Sunday, September 2, 2018

ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த நாள்.

இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா.

கணங்களுக்கு முதன்மையானவனே...
விக்கினங்களை களைபவனே...
விநாயகப் பெருமானே.. எனை என்றும்
காக்கும் கணேசா..! நல்லெழுத்துக்களை அறியவும், பதியவும் உன் துணை
வேண்டினேன். தப்பாமல் தந்தருள்வாய்
வேலனுக்கு சோதரனே....


ஓம் கார வடிவே கணேசா.!
எங்கள் உள்ளத்தில் ஓம் என ஓதினோம் நேசா.!
யேசுதாஸின் இனிமையான குரலில் என் இஷ்ட தெய்வத்தின் மீது எனக்குப் பிடித்த இனிமையான பாடலொன்றை கேட்கலாமா?


பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவசமிகவாகுதே கண்ணா...


அந்த பரவசங்களுக்கு நடுவே உன்  கோகுலத்தில், உன்னருகில் விளையாடும் ஒரு சிறிய பிறப்பாக நானும் பிறந்திருக்க கூடாதாவென என் பாழும் மனம் நினைக்கிறது கிருஷ்ணா..  அப்போதேனும் உன்னை தொட்டு தொடர்ந்து பால்யகால விளையாட்டில் பங்கேற்று சந்தோஷமடைந்திருப்பேனே தாமோதரா...


பிஞ்சு விரல்களால், நீ வெண்ணை உண்பதே அழகு. உன் அழகுக்கு அழகு செய்யும் ஆபரணங்கள்  இடையே ஒரு சிறு கல்லாக நான் இருக்க கூடாதாவென என் மனம் ஏங்குகிறது கண்ணா? .அப்போதேனும் உன் அழகை அருகிலிருந்து கண்டு களித்திருப்பேனே  கேசவா...


ஒரு விரலால்  வெண்ணை உண்ணும்  போது ,பிற விரல்களில் வடியும் வெண்ணையுடன் உன் அழகை காணும் போது, உருகும் வெண்ணையின் நிலையில் என் மனமும் தவிக்கிறது  அந்த வெண்ணெய் ஒரு துளியில் எங்கேனும் ஒரிடத்தில் நானும் சங்கமித்து இருக்க கூடாதா நாராயணா ...

தானே வந்து தவழ்ந்த நிலையில், நிரம்பி வழியும் பாலமுதை கை நிறைய சிந்திச் சிதறி எடுத்துண்ணும் கோலம் காண தேவாதி தேவர்களும் வந்து பார்க்கும் காட்சியை கண்டு உண்ண மறந்து கை ஊன்றிய நிலையில் திரும்பி நோக்கி அதிசயக்கிறாயோ? அந்த பாலமுதம் கடையும் மத்தாக நான் இருந்திருக்க கூடாதா கிருஷ்ணா ? அந்த சமயத்தில் கடையும் பொழுதில் கடைக் கண்ணால் உன் அழகை தரிசித்திருப்பேனே த்ரிவிக்கரமா.... 


சின்னஞ்சிறு விரல்களால் நீ உண்டது போறாது என அன்பின் மிகுதியில், உன் தாய்  ஊட்டி விடுவதை ஆனந்தமாக உண்ணும் கிருஷ்ணா... அதற்கு உன் தாயாகிய யசோதைக்கு கள்ளம் கபடமற்ற உன் உள்ளத்தையே பரிசாக்கி கொடுக்க  நினைக்கிறாயோ? அந்த  பொழுதில் உன் தாய்  விரலில் அணிந்திருக்கும் கணையாளியின் ஒரு உலோகமாக நான் பிறந்திருந்திருக்க கூடாதா யசோதை கிருஷ்ணா? அப்போது உன்னை ஸ்பரிசித்து மன மகிழ்ந்திருப்பேனே நரசிம்மா....


என்ன தவம் செய்தாய் யசோதா....பரம் பொருளை உன் மகனாக அடைவதற்கு.. உன் மடியமர்ந்து உண்ட களைப்போ உன் மகனுக்கு.. அதனால்தான் உன் அணைப்பில் ஆசுவாசபடுத்திக் கொள்கிறனோ ? உன் தழுவலில் அவனும், நீயும் மெய்மறந்த அழகை, நீ அமர்ந்திருக்கும் மர சிம்மாசனத்தில் ஒரு பலகையாக இருந்திருந்தாலும், உங்கள் அன்புள்ளங்களை தரிசித்திருப்பேனே பத்மநாபா.....


அன்பு தாயின் கைகளால் வெண்ணையை உண்டு மகிழ்ந்த நீ பதிலாக அவ்வெண்ணை ஈந்த பசுவினத்தை மகிழ்விக்க  உன் இதழ்கள்  தந்த இசையமுதை அவை செவி குளிர மனம் நிறைய பருகச் சொல்லி அளிக்கின்றனையோ? அதன் மேல் சாய்ந்து நீ கானம் இசைத்த போது உனை சுற்றி மலர்ந்திருக்கும் மலரிடையே ஒரு மலராக நானும் மலர்ந்திருக்க கூடாதோ மணிவண்ணா? அப்போதாவது உன் மலர் முகம் கண்டு மகிழ்ந்திருப்பேனே புருஷோத்தமா....


உன் அருகாமையில் "ஆ" வினங்களை கட்டுண்டு நிற்க வைத்த மாதவா... அவைகள் முந்தைய பிறவியில் செய்த மாபெரும் புண்ணியந்தான் உன்னை அங்கு கொண்டு சேர்த்ததுவோ மதுசூதனா... அந்த "ஆ"வினங்களின் கொம்புகளில் கட்டிய சிறு மணியாகவாவது என்னை நீ உருவாக் கியிருக்க கூடாதா? அப்போதாவது உன்னை கண்டு அகமகிழ்ந்திருப்பேனே கோவிந்தா.......


உனது கான மழைதான் ராதையின் சுவாசம். அதனால்தான் அவள் உன்னுடனே பிரிக்க முடியாதபடி ராதா கிருஷ்ணனாக வாசமாகி சங்கமித்து விட்டாள். வண்ணமய ஆடைகள் அணிந்து அவளுடன் பாடிக் களித்திருந்த போது, அந்த பட்டாடையின் ஒரு நூலாகவேனும் நான் பிறப்பெய்திருக்க கூடாதா ராதே கிருஷ்ணா? அந்த சமயத்தில்  உங்களிருவரையும் கண்டு ஆனந்தித்து பரவசமாகியிருப்பேனே வாமனா.....


உன்னையே நினைக்கும் அனைத்து உள்ளங்களிலும் நீ ஒருவனே குடியிருப்பாய்.  உன் புல்லாங்குழல் இசையில் மயங்கியதால் தன்னிலை மறந்த நிலையில் கோபிகா ஸ்திரிகளின்  மெய் மறந்த கோலம்... உன் அருகிலிருக்கும் மரத்தின் ஒரு இலையாகவேனும் நான் பிறவி எடுத்திருக்கலாகாதா அநிருத்தா?அப்போதாவது உன்னை தரிசித்திருப்பேனே உபேந்திரா.....


பொன்னும், பொருளும் எனக்கு இணையாகுமோ? அன்புக்கு மட்டுமே என்றும் நான் ஐக்கியமானவன். ஒரு சின்னஞ்சிறு துளசி இதழுக்கு முன் அந்த பொருள்கள் எல்லாம் வீண். ஆடம்பரம் நிலைக்காதது என அந்த நிமிடம் உணர்த்திய அச்சுதா... அந்த துளசியின் அடி மண்ணில் ஒருசிறு துகள்களாக நான் ஜனித்திருக்க கூடாதா?  அந்த சமயத்திலாவது  உன்னை கண்டுகந்திருப்பேனே  ஜனார்த்தனா..


நீதான் பரம் பொருள். உன்னை புரிந்தவர்களுக்கு மட்டும்.... உன்னையே உளமாற சரனென அண்டியவர்களை நீ என்றும் உன் கைகளில் தரித்திருக்கும் சங்கு சக்கரம் போல் கை விட்டதில்லை. உன் மணிமுடியில்  ஆடும் முத்துச்சரத்தின் ஒரு முத்தாக நான் அலங்கரிக்கப்பட்டு இருக்க கூடாதா பரந்தாமா? அந்த நிலையில் உனைக் கண்டு அகமகிழ்ந்திருப்பேனே சங்கர்ஷணா....


ஒரு மனிதனாக செய்ய வேண்டிய செயல்களில், பலன்களை எதிர்பாராது கடமையை மட்டும் செய்து முடிக்க உன் பார்த்திபனுக்கு  அன்பாக கட்டளையிட்ட பரந்தாமா ! அன்றேனும் ரத  கஜ, துரக பாதாதிகளில், ஓருயிராக படைத்திருக்க கூடாதா? இத்தனை சமயங்களிலும்  எந்த விதத்திலும் உன்னை தரிசிக்க இயலாமல் செய்து விட்ட என் ஊழ் வினையகற்றி  என்னை உன் பார்த்திபன் நிலையில் நீ பிறந்த பொன்னாளான இன்றேனும் இப்போதாவது  அனுகிரஹித்து விடு தீன தயாளா.!


      கோவிந்தா   🎆   கோபாலா
      ஹரே ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமுவந்த கிருஷ்ண ஜயந்தி நல் வாழ்த்துகள்.

29 comments:

  1. அனைத்து படங்களும் அழகு.
    கணபதியை வேண்டி எழுதிய கவிதை அருமை.
    தீனதயாளனிடம் கேட்கும் வரங்களை தருவான் .
    கேட்டதை கொடுப்பவன் அல்லவா !
    மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். அதற்கு தகுந்த படங்கள் பகிர்ந்து.
    வாழ்த்துக்கள்.
    இனிமையான பாடல் பகிர்வை கேட்க முடியவில்லை.
    மீண்டும் வந்து கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
      முதலில் வருகை தந்தைக்கும் என் அன்பான நன்றிகள்.

      தேர்ந்தெடுத்த படங்களையும், அதற்கேற்ற மாதிரி என் எண்ணங்களை, எழுத்தாக்கியதையும் பாராட்டியமைக்கும், மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அளித்தமைக்கும் என் மனம் நிறைவான நன்றிகள் சகோதரி.

      கணபதி மேல் பாடும் பாடலை தங்களுக்கு நேரம் இருக்கும் போது வந்து கேளுங்கள். அவசரமில்லை. நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. ஓம்கார வடிவே என்று இருந்தால் ஓகே. ஓம் கார வடிவே என்று பிரித்தால் காரமாக இருக்கிறது!!! காலை வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


      /ஓம்கார வடிவே என்று இருந்தால் ஓகே. ஓம் கார வடிவே என்று பிரித்தால் காரமாக இருக்கிறது!!!/

      ஹா. ஹா ஆம் சற்று காரம் தூக்கலாகதான் தெரிகிறது. கூடுதல் இனிப்பாக பாயாசம் செய்து நிவேதனம் செய்து விடுகிறேன். ஓ. கேவா. ஹா ஹா ஹா நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கவிதைகள் அழகாய் எழுதி இருக்கிறீர்கள்.

    அஸ்ஜகிய படங்கள். கிருஷ்ணன் அழகை சொல்ல தமிழும், பாடங்களும் இருப்பது சிறப்பு.

    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. // அஸ்ஜகிய //

      அழகிய... அழகிய... அழகிய... அழகிய... அழகிய...

      //பாடங்களும் //

      படங்களும்... படங்களும் படங்களும் படங்களும் படங்களும் படங்களும் !!!

      :)))

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      இது கவிதை வர்க்கமல்ல. என் மனதில் உதித்த எண்ணங்களின் வார்த்தை தொகுப்பு.
      தங்களுடைய அன்பான பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
      முதலில் ஏதோ சம்ஸ்கிருத வார்த்தையில் பாராட்டு என்று நினைத்தேன். பின்னர் திருத்தம் கண்டு தெளிவடைந்தேன். பொதுவாக பிழைகள் ஏற்படுவது சகஜந்தானே.. அதற்கு இத்தனை முறை திருத்தமா? ஹா. ஹா. ஹா மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. உங்கள் எண்ணங்களை மிக அருமையாகக் கவிதையாக வடித்து விட்டீர்கள். அந்த ஆழ்வார்கள் வேண்டியதை எல்லாம் நினைவிலும் கொண்டு வந்து விட்டீர்கள். எனக்கெல்லாம் இப்படி எழுத வராது, எல்லா அவதாரங்களையும் விட இந்தக் கிருஷ்ணாவதாரத்துக்குத் தான் பூர்ண அவதாரம் என்னும் பெயர்! சிறப்பும் கூட. இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள். அந்தக் கிருஷ்ணன் அவர்கள் வாழ்க்கையில் அனைத்துப் பேறுகளையும் குறைவின்றித் தரப் பிரார்த்தனைகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தங்களது விரிவான கருத்துரை கண்டு மிக்க மகிழ்வடைந்தேன் சகோதரி.
      தங்களது தன்னடக்கமான வார்த்தைகளைப் பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன். நானே தங்களை மாதிரி புலிகளைப் பார்த்துதான் சூடு போட்டுக் கொள்கிறேன். தங்களுடைய பாராட்டுகளுக்கும், கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். தங்கள் பிராத்தனைகளுக்கும் மிகவும் மன மகிழ்வடைகிறேன். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
      பதிவைப்பற்றி ஏதும் கூறவில்லையே? தங்களுடைய மிகுந்த பணிச் சுமைகளுக்கு நடுவிலும் என் தளம் வந்து வாழ்த்து தந்தமைக்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. மிக உணர்வுபூர்வமான எழுத்து..

    படிக்க படிக்க பரவசமாகவே உணர்த்தேன்...

    மிக அற்புதம் .....


    எனது கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளும் மா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தங்களின் அன்பான பாராட்டுரைகள் கண்டு நான் மிகவும் மகிழ்வடைந்தேன் சகோதரி. ஏதோ பகவான் சங்கல்பம் என்னை எழுத வைக்கிறது. அவனன்றி ஏதும் அசையாது.

      வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் என்மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி

      தங்களுக்கும் என அன்பான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
    படங்களும் அதன் பாவ எழுத்துக்களும் அன்பின் வெளிப்பாடாய் ஜொலிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

      /அன்பின் வெளிப்பாடாய்/ உண்மைதான் சகோதரி. அவன் மீது வைத்திருக்கும் அன்பினை முழுமையாக பெருகிட செய்ய வேண்டும். சம்சார பந்தத்தில் சுழலும் நம் மனதை முழுமையாக அவனுடைய பாதார விந்தங்களில் செலுத்தி விட அவனருள் நமக்கு கிடைத்திட வேண்டும். அது ஒன்றே என் பிரார்த்தனைகளும். எல்லாம் அவன் செயல்.

      தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      தங்களுக்கும் என் மனமுவந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. படங்கள் அழகு...

    அமுதத் தமிழின் ஆராவமுதனுக்கு ஆராதனை...

    படிப்பில்லாத ஆட்கள் கூட
    பாதத்திலே போய் விழுந்தால்
    வேதத்துக்கே பொருள்
    விளங்குது - கிருஷ்ணா!..

    - என்றார் கவியரசர்..

    அவை சத்யமான வார்த்தைகள்...

    ஓய்விருந்தால் -நம்முடைய தளத்துக்கும்
    வருகை தாருங்கள்..

    ஸ்ரீகிருஷ்ணனின் பேரருளில்
    வையகம் நல்வாழ்வு வாழட்டும்!..

    ஸ்ரீக்ருஷ்ண.. க்ருஷ்ண..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவியரசரின் வார்த்தைகள் 100% உண்மை. படைத்தவனுக்கு படித்தவன், பாமரன், ஏழை, பணக்காரன் என்ற பாரபட்சம் ஏது? அவன் பார்வையில் அனைவரும் ஒன்றே..

      தங்கள் தளத்திற்கும் கண்டிப்பாக வருகிறேன். அன்புடன் அழைத்தமைக்கு பணிவான நன்றிகள்.

      என் பதிவை கண்டு அன்புடன் பாராட்டியமைக்கும், வாழ்த்துகள் சொன்னமைக்கும் என் மனம் நிறைவான நன்றிகள்.

      பகவானின் பேரருளால் வையகம் சிறக்கட்டும். தங்கள் வாக்கும் பலிக்கட்டும். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. அருமை...

    கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      தாங்கள் ரசித்து கருத்து தெரிவித்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி.
      தங்கள் பாராட்டிற்கும், கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      தங்களுக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.
    நெஞ்சில் இல்லை பயம்.நினைப்பது யாவும் ஜெயம் தான் .
    கண்பதியை தொழுவோம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

      பாடல் கேட்டமைக்கும், கேட்டு ரசித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      வெற்றி விநாயகரை தொழுவோம். அடுத்தது அவர் பிறந்த நாள் வருகிறது. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. சிறப்பான நாளில் சிறந்ததோர் பகிர்வு.

    தேர்ந்தெடுத்துத் தந்த படங்கள் அழகு.

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தேர்ந்தெடுத்த படங்களை ரசித்து பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சிகள்.
      கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளுக்கும், என் நன்றிகள்.
      தங்களுக்கும் தலை நகரில் நாளை நடைபெற இருக்கும் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அஹா கமலா மேம் கோவிந்தா கோபாலா கேசவா நரசிம்மா உபேந்திரா என்று படிக்கப் படிக்க உருகியது நெஞ்சம். படங்கள் அருமை. அதிலும் விநாயகரில் இருந்து ஆரம்பித்திருப்பது பிடித்தது. :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தங்களின் பாராட்டுக்கள் என்னை மிகவும் மகிழ்வடையச் செய்கின்றன. தங்களைப் போன்ற பதிவர்களின் ஊக்கம் மிகுந்த கருத்துரைகள் என் எழுத்துக்களை வளப்படுத்தும் என நம்புகிறேன். தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      எதிலும் மூலப் பரம்பொருள் முக்கண்ணனின் மைந்தனல்லவா.! அவன்தான் என்றும் என்னை எழுத வைப்பவன். அவனிலிருந்து எதுவும் தொடங்குவதுதான் முறையான ஒன்றல்லவா? படித்து கருத்து தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கவிதை நயம் மிக்கது. கிருஷ்ணா அவதாரம் விஷ்ணுவின் அவதாரங்களிலேயே சிறந்தது. கிருஷ்ண ஜெயந்தி அன்று புகைப்படங்கள் நிறைந்த சிறப்பான பதிவிற்கு நன்றி.

    பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் – அந்தப்
    பார்த்தனும் உன்னிடத்தில் கீதை கேட்டான்
    நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களது அருமையான கருத்துகளுக்கும். பாராட்டிற்கும் என் மனம நிறைந்த நன்றிகள். தங்கள் கருத்துகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. உங்களைப் போன்ற பதிவர்களின் கருத்துகள் என் எழுத்தின் ஊக்கமும், உற்சாகமும் அளிக்கின்றன.

      நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும். கேட்டதும் கொடுப்பவன்தான் கண்ணன். பெற முடியாதபடி தடுப்பது நம் ஊழ் வினைகள். அவை அகல கண்ணன் திருவடி கழல்களை துணையென பற்றிட வேண்டும். அவன் பாதமே துணை. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. வணக்கம் சகோதரரே

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    தங்களின் பாராட்டு என்னை மிகவும் மகிழ்ச்சியடைய செய்தது. கருத்துக்கும், பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete