவர் ஏன் என் திருமணத்திலேயும் கலந்துகிட்டாரு? இப்போ தம்பி நிச்சயத்திலேயும்…. இன்னமும் அவன் கல்யாணத்திலேயும் வந்து அசிங்கபடுத்துவாரா? பெரியப்பா! ஏன் எங்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் அவருக்கும் சொல்லி அவரையும் கூப்பிடுறீங்க? என்று கோபமாக படபடத்தாள் பிரியா.
“ஏன்னா? அவன் உன் அப்பாம்மா! உன்னை பெற்றவன் அவன்…! உங்களுக்கு நடக்கிற நல்லதுகளை பார்க்கிற உரிமை, சந்தோசம், திருப்தி அவனுக்கில்லியா? அதுக்கும் மேலே என் தம்பிக்கு நான் சொல்லி வரவழைக்காமே, இருக்க முடியுமா? சொல்லு!” என்று நிதானமாக ஆரம்பித்த பெரியப்பாவை இடைமறித்தாள் பிரியா.
“அப்பாவா? அவரை அப்பா என்று அறிந்த நாள் முதல் கொண்டு மனதும் உடம்பும் கூசுகிறது! பெரியப்பா!
தன் பெற்றோர் பேச்சுக்கு, மறுபேச்சு ஏதும் கூறாமல், அவர்களது வார்த்தைக்கு மதிப்பளித்து அவர்களது விருப்பப்படி இவரை கல்யாணம் செய்துகிட்ட அம்மாவை, வார்த்தைகளால், அவள் உயிரையும், மனதையும் கொன்ற கொலைகார பாவின்னு தெரிஞ்ச நாள் முதலாய் இவரும் போய் சேர்ந்திருக்க கூடாதான்னு மனசு அடிச்சுக்குது,
ஜெயில் வாசம் மாதிரி எங்கேயோ கண்காணாத இடத்திலே இருந்தவர், ஒருநாள் திடீர்னு எங்க ஞாபகம் வந்து இங்க வந்து, "நான்தான் உங்கள் அப்பான்னு” அறிமுகப் படுத்திண்டு நின்ன அந்த நாளை என்னாலே மறக்கவே முடியாது பெரியப்பா! நம்ம பெரியம்மா அந்த கதையெல்லாம் எங்களுக்கு சொன்ன, அந்த நிமிடத்திலிருந்து, அவரை பார்த்தாலே எங்களுக்கு பிடிக்கல்லே பெரியப்பா! ஆனா, அதுவரைக்கும் எங்களுக்கு எந்த விபரமும் சரியா தெரியாததாலே உங்களைதான் பெரியப்பா நாங்க அப்பா, அம்மாவா நினைச்சு வாழ்ந்துகிட்டு வந்தோம். இப்பவும் உங்களை தவிர வேறு யாரையும்……மனசாலே ௬ட அப்பாவா ஏத்துக்க எங்களாலே முடியாது!” என்றபடி கண்கள் கலங்க பேச முடியாது, இன்னமும் சற்றும், கோபம் குறையாத குரலில் தடுமாறினாள் பிரியா.
அவள் அருகில் வந்து அன்புடன், அவள் கைபிடித்து கட்டிலில் அமர வைத்த சேகர், “நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே என் குழந்தைகள்தான், பிரியா! அதுலே எந்த மாற்றமும் கிடையாது! என்றதும் “அப்படியானால், இனி அவரை நீங்க தம்பி கல்யாணத்துக்கு வரச் சொல்லாதீங்க பெரியப்பா! தம்பியும் வருத்தப்பட்டான். நான்தான் உங்ககிட்டே பேசி "உன் கல்யாணத்துக்கு அவரை வராமே தடுக்கறேன்னு, அவனை சமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பினேன்." என்றாள் பிரியா.
“இந்த கல்யாணத்தை மட்டும் அவன் பார்த்துட்டு அவன் பழையபடி தான் இது வரைக்கும் இருந்த இடத்துக்கே போயிடுவானம்மா! தன் குழந்தைங்க திருமணத்தை பார்க்கற வாய்ப்பை ௬ட அவனுக்கு நான் தராமல் போனால் எப்படி? அவ்வளவு பெரிய பாவத்தை நான் எப்படி செய்வேன்? பெரியப்பா குரல் கம்ம ௬றியதை கேட்டதும் பிரியாவுக்கு ஆத்திரமாக வந்தது.
“ யார் பாவி? நீங்களா? இல்லை அவரா? அந்த பாவி மேல் ஏன்தான் இப்படி இரக்கம் காட்டுறீங்களோ தெரியல! தம்பி திருமணத்திற்கு அவர் வந்து பார்த்து விட்டு எங்கேயோ போவதற்கு முன், இப்போதே அவர் ஒரேடியாக போய் தொலைந்தால்தான் என்ன?" கோபத்தில் வார்த்தைகள் பிரியாவிடமிருந்து வெடித்தன.
“பிரியா!!!!! சேகர் ஆவேசமாக கத்தினார். பின் ஒரு நிமிடத்தில் சற்று சுதாரித்து கொண்டவராய் அவள் அருகில் வந்து கையை பிடித்தபடி, பிரியா! என் தம்பியை பற்றி உனக்கு தெரியாது! அதனால்தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்!
பிரியா! உங்களுக்கெல்லாம் தெரியாத உண்மையை நான் இப்போது அவனுக்கு தந்த வாக்குறுதியையும் மீறி சொல்லத்தான் போறேன். இப்போது நீ புரிந்து கொள்ளும் வயதையும் அடைந்து விட்டாய்! "
உங்களுக்காகத்தான் உன் பெரியம்மா அன்று அப்படி சொன்ன பொய் கதை. உங்களுக்காக மாற்றிச் சொன்னாள்
உன் பெரியம்மா சொன்னபடி
உன் அம்மாவை அவன் கொல்லவில்லை!அவனைதான் கொன்று சிதைத்து விட்டாள் உன் அம்மா. அந்த மாதிரி ஒரு பழியை அவன் மீது சுமத்தி விட்டு நீங்கள் சின்ன குழந்தைகள்”னு ௬ட இரக்கம் இல்லாமே இயற்கையாய் அமையப்பெற்ற தாய் பாசத்தையும், உதறி தள்ளி விட்டு தன் சுகந்தான் பெருசா நினைச்சு என் தம்பியை விட்டுட்டு அவ வாழ்க்கையை சுதந்திரமாக வாழ எங்கேயோ யார் கூடவோ போயிட்டா! தெரியுமா.?
இந்த விபரம் அறிந்து நான் என் தம்பியைக்காண சென்றேன், அங்கே என் தம்பி “அண்ணா. இந்த ரெண்டு பேரையும், உன் குழந்தைகளோடு நல்லபடியா வளர்த்து ஆளாக்கிற சிரமத்தை உன்கிட்டே கொடுக்கறேன். அம்மா இருந்தும், இவர்களுக்கு இல்லையென்று ஆகி விட்டது. “அவள் ஓடிப் போனவள்!” என்ற பெயரோடு இந்த குழந்தைகள் இங்கு என்னிடம் வளர்வதை விட அம்மா இறந்து போயிட்டா! அப்பா எங்கேயோ போயிட்டார்! அதனாலே அப்பா அம்மா இல்லாத குழந்தைகள் இதுங்கற, பரிதாபத்திலேயே வளரட்டும். அதுதான் இவங்க வாழ்க்கைக்கும் எந்த தொந்தரவும் வராமல் இருக்கும். இதை வேறு யாரிடமும் சொல்லாதே! எதையாவது சொல்லி சமாளிச்சுக்கோ! இந்த பிரச்சனைகள் முடிஞ்சதும் நான் வேறு எங்கேயாவது போய் என்னால் முடிஞ்ச அளவு ஏதாவது வேலை செய்து உழைச்சு, உனக்கு பணம் அனுப்புறேன். இந்த குழந்தைகளை கை விடாமல் காப்பாத்து!” அப்படின்னு சொல்லி, உங்களை என்னிடம் ஒப்படைத்து விட்டு என்கிட்டே சத்தியமும் வாங்கிட்டு போனான். நானும் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு உன் அம்மாவை, நல்லவளாக்கி, என் தம்பியை கெட்டவனாக்கி, ஊர் வாயை மூடி உங்களை வளர்த்தேன்.
உன் திருமணத்திற்கு சில மாதங்கள் இருக்கும் போது வந்தவன், உங்களை பற்றி கேள்விப்பட்டு, உங்களைப்பற்றி மனம் நிறையப் பேசி, எவ்வளவு சந்தோசப்பட்டான் தெரியுமா? “என் குழந்தைகளா இப்படி”ன்னு எவ்வளவு பூரிப்படைந்தான் தெரியுமா? நான் அழைத்ததால், உன் திருமணத்திற்கும் யாரோ ஒருவன் மாதிரிதான் வந்து பார்த்து வாழ்த்திட்டு போனான். எல்லோரின் உதாசீனத்தையும், வெறுப்பையும் பார்த்தவன், உடனே கிளம்பிச் செல்வதாகதான் சொன்னான்.
இனி நான் இங்கு வரவேயில்லையெனச் சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டான் தெரியுமா.? நான் தான் “உன் பையனுக்கும் திருமணம் ௬டி வருகிறது. அதற்கும் வந்திருந்து பார்த்து விட்டுப் போ!” என்று தடுத்தேன். அவன் கொடுத்த பணத்தில்தான் அன்று உன் திருமணத்தை சிறப்பாக செய்தேன். உன் தம்பியை அவன் விருப்பப்படி படிக்க வைத்தேன்
ஒரு சிறந்த அப்பா இடத்திலே இருந்து, மறைமுகமா மறைஞ்சிருந்து, மானசீகமா, நீங்க நல்லா வாழனுன்னு நினைச்சபடி, வாழ்ந்து வந்திருக்கான் என் தம்பி! அவனையா ‘ஒரேடியா’ போகனுன்னு நினைக்கிறே! உன் மனசாற சபிக்கிறே பிரியா! சொல்லு?....சொல்லு..!" உணர்ச்சியுடன் கண்களில் நீர் மல்க கேட்டார் சேகர்.
"தன் தாயின் தவறை மறைக்க, அதுவும் தங்களின் நல்லதுக்காக, தங்களுக்கு அவப்பெயர் ஏதும் வரக்௬டாது என்பதை கருத்தில் கொண்டு, தன் வாழ்வையே தியாகம் செய்தது அப்பாவா? அவரையா இத்தனை நாள் தவறாக புரிந்து கொண்டு வெறுத்தோம்?" இதயத்தில் கூரிய கத்தி கொண்டு அறுத்தது போல் பிரியாவுக்கு வலித்தது. தன் தாயினால் தன் தந்தை பட்ட துயரங்களை கேட்டதும் விக்கித்து போனவளுக்கு, இத்தனை நாள் தவறான கண்ணோட்டத்தில் தந்தையை தப்பாக நினைத்த தன் செய்கைக்கு மனதும், கடுமையாக கனத்ததால் அவள் விழிகளி்ல் கண்ணீர் ஆறாக பயணித்து ஓடியது.
சட்டென்று எழுந்து பெரியப்பாவின் கைகளை இறுகப் பற்றியபடி, “பெரியப்பா இப்பவே, எங்கள் அப்பாவை பார்க்க போவோமா?” எனக்கு உடனே எங்கப்பாவை பார்க்கனும். அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வாய் விட்டு அழவேண்டுமென்று இருக்கு!” என்றபடி முகத்தை கைகளால் மூடியவாறு விம்மி விம்மி அழலானாள் பிரியா.
கதை நிறைவுற்றது
இக்கதையைப் படிக்கும் அனைவருக்கும் மீண்டும் என் பணிவான நன்றிகள்.🙏.
தாய் என்பவள் எப்போதும் குழந்தைகளிடம் அன்பு உடையவள். ஆனால் அவர்கள் வாழ்க்கைப் பாதையைத் தெளிவாகத் தருபவள் அல்ல. அந்தக் கடமை அப்பாவிடம்தான். அதனால்தான் அவர் கண்டிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது. பசங்கள் வளர்ந்து அவர்களுக்கு குழந்தை குடும்பம் என்று ஆன பிறகுதான் தந்தையின் அருமை பொதுவாகத் தெரியும்.
ReplyDeleteதந்தையர் தின வாழ்த்துகள்
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான முதல் வருகைக்கும், பதிவைப்பற்றி தங்களின் முத்தான கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோதரரே.
ஆம்..! ஒருவரின் வாழ்வில் அக்கறை கொண்டவர் தந்தையின் கண்டிப்பும், கடமையுந்தான். அவரின் கண்டிப்பு இளவயதில் புரியாது அவரை பாசமே இல்லாதவராகவும் காட்டி விடும். ஆனால், வயது வந்து ஒரளவுக்கு நாம் நல்ல நிலைக்கு வந்த பின் அவரின் கடமையின் பாசம் நன்கு புரியும். இளவயதில் அவரை சற்று புறக்கணித்த வருத்தமும் வரும். அந்த கண்டிப்புத்தான் நம் வளமான வாழ்க்கைக்கு அடித்தளம் என உணரும் போது,, அவர் மீது அத்தனை நாள் இல்லாத பாசம் வரும்.
தங்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள். உங்களுடைய வாழ்த்துக்களும் மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
தாய் குழந்தைகளிடம் குற்றம் காணுவதில்லை. கண்டாலும் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் கோபித்து அவமதித்தாலும் அவளால் மறந்துவிட முடியும். ஆனால் தந்தை அப்படி அல்ல. என்பதையும் இங்கு சொல்லிக்கொள்கிறேன்.
ReplyDeleteஎழுதிய கதை வித்தியாசமானது.
ReplyDeleteமனைவி ஓடிப்போனதை, அவளுக்குக் கெட்ட பெயர் வராமல் தான் தாங்கிக்கொண்டு, குழந்தைகளை அண்ணனிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னது வித்தியாசமான தீம். நன்றாக இருந்தது.
பொதுவா நீரடித்து நீர் விலகாது என்பார்கள்.
ReplyDeleteகுழந்தைகளுக்கு அப்பா பாசம் காணமல் போய் விடுமா என்ற கேள்வி எழுகிறது.
தாயின் அன்புடன் தந்தையால் குழந்தைகளை வளர்க்கமுடியாது என்றே நான் நினைக்கிறேன். தாய் அன்பு என்பது எல்லாவற்றிர்க்கும் மேலானது. எதிர்பார்ப்பு இல்லாத அன்பு அது.
ReplyDeleteஇரண்டு மாதங்கள் கழித்து பதிவு வந்திருப்பதை இப்போதுதான் கண்டேன்... ரொம்ப ஸ்லோ இல்லையோ? உங்கள் ஊர் அருகில் உள்ள பிரம்மதேசம் பற்றியும் எழுத இருக்கிறேன். போயிருக்கிறீர்களா?
ReplyDelete