வாழ்ந்து பார்க்கும் ஆசையா?
இல்லை, இயன்றவரை
வாழ்ந்துதான் காட்டுவோமே என்ற
பேராசையா.? உன்
சின்ன சின்ன அலகால், தினம்
சின்ன சின்னதாய் இளம்
இலைகளை கிழிக்க எத்தனை
இன்னல்கள் பட்டாயோ... நீ.. ? மேலும்
உனக்கு உற்சாகமளித்து
இன்முகம் காட்டி வரவேற்க
நன்மனம் கொண்டோராகவும்
நாங்களில்லையென அறியாயோ..?
அதிலும், அன்றாடம்
சமையலில எழும் புகையை
சாதூர்யமாய் வடிகட்டி தன்
சாகசத்தை மெய்படுத்தும்
சாதனத்தை ஏன் சற்றும்
சந்தேகமின்றி குடிப்புகும்
சந்தோஷத்தோடு தேர்ந்தெடுத்தாய் . .
ஒவ்வொரு நாளும் பல தினுசாக
சமையலின் விதங்களிலும் கசியும்
ஒவ்வொரு துளி எண்ணெய்யும்
பகட்டான பார்வைக்காக
பளிங்கு போல வடிவமைத்த
பிளைவுட் மரவடிவுகளில்
பாங்காக வந்தமருவதை தடுக்க
பார்த்துப்பார்த்து வாங்கி
பதித்த சாதனமல்லவா அது..!
சென்ற வருடம் உன்னைப் போன்றே
செதுக்கிய அழகுடைய, அந்த
மஞ்சள் விழியழகி, மைனாவின்
மறைவுக்கு வழி வகுத்தது இந்த
வழிதான் என்பதையும் அறியாயோ..?
என்னவோ போ..! உங்களினத்தை
எப்படியோ இவர்(எங்)களோடு
வாழ்ந்து மு(ம)டி என ஆணையிட்ட
அந்த இறைவனை
எஞ்சிய இவ்வாழ்வின்
ஓர் நாளில் நான் காண வேண்டும்.
பாவ மன்னிப்புக்களை அந்த
பரமனோடு கூட்டிக் கழித்து
பகிர்ந்து பேசும் அந்நாளில்
"உன் படைப்பில் இனியாவது,
இச்சுதந்திரப் பறவைகளுக்கு
இம்மண்ணின் மனிதர்களின்
சுயநலன்களைப் பற்றி விளக்கிச்
சுட்டிக்காட்டி, இனி
மனிதரோடு அண்டி வாழாமல்,
மற்றைய ஜீவன்களோடு
மனம் ஒன்றி வாழ்" என
இரக்கத்தோடு வரமளிக்க
இயலாதென மட்டும்
மறுத்து விடாதேயென
இறைஞ்சி கேட்க வேண்டும். 🙏.
எப்போதும் போல் என் மனதில் எழுந்த இக்கவிதையை (அறுவையை) படித்து கருத்து தெரிவிக்கும் உங்கள் அன்புள்ளங்களுக்கு என் கோடானுகோடி நன்றிகள். 🙏.
கிராமங்களில் இன்றும் குருவி கூட்டை கலைப்பது பாவம் என்கிறார்கள். ஒரு சிலர் கூட்டை தொட்டு கும்பிடவும் செய்வார்கள். இப்படியெல்லாம் சொல்லி வைத்தால் தான் மனித இனம் மற்றொரு இனத்தை தொந்தரவு செய்யாது என்ற காரணத்திற்காக சொன்னார்களா? என தெரியவில்லை.
குருவி கூடு கட்டினால் அடிக்கடி விஷேச எண்ணங்கள் ஏற்படும் அதாவது மன அழுத்தங்கள், எதிர்மறை எண்ணங்கள் போன்றவை இல்லாமல் எப்போதுமே புத்துணர்வாக இருக்க முடியும். வீட்டில் சுறுசுறுப்பாக பறவை இனங்கள் இருக்கையில், அதனை பார்க்கும் போது நமது மனமும் லேசாகி விடும்.
மலேசியா போன்ற நாடுகளில், காடுகளில் வாழ்ந்து முடித்த பறவையின் கூட்டை கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இதன் விலையோ லட்ச கணக்கில்.. இதனை வாங்கி வீடுகளில் வைக்கும் போது, வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து விரைவில் விஷேச நிகழ்வுகள் ஏற்படுவதாக நம்புகிறார்கள்.
நம்மூரில் ஒன்றை பின்பற்றினால் மூடத்தனம் எனும் சொல்பவர்கள், வெளிநாட்டில் அதே செயலை செய்யும் போது மறுப்பு தெரிவிக்காமல் நம்புகிறார்கள். அப்படியென்றால் நமது முன்னோர்கள் குருவி கூட்டை தொட்டு கும்பிட்டதும் கூட்டை கலைத்தால் பாவம் என சொன்னதெல்லாம் சரிதான் போல...
இத்தகவல்களுக்கு நன்றி. கூகுள்.
பின் குறிப்பொன்று.. நான் இந்த வருடம் பதிவுகள் எழுதியே மாதங்கள் பல ஆகிறது. எத்தனையோ பதிவுகள், மேலும், சென்ற வருடம் பிரயாணங்களில் சென்ற கோவில்களைக்குறித்து பதிவுகள் என எழுத தினமும் நினைப்பேன். என்னவோ ஒன்றைக்கூட எழுத இயலாமல் போய் விடும். சரி...! அதுதான் அப்படியென்றால் என் வலைத்தள நட்புகளின் எல்லோரின் எல்லா பதிவுகளுக்கும் உடனடியாக செல்ல முடியாமல், தாமதமும் ஆகி விடும். இருப்பினும் எப்படியோ மாலைக்குள் படித்து மறுநாளேனும் கருத்துகள் கூறி விடுவேன். (இதற்காகவும் அனைவரும் மன்னிக்கவும்.)
இப்போது கூட ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஒரு பத்து நாட்கள் அடங்கிய நெடுந்தூர பயணம் வந்துள்ளது. (அது நல்லபடியாக சென்று வந்த பின் அந்தப்பயணம் பற்றி/ அதைப்பற்றியாவது பகிர இறைவன் அருள வேண்டும்.) அதற்கான யத்தனங்களில் நேரம் பறக்கிறது. எனவே ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து மாதத்தின் பாதி நாட்களுக்கு மேல் என்னால் நம் நட்புகளின் பதிவுகளுக்கு வர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான, பணிவான நன்றிகள். 🙏.





