வெந்தய கஞ்சி.
அன்றாடம் சமையலுக்கு பயன்படும் இந்த வெந்தயம், உடலுக்கு நலம் தரும் ஒரு அருமையான மருந்தின் வகையையும் சார்ந்தது.
வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை அடங்கியுள்ளது. இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.
நன்றி கூகுள்.
இந்த வெந்தயத்தை ஒரு கால் டம்ளர் அளவு எடுத்துக் கொண்டு, நன்கு அலம்பி விட்டு நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் நீரிலேயே சற்று நேரம் ஊற வைக்கவும்.
அத்துடன் கால் டம்ளர் பாசி பருப்பும், அதை அளவு பச்சரியும் எடுத்து கொண்டு இவ்விரண்டையும் நன்கு அலம்பிய பின், ஊற வைத்த வெந்தய கலவையையும் போட்டு குக்கரில் பா. பருப்புக்கும் அரிசிக்குமாக சேர்த்து ஒரு ஒன்றரை, அல்லது, இரண்டு டம்ளர் தண்ணீரையும் சேர்த்து வைத்து நன்கு நாலைந்து விசில் வரும் வரை வைக்கவும்.
குக்கர் விசில் விட்டு ஓ.கே என்று சொன்னவுடன் குக்கரில் வேக வைத்த இந்த மூன்றையும் எடுத்து நன்கு மசித்து எடுத்த படம் முதலாவது. இத்துடன் தேவையான அளவு நீர் சேர்த்து, மறுபடியும் குழைவாக இருக்க வேண்டி அடுப்பில் சிம்மில் வைத்து அடிப் பிடிக்காமல், பத்து நிமிடம் வரை கிளறவும். (படம் இரண்டாவது.)
பிறகு அத்துடன் தேவையான வெல்லம் (சிலருக்கு வெல்லம் கொஞ்சம் அதிகமாக இருந்தால், பிடிககும். சிலர் குறைவாகவே சேர்த்து கொள்வார்கள். ஆயினும் அதிக வெல்லம் சேர்த்தால் அதன் பெயர் கஞ்சி என்பதிலிருந்து மாறி விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பாலோடு சேர்ந்து கொதித்த இந்த கஞ்சியை சற்று சூடாகவே குடிக்கலாம். சூடு ஆறிய பின்னும் அருந்தலாம். அது இன்னமும் சுவையாக இருக்கும். வெல்லம் வேண்டாம் என்பவர்கள் வெல்லத்தை தவிர்த்து வெறும் பால் மட்டும் சேர்த்து குடிக்கலாம். அவரவர் விருப்பம்.
இந்த கஞ்சி உடல் சூட்டிற்கு, வாய் புண், வயிற்றுப் புண் போன்றவைக்கும் மிக சிறந்தது. ஒரிரு நாட்கள் விட்டு விட்டு இவ்விதம் அருந்தி வந்தால், வாயில், அல்லது நாக்கில் உடல் சூட்டினால் உண்டாகும் இந்தப்புண்களின் நோவிலிருந்து விடுபடலாம். என் அனுபவத்தில் இது ஒரு கை கண்ட மருந்து.
இரு நாட்களுக்கு முன் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் பதிவில் பல பாயாசங்களின் பதிவை கண்டதும், நானும் இதை பல மாதங்களுக்கு முன் படங்களுடன் தொகுத்து, எழுதி வைத்ததை ஒதுக்கி வைத்து விட்ட நினைவு வந்தது. உடனே தேடி எடுத்து பகிரலாமென பகிரகிறேன். கூடவே நீண்ட நாட்களாக பதிவுகளை போடாதினால், பதிவுகளை போடவும் மறந்துவிடுமென தோன்றியதால் இந்த உடனடி முடிவு. இதைப் படிப்பவர்களுக்கு, என் அன்பான நன்றிகள். 🙏.





