Sunday, September 20, 2015

சயனமும், தற்கொலையும்........


ம்மை விட்டு பிரிந்த ஒரு பொருள் எதுவும் மீண்டும் கிடைக்க வேண்டுமென்று பிராப்தம் இருக்கிறதோ,அது கண்டிப்பாக நமக்கு கிடைத்து விடும். இல்லையென்றால், எத்தனை நாள் தவமாய் தவமிருந்து வேண்டினாலும், வாழ்வின் எல்லைவரை  (நாம் நம் மரணத்தை தழுவும் வரை), அதைப்பற்றிய நினைவுகளோடு வாழ்ந்திருந்து மறைய வேண்டியதுதான் .! 

எதற்காக இப்போது நாங்கள் அறிந்த இந்த கீதோபதேசம்.? என்று முணுமுணுக்க வேண்டாம். விஷயத்திற்கு வருகிறேன்.

நிறைய எழுத வேண்டும், கணினியில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆவலுடன் ஆரம்பித்த என் வலைத்தளத்தில் தொடர்ச்சியாக  எழுத்துக்களை பதிய முடியாமல் என் நேரங்கள் மிகவே குறுகி விட்டது. ஆயினும் அவ்வப்போது வந்து, தலைக்காட்டிநானும் இருக்கிறேன்.” என்று ஏதோ அறுவை பதிவுகளை வெளியிட்டு விட்டு போகிறேன். அப்படி எப்போதோ வந்து போகும் என்னையும், என் எழுத்துக்களையும்,  பொறுத்துக்கொண்டு என் வலைத்தளம் வந்து படித்துப் பாராட்டி கருத்திடும் வலையுலக சகோதர, சகோதரிகளின் நல்ல உள்ளங்களுக்கு முதலில் என் மிகப்பணிவான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிப் பதிவு……

வீட்டில் துவங்கிய ஒரு நல்ல மங்களகரமான வைபவத்திற்காக (திருமண நிச்சயதார்த்தம்) சென்ற  வாரம் வெளியூர் பயணம் துவங்கினோம். (ஐயோ..! நீண்ட இடைவெளிக்கு காரணம் காட்டி உருவான பதிவா.? என தயவு செய்து படிக்காமல் சென்று விடாதீர்கள்…! ஆகா...!அதற்காக  இவ்வளவு பெரிய நீ…..ளமான பதிவா.? இதற்கு இத்தனை நாள் தொடர்ந்த அந்த இடைவெளியே எவ்வளவோ மேல்…! என்று அபுதாபியிலிருந்து ஒரு குரல் வேறு என் செவிகளில் கேட்கிறது.) நாங்கள் அனைவரும் வீட்டிலிருந்து காரில் பயணித்து, 15 நிமிடம் தூரம் கடந்தவுடன், அம்மா, என் மோதிரத்தை காணவில்லையே! என்று என் பெரிய மகன் தீடிரென்று சொன்னதும், “வீட்டிலேயே மறந்து வைத்து விட்டாயா.? இல்லை காருக்குள் ஏறும் போது தவறி விட்டதா.? வீட்டின் வாசலில் புறப்பட்ட இடத்திலேயே காரில் பெட்டிகளை ஏற்றும் சமயம் விரலிலிருந்து நழுவி விட்டதா.? என்று ஏகப்பட்ட கேள்விகள் ஒரே நேரத்தில் படபடப்பாக எங்கள் அனைவரின் வாயிலிருந்தும் புறப்பட்டது. மீண்டும் திரும்பி வீட்டு வாசல் வந்து ,வாசலிலும், வீட்டினுள்ளும் சென்று தேடும் படலத்தை துவக்கினோம்.மறுநாள் காலை மணி 10 க்குள் நாங்கள் நிச்சதார்த்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதே இரவு மணி 2 தாண்டி விட்டது. தேடும் டென்ஷனில், நேரம் மளமளவென்று நகர்ந்ததால் மனதை தேற்றிக் கொண்டு, டென்ஷனுடன்சரி !கிடைத்தால் கிடைக்கட்டும். ஒரு வேளை ஏற்றிய சாமன்களுக்குள் இருந்து கிடைத்தாலும் கிடைக்கும். நாளை காலை அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்.” என்று மறுபடி காரில் ஏறி பயணபட்டாலும், பேச்சென்னவோ இதை சுற்றித்தான்.! 

இவ்வளவு செலவுடன் ஒரு பயனும் இல்லாமல், இது வேறு தொலைந்து ஒரு செலவை உண்டாக்கி விட்டதே.? ஒரு பவுன்..! இன்றைய விலையில் இப்படி அநியாயமாய், அதுவும் சுப காரியத்திற்கு சந்தோஷமாய் கிளம்பும் போது தொலைந்து விட்டதே.! என்ற அங்காலாய்ப்புகளுக்கு நடுவே சரி.! போகிறது என்ன செய்வது.? வேண்டுமென்றா போக்கி விட்டோம். உயிரே சட்டென்று போகிறது! அதை விடவா இதன் விலையெல்லாம்.? என்று எத்தனை தத்துவ  மனச் சமாதானங்கள் செய்து கொண்டாலும், கண் சிறிது மூடினாலும், கண்ணுக்குள்  ரிங் சுற்றி சுற்றி  தட்டாமாலை ஆடியது.



மறுநாள் முழுவதும், சந்தோஷமாக விழாவில் கலந்து கொண்டு நல்லபடியாக  உற்றார் உறவுகள் சூழ விழா நடைபெற்றாலும், மனதின் நெருடலில் சிறு ஓரத்தை பற்றிக்கொண்டு அந்த மோதிரம் தொங்கியபடி ஆடிக் கொண்டிருந்தது. அதற்கடுத்த நாள் அங்கிருந்து கிளம்பி, வீடு வந்து சேர்ந்தாகி விட்டது. வீட்டில் நுழைந்ததும் மறுபடி அவரவர் வேலைகளுக்கு நடுவே ஆங்காங்கே தேடும் பணியை செய்யுமாறு அவரவர் மனது உத்தரவு இட்டபடியிருந்தது. நானும் என் பங்குக்கு பெரிய மகனின் கட்டிலில் தலையணை, பெட்ஷீட் போர்வை என்று எல்லாவற்றையும் மறுபடி உதறிப் பார்த்து விட்டு, அறையை விட்டு வெளியேறி. “எல்லா இடத்திலேயும் பார்த்தாகி விட்டது. சரி! அவ்வளவுதான்.! செலவோடு செலவாக இதையும் சேர்த்து கொள்ளத்தான் வேண்டும். வேறு என்ன செய்வது.? ஏற்கனவே இந்த மாதிரி உங்கள் சின்ன வயதில் செயின் ஒன்று தொலைந்து போய் கிடைக்கவேயில்லை.! போவது என்றும் நம்மை விட்டு போய்தான் தீரும்.!” என சமாதானங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அம்மா ,! இங்கே வந்து பாரேன்.! என்ற என் மகனின் குரல் கேட்டு சென்று பார்த்தால், மகனின் கட்டிலில் உதறிய பெட்ஷீட்களுக்கு நடுவே அமைதியாக சயனித்து கொண்டிருந்தது அந்த  மோதிரம். இரு இரவுகள் எங்கள் வேதனையை பற்றிய எந்தவித கவலையுமின்றி, பூட்டிய வீட்டிற்குள், நிம்மதியாக கட்டிலில் பெட்ஷீட்டில் போர்வையை  போர்த்தியபடி ஆனந்தமாக உறங்கியிருக்கிறது.

எப்படியோ! கிடைக்க வேண்டுமென்று பிராப்தம் போலும்.!  கிடைத்தது சந்தோஷந்தான். பத்திரமாக சென்று வந்துவிடபிள்ளையாருக்கு வேண்டிக் கொண்டபடி சிதறு காய் போட்டு வந்து விடு.! என்று பேசி சமாதானமடைந்தாலும், வேதனையின் மேலேறி, நின்றபடி  நிச்சயதார்த்த விழாவை கழித்து வந்தததை  மனது வலியுடன் சுட்டிக்காட்டியது. எது எப்படியோ.! நமக்கென்று நிச்சயிக்கபட்டவை நடந்து தான் தீருகின்றன. அதனிடமிருந்து தப்பிக்க நினைப்பது சாத்தியமில்லை.!

(ஒரு முக்கியமான விஷயம்…! நடந்த நிகழ்வை சொல்லிப் போனதில் திருமண நிச்சயதார்த்தம் என் இளைய மகனுக்கு என்று சொல்லவேயில்லையே..! அதனால்தான் அன்று மோதிரம் தவறியதும் வேதனையின் அளவை அதிகரித்து விட்டது. !)



அதன் பி்ன் மறுநாள் என் மகளுக்கு அவரது செல்லில் வந்த படமொன்றை கண்டு மிகவும் அதிசயத்து போனேன். அதையும் உங்களுடன் பகிர நினைத்து பகிர்ந்து கொண்டுள்ளேன். பொதுவாக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, மீன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம். அல்லது குறைவாகவும் கிடைக்கலாம். அவர்களின் வருமானத்திற்கு, அன்றைய தினங்கள்  சந்தோஷங்களையும், இல்லை, வருத்தங்களையும் தந்து விட்டு போகலாம். ஆனால்  நான் இந்த காணொளியில் கண்டு பகிர்ந்துள்ளதை போல் அவர்கள் கடலில் பயணித்து வலை வீசாமல், அதற்கென்று பிரயத்தனப்படாமல் தாமாகவே வந்து கையில்  சிக்கும் மீன்கள்  வந்து மீனவர்களிடம் சரணடைந்தால் அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தரும்.? எங்கோ ஒரு கடற்கரையில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. தானாகவே கரை ஒதுங்கும் மீன்களை காரணம் அறியாது அள்ளிச் செல்கின்றர் அனைவரும். ஆனால் அந்த மீன்களுக்கு கடல் அன்னையோடு என்ன பிரட்சனையோ.? இப்படி ஏகமாய், ஒட்டு மொத்தமாய் வெளிநடப்பு செய்யும் அளவுக்கு என்ன மன கசப்போ.? எதற்காக அவைகளுக்கு இந்த முடிவு அமைய வேண்டும்..? எப்படியாயினும் ஒருவரின் வருத்தங்கள், வேதனைகள், மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தந்து விட்டுத்தான் போகிறது என எனக்குத் தோன்றியது. இது கடவுளின் தீர்ப்பு போலும்..! இங்கும் கடவுளால் நிச்சயிக்க பட்டது நடந்துதான் தீருகிறது. அதில் எவ்வித மாற்றமேதுமில்லை.! 


இதோ அந்த காணொளி


என் அனுபவங்களையும், பார்த்து வியந்த அதிசயத்தையும் படித்துப் பார்த்ததற்கு மனமார்ந்த நன்றிகள்.

படங்கள்.. இணையம்... நன்றி...

12 comments:

  1. மோதிரம் திரும்பக் கிடைத்தது சந்தோஷம். இளைய மகனின் நிச்சியதார்த்தத்துக்கு வாழ்த்துகள்.

    இந்த மீன்களின் தற்கொலை வீடியோ எனக்கும் வாட்சாப்பில் வந்தது. அது காரணம் தெரியா மர்மம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      திரும்ப கிடைத்த மோதிரத்திற்கு எங்களுடன் சேர்ந்து சந்தோஷபட்டமைக்கும், என் மகனின் நிச்சயதார்த்ததிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கும் மிக்க நன்றிகள்.அவர்களிடமும்
      (மகன், மருமகள்) சொல்லி விடுகிறேன்.

      மீன்கள் பற்றிய வீடியோ ஏற்கனவே பார்த்து விட்டீர்களா? ஆம். அதன் மரணம் மர்மமாய்தான் இருக்கிறது. நன்றி.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. மோதிர நிகழ்வு ஒரு பாடம். வீடியோ ஆச்சர்யத்தைத் தந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். உண்மைதான். அது ஒரு பாடமாகத்தான் அமைந்நு விட்டது. வீடியோவை கண்டு ரசித்தமைக்கும் நன்றி.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. வணக்கம் சகோ
    தங்களின் இளைய மகனின் நிச்சயதார்த்ததிற்க்கு எமது வாழ்த்துகள்
    நமக்கென்று உள்ளவை நமக்கு நிச்சயம் கிடைத்தே தீரும் உண்மையே..
    எனது குரல் அங்கு கேட்டு இருக்கிறதே...
    இந்த பதிவு எனது டேஷ்போர்டுக்கு வரவில்லை ஏனோ
    இந்த காணொளி நானும் ஏற்கனவே எனது ''பைட்டிங் ஃபிஷ்'' என்ற பதிவில் போட்டு இருக்கிறேன் இணைப்பு கீழே...

    http://killergee.blogspot.ae/2015/06/fighting-fish.html

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரரே,

    தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மகனின் நிச்சயதார்த்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    ஏற்கனவே இந்த காணொளியை நீங்கள் பகிரந்துள்ளதை நீங்கள் குறிப்பிட்ட பதிவில் வந்து பார்த்தேன். அதில் நானும் கருத்துரை தந்திருக்கிறேன். மீண்டும் என் பதிவின் மூலமாகவும்.....பதிவை குறிப்பிட்டவுடன் வந்து பதிவினை படித்ததற்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்! அனுபவங்கள் நல்ல படிப்பினையை தருகின்றன! நிச்சயதார்த்த சமயத்தில் இது மாதிரி மோதிரம் தொலைந்தால் ஓர் படபடப்பு இருக்கத்தான் செய்யும். என் மகளும் விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் பள்ளியில் கம்மலை தொலைத்துவிட்டு வந்துவிட்டாள். சொல்லவும் இல்லை! நாங்களாகவே விசாரித்தபோது சொன்னாள். பள்ளியில் விசாரித்தோம். ஒரு பெண் எடுத்து வைத்திருப்பதாக சொன்னாள். ஆனால் அவள் சொன்ன இடத்தில் கம்மல் இல்லை. ஒரு கிராம் கம்மல்தான் என்றாலும் வலி இன்னும் குறையவில்லை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தாங்கள் என் வலைதளத்திற்கு முதலில் வருகை தந்து அனுபவங்களை குறித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றிகள். ஆம். நிச்சயதார்த்ததன்று மனசு சந்தோஷமடைந்தாலும் ஒருவித வேதனை வாட்டியபடியே இருந்தது. தங்கள் மகளின் கம்மலும் தற்சமயம் தொலைந்தது குறித்து வருத்தம் அடைந்தேன். ஒரு கிராம் என்றாலும் குழந்தைகளுக்கு எவ்வளவு ஆசையுடன் செய்து அணிவிக்கிறோம். அது தொலைந்து விட்டது என்றால், மனது கஸ்டபடத்தான் செய்யும். விரைவில் பள்ளியிலிருந்தே மீண்டும் கிடைத்து விடும். நானும் மனதாற தொலைந்த கம்மல் திரும்ப கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

      வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து என் எழுத்துக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன் ;நானும் தங்கள் வலைத்தளத்தை தொடர்கிறேன். நன்றி.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. வணக்கம்,
    தங்கள் மகன் நிச்சய விழாவிற்கு வாழ்த்துக்கள்,,,,
    ஒரு வருடம் பங்குனி மாதம் உத்திரம் முருகன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு, திரும்பி வரும் போது விரலில் மோதிரம் இல்லை, விளக்கு போட்டு எண்ணெய் விரல் துடைக்கும் பொது, அல்லது எப்ப என்று இன்று வரை சரியாக நினைவில் இல்லை, காணோம்,,,,,
    மனம் கஷ்டமாக இருந்தது, உடன் இருந்த பக்கத்து வீட்டு அக்கா வா அங்கு போய் பார்ப்போம் என்று கோயிலுக்கு அழைத்துப் போனார்கள்,,,,,,
    பங்குனி உத்திரம் முருகன் கோயில் கூட்டம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்,
    சரி போய் பார்ப்போம் என்று போனேன். கிடைக்கனும் என்றால் கிடைக்கும் என்று நானும் சொன்னேன்,,,,,
    அங்கு சென்று தேடிய போது,, என் தோழி இதோ இது தானே என்றாள் ஆச்சிரியம்,, மகிழ்ச்சியோடு,,,, முருகனுக்கு மீண்டும் ஒரு வணக்கம் சொல்லி வீடுவந்தேன்,,,,,,,,
    தங்கள் மோதிரம் அப்படித்தான்,,,,,,
    காணொளி அருமை,,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மகனின் நிச்சயதார்த்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் மோதிரம் தொலைந்து மீண்டும் முருகனருளால் கிடைத்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி சகோதரி.! தங்கள் மனம் அன்றைய பொழுதில் எவ்வளவு வேதனையுற்றிருக்கும் என்பதை அறிவேன். நமக்கு எது கிடைக்க வேண்டும் என்றிருக்கிறதோ அது நம்மிடமே மீண்டும் வந்தடைந்து விடும். தங்கள் ௬ற்று உண்மைதான்.! என் மகளுக்கு அணிவித்திருந்த ஒன்றரை பவுன் செயின் அவள் சிறு வயதில் தொலைந்தது தொலைந்தான்.! . தொலைந்த இடத்தில் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. கிடைக்க வேண்டுமென்றிருந்தால் அல்லவா கிடைக்கும் .! அதில் விஷயம் என்னவென்றால், அந்த செயின் வாங்கிய பின் வருடங்கள் கழித்து அன்றுதான் அவளுக்கு அணிவித்திருந்தேன். பூட்டிய பீரோவுக்குள் சிறை பட்டிருந்த செயின் வெளி வந்த சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளது. எல்லாம் நேரந்தான்.! என்ன செய்வது.?

      காணொளியை கண்டமைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள். காலம் தாழ்த்தி பதிலிடுவதற்கு மன்னிக்கவும்.

      .நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. மோதிரம் கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்கள் இளைய மகனின் நிச்சயதார்த்த விழாவுக்கு வாழ்த்துக்கள் !

    நேரம் இருப்பின் எனது பீட்ரூட் அல்வாவை ருசிக்க வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மகனின் நிச்சயதார்த்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நானும் தங்கள் தளத்திற்கு இனி தொடர்ந்து வருகை தருகிறேன், தாங்களும் என் பதிவுகளுக்கு வந்து கருத்திட்டால் நன்றியுடையவளாயிருப்பேன். இதற்கு தாமத பதிலிடுவதற்கு மன்னிக்கவும். நன்றி.!

      .நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete