Friday, December 20, 2019

வெண்டைக்காய் கூட்டு...

வெண்டைக்காய் பிட்லை... 
இது ஒரு விதம்.... 

கொஞ்சம் , முத்தல் இல்லாத ரொம்பவே  இளசுமில்லாத  (கொஞ்சம்  லேசாக குழப்புகிறேனோ.! ரொம்ப இளசாக இருந்தால் கொதிக்கும் போது  உடைந்து கரைந்து உருவமில்லாது போய் விடும்.அதுதான் நடுவாந்திரமாக அமைந்தால், தன் சுயஉருவத்துடன்  சாப்பிடும் போது அதன் சுவையும் தனியே தெரியும்.) வெண்டைக்காய் அரைக்கிலோ வாங்கி சுத்தமாக அலம்பி, (சுத்தமாக அலம்புகிறேன் பேர்வழியென்று தண்ணீரை அதிகமாக செலவழித்து விட வேண்டாம்.. இப்போதெல்லாம் தண்ணீர் வெண்டையை விட மிகவும் காஸ்ட்லி. ) துணியால் துடைத்துக் கொண்டு பின் பருமனாகவும் இல்லாமல், ஒரேடியாக பொடியதாகவும் வராமல் பார்த்து அரிந்து கொள்ளவும். (  "அடாடா .!! என்ன ஒரு புகழ்ச்சி .! வெண்டைக்கே "எனக்கு இவ்வளவு பில்டப்பா" என்ற நாணம் சிறிது வந்திருக்கும்.) 

ஒரு குக்கரில் சாதமும், (பின்னே பிட்லை பண்ணும் போது, சாதம் வேண்டாமா?இதை சூடான சாதத்தில் நெய் விட்டோ, இல்லை ந. எண்ணெய் விட்டோ சேர்த்து சாப்பிட்டால் தானே இந்த பிட்லைக்கே ஒரு பெருமை.  உடைத்த அரிசி உப்புமா, இட்லி, தோசைக்கும் இது பொருந்தி வரும்.) அதன் மேல் தட்டில் துவரம்பருப்பு கால் டம்ளரும், க. பருப்பு ஒரு கரண்டியும் சேர்த்து வைத்து வேகுமாறு ரெடி பண்ணிக் கொள்ளவும். 

ஒரு வாணலியில் சிறிது வேர்க்கடலை போட்டு கொஞ்சம் வறுத்து எடுத்து கொண்ட பின், நான்கு பருப்பும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு (து. ப, க. ப, பா. ப, உ. ப)  வெந்தயம் அரை ஸ்பூன், அவரவர்களுக்கு எவ்வளவு காரமோ அந்தளவிற்கு மி. வத்தலையும் எடுத்துக் கொள்ளவும். நான் ஒரு பத்து வத்தல் எடுத்திருப்பேன். (இது அவ்வளவாக காரமில்லாத நீட்டு வத்தல்.) 

 ஒரு ஏழெட்டு மிளகையும் நான் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இது அவரவர் விருப்பம். விருப்பமில்லாதவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டாம். மிளகு கபத்தை நீக்க வல்லது. ஜீரண சக்தியை கொடுப்பது. மருத்துவ குணம் வாய்ந்தவைதான் நம் அஞ்சறைப் பெட்டியில் (ஐந்து + அறை +பெட்டி) அமைதியாக அமர்ந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்.

அத்தனையும் சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்தவுடன் அதே கடாயில், கறிவேப்பிலை பிரட்டி வைத்தவுடன் கொஞ்சம் துருவிய தேங்காய் லேசாக வறுத்து அதனுடன் சேர்த்து சற்று ஆற வைத்து கொள்ளவும். 

இடையில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை  ஆய்ந்து சுத்தபடுத்தி நன்றாக அலம்பி வைத்துக் கொள்ளவும். 

அந்த கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, ஒரு ஸ்பூன் உ. ப போட்டு வெடித்ததும், நறுக்கிய வெண்டையை போட்டு கொஞ்சம் வதக்கிய பின்  கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தை அதில் விட்டு மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.  

அதற்குள் வறுத்த வேர் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வறுத்த சாமான்களை போட்டு ஒரளவு நைசாக அரைத்து புளிவாசனை போன வெண்டைக்காயுடன் கலந்து பின்னர் வாசம் வரும்வரை ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். 

பின்பு வேர்க்கடலை பொடியை சிறிது தண்ணீருடன் கலந்து அதில் விடவும். வெந்த பருப்பையும், நன்கு மசித்து விட்ட பின் மேலும் ஐந்து நிமிடம் எல்லாமாக கலந்து கொதித்ததும், அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதையும் சேர்க்கவும். கடைசியில் பச்சையாகவே சிறிது பெருங்காய பொடி அல்லது கட்டிப் பெருங்காயம்  பொடித்துப் போட்டு, சிறிது சிம்மில் வைத்து நன்கு கொதித்த வாசனை வந்ததும், பச்சையாகவே ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும். அந்த சூட்டில் தேங்காய் எண்ணெயின் வாசனை கலந்து கமகமக்கும்.


வறுத்த பருப்புகள். மி. வத்தலுடன் கறிவேப்பிலை சகிதமாக தட்டில் காத்திருக்கின்றன.


எண்ணெய்யில் கடுகுடன் வதங்கும் வெண்டைகாய்கள் தன்னுடன் இணையும், புளி ஜலத்திற்காக காத்திருக்கின்றன.


வென்னீரில், ஊற வைத்த புளி, புளிகரைசலாக மாற காத்திருக்கின்றன.


சுத்தப்படுத்தி, அரிந்து வைக்கப்பட்டிருக்கும் கொத்தமல்லி தழைகள் "நமது முறை எப்போதோ" என்ற சிந்தனையில் காத்திருக்கின்றன.


புளிஜலத்தில் மஞ்சள்தூள் உப்புடன் கொதித்த கொண்டிருக்கும் காய்கள் மேற்கொண்டு சொந்தம் கொண்டாட வரும்  அரைத்த மசாலா விழுதுக்காக காத்திருக்கின்றன.


வறுபட்ட வேதனையில் காத்திருக்கும் பருப்பு வகைகளுக்கு துணையாக நானும் வந்து விட்டேன் என்ற ஆறுதல் மொழிகள் பேசியபடி தேங்காய் துருவலும் காத்திருக்கின்றன.


வறுத்த வேர்கடலைகள் முன்னுரிமை பெற்ற சந்தோஷத்தில் மிக்ஸியில் காத்திருக்கின்றன.


முதலிலேயே "நீ குளித்து முடித்து புகழ் மாலை சூடி அலங்கரித்து வரும் முன்பிலிருந்தே நான் வெந்து, நொந்து அமர்ந்திருக்கிறேன் ." என்று வெண்டைகாய்களுடன் மானசீகமாக பேசியவாறு, சற்று கடுப்புடன் வெந்த பருப்புகள் காத்திருக்கின்றன.


" அதை இதை என சேர்த்து என்னை முழுமையாக்கி கொண்டிருக்கிறார்கள். இன்னமும் என்ன மீதமிருக்கிறதோ தெரியவில்லை.! என யோசித்தபடி கடாயில் கூட்டு தயாரிப்பான வெண்டை குழுமம் காத்திருக்கின்றன.


ஒரு வழியாக எல்லா பொருட்கள் சேர்ந்து ஒரு பெயர் கிடைத்த மகிழ்விலிருக்கும் "வெண்டைக்காய் கூட்டு/பிட்லை/" சந்தேகத்திற்கிடமின்றி நாம் சாப்பிட காத்திருக்கின்றன.

காத்திருப்பதில்தான் மகிழ்ச்சி வருகிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் ஏதோ ஒன்றிற்காக காத்திருக்கிறோம். வரும் அதனை எதிர்பார்த்தபடி அனைத்தும்  நன்மைகளாக நடகக வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு காத்திருக்கிறோம்.

இதனை இந்த முறையில், இல்லை, வேறு விதமான முறையிலும் அனைவரும் செய்து ருசித்திருப்பீர்கள். எனினும்  இந்த பக்குவம்  உங்களுகெல்லாம் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்ந்து விட்டு, வரும் கருத்துகளுக்காக நானும் காத்திருக்கிறேன்.  நன்றி... 🙏... 

36 comments:

  1. அதலக்காய் (பாவக்காய்க் குடும்பம்) மற்றும் மிதி பாகல் இரண்டிலும் இப்படிப் பண்ணுவோம். எனக்கென்னமோ பிட்லைனாலே மிதி பாகல் அல்லது அதலக்காய் தான் நல்லா இருப்பதாக ஓர் எண்ணம். வெண்டைக்காயில் புளி விட்டுக் கூட்டுப் பண்ணுவோம் என் பிறந்த வீட்டில். ஆனால் அதற்குத் துவரம்பருப்பை அரைக்கரண்டி கண்ணிலே காட்டி சாம்பார்ப்பொடி போட்டுப் பண்ணுவாங்க. இப்படிப் பண்ணினதில்லை. இங்கே மாமியார் வீட்டில் வெண்டைக்காய்க் கறி அல்லது சாம்பார், மோர்க்குழம்பில் போடுவது தான். எப்போதேனும் கடலைமாவில் உப்புக்காரம் போட்டு பஜ்ஜிமாவு மாதிரிக் கரைத்துக் கொண்டு வெண்டைக்காயை அதில் போட்டுப் பொரித்து எடுப்பார்கள். அதெல்லாம் கிராமத்தில் இருந்தப்போ தென்னந்தோப்பில் இருந்து தேங்காய் எண்ணெய் வந்து கொண்டிருந்த காலம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தாங்கள் முதல் வருகை தந்து நல்லதொரு கருத்துக்களை தந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      இந்த வெண்டைக்காய் நீங்கள் சொல்வது போல் சாம்பார் பொடி போட்டும் பண்ணலாம். (உடன் தேங்காய் துருவி வெறுமனே வறுத்துப் போட்டு அரைக்காமலும் சேர்த்து செய்யலாம்.) மற்றபடி சாம்பார், வெண்டைக்காய் பஜ்ஜி. (கடலை மாவில் தோய்த்து போடுவது) நானும் அடிக்கடி செய்துள்ளேன். இந்த வெண்டை பஜ்ஜி மோர்/தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

      பாகல்காயிலும் பிட்லை நன்றாக வரும். அதலக்காய் என்றால், சின்னதாக இருக்கும் பாகல்காயா? நான் இந்த சின்ன பாகல்களையும், பெரியதாக இருக்கும் பாகல்களையும், இந்த மாதிரி பிட்லைகள் செய்துள்ளேன். காய்கள் எல்லாம் ஒன்றுதான்.! வறுக்கும்/சேர்க்கும் சாமன்களின் விதங்கள்தான் வேறுபடுகிறது. எல்லாமே பிரதானமான அன்னத்திற்கு உதவியாக நாம் செய்யும் விதவிதமான உபசரிப்பு கூட்டணிகள்தான். (இவைகள் இல்லாவிடில் நமது நாக்கு குறை சொல்லும் என்ற பயங்கள் வேறு.. ஹா. ஹா. ஹா.)

      வெண்டைக்காய் பிட்லையை ரசித்து கருத்துட்டிருப்பதற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. வெண்டைக்காய் சாப்பிட நான் மட்டும் தான் முதல்லே வந்திருக்கேன் போல!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /வெண்டைக்காய் சாப்பிட நான் மட்டும் தான் முதல்லே வந்திருக்கேன் போல/

      ஹா ஹா ஹா. சூடாக இருக்கும் போது எடுத்துக் கொள்ள நீங்களாவது முதலிலேயே வந்ததற்கு மிக்க நன்றிகள். தங்கள் பாணியில் சொன்னால் "இது அவ்வளவாக போணியாகாது" எனத் தோன்றுகிறது. பார்க்கலாம். மீள் வருகைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. நீங்கள் சொன்னவிதம் ரசனை... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து தந்த தங்களுடைய பாராட்டுதல்களுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. ருசியைவிட சொல்லிய விதம் ருசித்தது.

    பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ருசித்து பாராட்டியமைக்கு என் மன மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      தங்களுக்கு நான் கூறிய பிறந்த நாள் வாழ்த்துக்களை அன்புடன் ஏற்றதற்கும் மகிழ்ச்சி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. சொல்லிய விதம் அருமை.
    வெண்டைக்காய் இருக்கிறது செய்து பார்த்து விட வேண்டியது தான்.
    படங்கள் செய்முறை குறிப்புகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      /வெண்டைக்காய் இருக்கிறது செய்து பார்த்து விட வேண்டியது தான்./

      உடனே செய்கிறேன் என்றதற்கு மகிழ்ச்சி.. செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். தங்கள் பதில் என்னை ஊக்கப்படுத்துகிறது. தங்கள் அன்புக்கு என மன சந்தோஷத்துடன் கூடிய நன்றிகள்.

      உங்கள் கைவலி எப்படி உள்ளது என்ன ஏது என்ற விபரம் அறியேன். உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரி. அத்துடன் உங்கள் சிரமம் பாராமல் என் பதிவுக்கு நீங்கள் வந்து தந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இப்போது கைவலி குணம். காயங்கள் ஆறிவருகிறது.சமையல் செய்யும் போது ஏற்படும் விழுபுண்கள்.
    கவனம் தேவை என்று எச்சரிக்கை செய்கிறது.
    கவனமாய் இருக்க முயல்கிறேன்.

    இன்று வெண்டைக்காய் புளிக்கூட்டு செய்தேன். கொஞ்சம், கத்திரிக்காயும் சேர்த்து செய்தேன்.
    நன்றாக இருந்தது. படம் எடுக்க மறந்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நீங்கள் சொன்னதை கேட்கவே மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது. இப்படி தவறுதல்கள் தீடிரென உண்டாவது என்றாலும் அந்த நேரத்தின் வலிகளை தாங்கும் நேரந்தான் சற்று கஸ்டமானது.எப்படித்தான் பொறுத்து கொண்டீர்களோ? மருத்துவரிடம் சென்று வந்தீர்களா? உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும். பூரண குணமடைய ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. நீங்கள் செய்த வெண்டை, கத்திரி புளிக்கூட்டையும் படமெடுத்து பதிவாக எழுதி பகிர்ந்திருக்கலாமே சகோதரி. நாங்களும் ருசித்திருப்போம் அல்லவா..!

      Delete
  7. சுவையையையும், நகைச்சுவையையும் கலந்து சொல்லியிருக்கும் விதம் ரசிக்க வைத்தது.  வெண்டைக்காயைப் போட்டு இப்படியெல்லாம் படுத்தியதில்லை!!!!   சுலபமாக சாம்பாரும் வதக்கலும்தான்!  சிலசமயம் வெந்தயக் குழம்பு செய்ததுண்டு!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வெண்டைக்காய் பதிவை குறித்த தங்களின் நகைச்சுவையான கருத்து என்னை சிரிக்க வைத்தது. வெண்டைக்காய்க்கும் இது கேட்டிருந்தால்,என்னை கொஞ்சமாவது சபித்து சந்தோஷப்பட்டிருக்கும். ஹா. ஹா. ஹா.

      நல்லதொரு கருத்தை ரசிப்புடன் தந்ததற்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. வெளி வேலைகளால் பாதிக்கப்பட்டு நான் வர மிகவும் தாமதமாகி விட்டது   மன்னிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கு எப்போது சௌகரியபடுகிறதோ அப்போது வந்து படித்து கருத்துக்கள் தரலாமே! எதற்கு மன்னிப்பெல்லாம்? எப்போதும் என் பதிவுகளுக்கு தங்கள் கருத்துக்கள் முன்னிலை வகிக்கும். அந்த ஆதங்கத்தில் நானும் வந்து தங்களுக்கு நினைவுப்படுத்தி விட்டேன். வேறு ஒன்றுமில்லை...தாங்கள் வந்து கருத்துரை தந்தது மகிழ்ச்சியாக உள்ளது.என் எழுத்துக்களுக்கு உங்கள் கருத்துக்கள் பலமூட்டுகிறது. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ///என் எழுத்துக்களுக்கு உங்கள் கருத்துக்கள் பலமூட்டுகிறது. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரரே.//

      அப்போ என் எழுத்துக்கள் கலகமூட்டவில்லையா?:).. சே..சே.. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே.. நலமூட்டவில்லையோ?:) விடுங்கோ விடுங்கோ இதுக்கு மேலயும் மீ இங்கின நிற்பேனோ.. இப்பவே போகிறேன் தேம்ஸ்க்கு:))... குளிரெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவதைப்போலவாக்கும்.. ம்ஹூம்ம்:))

      Delete
    3. சே..சே.. அபவும் டங்கு ஸ்லிப்பாச்சுதே கர்ர்:)) அது பலமூட்டவில்லையோ எனக் கேய்க்க வந்தேன்:).

      Delete
    4. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வாங்க... வாங்க.. உங்களைத்தான் வழி மேல் விழி வைத்து எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

      /அப்போ என் எழுத்துக்கள் கலகமூட்டவில்லையா?:).. சே..சே.. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே.. நலமூட்டவில்லையோ?:) /

      ஹா. ஹா. ஹா. ஹய்யோ.. குளிருக்கு ரிஸ்க் எடுக்க நிறைய ரஸ்க் சாப்பிட்டு தாங்கள் உடல் நலமில்லாததால் டங்கு அடிக்கடி ஸ்லிப்பாகுதோ? ஹா. ஹா. ஹா. ஒன்று தெரியுமா அதிரா சகோதரி.. அனைவரின் கருத்துக்கள் என் எழுத்துக்கு பலமளிக்கிறது என்றால், தங்கள் வருகையும், கருத்துக்களும் எனக்கே பலமளிக்கிறது. (ஓவராக ஐஸ் என எண்ண வேண்டாம்.. அப்படி குளிர்ந்தாலும், இதுவும் உங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போலத்தானே.. ஹா.ஹா.ஹா.)

      தங்கள் வருகையும் கருத்துக்களும் எனக்கு மிகவும் மன மகிழ்வை தருகிறது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. ஆரை விட்டாலும், இந்த “பிட்லை” அங்கிளை மட்டும் விடவே மாட்டீங்கபோல இருக்கே:))..

    // தன் சுயஉருவத்துடன் சாப்பிடும் போது//

    அதாவது சாப்பிடும்போது பெல்ட் போட்டு வண்டியை மெல்லிசாக்காமல்:), முகமூடி அணியாமல்:)), சுய உருவத்துடன் சாப்பிடச் சொல்றீங்க அப்பூடித்தானே?:).. புரியுது புரியுது:)) ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஆரை விட்டாலும், இந்த “பிட்லை” அங்கிளை மட்டும் விடவே மாட்டீங்கபோல இருக்கே:))../

      ஹா.ஹா.ஹா. பிட்லைக்கு ஆண் அந்தஸ்து கொடுத்து அங்கிள் ஆக்கிட்டீங்க.. சரி.. சரி அதுக்கு ஒரு நன்றி தெரிவிப்பது நான் மட்டும் அல்ல. மிஸ்டர் பிட்லை அங்கிளுந்தான்:)..

      /அதாவது சாப்பிடும்போது பெல்ட் போட்டு வண்டியை மெல்லிசாக்காமல்:), முகமூடி அணியாமல்:)), சுய உருவத்துடன் சாப்பிடச் சொல்றீங்க அப்பூடித்தானே?:).. புரியுது புரியுது:)) ஹா ஹா ஹா../

      ரசித்து விழுந்து விழுந்து ரசித்தேன். (ஆனால் எங்கும் அடிபட்டுக் கொள்ளாமல்..) நான் நம் சுய உருவத்தை சொல்லவில்லை..! வெண்டைக்காய் தன் சுய உருவை இழந்து நம் கண் முன்னே வருத்தப்பட்டு நிற்க கூடாது என்பதற்காக பார்த்து தரமான வெண்டைகளாக வாங்கச் சொன்னேன். அதற்குதான் இவ்வளவு சிபாரிசும்..ஹா.ஹா.ஹா. அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. ஒருமாதிரி திருமணத்தை இனிதே முடித்து வைத்துவிட்டீங்கள்.. நான் வெண்டிக்காய் அக்காவைச் சொன்னேன்.. இடையில குழம்பிடுமோ என எனக்கு நெஞ்செல்லாம் திக்கு திக்கு என இருந்துது, ஏனெனில் புளி ஜலம், மற்றும் அவிஞ்ச பருப்பு அண்ணாக்களெல்லாம் நீண்ட நேரம் வெயிட் பண்ணியதால பதறிட்டேன்ன்:))..

    அப்பாடா மிக அருமையாக மாங்கல்யம் தந்து நானேதா.. என நிறைவாகி விட்டது பிட்லே..:))..

    இதற்கு நீங்கள் காஷ்மீர் ஆன்ரியை சேர்த்திருக்கலாமோ.. அதாவது மிளகாய் சேர்த்தும் கலர் வராமைக்குச் சொன்னேன்...

    நன்கு மினக்கெட்டு அருமையாகச் சமைக்கிறீங்க வாழ்த்துக்கள்.

    ஸ்ரீராம் பல்லைக் கடிப்பது தெரியுது:) [இதை எங்கள் புளொக்குக்கு அனுப்பினால் , நான் என்ன போட மாட்டேன் என்றா சொன்னேன்.. ஸ்ரீராமின் மைண்ட் வொயிஸ்:))] ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      /ஒருமாதிரி திருமணத்தை இனிதே முடித்து வைத்துவிட்டீங்கள்.. நான் வெண்டிக்காய் அக்காவைச் சொன்னேன்.. இடையில குழம்பிடுமோ என எனக்கு நெஞ்செல்லாம் திக்கு திக்கு என இருந்துது, ஏனெனில் புளி ஜலம், மற்றும் அவிஞ்ச பருப்பு அண்ணாக்களெல்லாம் நீண்ட நேரம் வெயிட் பண்ணியதால பதறிட்டேன்ன்:))..

      அப்பாடா மிக அருமையாக மாங்கல்யம் தந்து நானேதா.. என நிறைவாகி விட்டது பிட்லே..:))../

      ஹா.ஹா.ஹா. நானாவது வெண்டையை குளிப்பாட்டி, அலங்கரித்து, மாப்பிள்ளை பையனை(பருப்புகளை)யும் அலங்கரித்து ரெடி பண்ணி வைத்தேன். நீங்கள் கற்பனையின் சிகரத்தில் ஏறி அதற்கு திருமணம் என்றே சொல்லி, கெட்டி மேள மந்திரத்தையும் பாடி விட்டீர்கள். வாழ்க உங்கள் கற்பனைத் திறன்.

      கடைசியில் காத்திருந்து போரடித்து பெண்ணை வேண்டாம் என புறக்கணிக்கும் படங்கள் நினைவுக்கு வந்து விட்டனவோ.!

      அனைறய தினம் நான் சமைத்த சிவப்பு மிளகாய் காரமில்லாமல் அமைந்து விட்டதால் கலரும் தர மறுத்து விட்டது. தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      /ஸ்ரீராம் பல்லைக் கடிப்பது தெரியுது:) [இதை எங்கள் புளொக்குக்கு அனுப்பினால் , நான் என்ன போட மாட்டேன் என்றா சொன்னேன்.. ஸ்ரீராமின் மைண்ட் வொயிஸ்:))] ஹா ஹா ஹா../

      அவர் இதற்கெல்லாம் பல்லை கடித்து துன்புறுத்த மாட்டார் என நினைக்கிறேன். ஏனென்றால், அவருக்கு எ. பிக்கு வந்து கொண்டிருக்கும் இந்த சாம்பார் ஐயிட்டங்களை பார்த்து பார்த்தே பல்லை கடிக்கிறார் என நான் கண்ட கனவொன்றில் கண்டு கொண்டேன். ஹா. ஹா. ஹா.

      அருமையான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. //காத்திருப்பதில்தான் மகிழ்ச்சி வருகிறது//

    ஆஆங்ங்ங்.. இதனாலதானாக்கும் உங்களைக் காத்திருக்க வச்சு:)) இன்று 2 நாட்களாஅல் வந்தேனாக்கும்:) மகிழ்ச்சியாக இருக்கோ கமலாக்கா?:)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஆஆங்ங்ங்.. இதனாலதானாக்கும் உங்களைக் காத்திருக்க வச்சு:)) இன்று 2 நாட்களாஅல் வந்தேனாக்கும்:) மகிழ்ச்சியாக இருக்கோ கமலாக்கா?:)/

      கண்டிப்பாக...! காத்திருப்பதில் ஒரு விதமான தனி மகிழ்ச்சியே..!
      காலைச் சூரியனுக்காக காத்திருக்கும் இரவும், பனியும், பல மலர்களும், நிலவுக்காக காத்திருக்கும் இருளும் இன்னும் பல பூக்களும், காதலன்/காதலி வருகைக்காக காத்திருக்கும் காதலும், இப்போது உங்கள் வருகை தந்த ஆனந்தத்திற்காக காத்திருந்த நானும், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
      தங்கள் அத்தனை கருத்துக்களுக்கும் மன மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. வெண்டைக்காய் வடக்கும் போது சளி போல் நார் நாராய் வருக்கின்றதே. அதற்க்கு என்ன செய்யலாம். மற்றபடி அனைத்தும் சிறப்பாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /வெண்டைக்காய் வடக்கும் போது சளி போல் நார் நாராய் வருக்கின்றதே. அதற்க்கு என்ன செய்யலாம்./

      வெண்டைக்காயை கழுவி நன்றாக துடைத்த பின் சமையலுக்கு பயன்படுத்தினால் இதை ஓரளவுக்கு தவிர்க்கலாம். கடாயில் எண்ணெய் விட்டு தாளித்ததும், வெண்டையை போட்டு பிரட்டி கடாயை மூடாமலே வதக்கலாம். அப்படியும் ஒன்று சேர்ந்து வருவதை தவிர்க்க உப்ப, மஞ்சள் தூள் போட்டு பிரட்டியதும் அடுப்பை சிம்மில் வைத்து கொஞ்சம் புளிப்பு தயிரோ, இல்லை புளி கரைசலோ தெளித்து விட்டு பின் மசாலா பொடி அவரவர் விருப்பபடி சேர்த்து கொஞ்சம் தாராளமாக எண்ணெய் விட்டு வதக்கும் போது உதிரி உதிரியாக வந்து விடும்.

      தங்கள் கருத்துக்கும்,பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. வெண்டைக்காய் என்றால், என் முதல் preference, எண்ணெய் வதக்கல். சில சமயங்களில் பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்ததும் உண்டு. அடுத்தது மோர்க்குழம்பு. கடைசியாக சாம்பார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் கூறியது அனைத்தும் நன்றாக இருக்கும். இந்த முறைகள் செய்துள்ளேன். வெண்டைக்காய் வெந்தய வத்த குழம்பை விட்டு விட்டீர்களே.. ! அதுவும் சுவையாக இருக்கும். முதலில் பருப்பு பொடி போட்டு உண்ணும் சாதத்திற்கு இந்த வெண்டை வெந்தய வ. குழம்பு நல்ல பொருத்தமாக இருக்கும். வெய்யில் காலத்தில் வெண்டைக்காய் வற்றல் செய்து அதையும், வறுத்தோ, அல்லது புளிக்குழம்போ செய்து சுவைக்கலாம். இப்படி பல விதங்கள். அதில் இது ஒரு விதமாக அமைந்து விட்டது.

      தங்கள் வருகைக்கும், ஊக்கமளிக்கும் கருத்துக்களுக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. என் மகன் சிறுவனாக இருந்த பொழுது அவனுக்கு மிகவும் பிடித்த ஐட்டம் பிண்டி பாஜி(வெண்டைக்காய் கறி). தினமும் செய்து கொடுத்தாலும் சாப்பிடுவான். தினமும் ஒரே மாதிரி செய்ய முடியுமா? விடும் விதமாக செய்யக் கற்றுக் கொண்டேன். இது ஒரு புது மாதிரியாக இருக்கிறது. இதையும் முயற்சி செய்கிறேன். படங்களும், விளக்கமும் பிரமாதம்!இதை நீங்கள் எ.பி.க்கு அனுப்பியிருக்கலாம், (நிறைய பேர் பார்ப்பார்களே). என்பது என் தாழ்மையான கருத்து.  

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் பதிவை ரசித்துப்படித்து கருத்திட்டிருப்பதற்கு நான் மிகுந்த மனமகிழ்ச்சி அடைகிறேன்.

      பிண்டி பாஜி என்பது கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நறுக்கிய வெண்டைக்காய்யில் சேர்த்து பிசறி அத்துடன் காரம் உப்பு சேர்த்து செய்யும் வெண்டைக்காய் கறிதான் என நினைக்கிறேன். அந்த ருசி நன்றாக இருக்கும்.

      இதையும் செய்ய முயற்சிக்கிறேன் என்றதற்கு மிக்க மகிழ்ச்சி. தங்கள் அன்பான கருத்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் என் பணிவான நன்றிகள்.

      இதை நீங்கள் சொல்வது போல் எ. பிக்கு அனுப்பியிருக்கலாம்.ஏற்கனவே கோஸ் பிட்லை, கீரை சாம்பார் பதிவு என அனுப்பி எ. பியில் வெளிவந்தது. (எ. பிக்கு என்னுடைய பணிவான நன்றிகள் என்றென்றும்..) சும்மா சாம்பார் பதிவாக அனுப்புகிறோமே என்ற தயக்கமான எண்ணத்தினால்தான் அனுப்பவில்லை. வேறு ஒன்றுமில்லை.
      தங்கள் அழகான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.
      தொடர்ந்து வந்து என் எழுத்துக்களை ஊக்கபடுத்துங்கள்.என் கற்பனை களுக்கு தங்கள் கருத்துக்கள் பலமாக இருக்கிறது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. காத்திருப்பது சுகமோ, வேதனையோ பலருக்கு பல விஷயங்களுக்காக காத்திருக்கத்தான் வேண்டியிருக்கிறது. 
     

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /காத்திருப்பது சுகமோ, வேதனையோ பலருக்கு பல விஷயங்களுக்காக காத்திருக்கத்தான் வேண்டியிருக்கிறது/

      உண்மை.. மிக அழகாக கூறியுள்ளீர்கள். பலருக்கு பல விஷயங்களுக்காக காத்திருக்கும் போது, வரும் சுகமும், வேதனையும், அந்தந்த விஷயங்களின் சாராம்சத்தையும், காத்திருப்பவர்களின் பொறுமையான நல்ல மனதையும் பொறுத்தது.அழகான பதில்.நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. " அதை இதை என சேர்த்து என்னை முழுமையாக்கி கொண்டிருக்கிறார்கள். இன்னமும் என்ன மீதமிருக்கிறதோ தெரியவில்லை.! ....


    ஹா ஹா ...my MIND VOICE too..

    இப்படி இதுவரை செஞ்சது இல்லை கமலா அக்கா ...


    ரொம்ப புதுசா இருக்கு இந்த வெண்டைக்காய் கூட்டு/பிட்லை/...


    நாங்க சாம்பார் , புளிக்கொழம்பு , பொரியல் , புளிக்கூட்டு இதான் பண்ணுவோம் ..

    இப்படி பருப்பு மற்றும் புளி சேர்த்து செஞ்சதே இல்ல ...


    அதை விட நீங்க சொல்லிய விதம் வழக்கம் போல வெகு சுவாரஸ்யம் ...


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வெண்டைக்காய் பதிவை குறித்த தங்களின் அழகான கருத்துக்களை கண்டு என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. தங்களின் ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்தை வளமாக்குமென நம்புகிறேன். தங்களின் கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete