இந்தக் கதையின் 3 ம் பகுதியின் சுட்டி. அதற்கு முந்தைய பகுதிகளான பகுதிகளான 2ஆம், 1ஆம் பகுதிகளின் சுட்டி.
அக்கா.. நான் இப்போ நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். நீ உடன் பிறந்த எங்களுக்காக உன் வாழ்க்கையே விட்டுத் தந்திருக்கிறாய்..! அப்பாவின் முடிவையும், அதனால் நீ பட்ட கஷ்டங்களையும் எனக்கு ஒரளவு விபரம் தெரிந்த பிறகு அம்மா இருக்கும் போது என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாள்.....! முதலில் நீ, நான் என் விருப்பத்தை சொன்னவுடன் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் இருந்ததற்கு என்ன காரணம் என எனக்குத் தெரியாது. ஆனால், அதன் பின் நான் ஊரிலில்லாத போது இவள் வீட்டுக்கு சென்று பேசி, நீ கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டதற்கு காரணம் மட்டும் இவளாலேயே தெரிய வந்தது. அதனால் நீ விரும்பிய நடராஜன் மாமாவின் சொந்த மகளல்ல இவள்....! ஒரு விபத்தில் உயிரிழந்த தன் அக்காவின் மகளான இவளை உன்னைப் போலவே அவரும் தன் சொந்த மகளாக நினைத்துக் கொண்டு திருமணமே செய்து கொள்ளாமல் வளர்த்து வருகிறார் என்ற உண்மை தெரிந்ததும், நீ உன் முடிவை மாற்றிக் கொண்டாய். .! அப்படித்தானே..... அக்கா.. ! கணேசன் பேச பேச சிவகாமி அதிர்ந்தாள். .
சற்று சுதாரித்தபடி, "சரி..!! சரி..!! எப்படியோ எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறாயே. ஆமாம்.. எல்லாமே உண்மைதான். . .!!! நான் முதலில் மறுத்ததற்கு அதுதான் காரணம்...! உன் மனைவி தன் தந்தையெனக் கூறி நடராஜனின் போட்டோவை உன்னுடன் வந்த அன்று காண்பித்ததும், என் மனதே சரியில்லை.. . ...! என் பழைய கால வாழ்வின் நினைவுகளோடு சம்பந்தப்பட்டவரின் மகள் என்பதால், மீண்டும் அவரை எப்படி சந்திப்பது, எப்படி பேசுவது என்றுதான் முதலில் உன் திருமணத்திற்கு தடை சொன்னேன். ஆனால்,.. ..!! என்றவளை அவசரமாக இடைமறித்தான் கணேஷ்.
"அதுதான் இப்போ உண்மைகள் எல்லாம் தெரிய வந்துடுச்சே அக்கா....!! நடராஜ மாமா இவளின் சொந்த அப்பா இல்லை. .! அவரின் அக்கா பெண்தான் இவள் என்ற உண்மை உனக்கு மட்டுமில்லாமல், எங்களுக்கும் தெரிய வந்துடுச்சே.. .!! நீ இத்தனை காலம் எங்களுக்காக உன் திருமணத்தை ஒதுக்கிய மாதிரி, அவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்தை காப்பதே கடமையென வாழ்ந்து வந்துள்ளார் என்பதை அறிந்த பின், நீங்கள் இருவரும் இனியாவது திருமணம் செய்து கொண்டு எங்களுக்காக சேர்ந்து வாழலாம் இல்லையா? அதைத்தான் நான் தரும் பரிசென்று உனக்கு கூறி, உன்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கலாம் என நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தை உன்னிடம் இன்று கூறி சம்மதம் பெறவும் நினைத்தோம். ..!" என்றபடி தன் மனைவியை பார்த்தான் கணேசன்.
கணநேரம் மௌளனமாக இருந்த சிவகாமி," தம்பி உனக்கு இன்று திருமணம் உன் விருப்பப்படி நடந்தற்கே நம் அம்மாதான் காரணம் தெரியுமா? நான் இல்லை.. " என்றவள் அன்று அம்மாவின் கடிதத்தை படித்த விபரங்களையும், நடராஜனின் கடிதத்தை சேர்த்து வைத்து படித்து புரிந்து கொண்டதையும், அதன் பின்னும் ஆயிரம் தயக்கங்களுடன், நடராஜனை சந்தித்துப் பேசி," நம் தயக்கங்களுக்காக நம் குழந்தைகளின் வாழ்க்கையை பலியிட வேண்டாமென கலந்தாலோசித்து தீர்மானித்து அவர்களின் திருமணத்திற்கு நாள் குறித்ததையும்" விளக்கமாக கூறக்கூற கணேசன் ஆச்சரியமாக கேட்டபடியிருந்தான்.
"அக்கா. .. எவ்வளவு நடந்திருக்கு.!!!!.நீ ஒன்றுமே கூறவில்லையே. .? சரி.. . அப்பவும் நீ சொன்ன பிரகாரம் அவர் சிவகாமி இல்லாத நடராஜனாகத்தானே உன்னை மறுபடி சந்தித்திருக்கிறார். அப்போதும் உன் மனம் சஞ்சலத்திலிருந்து விடுபடவில்லையா? எங்களுக்காகவாவது நீயும், அவரும் உங்கள் வயதின் காரணத்தை ஒரு பொருட்டாக கூறாது அவரை திருமணம் செய்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருக்கலாம் இல்லையா? "கணேசன் குரலில் ஆர்வம் மேலிட கேட்டான்.
தம்பி.. இது என்றுமே சாத்தியமில்லையடா... மேலும்,," என்று பேச ஆரம்பித்த அக்காவை பேச விடாமல் தடைசெய்தபடி "அக்கா.. நீ கொஞ்சம் உன்னை, உன் மனதை அமைதிப்படுத்திக்கொண்டு எனக்காக யோசனை செய். உன் வாழ்வில் உன் விருப்பத்தை நம் அப்பா வேண்டாமென மறுத்த அந்த நிகழ்வுக்குப் பின் உனக்காக எதுவும் விருப்பப்படாமல், எங்களுக்காகவே வாழ்ந்து வந்திருக்கிறாய்..!! உன் வாழ்க்கையே இதுவரை ஒரு தவமாக கழிந்திருக்கிறது . இப்போது அந்த தவத்தின் பலன் கைமேல் கிடைக்கும் போது ஏன் வேண்டாமென மறுக்கிறே...!" என்றபடி அவள் கைகளைப்பற்றி கெஞ்சாத குறையாக கூறினான் கணேசன்.
" தம்பி. .. நீ இன்னமும் என்னைப் புரிந்து கொள்ளவில்லையோ என எனக்கு இப்போது தோன்றுகிறது. தவமாக வாழ்வை கழித்து விட்டேன் என்று கூறுகிறாய்...! அப்படி பார்த்தால் அந்த தவத்திற்கு பலனை எதிர்பார்த்தா அந்த தவத்தை மேற்கொண்டேன்.. . இல்லையே...! ஒருவர் தான் செய்யும் தவத்திற்கு பிரதிபலனாக எந்தவொரு பலனையும் எதிர்பாராது தவத்தை மேற்கொள்வதுதான் அந்த தவத்திற்கே ஒரு சிறப்பு தெரியுமா?
அன்று அவரை அவர் கடிதத்தில் எழுதியிருந்தபடி சந்திக்கும் போது உண்மையிலேயே எனக்கும் ரொம்ப பெருமையாகத்தான் இருந்தது. அவருக்கும் அது மனதுக்குள் சந்தோஷத்தை அளித்திருக்கும் என்பது அவரின் முக பாவத்திலும், பேச்சிலும் உணர்ந்து கொண்டேன். ஆனால், நாங்கள் மணம் செய்து கொள்ளாமல் ஒருவரின் நினைவுகளுடனே வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டோம். இறைவன் எங்களுக்காக அளித்த செல்வங்களாக உங்கள் இருவரையும் ஏற்று வளர்த்து ஆளாக்கி விட்டோம் என்ற சந்தோஷத்தை தவிர்த்து, அவரிடமோ, என்னிடமோ வேறு எந்த உணர்ச்சிகளும் அன்று இடம் பெறவில்லை. அதனால் இத்தனை நாள் நாங்கள் மனதால் வாழ்ந்த வாழ்க்கைக்கு திருமணம் என்ற முடிச்சிட்டு கொச்சைப்படுத்த நாங்கள் இருவருமே விரும்பவில்லை..! இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு....!!!! இனி எங்கள் சந்தோஷம் உங்களிருவரின் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மட்டுந்தான்..!!
நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்து அனுபவிக்கும் வாழ்வை கண்குளிர கண்டு நாங்களும் சந்தோஷம் அடைவது மட்டுந்தான் மிகுதி இருக்கும் எங்கள் வாழ்வின் சந்தோஷமும். எங்கள் பந்தமும் உங்கள் இருவருடன் மட்டுந்தான்...! !! இதை அன்றே நாங்கள் தெளிவாக பேசி முடித்து விட்டோம். இனி இதைப்பற்றி வேறு எதுவும் பேசி என்னை துன்புறுத்தாதே. .!!! " சற்று உணர்ச்சிவசப்பட்டவளாக சிவகாமி கூறி நிறுத்தினாள்.
அவளின் அழுத்தமான பேச்சின் முடிவு அவர்கள் இருவரையும் சற்றே திகைக்க வைத்தது. வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும், கவனமான அக்கறையுடனும், அழுத்தமான பொறுப்புணர்வுடனும் முடிவு எடுக்கும் தன் அக்கா ஒரு தெய்வப் பிறவியாக கணேசனின் கலங்கிய கண்களுக்கு தெரிந்தாள். அவர்களிடையே நிலவிய சிறிய மெளனம் அவளின் மன உறுதியை அங்கு ஆழமாக உழுத பெருமையில் சந்தோஷிப்பது போல் தோன்றியது.
" அக்கா. ..! உன் மனதை புரிந்து கொள்ளாது என்னென்னவோ பேசி விட்டேன். என்னை மன்னித்து விடு..! நீங்கள் இருவரும் மனமொத்து எடுத்த முடிவு என்னை ஆச்சரியபடுத்துகிறது இனி வரும் உன் வாழ்வில் உனக்கு துணையாக நாங்கள் இருவரும் எப்போதுமே உன்னுடன் இணைந்திருப்போம். இது சத்தியம் அக்கா... " என்று விழி கலங்கியபடி கூறிய கணேசனை தானும் கலங்கிய விழிகளுடன் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள் சிவகாமி.
அவர்களின் அன்பான பந்தம் புரிந்த மன நிறைவில், சிவகாமியின் தோளோடு தானும் அணைத்தாற் போல நின்றபடி கண்ணீர் உகுத்தாள் கணேசனின் மனைவி.
அங்கே அவர்களின் இடையே உள்ள வாழ்வின் பந்தங்கள் புரிந்த நிம்மதியில் புகைப்படத்திலிருக்கும் தங்கள் அம்மா தான் பெற்ற செல்வங்களின் நல்ல மனதினை கண்டு நீடூழி வாழ ஆசிர்வதிப்பதை உணர்ந்தாள் சிவகாமி.
கதை நிறைவுற்றது.
இக்கதையை என்னுடன் தொடர்ந்து வந்து 4 பகுதிகள்தோறும் வாசித்து என் எழுத்துகளுக்கு பக்கபலமாக நல்ல கருத்துக்களை தந்த என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏.
பாலச்சந்தர் பாணி முடிவு. அவர்தான் கதாநாயகிக்கு சந்தோஷமே தராமல் தியாகியாக்கி விடுவார்! எனினும் இந்தத் திருப்பத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதாங்கள் கதை பகிர்வுக்கு முதலில் வருகை தந்து நல்லதொரு கருத்தினையும் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.
/பாலச்சந்தர் பாணி/
ஹா ஹா ஹா. எப்படியோ முடிக்க வேண்டுமில்லையா? இவ்வளவு வயதான பின் காதல் வெற்றி கண்டு திருமணம் என்றாலும், அதையும் நம்மால் கொஞ்சம் ஏற்க முடியாமல் போகும். அதனால் இந்த திருப்புமுனை முடிவு. கதையின் முடிவை ரசித்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கதையின் இறுதி திருப்பம் நன்றாகத்தான் இருக்கிறது வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
நீங்களும் கதையின் இறுதி திருப்பத்தை படித்து ரசித்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து வந்து கதைக்கு உங்களது ஊக்கம் நிறைந்த கருத்துக்களை தந்தமைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முடிவு அருமை...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இதுவரை கதையை தொடர்ந்து வந்து வாசித்து நல்லதொரு கருத்துக்கள் தந்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த முடிவும் நன்றாக இருக்கிறது. ஆனால் சிவகாமி, நடராஜனை திருமணம் செய்து இருந்தால் கூட்டு குடும்பமாக இருந்து இருக்கலாம். கணேசன் மனைவி தன் மாமாவை விட்டு வரும்போது அவர் தனியாக இருப்பார்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
/இந்த முடிவும் நன்றாக இருக்கிறது/
தங்கள் கருத்துக்கு ரொம்பவும் நன்றி சகோதரி.
/கணேசன் மனைவி தன் மாமாவை விட்டு வரும்போது அவர் தனியாக இருப்பார்./
உண்மைதான்.. ஆனால், அவர் அம்மா உயிருடன் இருக்கலாம். இல்லை அவருக்கென்று யாராவது குடும்ப அங்கத்தினர்கள் கூடவே இருக்கலாம். நாம் இன்னமும் அவர் குடும்பத்தில் சென்று அவரின் உறவுகளை காணவில்லையே....! ஆனால், இத்தனை வயதிற்குப் பிறகு தாங்கள் வளர்த்த குழந்தைகளுக்கு முன் அவருடன் சேர்ந்து இணைவதை சிவகாமி விரும்பவில்லை.
கதையை தொடர்ந்து படித்து கூடவே வந்து தந்த தங்களின் அன்பான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//ஒருவர் தான் செய்யும் தவத்திற்கு பிரதிபலனாக எந்தவொரு பலனையும் எதிர்பாராது தவத்தை மேற்கொள்வது தான் அந்த தவத்திற்கே ஒரு சிறப்பு.. //
ReplyDeleteஆகா!..
அருமையான விளக்கம்..
இதைப் போன்ற கதைகளே புதியது ஒன்றினுக்கு வித்திடுபவை..
கதையின் நிறைவும் மகிழ்ச்சியே..
வாழ்க பல்லாண்டு..
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
/இதைப் போன்ற கதைகளே புதியது ஒன்றினுக்கு வித்திடுபவை../
ஆம்.. ஒன்றிற்குள் ஒன்றாக நம் கற்பனை முடிச்சில் கைக்கோர்த்தவாறு இணைந்து வரும் தன்மையுடையவை.
கதையை தொடர்ந்து வந்து படித்து தந்த நல்லதொரு கருத்துக்கும், கதையின் வரிகளை குறிப்பிட்டு ரசித்தமைக்கும், தங்கள் வாழ்த்துக்களும் மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பலனை எதிர்பாராமல் செய்தது என சிவகாமியே சொல்லி அதை நடராஜனும் ஒப்புக் கொண்டிருக்காரே! இருவருக்கும் எவ்வளவு பெரிய ஆழமான, சிந்தனையுள்ள மனது!இப்படி எல்லாம் இருக்கவும் மனதைத்தளராமல் வைச்சுக்கவும் மிகுந்த மனோபலம் வேண்டும். இருவரிடமும் அது நிறையவே இருக்கு. நல்லதொரு முடிவு. கிட்டத்தட்ட இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். இதே கருவில் திரு சாவி எழுதி அந்தக்காலத்து ஆனந்த விகடனில் விசிறி வாழை என்றொரு தொடர் வந்தது. கிட்டத்தட்ட இதே முடிவு தான் என்றாலும் சோகமான முடிவு அதில்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கதையின் முடிவு நன்றாக உள்ளதென கூறியமைக்கு என் மகிழ்வுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் இதே முடிவை எதிர்பார்த்திருந்தது கண்டு மகிழ்வடைந்தேன்.
திரு. சாவி அவர்கள் எவ்வளவு பெரிய எழுத்தாளர்...! அவர் எழுத்துக்கு முன் இது ஒரு மடு. எனினும் இந்தக்கதை யை அவர் கதையுடன் ஒப்பிட்டு சொன்னது ஒரு மகிழ்வை தருகிறதுஅந்தக் கதையான விசிறி வாழை நாவலை எப்போதோ படித்ததாக தோன்றுகிறது. ஆயினும் முழுக்கதையும் நினைவுக்கு வரவில்லை. மீண்டும் ஒரு தடவை சந்தர்ப்பம் அமைந்தால் படிக்கலாம்.அதுவும் இறைவன் செயல். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.