Tuesday, February 20, 2024

கண்களுக்கு விருந்து.

பெங்களூர் லால்பாக் எப்போதுமே ஒரு தனிஅழகுதான். அடர்த்தியான மரங்களும், வண்ணமிகு பூக்களுமாக பார்வையில் கண்கொள்ளா காட்சிகளாக விழ, காலாற நடந்தாலே மனதின்  இறுககங்கள் சற்று குறையும்.இங்கு வந்த பின் சில  தடவைகள் சென்றுள்ளோம். ஆனால், வருடந்தோறும் ஆகஸ்ட் ஜனவரி மாதங்களில வரும் மலர் கண்காட்சிக்கென்று சென்று ரசித்ததில்லை. முதலில் செல்லும் போதெல்லாம் அங்குள்ள பசுமையை கண்களால் ரசித்து விட்டு வந்ததோடு சரி... அப்படி கண்கள் எடுக்கும் புகைப்படங்களும், மனதில் சிறிது காலம் பதிந்திருந்து, பிறகு நாங்கள் வேறு மற்ற இடங்களுக்குச் செல்லும்போது, அங்கு கண்கள் இயந்திரதனமான எடுத்து தள்ளும் புகைப்படங்களின் பாதிப்பால் மாயமாகி மறைந்து போகும். இப்போது (இப்போது என்றால்.. சமீபத்தில் அல்ல...! இது ஒரு வருடத்திய (வருடம் சென்ற வருடமா, அதற்கு முந்தைய வருடமா என நினைவில்லை. வருடத்தை எப்படியாவது நினைவுபடுத்தி கூறினால், என்னை அடிக்கவே வந்து விடுவீர்கள்.:)))) ) நவம்பரில் சென்று வந்த போது எடுத்த படங்கள்..) என் கைப்பேசியில் நிறைய படங்களை என் கண்களுக்கு அவ்வளவாக வேலையை தராமல் எடுத்து குவித்து விட்டேன். (இப்படி ஆங்காங்கே எடுத்த படங்கள் அளவுக்கதிகமாக என் கைப்பேசியில்  தங்கி இருப்பதாக கூகுளாரும், என் குழந்தைகளும் நாளும் கடுமையாக எச்சரிக்கின்றனர்.அது வேறு விஷயம்.. .. ) அதை அவ்வப்போது என் பக்கம் பகிரவும் சமயங்கள் எனக்கு வாய்க்கவில்லை. 

 சகோதரி கீதாரெங்கன் அவர்கள் அவரின் தளத்தில் கொஞ்ச மாதங்களுக்கு முன் லால்பாக் மலர் கண்காட்சி படங்களைபகிர்ந்து கொண்டதை பார்த்ததும்,,  (அவர் அவரின் பதிவில் பகிரந்தே வருடங்கள் ஆகிவிட்டது. இதில் அவர் பதிவை பார்த்ததும் என்ற வசனம் ஒரு உலகமகா ரீல்.... என முணுமுணுக்க வேண்டாம். ஹா ஹா.) எனக்கும் நான் அங்கு ஏதோ எடுத்ததையெல்லாம் பகிரலாமே எனத் தோன்றியது. அடர்த்தியான பெரிய மரங்களும், நீண்ட பல வயதான மரங்களை வைத்து செய்த மரச்சிற்பங்களுமாக இங்கு  நிறைந்துள்ளதை பொதுவாக அனைவருமே (அதிலும் இங்குள்ளவர்கள்) அறிந்திருப்பீர்கள். இருப்பினும், என் கைப்பேசியில் ஏதோ  தலை சிறந்த புகைப்படக்கலை நிபுணர் மாதிரி நான் எடுத்ததை பகிரலாமே என பகிர்ந்து விட்டேன். 

ஆழமாக வேரூன்றி அங்குமிங்கும் ஓடியவாறு  இருக்கும் பல பல வருடங்களை கடந்த மரங்கள் பிரமிபூட்டுகின்றன. பால்கனியில் ஒரு தொட்டியில் ஒரு செடியை வாங்கி வைத்து விட்டு தினமும் அது வளருகிறதா,.. தினமும் நாம் விடும் தண்ணீர் அதற்கு போதுமா.... வேறு என்ன உரம் வைக்கலாம்.. என தெனாலிராமன் குதிரை வளர்த்த விதமாக நா(ம்)ன் வளர்க்கும் போது, இவ்வளவு பெரிய மரமாக வளர எப்படியெல்லாம்  பராமரித்து வருகிறார்கள் என ஒவ்வொரு மரங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன பூத்துக் குலுங்கும் பல வகையான பூக்கள், நடந்து செல்ல ஒழுங்கான பாதைகள் அமைத்தல் என இந்தப் பூங்காவின் பராமரிப்பு கண் கொள்ளா காட்சிதான். நடப்பதற்கு மட்டும்  கால்களில் நல்ல வலு இருந்து விட்டால், சுற்றி வர ஒருநாள் போதாது. 

நானே பேசிக் கொண்டிருந்தால் எப்படி? புகைப்படங்களை (ஏற்கனவே நேரில் பார்த்து ரசித்திருப்பினும்) பார்க்க வேண்டாமா என நீங்கள் கேட்பது புரிகிறது. (இப்படியாவது ஒரு பதிவு எழுத காரணம் கிடைத்து விட்டதென எழுத ஆரம்பித்த போது  சந்தோஸப்பட்டேன். .இப்போதுதான் இதை வெளியிடும் சந்தர்ப்பம் அமைகிறது. அதற்கு சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ) 































நம் பதிவுலகில் சகோதர, சகோதரிகள் கேமிராவில் எடுத்துப் பதிவாக்கும் புகைப்படங்களுக்கு முன் இது வெறும் சாதாரணந்தான். ஆனாலும், பதிவை படித்து படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்னமும் அங்கு எடுத்த படங்களை அடுத்தப் பதிவில் பகிர்கிறேன். (என்ன கொடுமைப்பா.... இது... என நீங்கள் பொறுக்க இயலாமல் கூவுவது கேட்கிறது... ஹா ஹா.) நன்றி. 

26 comments:

  1. எப்படியோ ஓரிரு பதிவைத் தேற்றி விட்டீர்கள்.

    இந்தப் பதிவாளர் மனம் எங்கு சென்றாலும் சிலபல படங்கள் எடுத்துவிட வேணும் என எண்ணவைக்கிறது போலும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      ஆம்.. எப்படியோ ஒரு பதிவை தேற்றி விடுகிறேன். இதுவும் சென்ற வருடமே எழுதி வைத்த பதிவு. அப்போது வெளியிட என்னவோ நேரங்கள் சரியாக அமையவில்லை. இப்போது பார்த்து இதை கொஞ்சம் சரி செய்து என் பதிவாக வெளியிடுகிறேன்.

      ஆம். இந்த பதிவர்களின் மனம் அழகிய இயற்கை, காட்சிகள், கோவில்கள், பறவைகள் என படங்கள் எடுத்து விட்டால், ஏதாவது அது தொடர்பான பதிவை முடிந்தவரை எழுதி விட வேண்டுமெனவும் நினைக்கிறது. இதெல்லாம் இப்போது வந்திருக்கும் கைப்பேசிகளின் மகிமையால்தான். இரண்டாவதாக இணையத்தின் மூலம் கிடைத்திருக்கும் நல்ல நட்புகளிடம் நாம் சென்று வந்த இடங்களை பற்றிக்கூறி, நம் நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சியை பரிமாறியும் கொள்கிறோம். அனைத்திற்கும் மனமார்ந்த நன்றி.

      தங்கள் அன்பான கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. படங்கள் அழகு. பதிவுக்காக நான் எடுத்துவைத்திருப்பவற்றை நினைவுபடுத்தியது. கொஞ்ச வாரங்கள் காத்திருக்கணும் நீங்க இரண்டாவது பதிவை வெளியிட்டபின்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      படங்கள் அழகாக வந்திருக்கிறது என சொன்னதற்கு மிக்க மகிழ்வுடனான நன்றி.

      ஓ.. அப்படியா? தாங்களும் அங்கு எடுத்து வைத்த படங்களை வெளியிடவில்லையா ? நீங்களும் விரைவில் அதை அழகான பதிவாக்கித் தாருங்கள். நீங்கள் எடுக்கும் படங்கள் எப்போதுமே அழகாக இருக்கும். மேலும் சரியான கோணங்களில் ஆற அமர எடுத்திருப்பீர்கள்.

      எனக்கு கூட அவ்வளவாக புகைப்படங்கள் எடுக்க வராது. அதற்கு காரணம் எங்கள் குடும்பத்துடன் எங்கு செல்லும் போதும், இந்தப்புகைப்படங்கள் எடுக்கும் தருணங்களில் என்னை மட்டும் விட்டு விட்டு அவர்கள் வேறு பக்கமாக சென்று விடுவார்களோ என சற்று பதற்றமாக விடுவேன். . அவர்களை அந்த கூட்டங்களில் தேடுவதற்கு நான் கொஞ்சம் படபடப்பாகி விடுவேன். அதனால் நிதானமாக நின்று எடுப்பதில்லை. அவசர கோலம் அள்ளித் தெளித்த மாதிரியென எடுத்தப்படங்களை வெளியிடுகிறேன். , இன்றைய பதிவிலும், நிறைய படங்களை அள்ளித் தெளித்து விட்டேனென நினைக்கிறேன். ஆனால், படங்களை பொறுமையாக கண்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. பசுமையான காட்சிகளைக் கண்டதும் கைகள் படம் எடுக்க பரபரக்கின்றன.  எனக்கும் அப்படிதான்.  இன்று நீங்கள் நிறைய அழகான படங்களை காட்சிப் படுத்தி இருக்கிறீர்கள்.  நல்ல ரசனை.  பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      ஆம்.. பசுமையான இடங்களை பார்க்கும் போது இப்படித்தான் படங்கள் எடுக்கத் தோன்றுகிறது. அது சரியான கோணங்களில் உள்ளனவா என்ற ஆராய்ச்சி பிறகுதான் கவனிக்கப்படுகிறது.

      நீங்களும் திறமையான முறைகளில் புகைப்படங்கள் எடுப்பீர்கள் எனவும் நான் அறிவேன். நீங்கள் ஒரு காரில் பயணிக்கும் போது கூட அழகான அடர்ந்த அந்த ஒற்றை மரத்தை படம் எடுத்து அது கேட்டுக் கொண்டபடி அருமையான கவிதை ஒன்றையும் அதற்கு படைத்து தந்தவராயிற்றே..!! உங்கள் அளவிற்கு எனக்கு திறமைகள் ஏதுமில்லை. நான் எடுத்த அந்த மரங்களின் வளர்ச்சி, வயது எதையும் யாரிடமும் விசாரித்துப் பதிவில் போட கூடத் தெரியவில்லை.

      ஆனாலும் நல்ல ரசனை யென்ற தங்களின் மனமுவந்த பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அப்பா.. மரங்கள்தான் எவ்வளவு வகையாக காட்சி கொடுக்கின்றன... இயற்கையாகவும், செயற்கையாகவும் எவ்வளவு விதமான தோற்றங்கள்.. ரசிக்கத்தகுந்த படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதில் கருத்துக்கள் தெரிவித்து கொண்டிருக்கும் போதே, தொடர்ந்து பதிலளிக்க இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும்.

      ஆம்.. நிறைய மரங்கள். எல்லாம் அதன் முதிர்ச்சியை காட்டும் வண்ணம் உயர்ந்த அடர்ந்த மரங்கள். இன்னம்ம் நிறைய படங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அதற்கு நிறைய நேரங்களும் வேண்டும். எல்லா படங்களையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. வேர்களுடன் இருக்கும் சில மரங்கள் ஒரு ராட்சச மனிதன் அமர்ந்திருப்பபது போலவும், சில மரங்கள் கைகளை தூக்கி வரவேற்பது போலவும், அல்லது அணைத்துக் கொள்ள வருவது போலவும் பல்வேறு காட்சிகள் கொடுக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /வேர்களுடன் இருக்கும் சில மரங்கள் ஒரு ராட்சச மனிதன் அமர்ந்திருப்பபது போலவும், சில மரங்கள் கைகளை தூக்கி வரவேற்பது போலவும், அல்லது அணைத்துக் கொள்ள வருவது போலவும் பல்வேறு காட்சிகள் கொடுக்கின்றன./

      நல்ல கற்பனை.. ஆம்.. முண்டு முண்டாக அதன் வேர்கள் நீண்டு மரத்தை விட்டு சுற்று முற்றும் வெகு தூரங்கள் வரை பயணிக்கின்றன. அதன் அருகில் சென்று பார்ப்பதற்குள் எங்கே கால்களை தடுக்கி விடுமோ என எனக்கு சற்று பயமாக இருந்தது. உண்மையிலேயே கைகளை விரித்தபடி இருக்கும் ராட்சத மரங்கள்.

      தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே. நான்தான் தாமதமாக பதில் கருத்து தருகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. படங்கள் எடுப்பது எல்லோருக்கும் இப்போது பிடித்திருக்கிறது - அதுவும் அலைபேசிகளில் நல்ல கேமராக்கள் வந்துவிட்டதால் இது சாத்தியமாகி இருக்கிறது. நல்ல விஷயம் தான்.

    நீங்கள் எடுத்த, பகிர்ந்த படங்கள் அனைத்தும் ரசிக்கும் விதத்தில் இருந்தன. இயற்கை எழில் என்றைக்கும் ரசிக்க முடிவது.

    இந்த வாரம் தில்லியின் பிரபல பூங்கா ஒன்றிற்குச் சென்று வந்தேன் - இரண்டு நண்பர்களுடன்! நாங்கள் மூவருமாக எடுத்த மொத்த படங்கள் - 540! :) வரும் நாட்களில் எனது பக்கத்தில் வெளியிடலாம் என யோசனை உண்டு!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம்.. இப்போது உள்ள தொழிற்நுட்ப வசதியுடன் இன்னமும் அதிகமாக பல வசதிகளுடன் கைப்பேசிகள் வந்து விட்டதால், இயற்கை காட்சிகள், பறவைகள் என என நல்ல நல்ல கண்களுக்கு விருந்தாகும் படங்களை எடுக்க உதவுகிறது. முன்பு காமிராவை நினைவாக எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

      நான் எடுத்த புகைப்படங்களை நன்றாக உள்ளதென கூறியமைக்கு மிக்க நன்றி. ஆனாலும் உங்கள் அளவுக்கு புகைப்படங்கள் எடுக்கும் தேர்ச்சி நான் இன்னமும் பெறவில்லை என்பதுதான் உண்மை.

      /இந்த வாரம் தில்லியின் பிரபல பூங்கா ஒன்றிற்குச் சென்று வந்தேன் - இரண்டு நண்பர்களுடன்! நாங்கள் மூவருமாக எடுத்த மொத்த படங்கள் - 540! :)/

      ஓ.. அப்படியா? அவ்வளவு படங்களா எடுத்துள்ளீர்கள்? அழகான அவைகளை ஞாயறுதோறும் தங்கள் பதிவில் வெளியிடுங்கள் பார்த்து ரசிக்கலாம். எங்களுக்கும் நல்ல புகைப்படங்களை ரசிக்கும் நல்லதொரு வாய்ப்பாக அமையும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கமலாக்கா இவை சமீபத்தியவைதான்!!! ஏனென்றால் நானும் சென்ற டிசம்பரில் துளசி இங்கு வந்தப்ப போனோமே அப்ப இதே படங்கள் எடுத்து வைச்சிருக்கேன்....காணொளியும். லால்பாகில் இந்தப் பக்கம் தான் சூப்பரா இருக்கும்.

    உங்க படங்கள் மிக மிக அழகு. நல்லா எடுத்திருக்கீங்க இன்னும் இப்படி இருப்பதை எல்லாம் பகிருங்கள்

    எனக்கும் எங்கு சென்றாலும் படம் எடுக்கும் பழக்கம் உண்டு. முன்பும் உண்டு ஆனால் அப்போது கேமரா எதுவும் இல்லை. இப்ப இருக்கே ஸோ எடுத்து தீர்த்துருவோம்!!!! ஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      ஆம்.. இவை சமீபத்தில் வளர்த்தவை, செதுக்கியவைகள் என இப்போது ஏராளம். இங்கு வந்த புதிதில் 2008ல் என நினைக்கிறேன். அப்போது சென்றமைக்கும், இப்போதும் அங்குஏகப்பட்ட மாறுதல்கள்..

      நிங்களும் இங்கு அடிக்கடி சென்றிரருப்பீர்கள் என்பது தெரியும். மலர் கண்காட்சி படங்களை அழகுற எடுத்து அதை நாங்களும் உங்கள் பதிவில் ரசித்தோமே...! நினைவிருக்கிறது. நீங்களும் அங்கு சாதாரண சமயங்களில் சென்ற போது எடுத்த மரம், பூக்கள் படங்களை பகிருங்கள்.

      என்னிடம் கேமரா போன்ற வசதிகள் இல்லை. குழந்தைகளிடம் உள்ளது. ஆனால் அவர்கள் எடுக்கும் கோணங்கள் வேறு. இந்த கைப்பேசி வந்ததும், நானே அங்கிங்கு செல்லும் போது ஆர்வ மிகுதியில் எனக்குத் தெரிந்த மாதிரி பல படங்கள் எடுக்கிறேன். படங்கள் அழகு என தாங்கள் சொன்னதற்கு மிக்க மகிழ்வுடனான நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. லால்பாக் மரங்கள் மிக அழகாக இருக்கு இல்லையா.....பழைய மரங்களை அவங்க வடிவமைக்கும் விதம் அழகு. இப்ப இன்னும் வந்திருக்கும். அன்று பல பழைய மரங்கள் தீட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது.

    நான் லால் பாக் மெயின் கேட் மற்றும் வடக்கு வாயில் நீங்க போட்டிருக்கீங்களே அந்தப் பாறை இந்த இரு பகுதிகள்தான் சென்றிருக்கிறேன்...மெயின் கேட் ஏரிப்பக்கம் , க்ளாஸ் ஹவுஸ் பக்கம் எல்லாம் போயிருக்கிறேன் ஆனால் அதற்கு அப்பால் அந்தப் பக்கம் சென்றதில்லை அங்கும் என்ன இருக்கு என்று போய்ப் பார்க்க வேண்டும்...முழுவதும் பார்க்க வேண்டும் என்றால் ஒரு நாளில் முடியாது. பகுதி பகுதியாகத்தான் பார்க்க வேண்டும்.

    மலர்கண்காட்சி இந்தப் பக்கம் தான் நடக்கும். எப்பவுமே. ரோஸ் கார்டன், க்ளாஸ் ஹவுஸ், இந்தப் பாறை மெயின் கேட் டு நார்த் கேட் பக்கம்...

    அக்கா என்னை சொல்லியிருக்கீங்க....நான் உங்களைவிட ரொம்ப மோசம். இன்னும் மலர் கண்காட்சி படங்கள் இருக்கின்றன. போடவில்லை. போட வேண்டும் ...தொகுத்தல் எல்லாம் நேரம் இழுக்கிறது. அதுவும் எழுத வேண்டும் என்றால்...முடிக்க வேண்டும் பார்க்கிறேன்

    அக்கா பன்னேருகட்டா பட்டர்ஃப்ளை பார்க் ரொம்ப நன்றாக இருக்கிறது. படங்கள் காணொளிகல் எடுத்திருக்கிறேன் போடணும்...எப்பவோ ஹாஹாஹா...வேலைகள் கூடுதலாக இருக்கு..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நான் தெரிவித்தவுடன் தங்கள் வேலைகளுக்கு நடுவே வந்து பதிவை ரசித்து அன்பான கருத்துக்கள் தந்திருப்பதற்கு என் மனம் மகிழ்கிறது. தங்களது ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் எனக்கு மேலும் பதிவுகளை எழுத உற்சாகம் தரும். மனமார்ந்த நன்றி சகோதரி. எனக்குத்தான் உங்களை தொந்தரவு செய்து விட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி வருகிறது. தொந்தரவு தந்தமைக்கு மன்னிக்கவும் சகோதரி.

      ஆம்.. அந்த பழைய மரங்களின் வடிவமைப்புகள் பார்க்க கண் கொள்ளாத காட்சி.. அது மனதில் பதிய வேண்டுமென்பதற்காக இத்தனை போட்டோக்கள் எடுத்தாயிற்று.

      /முழுவதும் பார்க்க வேண்டும் என்றால் ஒரு நாளில் முடியாது. பகுதி பகுதியாகத்தான் பார்க்க வேண்டும்./

      ஆம்.. இன்னமும் பார்க்காத இடங்கள் அங்கு இருக்கின்றனவா எனத் தெரியவில்லை. மகன்தான் அழைத்துச் செல்வார். அவர் அழைக்கும் போது நானும் இந்த இயற்கை காட்சிகளை காண வேண்டி மறுப்பேதும் சொல்லாமல் அவருடன் சென்று விடுவேன்.

      /பன்னேருகட்டா பட்டர்ஃப்ளை பார்க் ரொம்ப நன்றாக இருக்கிறது. படங்கள் காணொளிகல் எடுத்திருக்கிறேன் போடணும்...எப்பவோ ஹாஹாஹா...வேலைகள் கூடுதலாக இருக்கு../

      ஆம். ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். நினைவிருக்கிறது. பட்டர்பிளை பார்க் படங்களையும் நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்.

      தங்கள் கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. அருமையான படங்கள். சில மாதங்களுக்கு முன் போய் வந்தேன். கணபதியை நினைவூட்டும் ஒரு மர சில்பம் அது எப்படி அன்று என் கண்ணில் படவில்லையா அலல்து நீங்கள் சரியான ஆங்கிளில் எடுத்ததால் தோன்றுகிறதா! எல்லாம் அருமை. மீதியையும் அதிகம் தாமதியாமல்
    காண்பித்துவிடுங்கள்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      படங்கள் நன்றாக உள்ளதென்ற பாராட்டிற்கு மிக்க மகிழ்வடைந்தேன். நம் பதிவர்கள் யாவரும் இந்தப்பார்க்கில் பல அடர்ந்த மரங்களையும், மரச்சிற்பங்களையும் கண்டு ரசித்துப் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன். இருப்பினும் என் பதிவாகவும் இருக்க வேண்டி, நாங்கள் அங்கு சென்ற போது படங்கள் எடுத்தவற்றை பகிர்கிறேன். அங்குள்ள மரச்சிற்பங்கள் ஒவ்வொன்றும் வெகு அழகாக உள்ளது. இன்னமும் நான் அவைகளை முழுமையாக எடுக்கவில்லையோ எனத் தோன்றும். எடுத்தவற்றில் மீதியையும் விரைவில் தொகுத்துப் பகிர்கிறேன். தங்கள் ஊக்கம் நிறைந்த கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. பதிவும் தகவல்களும் சிறப்பு.. படங்கள் அற்புதம்.. பிரமிக்க வைக்கின்றன..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே

      லால்பாக்கில் எடுத்த படங்கள் நன்றாக உள்ளதென்ற தங்களின் நல்லதொரு கருத்துக்கு என் மனம் மகிழ்ச்சியடைந்தது.

      ஆம்.. அங்குள்ள அடர்ந்த மரங்கள் பார்க்கும் போது பிரமிக்க வைக்கிறது. தங்களின் ஊக்கம் நிறைந்த கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. யாஷிகா, கேனன், கோனிகா என்று - கைக்குக் கேமரா கிடைத்த பின் எங்கு சென்றாலும் படம் எடுப்பேன்.. அப்போது 95 களில் நேஷனல் வீடியோ கேமரா வாங்குவதற்கு ஆசைப்பட்டேன்.. நிறைவேறவில்லை..

    இப்போது கேமரா எதுவும் இல்லை... எல்லாம் கைத்தலபேசிதான்..

    இதில் வீடியோ எடுப்பதில் விருப்பம் இல்லை..

    பதிவுக்கு தாமதமாக வந்திருக்கின்றேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /யாஷிகா, கேனன், கோனிகா என்று - கைக்குக் கேமரா கிடைத்த பின் எங்கு சென்றாலும் படம் எடுப்பேன்.. அப்போது 95 களில் நேஷனல் வீடியோ கேமரா வாங்குவதற்கு ஆசைப்பட்டேன்.. நிறைவேறவில்லை/

      இப்போது தாங்கள் வாங்கி பயன்படுத்தலாமே..! எனக்கு இந்த கேமிரா விஷயங்கள் தெரிய வாய்பில்லை. குழந்தைகள் அவரவர் ஆசைப்படி வாங்கியுள்ளார்கள். இப்போது இந்த கைப்பேசியில் படங்கள் எடுக்கும் வாய்ப்பு வந்தவுடன் கேமராவின் பயன்பாடுகளில கூட அவ்வளவாக விருப்பமில்லை என எண்ணுகிறேன். எனக்கும் வீடியோக்கள் எடுப்பதில் அவ்வளவாக விருப்பங்கள் இல்லை. எங்கு சென்றாலும் படங்கள் மட்டுந்தான் அதிகமாக எடுப்பேன்.

      தாங்கள் தங்கள் பதிவில் எடுத்துப் பகிரும் படங்களும், தொகுப்பும் மிக அழகாக இருக்கிறது.

      பதிவுக்கு தாமதமாக வந்திருப்பதில் ஒன்றும் பிரச்சனையில்லை. தங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்களை நான் எப்போதும் வரவேற்கிறேன். அதற்கு என் மனமார்ந்த நன்றியையும் கூறிக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. நிறைந்த படங்கள் எடுத்துப் பகிர்ந்துள்ளீர்கள் கண்டு களித்தோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி

      பதிவு குறித்த தங்களின் கருத்து எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை தந்தது. நீங்கள் பதிவை ரசித்து கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. இந்த பதிவு எப்படி என் கண்ணில் படவில்லை என்று தெரியவில்லை. பதிவு அருமை. படங்களும் அருமை. மரங்கள் வித விதமாக காட்சி தருகிறது.

    மரச்சிற்பங்களை அழகாய் செதுக்கி தோட்டத்தை அழகாய் பராமரித்து மக்கள் பார்வைக்கு பூங்கா அமைத்து இருப்பது மகிழ்ச்சிதானே!

    யானைமுகம் உள்ள மரத்தை இன்று சங்கடஹர சதுர்த்தி அன்று பார்க்கவேண்டும் என்று இருக்கிறது.
    அனைத்து படங்களும் நன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.
    இன்னும் எடுத்த படங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரி

    தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கு உறவினர் திருமணங்கள் சேர்ந்தாற் போல வந்ததினால், அந்த பணிகள் காரணமாக நீங்கள் வலைத்தளங்களுக்கு தாமதமாக வந்தீர்கள். அந்த கெடுபிடிகள் நீங்கள் இந்தப்பதிவை மிஸ் செய்து விட்டீர்கள் என்றுதான் நான் நினைத்தேன். .அதனால்தான் அப்படியே என் பதில் கருத்திலும் அதை குறிப்பிட்டேன்..பரவாயில்லை சகோதரி.. நானும் உங்கள் பதிவுகள் சிலவற்றை என் மகன் வந்திருந்த போது, அவர்களுடன் ஊருக்கெல்லாம் சென்ற போது என தவற விட்டிருக்கிறேன் அதற்கு நீங்கள் மன்னிப்பெல்லாம் கேட்டிருக்கிறீர்கள். அதைப்பார்த்து போது நானும் அநாவசியமாக நீங்கள் வராததை குறிப்பிட்டு விட்டேனோ என வருத்தப்பட்டேன். ஆனால் தாங்கள் உடனே இதற்கு பின் வந்த பதிவில் தெரிவித்து விட்டு, இந்தப்பதிவுக்கும் வந்து கருத்தை தெரிவித்திருக்கும் பண்புக்கு நெகிழ்ந்து போய் விட்டேன்.

    உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. மரங்கள் இயற்கை என்றால் தங்களுக்கு மிகவும் விருப்பமே என்றுதான் தெரிவித்தேன். மேலும் எடுத்தப்படங்களை தொகுத்து போடுகிறேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete