Thursday, February 1, 2024

கவசங்கள்.

 இது சமீபத்தில் (நான் எழுத ஆரம்பித்த போது இந்த சமீபத்தில்...... இப்போது அதைக் கடந்த செய்திகள் இதை தொலை தூரம் ஆக்கியிருக்கலாம் .எனவே இந்த  சமீபத்திய என்ற வார்த்தையை கண்டு கொள்ளாதீர்கள். :)))).) எ. பியில் தினமும் செய்தி அறை என்ற புதிய பகுதி (ஒரு சில  மாதங்களுக்கு முன் சென்ற வருடமென நினைக்கிறேன்) வந்து கொண்டிருக்கும் போது அதில் படித்த ஒரு செய்தி. 

/அமெரிக்காவில் ஒரு ஷு கடைக்குள் நுழைந்து வலது கால் ஷுக்களை மட்டும் திருடிய திருடர்கள்😀- சிரிப்புத் திருடர்கள். /

செய்தி கருத்துக்குப் பதிலாக "ஒரு கால் ஷுவை மட்டும் வைத்து அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று நான் கேட்டிருந்தேன்.

இதனைப் படித்ததும்  நாங்கள் இங்கு வந்த புதிதில்,  (இந்த ஏரியாவுக்கு) சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. பழைய வீட்டிலிருந்து  அப்போதுதான் நாற்பது வீடுகளுக்கு மேலிருக்கும் அந்த அப்பார்ட்மெண்டுக்கு குடி வந்திருந்தோம். எங்களைப்போல் ஒரு பதினைந்து, இருபது பேர்கள்தான் வந்திருந்தாரகள். பாக்கி வீடுகளில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்ததும் விட்டார்கள்.அதுபோல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று அப்பார்ட்மெண்ட்கள். அங்கும் நாற்பது வீடுகளில் பேர்பாதிதான் வந்திருந்தனர். 

அன்று இரவு நேரம். மதியம் ஷிப்ட் வேலைக்குப்  போயிருக்கும் என் குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து சாப்பிட்டு படுக்கவே பத்து பதினொன்று ஆகி விட்டது. மகள் மட்டும் நைட் ஷிப்ட் முடிந்து மூன்று மணிக்கு மேல்தான் வருவாள். சமயத்தில் நாலு மணி கூட ஆகிவிடும். எனக்கு அப்போதெல்லாம்  என்றுமே அதுவரை உறக்கம் கிடையாது. அவள் வந்த பிறகு கொஞ்சம் பேசி விட்டு நான்கு நாலரைக்கு மேல் மணிக்கு உறங்கி காலையில் 6 6.30க்கு எழ வேண்டும்.(காலையில் வேலைக்குப் போகும் மகன்களுக்கு ஏதாவது சமையல் செய்து தர.) 

நான் வாசலில் போய் நிற்காமல் பால்கனிக்கும், (பால்கனியிலிருந்து பார்த்தால் அவள் வரும் கேப் அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து நிற்பது தெரியும்.) ஒரு பெட்ரூம் அருகிலேயே வீட்டு வாசல் இருப்பதால்  அங்குமாகவும் அலைந்து கொண்டிருப்பேன். அவள் வீடு வந்து இறங்கும் நேரத்தில் ஃபோன் செய்வாள். இருப்பினும் எனக்கு கண் அசந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்.

ஒரு மூன்றரை மணி போலே வாசல் பெட்ரூம் ஜன்னல் வழியாக திரை விலக்கி பார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. ஷுரேக் கதவகள் இரண்டும்  திறந்திருந்தது. ஒரு வேளை மகள் ஃபோன் செய்ய மறந்து போய் மாடியேறி வீட்டு வாசலுக்கே வந்து விட்டாளோ..? அவள்தான் கதவை திறந்து காலணிகளை வைப்பதற்காக காலணிகள் வைக்கும் கதவை திறந்துள்ளாளோ...? என நினைத்து விரைந்து வந்து வாசல் கதவை திறந்தால் யாரையும் காணவில்லை. மறுபடியும் ஹாலுக்கு அருகிலிருக்கும் பெட்ரூம் ஜன்னல் வழி சென்று பார்த்தால் அந்த செருப்பு வைக்குமிடம் கதவுகள் ஹோ.....வென திறந்தேதான் இருந்தது. கொஞ்ச நேரம் முன்பு கூட மூடியிருந்தது நினைவுக்கு வரவே மறுபடி பால்கனி பிரவேசம். ஒரு மாதிரியான குழப்பத்தற்கு நடுவே யாரோ திருடன்தான் வந்திருப்பானோ....! மகள் வரும் சமயமாயிற்றே.. நாங்கள் இருப்பது மூன்றாவது மாடி. அவள் சமயங்களில் மின் தூக்கியை உபயோகிக்காமல் படிகளில் ஏறி வந்து விடுவாள்... என பலதும் எண்ணவும், என் இதய படபடப்பு கூடியது.

அவ்வளவுதான்...! வீட்டில் இருப்பவர்களை எழுப்பும் படலம். அவர்களால் சட்டென  எழுந்திருக்கவா முடிகிறது.  அதற்குள் மகள் நான் நினைத்தபடி மாடிப் படியேறி வந்தே விட்டாள். நான் பத்து நிமிடமாக தவிப்புடன்  வீட்டிற்குள் அங்குமிங்கும் அலைந்ததில் அவளின் மிஸ்ட்கால் எனக்கு கேட்கவில்லை. அவளைப் பார்த்தவுடன்  அதிர்ச்சியோடு நான் விஷயத்த்தை  சொல்ல, அவள் சொன்ன விஷயம் மேலும் அதிர்ச்சியை தந்தது. "ஆமாம் அம்மா.. எல்லா ப்ளோரிலும் காலணிகள் வைக்கும் அலமாரி திறந்துதான் இருக்கிறது. நானும் ஒரு வித ஆச்சரியத்தோடுதான் பார்த்தபடி படியேறி வருகிறேன்." என்றாளே பார்க்கலாம்..! 

பிறகு அவசரமாக ஒரு மட்டும் மகன்களை எழுப்பி விஷயத்தைச் சொல்லி புரிய வைத்து, அவர் அப்பார்ட்மெண்ட் வாசலில் இருக்கும் செக்யூரிட்டிக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்லி, அவர் வந்து ஒவ்வொரு வீட்டிலும் காலிங் பெல் அழுத்தி தகவலைச் சொல்லி மொத்தத்தில் அன்றைய நாள் எனக்கு  அந்த இரண்டு மணி நேர உறக்கமுமின்றி விடிந்தே விட்டது. 

அது ஸ்பிரிங் உள்ள கதவு. எல்லா வீட்டிலும் முக்கால்வாசி அப்படித்தான். (கதவை கவனமாக கைகளால் பிடித்தபடி சார்த்தாவிடில் "டக்"கென்ற சத்தம் கேட்கும்) என்பதால் வந்தவன்/ வந்தவர்கள் ஜாக்கிரதையாக கதவை சார்த்தாமல், அதிலுள்ள பல ஷூக்களை மட்டும் லவட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறான்./ கள். அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் அத்தனை பேர் செருப்புகள், ஷுக்களும் இதைப் போலவே அபேஸ். ஒவ்வொருவரும் ஆகா... இப்போதுதான் வாங்கினேன். 3000,4000 போச்சே.. என புலம்பினார்கள். எங்கள் மகன்களின் புது ஷுக்களும், அப்போதுதான் வாங்கிய  நல்லச் செருப்புக்களும் போயே போச்சு.

இதுதான் வியப்பு என்றால் அருகருகே இருக்கும் மற்ற மூன்று அப்பார்ட்மென்டிலும் இதே நிகழ்வு அந்த ஒரு இரவுக்குள் அதே நேரத்தில் நடந்திருக்கிறது. நாங்கள் அனைவரும் கூடிக்கூடி மறுநாள் மதியம் வரை பேசி என்ன பயன்? பிறகு அதன் பலனாக வாசல் கேட்டுக்கு புதிதாக இரண்டு மூன்று காவலாளிகள் (இரவு நேரத்திற்கென) நியமிக்கப்பட்டார்கள். திருட்டை முதலில் பார்த்துச் சொன்னவர்கள் என்ற பேரும் புகழும் எனக்கு கிடைத்ததா என்றால் அதுவும் தெரியவில்லை. ஹா ஹா ஹா. 

அது சரி..! இந்த வகையறாக்களை கொண்டு சென்றவர்கள் அதை என்ன செய்வார்கள்..? தெரிந்த கடைகளில் கம்மியான விலையில் தள்ளி விடுவார்களோ ? இல்லை எங்ககேனும் பிளாட்பாரத்தில் கடை விரித்து  போட்டிருப்பார்களோ? புரியவில்லை. கடை முகவரி பலகைகள் ஏதும் இல்லாது சிலசமயம் பிளாட்பாரத்தில் ஷூ, செருப்பு கடைகளை அப்போதெல்லாம் பார்க்கும் போதெல்லாம்  எனக்கு இதில் நம் வீட்டு காணாமல் போன ஷூக்களும் இருக்கும் எனத் தோன்றுவதுண்டு. ஆனால், இங்கு வந்த புதிதில் பார்த்த இக்கடைகளை இப்போது ஏனோ அவ்வளவாக காண்பதில்லை. 

அதே நாங்கள் இங்கு வரும் முன்பு ஒரு இடத்தில் வாடகைக்கு இருந்த போது, (அதுவும் மூன்றடுக்கு மாடி) இப்படியான ஒரு சம்பவம்  ஒரு இரவில் வாசலில் வைத்திருந்தில் நடந்து (எங்களுக்கு மட்டும்.) பல ஷீக்கள் செருப்புகள் மாயமாகி உள்ளது. அந்த திருட்டை எப்போது நடந்தது எப்படியென கண்டு பிடிக்கவே முடியவில்லை. காலையில் கண் விழித்ததுந்தான் பார்த்தோம் .அதுவும், அந்த வாசலில் கம்பி கேட்டுக்கு முன் அது எங்கள் பகுதியாகையால், கொடி கட்டி துணிகள் உலர்த்துவோம. அதில் பெரிய துணியாக ஒன்றை எடுத்து அதில் ஷீக்களையும், செருப்புக்களையும் வைத்து அழகாக பேக் செய்து எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள். மூன்று அடுக்கு வீட்டின் மேல் மாடியில்தான் வீட்டு உரிமையாளர்கள் இருந்தனர். அவர்களும் மறுநாள் நாங்கள் விஷயம் சொன்னவுடன் "அப்படியா....! இதுவரை இப்படி நடந்ததில்லையே ..!! என ஆச்சரியபட்டார்கள். அத்தோடு போச்சு...!!" ஷீக்களையும் காலணிகளையும் நாம்தான் போட்டுக் கொண்டு நடப்போமே தவிர அது தானாகவே ஒரு போதும் நடந்து வெளியில் சென்றிருக்க முடியாது..!" என மெளனமாக அந்த விஷயத்தை ஜீரணித்துக் கொண்டோம். :)) வேறு வழி...? 

அது போல அங்கிருந்த போது ஒரு மாலை நேரம் யாரோ ஒருவர் தன் இருச்சக்கர வாகனத்தை தெருவில் ஓரமாக நிறுத்தி விட்டு, அதன் கைப்பிடியிலேயே தன்  தலைக் கவசத்தையம் மாட்டி விட்டு அருகில் உள்ள கடைகளுக்கு செல்வதையும் யதேச்சையாக ஜன்னல் வழியாக கவனித்தேன். பிறகு கொஞ்ச நேரத்தில் அக்கம்பக்கம் பார்த்தபடி வேறொருவர்  வந்து (திருட்டுத்தனமாக) அந்தக் கவசத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வேறொரு பக்கமாக விரைந்து  நடந்து செல்வதை பார்த்து அதிர்ந்தேன். இப்படியும் நடக்குமா? என்பதே சும்மா ரோடை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு பதட்டமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது . இந்த மாதிரி கவசங்கள் அவரவர்களுக்கு பொருத்தமாகத்தான் பார்த்து  வாங்க முடியுமென அப்போது வீட்டிலுள்ளவர்கள் சொல்லி தெரிந்து கொண்டேன். பிறகு எப்படி இப்படி? 

தலைகவசங்கள் கடைகள் மட்டும் இன்றும் பிளாட்பாரங்களில் ஜோராக நடைபெறுவதை பார்க்கிறேன்.ஆனால், நேர்மையான அவர்களையும் யாரோ ஓரிருவர் இப்படிச் செய்யும் தவறுதான் இப்படியெல்லாம் சந்தேகிக்க வைக்கிறது இல்லையா ?

கடந்த வருடம் ரொம்ப நாட்களாக பதிவுகள் ஏதும் போட முடியவில்லை. இதை எ. பியில் இந்த  செய்தி அறை பகுதியில் இந்தச்செய்தி வந்தவுடன் இந்த நினைவு வந்து எழுத ஆரம்பித்தும் முடிக்கவும் இயலவில்லை. இன்னமும் எழுத நிறைய உள்ளது. மனம் இருப்பனும் மார்க்கம் அமைய வேணடாமா? அப்போது எழுதியதில் சிலதை இந்த வருட துவக்கத்தில் முடித்து வெளியிடுகிறேன். 

ஒவ்வொரு நாட்கள்தாம் இறக்கையை கட்டிக் கொண்ட மாதிரி எப்படி பறக்கிறது. அதோடு நாமும்...ஆனால், நமக்கே தெரியாத அந்த நம் இறக்கையை ரிவர்ஸில் அடித்துக் கொண்டு பறக்கும் சக்தியை இறைவன் அனைவருக்குமே  தந்தானென்றால், பழைய உறவுகளோடு (பெற்றோர், உடன்பிறந்தோர்) மகிழ்ந்திருக்கும் மகிழ்வை பெறுவதோடு மட்டுமின்றி, ஆரோக்கியமான அந்த வாழ்வையும் திரும்பவும் பெறலாம் இல்லையா?  

(என்னடா..! பதிவு சின்னதாக இருக்கிறதே என நீங்கள் ஆச்சரியத்துடன் நினைக்கும் போது, என் வழக்கமான அறுவை கற்பனையையும் அளித்து விட்ட திருப்தயும் என்னுள்.. ஹா ஹா ஹா.) 

இரண்டாவதாக நம் சகோதரி கோமதி அரசு அவர்கள் கொஞ்ச கொஞ்சமாக உங்களால் இயலும் போது பதிவுகள் ஏதேனும் எழுதி வாருங்கள் என ஊக்கம் தந்து கொண்டேயிருந்தார் . அவர் சொல்படி அப்போது எழுத ஆரம்பித்தேன். விட்டுப் போனதை இப்போது நிறைவு செய்து விட்டேன்.அவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏.

சென்ற வருடம் இறுதியில் எழுதத் தொடங்கிய இதை ஒரளவு முடித்தும் என் இளைய மகன் வரவினால், நேரம் சரியாகப் போகவே இந்த வருடம் வெளி வருகிறது. பதிவை படிப்போர்க்கும், கருத்துக்கள் தருவோர்க்கும் என் மனமார்ந்த நன்றி. 🙏. 

26 comments:

  1. பாசிட்டிவ் செய்திகளில் பழைய செருப்புகள் வீணாவதில்லை என்றொரு செய்தியும் கொடுத்திருந்தேன்,  அது நல்லவர் பற்றிய செய்தி.  இது போல திருட்டில் வல்லவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டாரே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம்.. தங்களின் இப்போதைய சனிக்கிழமை பாஸிடிவ் செய்திகளில் அந்த நல்லவர்கள் இருவரைப் பற்றியும் படித்தேன். அவர்களிடம் மனமுவந்து தரும் காலணிகளை வடிவம் மாற்றியமைத்து விறபனைக்கோ , ஏழைகளுக்கு இலவசமாகவோ தருவதையும் படித்தேன். இவர்கள் மொத்தமாக அள்ளிக் கொண்டு சென்றதை என்ன செய்தார்களோ ? இது ஒரு நூதனமான திருட்டு. எல்லாவிடத்திலும், ஒரே மாதிரி செய்த சாமர்த்தியமான திருட்டு. இதற்கு. யார் உடந்தையென யார் கண்டார்கள்.? நடந்து முடிந்து பத்து வருடங்களும் பறந்தோடி விட்டன. ஏதோ உங்கள் பதிவை படித்ததும் இதுவும் நினைவுக்கு வந்தது. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இப்படித் திருடி போன ஷூக்களை நிஜமாகவே என்ன செய்வார்களோ...   அவர்களுக்குள்ளேயே ஒரு குழுவுக்கும் குறைந்த விலைக்கு விற்று விடுவார்களோ!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். நாங்களும் அப்படித்தான் நினைத்தோம். நல்ல தரமான அந்த ஷுக்களை நன்கு பாலீஸ் செய்து குறைந்த விலையில் விற்று விடுவார்களோ என்னவோ..! அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

      முக்கால் வாசி கோவில் வாசலில் இந்த மாதிரி செருப்புகள் காணாமல் போய் விடும். அதுவும் எனக்கு கூட்டத்தோடு இருக்கும் என் செருப்பை மட்டும் எப்படியோ எடுத்து சென்றிருக்கிறார்கள். இந்த தடவை என் மருமகள் நல்ல தரமான (ரூபாய் இரண்டாயிரம் அருகில் தந்து) செருப்பு வாங்கி ஊர்களுக்கு போட்டுச் சென்றார். குருவாயூரப்பன் கோவில் அருகில் ஒரு கோவிலுக்கு செல்லும் போது. கோவில் வாசலில் விட்டுச் சென்ற மருமகள் செருப்பு மட்டும் காணவில்லை. மகனுடையது இருந்ததாம். செருப்பை திருடும் போதே அவர்களுக்கு தரமானது கண்ணில் உறுத்தும் போலும்...! தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஆனாலும் அநியாயமாக தூங்காமல் இருந்திருக்கிறீர்கள்...  இன்னமும் அப்படியா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஹா ஹா ஹா. ஆம்.. அப்போதெல்லாம் தூக்கம் குறைவுதான். இப்போது அப்படியில்லை. அனைவரும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கின்றனர். மறுபடி வேலைக்கு கம்பெனிகளுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் வந்தால் எப்படியோ..! தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. தூக்கம் இவ்வளவு குறைவாகவா? பேசாமல் நீங்களே செக்யூரிடியாக இருந்தால் அபார்ட்மென்ட் வாசிகளுக்குப் பயமேது?

    ReplyDelete
    Replies
    1. வயதானவர்களுக்கு பகலில் கோழி தூக்கம் உண்டு

      Delete
    2. எனக்கு எப்போது தொலைக்காட்சியில் சினிமா பார்த்தாலும் (அல்லது எதுன்னாலும்) பதினைந்து நிமிடத்தில் தூங்கிவிடுவேன்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஹா ஹா ஹா. செக்யூரிட்டி வேலைக்கு பெண்களை தேர்வு செய்து எடுத்துக் கொள்வார்களா? அப்படி எடுத்திருந்தால் கூட பொறுப்பாக பதவியை வகித்திருப்பேன். :)) தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரரே

      ஹா ஹா ஹா. கோழியும் நிறைய நேரம் தூங்காமல், கண்களை மூடி, மூடித்தான் திறக்கும். எனக்கு அப்போதும் சரி... இப்போதும் சரி.. மதிய தூக்கமே அந்த கோழி மாதிரி கூட கிடையாது. மதியமும் வேலைகள் செய்து கொண்டேதான் இருப்பேன். (வீட்டில் வேலையாள் யாரையும் எப்போதும் வைத்துக் கொண்டதே கிடையாது.) அப்போது ஓய்வு நேரங்களில் சற்று புத்தகம் படிப்பது வாடிக்கையாக இருந்தது. இப்போது நெட் வசதி, எழுதும் வசதியுள்ள கைப்பேசி இருப்பதால் வலைத்தளங்களுக்கு அவ்வப்போது வேலைகள் முடிந்தவுடன் வருகை தந்து கொண்டேயிருக்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. வணக்கம் சகோதரரே

      எனக்கும் இரவு , பத்தரை, பதினொன்றுக்கு குழந்தைகள் அவர்கள் ஆபீஸ் வேலைகள் முடிந்ததும் டிவியில் ஏதாவது படங்கள் வேறு அவர்களுக்கு பிடித்த புரோகிராம்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தூக்கம் கண்களை சுழற்றி விடும். உடனே படுத்து விடுவேன். காலை முடிந்த வரை ஐந்து மணிக்கு எழுந்து விடுவேன். தங்கள் கருத்துக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. இங்கு மார்க்கெட் அருகில் விசேஷ நாட்களில் ஏராளமான ஷூ கடைகள் முளைக்கும். பல வித செருப்பு ஷூ கடைகள். ஒன்றுபோல இருந்ததாக நினைவில்லை. இவையெல்லாம் தள்ளிக்கொண்டு வரப்பட்ட ஷூக்களாக இருக்கலாம். யார் கண்டது?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம்.. நீங்கள் சொல்வது போல் அவைகள் எங்கிருந்து களவாடப்பட்டு வந்ததோ ..! எங்கள் ஏரியாவிலும், முன்பு வெளியில் செல்லும் போது பிளாட்பாரத்தில் இந்த மாதிரி செருப்பு, ஷு கடைகளை பார்த்துள்ளேன். இப்போது பிளாட்பாரம் முழுவதும் உடைகள், தீனி கடைகள்தாம். நடக்க கூட இயலவில்லை. ரோடில் நடந்தால் கொஞ்சம் கூட கவலையின்றி, மேலேயே வந்து இடிக்கும் வாகனங்கள். நடைப்பயிற்சி மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. செருப்பு களவு போனது எல்லாம் அந்தக்காலம்.தற்போது பழைய செருப்புகளை தூக்கிப்போட இடம் இல்லை. செருப்பு தைப்பவர்களும் இல்லை.

    அபார்ட்மெண்ட் வீடுகளில் பெட்ரோல் திருட்டும் அதிகம் ஆகிவிட்டது.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /தற்போது பழைய செருப்புகளை தூக்கிப்போட இடம் இல்லை. செருப்பு தைப்பவர்களும் இல்லை./

      முதலில் செருப்புகள் பழையனவாக போகும் வரை யார் வைத்திருக்கின்றனர். அப்புறந்தானே செருப்பு தைப்பவர் இருப்பார். முன்பு வீதிக்கு ஒருவர் இவ்விதம் அமர்ந்திருப்பார். இப்போது எப்போதாவது அவர் இருப்பிடந்தேடி செல்ல வேண்டியுள்ளது. அப்படியே தைத்து வந்தாலும், சில நாட்களில் மீண்டும் அவரை தேட வேண்டியுள்ளது. செருப்பில் தரம் அப்படியா? அவர் தைக்கும் ஊசியின் தரம் அப்படியா? எனத் தெரியவில்லை.

      தாங்கள் அன்பாக பதிவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உடனே வந்து கருத்துக்களை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. நம் சகோதரி கோமதி அரசு அவர்கள் கொஞ்ச கொஞ்சமாக உங்களால் இயலும் போது பதிவுகள் ஏதேனும் எழுதி வாருங்கள் என ஊக்கம் தந்து கொண்டேயிருந்தார் . ..


    வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
    நான் சொன்ன மாதிரி பதிவு போட்டு விட்டது மகிழ்ச்சி.

    மனதில் தோன்றும் கருத்துக்களை நோட்பேட், அல்லது டிரப்டில் போட்டு வைத்து கொண்டால் பதிவு எழுதி விடலாம்.

    நான் டிராப்டில் போட்டு வைத்து இருக்கிறேன். அப்படித்தான் செய்கிறேன்.
    உங்களுக்கு வேலைகள் அதிகம் நேர கிடைக்கும் போது இப்படி எழுதி வைத்து கொண்டு பதிவு போடலாம்.


    பதிவு செருப்பு திருடுபவர்களை சொல்கிற்தே! எங்கள் குடியிருப்பு வளாகத்தில் காவல் அதிகம் செருப்பு எல்லோரும் வீட்டுக்கு வெளியில் தான் வைத்து இருக்கிறார்கள். பூட்டி வைத்து கொள்ள சின்ன அலமாரியும் கொடுத்து இருக்கிறார்கள்.

    ஹெல்மட் திருடனை பார்த்த நீங்கள்(மறைந்து இருந்து) குரல் கொடுத்து இருக்கலாம். அவன் ஓடி போய் இருப்பானே! இனி ஜன்னல் வழியே பார்த்தால் குரல் கொடுங்கள். நான் சொல்லி விட்டேன், அந்த நேரம் நமக்கு கையும் ஓடாது, காலும் ஓடாதுதான்.

    இப்போது ஒவ்வொரு வீட்டு முன் கிடக்கும் செருப்புக்களை பார்த்தால் அவர்களுக்கு காணாமல் போனால் கூட தெரியாது என்று நினைக்கிறேன்.

    எனக்கும் யாரவது வீட்டு வரவில்லை என்றால் தூக்கம் வராதுதான். தினம் இப்படி என்றால் உடம்பு கெடும். அந்த நேரம் அலாரம் வைத்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம் சகோதரி.. தங்களின் ஊக்கமான வார்த்தைகள்தான் என் ஆக்கத்திற்கு காரணம். நீங்கள் சொன்னது மனதில் வாங்கிக் கொண்டு கொஞ்ச, கொஞ்சமாக கிடைக்கும் நேரத்தில் எழுத துவங்கிய ஓரிரு பதிவுகள் இப்போது முழுமையடைந்து வெளி வருகின்றன. தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரி.

      உங்கள் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி சகோதரி. அப்படியே செய்கிறேன்.

      ஆம். இது நடந்து பத்து வருடங்கள் ஆகின்றன. ஆனாலும், சில நினைவுகளோடு மனதில் இதுவும் தங்கி விட்டது. சகோ ஸ்ரீராம் அவர்களின் செய்திகளைப் பார்த்ததும், இதை எழுத தோன்றியது. வாழ்வில் நடைபெற்ற அனுபவங்களும் ஒரு பதிவு தானே...!

      ஹெல்மட் திருடு சகஜமாகவே நடைப்பெறுகிறது. வண்டியோடு வைத்து லாக் செய்து விட்டுச் சென்றால் இந்த திருடு குறையும். இல்லை கையோடு எடுத்துச் செல்ல வேண்டும்.

      இப்போது வாசலில் செய்திருக்கும் ஷுரேக்குகள் லாக் வசதியோடுதான் செய்துள்ளோம் .அப்போது அப்படியில்லை.. வந்த புதிதாகையால், இந்தளவிற்கு யோசிக்கவில்லை. இப்போது அப்பார்ட்மெண்டுகளில் பெட்ரோல் திருடு நடப்பதாக சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் கூறியுள்ளார்கள் பாருங்கள்... !! இனி வண்டிகளை எந்த நம்பிக்கையில் கார்பார்க்கிங்கில் நிறுத்துவது...?

      இப்போது குழந்தைகள் வீட்டிலிருந்து வேலை செய்வதால் இரவு தூக்கம் பாதிக்கப்பட வில்லை. எனினும் அவர்கள் வேலை முடிந்து நாங்கள் படுக்க பதினொன்று ஆகி விடும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. ஒற்றைக்கால் ஷூ திருடுபவர்கள் ஒருக்கால் ஒரு கால் இல்லாதவர்களாக இருக்கலாமோ... ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஹா ஹா. ஒரு வேளை அவர்களுக்காக நல்ல செயல் செய்யும் நல்ல திருடர்களாக இருப்பார்கள்.தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. ஷூ திருட்டு - இப்படி நடப்பது வழக்கம். பெரிய அளவில் தயாரிக்கும் இடத்திலிருந்து கடைகளுக்கு லாரிகளில் செல்லும் ஷூ, மற்ற பொருட்களைத் திருடி விற்பார்கள். தில்லியில் இதற்கென்றே Chor Bazaar என்று ஒன்று உண்டு. லால் கிலா என்று அழைக்கப்படும் செங்கோட்டையின் பின்னே இருக்கிறது இந்த Chor Bazaar! பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் சுவாரஸ்யம். தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம்.. தாங்கள் அறியாததா..!! தலைநகரில் பல ஆண்டுகள் வாழ்ந்தவராயிற்றே..! தயாரிப்பு கடையிலிருந்து விற்பனைக்கு செல்லும் போதே திருட்டா.. ? ஆச்சரியமாக உள்ளது.. எப்படியெல்லாம் மக்கள் இருக்கிறார்கள்... தங்களின் Chor Bazaar! பதிவையும் படித்துப் பார்க்கிறேன்.தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கமலாக்கா இந்தச் செருப்பு திருட்டு அவங்க விற்றுக் காசு கிடைக்கத்தான். அதுவும் கொரோனா காலத்தில் நிறைய நடந்தது. அதுவும் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிகளில்தான் அதிகம்.

    தெரு ஓரக்கடைகளில் நேர்மையாக விற்பவர்களும் உண்டு ஆனால் இவர்களால் அவர்களையும் சந்தேகப் பார்வையுடன் பார்க்க வேண்டியிருக்கும் நீங்கள் சொல்லியிருப்பது போல்.

    ஹெல்மெட் போகும்! வண்டிகளைக் கூட லவட்டுகிறார்கள்.

    வறுமை. என்றாலும் வேலை செய்து பிழைக்கச் சோம்பேறித்தனம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தாங்கள் சொல்வதும் உண்மைதான். இப்படி திருடி எங்கேயோ விற்று காசு சம்பாதிக்கிறார்கள். வறுமை காரணமா? இல்லை அவர்களின் சம்பாத்தியமே இப்படித்தானா என்றும் தெரியாது. ஆனால், விலை உயர்ந்த செருப்புகள் இப்படி காணாமல் போகும் போது நம் மனது வேதனையுறுவது நிஜம்தான். கொஞ்ச நாட்கள் அதன் பிரிவு தாங்கவொண்ணாததாக இருக்கும். எங்களுக்கு அப்படிதான் இருந்தது.பின் மனது சமாதானமாகி மறுபடியும் நல்ல செருப்புக்கள் வாங்க கூட ஒரு தயக்கம் பிறக்கும். என்ன செய்வது?

      தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
      கொஞ்சம் உடல் நிலை நலிவு காரணமாக உங்கள் கருத்துக்களுக்கு தாமதமாக பதில் தருகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். மிக்கநன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  11. எபி யில் ப்ழைய செருப்புகளை நன்றாக ஆக்கி இலலதவர்களுக்குக் கொடுப்பதைச் செய்யும் இளைஞர்கள் பற்றியும் பாசிட்டிவ் செய்திகளில் வந்திருந்ததே ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் சம்பவங்களில் செய்தவர்கள் திருட்டுதான். அதற்கு அவர்கள் நேரடியாக வந்து கேட்டிருக்கலாம் செருப்பு இல்ல்லை...நு ஆனால் அவர்கள் விற்றுக் காசாக்கி என்பதுதான் இதில் வருத்தமான விஷயம். வறுமை, மனநிலை ஒவ்வொருவரை எப்படி ஆட்டிப் படைக்கிறது!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      எ. பியில் பழைய செருப்புகளை புதியதாக்கி ஏழைகளுக்கு இலவசமாகவோ, இல்லை கம்மி விலையிலோ விற்பனை செய்வர்களைப்பற்றி கூட சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துக்கு மறுபதிலாக தந்துள்ளேன். அவர்களைப் போலசெய்து தருகிறவர்களாயின் கேட்டவுடன் நம்மிடம் உபயோகம் இல்லாததை, உபயோகிக்க முடியாமல் டைட்டாகிப் போவதை தந்து விடலாம். இவர்கள் அப்படியில்லையே..! இரவு நேரத்தில் அனைவரும் உறங்கும். சமயத்தில் என கொள்ளையடிப்பவரகள். பதிவை படித்து தாங்கள் தந்த அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete